சுயமரியாதை இயக்கத்தின் வீராங்கனைகள் & கருஞ்சட்டைப் பெண்கள் எவ்வாறு அந்த இயக்கத்திற்கும் சமுதாயத்திற்கும் பங்காற்றி இருக்கிறார்கள் என்பதைப் பார்க்க இருக்கிறோம். அய்யாவுடைய அன்னையார் சின்னத்தாயம்மாள் அவர்களிடம் இருந்து நாம் இந்தத் தொகுப்பைத் தொடங்கலாம் என்று கருதுகிறேன். நமது நாட்டில் அரசியல் என்பது ஆணுக்கானது. அரசியலை வீட்டுக்குக் கொண்டுவருகிற பழக்கமே ஆண்களுக்குக் கிடையாது. பெண்களும் அதைப் பற்றிக் கேள்வி கேட்க அனுமதிக்கப்பட்டது கிடையாது. அரசியலைப் பகிர்ந்து கொள்கின்ற தோழமை நிலை இன்றுவரை இல்லாதபோது, அந்த நாட்களில் அதற்கான சாத்தியமே கிடையாது. ஆனால் பெரியாரைப் பொறுத்தவரை அவர் எந்தக் கருத்தைப் பற்றிக் கொண்டாலும் அதற்கான நடைமுறையைத் தன்னுடைய வீட்டில் இருந்து தொடங்குகின்ற பண்பினைப் பார்க்கின்றோம். அவர் காங்கிரசில் சேர்ந்து காந்தியார் கதர் உடுத்த வேண்டும் என்று சொன்னவுடன், அவர் முதலில் கதர் உடுத்தச் சொன்னது அவரது தாயாரைத்தான். அதுவரை அவர் எப்படி இருந்தார் என்பதைப் பெரியாருடைய வார்த்தைகளிலேயே பார்க்கலாம். தன் தாயார் மறைந்த இரங்கல் உரையில் அவர் இதனை எழுதுகிறார். பெரியாருடைய இரங்கல் உரைகள் மிகவும் குறிப்பிடத்தக்கவை. அதுவும் தனது குடும்பத்தாரைப் பற்றி அவர் எழுதும்போது, ஒரு மூன்றாவது மனிதராகப் பற்றற்ற நிலையில் நின்று அவர் தனது கருத்துகளைப் பதிவிடுவதைப் பார்க்கலாம். தன்னுடைய தாயார் இறந்த போது அவர் எழுதுகிறார்: ‘சின்னத்தாய் அம்மையார் மிகவும் செல்வம் நிரம்பிய குடும்பத்தில் பிறந்தவர். ஆனால் தங்களைவிட வசதி குறைவான ஒரு மணமகனுக்கு வாழ்க்கைப்பட்டதால், அவரோடு சேர்ந்து கஷ்டத்தை ஏற்றுக்கொண்டு, உழைப்பில் ஈடுபட்டு மீண்டும் செல்வச் செழிப்பான நிலையை எய்துகிறார்கள்.'
இதற்கிடையில் தனது இரண்டாவது மகனாகிய இராமசாமியை (பெரியாரை) தன்னுடைய விதவைச் சகோதரிக்குத் தத்துக் கொடுத்து விடுகிறார்கள். இதனைக் குறிப்பிடும் போது பெரியார், தன் தாயார் அவருடைய செல்லப் பிள்ளையான மூத்த பிள்ளையோடு, தாய்ப்பாலை இளைய பிள்ளையாகிய தான் பங்குபோடுவதை விரும்பாததாலேயே அந்த அம்மா தன்னைத் தத்துக்கொடுத்ததாக எழுதுகிறார். ஆனால் அதன்பின் செல்வம் வந்தபின், செல்வ நிலையைக் காட்டுவதற்காகவே, அநியாயமாகத் தன் சிற்றன்னையிடம் இருந்து தன்னைத் பிடுங்கிக் கொண்டு வந்து விட்டதாகச் சொல்கிறார் பெரியார். இந்த இடைக்காலத்தில், சிற்றன்னையாருடைய வளர்ப்பில் இருந்ததால் கட்டுப்பாடுகள் அதிகமின்றி வளர்ந்திருக்கிறார். இந்தச் சூழலே சமூகத்தில் தான் மாறுபட்டு சிந்திப்பதற்கும், வாழ்வதற்குமான காரணமாகப் பெரியார் எழுதுகிறார். அதட்டி அடக்கி வைப்பதற்கு ஒரு ஆண் தலைமையில் வளராத காரணத்தாலேயே, இந்தக் குடும்ப அமைப்புக்கும், சாதிக்கும் அடங்காத பிள்ளையாக வளர்வதற்கான வாய்ப்புப் பெரியாருக்குக் கிடைத்தது. பெரியாருக்குக் கிடைத்த இந்த வளர்ப்பு முறைதான் அனைவரும் சமம் என்கின்ற சமத்துவ உணர்வை அவரிடம் விதைப்பதற்குக் காரணமாக இருக்கிறது. ஆனால் மீண்டும் பெரியாரை வீட்டுக்குக் கூட்டி வந்த பிறகும் கூட பெரியார் தன்னுடைய தாயாரால் ஆசாரமில்லாதவன் என்று அழைக்கப்பட்டு, தீண்டத்தகாதவராக நடத்தப்பட்டதாகவே பெரியார் பதிவு செய்திருக்கிறார். அதாவது பெரியாரைத் தொட்டு விட்டால் கூட பெரியாருடைய தாயார் உடனடியாகச் சென்று குளிப்பது வழக்கமாம். அதற்குக் காரணம் இவர் சாதிக்கட்டுப்பாட்டுக்கு அடங்காதவர் என்பதுதான். அவர் வெளியில் சென்றால் எல்லா சாதிக்காரர்களிடமும் பழகி விட்டு வருவார் என்பதாலேயே வீட்டில் அவர் தீண்டத்தகாதவராகக் கருதப்பட்டதாகப் பெரியார் எழுதுகிறார். தாயார் அப்படி இருந்தது மாத்திரமல்லாமல் தன்னுடைய மருமகளுக்கும் அதே நிபந்தனைகளையே விதித்திருக்கிறார். பெரியாரோடு பேசிவிட்டு வந்தால் குளித்து விட்டு பிறகுதான் சமையல் காரியங்களையே கவனிக்க வேண்டும் என்று சொல்லியிருக்கிறார்.
