எத்தனையோ ஆண்டுகள் ஓடிவிட்டன.. ஆனால் சிந்தனையில் இன்னமும் மாற்றம் ஏற்படாத ஒரு சமுகமாக நாம் இருக்கிறோம் என்பதை நினைத்து ஆச்சர்யமாக இருக்கிறது. இணையத்தில் அதன் தாக்கங்களைப் பெருமளவில் பார்க்க முடிகின்றது. குறிப்பாக தலித் மக்களுக்கு எதிராகவும் அவர்களின் கருத்தியல்களுக்கு எதிராகவும் பல நேரங்களில் வெளிப்படையாகவும், முற்போக்கு வேடம் அணிந்தவர்கள் நாசூக்காவும் தமது கருத்துக்களைப் பதிப்பிக்கின்றனர். இதுதான் இந்தக் கட்டுரையினை எழுதத் தூண்டியது. தனிப்பட்ட நபர்கள் விமர்சிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் இருந்தாலும் அது புரிதலை உருவாக்குவதற்கு பதில் பகையினை உருவாக்கிவிடுகின்றனது. எப்படியிருந்தாலும் பேசப்பட வேண்டியதைப் பேசித்தானே ஆகவேண்டும்.

                அண்மையில் குணா என்ற தோழர் கீற்று இணைய இதழில் எழுதிய 'மக்கள் தலித் இயக்கங்களும் - ஃபோர்டு பவுண்டேசன் தலித் இயக்கங்களும்', 'பாமகவின் தோற்றமும் அதை வளர்த்துவிட்ட பின்நவீனத்துவ வாதிகளும்' - என்ற இரு கட்டுரைகளை படித்தப் பிறகு அந்த ஆச்சரியம் கூடிவிட்டது. பத்தாண்டுகளுக்கு முன்பு விவாதிக்கப்பட்டு கடந்துவிட்ட ஒரு முரணை இப்போது விவாதிக்கும் தேவை ஏன் எழுந்தது. முதல் கட்டுரையில் தலித்தியத்தை, அதன் இயக்கங்களை போர்டு எனும் தன்னார்வ அமைப்பின் கொடையாகயும், பின்நவீனத்தின் பிள்ளையாகவும் பார்க்கிறார். இரண்டாவது கட்டுரையில் பாமக-வின் தோற்றம் வளர்ச்சி எழுச்சிகளைப் பற்றி விவாதித்து, விடுதலைச் சிறுத்தைகளோடு அதற்குள்ள உறவின் தன்மையை விளக்குகிறார். மேலும் இதற்கெல்லாம் அடிப்படைக் காரணம் இடதுசாரி இயக்கங்களோடு நக்சல்பாரி இயக்கத்தோடு தலித்துகளுக்கும் வன்னியர்களுக்கும் உள்ள உறவை துண்டிக்கவும், ஏகாதிபத்தியத்தின் செயல் திட்டத்தை நிறைவேற்றும் வேலையை அவை செய்துள்ளன என்ற தமது கண்டுபிடிப்பை உறுதி செய்துள்ளார். 

இந்த இரண்டுக் கட்டுரைகள் மட்டுமின்றி அதைத் தொடர்ந்து முகநூலில் விவாதிக்கப்பட்ட விவரங்களையும் படித்தேன். விவாதங்கள் காரசாரமாக இருந்தாலும், சாரமற்று இருந்ததை நினைத்து வருத்தமாயிருந்தது. இவை குற்றச்சாட்டுகளா, அவதூறுகளா, ஆய்வுகளா, கண்டுபிடிப்புகளா அல்லது ஆதங்கங்களா என்பதை முடிவு செய்வது அவ்வளவு எளிதான காரியமாகத் தெரியவில்லை. ஏனெனில் அவ்வளவு குழப்பங்களை அந்த கட்டுரைகள் கொண்டிருந்தாலும் அவை செயல்படும் தளத்தினை புரிந்து கொள்ள முடிகின்றது. எனினும் குணா என்ற தனிமனிதருக்கு பதில் என்று பார்க்காமல், அவர் முன்வைத்த கருத்துக்கள் பல ஆண்டுகளாக தொடர்ந்து நிலவி வருவதால் பதில் சொல்ல வேண்டியது தேவையென்று தோன்றியது.

                “கம்யூனிசத்துக்கு மாற்றாக 'ஃபோர்டு பவுண்டேசன் தலித்தியம்' முன்னிறுத்தப்பட்டுள்ளது. இந்தியாவை கம்யூனிசத்திடம் இழக்க மாட்டோம் என்ற பவுண்டேசனின் நோக்கத்துக்கு இந்த போலி தலித்தியம் சேவகம் புரிகிறது. பவுண்டேசனின் கம்யூனிச எதிர்ப்பைப் புரிந்து கொண்டால் தலித்தியத்தின் தத்துவார்த்த அடித்தளமான பின்நவீனத்துவத்தின் வேரினையும், அதன் கேடினையும் புரிந்து கொள்ளலாம்.”

என்ற ஒரு கருத்தை தோழர் குணா முன்வைத்துள்ளார். அதை ஆமோதித்து பலர் எழுதியுள்ளனர். கெடுவாய்ப்பாக பின்நவீனத்துவம், மார்க்சியம், தலித்தியம் ஆகியன பற்றி தெளிவான புரிதல் இல்லாமல் சாகசக் கட்டுரையை எழுதியுள்ளார். நான் பின்நவீனத்ததுவ வாதியல்ல; மார்க்சியம் மற்றும் அம்பேத்கரியத்தின் மாணவன். பத்தாண்டுகளுக்கு முன்பு பின்நவீனத்துவ வாதிகளோடு மல்லுக்கு நின்று பகைகளைச் சம்பாதித்துக் கொண்டவன். ஆனால் அரசியலாக அதை எதிர்த்தாலும் ஆய்வு முறைக்கு அது பயன்தரும் என்பதை உணர்ந்தவன். 

karl_marx_450எனினும் குணா அவர்கள் எப்படி தலித்தியத்தின் வேரினை பின்நவீனத்துவத்தில் எப்படி கண்டுபிடித்தார் என்பது ஆச்சரியமான ஒன்றுதான். மார்ச்சியத்தின் போதாமையைப் பற்றி பல அறிஞர்கள் விவாதித்திருக்கிறார்கள். ஏனெனில் மார்க்ஸ் எல்லாம் அறிந்த, எக்காலத்திற்குமான சிந்தனையாளருமல்ல. அப்படி சொன்னால் அதைக் கேட்டு அவரே சிரித்துவிடுவார். அதுவுமின்றி மார்க்சின் பார்வையில் பின்நவீனத்துவ‌க் கூறுகள் இருந்தது என்பதைச் சொன்னால் குணா போன்ற தோழர்களுக்கு அதிர்ச்சியாகக்கூட இருக்கும். மார்க்சிடம் உங்களுக்கு பிடித்த பழமொழியைக் கேட்டபோது “அனைத்தையும் சந்தேகப்படு என்பதுதான் எனக்குப் பிடிக்கும்" என்று சொன்னார். இது பின்நவீனத்துவத்திற்கு மிக முக்கியமான அடிப்படை. ஏனெனில் பெருங்கதையாடல்களுக்கு மாற்றாக, நிறுவனங்களை கேள்விக்குள்ளாக்க வேண்டும் என்றால் அவற்றை சந்தேகப்படாமல் எப்படி சாத்தியம்? சந்தேகத்திற்கு அப்பாற்பட்டு எப்படி ஓர் அமைப்பு இயங்க முடியும்? அதனால்தான் பின்நவீனத்துவம் என்ற கருத்தாக்கம் மார்க்ஸ் வாழ்ந்த காலத்திலேயே உருவாகிவிட்டது. அதாவது 1870லேயே அது உருவாகிவிட்டது. பிற்காலத்தில் யார் நினைத்தாலும் அது பெரும் போக்காக வளர்வதைத் தடுத்திருக்க முடியாது. அதனால்தான் சிறந்த ஆய்வறிஞர்களாக இருந்த மார்க்சியவாதிகள்தான் பின்நவீனத்துவத்தை விளக்கினர், புகழ்பெற்ற முன்னோடியான டெரிடா உட்பட. 

எனினும் பின்நவீனத்த்துவத்தின் சில அடிப்படை அம்சங்களை புரிந்து கொள்ள வேண்டும். நவீனத்துவம் என்பது பெரும் கோட்பாடுகளை நிலைநாட்டி, அதை மக்களுக்கான பாதையாக காட்டின. ஆனால் பின்நவீனத்துவம் அதை பெரும் கதையாடல் என்று நிராகரிக்கிறது. அதேபோல, அதிகாரம் உருவாகும் மையம் எது என்பதைக் கண்டறிய பல கருதுகோள்கள் முன்வைக்கப்பட்டன. அதையும் பின்நவீனத்துவம் நிராகரித்தது. ஏனெனில் அதிகாரம் என்பது ஒரு குறிப்பிட்ட புள்ளியில் உருவாகவில்லை, அது எல்லா தளங்களிலும், எல்லா உறவுகளிலும் உருவாகிறது என்று கூறியது. உண்மையில் ஒடுக்கப்பட்டவர்களுக்காக போராடுபவர்கள் இதைப் பயன்படுத்திக் கொண்டிருக்க முடியும், ஆனால் அவர்கள் பயந்துவிட்டார்கள். குறிப்பாக இடதுசாரிகள் மக்கள் எங்கே தங்களை சந்தேகித்து விடுவார்களோ என்று பயந்துவிட்டார்கள். அதனால் ஒட்டு மொத்தமாக நிராகரித்தார்கள். தங்களை புனிதமானவர்களாக நிலைநிறுத்தப் படாதபாடுபட்டார்கள். மக்களுக்காகத்தானே போராடுகிறோம், எங்களை சந்தேகப்படலாமா என்று அங்கலாய்த்தார்கள். மக்கள் சந்தேகப்பட்டால் தமது ஆயுதப் போராட்டங்கள்கூட பின்னுக்குத் தள்ளப்பட்டுவிடுமோ என்ற அச்சம் அவர்களை எதிர்க்கத் தூண்டியது. உண்மையில் அச்சப்பட்டிருக்க வேண்டியவ‌ர்கள் தலித்துகள்தான். ஏனெனில் அவர்கள்தான் எல்லா அமைப்புகளாலும் வஞ்சிக்கப்பட்டவர்கள். அவர்கள் எல்லாவற்றினையும் சந்தேகப்பட தார்மீக உரிமை பெற்றவர்கள். அப்படி அவர்களின் கோபத்தை, ஆதங்கத்தை எதிர்கொள்ளத் திராணியில்லாமல்தான் அவர்களை ஏகாதிபத்தியத்தின் கைக்கூலிகள், போர்டு நிறுவனத்தின் வார்ப்புகள் என்று சொல்லத் தூண்டுகிறது. 

தலித்தியம் என்பதை பின்நவீனத்துவத்தின் அடிநாதமாகப் பார்ப்பது அபத்தம். உலகில் தோன்றிய சிந்தனைப் போக்குகளுக்கு அவற்றை உருவாக்கியவர்களின் பெயர்கள்தான் இருக்கும் என்பது பொதுவான ஒன்று. ஆனால் தலித்தியம் என்பது தனி ஒருவரின் சிந்தனையை அடிப்படையாகக் கொண்டதல்ல. அது தலித் மக்களை அடிப்படையாகக் கொண்டது. தத்துவார்த்த அடிப்படைகளை புரட்சியாளர் அம்பேத்கர், அயோத்திதாசப் பண்டிதர் உட்பட மண்சார்ந்த முன்னோடிகளின் சிந்தனைகளைக் கொண்டது. அதே நேரத்தில் உற்பத்தி உறவுகளின் முரண்களைக் கையாள்வதில் மார்ச்சியத்தை அடிப்படையாகக் கொண்டது. அதனால்தான் மராட்டியத்தில் 1972ல் தலித் சிறுத்தைகள் உருவாக்கப்பட்டபோது மார்க்சியம் அதனுள் முன்னிருத்தப்பட்டது.

