இந்தியாவின் உளவு நிறுவனமான ‘ரா’வுக்கும், இலங்கை அரசுக்குமிடையே தொடர்பாளராக செயல்பட்டவர் ‘ராம்’ பார்ப்பன ‘இந்து’ ஏட்டுக்கு எதிரான மக்கள் இயக்கம் சென்னையில் தொடங்கியது. நவம்பர் 1 ஆம் தேதி சென்னை தியாகராயர் நகரில் உள்ள சி.டி. நாயகம் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் பார்ப்பன ‘இந்து’ பத்திரிகைக்கு எதிரான கருத்தாழமிக்க கருத்தரங்கு ஒன்றை ‘மே 17-க்கான இயக்கம்’ என்ற அமைப்பு நடத்தியது. மே 17, 2009 அன்று தான் ஒரே நாளில் 30,000 ஈழத் தமிழர்களை சிங்கள இராணுவம், இந்தியாவின் முழு ஆதரவோடு, படுகொலை செய்தது. அந்த கருப்பு நாளை நினைவுபடுத்துவதற்காக இந்தப் பெயர் சூட்டப்பட்டுள்ளது. ‘பேனா - ஆயுதங்களைவிட கூர்மையானது; பேனாவுக்கு, மனிதர்களைக் கொல்லும் சக்தி உண்டு’ என்ற முழக்கத்தை முன் வைத்து நடத்தப்படும் இந்த இயக்கம் தொடர்ந்து, ‘இந்து’ பார்ப்பன ஏட்டுக்கு எதிரான எதிர்ப்பு இயக்கத்தை நடத்தும் என்று பிரகடனப்படுத்தியது.

ஓய்வு பெற்ற இராணுவ லெப்டினன்ட், பொறியாளர் எம்.சுப்ரமணியன், ‘வெப்துனியா’ இணைய தளத்தில் - தமிழ்ப் பிரிவு ஆசிரியர் அய்யநாதன், திருமுருகன், திபேத் விடுதலை இயக்கத்தைச் சார்ந்த திபேத் கவிஞர் டெண்சிங் சோனம் ஆகியோர், ‘இந்து’ ராம், ‘சீனா - சிறீலங்காவின்’ உளவாளியாக பத்திரிகை நெறிகளுக்கு மாறாக செயல்பட்டு வருவதை ஏராளமான சான்றுகளுடன் சுட்டிக்காட்டினர். நிகழ்ச்சியில் மே 17 இயக்கத்தின் சார்பில், ‘பத்திரிகை அறமும், ‘இந்து’ என். ராமும்’ என்ற நூல் ஒன்றும் வெளியிடப்பட்டது. நூலை பெரியார் திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன் வெளியிட, முதல் பிரதியை திபேத்திய கவிஞர் டென்சிங் சோனம் பெற்றுக் கொண்டார். நிகழ்ச்சியில் நடத்தப்பட்ட ‘என். இராமாயணம்’ என்ற வீதி நாடகம், கூட்டத்தினரை, மிகவும் கவர்ந்தது. ஈழத் தமிழருக்கு எதிராக ‘இந்து’ ராம் நடத்திய ‘திருவிளையாடல்களை’யும் பார்ப்பன சுப்ரமணிய சாமிகள், ‘இந்து’வுக்கு உறுதுணையாக நிற்பதையும், நாடகம் மக்கள் மன்றத்தில் உணர்ச்சியுடன் படம் பிடித்தது. திபேத்திய மக்கள் மீது சீன இராணுவம் கட்டவிழ்த்து விடும் வன்முறைகளை விளக்கும் படக்காட்சியும் வைக்கப்பட்டிருந்தது.

ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரி எம். சுப்ரமணியம் பேசுகையில், அண்மையில், அமெரிக்க நாடாளுமன்றத்தில் சிறீலங்காவின் மனித உரிமை மீறல்களுக்கு எதிராக சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையிலிருந்து பல தகவல்களை எடுத்துக் காட்டினார். அமெரிக்க நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையின்படி, ‘யுத்தம் இல்லாத பாதுகாப்புப் பகுதி’ என்று இலங்கை அரசு அறிவித்த பகுதியில் 4027 தமிழர்கள் கொல்லப்பட்டனர். 5074 பேர் படுகாயமடைந்தனர். மருத்துவமனையில் காயங்களுடன் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சையின்றி 258 பேர் இறந்தனர். 2807 பேர் மருத்துவமனையில் படுகாயமடைந்து, சிகிச்சையின்றி தவித்தனர். பொது மக்கள் வாழ்ந்த பகுதியில் இராணுவத்தால் கொல்லப்பட்டவர்கள் 30; படுகாயமடைந்தோர் 4014; இனப் படுகொலை என்ற குற்றத்தின் கீழ் நடத்தப்பட்ட படுகொலைகள் 252; காயமடைந்தோர் 230; வெள்ளைக்கொடியுடன் சரணடைய வந்த 1500 தமிழர்களை சுட்டு வீழ்த்திய ராணுவம், 1550 தமிழர்களை படுகாயத்துக்கு உள்ளாக்கியது. திட்டமிட்டு கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டவர்கள் 3310 பேர்; ஆக 191 தாக்குதல் சம்பவங்களில், 13373 தமிழர்கள் கொல்லப்பட்டுள்ளனர். 13,675 பேர் படுகாயமடைந்துள்ளனர். இது ஜனவரியிலிருந்து மே மாதம் வரை (2009) 120 நாட்களில் அதிகாரப்பூர்வமாக கண்டறியப்பட்ட புள்ளி விவரம். அமெரிக்காவின் அறிக்கை, இவற்றைப் பதிவு செய்துள்ளது. போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டதே தவிர போர் நிறுத்தப்படவில்லை.

இந்தியாவின் வெளிநாட்டுத் துறை அமைச்சர் 4 முறை கொழும்பு போய் வந்தார். போரை ஏன் நிறுத்தவில்லை என்று கேட்கவில்லை; போர் நிறுத்தம் செய்யாத, இலங்கை அரசை கண்டிக்கவும் இல்லை. ‘பாதுகாப்பான பகுதி’ என்று இராணுவம் அறிவித்த பகுதியிலேயே குண்டு வீசியதை சர்வதேசப் புகழ் வாய்ந்த அல்ஜசீரா தொலைக்காட்சி மே 1 ஆம் தேதி படம் பிடித்து ஒளி பரப்பியது. அதன் பிறகு, ஷெல் வீசப்பட்டது உண்மைதான் என்று இலங்கை இராணுவ செயலாளர் ஒப்புக் கொண்டார். ஆனால், இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் நாயணக்காரா அதை மறுத்தார். 22000 விடுதலைப் புலிகளை சுட்டுக் கொன்றதாக இலங்கை இராணுவமே உறுதிப்படுத்தியது. காயமடைந்தவர்களோ, உயிருடன் தங்களால் பிடிக்கப்பட்டவரோ, ஒருவர்கூட இல்லை என்று இராணுவம் கூறியது.(அனைவரையும் சுட்டுக் கொன்று விட்டார்கள்) ஆயுதம் இல்லாத அப்பாவி மக்களையும் இராணுவம் படுகொலை செய்தது.

‘சேனல் ஃபோர்’ என்ற தொலைக்காட்சி நிறுவனம் - தமிழர்களை நிர்வாணமாக்கி, கண்களைக் கட்டி, இராணுவம் சுட்டுக் கொன்ற காட்சிகளை ஒளிபரப்பியது. உலகம் முழுதும் பலத்த கண்டனத்துக்கு உள்ளாகியது. அமெரிக்காவின் அறிக்கை இவைகளையும் குறிப்பிட்டுள்ளது. வெள்ளைக் கொடியுடன் சரணடைய வந்த விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவு தலைவர்கள் நடேசன், புலித்தேவன் உள்ளிட்டோருக்கு, பாதுகாப்பு வழங்குவதாக ராஜபக்சே, அய்.நா. பொதுச் செயலாளருக்கு உறுதி அளித்திருந்தார். ஆனால் உறுதிமொழி காற்றில் பறக்கவிடப்பட்டு, மே 18 ஆம் தேதி அவர்கள் படுகொலை செய்யப்பட்டார்கள். அண்மையில் தமிழ்நாட்டிலிருந்து முகாம்களை பார்வையிடச் சென்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களிடமும், இதை இலங்கை அரசு ஒப்புக் கொண்டது.