இப்படிப்பட்ட தாயாரைத்தான் அவர் கதர் அணியச் சொன்னார். அந்த அம்மையாரும் கதர் ஆடையை ஏற்றுக்கொண்டார். நாகம்மையார் போல பெரியாரோடு இணைந்து போராட்ட வெளிகளுக்கு வராவிட்டாலும்கூட, தன்னுடைய மகனின் கொள்கைத் தலைமையை வீட்டுக்குள் அவர் ஏற்றுக்கொண்டிருக்கிறார் என்பதை பின்naட்களில் நாம் பார்க்கின்றோம். அந்த அம்மையாரும் தொண்ணூற்று ஐந்து வயது வரை வாழ்ந்திருக்கிறார்கள். சுயமரியாதை இயக்கத்திற்கு வருவதற்கு முன்பு பெரியாரின் காங்கிரஸ் இயக்கப் பங்களிப்பில் இருந்தே நாம் நமது தலைப்பின் மீதான ஆய்வைத் தொடங்கலாம். ஏனெனில் தன் பொதுவாழ்வின் தொடக்கத்தில் இருந்தே பெண்களைப் பற்றிய பெரியாரின் பார்வையும், அணுகுமுறையும் தனித்தன்மை வாய்ந்ததாக இருக்கிறது.
நாகம்மையார் (1885 - 1933)
பெரியாருக்குத் திருமணம் ஆகும்போது, பெரியாருக்குப் பத்தொன்பது வயது, நாகம்மையாருக்குப் பதிமூன்று வயது. இன்றைய கணக்கில் பார்த்தால் அது குழந்தைத் திருமணம்தான். இதில் பெரியார் வசதியான குடும்பப் பின்னணி கொண்டவர். நாகம்மையார் இவர்களை விட வசதி குறைவான குடும்பத்தைச் சேர்ந்தவர். பெரியாருடைய குடும்பத்தாருக்கு முதலில் இந்தத் திருமணத்தில் சம்மதமில்லை. பெரியாருடைய பிடிவாதத்தால் ஏற்றுக்கொள்கிறார்கள். எனவே மகனுக்காகத்தான் அந்தப் பெண்ணை அவர்கள் ஏற்றுக்கொள்கிறார்கள். அதேபோல் நாகம்மையார் குடும்பத்திலும் வசதியான பெரியாரின் குடும்பத்தில் பெண்ணைக் கொடுக்க விருப்பம் இல்லாமல் இருந்தது. அதனால் தங்களுக்கு ஏற்றாற்போன்ற ஒரு சம்பந்தத்தைப் பேசி முடிக்க ஏற்பாடு செய்கிறார்கள். ஆனால் பெரியாரும் சரி நாகம்மையாரும் சரி, தாங்கள் இருவரும்தான் மணந்து கொள்ள வேண்டும் என்பதில் உறுதியாகவும், பிடிவாதமாகவும் இருந்து மணந்து கொள்கிறார்கள். ஆக இது, அந்தக் காலத்தில் நடைபெற்ற ஒரு காதல் திருமணமும் கூட.
அந்தப் பெண் சராசரிப் பெண்களைப் போன்றே அத்தனைச் சடங்காசாரங்களோடும் வளர்க்கப்பட்ட பெண். அதுமட்டுமில்லாமல், சாஸ்திர சம்பிரதாயங்கள் நிரம்பிய குடும்பத்தில் மாமியார், மாமனாரைத் திருப்திப்படுத்த வேண்டிய ஒரு பெண்ணும்கூட. இன்னொருபுறம், இந்தச் சடங்குகள், சம்பிரதாயங்களை அழித்தொழிக்க வேண்டும் என்று சொல்கின்ற கணவர். இந்த இரு தரப்பையும் திருப்திப்படுத்த வேண்டிய கடமை அந்தச் சின்னப் பெண்ணுக்கு ஏற்படுகிறது. இயல்பாக அவர் முதலில் மாமியார் தரப்பில் நிற்கிறார். பெரியார் அவரை மாற்றுவதற்காகவும், அந்தக் குடும்பத்தின் பழக்கவழக்கங்களின் கட்டுப்பாட்டுக்குள் அவர் தொடர்ந்து இருப்பதை மாற்ற விரும்பியும் பல்வேறு நடவடிக்கைகளை எடுக்கிறார்.
முதலாவதாக, சாப்பாட்டில் இருந்து பிரச்சினை தொடங்குகிறது. நாகம்மையார் சைவ சாப்பாடு சாப்பிட வேண்டும், விரதம் இருக்க வேண்டும். ஆனால் பெரியாருக்குக் கண்டிப்பாக அசைவ உணவு வேண்டும். கணவனுக்காக அசைவ உணவைத் தயாரித்து விட்டு, அந்தத் தீட்டைப் போக்குவதற்காகக் குளித்து, அதன் பிறகு அவர் சாப்பிட வேண்டும். இதற்கு இடையில், பெரியார் தான் சாப்பிட்டு விட்டு, எலும்புத் துண்டுகளை அந்த உணவுக்குள் சொருகி வைத்துவிடுவார். குளித்து விட்டு மருமகளும், மாமியாரும் சாப்பிட உட்கார்ந்தால், சாப்பாட்டிற்குள் இருந்து எலும்புத் துண்டுகளாக வந்து விழும். தன்னுடைய மகனைக் கட்டுப்படுத்த முடியாது என்று முடிவுசெய்த தாயார், தன்னுடைய மருமகளை அழைத்து "இனிமேல் நீ எந்த விரதமும் இருக்க வேண்டாம்" என்று விரதங்களில் இருந்து விடுதலை கொடுத்து விட்டார். அன்றிலிருந்து நாகம்மையாரின் விரதங்களும், சைவச் சாப்பாடும் முடிவுக்கு வந்தன.