ஆனால் தலித் கருத்தாடல்களையும் வரலாற்று கட்டுமானங்களையும் முன்னெடுத்த தலித் சிந்தனையாளர்களை இடதுசாரிகள் எப்படிப் பார்த்தார்கள்? ஏனெனில் 1990களில் உருவான பின்நவீனத்துவ வாதிகள் முன்னாள் இடதுசாரிகள். குறிப்பாக நக்சல் இயக்கவாதிகள். அதைப் போலவே, தலித்தியம் என்பது ஏதோ 1990களில் உருவான ஒரு போக்காக, அதற்கு அ.மார்க்ஸ், ரவிக்குமார், ராஜ்கௌதமன் உள்ளிட்ட சிலரை பிதாக்களாகக் காட்டுவதைவிட மோசமான அபத்தம் வேறொன்றுமில்லை. இவர்கள் தலித்தியத்தைப் பற்றி தெரிந்துக் கொள்ளவதற்கு முன்பே இங்கு தலித் கருத்தாடல்கள் வளர்ந்திருந்தன. அம்பேத்கரின் கருத்துக்கள் வளமாகப் பரவியிருந்தன. பண்டிதரைப் பற்றின ஆய்வுகளும் வளர்ந்திருந்தன. ஆனால் அப்போது அவற்றை தாழ்த்தப்பட்டவர்களின் சில்லறை முயற்சிகளாகவே இவர்கள் பார்த்தார்கள், கேலி செய்து கொண்டிருந்தார்கள். இவர்களுக்கு எந்த விஞ்ஞானமும் தெரியாது என்று அனுதாபப்பட்டுக் கொண்டிருந்தார்கள். ஆனால் பிற்காலத்தில் யாரைப் பார்த்து அனுதாபப்பட்டார்களோ அவர்களே இவர்களுக்கு ஆசான்களாக இருப்பார்கள் என்று எதிர்பார்க்கவில்லை. தலித்தியத்தின் பிதாக்களாக குணா போன்றவர்களால் அங்கீகரிக்கப்பட்டவர்கள் அப்போது என்னவிதமான தவறுகளைச் செய்தார்களோ அதே தவறுகளை இப்போது வீரியத்தை இழந்துவிட்ட இடதுசாரிகள் செய்து கொண்டிருக்கிறார்கள். அதன் பிரதிநிதியாகத்தான் குணா போன்றவர்கள் இருக்கிறார்கள். எனவே, தலித்தியத்தை தன்னார்வ நிறுவனங்களின் அடித்தளமாகவும், பின்நவீனத்துவத்தின் வரவாகவும் பார்ப்பது தலித் மக்களை அவமதிப்பது மட்டுமல்ல அவர்களின் வரலாறே தெரியாத தற்குறிதனத்தினையும் காட்டும். அதனால்தான்

“சாதிவெறியர்களின் பரம எதிரிகளான நக்சல் புரட்சியாளர்களையும், ஆதிக்க சாதிகளுக்கு எதிரான போராட்டத்தில் தியாகம் புரிந்த கம்யூனிஸ்டுகளையும் தலித்துகளுக்கு எதிராக நிறுத்தும் இப்போக்கு புதிதான ஒன்றல்ல. இந்த மார்க்சிய விரோத தலித்திய அரசியலுக்கு நீண்ட வேர்களும், வரலாறும் உண்டு”

என்ற கருத்தை அவர் துணிந்து பதிவு செய்கிறார். என்னுடைய மார்க்சியப் பயிற்சிகூட நக்சல் தோழர்களின் வாயிலாகப் பெற்றதுதான். எனவே, நக்சல் புரட்சியாளர்களின் தியாகத்தினை, பங்களிப்பினை நான் குறைத்து மதிப்பிடவில்லை. ஆனால் இப்போதைய புரட்சியாளர்கள் குறைத்து மதிப்பிடுகிறார்கள் என்றே தோன்றுகிறது. ஏனெனில் இந்திய இடதுசாரிகள் சாதிய முரணை ஓர் அடிப்படை முரணாகவே பார்க்கவில்லை. அதை சீர்திருத்தவாதத்தின் ஓர் அலகாகப் பார்த்தார்கள். ஆனால் சாதியத்தினால் கடுமையாக பாதிக்கப்பட்ட தலித்துகள் அதை அடிப்படை முரணாகப் பார்க்க வேண்டும் என்று கோரியபோதுகூட அதை இடதுசாரிகள் நிராகரித்தார்கள். அதன் தொடர்ச்சியாக தலித் இயக்கத்தின் முன்னோடிகளின் பங்களிப்பையே புறம் தள்ளினார்கள்.

கெடுவாய்ப்பாக, தீண்டாமை என்பதை சாதியத்தின் ஒரு துணை அம்சமாகப் பார்த்தது பெரும் கேடு. தீண்டாமையின் வடிவங்களைப் பற்றி 1890களின் தொடக்கத்திலேயே பண்டிதரால் பெருமளவில் ஆராயப்பட்டது. பிறகு, 1930களில் அம்பேத்கர் அவர்களால் விரிவாக அலசப்பட்டது. உற்பத்தி உறவுகள் சார்ந்த, பண்பாட்டு பார்வையை முன்வைத்தபோது அது தாராளவாதத்தின் கண்ணோட்டம் என்று இடதுசாரிகள் கண்டு கொள்ளமல் விட்டது மட்டுமின்றி, விவாதத்திற்கே எடுத்துக் கொள்ளவில்லை. அதனால் தீண்டாமையின் அடிப்படைகளையும், அதன் தோற்றத்தைப் பற்றி அறியும் தளத்தினைவிட்டு வெகுதூரம் போய்விட்டார்கள். அதிலிருந்து அவர்களின் தோல்விகள் தொடங்கின. சீனாவின் மாதிரிகளை பின்பற்றிய‌வர்கள், கியூபாவின் மாதிரிகளை பின்பற்றிய‌வர்கள் மண்ணுக்கேற்ற மார்க்சியத்தை தேடிக்கொண்டே பயணத்தைத் தொடர்கின்றனர். மார்க்சியம் தெரிந்தால்தான் மண்ணுக்கேற்ற மார்க்சியமும் தெரியும், அதற்குமுன் காலடியில் இருக்கும் மண் தெரியவேண்டும். சுயவிமர்சனம் மட்டுமே அதற்குத் தீர்வல்ல, தற்காலத்தில் மாற்றம் கண்டிருக்கும் பொருளாதார சூழலும், அதன் பொருட்டு உருவாகியிருக்கும் சமூக மாற்றம், உற்பத்தி உறவுகளில் ஏற்பட்டிருக்கும் மாற்றங்கள் ஆகியவற்றைப் புரிந்து கொண்டால்தான் இடதுசாரிகளின் வீழ்ச்சிக்கான காரணத்தைக் கண்டுபிடிக்க முடியும். அதைவிட்டுவிட்டு தலித் இயக்கங்கள் மீது பழியைப் போட்டுவிட்டு தங்களை புனிதர்களாக காட்டிக் கொள்வது ஒருவகை கையலாகாதத்தனம்.

குணா அவர்கள் தம்மை தீவிர இடதுசாரியாக காட்டிக் கொண்டிருப்பதால் தம்மை மார்க்சியம் தெரிந்தவராக நினைக்கிறார். அவர் பாமக வளர்ந்ததற்கு கூறும் காரணங்கள் மார்க்சிய அடிப்படையே இல்லாதவை. உதாரணத்திற்கு ஒன்றைப் பார்ப்போம்-

"முற்போக்கு முகமூடி போட்டுக் கொண்டே இந்தக் கட்சி, தான் சார்ந்துள்ளதாகக் கூறும் வன்னிய மக்களுக்கு பேரழிவுகளை விளைவித்தது. பாமக வளர்ச்சி பெற்ற இந்த இருபதாண்டு காலத்தில்தான் விவசாயம் கடும் வீழ்ச்சி கண்டது. வன்னிய விவசாயிகள் வாழ்விழந்து குழி தோண்டவும், கட்டடம் கட்டவும் பெங்களூருக்கும், சென்னைக்கும், மும்பைக்கும், கோவைக்கும் கூட்டம் கூட்டமாக இடம் பெயர்ந்தனர்; பெருநகர பிளாட்பாரங்களில் தஞ்சமடைந்தனர்”

                பாமகவை எவ்வளவு சக்தி வாய்ந்த அமைப்பாகக் காட்டுகிறார். சமூகத்தின் உற்பத்தி உறவுகளில் மாற்றத்தை உருவாக்கக்கூடிய கட்சியாக இவரைத் தவிர வேறு யாரும் அதை உயர்த்திக் காட்டியிருக்க மாட்டார்கள். அதுவுமின்றி இதில் சுட்டிக்காட்டப்பட்ட பொருளாதாரக் காரணிகள் தலைகீழாக காட்டப்பட்டுள்ளன. அதை எப்படி புரிந்துக் கொள்வது? 

                “பாமக வளர்ச்சிப் பெற்ற இந்த இருபதாண்டுக் காலத்தில்தான் விவசாயம் கடும் வீழ்ச்சி கண்டது, வன்னிய விவசாயிகள் வாழ்விழந்து போனார்கள்" என்பது முற்றிலும் அபத்தமானது. விவசாயம் வீழ்ந்து போனதால்தான் பாமக வளர்ந்தது என்பது உண்மை. ஏனெனில் விவசாயத்தை அழிக்கக்கூடிய தேவை ஏதும் பாமகவிற்கு இல்லை. வன்னியர்கள் பெரும்பாலும் விவசாயிகள். அவர்கள் தமது வாழ்வாதாரத்தை ஒரு கட்சிக்காக துறந்துவிடுவார்கள் என்று எதிர்பார்ப்பது முட்டாள்தனம். ஆனால் நடந்தது என்வென்றால், எண்பதுகளின் நடுவிலும் தொன்னூறுகளின் தொடக்கத்திலும்தான் விவசாயம் நவீனமயம் ஆகத் தொடங்கியது. ட்ராக்டர் வைத்திருக்கும் விவசாயி பணக்கார விவசாயியாக பெருமையாக கருதப்பட்ட காலம். அந்தப் பெருமை அவர்களை அழிக்கும் என்பதை அவர்கள் எதிர்பார்க்கவே இல்லை. அதைத் தொடர்ந்து விவசாயத்தில் நவீன கருவிகளின் படையெடுப்பு ஆட்குறைப்பைக் கட்டாயப்படுத்தியது. வேலையற்றவர்கள் எங்கே போவார்கள்? நகரத்திற்கு போனால் பிச்சையெடுக்கவா முடியும், அங்கும் வேலைக்குத் தான் போக முடியும். நகரமயம் விரைவாகியிருந்தால் அவர்களுக்கு வேலைவாய்ப்புக்கு குறைவில்லை. குறைந்த கூலிக்கு கிராமத்தில் மாரடிப்பதைவிட நல்ல கூலிக்கு நகரத்தில் வேலை செய்வது பயனுள்ளதுதானே! எனவே விவசாயத்தில் ஆட்குறைப்பும், நகரமயமாக்கமும்தான் வன்னியர்களை கிராமத்தை விட்டு வெளியேற்றியது. தலித்துகளுக்கும் இதுதான் பொருந்தும். இதற்கு பாமகவை மூலமாகக் காட்டுவது எப்படி சாத்தியம்? 

