அப்பாடா! ஒரு வழியாக வீரமணி, தனது தோள் மீது சுமந்து கொண்டிருந்த ‘சுமை’யை இறக்கி வைத்து விட்டார். அந்த ‘சுமை’யை தாங்கிக் கொள்ளக் கூடிய ஒரு நபரையும் கண்டுபிடித்து விட்டார். இப்படி ஒரு ‘சுமை தாங்கி’ தமது கட்சிக்குள் கிடைப்பாரா என்று எத்தனையோ ஆண்டுகளாக சல்லடை போட்டுத் தேடியும்கூட அவரால் கண்டுபிடிக்க முடியாமலே போய்விட்டது. “அப்படி தகுதியான ஒரு ‘தியாகி’ இந்த கொள்கை குடும்பத்துக்குள் சிக்கவில்லையே” என்ற துயரத்தில் மூழ்கிக் கிடந்தார், வீரமணி.

தன்னுடைய தலைமை அலுவலகத்துக்குள் இப்படி தோள்கொடுக்கும் ‘தியாகி’ ஒருவர்கூட அவரது கண்களில் சிக்கவில்லை. தனது ஆணையை ஏற்று கட்டுப்பாட்டையே கவசமாக்கிக் கொண்டுள்ள தமது கழகத்துக்குள்ளும் இப்படி தகுதி பெற்ற ஒருவர்கூட கிடைக்காதபோது, பாவம் வீரமணி என்ன தான் செய்வார்?

ஈரோட்டில் தயாரிக்கப்பட்ட கண்ணாடியை போட்டுத் தேடியும் கூட சுமைதாங்கிகள் எவரும் கிடைக்கவில்லை என்பதுதான் இன்னும் வேதனை. இப்படி ஈரோட்டுக் கண்ணாடியை போட்டுக் கொண்டு இடைவிடாமல் மேற்கொண்ட முயற்சிகளுக்கு இப்போது பலன் கிடைத்துவிட்டது. அப்படி ஒரு சுமைதாங்கியை சில மாதங்களுக் குள்ளே கண்டுபிடித்துவிட்டார். எங்கே? குடும்பத்துக்குள்தான்! எல்லாம் குடும்பத்தை வென்ற கொள்கை பாசம்தான்!

அப்பன் சொத்து பிள்ளைக்குப் போகவேண்டும் என்ற இந்து தர்மப்படி தந்தை தனது மகனுக்கு முடிசூட்டி தனது சுமையை இறக்கி வைக்க தயாராகிவிட்டார். எவ்வளவு பெரிய தியாகம்! “இதோ ஒரு தொழிலதிபர்; தனது தொழிலை யெல்லாம் துறந்துவிட்டு தியாகியாக வந்துவிட்டார். அவர்தான் எனது மகன் அன்புராஜ். பெரியார் பெரும் படையே, எனக்கு நீங்கள் தான் குடும்பம்; எனக்குப் பிறகும் இதையே கூறி உங்கள் காதுகளில் பூச்சுற்ற எனது குடும்பத்துக்குள்ளே ஒரு சுமை தாங்கி வந்துவிட்டார்! என்று தஞ்சையில் அவர் கூட்டிய மாநில செயற்குழுவில் பிரகடனம் செய்து விட்டார். அந்த அறிவிப்பினை எழுந்த நின்று, பலத்த கரவொலி செய்து வரவேற்றனர்’ என்று அவரது ‘விடுதலை’ ஏடு வர்ணிக்கிறது! அப்படி போடு! அது தானப்பா கொள்கைக் கட்டுப்பாடு!

கழகத்தில் பணியாற்ற வந்த சில மாதங்களிலேயே தலைமை நிலைய செயலாளராக அறிவிக்கப்பட்ட ‘பேறு’ வேறு எந்த தொண்டனுக்கு கிடைக்கும்? கடந்த ஒரு சில மாதங்களுக்குள் தமது மகன் மீது அடுக்கடுக்கான பதவிச் சுமைகளை ஏற்றிக் கொண்டே வந்தார் வீரமணி! கழகத்தின் எந்தத் தொண்டருக்கும் கிடைக்க முடியாத சுமை!