இவ்வாறாக நாகம்மையார், வீட்டுக்குள் ஆசாரமாக இருப்பது என்பது ஒரு முடிவுக்கு வருகிறது. அடுத்தபடியாக நாகம்மையார் தொடர்ந்து கோயிலுக்குச் செல்லும் வழக்கம் உடையவராக இருந்தார். இதனை எப்படி நிறுத்துவது அல்லது கோயில் என்ற இடத்தைப் பற்றி இவருக்கு எப்படிப் புரிய வைப்பது என்று பெரியார் சிந்தித்தார். அந்தக் காலத்தில் அவர் பெரிய மைனராக இருந்திருக்கிறார். எனவே தனது மைனர் நண்பர்களிடம் இவர் தனது மனைவி என்பதைத் தெரிவிக்காமலேயே "நமது ஊருக்குப் புதிதாக ஒரு தாசி வந்திருக்கிறார், கோவிலுக்கு வரும்போது அவரை நீங்கள் பார்க்கலாம்" என்று சொல்லியிருக்கிறார். இந்த இடத்தில் மனைவியை தாசி என்று சொல்ல அவர் துணிந்திருப்பதை நாம் கவனிக்க வேண்டும். பிறிதொரு சமயத்தில் அவரை எதிர்க்க நினைத்தவர்கள் நாகம்மையாரைப் பரத்தை என்று அழைத்து அவமானப்படுத்த முற்பட்டபோது, பெரியார் மிகத் தெளிவாகக் கூறினார்: 'நாகம்மையார் ஒரு பத்தினியாக இருப்பதில் நான் ஒரு பெருமிதமும் கொள்ளவில்லை என்றும் எனவே அவரைப் பரத்தையர் என்று சொல்வதில் தான் அவமானப்பட ஏதுமில்லை' என்றும் குறிப்பிடுகிறார். இந்தத் தெளிவு இளவயதிலேயே அவருக்கு வாய்த்திருக்கிறது என்பது மிகவும் வியப்புக்குரிய ஒன்றாகும். இல்லையெனில் விளையாட்டுக்குக் கூட தனது மனைவியை தாசி என்று சொல்லும் துணிச்சல் வந்திருக்குமா ஓர் ஆணுக்கு? பத்தினி என்ற வார்த்தையும் தாசி என்ற வார்த்தையும் அவரிடம் ஒட்டவேயில்லை, அதுவும் இருபது வயதிலிருந்து என்பது மிக மிக வியப்பான விசயமாகும். சரி, இப்போது என்ன நடந்தது என்று பார்ப்போம். தனது மைனர் நண்பர்களிடம் இவ்வாறு அவர் கூறியதும் அவர்கள் தங்கள் வழமைபோல் இவர்கள் கோயிலுக்குச் செல்லும்போது கேலியும் கிண்டலும் செய்ய, பயந்துபோன நாகம்மையார் அவர்கள் வீட்டிற்குத் திரும்பி வந்து அழுதிருக்கிறார்கள். உடனே அய்யா அவர்கள் "கோயில் என்றால் அப்படித்தானம்மா இருக்கும்" என்று சொல்ல, கோயிலைப் பற்றிப் புரிந்து கொண்ட அந்த அம்மையார் கோவிலுக்குச் செல்வதை நிறுத்தி விடுகிறார்.
அடுத்தது தாலி. அந்த அம்மையார் தாலி கட்டியிருப்பது பெரியாருக்கு விருப்பமில்லை. எனவே இரவு படுக்கும்போது "உம் புருஷன் நான் பக்கத்திலிருக்கும் போது இந்தத் தாலி எதற்கு?" என்று கேட்டு அந்தத் தாலியைக் கழற்றி வைக்கப் பண்ணிவிடுவார். காலையில் அந்த அம்மையார் எழுவதற்கு முன்பாக எழுந்து தாலியைச் சட்டைப் பாக்கெட்டில் வைத்துக் கொண்டு வெளியில் சென்று விடுவார். கழுத்தில் தாலி இல்லாததை மறைப்பதற்காக அந்த அம்மையார் கழுத்தை மூடிக்கொண்டு வேலை செய்வார். இதைக் கண்டுபிடித்து விட்ட பிற பெண்கள் இவரை கேலி செய்யத் தொடங்கினார்கள். ஒரு கட்டம் வரை பொறுத்துப் பார்த்த நாகம்மையார் பிறகு அந்தப் பெண்களை எதிர்த்துப் பேசத் தொடங்கினார். "புருஷனே பக்கத்திலிருக்கும் போது நான் எதற்கு அந்தத் தாலிக்காகக் கவலைப்பட வேண்டும்?" என்று எதிர்க்கேள்வி கேட்டார். இதன் மூலம் ஊரார் ஏதாவது பேசுவார்களோ என்ற அச்சத்திலிருந்து அந்த அம்மையார் விடுபட்டார். மீறத் தொடங்கி விட்டால் அந்த அச்சம் என்பது ஒரு பலூன் போல உடைந்து ஒன்றுமில்லாமல் போய்விடும். இவ்வாறு அந்த அம்மையார் தாலி கட்டும் வழக்கமும் ஒழிந்தது.
இதனைப் பற்றியெல்லாம் பேசுகையில் ஒரு நண்பர் என்னிடம், ‘பெரியார் இப்படி நடந்து கொண்டதில் ஆணாதிக்கமில்லையா? அதனைப் பெண்ணியவாதிகள் இப்படிக் குதூகலமாகப் பதிவு செய்யலாமா?' என்று கேட்டார். கறாராகப் பார்த்தால் அந்தக் கேள்வி சரிதான். ஆனால் ஆண் தலைவனாக இருக்கின்ற ஒரு சமூகத்தில் அவர் தலைமையேற்று வழிநடத்த வேண்டிய கடப்பாடு உள்ளவராக இருக்கின்ற பட்சத்தில், தன்னை நம்பி வந்த, நம்பி வாழ்கின்ற, தன்னை நேசித்து அவரிடம் தன்னையே முழுமையாக ஒப்படைத்திருக்கின்ற ஒரு ஜீவனை அறிவு வழிப்படுத்துவதற்கு என்ன தந்திரோபாயங்களைக் கடைப்பிடிக்க வேண்டும் என்பதைத் தீர்மானிக்கும் உரிமை அவருக்கு இருக்கிறது. இவற்றில் ஏதோவொன்று உண்மையாகவே நாகம்மையாரைப் புண்படுத்தியிருக்கும் பட்சத்தில் நிச்சயமாகப் பெரியார் அந்தக் காரியத்தைச் செய்திருக்க மாட்டார். அழுவது போலிருந்தாலும் நாகம்மையாரும் இரசித்துச் சிரிக்கத்தக்க அளவிலேயே பெரியார் இத்தனை காரியங்களையும் செய்திருப்பார். மாறாக "அய்யோ இப்படிப்பட்ட கணவன் வாய்த்திருக்கிறாரே" என்று அழுது புலம்பும் விதமாக அமைந்திருக்கவில்லை. எனவே இது ஆணாதிக்கமா அல்லது நெறிப்படுத்துதலா என்ற கேள்விக்கான பதில் அவர்களுக்கிடையேயிருந்த உறவில்தான் இருக்கிறதேயொழிய தத்துவத்தில் இல்லை. அவர்களுக்கிடையே இருந்த உறவு அன்புவழிப்பட்டதாக இருந்த காரணத்தினால் இந்த நடவடிக்கைகள் சரியானவையாக முடிந்திருக்கின்றன. இவையெல்லாம் ஒரு பக்கம் சின்ன விசயங்களாகத் தோன்றலாம். ஆனால் சின்ன விசயங்கள் அல்ல. இனி நாம் பின் வந்த நாட்களில் நாகம்மையார் எவ்வளவு பெரிய காரியங்களைச் செய்பவராக உருவாகிறார் என்பதைப் பார்க்க இருக்கிறோம். இத்தகைய தயாரிப்புகளைப் பெரியார் செய்திருக்காவிட்டால் அப்பேற்பட்ட நாகம்மையார் நமக்குக் கிடைத்திருப்பாரா என்று கேட்டால் கிடைத்திருக்க வாய்ப்பில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.