                உழைக்கும் மக்கள் வெளியேறிவிட்டால் விவசாயத்திற்கு மட்டும் அல்ல, இயக்கங்களுக்கும்கூட ஆட்கள் கிடைக்க மாட்டார்கள் என்பதைப் புரிந்து கொள்ளாவிட்டால் இடதுசாரிகள் இப்போது தீண்டாமைப் பிரச்சினையை காலம் கடந்து கையில் எடுத்திருக்கிறார்களே அப்படித்தான் எப்போதும் இனி முடியும். இப்போது ஒரு பிரச்சினையை கையில் எடுக்கும் போது அதன் முன்னவர்களை குறை சொன்னால்தானே தாம் எடுப்பதற்கான தார்மீக நியாயத்தை கற்பிக்க முடியும்! அதைத்தான் குணா போன்றவர்கள் செய்து கொண்டிருக்கிறார்கள். உண்மையில் அவர்கள் தலித்துகள் பின்னால் அணி திரண்டிருக்க வேண்டும், ஆனால் அவர்களுக்கான விடுதலையை நாங்கள்தான் வாங்கிக் கொடுப்போம் என்று முனைப்பு காட்டுவது பேதமையையே காட்டும். ஆனால் தமது ஆதங்கத்தினை எப்படி வெளிப்படுத்துகிறார் என்பதற்கு மற்றொருச் சான்று..

 “எனவே எல்லாப் பிரிவுகளையும் சேர்ந்த கம்யூனிஸ்டுகளை வட தமிழகத்திலிருந்து ஒழித்துக் கட்டும் நடவடிக்கையின் இரண்டாவது பாகம் தான் பா.ம. க. மூன்றாவது பாகம் விடுதலைச் சிறுத்தைகள். இதற்கான அரசியல் தத்துவார்த்த அடிப்படையை வழங்கியவர்கள் பின்நவீனத்துவவாதிகள்”

                குணா எழுதிய இரண்டு கட்டுரைகளிலும் பாமகவை, விடுதலைச் சிறுத்தைகளை குறைத்து மதிப்பிட்டு எழுதியிருந்தால்கூட ஏற்றுக் கொள்ள முடியும், ஆனால் இரண்டுக்குமான வரலாற்றுப் பாத்திரம் ஒன்றுதான் என்று நிறுவ முயல்வது மோசமான புரிதலின்மை. அதைவிட அதற்கு பின்நவீனத்துவ வாதிகள்தான் அடிப்படைகளை வழங்கினார்கள் என்பது நகைச்சுவை. 

வடமாவட்டங்களிலிருந்து கம்யூனிஸ்டுகளை ஒழித்துக் கட்ட இக்கட்சிகள் தோன்றியதென்றால் தென் மாவட்டங்களில் இடதுசாரிகள் ஏன் காலூன்ற முடியவில்லை என்ற கேள்விக்கும், அதைவிட தொழிற்துறை வளர்ச்சி பெற்ற மேற்கு மாவட்டங்களில் ஏன் இடதுசாரிகளால் வலுவாக முன்னேற முடியவில்லை என்ற கேள்விக்கும் அவர்கள் பதில் கண்டாக வேண்டும். நக்சல் பாரிகளின் கூடாரங்களை விட்டு ஓடி வந்துவிடுங்கள் என்று பிற்போக்கு சக்திகள் அழைப்பு விடுத்த உடனே வன்னியர்களும் தலித்துகளும் ஓடி வந்து விட்டார்கள் என்றால் அவ்வளவு பலவீனமாகவா நக்சல்பாரிகள் தமது இயக்கத்தை கட்டமைத்தார்கள்? நச்சல் வளர்ந்த பகுதிகளில் சாதி வெறியர்கள் தமது கொட்டத்தை அடக்கிக் கொண்டிருந்தார்கள் என்ற உண்மை, நக்சல்கள் பலவீனப்பட்டுப் போனபிறகு இந்த சாதியச் சக்திகள் மீண்டும் தலையெடுத்தற்கான காரணம் என்ன என்பதை யார் கண்டுபிடிப்பது? நிச்சயம் நக்சல்பாரிகள் என்று தம்மை முன்னிறுத்திக் கொள்பவர்கள் மட்டும் அல்ல, இடதுசாரிகளும் அதை பரிசீலிக்க வேண்டும். அதைவிடுத்து வெற்று கூச்சல்களை எழுப்புவது இடதுசாரி சிந்தனைகளுக்கே பொருந்தாது. 

குணாவின் கட்டுரைகள் இயங்கும் விதம் முற்றிலும் இடதுசாரி சிந்தனையைச் சார்ந்தது அல்ல. அதில் கொஞ்சம் பொருளாதாரக் கண்ணோட்டத்தைக் காணமுடிகிறது. ஆனால் பொருளாதாரக் கண்ணோட்டம் மட்டுமே மார்க்சியமும் அல்ல. ஏனெனில் மார்க்சியம் என்பது வெறும் பொருளாதாரக் கண்ணோட்டம் அல்ல என்பதை ஏங்கல்சும், லெனினும் பலமுறை சுட்டிக் காட்டியுள்ளனர். சமூக வளர்ச்சியென்பது உற்பத்தி உறவுகளின் வளர்ச்சியைப் பொறுத்தது என்பதை புரிந்து கொள்ளாவிட்டால் விடுதலைச் சிறுத்தைகளின் வரலாற்றுப் பாத்திரத்தை மட்டுமல்ல பாட்டாளி மக்களின் வரலாற்றுப் பாத்திரத்தையும் தவறாக புரிந்து கொள்ளத்தூண்டும். 

விடுதலைச் சிறுத்தைகளை ஆளும் வர்க்கத்தின் கைக்கூலி என்று குற்றம் சாட்டுவதால் எந்தப் பயனும் இல்லை. ஏனெனில் தலித் மக்களைப் பொருத்தவரையில் பாட்டாளி மக்கள் கட்சியென்பது ஆளும் வர்க்கத்தின் ஓர் அங்கம் மட்டுமல்ல; கிராமங்களில் ஒடுக்கும் சாதியின் நிறுவனமாக அது நீண்ட நெடுங்காலமாக இருந்து வருகிறது. மக்கள் ஒடுக்கப்படும்போது ஏதோ ஒரு தீர்க்கத்தரிசிக்காக அதாவது நக்சல்கள் போன்ற உங்களுக்காகக் காத்திருப்பார்கள் என்று எதிர்ப்பார்த்திருக்க வேண்டாம். தலித்துகளின் பிரச்சினையை இடதுசாரிகள் இன்னமும் புரிந்து கொள்ளவில்லை என்பது நிதர்சனமான உண்மையை இது அப்பட்டமாக வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.

எனவே, குணா அவர்களின் கட்டுரைகளில் மலிந்திருக்கக்கூடிய தகவல் பிழைகளையும், முன்னுக்கு முரணாக குறிப்பிடப்பட்ட வரலாற்றுத் தரவுகளையும் கவனத்தில் எடுத்துக் கொண்டால் எதிர்வினையின் பக்கங்கள் கூடிவிடும். எனினும் அதனுள் இழையோடும் ஆதங்கத்தைப் புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் கையறுந்த நிலையில் வெளிப்படும் ஆதங்கத்தை எப்படி சரி செய்வது? தாமே சரி செய்து கொள்வதைத் தவிர வேறு வழியில்லை. அதனால்தான் தகவல்களுக்கான மறுப்புகளைத் தவிர்த்திருக்கிறேன். ஆயினும் குணா அவர்களையும் பூனைக்கு மணி கட்டிய அவரின் சாகசத்தை மெச்சிய அத்தனை பேர்களையும் கேட்டுக் கொள்வது என்னவென்றால் வரலாறு தெரியாமல் எழுதாதீர்கள் என்பதல்ல, தலித் மக்களின் தேவை என்னவெனத் தெரியாமல் அங்கலாய்ப்பதில் பயன் ஏதுமில்லை. 

- கௌதம சன்னா, கருத்தியல் பரப்புச் செயலாளர், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Comments

21 comments

21
nalanda
இடதசாரிகளாக இருப்பது ஒரு மோஸ்த்தர் என்று சிலர் நினைக்கின்றனர். அது தவறு என்பதை இக்கட்டுரை சுட்டிக் காட்டுகிறது. குணா போன்றவர்கள் நுணி புல்லை மேய்ந்துவிட்டு இணையத்தில் எங்களைப் போன்றவர்களை திசைத் திருப்புவதை நிறுத்திக் கொள்ள வேண்டும்,
jeelan basha
i went through this article with lot of interest and i learnt a new vision is how to understand the so called people like guna. in our cyber field there r many fakes and fades r alive with radicals mask, sometimes left's mask..
pls do careful to recognised those kind of people.
இறைகற்பனைஇலான்
வன்னியர்களின் போராட்டம் இன்றல்ல 15 நாள் சாலை மறியல் என்று எம்.ஜி.ஆர் காலத்தில் நடந்தது கூட தமிழகத்தில் குழப்பம் ஏற்படுத்தி பார்ப்பன்ரலாதார் என்கிற சிந்தனையை தளர்த்தி காங்கிரசு காய் நகர்த்த வெளிநாட்டுச் சக்திகள் அல்லது உளவு நிருவன உதவிகள் ஏற்படுத்தியதாகச் சந்தேகம் உள்ளது. அது போலவே இன்று கூடஙுகுளம் ,செருலைட், காவிரி,முள்ளையாறு,எல்லாவற்றுக்கும் மேலே ஈழப் பிரச்சினையில் அதிமுக,திமுக, மதிமுக,நாம் தமிழர்,நெடுமாறனமைப்பு,பெரியாரின் நேரடி இயக்கங்களான திராவிடர் விடுதலைக் கழகம்,பெரியார் தி.க, திக, சில கம்யூ,விடுதலை சிறுத்தைகள், மாணவர்கள் என தமிழகம் கொத்திதெழ்ந்த நேரத்தில்று எதிலும் சேராத பொதுமக்கள் யாவரும் காங்கிரஸ் எதிற்பும்,தமிழின ந்ல்லுணர்வும் கொண்டு தடையின்றி முன்னேறுவதைக் கண்டு, உளவுத்துறை இலங்கைக்கைக்கூலி இந்திய அரசயந்திரம் ஒன்று கூடி வலை வீசியுள்ளார்கள்.அதில் ராமதாசு ந்ன்றாகவே மாட்டியுள்ளார். அத்துடன் முன்னமே திராவிடம் எதிர்ப்பு என்று அறியாமையில் உழழும் தமிழார்வளர்கள் ராமதாசை ஏற்கனவே மாட்டிவைத்து ரசித்தார்கள்.குட்டையை குழப்பும் தமிழரிவு சீவிகள் எல்லாரும் ஈழப்பிரச்சினையை இரண்டாந்தண்மையாக்கும் கரவுப்போர் புரிகிண்றார்கள் அல்லது இறையாகிறார்கள் அதுதான் குணாகக்ளின் விசிரி வேலையுமாகும்.. நிதானம் தேவை .
Nadodi
"ஒரு பிரச்சினையை கையில் எடுக்கும் போது அதன் முன்னவர்களை குறை சொன்னால்தானே தாம் எடுப்பதற்கான தார்மீக நியாயத்தை கற்பிக்க முடியும்! அதைத்தான் குணா போன்றவர்கள் செய்து கொண்டிருக்கிறார்கள்,"

