கேள்வி: வாடகைத் தாய் முறை, பெரியார் பேசிய பெண் விடுதலைக்கு வலு சேர்க்குமா?

பதில்: இல்லை. பெரியாரின் பெண் விடுதலை, பெண்மை, தாய்மை என்ற உணர்வுகளில் இருந்து பெண்ணை விடுவிப்பது. பெண் என்பவள் குழந்தை பெற்று, அந்த குழந்தையை வளர்க்கவே படைக்கப்பட்டிருக்கிறாள் என்ற படைப்புக் கோட்பாட்டை மறுத்த பெரியார், ஆணுக்கும் பெண்ணுக்கும் இருக்கும் சிற்சில உடலியல் வேறுபாடுகளைத் தவிர்த்து, வேறு எவ்வித உணர்ச்சியிலும் ஆணும், பெண்ணும் மாறுபட்டவர்கள் இல்லை என்று வாதிட்டார்.

surrogacyஆணுக்கும் கோபம் வருமெனில், பெண்ணுக்கு கோபம் வரும். பெண்ணுக்கு குழந்தை மீது அன்புணர்ச்சி வருமெனில், ஆணுக்கும் அன்புணர்ச்சி வரும். வீரத்திற்கும், அறிவுக்கும், ஆளும் திறமைக்கும், பேணுந்திறனுக்கும் பாலின வேறுபாடுகள் இல்லை. வேறு வார்த்தைகளில் சொல்வாதாயின், உடலியல் ரீதியான ஹார்மோனால் தூண்டப்படும் உணர்வுகளைத் தவிர்த்து விட்டு, தாய்மை உணர்வோ, தந்தைமை உணர்வோ, பெண்மை உணர்வோ, ஆண்மை உணர்வோ தனித்தனியாக இல்லை. இவை யாவும் சமுகமும் மதமும் அவை உருவாக்கிய பழக்கவழக்கங்களும் இணைந்து உருவான உணர்ச்சிகளே அன்றி இயற்கையில் “வன்மை, கோபம், ஆளுந்திறம், சாந்தம், அமைதி, பேணுந்திறம், வீரம்” போன்ற அனைத்து உணர்ச்சிகளுக்கும் எவ்வித பாலின அடையாளமும் இல்லை.

இதை பெரியார் கீழ்வரும் சொற்களில் விளக்குகிறார்.

"வன்மை, கோபம், ஆளுந்திறம் ஆண்களுக்குச் சொந்தமென்றும், சாந்தம், அமைதி, பேணுந்திறம் பெண்களுக்குச் சொந்தமென்றும் சொல்வதானது - வீரம், வன்மை, கோபம் புலிக்குச் சொந்தமென்றும், சாந்தம், அமைதி, பேணுந்திறம் ஆட்டுக்குச் சொந்தமென்றும் சொல்வதைப் போன்றதே ஒழிய வேறில்லை."

அதாவது கருவில் சுமந்து குழந்தை பெறுவதையும், பாலூட்டுவதையும் தவிர்த்து, பெண் செய்யக் கூடிய அனைத்து வேலைகளையும் ஆண் செய்ய முடியும் என்பதே இதன் பொருள். உணர்வு ரீதியாகவும் ஆணும் பெண்ணும் பொதுவானவர்கள். குழந்தை பெறுவதைக் காரணம் காட்டி, தாய்மை என அதற்குப் பெயரிட்டு, அந்த தாய்மையைத் தவிர்த்துப் பார்த்தால், பெண்ணை ஒன்றுக்கும் உதவாதவள் என்று சொல்வதை பெரியார் மிகக் கடுமையாக எதிர்த்தார். இந்த எதிர்ப்பே “பெரியாரின் பெண் விடுதலை”. இந்தப் பிண்ணனியிலேயே “கருத்தடை, கர்ப்ப பை நீக்கம், மறுமணம், குழந்தை திருமண எதிர்ப்பு, சுயமரியாதை திருமணம், தேவதாசி ஒழிப்பு, பெண்களுக்கு சொத்துரிமை, பெண் கல்வி, விபச்சார எதிர்ப்பு, பல தார மண எதிர்ப்பு, தாலி எதிர்ப்பு, மணமுறிவு” என பல கருத்தாக்கங்களை உருவாக்கி, தொடர்ந்து மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்தார் பெரியார்.

அதே வேளையில் தாய்மை உணர்ச்சி என்ற மோசடியில் இருந்து பெண்ணை அறிவியல் விடுதலை செய்யும் எனக் கணித்ததோடு மட்டுமில்லாமல், மகப்பேறு அறிவியல் அதை நோக்கி நகர வேண்டும் என்று விரும்பினார் பெரியார்.

கேள்வி: தற்போது மகப்பேறு அறிவியல் எந்த நிலையில் உள்ளது?

கருத்தரிப்பு மருத்துவ அறிவியல் பெரிய அளவில் வளராத (கடந்த காலம்) நிலையில், ஒரு குழந்தையைப் பெற்றடுப்பது செத்துப் பிழைப்பதற்குச் சமம். பெற்றடுத்த குழந்தையைப் பாதுகாப்பது அதைவிட பெரிய சவாலாக இருந்தது. அப்படிப்பட்ட ஒரு மோசமான சூழ்நிலையில் இருந்து பெண்களை அறிவியல் வளர்ச்சி விடுதலை செய்யும் என முன்கணித்த பெரியாரின் வாக்கு தப்பவில்லை. கடந்த நூறாண்டுகளில் மகப்பேறு இறப்பு வெகுவாகக் குறைக்கப்பட்டிருக்கிறது. ஆனால் முதலாளித்துவம் எனும் கொடுங்கனவு மருத்துவ அறிவியலைக் கைது செய்து, தாய்மையின் பெயரில் வாடகைத் தாய்களை உருவாக்கி சந்தையில் விற்பனைக்கு விட்டுள்ளது.