திராவிடர் கழகத்துக்காரர்களுக்குக் கட்டிக் கொடுத்தால் கோவிலுக்கு அழைத்துச்செல்ல மாட்டார்கள், அவர்களாகப் போகவும் அனுமதிக்க மாட்டார்கள், எனவே அந்த மனைவிமாரெல்லாம் மிகுந்த கொடுமையை அனுபவிக்கிறார்கள் என்றெல்லாம் பேசப்படுவதை நாங்கள் கேட்டிருக்கிறோம். இது இந்த இயக்கத்தின் மீதான விமர்சனமாகக் கூட வைக்கப்படுவதைப் பார்க்கிறோம். ஆனால், கோவிலுக்குப் போவது பெண்ணடிமைத்தனமா, கோவிலுக்குப் போவதைத் தடுப்பது பெண்ணடிமைத்தனமா என்பதையும் நாம் சிந்திக்க வேண்டும். மேலும் பெரியாருக்கும் நாகம்மையாருக்கும் இடையே இருந்த உறவைக் குறிப்பிட்டதுபோல, எந்த இடத்தில் இது ஆணாதிக்கமாகச் செயல்படுகிறது, எந்த இடத்தில் அவர்களை மேன்மைப்படுத்துவதற்காக வளர்த்தெடுப்பதற்காகச் செயல்படுத்தப்படுகிறது என்பதனை நாம் அவர்களுக்கிடையே நிலவிய உறவுநிலையை வைத்தே புரிந்துகொள்ள முடியும். இதைத்தான் இந்த விமர்சனத்திற்குப் பதிலாக நாம் சொல்கிறோம். திராவிடர் கழகத்துக்காரர்கள் அவ்வாறு நடந்து கொண்டிராவிட்டால், இந்த இயக்கத்தில் பெண்களை எப்படிப் பார்த்திருக்க முடியும்? சமூக உரிமையும், தலைமையும் ஆணிடம் இருக்கும்போது, பெண்ணை அந்த இடத்திற்கு அழைத்து வரவேண்டிய வாய்ப்பும், நிலையும் கூட ஆணிடத்தில்தான் இருக்கின்றது. பெண்கள் இயல்பாகவே முதலில் இவ்வாறு வருவதற்குத் தயக்கம் கொள்கிறவர்களாக இருப்பதைப் பார்க்கின்றோம். அதற்குக் காரணம் அவர்கள் அறியாமையே அன்றி வேறெதுவும் அல்ல.
கள்ளுக்கடை மறியல்
பெரியார் காங்கிரஸ் இயக்கத்தில் இருந்தபோதும், சுயமரியாதை இயக்கத்தைத் தொடங்கியபோதும் நாகம்மையார் அளித்திருக்கும் பங்களிப்புகள் மகத்தானவை. நாளடைவில் கணவனைப் பின்பற்றி சுயமரியாதை வாழ்க்கையை ஏற்றுக்கொண்ட நாகம்மையார், தன் கணவன் வேறு அவருடைய பாதை வேறு என்கின்ற வேறுபாடுகளைக் கடந்து, தன்னுடைய கணவரும், அவர் காட்டியிருக்கிற பாதையும் ஒன்றே என்னும் அளவுக்குக் கணவருடைய கொள்கைகளையும் காதலிக்கத் தொடங்கினார். அந்தக் கொள்கைகளையே தனது வாழ்க்கையென ஏற்றுக்கொண்டார்.
1920களிலே கள்ளுக்கடைப் போராட்டம் தொடங்கியது. கள்ளுக்கடைகளை மூடச் சொல்லிப் போராட்டம் தொடங்க வேண்டும் என்கின்ற தீர்மானம் பெரியாரின் வீட்டில் வைத்துத்தான், காந்தியாரின் தலைமையிலே நிறைவேற்றப்படுகிறது. அதன்படி போராட்டம் தொடங்கியது. தான் ஏற்றுக்கொண்ட போராட்டத்திற்காக எதையும் செய்யத் துணிகின்ற பெரியார் தன்னுடைய தோப்பில் இருந்த 500 தென்னை மரங்களை வெட்டி வீழ்த்தினார். 500 தென்னை மரங்களின் மதிப்பு சாதாரணமானதல்ல. வடநாட்டில்கூட ஈச்ச மரங்களைத்தான் வெட்டினார்கள். தென்னை மரத்தை வெட்டியது பெரியார் அவர்கள்தான்.
அதில் பெரியார் கைது செய்யப்பட்ட பிறகு, நாகம்மையார் அந்தப் போராட்டத்தை முன்னின்று நடத்துகிறார். அப்போதெல்லாம் கள்ளுக்கடைகள் இப்போது இருப்பது போல் ஊருக்குள் கிடையாது. ஊருக்கு வெளியே நடந்து செல்லவே சுகாதாரமற்ற இடங்களில் அமைந்திருக்கும். அத்தகைய இடங்களுக்குச் சென்று, நாகம்மையாரும், பெரியார் அவர்களின் சகோதரி கண்ணம்மாள் அவர்களும் மறியலில் ஈடுபட்டது என்பது எப்படிப்பட்ட புரட்சிகரமான செயலாக இருந்திருக்கும் என்பதை நினைத்துப் பார்க்க வேண்டும். இவ்வாறு நாகம்மையாரும், கண்ணம்மாளும் கள்ளுக்கடை மறியல் செய்தது காங்கிரஸ் இயக்கத்தில் இருந்தபோது நடந்தது. ஆனால் எந்தக் காங்கிரஸ்காரராவது தன்னுடைய இயக்கப் போராளிகள் பெயரில், நாகம்மையார் பெயரையோ, கண்ணம்மாள் பெயரையோ குறிப்பிட்டுப் பேசியிருக்கிறார்களா? காங்கிரசில் உள்ள பெண்மணிகள் என்று எத்தனை பேரின் பெயர்களைப் பட்டியல் இடுகிறார்கள், ஏன் அதில் நாகம்மையார் பெயரோ, கண்ணம்மாள் பெயரோ இல்லை என்பதைக் கேட்டிருக்கிறோமா? இவர்களைப் பற்றி எந்தப் பதிவும் காங்கிரஸ் ஏடுகளில் கிடையாது. சரி அதை விடுங்கள். இன்று வரை மது ஒழிப்புப் போராட்டம் இந்த மண்ணில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. எந்த மது ஒழிப்புப் போராளியாவது நாகம்மையாரையும், கண்ணம்மாளையும் பற்றிப் பேசியிருக்கிறார்களா? இன்றைக்கு இந்தப் போராட்டத்தைக் காந்தியவாதிகள் நடத்துகிறார்கள், கம்யூனிஸ்டுக் கட்சிக்காரர்கள் நடத்துகிறார்கள். ஆனால் யாரும் இந்த மது ஒழிப்புப் போராட்டத்தின் முன்னோடிகள் என்று அந்த இரு பெண்களையும் பதிவு செய்வதில்லை. இன்றைய தினம் திராவிடர் இயக்க மகளிர் உருவாக்கத்தில் கடந்த காலங்களை ஒப்பிடும்போது, ஒரு தொய்வு நிலை காணப்படுகிறது என்று சொன்னால், இத்தகைய இருட்டடிப்புகளும் ஒரு காரணம்.