கவுதம் சன்னா, ரவிக்குமார் போன்றவர்கள் தலித்தியத்தை முன்னிறுத்துவதற்காக திராவிடர் இயக்கத்தின் பங்களிப்பையும் பெரியாரையும் கொச்சைப்படுத்தியதை விடவா? கவுதம் சன்னாவின் மேற்கண்டவரிகளை படித்தபோது "ஈயத்தை பார்த்து இளிச்சதாம் பித்தாளை" என்பது தான் நினைவுக்கு வந்தது.
Aslam
கௌதம சன்னா அவர்களின் கட்டுரை தத்துவார்த்த அடிப்படையில் அமைந்த கட்டுரையாக இருப்பதால் இதை குணா போன்றவர்கள் புரிந்துக் கொள்வார்களா என்று தெரியவில்லை. இடதுசாரியாக இருப்பவர்கள் தவறான தகவல்களின் பின்னால் அலைந்து நேரத்தை வீணடிப்பதைவிட உண்மையான சிந்தனையாளர்களை படித்து விவாதிப்பது நல்லது. தர்மபுரியில் நக்சல்பாரிகளின் வீழ்ச்சியினை நினைத்து மனம் வருந்துகிறது. அதற்கான காரணங்களை குணா போன்றவர்கள் ஆராய்வார்கள் என்று எதிர்பார்த்தால் தலித் இயக்கங்களின் வரலற்றுப் பாத்திரத்தை தவறாக சித்தரிப்பதின் மூலம் இசுலாமியர்களின் வரலாற்றப் பாத்திரத்தையும் தவறாக சித்தரிப்பார்கள் என்றே தோன்றுகிறது. குணா போன்ற நபர்கள் தெரிந்த சில தகவல்களை கொண்டு தாங்கள் முழுமையான தகவலை சொல்லிவிட்டதா பெருமிதம் கொண்டிருந்தால் தம்மை மாற்றிக் கொள்வார் என நம்புகிறேன். வினவுகாரர்கள் என்ன சொல்லப் போகிறார்களோ...
சாமுவேல்
குணாவின் கட்டுரைகளைப் படித்து அவற்றை உண்மையென்று நம்பிருந்தேன். தீவிரமாக அவர் எழுதியிருந்ததால் அது நல்ல விளைவை உருவாக்கும் என்று மனதால் வேண்டிக் கொண்டேன். ஆனால் அவர் ஏதோ கையாலாகத்தனத்தில் தனது கட்டுரைகயை படைத்திருக்கிறார் என்பதை கௌதம சன்னா அவர்களின் கட்டுரை தெளிவுபடுத்தியுள்ளது. எனவே அவருக்கு எனது நன்றிகளையும் வெளியிட்ட கீற்று ‘இணையத்தையும் பாராட்டுகிறேன். மேலும் கட்டுரைகளை வெளியிடும் முன்பு கருத்துக்களையும், எழுத்துப் பிழைகளையும் சரிபார்க்கும் படி கேட்டுக் கொள்கிறேன்.

/சாமுவேல்ஸென்னை/
selvam
தலித்தியம் வந்தபிறகு ஆதி திரவிடர் அடைந்த நன்மை என்ன? தமிழகத்தை பொருத்தவரை பரவருக்கும் குரவருக்கும் அவரொடு மறவருக்கும் விடுதலை வஙித்தருமா? கானமை அனுபவித்த நடார்கள் மேலேவர எது உதவியது. பிரசாதிஎழைகலோடு சன்டையிட்டு மேலேரமுடியும? தலிதியதின் எதிரி யார் நன்பன் யார்?
ராகேல்
அருமையான கட்டுரை, இன்றையத் தலைமுறை படிக்க வேண்டிய அவசியமானக் கட்டுரை. இணையத்தில் பொருப்பின்றி எழுதுபவர்களுக்கு தக்க பதிலடியைத் தந்துள்ள திரு.கௌதம சன்னா அவர்களுக்கு நன்றி. தலித் அரசியலின் அவசியத்தையும் இடதுசாரிகள் தவறவிட்டதையும் சன்னா கருத்தியல் வலிமையோடு சுட்டிக் காட்டியுள்ளார்.
இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன்
சாதிக்கொடுமை ஒழிப்பில் முதலாளித்துவம் மற்றும் தலித் இயக்கங்களின் பங்கு:

கிராம விவசாய நிலக்கிழமையின் நிலத்தில்தான் சாதியின் ஆணிவேர் புதைந்துள்ளது. அந்த நிலவுடமையில்தான் பார்பனியமும் சேர்ந்துக்கொண்டு சாதிய பிரசவித்தது. வளர்த்தது. அதை காப்பதில் பார்பனியம் அளப்பறிய பணியை செய்தது.
பல்வேறு பழங்குடிகள் அங்கு அடிமையாக்கப்பட்டார்கள் அல்லது வேளாண்மயமாக்கப்படுதலின் சமூக வளர்ச்சியின் போது வேட்டையாடுதலில் ஈடுபட்டிருந்த பழங்குடிகள் தங்கள் வாழ்வுக்காக வேளாண்மையை சார்ந்து அடிமைகள் ஆனார்கள்.

எளிதாக சொல்லவேண்டுமென்றால் ஆற்றுப் படுகையில் வளர்ச்சியடைந்த மருத நில அரசுகள் (ப்ச்) முல்லை நில பழங்குடிகளையும் (ஸ்ச்) குறிஞ்சி நில பழங்குடிகளையும் (ஸ்ட்) அடிமைப்படுத்தின.

ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ந்த இந்த படிநிலை கட்டமைப்பு சமூக அந்தஸ்து மட்டுமில்லாமல் பொருளாதாரத்தையும் தீர்மானித்தது.
திறமையின் அடிப்படையிலும் விருப்பத்தின் அடிப்படையிலும் தெரிவு செய்யப்படவேண்டிய தொழில் பிறப்பின் அடிப்படையில் நிர்பந்தமாக மாற்றியதின்மூலம் சுதந்திர முதலாளித்துவ போட்டியானது சமூகத்தில் இருந்து தடை செய்யப்பட்டது. ஒவ்வொருத் தொழிலும் ஒரு சிறுக்குழுக்களுக்கு மட்டும் என சொந்தமாக்கப்பட்டதின் மூலம் போட்டியே இல்லாத ஊனமான முதலாளித்துவம் மட்டுமே இங்கு பிறந்தது. சமூக வளர்ச்சியில் முக்கிய பங்காற்றவேண்டிய முதலாளித்துவம் சவலைப்பிள்ளையாக நோஞ்சானகவே வளர்ந்தது. இதனால் சமூக வளர்ச்சியின் வேகம் மிகுந்து அளவில் குறைந்தது.

சுதந்திரத்திற்கு பிறகு இந்த முதலாளித்துவ வளர்ச்சியின் வேகம் ஒரு குறிப்பிடத்தக்க அளவில் அதிகமானது. தொழிற்சாலைகள் பெருகின.
தலித்களின் கிராம வாழ்வு என்பது நிலத்தைச் சார்ந்ததாகவும் உணவு மற்றும் உயிர் வாழ்வதற்கு நில உடைமையை விட்டால் வேறு வழி இல்லை என்றும் இறுக்கமாக காலம் காலமாய் கட்டி அமைக்கப்பட்டிருக்கிறது.

இதுதான் சாதி கொடுமைக்கு அடிப்படை காரணம் . நிலக்கிழமை விவசாயத்திலிருந்து வெளியேறுதலே சாதி கொடுமையிலிருந்து விடுதலை பெறுவதற்கான முதல் நிபந்தனையாக இருக்கிறது.
எப்போழுது தலித் நிலக்கிழமை விவசாய நிலத்திலிருந்து வெளியேறி தொழிற்சாலை வேலையில் சேர்ந்தானோ அப்பொழுதே அவன் மீதான உடலியியல் ஒடுக்கும் உரிமையை சாதி இந்துவான நில உடைமையாளன் இழந்து விடுகிறான்.
ஆனாலும் ஏதாவது வாய்ப்பு கிடைத்தால் தடிகள் மூலமாகவும், அரிவாள்களாலும் நியாபகப்படுத்த முயற்சிக்கிறான். பழைய உறவை தலித் மறக்க நினைப்பதை அவன் விரும்பவில்லை.
இந்த நிலத்திலிருந்து வெளியேறி கொண்டிருக்கும் அனைவரும் சாதிய கொடுமையிலிருந்து விடுதலை பெறுவதில்லை. அவனது ஊரில் தலித்களின் எண்ணிக்கையும் குறைவு எனில் கொடுமை தொடர வாய்ப்பு இருக்கிறது.
இங்கு தான் தலித் இயக்கத்தின் தேவையும், ஒருங்கிணைப்பும் அவசியமாகிறது. அது சாதிக் கொடுமையை எதிர்க்கும் வலிமையையும் பாதுகாப்பையும் தலித்களுக்கு தருகிறது.

“ஒரு புறம் அருவருக்கத்தக்க பிழைப்புவாத அரசியல் இருந்தாலும் மறுபுறம் ஒடுக்குமுறையை எதிர்த்து போராடும் வலிமையை தலித் இயக்கங்கள் வழங்கி கொண்டிருக்கின்றன”

சாதி கொடுமையிலிருந்து தலித் வெளியேறி விட்டாலும் , அவனுக்கு பார்ப்பனியத்தின் நன்கொடையான சாதி இழிவு தொடரும் என்றாலும் அவன் உடலியல் கொடுமையிலிருந்து விடுதலை பெறுவது மிக முக்கியமான அவசியமான மாற்றம்.
ஒரு புறம் விவசாய வீழ்ச்சி, மறுபுறம் தொழில் வளர்ச்சி, தலித் இயக்கங்களின் எழுச்சி இவை ஆதிக்க சாதிகளின் சாதிய ஆதிக்கத்தை கேள்விக் குறியாக்கிவிட்டன.(சாதியை அல்ல,சாதிய உடலியல் ஒடுக்குமுறையை).

சாதிய கொடுமைகளும் இழுவுகளும் பல கிராமங்களில் தொடர்ந்துகொண்டுதான் இருக்கின்றன. ஆனாலும் பல கிராமங்கள் விடுதலையடைந்து கொண்டுதான் இருக்கின்றன.

எல்லா கிராமங்களிலும் தலித் கொடுமைகளும், தலித் இழிவுகளும் ஒரே அளவில் இருப்பதில்லை. ஒரு கிராமத்தில் தலித்களுக்கான சாதிய கொடுமை மற்றும் இழிவுகளை தீர்மானிக்கும் காரணிகள் எவை?

1. அருகிலுள்ள தொழிற்சாலைகளின் எண்ணிக்கை
2. அருகிலுள்ள ஒரு நகரத்திற்கு, இடையேயுள்ள தூரம்
3. குலத் தொழில் செய்வோர் எண்ணிக்கை
4. சாதிய இந்துக்களின் நிலத்திற்கும், தலித்துகளின் நிலத்திற்கும் உள்ள விகிதம்.
5. சாதி இந்துக்களின் எண்ணிக்கை மற்றும் தலித்துகளின் எண்ணிக்கைக்கு இடையேயுள்ள விகிதம்
6. நிலக்கிழமை கூலிகளுக்கும், ஆலை தொழிலாளர்களுக்கும் இடையேயுள்ள விகிதம்
7. தலித் இயக்க வளர்ச்சி
8. கல்வி
9. விவசாய வீழ்ச்சி சதவிகிதம்.
10. சுய தொழில் செய்வோர் எண்ணிக்கை.

மேற்கண்ட பத்து காரணிகள் தலித் மீதான சாதிய உடலியல் ஒடுக்குமுறையை தீர்மானிக்கின்றன, இவற்றில் மூன்று முக்கிய காரணிகளாக உள்ளவை.
1. அருகிலுள்ள முதலாளித்துவ வளர்ச்சி
2. தலித்களின் எண்ணிக்கை
3. தலித் இயக்கங்களின் வளர்ச்சி

இந்த உடலியல் ஒடுக்குமுறையிலிருந்து பாதுகாக்கக்கூடிய மிக முக்கிய காரணிகள்தான், சாதிய சமூகத்தின் உடலியல் ஒடுக்கு முறையை ஆதிக்கத்தை உடைத்து நொறுக்கிக்கொண்டிருக்கின்றன. ஆனால் இன்னமும் சாதியின் பொருளியல் கட்டமைப்பு அதே படிநிலை வரிசையில்தான் தொடர்கிறது என்பதையும் சாதிய இழிவை இது பெரிய அளவில் மாற்றவில்லை என்பதையும் சேர்த்து புரிந்து கொள்ளவேண்டும்.

