பெரியார் கொள்கைக்கும், ஈழத் தமிழருக்கும் துரோகம்
விலகி வந்த தி.க. தோழர்கள் சரமாரி குற்றச்சாட்டு

கோவையில் வீரமணியின் திராவிடர் கழகத்திலிருந்து, தி.க. மாவட்ட துணைத் தலைவர் சொக்கம்புதூர் ந. தண்டபாணி தலைமையில் தி.க. தோழர்கள் விலகி, கழகத் தலைவர் கொளத்தூர் மணி, பொதுச்செயலாளர் கு.இராமகிருட்டிணன் முன்னிலையில் பெரியார் திராவிடர் கழகத்தில் தங்களை இணைத்துக் கொண்டனர். தி.க. தலைமை பெரியார் கொள்கையை பரப்பாமல், கல்வி நிறுவனங்களின் வளர்ச்சிக்கே பாடுபடுகிறது என்றும், ஏனைய அரசியல் கட்சிகளைப் போலவே மகனை வாரிசாக்க முயலுகிறது என்றும் - விலகி வந்த தோழர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் குற்றம் சாட்டியுள்ளனர்.

ஈழத் தமிழர் இனப் படுகொலை உச்சக் கட்டத்தில் நடந்த நேரத்தில், காங்கிரஸ் - தி.மு.க. வெற்றியைக் கொண்டாடி மகிழ்ந்து கொண்டிருந்தவர்தான் தமிழர் தலைவரா என்று கேள்வி எழுப்பியதோடு, இந்த துரோகத்தை வரலாறு மன்னிக்காது என்றும் அவர்கள் கடுமையாக சாடியுள்ளனர். பெரியார் கொள்கைக்காக களத்தில் நிற்கும் ஒரே அமைப்பு பெரியார் திராவிடர் கழகம் தான் என்று கூறி கழகத்தில் தங்களை இணைத்துக் கொண்டனர்.

கோவை காந்திபுரம் பெரியார் படிப்பகத்தில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, பொதுச் செயலாளர் கோவை இராமகிருட்டிணன் முன்னிலையில் கடந்த ஆகஸ்ட் 30 ஆம் தேதி காலை இந்த உணர்ச்சிபூர்வமான இணைப்பு நிகழ்ச்சி நடந்தது. படிப்பகம் முழுதும் கூட்டம் நிரம்பி படிப்பகத்துக்கு வெளியிலும் ஏராளமானோர் திரண்டு, இந்த இணைப்பைப் பாராட்டி வரவேற்றனர். அதே நிகழ்ச்சியில் சூலூரைச் சார்ந்த சுபாஷ் என்ற தோழரும், துடியலூரைச் சார்ந்த சக்தி என்ற தோழரும் பெரியார் திராவிடர் கழகத்தில் தங்களை இணைத்துக் கொண்டனர்.

விலகிய தோழர்கள்:

சொக்கம்புதூர் ந. தண்டபாணி (கோவை மாவட்ட தி.க. துணை தலைவர்), வழையூர் மு. செல்வம் (கோவை மாவட்ட தி.க. இளைஞரணி தலைவர்), கணபதி சா. கிருட்டிணமூர்த்தி (கோவை மாவட்ட தி.க. இளைஞரணி அமைப்பாளர்), அரிபுரம் மதன் (கோவை மாவட்ட தி.க. இளைஞரணி இணைச் செயலாளர்), அரிபுரம் பிரேம்குமார் (அரிபுரம் தி.க. கிளைச் செயலாளர்), பழையூர் தி.க. தோழர்கள்: ராஜேஷ், கதிர், மூர்த்தி, சபரி, சாகர். கணபதி தி.க. தோழர்கள்: ராஜேஷ், கணேசன், லட்சுமிகாந்தன், சொக்கம்புதூர் தி.க. தோழர்கள் ந. நித்தியானந்தம், ஆகாஷ் (எ) கைலாஷ், அரிகரன், அருண் குமார், குணா. அரிபுரம் தி.க. தோழர்கள்: பார்த்தீபன், தமிழ்ச்செல்வன், ராஜன் செல்வம், பொன்ராஜ், ஆட்டோ சுரேஷ், பாப்பா நாயக்கன் பாளையம் தி.க. தோழர்கள்: சுந்தர்ராசு, சுகுமார், அறிவழகன், ராஜா, சரவணன், ஆனந்த், ராமசந்திரன், தியாகராஜன், செந்தில், ராசுகமல், அருண்குமார், ரஞ்சித், அண்ணாதுரை, உதயா, அசோக்குமார் ஆகியோர் விலகிய தோழர்கள் ஆவர்.

திராவிடர் கழகத்திலிருந்து விலகுவது ஏன்? என்பதை விளக்கி, கோவை தி.க. தோழர்கள் சார்பில் சொக்கம்புதூர் ந. தண்டபாணி விடுத்துள்ள அறிக்கை!

1. தந்தை பெரியாரின் கொள்கைகளை மாறிவரும் சமூகச் சூழலுக்கேற்ப பரப்பவும், வெகு மக்களிடம் கொண்டு செல்லவும் முனையாமல், திராவிடர் கழகத் தலைமை முற்றும் முழுதாய் பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழக நிர்வாகத் தலைமையாக மாறிவிட்டதோடு, அந்நிறுவனங்களின் முழுநேர (லிமிடெட் கம்பெனி) நிர்வாகியாகவும், அதன் வழியாக வரும் வருமானத்திற்கு பங்கம் வராமல் காக்கவுமே செயல்படுகிறது. கி.வீரமணி கல்லூரியாய் இருந்ததை பல்கலைக்கழகமாக உயர்த்துவதற்காகத்தான் கவனம் செலுத்துகிறார். அதற்காகவே ஜெயலலிதாவையும், கலைஞரையும் மாறி மாறி ஆதரித்து, ஆளும் கட்சிகளின் நடைபாவாடையாக திராவிடர் கழகத்தை மாற்றிவிட்டார்.