பெண்ணடிமைத்தனத்தைப் பொறுத்தவரை, அடித்தட்டு மக்களில் இருந்து மேலே போகப்போக, அதன் பிடி இறுகிக்கொண்டே போகிறது. அந்த அடிப்படையில் பெரியாரின் குடும்பம் போன்ற ஓர் ஆசாரமான குடும்பத்தில் இருந்த பெண்கள் கதராடை அணிந்தது, கள்ளுக்கடைக்கு முன்னால் சென்று உட்கார்ந்து மறியல் செய்தது என்பது மிகப்பெரிய விசயம். அதன் பிறகு 1924இல் வைக்கம் போராட்டம் வருகிறது. வைக்கம் போராட்டத்தில் என்ன நடக்கிறது? கேரளாவிலே அங்கே இருக்கிற வீதியில் தாழ்த்தப்பட்ட மக்கள் நடந்து போக முடியாது. இதனால் முக்கியமாக வழக்கறிஞர் தொழில் செய்வோர் அதிகமாகப் பாதிக்கப்பட்டனர். காரணம் அந்த வீதியைத் தாண்டித்தான் அவர்கள் நீதிமன்றத்திற்குச் செல்ல வேண்டியிருந்தது. எனவே அவர்கள்தான் போராட்டத்தைத் தொடங்குகிறார்கள். அந்தப் போராட்டத்தைத் தொடங்கிய திருமிகு மாதவன் மற்றும் கே.பி. கேசவமேனன் ஆகிய தலைவர்கள் கைது செய்து உள்ளே வைக்கப்படுகிறார்கள்.
அவர்கள் கைது செய்யப்பட்டவுடன் இந்தப் போராட்டத்தைத் தொடர்ந்து நடத்தும்படி பெரியாருக்கு அவர்களிடமிருந்து கடிதம் வருகிறது. பெரியார் போராட்டத்தைத் தொடர்ந்து நடத்துகிறார். அவரும் கைது செய்யப்படுகிறார். அதனைத் தொடர்ந்து அந்தப் போராட்டத்தை நாகம்மையார் தொடர்கிறார். நினைத்துப் பாருங்கள், வெளியூர் அல்ல வெளிமாநிலம். அந்தப் பகுதி என்பது முற்றிலும் வேறுபட்ட மொழி, உடை, பாவனை உள்ள பகுதி. அங்கு சென்று ஒரு போராட்டத்தைத் தலைமை ஏற்று நடத்துவது என்பது இன்று கூட நினைத்துப் பார்க்க முடியாத ஒரு விசயம். இன்று ஐ.டி.யில் வேலை பார்க்கிற பெண்கள் கூட, கல்யாணத்திற்குப் பிறகு கணவன் இல்லாமல் தனித்து வெளியில் வருவதற்குத் தயங்குகிற நிலையையே நாம் பார்க்கிறோம். ஆனால் நாகம்மையார் கணவர் சிறைப்பட்ட நிலையில், அப்போராட்டத்தை அவர் பொறுப்பெடுத்துத் தொடர்கிறார். அப்பொழுது காவலர்கள் அவரை நோக்கி "உன்னுடைய சாதி என்ன?" என்று கேட்கிறார்கள். அதற்கு நாகம்மையார் திருப்பிக் கேட்கிறார்: 'ஏன் நான் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவள் இல்லையென்றால், என்னை மட்டும் உள்ளே விடலாம் என்று நினைக்கிறீர்களா? நான் சாதி சொல்ல முடியாது.'
இந்தப் பதிலை நாம் ஆழ்ந்து கவனிக்க வேண்டும். "நான் சாதி சொல்ல மாட்டேன்" என்று மட்டும் சொல்லியிருந்தால் அது ஒரு தட்டையான பதில். ஆனால் என்ன நோக்கத்திற்காக சாதி கேட்கப்படுகிறது என்பதைப் புரிந்து கொண்டு, அந்த நோக்கம் நிறைவேற நான் ஒத்துழைக்க மாட்டேன் என்று விளக்கமாகப் பதில் சொல்கிற தன்மை இருக்கிறதே, அங்குதான் பெரியார் கொடுத்த பயிற்சியின் வெற்றியை நாம் பார்க்கிறோம். நாகம்மையார் போராடிய போது கோவில் இருந்த தெருவில் நுழைவதற்காகத் தொடங்கிய போராட்டம், கோயில் நுழைவு போராட்டமாகவே மாறிவிடக்கூடிய சூழலை எட்டியது. அப்போதும் அவர்கள் காங்கிரஸ் இயக்கத்தில்தான் இருக்கிறார்கள். காந்தியினுடைய இராட்டையை எடுத்துக்கொண்டு, அப்போது பெய்த மழையையும் பொருட்படுத்தாமல் நனைந்து கொண்டு, அவர்கள் நடத்திய போராட்டத்தின் வல்லமையை என்னவென்று சொல்வது?
இந்திய தேசியக் காங்கிரஸ் இயக்க வரலாற்றில் பொன்னெழுத்துகளால் பொறிக்கப்பட வேண்டிய இந்தப் போராட்டம் அவர்களால் மறக்கப்பட்டாலும் கூட கேரளத்தில் உரிய மரியாதையுடன் இன்றளவும் நினைவுகூரப்படுகிறது. அந்தக் கால கட்டத்திலேயே அவர்கள் பெரியாரையும், நாகம்மையாரையும் அழைத்துச் சிறப்பு செய்திருக்கிறார்கள். அண்மைக் காலத்தில் அய்யா அவர்களின் சிலை அங்கு திறக்கப்பட்டது. அந்த நிகழ்ச்சிக்கு, திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்பு விருந்தினராகச் சென்றிருந்தார்கள். காங்கிரஸ் இயக்கம் தன்னுடைய சாதனையாகக் கூட அந்தப் போராட்டத்திற்கு உரிமை கோரவில்லை என்பது வருத்தத்திற்குரியது. ஆனால், அந்தப் போராட்டத்தில் நாகம்மையாருடைய பங்களிப்பு வீரஞ்செறிந்தது மட்டுமல்ல மதிநுட்பமும் வாய்ந்தது. சாதிய ரீதியாகப் போராட்டக்காரர்களைப் பிரித்தாள முயற்சித்த காவலர்களுடைய நடவடிக்கைகளை முறியடித்து, அப்போது பெய்த மழையையும் பொருட்படுத்தாமல், காந்தியாரின் இராட்டையை நூற்றுக்கொண்டு, நாகம்மையார் அவர்கள் போராட்டத்தை நடத்திச்சென்றார்கள். அரசு இயந்திரம் இந்தப் பெண்களை எப்படிச் சமாளிப்பது என்று தெரியாமல் திகைத்து நின்றது.