இன்றைய சூழ்நிலையில் முதலாளித்துவ வளர்ச்சி மற்றும் தலித் இயக்க வளர்ச்சி இரண்டும் பழைய நிலக்கிழமையை தனது லட்சியத்தின் மையமாக கொள்ளாவிட்டாலும், செயல்பாட்டின் சாரத்தில் அதனை கேள்வி குறியாக்கும், தகர்க்கும் போன்ற முயற்சிகளை செய்கின்றன.
பிறப்பின் அடிப்படையில் வழங்கப்பட்ட வேலை என்ற கோட்பாட்டை, திறமையின் அடிப்படையில் என செயல்படுத்துவதின் மூலம் முதலாளித்துவம், நிலக்கிழமை மற்றும் சாதிஅமைப்பை கேள்விக்குள்ளாக்கவில்லையா?

அடங்க மறு ! அத்து மீறு! திமிறி எழு! திருப்பி அடி! என்ற தலித் இயக்க கோசங்களும் செயல்பாடுகளும், நிலக்கிழமையும் பார்பனியமும் காப்பாற்றிய ஒரு அடிமை சமூகத்தின் படிநிலை வடிவமைப்பை நம் முன்னால் தகர்ப்பது, சமூக வளர்ச்சி இல்லையா?

இந்திய நீதிமன்றம் வழங்காத பாதுகாப்பை, காவல்துறை வழங்காத பாதுகாப்பை தலித் இயக்கங்கள்தான் தலித்திற்கு பல கிராமங்களில் வழங்கி கொண்டிருக்கின்றன.

பெரியாரின் சுயமரியதை பெற்றுத்தராத சுதந்திரத்தை , அம்பேத்காரின் சட்டங்கள் வழங்காத ‘உடலியல் ஒடுக்குமுறை விடுதலையை' முதலாளித்துவமும் தலித் இயக்கங்களும் பெற்றுத்தந்ததை தலித் கிராமங்களில் ஆய்வுகள் நடத்தினால் விளங்கிக்கொள்ளலாம்.

(நடுநிலை அறிவு நாணயத்துடனும் எந்த நன்றி உணர்ச்சியில்லாமல் நேர்மையான அறிவியல் படுத்துதலுடனும் சமூக விஞ்ஞானத்தை அணுகினால் புதிய உண்மைகள் கிடைக்கும்.)

இதுவே இரண்டாயிரம் ஆண்டு அடிமைச்சமூகத்தில் ஒர் சமூகப்புரட்சிதான்.

எனவே சாதியின் விவசாய நிலவுடமையால் உண்டான தலித்தின் சாதியக் கொடுமைக்கு முடிவுகட்டிக் கொண்டிருக்கும் இரண்டு முக்கிய காரணிகளாக முதலாளித்துவமும், தலித் இயக்கங்களும் சமூக வளர்ச்சியில் பங்கு பெறுகின்றன,

இந்திய வரலாற்றில் வெள்ளைக்காரர்கள் உட்பட எந்த காலத்திலும் தலித்திற்கு வழங்கப்படாத முதலாளித்துவ சுதந்திரத்தை ஆலையில் முதலாளித்துவம் வழங்கியது. அதை அவன் வாழும் ஊரிலும் உறுதிச்செய்யும் வேலையைதான் தலித் இயக்கங்கள் செய்கின்றன.

வேறு வார்த்தைகளில் சொல்வதென்றால் இந்திய சமூகத்தில் சட்டங்கள் ஏற்றுக்கொண்டாலும் சமூகம் ஏற்க மறுத்த தலித்தின் ஜனநாயக உரிமைகள் மற்றும் முதலாளித்துவ சுதந்திரம் ஆகியவற்றை சமூகத்தின் எல்லா பகுதிகளுக்கும் விரிவுபடுத்தும் ஒரு சமூக வளர்ச்சிதான் இது.

சமூக அரசியல் இயக்கங்கள் இல்லாவிட்டாலும் சமூகவளர்ச்சி இருக்கும். சமூக வளர்ச்சியை துரிதப்படுத்தும் வேலையைத்தான் சமூக அரசியல் இயக்கங்கள் செய்கின்றன.
சமூக வளர்ச்சியில் உண்மையான தேவை இருந்தால் மட்டுமே ஈடுபடும் இயக்கத்திற்கும் வளர்ச்சி இருக்கும். சமூகவளர்ச்சியின் தேவைக்கு அல்லது பிரச்சனைக்கு சரியான தீர்வை செயல்பாட்டின் மூலம் நடைமுறைப்படுத்தும் இயக்கங்கள் மட்டுமே வளர்கின்றன. தத்துவத்திற்கும் நடைமுறைக்கும் இடைவெளி இருப்பின் அவை தேக்கமடைகின்றன அல்லது அழிந்துபோகின்றன.

தலித் இயக்கத் தேவையை சமூகத்தின் தேவைதான் முடிவு செய்கிறது. எதிர்காலத்தில் அதன் தேவை இல்லாவிட்டால் அவற்றின் வளர்ச்சி தடைப்பட்டு உதிர்ந்து விடும் என்பது உறுதி.
இப்பொழுது ஒரு முக்கியமான கேள்வி ஒன்று எழுகிறது.

‘தலித்தின் சாதி கொடுமைக்கு' முடிவு கட்டுதலோடு தலித் இயக்கங்கள் ஒழிந்து விடுமா?
சாதியக் கொடுமைதான் இப்போது முதலாளித்துவத்தாலும் தலித் இயக்கங்களாலும் அழிக்கப்படுகிறது . சாதிய இழிவு இன்னும் சமூகத்தில் இருந்தும் மனித மனங்களிலிருந்தும் நீக்கப்படவில்லை.

நகரத்து தலித்துகளுக்கும், தொழிற்சாலையில் வேலை செய்யும் தலித்துகளுக்கும், அரசு ஊழியர்களான தலித்துகளுக்கும் எவ்வகையிலேனும் இழிவு தொடர்கிறது. உடல் ரீதியாக இனி கொடுமைக்கு உள்ளாக்கி பழைய உறவை நியாபக படுத்த முடியாத ஆதிக்க சாதிகள் இழிவுபடுத்துதலை கூர் தீட்டுகின்றன. இவைகள்தான் தலித் இயக்கங்கள் வாழ்வதற்கான அடுத்தக்காரணியை உற்பத்தி செய்துவிடுகிறது.

அதாவது சாதிய இழிவுக்கெதிரான ஒருங்கிணைப்பு.
இப்பொழுதும் மார்க்சியவாதிகள் எதிர்ப்பார்ப்பது போல் சாதீழிவும் அழிவதில்லை அதனால் தலித் இயக்கங்களும் அழிய போவதில்லை.

இதை ஒரு தலித் இயக்கம் செய்யாமல் விட்டால் மற்ற தலித் இயக்கம் செய்து அந்த வெற்றிடத்தை நிரப்பி அது வளர ஆரம்பிக்கும்.

தலித் ஆலையில் சேர்ந்தவுடன் பாட்டாளி வர்க்கமாகின்றான் என்றும் இதனால் மற்ற சாதி உழைக்கும் வர்க்கத்துடன் இணைந்து அவனும் வர்க்க உணர்வை பெறுவான் என புரட்சிகர சக்திகள் எதிர்பார்த்தன.
சாதிய இழிவு தொடரும் வரையிலும், சாதிய படிநிலையில் பொருளாதார அமைப்பு தொடரும் வரையிலும் அவன் தன்னை தலித்தாக உணருவானே அன்றி வர்க்கமாக உணரமாட்டான்.
புறவியலான மற்றவரின் சிந்தனைகளே தலித்தின் சாதி ரீதியாக ஒன்றிணையும் சிந்தனைக்கு அடிப்படை.

தலித்திற்கு சாதிப்பெயரோ , சாதிய ரீதியாக ஒன்றிணைவதோ விருப்பமான ஒன்றல்ல. ஏனெனில் சாதிப்பெயர் மற்றவரைப்போல் அவன் விரும்பி அணியும் அணிகலனல்ல , பிறக்கும்போதே முதுகில் வைத்து தைக்கப்பட்ட வலியுடைய சிலுவை. தலித் சாதி ரீதியாக ஒன்றிணைவதை விரும்புவதில்லை.

“தலித் பற்றி மற்றவரின் மனதில் சாதிய இழிவு உள்ளவரை தலித்தானவன் தன்னை தலித் என்று உணர்வதை எந்த தத்துவார்த்த வார்த்தை ஜாலத்தாலும் தடுத்து விட முடியாது”

கருப்பின நீக்ரோக்கள்கூட தலித் அளவிற்கு நெடிய காலம் கொடிய கொடுமை அனுபவித்திற்க மாட்டார்கள். நிலக்கிழமை சமூக அமைப்பிலும் இன்று முதலாளித்துவ அமைப்பிலும் கூட அவர்கள் மீதான பார்வை ஆண்டான் அடிமை சமூக வெறுப்பு உளவியலே மற்றவர்களிடம் உள்ளது. இந்த புறவியல் பார்வைதான் தலித்தின் சாதி ஒருங்கிணைப்பிற்கும் தலித் இயக்க வளர்ச்சிக்கும் அடிப்படை.

தலித் சமமாகத்தான் விரும்புகிறான் , புறசமூகம்தான் ஏற்றுக்கொள்வதில்லை என்ற உண்மை மறந்துவிடக்கூடாது.

இரண்டாயிரம் ஆண்டு காலமாக எந்த சொத்துகளுமின்றி ஊரின் ஒதுக்குபுறமாய் அகதிகளாய், அடிமைகளாய் குடியமர்த்தப்பட்ட ஒரு சமூகத்தை, நத்தம் புறம்போக்குநிலத்தையும், பஞ்சமி நிலத்தையும் மட்டுமே உரிமை கொள்ள அனுமதிக்கப்பட்ட ஒரு சமூகத்தை, நல்ல வீடு, நல்ல கல்வி, நல்ல உடை, நல்ல உணவு எல்லாவற்றையும் ஏக்கத்தோடு கனவாய் மட்டுமே பார்க்க வைக்கப்பட்ட ஒரு சமூகம் இவை எல்லாவற்றையும் பெற முடியும் என நம்ப வைக்கிற அல்லது பெற வைக்கிற அல்லது ஏக்கத்தை அடைய சுதந்திரம் அளித்த முதலாளித்துவத்தை அச்சமூகம் விரும்புகிறது மற்றும் அதனை நாடுகிறது.

உண்மையில் சுரண்டலின் ஒரு வடிவத்திலிருந்து மற்ற வடிவத்திற்குதான் தலித் மாற்றப்படுகிறான் என்றாலும் ஒப்பீட்டளவில் நிலக்கிழமையைவிட இந்த முதலாளித்துவம் மேன்மையானது.

தலித்துகளை மீண்டும் தொழிலாளி வர்க்கமாக மாற்றி அவர்களின் ஆயிரம் ஆண்டு கால அடக்குமுறைக்கு எதிரான கோபமே உரமாகி அது தீவிரமிக்க போராளிகளை உருவாக்கும் என புரட்சிகர சக்திகள் எதிர்ப்பார்க்கிறார்கள்.

இங்கு தான் தலித் என்று ஒரு தனி வரலாறு நதி தன் வாழ்நிலை பாதையை இவர்களின் வர்க்க நதியுடன் கலக்காமல் பிரிந்து தனியே தன் பாதையை அமைத்துக் கொண்டது.

"இரண்டாயிரம் ஆண்டுகளில் மிகத் தெளிவாய் திட்டமிட்டு, பிரிக்கப்பட்டு, அதை நிலைநிறுத்த நேரடியாக அரசு இயந்திரமும் மதமும் பயன்படுத்தப்பட்டு, பொருளியலும் சாதிய படிநிலையாக நிலை நிறுத்தப்பட்ட ஒரு நாட்டில் அந்த அமைப்பை தகர்க்கமால் அதை கடந்த உழைக்கும் வர்க்க உணர்வை ஏற்படுத்த முடியும் என நினைப்பது உண்மையில் அறியாமையே".