ராஜபக்சேயிடமிருந்து ராணுவத்துக்கு தகவல் சரியாகப் போய்ச் சேராத காரணத்தால் இப்படி நிகழ்ந்துவிட்டது என்று அவர்களிடம் இலங்கை அரசு சமாதானம் கூறியிருக்கிறது. தளபதி பொன் சேகா, அமபலன்கோடா என்ற இடத்தில் ராணுவத்தின் வெற்றி விழா நிகழ்ச்சியில் பேசுகையில், யுத்த விதிகளையும், மரபுகளையும் புறந்தள்ளிவிட்டு, சிறீலங்கா ராணுவம், வெள்ளைக் கொடியுடன் வந்தவர்களை கூட்டு வீழ்த்தியது உண்மைதான் என்று பெருமையுடன் அறிவித்தார். அவர், அமெரிக்காவின் குடிஉரிமை பெற்றவர். இப்படி பேசியதற்காகவே, இப்போது, அமெரிக்காவின் ராணுவ நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க, அவருக்கு வழங்கப்பட்டிருந்த ‘விசா’வை அமெரிக்கா திரும்பப் பெற்றுக் கொண்டு விட்டது. கண்ணி வெடிகள் புதைக்கப்பட்டிருப்பதால் தமிழர்களை அவர்கள் வாழ்விடங்களுக்கு திருப்பி அனுப்ப முடியவில்லை என்று கூறப்படும் வாதத்தை ஏற்க முடியாது. அந்தப் பகுதிகளை நேரிடையாக பார்வையிட்டு திரும்பிய “ஆன்மீக”வாதி ரவிசங்கர், அதே பகுதிகளில் சிங்களர்கள் ஏராளமாக குடியேற்றப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளார். கண்ணிவெடி ஆபத்துகள், சிங்களருக்கு இல்லாமல் போய் விட்டதா? வவுனியாவுக்கும், முல்லைத் தீவுக்குமிடையே உள்ள தூரம் 120 கிலோ மீட்டர். இந்தப் பகுதி வழியாக 3 லட்சம் ராணுவத்தினர் 200 டாங்குகளுடன், 200 கவச வண்டிகளுடன் கடந்து சென்றுள்ளனர்.

வியட்நாம் யுத்தத்தில் வீசப்பட்ட குண்டுகளைவிட அதிகமாக, 50,000 டன் குண்டுகளை வீசியுள்ளனர். 6 கோடி ராக்கெட்டுகள் வீசப்பட்டுள்ளன. கண்ணிவெடி இருந்திருந்தால் வெடிக்காமல் இருந்திருக்குமா? இவ்வளவையும் மீறி கண்ணிவெடி புதைந்து கிடக்கிறது என்று கூறுவதை நம்ப முடியுமா? என்று ராணுவ அதிகாரி சுப்ரமணியம் கேட்டார். ‘இந்து’ ராம் பற்றி அவர் குறிப்பிடும்போது ‘லங்கா ரத்னா’ விருது பெறுமளவுக்கு, இலங்கைக்கு அவர் செய்த சேவை என்ன என்ற கேள்வியை எழுப்பி, அதற்கு பதிலும் தந்தார். இலங்கைக்கு அவர் வழங்கியது உளவாளி சேவை; இந்தியாவின் உளவு நிறுவனமான ‘ரா’வுக்கும், இலங்கை அரசுக்குமிடையே தொடர்பாளராக செயல்பட்டார். அவர் வழியாகவே கருத்துப் பரிமாற்றங்கள் நடந்தன என்றார். 1998 இல் டெல்லியில் இலங்கைத் தமிழர்களுக்கான மாநாடு ஒன்றில் பேசிய முன்னாள் வெளியுறவுத் துறை செயலாளர் ஏ.பி. வெங்கடேசுவரன், இதை உறுதிப்படுத்திப் பேசினார்.

