ஏறத்தாழ 30 ஆண்டுகளுக்கு முன், தமிழக விடுதலைப் போராளி தமிழரசன், பொன்பரப்பியில், உளவுத் துறையின் தூண்டுதலால், கொள்ளையன் என்று கருதப்பட்டு, கல்லால் அடித்துக் கொல்லப்பட்டான். அவன் வன்னியர் சமூகத்தில் பிறந்தவன். சாதி அமைப்பை எதிர்த்துப் போராடியவன். தமிழ்த்தேச விடுதலைக்காகக் குரல் கொடுத்தவன். எந்த மக்களுக்காகப் போராடினானோ, அந்த மக்களாலேயே கள்வன் என்று கருதப்பட்டுக் கொல்லப்பட்டான்.

dalit woman at ponparappiஅன்று தமிழரசனைக் கொன்ற கற்கள் இன்னும் மீதமிருக்கின்றன போலும்! இப்போது அதே பொன்பரப்பியில், வன்முறை மீண்டும் வெடித்திருக்கிறது. ஏழை எளிய மக்களின் வீடுகள் மட்டுமில்லை, சாதி எதிர்ப்புணர்வு, மனிதநேயம் எல்லாம் அடித்து நொறுக்கப்பட்டுள்ளன.

வன்னியர் சமூக மக்கள் அனைவரும் வன்முறையாளர்கள் இல்லை. அவர்கள் உழைப்பாளிகள், அவர்களுள் மிகப் பலர் ஏழைகள். ஆனால் அவர்களை ஆட்டிப் படைக்கும் தலைவர்கள் சிலர் இந்த வன்முறையைத் தூண்டுகின்றனர். தேர்தலுக்கு முந்திய நேரத்தில், மருத்துவர் ராமதாஸ், அவரின் மகன் மருத்துவர் அன்புமணி இருவரும் பேசிய பேச்சுகளே வன்முறைக்கு வித்திட்டன என்று கூற வேண்டும். மக்களிடம் சாதி வெறியைத் தூண்டி, அவர்களைக் கலவரத்தில் ஈடுபடச் செய்வதன் மூலம், அந்தச் சமூகம் ஒரு பயனையும் பெறவில்லை. மாறாக, இருப்பதையும் இழந்து கொண்டுள்ளது. இதுபோன்ற வன்முறை, கலவரங்களால் பயன்பெறுகின்றவர்கள், அந்தக் கட்சியின் தலைவர்கள் மட்டுமே.

இப்போது சாதிக் கலவரம் பொன்பரப்பியிலிருந்து, புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதிக்கும் பரவியுள்ளது. தங்கள் பின்னால், மத்தியில் ஆளும் கட்சியான, பாஜக இருக்கிறது என்பதும், பாமக தலைவர்களின் வன்முறைப் பேச்சுக்கு ஒரு காரணம்.

கோவை, திருப்பூர், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில், ஆர்.எஸ்.எஸ். கிளைகள் படர்ந்து கொண்டுள்ளன. அங்கு அவர்கள் முழுநேரமாக வேலை செய்து கொண்டுள்ள காட்சிகளைத் தேர்தல் சுற்றுப்பயணத்தின் போது பார்க்க முடிந்தது. மத அடிப்படையில் கலவரங்களைத் தூண்டுவதும், திமுக விற்கு எதிராக மக்களின் மனநிலையை உருவாக்குவதும் அவர்களின் அடிப்படை நோக்கமாக உள்ளது.

திட்டமிட்டு அவர்கள் வேலை செய்கின்றனர். வெறுமனே உணர்ச்சி வயப்பட்டு நாம் எதிர்வினை ஆற்றுவதில் எந்தப் பயனுமில்லை. முற்போக்குச் சிந்தனையாளர்கள் ஒன்றுகூடிச் சிந்திக்க வேண்டிய அபாயகரமான சூழலில் நாம் வாழ்கின்றோம். இது அச்சுறுத்தல் அன்று, மிக மிகத் தேவையான எச்சரிக்கை!

Pin It