பல்கலைக்கழகத்தின் ஆட்சிக் குழு உறுப்பினர் என்ற சுமை;

மாநில திராவிடர் மாணவர்கழகத்தின் புரவலர் என்ற சுமை;

திராவிடன் வெளியீட்டு நிறுவனத்தின் இயக்குனர் என்ற சுமை;

விடுதலை பவள விழாக் குழு உறுப்பினர் என்ற சுமை;

இது தவிர முதலமைச்சர், அமைச்சர்கள், முக்கிய பிரமுகர்களை தாம் சந்திக்கும் போதெல்லாம் உடன் செல்ல வேண்டிய சுமை;

இப்படி படிப்படியாக ‘சுமை’களை மகன் மீது சுமத்தி வந்தவர், இப்போது தலைமை நிலையச் செயலாளர் என்ற மாபெரும் சுமையையும் தூக்கி வைத்துவிட்டார். திராவிடர் கழக இளைஞரணி, மாணவரணிகளையும் இவர்தான் வழி நடத்துவாராம்.

“அப்படி ஒருவர் முன்வருவதை நாம் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று கருதுகிறோம். இதில் எனக்கும், என் இணையருக்கும் கொஞ்சம் மன ஒதுக்கீடு உண்டு என்றாலும், அனைத்தையும் விட இயக்கம், இயக்கப் பணிகள் முக்கியம் என்ற கண்ணோட்டத்துடன் பார்ப்பதுதான் புத்திசாலித் தனம் - அவசியம்” என்று திறந்த புத்தகமாக அவர் பேசியதாக ‘விடுதலை’ ஏடு பெருமையுடன் கூறுகிறது.

இந்தக் கழகத்துக்காக எத்தனையோ ஆண்டுகளாக, வாழ்க்கையை தொலைத்துவிட்டு ஓடி ஓடி உழைத்த அப்பாவிகள், கூட்டம் நடத்தியவர்கள், போராட்டம் நடத்தியவர்கள், புத்தக சந்தை நடத்தியவர்கள், மாநாடுகள் நடத்தியவர்கள், தலைமை அறிவிக்கும் போதெல்லாம் வசூல் பணிகளில் இறங்கியவர்கள்; அதற்காக மக்கள் தந்த வசவுகளை ஏற்றவர்கள் என்று களப்பணியாற்றியவர்கள், திராவிடர் கழகத்தின் அப்பாவித் தொண்டர்கள், ஆனால் அவர்கள் எல்லாம் வீரமணியின் ‘உண்மை’யான சுமையைத் தாங்கிக் கொள்ளும் தகுதி இல்லாதவர்களாக இருக்கிறார்களே!

இப்போது, கி.வீரமணியும், அவரது இணையரும் தங்களது மகனுக்கு மகுடம் சூட்டியிருப்பது, சாதாரண தியாகமல்ல; சுமையை இறக்கி மகன் மீது ஏற்றி வைக்கும் தியாகம்! பெரியார் மரபிலேயே இதுவரை இப்படிப்பட்ட “தியாகிகளை” பார்த்தது உண்டா என்று சவால் விடுகிறோம். இத்தகைய தியாக உணர்வு பெரியாருக்கு இல்லை. மணியம்மையாருக்கும் இல்லை. “தமிழர் தலைவர் வீரமணி, பெரியாரையும், மணியம்மையையும் மிஞ்சி விட்டார். இது தான் வரலாறு; விபிஷணர்களே புரிந்து கொள்ளுங்கள்” என்று அடுத்து வரக்கூடிய ‘விடுதலை’ ஏடுகளில் பல ஆராய்ச்சியாளர்கள் எழுதப் போகிறார்கள். அப்போதுதான் இந்த உலகத்துக்கே இந்த மாமனிதரின் தியாகம் புரியப் போகிறது.