அந்த மாநாட்டுக்கு அப்போது இந்தியாவின் உள்துறை, அனுமதி மறுத்தபோது, ஜார்ஜ் பெர்ணான்டஸ், புதுடில்லியில் தனது இல்லத்தின் வளாகத்திலேயே அம்மாநாட்டை நடத்தினார். அப்போது - ஏ.பி.வெங்கடேசுவரன் பேசுகையில், இந்திய-இலங்கை ஒப்பந்தத்தில் ஜெயவர்த்தனாவும், விடுதலைப் புலிகள் இயக்கமும் கையெழுத்திடுவதாகத்தான் முதலில் முடிவு செய்யப்பட்டது. ஆனால், இந்த ஒப்பந்தம் பிறகு ராஜீவ் - ஜெயவர்த்தனா ஒப்பந்தமாக மாற்றப்பட்டது. இது விடுதலைப் புலிகளுக்கு தெரியாது. விடுதலைப் புலிகளோடு ஒப்பந்தம் போட்டு விடாதீர்கள்; அது இந்தியாவுக்கு ஆபத்தாகிவிடும் என்று தொடர்ந்து ஜெ.என். தீட்சத்திடம் (அப்போது, இலங்கைக்கான தூதர்) ‘இந்து’ ராம் வலியுறுத்தி வந்தார். “நான் பார்த்துக் கொள்கிறேன்; நீங்கள் கவலைப் படாதீர்கள்” என்று தீட்சத், ராமிடம் உறுதி கூறினார். விடுதலைப் புலிகள் இந்தியாவுக்கு எதிரானவர்கள் என்ற கருத்தை வலியுறுத்தி, ஏற்கச் செய்ததில் ‘இந்து’ ராமுக்கு முக்கிய பங்கு உண்டு என்று ஏ.பி. வெங்கடேசுவரன் கூறியதை சுட்டிக் காட்டினார்.

தோழர் திருமுருகன் பேசுகையில் - ‘இந்து’ ராம், ஈழத் தமிழர் போராட்டத்தை ஆதரிப்பவர்களை இந்தியாவின் எதிரிகளாக தனது ஏட்டில் சித்தரித்து வருகிறார். ஈழத் தமிழர்களின் போராட்டம், இந்தியாவுக்கு எதிரானது என்று, அவரது பத்திரிகை ஒரு சார்பாக செய்திகளை வெளியிட்டது. ஆனால், இவரின் கதை என்ன? சீனாவின் உளவாளியாகவே இந்தியாவில் செயல்படுகிறார். திரிகோண மலையில் இந்தியாவை ஓரம் கட்டிவிட்டு, சீனாவின் வலிமையான தளத்தைக் கொண்டு வர வேண்டும் என்ற நோக்கத்தோடு அவர் காய் நகர்த்தினார். திரிகோணமலையில் சீனா, இப்போது வலிமையாக கால் ஊன்றி நிற்கிறது. தென் கிழக்கு ஆசியாவில் ராணுவ முக்கியத்துவம் வாய்ந்த இந்தப் பகுதியை சீனாவிடம் கொண்டுவர வேண்டும் என்பதற்காகவே, தமிழர்கள் போராட்டத்தை எதிர்த்தார்.

ஈழத் தமிழர் போராட்டம், இந்தியாவுக்கு எதிரானது என்ற கருத்தை உருவாக்கினார். தமிழர்களிடமிருந்து பறிக்கப்பட்ட திரிகோண மலைப் பகுதியில் போருக்குப் பிறகு இந்தியாவின் பிடி தளர்ந்து போய், சீனாவின் பிடிக்கு வந்துவிட்டது. இதனால் எந்த நேரத்திலும் தமிழகத்துக்கு ஆபத்து உருவாகும் நிலை வந்துவிட்டது. அண்மையில் சீனாவின் இணையதளம் ஒன்று இந்தியாவை தனித் தனி நாடுகளாக பிரிக்க, சீனா திட்டம் வகுத்துள்ள தாக எழுதியபோது, அது பற்றி ஊடகங்களில் விவாதங்கள் நடந்தன. ஆனால், ‘இந்து’ ஏடு, இது பற்றி ஏதும் எழுதவில்லை. அது ஒரு ‘அநாமதேய இணையதளம்’ என்று கூறி ஒதுக்கிவிட்டது. அது, அநாமதேய இணையதளம் என்பது, எப்படி இந்து ‘ராமு’க்கு தெரிந்தது?