1920இல் இருந்து 1925வரை காங்கிரஸ் இயக்கத்திற்காக உழைத்தவர் நாகம்மையார். அவர் பெரியாரோடு அனைத்துப் பயணங்களிலும் உடனிருந்தார். அது மனைவி, கணவனோடு சென்ற பயணம் மட்டுமல்ல, அது ஒரு கொள்கைப் பயணம். நாகம்மையார் அவர்கள்தான் அகில இந்தியக் காங்கிரஸ் கட்சிக்குத் தமிழகத்தில் இருந்து பரிந்துரை செய்யப்பட்ட முதல் பெண் பிரதிநிதி ஆவார். காங்கிரஸ் இயக்க வரலாற்றில் அவருக்கு நிகரான பெண் போராளிகளைக் காண்பது அரிது. பட்டாடைகளையும் மாளிகை வாசத்தையும் புறந்தள்ளி, வீரியமிக்க, போராட்டங்கள் மிக்க, துன்பங்கள் நிறைந்த, அவமானங்களையும், ஏச்சுகளையும், பேச்சுகளையும் உள்ளடக்கிய பொதுவாழ்க்கையில் அவர் நுழைந்தது எத்தகைய தியாகம் என்பதை நாம் நினைவுகூர வேண்டும். அதன்பின் சுயமரியாதை இயக்கம் தோற்றுவிக்கப்படுகிறது. அதிலும் நாகம்மையார் அவர்களுடைய பங்கு அளப்பரியது, எடுத்துச் சொல்லப்பட வேண்டியது. ஏனென்று கேட்டால், பெரியார் ஒரு பெரிய குடும்பமாகத்தான் அந்த இயக்கத்தைக் கட்டுகிறார். அந்தக் குடும்பத்தின் அன்னையாராக நாகம்மையார் திகழ்கிறார். அத்தகைய ஓர் அன்னை கிடைக்காமல் போயிருந்தால், அப்படிப்பட்ட ஓர் இயக்கத்தைக் கட்டியிருக்க முடியுமா? அவ்வளவு தோழர்களை உருவாக்கி இருக்க முடியுமா? பெண்களை ஈர்த்திருக்க முடியுமா? திராவிடர் இயக்கம் குடும்பம் குடும்பமாக வளர்ந்த இயக்கம். அத்தனை குடும்பங்களையும் ஆதரித்து அரவணைக்கிற அன்னையாக நாகம்மையார் திகழ்ந்தார்.
அன்னை நாகம்மையாரைப் பற்றிப் பேராசிரியர் மங்களமுருகேசன் விரிவானதொரு நூலை எழுதியிருக்கிறார். அந்த நூலில் ஓர் இடத்தில் அவர் சொல்கிறார்: நாகம்மையார் மேடை ஏறிப் பேசியதில்லை, ஆனால் அவர் வருகை தரும் கூட்டங்களில் பெண்கள் அதிகளவில் கலந்து கொண்டார்கள். அத்தகையதொரு பெண்மணி பெரியாரின் அருகில் இல்லாமல் இருந்திருந்தால், என்னதான் பெரியார் பெண்ணுரிமைக் கருத்துகளைப் பேசியிருந்தாலும் கூட, பெண்கள் அவ்வளவு அதிகளவில் திரண்டிருப்பார்களா என்பது ஒரு மிகப்பெரிய கேள்விக்குறி. அறிவுக்கருவூலம் அய்யா அவர்கள்தான்; தலைமையும் வழிகாட்டுதலும் அய்யா அவர்கள்தான். ஆனால் அதனை ஏதுவாக்கிக் கொடுத்ததில் அம்மா அவர்களுடைய பங்கு இருக்கின்றது. அன்றைய தினம் அவர்களின் குடும்பச் சொத்துதான் இயக்கத்திற்கு இருந்த ஒரே சொத்து. ஆனால், உவப்புடன் அனைவரையும் அரவணைத்து, அன்னமிட்டு ஆதரித்தார்கள். மேலும் ‘குடியரசு’ இதழின் பதிப்பாசிரியராகவும் நாகம்மையார் இருந்தார்கள். பதிப்பாசிரியர் என்பது வெறுமனே பத்திரிகையில் பெயர் போட்டுக்கொள்வது மாத்திரமல்ல. அப்போதெல்லாம் 'குடியரசு' பத்திரிகை காவல்துறையின் தொடர் கண்காணிப்பில் இருந்து வந்த நிலை. பத்திரிகைகளில் வெளிவரும் விசயங்களுக்கு விளக்கம் கேட்கப்படலாம், கைதுகூட செய்யப்படலாம். இதுமாதிரியான பொறுப்பைத்தான் அம்மையார் வகித்தார். ‘குடியரசு’ மட்டுமல்ல, ‘ரிவோல்ட்’ (Revolt) என்கின்ற ஆங்கிலப் பத்திரிகையின் பதிப்பாசிரியரும் இவரே. அந்த ஏடுகளில் குஞ்சிதம் குருசாமி, முத்துலட்சுமி ரெட்டி ஆகியோர் கட்டுரைகள் எழுதியிருக்கிறார்கள்.
குஞ்சிதம் அம்மையார், நீலாவதி ஆகியோர் செய்து கொண்ட சாதி மறுப்புச் சுயமரியாதைத் திருமணங்களுக்கு (விதவைத் திருமணங்களும்கூட) நாகம்மையார் அவர்களும், அய்யா அவர்களும், அவர்களின் தாய் தகப்பன் நிலையில் இருந்து திருமணப் பத்திரிகைகள் அடித்து அழைப்பு விடுத்திருக்கிறார்கள். 1930களில் நடந்த நீலாவதி & இராமசுப்பிரமணியம் திருமணம் தாலி மறுப்புத் திருமணமும்கூட. சுயமரியாதை இயக்கத் திருமணங்களின் தோற்றுவாய் இங்கிருந்துதான் தொடங்குகிறது. முதன்முதலில் தாலி மறுப்புத் திருமணம் நடைபெற்ற செய்தியைக் குடியரசில் எழுதும்போது, 'இன்று முதல் தாலி ஒழிந்தது' என்று எழுதினார்கள். திருமணத்தைப் புரட்சிக்கான ஆயுதமாக மாற்றிய இயக்கம் சுயமரியாதை இயக்கம். ஆயிரம் பேர் கூடித்தான் ஒரு திருமணம் நடத்தவேண்டும் என சுயமரியாதை இயக்கம் நினைக்கவில்லை. பின்னாட்களில் என்னைப்போன்றோரெல்லாம் கூட திருமணத்திற்கு அறிவிப்பு மட்டும்தான் கொடுத்தோம். ஆனால் எதற்காக சுயமரியாதை இயக்க நிகழ்வுகள் மிகப்பெரிய அளவில் நடத்தப்பட்டன என்றால், "அந்தத் திருமண நிகழ்வில்தான் நம்மால் தாய்மார்களைச் சந்திக்க முடிகிறது என்கிற காரணம்தான்" என்கிறார் பெரியார்.