தலித்துகளை, புறவியலான தலித் இழிவு மற்றும் தலித் கொடுமை என்ற இரு கூறுகள்தான் அவர்கள் சாதி ரீதியாக ஒன்றிணையக் காரணம் என்பதை முக்கிய காரணியாக கொள்ளாமல் தலித் இயக்கங்கள் சாதி உணர்வை அரசியலாக்கி பயன்படுத்துவதுதான் முதல் காரணம் என்பதாக விமர்சிக்கப்படுவது சரியல்ல.

முதலாளித்துவ போட்டியில் தலித்களும் போட்டியாளராக பங்கேற்க விரும்புகிறார்கள். நிலக்கிழமையின் பிடியிலிருந்து தங்களை பாதுகாக்க நினைக்கிறார்கள். ஆலையில் அல்லது நிறுவனத்தில் நடக்கும் சாதிய இழிவுகளை எதிர்த்து போராட நினைக்கிறார்கள். இங்குதான் சாதி இழிவுகள் அவர்களை துரத்துகிறது. இதுதான் தலித் இயக்க தேவைக்கு அடுத்த காரணம்.

நிலக்கிழமையின் விவசாயம் பழைய உற்பத்தி முறையில் இருக்கும் வரை சாதிய இழிவு தொடரும். சாதிய இழிவு உள்ளவரை சாதிய ஒருங்கிணைப்பு இருக்கும்.
மார்க்சின் மூதுரை “பிரச்சனை இருப்பதால் கடவுள் இருக்கிறார்”. என்பது.

எல்லாருக்கும் இருக்கும் பிரச்சனைகள்தான் கடவுளை நம்பும் கூட்டத்தினை ஒருங்கிணைக்கிறது .
மற்ற ஆதிக்க சாதியிலோ அல்லது சக தாழ்த்தப்பட்ட சாதியினாலோ சாதி இழிவு என்ற கொடுமை இருக்கும் வரையில் தலித்திற்கான தனித்தனி இயக்கங்கள் இருக்கும். அதற்கான ஒருங்கிணைவும் இருக்கும்.
சாதிய கொடுமையும், இழிவும் இருப்பதால் தலித் இயக்கங்கள் இருக்கின்றன. சாதிய கொடுமையிலிருந்து விடுவித்து முதலாளித்துவ சுதந்திரம் பெறவைக்கிற சமூக வளர்ச்சியில் அவை பங்கு பெறுகின்றன.

சாதியின் பெயரால் அணிதிரள்வது சாதியை ஒழிக்குமா? என கேள்வி கேட்பவர்கள் அது ஆயிரமாண்டு சாதிய உடலியல் ஒடுக்குமுறை ஒழிக்கிறது என்ற எதார்த்தை மறைக்கிறார்கள். “சாதியை அதன் உடலியல் ஒடுக்குமுறையை ஒழிக்கும் முன்பே ஒழிக்க முடியுமா” என கேட்க விரும்புகிறேன்.

சாதிய ரீதியாக தலித் இயக்கங்களால் உருவாக்கப்படும் சாதிய ரீதியான பிளவு சமூகத்தில் நிரந்தர மானதல்ல என்பதையும் அதற்கான காரணிகள் சமூகத்தில் அகற்றப்பட்டவுடன் அவை மறைந்துவிடும் அதுவரை அதன் தேவை சமூகத்தில் இருக்கும் என்பதையும் இங்கே தெளிவாக புரிந்துக் கொள்ளவேண்டும்.
இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன்
தலித் சமூக வளர்ச்சியில் புரட்சிகர இயக்கங்களின் பங்கு:

இந்தியாவில் இருந்து வெள்ளையர்கள் வெளியேறிய பிறகும் சாதிய நிலக்கிழமை கொடுமை தொடர்ந்தது. இந்தக் கொடுமைக்கு எதிராக புரட்சிகர இயக்கங்கள் தீவிரமாக போராடி தலித்திற்கு துணையாக இருந்தார்கள்.

ஆனால் ஏன் அவர்கள் புரட்சிகர சக்திகளை விட்டுவிட்டு தலித் இயக்கங்களின் பின்னால் சென்றார்கள்.?

நிலக்கிழமை பிடியிலிருந்தபோது ஆறுதலாக, துணையாக இருந்த புரட்சிகர கரங்கள் அவர்கள் நிலத்திலிருந்து வெளியே சென்று முதலாளித்துவ உற்பத்தி முறைக்கு சென்றதும், அந்த புரட்சிகர கரங்கள் தங்கள் வளர்ச்சிக்கு (முதலாளித்துவ சிந்தனைக்கு ) தடையாக இருப்பதாக தலித்துகள் உணர ஆரம்பித்தார்கள்.
ஏனெனில் தலித்துகளை அவர்களின் இயல்பான முதலாளித்துவ போட்டி சிந்தனைக்கு மாறாக அவர்களை ஆலை தொழிலாளியாக மாற்றம் செய்து தொழிலாளர் வர்க்கமாக மாறுவார்கள் என புரட்சிகர சக்திகள் எதிர்பார்த்தன.

புரட்சிகர சக்திகள் தங்களின் லட்சிய கனவை தலித்தையும் காணுமாறு எதிர்பார்கின்றன. தலித்திற்கும் கனவு காண உரிமையுண்டு.

அது முதலாளித்துவ கனவா? சோசலிச கனவா என்பதை அவன்தான் முடிவு செய்ய வேண்டும்.

சுதந்திர முதலாளித்துவ போட்டியில் தலித்களால் வெற்றி பெற முடியாவிட்டாலும், போட்டியிட கருத்தியல் அளவு சுதந்திரமாவது வேண்டும் அவர்களுக்கு.

இங்குதான் புரட்சிகர சக்திகளுக்கும் தலித்துகளுக்கும் இடையே முரண்பாடு தொடங்கியது. புரட்சிகர சக்திகள் இந்த சிந்தனைக்கு எதிரானவர்கள். தலித்துகள் புரட்சிகர சக்திகளை கைவிடுதல் என்பது இயல்பாக நடந்தது. . அதே நேரத்தில் ஒடுக்குமுறையிலிருந்து பாதுகாக்க ஒரு பாதுகாவலன் வேண்டும் அதுவும் முதலாளித்துவ சுதந்திரத்தோடு. இங்குதான் தலித் இயக்கங்களின் தொடக்கப்புள்ளி துவங்கியது.

ஒரு சமூகத்தில் முதலாளித்துவ வளர்ச்சி என்பது இயல்பான தவிர்க்க இயலாத போட்டி. தலித்துகளிடம் இந்த சிந்தனை வருவதை எப்படி யாரால் தடுக்க முடியும்?
முதலாளித்துவ வளர்ச்சியடையாமல் சமூகம் நிலகிழமையிலிருந்து நேரடியாக சோசலிசத்திற்கு செல்ல முடியாது.

இந்த இயல்பான விதியை புரிந்து கொள்ளாமல் நின்றதால்தான் புரட்சிகர இயக்கங்கள் தங்கள் கட்சிகளுக்கும், வளர்ச்சிகளுக்கும் தாங்களே தடை ஏற்படுத்தி கொண்டார்கள்.
இந்த கட்டுரை எனக்கு முதலாளித்துவ சிந்தனையாளன் என்ற பட்டத்தை பெற்றுத் தரலாம். ஆனால் ‘முதலாளித்துவம் உட்பட எல்லா சமூக வளர்ச்சியும் முன்பு இருந்ததை விட புரட்சிகரமானதே' என்பதையாவது மார்க்சியவாதிகள் ஏற்பார்கள் என நம்புகிறேன். இங்கேயும் சாதிய நிலக்கிழமையைவிட முதலாளித்துவம் புரட்சிகரமானது என்பதையும் அதைவிட சோசலிசம் புரட்சிகரமானது என்பதையும் ஒப்புக் கொண்டாக வேண்டும்.
முதலாளித்துவ வளர்ச்சியை நன்கு வளராத நாடுகளில் பாட்டாளி வர்க்கம் நன்கு வளருவதில்லை. வேறு வார்த்தைகளில் சொல்வதென்றால் நன்றாக வளர்க்கப்பட்ட செழிப்பான பயிர்தான் அறுவடைக்குத் தயாராகிறது.

ஆனால் இங்கு முதலாளித்துவம் என்பதே கேடானதாக பார்க்கிறார்கள் கம்யூனிஸ்ட்கள்.
இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன்
தலித் இயக்கங்கள் அந்த மக்களின் தற்காப்பு கவசங்கள். தன்னை சாதிபெயரை வைத்து உணர்வு ரீதியாக காயப்படுத்தும், அலட்சியப்படுத்தும், பலவீனப்படுத்தும், அவமானப்படுத்தும் , மெல்லியதாய் ஏளனப்படுத்தும், நகரத்தில் வாடகை வீடு கிடைக்க வேறு சாதி என பொய் சொல்ல வைக்கும் ஒரு இழிவை உணர்வு பூர்வமாக புரிந்து கொள்ள, பகிர்ந்து கொள்ள, எதிர்கொள்ள உதவுபவை தலித் இயக்கங்கள் அன்றி புரட்கர சக்திகளின் வர்க்க வார்த்தைகளல்ல.
ஒரு இயக்கம் தலித்தை எப்படி பார்க்கிறது என்பதில் பிரச்சனையில்லை, சமூகம் எப்படி பார்க்கிறது என்பதில்தான் தலித் ஒருங்கிணைப்பின் அவசியத்தை புரிந்துக்கொள்ள முடியும்.
தலித்தை உழைக்கும் வர்க்கத்தின் ஒரு பிரிவினர் என்று சுருக்கி அதன் மூலம் தன் அரை ஆண்டான் அடிமை வரலாற்றை மறைத்து , தனக்கும் மற்ற பிரிவினரின் உழைக்கும் வர்க்கத்திற்கும் இடையே உள்ள பண்பியல் வேறுப்பாட்டை மூடிமறைக்கும் புரட்சிகர இயக்கங்களின் வர்க்க வலையால் தலித்களை பழைய நிலக்கிழமை நீடிக்கிறவரையில் வென்றெடுக்க முடியாது.

தன் இரண்டாயிரம் ஆண்டு அடிமைத்தனத்தை மறுத்துவிட்டு இன்றும் தன்னை ஒடுக்கும் ஒரு சாதி ஆதிக்க கூட்டத்தை மறந்துவிட்டு , ஏகாதிபத்தியத்தியத்திற்கு எதிராக துப்பாக்கி தூக்க அரைகூவல் விடுக்கும் ஒரு புரட்சிகர இயக்கத்தின் பின்னால் தலித் வருவான் என எதிர்பார்ப்பது புரட்சிகர சக்திகளின் நம்பிக்கையாக மட்டுமே இருக்கக்கூடும். இரண்டாயிரம் ஆண்டு காலம் அடிமைத்தனத்தை தந்த இந்த தேசத்தில் தன் விடுதலைப்பற்றி பேசாமல் அவனது சாதிய கொடுமைக்கு காரணமான நிலக்கிழமை விவசாய நலன்களுக்கான தேசிய உணர்வை அவன் கட்டாயம் பெற்றே தீர வேண்டும் என் புரட்சிகர இயக்கங்கள் எதிர்பார்க்கின்றன.
இங்கே விவசாய நலனுக்கும், தலித் விடுதலைக்கும் போராடுவதின் மூலம் பாலுக்கும் காவல், பூனைக்கும் தோழன் என்ற நிலையில் புரட்சிகர சக்திகள் மாட்டிக்கொண்டன.