ஒரே ஒரு ஆறுதல், இந்த வணிக ஆபத்தை இன்றைய அரசுகள் உணர்ந்திருப்பதால், ஷாப்பிங் மால்களில் வாடகைத்தாய் விற்பனைக்கு கிடைக்க மாட்டாள். அங்கொன்றும் இங்கொன்றுமாக, கள்ளத்தனமாகவோ அல்லது அரிதினும் அரிதாகவோ வாடகைத் தாய்கள் விற்பனைக்குக் கிடைப்பார்கள். கள்ளச் சந்தையில் குறைவான எண்ணிக்கையில் மட்டுமே வாடகைத் தாய்கள் கிடைப்பார்கள் என்பது நமக்கு ஆறுதலாக இருந்தாலும், அந்த குறைந்த அளவிலான வாடகைத் தாய்களும் பெரியார் விரும்பிய பெண் விடுதலைக்கு வலு சேர்ப்பவர்கள் இல்லை. மாறாக பெண்களை, குறிப்பாக ஏழ்மையில் வாடும் பெண்களை குறிவைக்கும் வணிக முறையே என்ற வகையில், வாடகைத்தாய் முறையும் பெரியார் பேசிய பெண்ணியமும் வெவ்வேறானவை. ஒன்றுக்கு ஒன்று முரணானது. பெரியார் பேசிய பெண் விடுதலை பெண்ணுக்கானது மட்டுமல்ல; அது ஆணுக்கும், ஒட்டுமொத்த சமூக விடுதலைக்குமானது.

பழைய சமூகம் திருமணமான பெண்கள் பிள்ளை பெறாவிட்டால், அவர்களை மலடி என்று சொல்லியது. முதலாளித்துவம் பிள்ளை பெற வேண்டும் எனில் லட்சக்கணக்கில் பணத்தைச் செலவழிடி என்கிறது. நவீன அறிவியலைப் பயன்படுத்தியாவது, குழந்தை பெற்றுக் கொள்ளலாம் என்பது மீண்டும் மீண்டும் பெண்ணை தாய்மை உணர்வுக்குள் சிறைப்படுத்தும் முயற்சியே.

ஈன்று புறந்தருதல் மட்டுமே உன் கடன் எனப் பெண்ணை வலியுறுத்தி வந்த சமூகம், அறிவியல் வளர்ச்சியின் உதவியுடன், இன்னொரு பெண்ணின் வயிற்றில் உன் குழந்ததையை வளர்க்க வேண்டும் என்ற நிலை வந்தால் கூட அதையும் செய்து விடு என்ற அளவில் “மகப்பேறு அறிவியல்” மாற்றமடைந்து உள்ளது.

கேள்வி: பெரியார் விரும்பிய மகப்பேறு அறிவியல் வளர்ச்சி எது?

பதில்: குழந்தை பிறப்பில் பிண்ணிப் பிணைக்கப்பட்டுள்ள தாய்மை எனும் போலி உணர்வை நீக்கி, அறிவியல் மனப்பான்மையைக் கொண்டு வருவதே பெரியார் விரும்பிய மகப்பேறு அறிவியலின் வளர்ச்சி

அறிவியல் உதவி கொண்டு, ஆரோக்கியமான ஆண் – பெண் அணுக்களை கண்டறிந்து, அவற்றை பெண் உடலுக்கு வெளியே இணைத்து கருவை வளர்த்து, அதன் வளர்ச்சிப் போக்கை கணித்து, முழு ஆரோக்கியத்துடன் கரு வளர்கிறது என்பதை உறுதிப் படுத்திய பின்னர் பெண்ணுடலுக்குள் செலுத்தி ஆரோக்கியமான குழந்தைகளைப் பெற்றெடுப்பதை அறிவியல் சாதிக்கும் எனப் பெரியார் நம்பினார். இதை சாதிக்கும் இடத்திற்கு அருகே பெரியார் இறந்த 50 ஆண்டுகளுக்குள் வந்துவிட்டோம். ஆனால் அறிவியலின் உதவிகொண்டு தாய்மை எனும் போலி உணர்வை நீக்கும் பணியைத் தொடங்கவே இல்லை. மாறாக அறிவியலின் உதவி கொண்டு தாய்மை உணர்வை அடைவதற்கான முயற்சியின் மற்றொரு வடிவமே வாடகைத் தாய்.

பெற்றால் தான் பிள்ளையா? சமுகத்தில் உள்ள அனைவரும் நம் பிள்ளைகள் என்ற கூட்டு உணர்ச்சி வர வேண்டும் எனப் பெரியார் விரும்பினார். ஆனால், அடுத்தவர்(ள்) வயிற்றில் வளர்த்தாவது பிள்ளை பெற்றாக வேண்டும் என்ற இடத்தில் நாம் வந்து நிற்கிறோம்.

தனக்கு (தன் ரத்த வாரிசாக) ஒரு பிள்ளை வேண்டும் என்ற கடந்த கால நம்பிக்கையை அறிவியல் உதவி கொண்டு, இன்னொரு பெண்ணின் வயிற்றைக் கடன் வாங்கி குழந்தை பெறும் முயற்சியின் விளைவே வாடகைத் தாய்.

- சு.விஜயபாஸ்கர்

Pin It