காஷ்மீரில், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் என்று கூறுவதுபோல், சீன ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியும் இருக்கிறது. அப்படி ஒன்று இருக்கும் செய்திகூட இருட்டடிக்கப்பட்டு விட்டது. காஷ்மீர், இந்தியாவின் ஒரு பகுதி அல்ல என்று கூறி, காஷ்மீரிலிருந்து, சீனா வருவோருக்கு தனி விசாக்களை சீனா வழங்கி வருகிறது. இது பற்றி ‘இந்திய தேசபக்தி’யை உயர்த்திப் பிடிக்கும் ‘இந்து’ ஏடு ஏன் எதையும் எழுதவில்லை? சீனாவின் அரசு செய்தி நிறுவனங்கள் தரும் செய்திகளை மட்டுமே ‘இந்து’ ஏடு வெளியிடும்; அதற்கு மாற்றான கருத்தை இதழியலுக்கு உரிய நேர்மையோடு பதிவு செய்வதே இல்லை. ‘இந்து’ ராமுக்கு - சீனாவின் மீது இவ்வளவு கவலையும், பற்றும் இருப்பது ஏன்? இந்த பின்னணியை விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.

நம்மைப் பொறுத்தவரை ‘இந்து’ ஒரு பத்திரிகை அல்ல; அது ஒரு பாசிச சக்தி; அதன் கருத்துகள் முறியடிக்கப்பட வேண்டும். ஒரு பார்ப்பான் என்ற நிலையிலும், சீனாவின் ‘தரகர்’ என்ற முறையிலும் அவர் நடத்தும் இதழியல் மோசடிகளை மக்கள் மன்றத்தில் தொடர்ந்து அம்பலப்படுத்துவோம். மே 17-க்கான இயக்கத்தின் பெயரில் ஒரு இணையத் தளத்தைப் பதிவு செய்து, அதற்குரிய கட்டணத்தை செலுத்துவதில், சிறிது காலதாமதம் ஏற்பட்டது. மீண்டும் கட்டணம் செலுத்தும்போது, உடனே அந்தப் பெயரில் ஏற்கனவே, ஒரு இணையதளம் பதிவாகிவிட்டதாக தெரிவிக்கப்பட்டது. அதற்குள், சீனாவிலிருந்து, சீனர் ஒருவர் அந்த இணையதளத்தின் பெயரைப் பதிவு செய்து விட்டார். மே 17 என்பதைக் குறிப்பாக பதிவு செய்யக்கூடிய, ஆர்வம் ஒரு சீனருக்கு இவ்வளவு அவசர அவசரமாக ஏன் வந்தது? இதன் பின்னணி என்ன? - என்று திருமுருகன் கேட்டார்.

பத்திரிகையாளர் அய்யநாதன் பேசுகையில் - செஞ்சோலையில் மாணவிகள் படுகொலை செய்யப்பட்டதைக்கூட கண்டிக்காத ஏடு, ‘இந்து’ என்று சுட்டிக் காட்டினார். கச்சத்தீவை ‘பயனற்ற தீவு’ என்று எழுதிய ‘இந்து’வின் தலையங்கத்தை சுட்டிக்காட்டி, அது பயனுள்ள தீவா? பயனற்ற தீவா? என்பதை மீனவர்கள்தான் முடிவு செய்ய வேண்டுமே தவிர, ‘இந்து’ பார்ப்பனர்கள் அல்ல என்று கூறினார். கச்சத்தீவு முடிந்து போன ஒப்பந்தம் என்றும், இலங்கை கடற்பகுதியில் தமிழக மீனவர்கள் மீன் பிடிக்க உரிமை கேட்பது எப்படி நியாயம் என்றும் ‘இந்து’ தலையங்கம் தீட்டுகிறது. கச்சத்தீவு ஒப்பந்தத்துக்குப் பிறகும் அதனை ஒட்டிய கடற்பகுதியில் தமிழக மீனவர்களுக்கு மீன்பிடி உரிமை இருந்தது என்பது ‘இந்து’வுக்கு தெரியுமா? அன்றைய அயலுறவுத் துறை அமைச்சர் சுவரன்சிங், நாடாளுமன்றத்திலேயே இதை உறுதி செய்திருக்கிறார். எனவே கச்சத் தீவு பகுதியில், நமது மீனவர்கள் மீன் பிடி உரிமையை இழந்து விட்டனர் என்று கூறுவதே அயோக்கியத்தனம். ஆங்கிலத்தில் இப்படி எல்லாம் எழுதும் மேதாவிகள் தமிழிலே எழுதிட முடியுமா? எழுதினால் என்ன நடக்கும்? (கூட்டத்திலிருந்த ஒருவர், மீனவன் செருப்பாலே அடித்திருப்பான் என்று குரல் கொடுத்தார்)