முதாலளித்துவ ஆலையில் தலித்துகளுக்கு முன்பிருந்த நிலக்கிழமையை விட ஆடை சுதந்திரம், சுய மரியாதை, வருவாய், பேச்சுரிமை, திறமைக்கேற்ற பதவி உயர்வு போன்ற முதாலளித்துவ சுதந்திரம் கிடைத்து விடுகின்றன.

எனவே, நேற்றை விட இன்று வளர்ச்சி போக்கில் மேல் நிலையில் நடந்து கொண்டிருக்கும் அவனிடம் ஆயுதம் ஏந்து, புரட்சி செய் என்றால் அவன் எப்படி வருவான்?

நிலக்கிழமையிலிருந்து முதலாளித்துவத்துக்கு வரும் இடப்பெயர்ச்சி காலத்தில் தலித்திற்கு புரட்சிகர இயக்கங்களின் தேவைக்கான அடிப்படைகள் ஏதுமில்லை, இந்த இடப்பெயர்ச்சி பகுதியில்தான் குறைசொல்ல முடியாத நேர்மையுடைய கம்யூனிஸ்ட்களை விட்டுவிட்டு ஆயிரம் பிழைப்பு வாதங்களை கொண்டிருந்தாலும் தலித் இயக்கங்கள் வளர்ச்சி பெறுகின்றன. ஏனெனில் சமூகத் தேவைத்தான் இயக்கங்களின் இருப்பையும், மறுப்பையும் முடிவு செய்கின்றன. நேர்மையாளர்கள் என்பதால் அவர்களின் சிறந்த தத்துவத்தை அது தேவையில்லாத சமூகத்தில் மக்கள் அதை ஏற்க வேண்டிய அவசியமில்லை.

இந்த காரணம்தான் நண்பர்களே! தங்களின் கொள்கைக்காகவே வாழும் நேர்மையாளர்களை விட்டுவிட்டு எவ்வளவு பிழைப்புவாதிகளாக இருந்தாலும் மக்கள் அவர்களின் பின்னால் இன்று நிற்பதற்கான உண்மைக் காரணம்.

திருமாவளவன், கிருஷ்ணசாமி, அதியமான் வருக்கைக்கு பின் சமூகத்தில் சாதிய ஒடுக்குமுறை குறைந்திருக்கிறதா இல்லையா? இந்த தலித் இயக்கங்களின் தத்துவம்தான் கொள்கைதான் என்ன?
அது வரலாற்று பொருள் முதல்வாதமோ, இயக்கவியல் பொருள்முதல் வாதமோ பெரிய உற்பத்தி முறை உற்பத்தி உறவு சார்ந்த விதிகளோ , சோசலிசமோ, கம்யூனிசமோ இல்லை.

ஒரே வரியில் சொல்வதென்றால் “அடித்தால் திருப்பி அடிப்போம்”. அவ்வளவே.
ஆனால் அதற்கான தேவை சமூகத்தில் இருக்கிறதா இல்லையா?
அடித்தால் கேட்க நாதியில்லாத சமூகத்திற்கு இந்த தத்துவம் தேவையாக இருந்தது, இருக்கிறது.

இதுதான் விடுதலை சிறுத்தைகள் உட்பட எல்லா தலித் இயக்க வளர்ச்சிக்கும் அடிப்படை.
கம்யூனிஸ்ட்களின் கைகளில் இருப்பது எதிர்காலத்திற்கான தத்துவம். நிகழ்காலத்தேவையல்ல.

தேவைக்காக தத்துவத்தை மாற்றாமல் தத்துவத்திற்காக மக்களை மாற்ற முயற்சிக்கிறார்கள் கம்யூனிஸ்ட்கள்.

இதுதான் எல்லா கம்யூனிச புரட்சிகர அமைப்புகளுக்குமான பின்னடைவிற்குக் காரணம்.
இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன்
மக்களையும் தொழிற்சங்கங்களையும் வென்றெடுக்க முடியாமல் போன தனது தோல்வியை வெறும் வாதத்திறமையால் மூடி மறைக்கிறார்கள். மார்க்சியத்தை தாண்டியும் சிந்திக்க முடியும் என்ற கருத்தியல் சுதந்திரம் கூட இல்லாத முன்னணிகளை உற்பத்தி செய்து அவர்களை முதலாளித்துவத்தில் இழந்து கொண்டிருக்கிறார்கள்..

பட்டாசு வெடித்தல், பால் தயிராதல், இரும்பு துருப்பிடித்தல் இந்த மூன்றுமே வேதிவினைகள்தான். ஆனாலும் வேதிவினைக்கான வேகம் ஒன்றுக்கு ஒன்று மாறுபடும்.
பட்டாசு வெடிக்க ஒரு நொடி போதும். பால் தயிராக ஓர் இரவு வேண்டும். இரும்பு துருப்பிடிக்க மாத கணக்கில் நேரம் ஆகும். அதுபோலவே நிலக்கிழமையிலிருந்து முதலாளித்துவ மாற்றமடையும் வேகமும், நாட்டிற்கு நாடு வேறுபடும். அதன் வேகத்தை பாதிக்கும் காரணிகளை அகற்றி, வேகத்தை அதிகரிக்கும் காரணிகளை ஊக்குவிக்க வேண்டும். அப்போதுதான் வர்க்கம் வரும். பிறகே நடத்த முடியும் வர்க்க புரட்சி!
இங்கே முதலாளித்துவ வளர்ச்சி மற்றும் தலித் இயக்கங்கள் ஆகியவையே இந்த சமூக வினையின் வேகத்தை அதிகரிக்கும் காரணிகள். நிலக்கிழமையின் தொடர்ச்சி, குலத் தொழில், அகமணம், பார்ப்பனியம் இவை சமூக மாற்றத்திற்கு எதிரான காரணிகள்.
இந்த காரணிகளை அறிவியல் அடிப்படையில் நீக்க முயற்சிக்க வேண்டிய புரட்சிகர சக்திகள், ஒருபுறம் அருவருக்கத்தக்க அரசியல் இருந்தாலும் இந்த சமூகவினையின் வேகத்தை அதிகரிக்கும் தலித் இயக்கங்களை கேவலமாக விமர்சிப்பதன் மூலமும், முதலாளித்துவ ஆரோக்கிய பகுதிகளை எதிர்ப்பதன் மூலமும், தாங்கள் உருவாக்க நினைக்கும் வர்க்கங்களுக்கு தாங்களே தடைக்கற்களாக மாறிவிட்டு, வர்க்க உருவாக்கத்திற்கு முன்பே வர்க்கப்புரட்சி நடத்த கற்பனை உலகில் திட்டமிடுகிறார்கள்.

இந்திய சமூக அமைப்பில் முதலாளித்துவத்தின் வளர்ச்சியின் அடிப்படையில் சமூக வளர்ச்சியை கணக்கிடுவது சரியன்று. நிலக்கிழமையை முதலாளித்துவம் எந்த அளவிற்கு அழித்திருக்கிறது என்ற அடிப்படையில் சமூக வளர்ச்சி கணக்கிடப்பட வேண்டும்.

நவீன விஞ்ஞானம் துல்லியத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. நவீன புள்ளியல் விவர கணித கோட்பாடாக வளர்த்தெடுக்கப்பட வேண்டிய சமூக விஞ்ஞானம், துல்லியமற்ற வெறும் கோட்பாட்டளவில் எந்திரத்தனமாக புரட்சிகர சக்திகளால் பயன்படுத்தப்படுகிறது.
இதுதான் சமூக வளர்ச்சியில் அவர்களை பார்வையாளர்களாக நிறுத்தி வைத்திருக்கிறது.
இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன்
தோராயமான சமூக விஞ்ஞான மார்க்சிய கோட்பாடுகள் 16ம் நூற்றாண்டுகளுக்கு முந்திய அறிவியல் வடிவமான கோட்பாட்டு வடிவத்திலேயே உள்ளன. இன்றைய நவீன புள்ளியியல் விவர அடிப்படையில் வடிவமைக்கப்படும் கணித சமூக விஞ்ஞான கோட்பாடு மட்டுமே மார்க்சியத்திற்கு சொந்தம் கொண்டாடும் ஒரு கூட்டத்தின் தனிச் சொத்தாக்கப்பட்ட மார்க்சிய தத்துவத்தை முழுமையாக அறிவியல் படுத்தி , துல்லியப்படுத்தி உண்மையில் மார்க்சிய கண்டுபிடிப்பை யார் திரிக்கிறார்கள் என்பதை அம்பலப்படுத்தும் வலிமை மிக்க அளவுகோலும், ஆயுதமும் ஆகும்.

நிலக்கிழமையிலிருந்து முதலாளித்துவம் மாற்றமடையும் வினையின் இடைப்பகுதியில் முதலாளித்துவ இயக்கங்கள் மட்டுமே செயல் திறனை பெற முடியும். மார்க்சிய -லெனிய -மாவோ சிந்தனைகள் அங்கு தற்காலிக செயலிப்பை பெறுகின்றன அல்லது தொழிற்சங்கங்களாக சுருங்கிப் போகின்றன. ஏனெனில் அவைகளுக்கு தீவிரமாக முதலாளித்துவத்தை எதிர்க்க மட்டுமே தெரியும் அல்லது புரட்சிக்குப்பின் எப்படி முதலாளித்துவ உற்பத்தியை அமல்படுத்துவது என்பது மட்டுமே தெரியும். முதலாளித்துவத்தை வளர்ப்பது என்பது அவர்களின் இலட்சியத்திற்கு எதிரானது என போதிக்கப்பட்டுள்ளனர்.

முதலாளித்துவத்தின் வளர்ச்சியில் ஏற்படும் ஆரோக்கிய மாற்றத்தை மார்க்ஸ் பெரிதும் மறைத்துவிட்டு, அதன் திகட்டுநிலை அடைந்த பின் ஏற்படும் அதன் அழுகுதலை அதிகம் விமர்சனம் செய்ததை இங்கு வளராத நிலையிலேயே எந்திரத்தனமாக மார்க்சியத்தை பயன்படுத்த நினைத்தார்கள் கம்யூனிஸ்ட்கள். வளர்ச்சியின் இயங்கியல் போக்கில் சமூக மாற்றத்தை வியாக்யானம் செய்யாமல் முதலாளித்துவத்தின் கடைசி தோல்வியான அழுகுதல் புள்ளியிலிருந்து சமூகத்தை பார்க்க துவங்கியதுதான் இவர்களின் தேக்க நிலைக்கு காரணம். அவர்கள் முதலாளித்துவத்தின் இறுதி புள்ளியிலிருந்து சமூதாயத்தை பார்ப்பதால் முதலாளித்துவமே கேடானது என வரட்டுத்தனமாக புரிந்து கொள்ள நேரிடுகிறது. இங்குள்ள அனைவரும் மார்க்ஸ் லெனின் சொன்ன தொழிலாளர் வர்க்கம் என கற்பனை செய்து கொள்கிறார்கள் அல்லது மாவோ சிந்தனையை ஜெராக்ஸ் எடுத்து பேசி வருகிறார்கள்.

