வள்ளலார் (05/10/1823 - 30/01/1874) தமிழ்ச் சமூக வரலாற்றில் ஒரு புரட்சித் துறவியாகத் திகழ்கிறார். "மதமான பேய் பிடியாதிருக்க வேண்டும்" எனவும், "கண்மூடி வழக்கம் எலாம் மண்மூடிப் போக" எனவும் முழங்கி, எடுத்துக்காட்டான வழிகாட்டியாகத் திகழ்கிறார். தனி மனிதாக ஒதுங்கி விடாமல், நிறுவனங்களை உருவாக்கித் தனது கொள்கைகளைப் பரப்புரை செய்பவராக அவர் உயர்ந்து நிற்கிறார். அவர் ஏற்படுத்திய சமரச சுத்த சன்மார்க்க சங்கம் ( 1865 ) சத்திய தரும சாலை ( 1867 ) சித்தி வளாகம் ( 1870 ) சத்திய ஞான சபை ( 1872 ) ஆகியவை அவரது முயற்சியால் கட்டமைக்கப் பட்டவை. இவற்றில் சங்கம், சாலை, சபை ஆகிய மூன்றும் வடலூரில் உள்ளன. சித்தி வளாகம் வடலூருக்குத் தெற்கே மூன்று கிலோ மீட்டர் தொலைவில் மேட்டுக்குப்பம் எனும் சிற்றூரில் உள்ளது.

மடத்திற்கு மாற்றாகச் சங்கத்தை உருவாக்கியவர். புத்தருக்குப் பிறகு சங்கம் அமைத்துப் பாகுபாடு காட்டாமல் மக்கள் பணி ஆற்றியவர்.

2,000 ஆண்டுகளுக்கு முன் திருவள்ளுவர் வந்தார். அவருக்குப் பின் திருமூலர், சித்தர்கள், பட்டினத்தார், தாயுமானவர் போன்றோர் வந்தனர். இவர்கள் அனைவருக்கும் பின்னே வள்ளலார் வந்தார். இத்தகைய மரபை,

"வாழையடி வாழை என வந்ததிருக்கூட்ட

மரபினில்யான் ஒருவன்அன்றோ "

-- எனக் குறிப்பிட்டு வள்ளலார் தன்னை அறிமுகப்படுத்திக் கொள்கிறார்.

மேலும்,

"அகத்தே கருத்துப் புறத்து வெளுத்

திருந்த உலகர் அனைவரையும்

சகத்தே திருத்திச் சன்மார்க்க

சங்கத் தடைவித் திடஅவரும்

இதத்தே பரத்தைப் பெற்று மகிழ்ந்

திடுதற் கென்றே எனை இந்த

உகத்தே இறைவன் வருவிக்க

உற்றேன் அருளைப் பெற்றேனே"

- எனத் தனது வாழ்வின் இலக்கைத் தெளிவுபடுத்துகிறார்.

நூலாசியர், உரையாசிரியர், பதிப்பாசிரியர், பத்திரிகாசிரியர், போதகாசிரியர், ஞானாசிரியர், சிறந்த சொற்பொழிவாளர், மொழி ஆய்வாளர், பசிப்பிணி போக்கிய அருளாளர், தீர்க்கதரிசி, சித்த மருத்துவர், இசை வல்லுநர் எனப் பன்முக ஆளுமை மிக்கவராக அவர் போற்றப்படுகிறார். அதனாலேயே "பல கலை தெரிதரும் உணர்ச்சியன்" எனக் காஞ்சிபுரம் சபாபதி முதலியார் அவரைப் பாராட்டுகிறார். தவிரவும், பலவற்றில் முதன்மை நிலை பெற்றவராகவும் அவர் விளங்கினார்.

தமிழ்நாட்டில் பொதுமக்களுக்கு முதன் முதலாகத் திருக்குறள் வகுப்பு நடத்தியவர் தமிழ்நாட்டில் முதன்முதலாக முதியோர் கல்வியை ஏற்படுத்தியவர். தமிழ்நாட்டில் முதன்முதலாக மும்மொழிப் பாடசாலை (தமிழ், வடமொழி, ஆங்கிலம்) என நிறுவியவர். தமிழ்நாட்டில் முதல் கல்வெட்டு ஆராய்ச்சியாளர் என்பன போன்ற முதன்மைச் சிறப்புக்கு உரியவர்.