பெரியார் என்ன செய்தார்? இயக்கத்துக்காக முழு நேரம் உழைக்க முன் வந்த ஒரு எளிய பெண் தொண்டரின் உழைப்பை அங்கீகரித்து, அவரை தனது இயக்கத்தின் பாதுகாப்புக்காக ‘துணைவியார்’ என்ற உயர்ந்த நிலைக்கு உயர்த்தினார். கொள்கைக்காக உழைத்தவரை, நம்பிக்கைக்குரியவராக ஏற்று, அதன் காரணமாக துணைவியராக்கினார். அவர்தான் மணியம்மையார். பெரியார் தனது குடும்பத்தினரை பதவிக்கு கொண்டுவரவில்லை. மாறாக தனது குடும்பத்துக்குள்ளே இருந்த தனது சகோதரியையும், மனைவியையும் போராட்டக் களங்களிலே இறக்கி, அவர்களை சிறைக்கு அனுப்புவதற்குத்தான் பெரியாருக்கு தெரிந்திருந்தது. அய்யோ, பாவம் பெரியார்; பிழைக்கத் தெரியாத மனிதர்.

மணியம்மையார் மட்டும் என்னவாம்? தனது குடும்பத்தைச் சார்ந்த எவரிடமும் தனது ‘சுமை’களை இறக்கி வைக்கும் ‘தியாகம்’ அவருக்கு தெரியவில்லை. அவரது சகோதரர்கள், உறவினர்களை எல்லாம் விலக்கியே வைத்தார். தனது சொந்த உடைமைகளைக்கூட இயக்கத்துக்கு எழுதி வைத்து விட்டார். தனக்குப் பிறகு தமது வாரிசை குடும்பத்துக்குள் தேடாமல், கழகத்தில் தேடி வீரமணியை நியமித்தார். குடும்பத்தைப் பார்க்காமல், கொள்கையைப் பார்த்த ஏமாளி!

ஒரு வரலாற்று நிகழ்ச்சி நினைவில் வந்து தொலைக்கிறது. மணியம்மையார் தி.க.வின் தலைவராக இருந்த காலத்தில் பெரியாரின் அண்ணன் மகன், ஈ.வெ.கி. சம்பத் மரணமடைந்தார். அப்போது அவர் காங்கிரசில் இருந்தார். அவரது உடலை பெரியார் திடலில் உள்ள பெரியார் நினைவிடத்துக்கு அருகிலேயே அடக்கம் செய்ய காங்கிரஸ் தலைவராக இருந்த கருப்பையா மூப்பனார், மணியம்மையாரிடம் கோரிக்கை வைத்தபோது, மறுக்க முடியாத நிலையில் அவரும் ஏற்றுக் கொண்டார். மணியம்மையாரின் இந்த முடிவை அன்று பெரியார் திடலில் இருந்த பலராலும் ஏற்க முடியவில்லை. கி. வீரமணி, எதிர்ப்பதில் முன் நின்றார். ஓய்வு பெற்ற அய்.ஏ.எஸ். அதிகாரியும், சீரிய பெரியார் பற்றாளருமான பண்டரிநாதன், விடுதலை மேலாளர் என்.எஸ். சம்பந்தம், கலி. பூங்குன்றன் போன்றவர்கள் எல்லாம் மாவட்ட திராவிடர் கழகப் பொறுப்பாளர்களிடம் தொடர்பு கொண்டு, அன்னை மணியம்மையார் முடிவைக் கண்டித்து, தந்திகள் அனுப்புமாறு வற்புறுத்தினர்.

