‘தமிழர் தலைவர் கி. வீரமணி 54வதுமுறையாக கைது’ என்று ஒவ்வொரு முறையும் அவர் காலையில் போலீஸ் வேனில் ஏறி மாலையில் பெரியார் திடலுக்கு திரும்பும் போதெல்லாம் ‘விடுதலை’ செய்தி வெளியிடுவது வாடிக்கை. எண்ணிலடங்காத முறை சிறை சென்று தியாகம் செய்துள்ள தலைவர் என்று பெருமைப்படுத்தி வந்தார்கள்! அவையெல்லாம் தியாகமல்ல என்று இப்போது வீரமணியே அறிவித்து விட்டார்! இப்போதெல்லாம் அவரது வாழ்வியல் சிந்தனை ஒவ்வொன்றும் நம்மை புல்லரிக்கச் செய்கிறது. அண்மையில் கட்சியில் வாரிசாக்கியுள்ள தனது மகன் அன்புராஜ் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற (அப்படித்தான், அவரது ‘விடுதலை’ ஏடு கூறுகிறது) பகுத்தறிவாளர் கழக ‘கலந்துரையாடலில்’ கி.வீரமணி ஒரு சிந்தனையை மகனுக்காகவே முன் வைத்துள்ளார்:

“சிறைக்குப் போனால் தான் தியாகமா? சிறைக்குப் போனால்தான் தியாகம் என்றால், சிறைக்குச் சென்ற அத்துனை கிரிமினல்களும் தியாகிகளா? அப்படிப்பட்டவர்கள்தான் பதவியைப் பெறத் தகுதி உள்ளவர்கள் என்று சொல்ல முடியுமா? (‘விடுதலை’ 7.11.2009) - கி. வீரமணியின் இந்த ‘அதிரடி’ கேள்வியைப் படித்த ஒரு தோழர், விளக்கம் கூற ஆரம்பித்து விட்டார்.

“சிறைக்குப் போனாலே அது தியாகம் என்று யார் சொன்னது? அப்படி இதுவரை எவரும் சொன்னதாகத் தெரியவில்லையே! கொள்கைக்காக சிறைக்கு போனால் - தியாகம் என்பார்கள். குற்றம் செய்துவிட்டுப் போனால், அது ‘தண்டனை’. இரண்டும் வெவ்வேறு. இதுகூடவா, வீரமணிக்கு தெரியாது? சிறைக்குப் போகாத எந்தப் போராட்டத்திலும் தலைகாட்டாத தனது மகனை, வாரிசாக்கிவிட்ட குற்ற உணர்வில் இப்படி எல்லாம் பேசுகிறாரா? மகனுக்கு மகுடம் சூட்டியதை நியாயப்படுத்த இப்படி எல்லாம் உண்மையான பொதுத் தொண்டை களங்கப்படுத்துவதா?” - என்று கேட்கிறார், அந்தத் தோழர்.

தோழர் கூறுவது நூற்றுக்கு நூறு உண்மைதான். இனி, வீரமணி இன்னும் ஒரு அடி தாவிக் குதித்து, “தூக்குத் தண்டனை பெற்றவர் எல்லாம் தியாகியாக முடியுமா? பகத்சிங் மட்டுமா தூக்கில் தொங்கினான்; ஆட்டோ சங்கர்கூடத்தான் தூங்கில் தொங்கினான்?” என்று கூட அடுத்த பகுத்தறிவாளர் கழகக் கூட்டத்தில் கேட்கலாம். கொள்கைக்கு சிறை சென்றவர்களையும், குற்றம் செய்துவிட்டு தண்டனை பெற்றவர்களையும் ஒரே தராசில் வைத்து எடை போடும் இவர் பகத்சிங்கையும், ஆட்டோ சங்கரையும் ஒரே தராசில் எடை போட மாட்டார்கள் என்பதற்கு, என்ன உத்திரவாதம்? இனிமேல், பகுத்தறிவாளர் கழகத்திலோ, திராவிடர் கழகத்திலோ சேருவதற்கு பெரியார் கொள்கைகள்கூட முக்கியமல்ல; வீரமணியின் சிந்தனைகளை பின்பற்றினாலே போதும்!

“கருப்பு சட்டைக்காரர்கள் எல்லோரும் கணினி கற்றாக வேண்டும்” இதுதான் வீரமணியின் ‘ஒரிஜினல்’ சிந்தனையில் இப்போது உதித்துள்ள கொள்கை. பெரியார் கொள்கைகளை படிப்படியாக கை கழுவி, தன்னுடைய வாழ்வியல் சிந்தனைகளையே கொள்கைகளாக்கும் முயற்சியில் வீரமணி இறங்கிவிட்டார் போதும்! கிண்டல் செய்வதாக எவரும் கருதிவிட வேண்டாம். இதோ, அவரது பேச்சு: “நாம், கடவுள் இல்லை; ஜாதி இல்லை; மதம் இல்லை; என்று பேசுவது மட்டும் முக்கியமல்ல; மற்றவர்களிடம் அன்பு காட்ட வேண்டும்; பாசம் காட்ட வேண்டும்; அதுதான் நமக்கும், நமது இயக்கத்துக்கும் நெருக்கத்தை ஏற்படுத்தும்; ஒவ்வொருவரும் கணினி கற்றாக வேண்டும்.” (அதே ‘விடுதலை’யில்)

ஆக, வீரமணி கட்சியில் “சமுதாயப் புரட்சி”க்கு கீழ்க்கண்ட கொள்கையை அனைவரும் கண்டிப்பாக இனி பின்பற்ற வேண்டியிருக்கும். “கணினி கற்க வேண்டும்; பாசம் காட்ட வேண்டும்; காலையில் ஓட வேண்டும்; இரவில் பழம் சாப்பிட வேண்டும்; குளிருக்கு போர்வை போர்த்திக் கொள்ள வேண்டும்; மழைக்கு குடை பிடிக்க வேண்டும்; தாகம் எடுத்தால் குடிக்க வேண்டும் (அது கண்டிப்பாக கொதிக்க வைத்ததாக இருக்க வேண்டும்). - இப்படியெல்லாம் புரட்சிகரமான அறிவிப்புகள் இனி அடுத்தடுத்து அறிவிக்கப்படலாம். ஆனால் எல்லாவற்றையும்விட மிகவும் முக்கியம் - பாசம்! பாசம்! பாசம்! அதாவது மகன் மீது, குடும்பத்தின் மீது பாசம்! அதுவே பகுத்தறிவு! அதுவே தியாகம்; மகத்தான தியாகம்; சிறைக்குப் போவது மட்டுமே தியாகம் என்று எவன் சொன்னது?

- கோடங்குடி மாரிமுத்து

Pin It