தவிரவும், தமது கொள்கைக்கென்று ஒரு தனி மார்க்கத்தைக் கண்டவர். தமது மார்க்கத்திற்கென்று ஒரு தனிச் சங்கத்தை நிறுவியவர். தமது மார்க்கத்திற்கென்று ஒரு தனிக் கொடி கண்டவர். தமது மார்க்கத்திற்கென்று ஒரு தனி மந்திரம் உருவாக்கியவர். தமது மார்க்கத்திற்கென்று ஒரு தனிச்சபையையும் கட்டியவர் வள்ளலார் அவர்கள்.

வள்ளலாரைப்பற்றி அவரது அணுக்கத் தொண்டரான தொழுவூர் வேலாயுத முதலியார், தியாசபிகல் சொசைட்டியாருக்கு அளித்த ஆங்கில வாக்குமூலத்தில் குறிப்பிடுவது மிகவும் முக்கியமானது.

"இயற்கைக்கு மேம்பட்ட எதையும் அவர் (வள்ளலார்) ஒப்புவதில்லை. தமது மார்க்கம் அறிவியலையே அடிப்படையாகக் கொண்டதென்று இடையறாது வற்புறுத்துவார்" எனும் கூற்று (தமிழாக்கம்) துறவிகளில் அவர் தனித்துவம் மிக்கவர் என்பதைத் தெளிவாக்குகிறது.

"இராமலிங்கம் என்பது சைவம், வைணவம் ஆகிய இரண்டும் சேர்ந்த பெயர். இராமர், வைணவப் பெயர். லிங்கம், சைவப்பெயர். இப்பெயர் சைவ வைணவச் சமரசத்தையும் குறிப்பதாகக் கொள்ளலாம்" என்கிறார் முனைவர் ஊரன் அடிகளார். முதலில் அவர் இராமலிங்க பிள்ளை என அழைக்கப்பட்டு, பிறகு இராமலிங்க சுவாமிகள் என அவரது சீடர்களால் போற்றப்பட்டார். ஆனால், சுவாமிகள் எனும் சொல் மிகவும் ஆரவாரமாக இருப்பதாகக்கூறி, தன்னடக்கத்துடன் அப்படி அழைக்க வேண்டாம் எனத் தனது சீடர்களுக்குக் கட்டளையிட்டு விட்டார். எனவே அவர் சிதம்பரம் இராமலிங்கம் என்றே தன்னை அழைத்துக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. திருவருட்பிரகாச வள்ளலார் எனும் சிதம்பரம் இராமலிங்க பிள்ளை என வழங்கும் வழக்கத்தை அவரது முதன்மைச் சீடராகிய தொழுவூர் வேலாயுத முதலியார் ஏற்படுத்தினார்.

சங்கராச்சாரியார், சமஸ்கிருதம் எல்லா மொழிகளுக்கும் "தாய்" என்ற பொழுது, தமிழ் எல்லா மொழிகளுக்கும் "தந்தை" எனக் கூறிச் சங்கராச்சாரிக்கு அறிவுறுத்தியதோடு, தமிழ் எவ்வகையில் சிறந்தது என்பதையும் வள்ளலார் தெளிவு படுத்தினார். தமிழ் எழுத்துக்கள் கற்பதற்கு எண்ணளவு சுருக்கமானவை என்றும், தமிழ் ஒலி இலேசானது என்றும், தமிழில் கூட்டு என்னுஞ் சந்தி அதி சுலபமானது என்றும், தமிழ் உரைநடையில் எழுதவும், கவி செய்யவும் மிக நேர்மையானது என்றும், எடுத்தாரவாரம், சொல்லாடம்பரம் முதலிய குணங்கள் இல்லாதது என்றும், எம்மொழியின் ஒலிகளையும் தன்னுட் கொண்டது என்றும் தெளிவு படுத்தினார். தமிழை "இயற்கை உண்மைச் சிறப்பியல் மொழி" என அழைத்ததோடு, சிறப்பெழுத்தாகிய ழ கரம், தமிழ் தவிர வேறு மொழிகளில் இல்லை எனவும் சுட்டிக்காட்டினார்.

"தமிழ், நீச மொழி" என இன்றும் இழிவுப்படுத்திக் கொண்டிருக்கும் சங்கராச்சாரிக்கும், சமஸ்கிருதத்தை உச்சிமேல் வைத்துக் கொண்டாடிக் கொண்டிருக்கும் இந்துத்துவ வெறியர்களுக்கும் வள்ளலாரின் தமிழ் பற்றிய விளக்கம் சரியான பதிலடியாகும்.