தங்கத்தை தராசின் ஒரு தட்டிலும் இரும்பின் எடைக்கற்களை மறு தட்டிலும் வைத்து இரண்டும் சமமென குறிமுள் காட்டிய பொழுது அங்கு வெறும் எடை மட்டும் தான் இரும்பிற்கும் ,தங்கத்திற்கும் சமமாகிறதே தவிர , பண்போ , மதிப்போ சமமல்ல என்பதை இவர்கள் புரிந்து கொள்ளவேயில்லை . இதை எடுத்துக்காட்டாக இரண்டு விதங்களாக பார்க்கலாம்.
ஒன்று
மார்க்ஸ் சொன்ன முதலாளி, தொழிலாளி சுரண்டல் இங்கேயும் உண்டு என்றாலும் உண்மையில் இது பண்பால் சாதிய கட்டமைப்பில் ஏற்பட்ட முதலாளித்துவம், பண்பிலும், வர்க்க பிளவிலும் சாரத்தில் வேறுபட்டவை.
(இங்கு சாதிய படிநிலை வரிசையில் பொருளியல் உடைமைகள் அடுக்கப்பட்டுள்ளன)
இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன்
ராம்தாஸையும் திருமாவளவனையும் ஒரே தராசில் சமமாக எடை போடுகின்றன புரட்சிகர இயக்கங்கள். தராசில் இருவருக்கும் பிழைப்பு வாதம் சமமாக இருப்பதினால் இரண்டும் சமமென புரட்சிகர இயக்கங்கள் இரண்டையும் சமமாக பார்க்கின்றன அல்லது சாதிக்கிடையில் தங்கள் நடுநிலையை உணர்த்தி தாங்கள் நடுநிலையாக இருப்பதை காட்டி கொள்கின்றன. ஆனால் சமூக வளர்ச்சி பண்பில் ஒன்று சாதி நிலக்கிழமை பாதுகாப்பாகவும், மற்றது சாதிய நிலக்கிழமை தகர்ப்பாகவும் மாற்றம் பெற்றுள்ளதை காணத்தவறுகிறார்கள்.
இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன்
சமூக வளர்ச்சிப்பற்றி பேசுபவர்கள் எப்படி இதை சமம் என மதிப்பீடு செய்ய முடியும். ?
இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன்
“விவசாய நிலவுடைமையில் முதலாளித்துவ உற்பத்திமுறை முழுவதும் புகுத்தப்படும் வரை சாதி வாழும். தூய வர்க்கம் வளராது.” என்பதை இங்கே அறுதியிட்டு சொல்ல விரும்புகிறேன்.
நிலகிழமையும், குலத்தொழிலும், அகமணமும் எவ்வளவு எஞ்சுகிறதோ அவ்வளவே சாதிய கொடுமையின் வாழ்வு.
சாதி இருக்கும் வரை அதனால் பெரிதும் பாதிக்கப்படும் தலித்திற்கு அதன் ஒருங்கிணைப்பின் அவசியம் இருக்கும்.
“கிராம நிலவுடைமை, நிலக்கிழமையில் முதலாளித்துவ உற்பத்தி முறை புகுத்தப்பட்டு நிலக்கிழமையின் பண்பு வீழ்ச்சி அடைய செய்தபின் அந்த முதலாளித்துவம் வளர்ந்து ஒரு திகட்டு நிலையை அடையும் புள்ளியில்தான் இந்திய சமூகத்தின் அடிப்படை அலகு சாதியிலிருந்து வர்க்கமாக மாற்றமடைகிறது.”
இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன்
கீற்றால் வெளியிட மறுக்கப்பட்ட எனது முழு கட்டுரை
" சமூக வளர்ச்சியில் தலித் இயக்கங்களும் புரட்சிகர இயக்கங்களும்"

http://arive-ayutham.blogspot.in
Kumaresan
குணா என்பவரை ஒட்டுமொத்த இடதுசாரி இயக்கத்தின் பிரதிநிதியாக நீங்களாக வரித்துக்கொண்டு, அவரைத் தாக்குவது போல் இடதுசாரி இயக்கத்தையே தாக்குவது எவ்வகையில் நியாயம் எனத் தெரியவில்லை.

மார்க்ஸ் அப்படிச் சொன்னார், லெனின் இப்படிச் சொன்னார் என்று வெறும் மேற்கோள்களுக்குள் அடங்குவதல்ல மார்க்சிய இயக்கம். இடதுசாரிகளை விமர்சிப்போர் மட்டுமல்லாமல் சில இடதுசாரிகளே கூட அந்தத் தவறைச் செய்துவந்திருக்கிறார்கள். நீங்கள் அவர்களிடமிருந்து மாறுபட்ட புரிதலோடு அணுகியிருப்பதை வரவேற்கிறேன்.

தலித் போராட்ட இயக்கத்தோடு கம்யூனிஸ்ட் இயக்கம் தன்னை நெருக்கமாக அடையாளப்படுத்திக்கொள்ளத் தவறிய வரலாற்றுப் பிழையை மனப்பூர்வமாக ஒப்புக்கொள்கிற கம்யூனிஸ்ட்டுகளில் ஒருவன் நான். தொழிலாளி வர்க்கப் போராட்டம் என்பது தொழிற்சங்கப் போராட்டம் அல்ல என்ற கருத்தை வலியுறுத்துகிற கம்யூனிஸ்ட்டுகளில் ஒருவன் நான். அப்படிப்பபட்டவர்களின் தொடர் முயற்சிகளின் வெற்றியாக இன்று கம்யூனிஸ்ட்டுகள் தலித் போராட்டத்தைத் தாங்களும் கையில் எடுத்திருப்பதை ஏன் பார்க்கக்கூடாது? “இடதுசாரிகள் தாமதமாகத்தான் புரிந்துகொண்டார்கள்” என்று மறுபடி மறுபடி சொல்லிக்காட்டிக்கொண்டே இருப்பதில் என்ன ஆதாயம்? தலித் போராட்டத்தின் முன்னணித் தளகர்த்தகர்கள் என்ற பட்டத்தை நீங்களே வைத்துக்கொள்ளுங்கள். பின் வந்து சேர்ந்துகொண்டவர்களாக இருப்பதில் நாங்கள் இழப்பதற்கு ஏதுமில்லை.

பின் நவீனத்துவத்தின் வளர்ச்சிப்போக்கில் அடையாள அரசியல் என உருவானதையும், இந்தியாவில் இந்துத்துவம் மற்றும் இதர சாதிய அரசியல் வாதங்கள் எழுந்ததையும் மார்க்சிஸ்ட் கட்சி சுட்டிக்காட்டியிருக்கிறது. அதே நேரத்தில், தலித் இயக்கங்களை சாதிய அரசியல் அமைப்புகளோடு இணைத்துப் பார்க்கக்கூடாது என்றும் மார்க்சிஸ்ட் கட்சி தெளிவுபடுத்துகிறது. இதில் “பழைய மோகம்” எங்கிருந்து வருகிறதோ, எனக்குப் புரியவில்லை.

மார்க்ஸ் எல்லாம் அறிந்தவர் என்று அவரே ஒப்புக்கொள்ள மாட்டார் என்று சரியாகச் சொல்லிவிட்டு, பின்னர் மார்க்சியத்தின் போதாமை எனக்கூறுவது ஏன்? மார்க்சியம் வளர் அறிவியல். மார்ச்சியத்தையும் மண்ணையும் புரிந்துகொள்கிறவர்களால் அந்த அறிவியல் மேலும் மேலும் வளரும். கடந்த கால அனுபவங்கள் முதல் தற்போதைய அணுகுமுறைகள் வரையில் அந்த அறிவியலின் வளர்ச்சிக்கூறுகளே.

அங்கீகாரங்களுக்காகக் காத்திராமல், மார்க்சிய இயக்கம் தனது புரிதலின் தெளிவோடு தொடர்ந்து களத்தில் நிற்கும்.
காஸ்யபன்
"சாதியின் தோற்றம் " என்ற நூலை எழுதிய குணா தான் இவ்ர் என்றால் இவ்வளவு பெரிய கட்டுரை அனாவசியம்! " பாம்பையும்பாப்பானையும்கண்டால்பாமபைவிடு! பாப்பானை கொல்லு" என்பதற்கும் உங்கள் மறைமுக மார்க்ஸீய எதிர்ப்புக்கும் வித்தியாசமில்ல! தலித்துகளின் இன்றய பாடுகளுக்கு சமூக,மத,பொருளாதார கரணம்களை விட்டு விடமுடியாது ! சாதி ஐயாயிரம் ஆண்டுகளாக இருக்கிறது! தீண்டாமை 5ம் நூற்றண்டில் வந்தது! ஆதி சங்கரர் பௌத்தர்களை கருவறுக்க உருவாக்கியது! இவை பற்றி இன்னும்கூடுதலாக ஆறாயப்பட வேண்டும்! தலித்துகள் பௌத்தர்களாயிருந்தவர்கள் என்பதும் ஆரயப்பட வேண்டியதுள்ளது! வாழ்த்துக்களுடந்--காஸ்யபன்
Radha Krishnan
அருமையான பதிவு சன்னா ! பின் நவீனத்துவத்தின் முக்கியக் கூறான, கட்டுடைத்தல் என்பது,சமூக பொருளாதார, மாற்றத்தினை முன்னெடுத்த மார்க்ஸ்,அம்பேத்கர்,பெரியார் எனப் பலரும் கையாண்ட ஒன்றுதான்..தலித்தியம்,பின் நவீனத்துவத்தை, தன் போராட்டக் கருவிகளில் ஒன்றாகப் பார்க்கிறதே தவிர அதனை முற்றாகச் சார்ந்து இயங்க வேண்டிய கட்டாயம் ஏதுமில்லை. போராட்டக் களத்தில்,பின் நவீனத்துவவாதிகளையும், பெண்ணீயவாதிகளையும், இடதுசாரிகளையும்,பெரியாரியவாதிகளையும்,சிறுபான்மையினரையும்,இணைத்துச் செல்லும் பக்குவம் பெற்றுள்ளது தலித்தியம்.ஆனால், இடதுசாரிகளின் சிந்தனைகள், பெருமளவு தேர்தல் வெற்றி தோல்விகளைக் குறித்து கவலையுறுவதிலும்,உத்திகளை வகுப்பதில் ஈடுபடுவதுமாக கழிந்து கொண்டிருக்கின்றது.மண்ணுக்கேற்ற மார்க்சியம் என்பது,இந்திய சாதீயச் சமூகக் கட்டுமானத்தை,உடைப்பதிலிருந்தே துவங்குகிறது.இதை மறுக்கும்போதுதான்,அது வறட்டுத்தனமாகி விடுகின்றது. நக்சல்களை அணுகுவதில் துவங்கி,சாதி,தேர்தலரசியல்,தமிழ்த்தேசியம்,ஈழம்,தலித்தியம் என பல்வேறு தளங்களில் அவர்கள் முரண்பாடுகளோடு உலா வருவதை நினைவூட்டியது தங்களின் பதிவு.
Thamizh Adhavan
தோழர் குணா இயங்கியல் தத்துவத்தை சரியாக உள்வாங்கி கொண்டாரா ,சமகால அரசியலை சரியாய் புரிந்து கொண்டாரா என்கிற ஐயம் எழுகிறது .. வர்க்க பேதங்களை முன்னிறுத்தி உழைப்பு சுரண்டலை எதிர்த்து களமாடும் இடதுசாரி தோழர்களால் சாதியத்தால் உண்டான சுரண்டலையும் ,அடக்குமுறையும் நேரடியாக எதிர்க்கும் கருத்தியலை வகுத்துக்கொண்டு களமாட அவர்களின் இயங்கியல் தத்துவம் இடம் தர வில்லையா என்ன? முதலாளி, தொழிலாளி இடைவெளியையும் ,பேதத்தையும் மட்டுமே பேசி .. சாதியத்தால் உருவான உயர்வு ,தாழ்வு ,ஆண்டைத்தனம் ,அடிமைத்தனம் இவற்றை அகற்றாத அல்லது நேரடியாக எதிர்க்காத வசதியான கருத்தியலை முன்னெடுப்பது அவர்கள் மாற்றத்தை உள்வாங்கி கொள்ளாததையும், கொள்கை புரிதலில் அவர்களுக்கு இருக்கிற குழப்பத்தையுமே காட்டுகிறது... தலித் அரசியலை, தலித்தியத்தைப் பற்றி தெரிந்துக் கொள்ளாமல் தோழர் குணா போன்றவர்கள் தவறான கருத்தை பரப்புவது நல்லதல்ல ..

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.