மேலும் அய்யா அவர்களுடைய வெளிநாட்டுச் சுற்றுப்பயணங்களான மலேசியா, பர்மா, சிங்கப்பூர் ஆகிய இடங்களுக்கு அவருடன் நாகம்மையாரும் செல்கிறார். இரண்டாவது முறை அய்யா அவர்கள் ஐரோப்பிய சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது, அம்மா அவர்கள் உடன் செல்லவில்லை. இங்கு இருந்து இயக்கப் பணிகளில் சோர்வு ஏற்படாமல் பார்த்துக் கொண்டார். அய்யாவை வரவேற்பதற்காக இலங்கை சென்று அவரை எதிர்கொண்டு அழைத்து வருகிறார். உண்மையில் இந்த ஐரோப்பிய சுற்றுப்பயணத்தில் மட்டுமே திருமணத்திற்குப் பின் தனது வாழ்நாளில் அய்யாவை அவர் பிரிந்து இருந்தார். தனது நாற்பத்து எட்டாவது வயதில் நோய்வாய்ப்பட்டு மரணமடைகிறார்.
அவருடைய பிரிவின் போது அய்யா எழுதிய இரங்கல் உரை இலக்கியநயம் மிக்கது. அம்மையார் மரணமடைந்த போது, நாட்டின் பல்வேறு தலைவர்கள் இரங்கல் உரை நிகழ்த்துகிறார்கள். பல்வேறு இடங்களில் படத்திறப்பு நிகழ்வுகளும், இரங்கல் நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டன. மலேசியாவில் கூட இரங்கல் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அவர் மரணமடைந்த அன்றே பெரியார் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ளச் செல்கிறார். அடுத்த நாள் 144 தடை உத்தரவை மீறி சிறைக்குச் செல்கிறார். ஆனால், நாடே நாகம்மையாருக்கு அஞ்சலி செலுத்தியது. இயக்கத் தொண்டர்கள் சொந்த அன்னையை இழந்ததுபோல அழுது பரிதவித்தார்கள், இயக்கம் துயருற்றது. இவையெல்லாம் நாகம்மையாருடைய தொண்டின் சிறப்பை எடுத்தோதுகின்றன.
திராவிட இயக்கப் பெண்கள் வரலாற்றில், நாகம்மையார் முதல் முத்தாகத் திகழ்கிறார். சுயமரியாதை இயக்க வரலாற்றில், அதனைத் தோற்றுவித்த மாபெரும் பணியில் நாகம்மையாரின் பங்களிப்பு முக்கியத்துவம் வாய்ந்தது. அவரைத் தவிர்த்து விட்டு இந்த இயக்க வரலாற்றை யாரும் எழுதிவிட முடியாது.
நாகம்மாள் மறைவையொட்டி பெரியார் அவர்கள் வெளியிட்ட இரங்கலுரை:
"எனதருமைத் துணைவி, ஆருயிர்க் காதலி நாகம்மாள் 11.5.33 தேதி மாலை 7.45 மணிக்கு ஆவி நீத்தார். இதற்காக நான் துக்கப்படுவதா? மகிழ்ச்சியடைவதா? நாகம்மாள் நலிந்து மறைந்தது எனக்கு லாபமா? நஷ்டமா? என்பது இதுசமயம் முடிவுகட்ட முடியாத காரியமாய் இருக்கிறது. எப்படியிருந்தாலும் நாகம்மாளை மணந்து வாழ்க்கைத் துணையாகக் கொண்டு 35 வருஷகாலம் வாழ்ந்து விட்டேன்.
நாகம்மாளை நான்தான் வாழ்க்கைத் துணைவியாகக் கொண்டு இருந்தேனேயல்லாமல் நாகம்மாளுக்கு நான் வாழ்க்கைத் துணையாக இருந்தேனா என்பது எனக்கே ஞாபகத்துக்கு வரவில்லை. நான் சுயநல வாழ்வில் 'மைனராய்', 'காலியாய்', 'சீமானாய்' இருந்த காலத்திலும், பொதுநல வாழ்வில் ஈடுபட்டுத் தொண்டனாய் இருந்த காலத்திலும் எனக்கு வாழ்வின் ஒவ்வொரு துறையின் முற்போக்குக்கும் நாகம்மாள் எவ்வளவோ ஆதாரமாய் இருந்தாள் என்பது மறுக்க முடியாத காரியம். பெண்கள் சுதந்திர விஷயமாகவும் பெருமை விஷயமாகவும் பிறத்தியாருக்கு நான் எவ்வளவு பேசுகிறேனோ, போதிக்கிறேனோ அதில் நூற்றில் ஒரு பங்கு வீதமாவது என்னருமை நாகம்மாளுக்கு நான் நடந்து கொண்டிருந்தேன் என்று சொல்லிக் கொள்ள எனக்கு முழு யோக்கியதை இல்லை.
ஆனால் நாகம்மாளோ பெண்ணடிமை விஷயமாகவும் ஆண் உயர்வு விஷயமாகவும், சாஸ்திர புராணங்களில் எவ்வளவு கொடுமையாகவும், மூர்க்கமாகவும் குறிப்பிட்டிருந்ததோ அவற்றுள் ஒன்றுக்குப் பத்தாக நடந்து கொண்டிருந்தாள் என்பதையும் அதை நான் ஏற்றுக் கொண்டிருந்தேன் என்பதையும் மிகுந்த வெட்கத்துடன் வெளியிடுகிறேன்.
நாகம்மாள் உயிர் வாழ்ந்ததும், வாழ ஆசைப்பட்டதும் எனக்காகவே ஒழிய தனக்காக அல்ல என்பதை நான் ஒவ்வொரு விநாடியும் நன்றாய் உணர்ந்து வந்தேன். இவைகளுக்கெல்லாம் நான் சொல்லக்கூடிய ஏதாவதொரு சமாதானம் உண்டென்றால் அது வெகு சிறிய சமாதானமேயாகும்.