"சமூகத்தைச் சீர்திருத்த வந்த வள்ளலார்க்கு மொழி உணர்வு இருந்ததில் வியப்பில்லை. வள்ளலாரின் மொழிக் கோட்பாடு என்பது தமிழ்த் தேசியம் சார்ந்ததே அன்றி, சைவம் சார்ந்தது அன்று. இதனை இப்படி கூறலாம். தமிழ்த் தேசியத்தைச் சைவத்தேசியமாக உருவெடுக்காமல் தடுத்தவர் வள்ளலார் " எனப் பழ. நெடுமாறன் அவர்கள் குறிப்பிடுவது மிகச்சரியான மதிப்பீடு ஆகும்.

சென்னையிலும் கருங்குழியிலும் வாழ்ந்த காலத்தில் வள்ளலார் பாடியவை முதல் ஐந்து திருமுறைகள். அவை பெரும்பாலும் இறைவனைத் துதித்துப் பாடியவை. 1867-ல். வடலூருக்கு வந்தபின் வடலூரிலும், மேட்டுக்குப்பத்திலும் வாழ்ந்த காலத்தில் பாடியவை ஆறாந்திருமுறை. இந்த ஆறாந்திருமுறையில்தான் வள்ளலாரின் வளர்ச்சி பெற்ற மனக் கட்டமைப்பையும், புரட்சிக் கருத்துக்களையும் காண முடிகிறது.

தமிழ்ச் சமூகத்தில் ஒருவரது மனப்பக்குவத்தைத் தீர்மானிக்கும் இரண்டு அளவுகோல்கள் பணம் மற்றும் சாதி குறித்த அவர்களது பார்வையும், செயல்பாடுகளும் ஆகும். பல்வேறு அமைப்புகளை நிறுவினாலும், அவற்றை வணிகரீதியாக மாற்ற வள்ளலார் அவர்கள் ஒருக்காலும் ஒப்பியதில்லை. அவருக்குப் பணம் அனுப்புவதாக ஓர் அன்பர் தெரிவித்த பொழுது, அதற்கு வள்ளளார் தந்த பதில் அவரது உயர் பண்பிற்குச் சிறந்த எடுத்துக்காட்டாக உள்ளது.

"ஐயா! நானும் புத்தி தெரிந்த நாள் தொடங்கி இது பரியந்தமும் இந்தப் பிண உடம்பும் இதற்குக் கொடுக்கின்ற பிண்ட துண்டங்களும் பெருஞ்சுமையாக இருக்கின்றதே, ஐயோ, இது என்றைக்குத் தொலையும் என்று எண்ணி எண்ணி இளைத்துத் துன்பப்படுகின்றவனாக இருக்கின்றேன். இப்படிப்பட்ட இந்த நாய்க்கு பணம் என்ன செய்ய, என்னைக் குறித்துத் தாங்கள் பண விசயத்தில் பிரயாசம் எடுத்துக் கொள்ள வேண்டாம்" என்று புதுவை வேலு முதலியாருக்கு எழுதிய கடிதத்தில் ( 15/02/1859 ) வள்ளலார் குறிப்பிடுவது கருதத்தக்கது. மேலும் பணத்தை இலட்சியம் செய்யாமல், அதைத் தூக்கி எறிந்ததாக வள்ளலார் அவர்களே குறிப்பிடுகிறார்.

அதே போல், சாதி மற்றும் மதம் பற்றிய அவரது கண்ணோட்டம் மிகவும் புரட்சிகரமானது.

"சாதியிலே மதங்களிலே சமயநெறி களிலே
சாத்திரச்சந் தடிகளிலே கோத்திரச்சண் டையிலே
ஆதியிலே அபிமானத் தலைகின்ற உலகீர்
அலைந்தலைந்து வீணேநீர் அழிதல்அழ கலவே"

- என்றும்,

"நால்வருணம் ஆசிரமம் ஆசாரம் முதலா
நவின்றகலைச் சரிதம் எலாம்
பிள்ளைவிளை யாட்டே
மேல்வருணம் தோல் வருணம்
கண்டறிவார் இலைநீ"

 என்றும்,

"சாதியும் மதமும் சமயமும் பொய்யென

ஆதியில் உணர்த்திய அருட்பெருஞ் சோதி"