2. தந்தை பெரியாரே, தனக்கு வாரிசு, ‘தனது எழுத்தும் பேச்சுமான’ கொள்கையே என தெளிவுபடுத்தியதை மறைத்து, பெரியாரின் குடிஅரசு இதழின் எழுத்துக்களை இதுவரை கி.வீரமணி தொகுத்து வெளியிடவில்லை. “பெரியார் திராவிடர் கழகம் வெளியிட முன் வந்தபோது அதற்கு எதிராய் பெரியாரின் எழுத்துக்கு தானே, வாரிசு என்று நீதிமன்றம் சென்று தடை பெற்றது. கி.வீரமணி பெரியாருக்கு செய்யும் துரோகத்தையே வெளிச்சம் போட்டு காட்டுகிறது.

3. பெரியாரின் எழுத்துக்கும் பேச்சுக்கும் தானே வாரிசு எனச் சொல்லும் வீரமணி, இயக்கத்திற்கு உண்மையாய் உழைத்த பலரையும் வெளியேற்றி விட்டு, கடந்த மூன்றாண்டுகளுக்கு முன்பு வரை இயக்கத்திற்குள் வராத தனது மகன் வீ. அன்புராஜை, இயக்கத்தின் தலைமைப் பொறுப்புக்கு கொண்டு வருவதில் தீவிரம் காட்டி வருகிறார். பெரியார் நாட்டிற்களித்த சொத்தை தனது வீட்டுச் சொத்தாக மாற்றவும் ஆன பணிகள் வேகமாய் நடைபெற்று வருகின்றன.

4. பெரியாரின் கொள்கை பரப்புதலை விட்டு விலகி நீண்டகாலமாய் பெரியாரின் சொத்தை பாதுகாக்கிறேன் என்ற பெயரால், மற்ற அரசியல் கட்சிகளை போலவே திராவிடர் கழகத் தலைமை செயல்பட்டு வருகிறது. ‘சமூக நீதி’க்காகவும், மனித சமத்துவத்திற்காகவும் மானிட விடுதலைக்காகவும் பெரியாரால் உருவாக்கப்பட்ட திராவிடர் கழகத் தலைமையிலும், அதன் அறக்கட்டளை நிர்வாகத் தலைமையிலும், தனது மகனை வாரிசாக்க முன்னிறுத்தி செயல்பட்டு வருகிறார் கி.வீரமணி.

5. எல்லாவற்றிற்கும் மேலாக தமிழர் தலைவர் என தமக்கு சூட்டிக் கொண்ட பட்டத்திற்கு கொஞ்சமும் சம்பந்தம் இல்லாமல், ஈழத்தில் தமிழ் இனம் படுகொலை செய்யப்பட முழு முதற் காரணமாய் இருந்த இந்திய காங்கிரஸ் அரசு மீண்டும் ஆட்சிக்கு வர கடந்த பாராளுமன்ற தேர்தலில் காங்கிரசுக்கு ஆதரவளித்தார்.  பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் வந்து கொண்டிருந்த நேரத்தில், ஈழத்தில் கொடூரமான இனக் கொலை நடந்து கொண்டிருந்தபோது தமிழர் தலைவர் என சொல்லிக் கொள்ளும் கி.வீரமணி, ‘கலைஞர் டி.வி.’யில் காங்கிரஸ் தி.மு.க. தேர்தல் வெற்றியை கொண்டாடிக் கொண்டு உற்சாகத்தில் மிதந்தபடி இருந்தார்.

6. இந்தியாவின் முழு பின்னணியோடு ஈழத்தில் சிங்கள இனவெறியரசு, போர் தொடங்கிய நாள் முதல் தமிழகத்தில் ஈழத் தமிழருக்கு ஆதரவான போராட்டம் தன்னை தாண்டி சென்றுவிடக் கூடாதென மயிலை மாங்கொல்லை பொதுக்கூட்டம் தொடங்கி, “கலைஞர் திட்டமிட்டு நடத்திய தமிழர் வரலாற்றில் அழியாத துரோக நாடகத்திற்கு முற்றும் முழுதாய் துணை நின்றதோடு, தமிழகத்தில் ஈழத் தமிழருக்கு ஆதரவான சக்திகளின் போராட்டம் வெகுமக்கள் போராட்டமாக மாறாமல், “கலைஞர் ஈழ மக்களை காப்பார் காப்பார்” என நம்ப வைத்து நாடகமாடி 50 ஆயிரத்துக்கும் மேலான தமிழர் படுகொலைக்கு துணை போன துரோகத் தளபதிதான் இந்த தமிழர் தலைவர்.

எனவேதான் தி.க. தலைமை தமிழின துரோக தலைமை மனிதநேய துரோக தலைமை என தெரிந்து தெளிந்து அதனிலிருந்து விலகி, பெரியாரின் கொள்கைகளை காக்கவும், பரப்பவும், தமிழினத்தை காக்கவும் உண்மையாய் பாடுபடும், போராடும் தலைமையை ஏற்று பெரியார் திராவிடர் கழகத்தில் இணைகிறோம் - என்று அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.

Pin It