அப்படியே எல்லை தாண்டி வந்ததாகக் குற்றம் சாட்டினாலும், அவர்களைத் தாக்குவதற்கோ, சுடுவதற்கோ எவனுக்கும் உரிமை இல்லை. கடல் எல்லை தொடர்பாக - அய்.நா. உருவாக்கியுள்ள சர்வதேச உடன்பாட்டில் 146, மற்றும் 73வது பிரிவுகள் இதை தெளிவாக சுட்டிக்காட்டுகின்றன. ‘இந்து’ பார்ப்பான் இந்த நியாயத்தை எல்லாம் எழுதினானா? இந்த உண்மைகளை எல்லாம் அறிய, நீங்கள் எல்லோரும் இணையதளம் நோக்கி திரும்புங்கள்; அங்கே கருணாநிதி கட்டுப்பாடோ - சோனியாவின் கட்டுப்பாடோ கிடையாது; உண்மைகள் அங்கேதான் விரவிக் கிடக்கின்றன. ‘இந்து’ பார்ப்பானுக்கு எதிரான இந்த இயக்கம் தமிழகம் முழுதும் கொண்டு செல்லப்பட வேண்டும். இது மான உணர்ச்சியுள்ள ஒவ்வொரு தமிழனின் கடமை என்று அய்யநாதன் குறிப்பிட்டார்.

திபெத் கவிஞர் டென்சிங்சோனம் பேசுகையில் - தங்களது திபேத் விடுதலை இயக்கத்துக்கு ‘இந்து’ ராம் தொடர்ந்து இழைத்து வரும் துரோகத்தைக் கண்டித்தார். சீனாவின் அதிகாரபூர்வ விருந்தினராக திபெத்தில் 5 நாள் சுற்றுப்பயணம் செய்து ‘இந்து’ ராம் - ‘இன்னும் ஒரு கால் நூற்றாண்டுகளிலோ அல்லது அதற்கு முன்போ திபேத் ஒரு முழு வளர்ச்சியடைந்த சமூகம் என்ற நிலையை அடைந்திருக்கும் “ என்று எழுதினார். அதை நிரூபிக்க ஏராளமான புள்ளி விவரங்களை எடுத்து 24 பக்க அறிக்கையை தயாரித்தார். அய்ந்தே நாள்களில் இவ்வளவு தரவுகளையும், புள்ளி விவரங்களையும் இவரால் எப்படி திரட்ட முடிந்தது? தோழர்களே, திபேத் பிரச்சினை பற்றி சீன அரசே ஒரு ஆங்கில நூலை வெளியிட்டு, தனது தூதரகங்கள் வழியாக இலவசமாகவே பரப்பி வருகிறது. ‘இந்து’ ராம் வெளியிட்ட அறிக்கையின் வாசகம், புள்ளி விவரங்கள் அப்படியே சீன அரசு வெளியிட்ட இந்த நூலில் இடம் பெற்றுள்ளன. சீன அரசு செய்தி நிறுவனமான ‘சின்ஹீவா’வின் செய்திகளை அப்படியே வரி பிசகாமல் வெளியிடும் ஒரே பத்திரிகை ‘இந்து’ தான், என்று குறிப்பிட்டார். தமிழர்களுக்கு எதிராகத் தொடர்ந்து செயல்பட்டு வரும் இந்து தமிழினத்துக்கு எதிரான நாளிதழாக அறிவிக்கிறோம் என்று கருத்தரங்கில் பலத்த கரவொலிக்கிடையே தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

சீன ஆதரவு கருத்துருவாக்கத்தை இந்திய இறையாண்மைக்கு எதிராக உருவாக்கி வரும் ‘இந்து’ நாளிதழை, விசாரணைக்கு உட்படுத்தி தடை செய்யவேண்டும் என்றும், மக்கள் மன்றத்திலும், அறிவு ஜீவிகள், இணையதளம் மற்றும் உலக அரங்கிலும், ‘இந்து’ ஏட்டையும், அதன் ஆசிரியர் என். ராமையும் தனிமைப்படுத்த வேண்டும் என்றும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ஆழமான செய்திகளை வாரி வழங்கிய இந்தக் கருத்தரங்கம் - ‘இந்து’ பார்ப்பன எதிர்ப்பு இயக்கத்தின் தொடக்கப் புள்ளியாகும். ‍

- பெரியார் முழக்கம் செய்தியாளர்.

Pin It