அதென்னவென்றால் நாகம்மாளின் இவ்வளவு காரியங்களையும், நான் பொதுநலச்சேவையில் ஈடுபட்ட பிறகு பொதுநலக் காரியங்களுக்கும், சிறப்பாக சுயமரியாதை இயக்கத்திற்குமே பயன்படுத்தி வந்தேன் என்பதுதான். நாகம்மாள் நான் காங்கிரசிலிருக்கும் போது மறியல் விஷயங்களிலும், வைக்கம் சத்தியாகிரக விஷயத்திலும், சுயமரியாதை இயக்கத்திலும் ஒத்துழைத்து வந்தது உலகம் அறிந்ததாகும். ஆகவே நாகம்மாள் மறைந்தது எனக்கு ஒரு அடிமை போயிற்றென்று சொல்லட்டுமா? ஆதரவு போயிற்றென்று சொல்லட்டுமா? இன்பம் போயிற்றென்று சொல்லட்டுமா? உணர்ச்சி போயிற்றென்று சொல்லட்டுமா? ஊக்கம் போயிற்றென்று சொல்லட்டுமா? எல்லாம் போயிற்றென்று சொல்லட்டுமா? எதுவும் விளங்கவில்லையே!
எது எப்படியிருந்தபோதிலும், நாகம்மாள் மறைவு ஒரு அதிசய காரியமல்ல. நாகம்மாள் இயற்கை எய்தினாள். இதிலொன்றும் அதிசயமில்லை. நாகம்மாளை அற்ப ஆயுள்காரியென்று யாரும் சொல்லிவிட முடியாது. நாகம்மாளுக்கு நாற்பத்தெட்டு வயதே ஆன போதிலும், அது மனித ஆயுளின் பகுதிக்குச் சிறிது குறைவான போதிலும் இந்திய மக்களில் சராசரி வாழ்நாளாகிய இருபத்து மூன்று வயதுக்கு இரட்டிப்பென்றே சொல்ல வேண்டும். செத்தால் சிரிக்க வேண்டும், பிறந்தால் அழுக வேண்டும் என்கின்ற ஞானமொழிப்படி, நாகம்மாள் செத்ததை ஒரு துக்க சம்பவமாகவும், நஷ்ட சம்பவமாகவும் கருதாமல் அதை ஒரு மகிழ்ச்சியாகவும், லாபமாகவும் கருத வேண்டும் என்றே நான் ஆசைப்படுவது மாத்திரமல்லாமல் அதை உண்மையென்று கருதுகிறேன்.
எப்படியெனில் எனது வாழ்நாள் சரித்திரத்தில் இனி நிகழப்போகும் அத்தியாயங்களோ சிறிது விசேஷ சம்பவங்களோ இருந்தாலும் இருக்கலாம். அதை நாகம்மாள் இருந்து பார்க்க நேரிட்டால் அந்த அம்மாளுக்கு அவை மிகுந்த துக்கமாகவும் துயரமாகவும் காணக்கூடியதாய் இருக்கும் என்பதில் சிறிதும் சந்தேகமிருக்காது. அத்துடன் அதைக்கண்டு சகியாத முறையில் யானும் சிறிது கலங்கக்கூடும். ஆதலால் நாகம்மாள் மறைவால் எனக்கு அதிக சுதந்திரம் ஏற்பட்டதுடன் 'குடும்பத் தொல்லை ஒழிந்தது' என்கின்ற இரு உயர்பதவியையும் அடைய இடமேற்பட்டது.
இது நிற்க. நாகம்மாள் மறைவை நான் எவ்வளவு மகிழ்ச்சியான காரியத்திற்கும், லாபமான காரியத்துக்கும் பயன்படுத்திக் கொள்கிறேனோ அந்த மாதிரி எனது மறைவையோ எனது நலிவையோ நாகம்மாள் உபயோகப்படுத்திக் கொள்ள மாட்டாள். அதற்கு நேரெதிரிடையாக்குவதற்கே உபயோகித்துக் கொள்வாள். ஆதலால் நாகம்மாள் நலத்தைக் கோரியும், நாகம்மாள் எனக்கு முன் மறைந்தது எவ்வளவோ நன்மை.
என்னருமைத் தோழர்கள் பலருக்கு நாகம்மாள் மறைவு ஈடுசெய்ய முடியாத நஷ்டம் என்று தோன்றலாம். அது சரியான அபிப்பிராயமல்ல. அவர்கள் சற்று பொறுமையாய் இருந்து இனி நடக்க இருக்கும் நிகழ்ச்சிகளைக் காண்பார்களானால் அவர்களும் என்னைப் போலவே நாகம்மாள் மறைவு நலமென்றே கருதுவார்கள். நாகம்மாளுக்குக் காயலா ஏற்பட்ட காரணமே எனது மேல்நாட்டுச் சுற்றுப் பிரயாணம் காரணமாய் ஒரு வருஷகாலம் பிரிந்து இருந்திருக்க நேர்ந்த பிரிவாற்றாமையே முக்கிய காரணம். இரண்டாவது இரஷ்ய யாத்திரையினால் எனக்கு ஏதோ பெரிய ஆபத்து வரும் என்று கருதியது.
மூன்றாவது நமது 'புதிய வேலை திட்டங்களை' உணர்ந்த பின் ஒவ்வொரு நிமிஷமும் தனக்குள் ஏற்பட்ட பயம், ஆகிய இப்படிப்பட்ட அற்ப காரணங்களே அவ்வம்மைக்குக் 'கூற்றாக' நின்றது என்றால் இனி இவற்றைவிட மேலானதான பிரிவு ஆபத்து, பொருளாதாரக் கஷ்டம் முதலியவை உண்மையாய் ஏற்பட இருக்கும் நிலை அவ்வம்மைக்கு எவ்வளவு கஷ்டமாய் இருக்கும் என்று நினைத்துப் பார்க்கும் தோழர்கள் நாகம்மாள் மறைவுக்கு வருந்த மாட்டார்கள் என்றே கருதுகிறேன்.
2, 3 வருஷங்களுக்கு முன்பிருந்தே நான் இனி இருக்கும் வாழ்நாள் முழுவதையும் சங்கராசாரியாரைப் போல (அவ்வளவுக்கு ஆடம்பரத்துடனல்ல, பண வசூலுக்காக அல்ல) சஞ்சாரத்திலேயே, சுற்றுப் பிரயாணத்திலேயே இருக்க வேண்டும் என்றும் நமக்கென்று ஒரு தனி வீடோ அல்லது குறிப்பிட்ட இடத்தில் நிரந்தர வாசம் என்பது கூடாதென்றும் கருதி இருந்ததுண்டு. ஆனால் அதற்கு வேறு எவ்விதத் தடையும் இருந்திருக்கவில்லை என்றாலும் நாகம்மாள் பெரிய தடையாய் இருந்தாள், இப்போது அந்தத் தடை இல்லாது போனது ஒரு பெரிய மகிழ்ச்சிக்குரிய காரியமாகும். ஆதலால் நாகம்மாள் முடிவு நமக்கு நன்மையைத் தருவதாகுக."
ஈ.வெ.ரா. (குடியரசு - 14.5.1933)
- ஓவியா