என்றும்,

"இருட்சாதித் தத்துவச் சாத்திரக் குப்பை
இருவாய்ப்புப் புன்செயில்
எருவாக்கிப் போட்டு
மருட்சாதி சமயங்கள் மதங்களாச் சிரம
வழக்கெலாம் குழிக் கொட்டி
மண்மூடிப் போட்டு"

என்றும்,

"சாதி சமயச் சழக்கைவிட் டேன்அருட்
சோதியைக் கண்டேனடி - அக்கச்சி
சோதியைக் கண்டேனடி.
சாதி சமயச் சழக்கெலாம் அற்றது
சன்மார்க்க ஞான சபைநிலை பெற்றது"

- என்றும், 

"வேதாக மங்கள் என்று வீண்வாதம் ஆடுகின்றீர்
வேதாக மத்தின் விளைவறியீர் - சூதாகச்
சொன்னஅலால் உண்மைவெளி தோன்ற
உரைக்கவிலை
என்ன பயனோ இவை"

- என்றும்,

"மதித்த சமயமத வழக்கெல்லாம் மாய்ந்தது
வருணாச் சிரமம் என்னும் மயக்கமும் சாய்ந்தது
கொதித்த லோகாசாரக் குதிப்பெல்லாம் ஒழிந்தது
கொலையும் களவும் மறைப்புலையும் அழிந்தது
குறித்த வேதாகமக் கூச்சலும் அடங்கிற்று"

-என்றும்,

"சாத்திரங்கள் எல்லாம் தடுமாற்றம் சொல்வதன்றி

நேத்திரங்கள் போற்காட்ட நேராவே"

- என்றும் திருஅருட்பாவில் தொடர்ந்து சாதி, மத மறுப்புக் கருத்துகளை வள்ளலார் உயர்த்திப் பிடிக்கிறார்.

அதேபோல் சைவம், வைணவம், வேதாந்தம், சித்தாந்தம் ஆகியவற்றை முற்றிலும் மறுதலிக்கிறார்.

" சைவம், வைணவம் முதலிய சமயங்களிலும், வேதாந்தம், சித்தாந்தம் முதலிய மதங்களிலும் லக்ஷியம் வைக்க வேண்டாம். அவற்றில் தெய்வத்தைப் பற்றிக் குழூஉக் குறியாகக் குறித்திருக்கிறதே அன்றிப் புறங்கவியச் சொல்லவில்லை. அவ்வாறு பயிலுவவோமேயானால் நமக்குக் காலமில்லை. ஆதலால் அவற்றில் லக்ஷியம் வைக்க வேண்டாம். ஏனெனில் அவைகளிலும் -- அவ்வச் சமய மதங்களிலும் -- அற்பப் பிரயோஷனம் பெற்றுக் கொள்ளக் கூடுமேயல்லது, ஒப்பற்ற பெரிய வாழ்வாகிய இயற்கை உண்மை என்னும் ஆன்மானுபவத்தைப் பெற்றுக் கொள்கின்றதற்கு முடியாது. ஏனெனில் நமக்குக் காலமில்லை. மேலும் இவைகளுக்கெல்லாம் சாக்ஷி நானே இருக்கின்றேன். நான் முதலில் சைவ சமயத்தில் லக்ஷியம் வைத்துக் கொண்டிருந்தது இவ்வளவென்று அளவு சொல்ல முடியாது. அது பட்டணத்துச் சுவாமிகளுக்கும் வேலாயுத முதலியாருக்கும் இன்னும் சிலர்க்கும் தெரியும். அந்த லக்ஷியம் இப்போது எப்படிப் போய்விட்டது பார்த்தீர்களா! அப்படி லக்ஷியம் வைத்ததற்குச் சாக்ஷி வேறே வேண்டியதில்லை. நான் சொல்லியிருக்கிற திருவருட்பாவில் அடங்கிஇருக்கிற - ஸ்தோத்திரங்களே - போதும். அந்த ஸ்தோத்திரங்களையும் மற்றவர்களுடைய ஸ்தோத்திரங்களையும் சபைக்குக் கொண்டு வந்தால் அவைகளே சாக்ஷி சொல்லிவிடும். ஏன் அவ்வளவு மிகுந்த அழுத்தம் எனக்கு அப்போது இருந்தது என்றால், அப்போது எனக்கு அவ்வளவு கொஞ்சம் அற்ப அறிவாக இருந்தது" என்பது வள்ளலாரின் புகழ்பெற்ற ஒப்புதல் வாக்குமூலம் ஆகும். இது அவரது அறிவுப் பரிணாமத்தைத் தெளிவாக உணர்த்துகிறது. "சுத்தசன்மார்க்கத்துக்கு முக்கியத் தடைகளாகிய சமயம், மதம் முதலிய மார்க்கங்களை முற்றும் பற்றறக் கைவிட்டவர்கள், சுத்த சன்மார்க்கத்திற்கு உரியவர்கள் ஆவார்கள்" என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.