அதேபோல் அன்னை மணியம்மையாருக்கு தந்திகளும் குவிந்தன. பெரியார் இயக்கம் குடும்ப வாரிசுகளுக்கான இயக்கமல்ல; பெரியார் நினைவிடம், அவரது குடும்பத்தினருக்கான நினைவிடமல்ல; குடும்ப உறவுகளைக் கடந்து நின்ற மாபெரும் தலைவரை குடும்பத்தின் தலைவராக்குவது மிகப் பெரும் அநீதி என்று - அன்று கி. வீரமணி உள்ளிட்ட பலரும் கழகப் பொறுப்பாளர்களும் எதிர்த்தனர். அதனால் ஈ.வெ.கி. சம்பத்தை பெரியார் நினைவிடத்தில் அடக்கம் செய்யும் முடிவு கைவிடப்பட்டது. அப்போது பெரியார் குடும்ப வாரிசை உருவாக்கும் தலைவரல்ல என்று கொள்கை பேசிய வீரமணி, இப்போது குரலை மாற்றிக் கொண்டது ஏன் என்று எவரும் கேட்கக் கூடாது. அது கொள்கை; இது ‘தியாகம்’ அய்யா; இது புரியவில்லையா?

வீரமணி செய்த தியாகங்கள்; தாங்கிய சுமைகள் அளவிடமுடியாதவை! இடையிலே சக்கரவர்த்தி என்று ஒருவர் பொதுச் செயலாளராக வந்தார். அவர் விபத்தில் பலியானார். அதனால் பொதுச்செயலாளராக இருந்த ‘சுமை’யை இறக்கி வைத்த வீரமணி, ‘தலைவர்’ என்ற மாபெரும் சுமையை தூக்க வேண்டிய வரலாற்றுக் கட்டாயம் வந்தது. அதற்குப் பிறகு எவ்வளவோ போராட்டங்கள். காலையில் கைதாகி விட்டால், மாலையில்தான், திருமண மண்டபங்களிலிருந்து விடுதலை பெற முடியும். இப்படி பகல் பொழுதுமுழுதும் சிறையிலிருந்த தியாகங்கள், ஒன்றா இரண்டா? 47 அல்லது 48 ஆக இருக்கும். புள்ளி விவரங்கள் நினைவுக்கு வரவில்லை. அத்துடன் ஒவ்வொரு நாளும் அறிக்கைகள் தயாரிக்கவேண்டும். ஆட்சியிலிருப்பவர்களை எப்படி எல்லாம் புகழலாம் என்பதற்கு ஆழமாக சிந்திக்க வேண்டும். இந்தச் சுமைகளோடு இணைவேந்தராகவும் இருக்க வேண்டும்; இதற்கிடையே அமெரிக்கா, சிங்கப்பூர் பறக்க வேண்டும்; மக்களுக்கு வாழ்வதற்கு வழிகாட்டும் சிந்தனைகளை வேறு வழங்க வேண்டும்; இப்படி பாராட்டை எதிர்பார்க்காது கரடுமுரடான ஈரோட்டுப் பாதையில் பயணிக்க வேண்டிய தியாகங்களை ஒரு சுமை தாங்கி எவ்வளவு காலம் தான் தாங்க முடியும்?

புத்தர் குடும்பத்தைத் துறந்த ஒரு ஏமாளி; அதேபோல் குடும்பத்தை புறந்தள்ளிய பெரியார் ஒரு அப்பாவி!

புத்தர், பெரியார் பெயரை கூறிக் கொண்டே குடும்ப வாரிசுகளை ஏற்கச் செய்பவரே புத்திசாலி! ‘அவர்தான் வீரமணி; திரை விலகிவிட்டது; வாரிசு வந்தாகி விட்டது. தமது சொத்துக்களை நாட்டுக்கு அர்ப்ணித்தார் பெரியார்; அதை நிர்வகிக்க குடும்பத்தின் வாரிசுகள் வரத் தொடங்கி விட்டன.

கொள்கை வாரிசுகளே! நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்?

- கோடங்குடி மாரிமுத்து

Pin It