மேலும் "ஆண்மக்கள், பெண்மக்கள் முதலிய யாவர்களிடத்திலும், ஷாதி, சமயம், மதம், ஆசிரமம், சூத்திரம், கோத்திரம், குலம், சாஸ்திரசம்பந்தம், தேசமார்க்கம், உயர்ந்தோர், தாழ்ந்தோர் என்னும் பேதம் நீங்கி, எல்லவரும் தம்மவர்களாய்ச் சமத்திற்கொள்வது ஜீவ ஒழுக்கமாகும்" என்பதும், " தத்துவவொழுக்கம் பற்றிச் சமயங்கள் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன. தொழில் ஒழுக்கம் பற்றி ஷாதிகள் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன. தயவை விருத்தி செய்வதற்குத் தடையாயிருப்பன-- சமய ஏற்பாடு, ஜாதி ஏற்பாடு முதலிய கட்டுப்பாட்டு ஆசாரங்கள்" என்பதும் அவரது தெளிவான நிலைப்பாடாகும்.

பாடல்களிலும், கருத்துக்களிலும் மட்டுமல்ல, நடைமுறையிலும் அதைக் கடைப்பிடித்த முன்னோடியாக அவர் திகழ்கிறார். குறிப்பாக அவர் சுட்டும் வழிபாட்டுமுறை முற்றிலும் புதுமையானது. இந்துத்துவம் வலியுறுத்தும் கோயில் வழிபாட்டு முறைகளிலிருந்து முற்றிலும் வேறுபட்டது. வழிபாட்டிற்காகக் கூடுவோர் ஞானசபையின் உள்ளே புகுவதற்கும், புறத்தே இருந்து வழிபடுவதற்கும் சாதி முதலிய வேறுபாடுகள் இல்லை. மத்தளம் முதலிய இசைக்கருவிகள், சோறு, தேங்காய் பழம் முதலிய நைவேத்தியங்கள், தீப தூப முதலிய ஆராதனைகள், திருநீறு முதலிய பிரசாதங்கள் இன்னும் இவ்வகைகளில் சமயக் கோயில்களில் அனுட்டிக்கப் படுபவை யாவும் ஞான சபை வழிபாட்டிற்குப் புறம்பானவை என இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்பே வள்ளலார் வழிகாட்டியுள்ளார்.

அதே போல், அந்தணர் சபாபதி சிவாசாரியார் முதல் பறையர் அமாவாசை வரை எல்லாச் சாதியாரும் அவரிடம் இயல்பாகப் பழகினர். அனைவரையும் அவர் சமமாகவே கருதினார்.

ஒடுக்கப்பட்ட பிரிவினர்பால் அவர் காட்டிய தரிசனம் குறித்து ஊரன் அடிகள் ஒரு நிகழ்ச்சியைப் பதிவு செய்கிறார்.

"மஞ்சக்குப்பம் தாசில்தார் வேங்கடசுப்பையர் நாடோறும் பெருமானின் உபதேசங்களைக் கேட்கக் கூடலூர்க்கு வருவார். அவரது வண்டிக்கு முன் சக்கிலியன் ஒருவன் கொம்பு ஊதிக் கொண்டு ஓடிவருவது வழக்கம். ஒரு நாள் மிக வேகமாக ஓடிவர நேரிட்டதால், பசித்துக் களைத்த அவனது உடல் நடுங்கிற்று. அன்று ஐயர் கூட்டத்திற்கு வந்தவுடன் வழக்கம் போல் பெருமான் அவரைப் பார்த்து விசாரிக்கவில்லை. சற்று நேரங்கழிந்தபின் அவரைப் பார்த்து, " இந்த வாழ்வு எத்தனை நாளைக்கு இருக்கும்? கொம்புக்காரனை முன்னமே போக வேண்டிய இடத்திற்கு அனுப்பி, அவ்விடத்திற்குச் சிறிது தூரம் முன்னிருந்தே ஊதினால் போதாதோ" எனக்கேட்டார். தாசில்தாரும் அவ்வாறே செய்வதாகக் கூறிப் பொறுத்தருள வேண்டினார். பசித்துக் களைத்திருந்த சக்கிலிக்கு உணவளிக்கச் செய்த பின்னரே பெருமான் அன்றைய உபதேச உரையைத் தொடங்கினார்’. (ஊரன் அடிகள்)

அது மட்டுமல்ல, பாகுபாடு காட்டாமல் வாழும் வித்தகர்களுக்குச் சேவை செய்ய விரும்புவதாகவும் வள்ளலார் குறிப்பிட்டார்

"எத்துணையும் பேதமுறா தெவ்வுயிரும்
தம்முயிர் போல் எண்ணி உள்ளே
ஒத்துரிமை உடையவராய் உவக்கின்றார்
யாவர்அவர் உளந்தான் சுத்த
சித்துருவாய் எம்பெருமான் நடம்புரியும்
இடம்என நான் தெரிந்தேன் அந்த
வித்தகர்தம் அடிக்கேவல் புரிந்திடஎன்
சிந்தைமிக விளைந்த தாலோ"

- எனவும் தனது சமரச நோக்கத்தைத் தெளிவுபடுத்தியதோடு,

"கலை உரைத்த கற்பனையே நிலைஎனக் கொண்டாடும்

கண்மூடி வழக்கமெல்லாம் மண்மூடிப் போக"

- எனவும் சாபமிட்டார்.

இந்த அளவு தெளிவாகத் தம் நிலைபாட்டை விளக்கிய வள்ளலாரைச் சைவமதச் சிமிழுக்குள் அடைக்கும் முயற்சிகள் அன்றிலிருக்கு இன்று வரை தொடர்கிறது. ஆனால், வள்ளலார் அவர்கள் அனைத்து மதங்களையும் கடந்தவராகத்தான் வாழ்ந்து காட்டினார்.

தொடக்கத்தில் முருகன் மற்றும் சிவ வழிபாட்டில் ஈடுபாடு காட்டியவராக இருந்தாலும், பின்னாளில் அத்தகைய தளைகளை எல்லாம் கடந்தவராக அவர் திகழ்ந்தார். சிலர் அவரைச் "சீர்திருத்தச் சைவர்" எனக் குறிப்பிட்டாலும், அது சரியான மதிப்பீடு அல்ல என்பதை அவரது பல்வேறு பாடல்கள் தெளிவு படுத்துகின்றன.

" சுத்த சன்மார்க்கத்தின் முக்கியத் தடைகளாகிய சமயாசாரங்கள், மதங்கள், மார்க்கங்கள் என்பவற்றின் ஆசார சங்கற்ப விகற்பங்களும், வருணம் முதலிய உலகாசார சங்கற்ப விகற்பங்களும் எங்கள் மனதில் பற்றாதபடி அருள் செய்தல் வேண்டும். சுத்த சன்மார்க்கத்தின் முக்கியமான லட்சியமாகிய ஆன்மநேய ஒருமைப்பாட்டுரிமை எங்களுக்குள் எக்காலத்திலும், எந்த இடத்திலும், எந்த விதத்திலும் விலகாது நிறைந்து விளங்கச் செய்தருள வேண்டும்" எனச் சிறு விண்ணப்பம் பகுதியில் தெளிவுபடுத்துகிறார்.

வள்ளலாரின் மையமான கருத்தியல், சீவகாருண்யம். சீவகாருண்யத்தின் முக்கியக் கூறு, பசி தீர்த்தல் என்பதாகும். பசி நீக்கம் என்பதை ஏதோ ஒரு தர்ம காரியமாக வள்ளலார் பார்க்கவில்லை. மாறாக ஒரு கோட்பாடு எனும் அளவிற்குத் தொடர்ந்து இடையறாமல் அதை வலியுறுத்துகிறார். அதனாலேயே பசிபோக்குதல் என்பதே இன்றுவரை அவரது அடையாளமாக மாறிவிட்டது.

வள்ளலாரைப் போலவே பசி நீக்கம் என்பதை உலகெங்குமுள்ள ஞானிகள் வலியுறுத்துகின்றனர்.

"பசித்தவனுக்கு ரொட்டி வடிவில்தான் இறைவன் தோன்றுவான்" எனக் கிருத்துவர்கள் கூறுவது வழக்கம்.

"பசித்தவருக்கு உணவளிக்காமல் எவரும் உண்ணக்கூடாது" எனவும், "பசிபோக்குபவரது பாவங்கள் மன்னிக்கப் படும்" எனவும் நபிகள் நாயகம் குறிப்பிடுகிறார்.

"ஆற்றுவார் ஆற்றல் பசியாற்றல் அப்பசியை

மாற்றுவார் ஆற்றலின் பின்"

- என்பது பேராசான் வள்ளுவர் வாக்கு.

"தவஆற்றலின் தனி ஆற்றல், பசியைத் தாங்கும் ஆற்றல். ஆனால், அன்னமிட்டுப் பசியைப் போக்கும் அருளாற்றல், அதை இரண்டாம் இடத்துக்குப் பின்தள்ளி விடும்" எனும் குறளின் கருத்தோடு இணைந்து தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தியவர் வள்ளலார் அவர்கள்.

"ஆற்றா மாக்கள் அரும்பசி களைவோர்

மேற்றே உலகின் மெய்ந்நெறி வாழ்க்கை"

- எனப் பசி போக்குவரது வாழ்வைக் கொண்டாடுகிறது மணிமேகலை.

இத்தகைய பசிக்கொடுமை என்பது ஏதோ வள்ளலார் காலத்தின் பிரச்சனை என்பதாக யாரும் கருதிவிட முடியாது. அண்மையில் "உலகப் பட்டினிக் குறியீடு" வெளிவந்த பொழுது இந்தியா முழுவதும் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளானது. உலகிலுள்ள 121 நாடுகளில் இந்துத்துவம் ஆட்சி புரியும் இந்தியா 107 -ஆவது இடத்தில் பட்டினியில் வாடும் நாடாக இருந்தது அம்பலமானது. பாகிஸ்தானை விட, வங்கதேசத்தை விட, இலங்கையை விட, நேபாளத்தை விட இந்தியா பின்னால் இருந்தது அதிர்ச்சியின் உச்சகட்டமாக இருந்தது.

எனவே மனிதகுலத்திற்குப் பசி என்பது மிகப்பெரும் சவாலாக முன்நிற்கிறது. இதைத் தொலைநோக்காக உணர்ந்து அதை ஒழிக்கும் முயற்சியில் இறங்கினார் வள்ளலார். அதற்காக மக்களின் மனச்சான்றை உலுக்கும் வண்ணம் அருள்வாக்கு அருளினார். இதனால் கேட்போரது உள்ளத்தில் அருள் சுரந்து, பசி நீக்கும் அணையா அடுப்பை ஏற்படுத்தும் அவரது முயற்சிக்குக் கைகொடுத்தனர். வள்ளலார் சொல்லுவது போல் பசிப்பிணியின் கொடுமை குறித்து இனியொருவர் விரிவாகச் சொல்ல முடியாது எனும் அளவுக்கு அதைத் தொடர்ந்து தொய்வின்றி எடுத்துரைத்து வந்தார்.

பசி நீங்கியபின் ஒருவர் பெறும் இன்பத்தைக் காட்டிலும், பசி நீக்கியவர் பெறும் இன்பத்திற்கு இணையேதும் இல்லை எனவும், "இந்தப் புண்ணியத்தைச் செய்கின்ற புண்ணியர்களை எந்தத் தெய்வத்துக்குச் சரியென்று சொல்லலாம்? எல்லாத் தெய்வங்களுக்கும் மேலாகிய கடவுள் அம்சமென்றே சத்தியமாக அறிய வேண்டும்" எனக் கூறி பசிப்பிணி போக்கும் மருத்துவர்களாக மாற மக்களைத் தூண்டிக் கொண்டே இருந்தார்.

ஏதோ மனிதர்களுடைய பசியைப் போக்குவது என்ற அளவோடு அவர் நின்று விடவில்லை. `"தமது குடும்பத்திற்குச் சகாயமாகத் தேடிய பசு, எருமை, ஆடு, குதிரை, தாவர முதலிய பிராணிகளுக்கும், பசியை ஆற்றுவித்துத் திருப்தியின்பத்தை உண்டு பண்ண வேண்டுமென்றும் சத்தியமாக அறிதல் வேண்டும்’’ என்பது மக்களுக்கு அவரது அறிவுரையாக இருந்தது.

"வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம்

வாடினேன் பசியினால் இளைத்தே

வீடுதோ றிரந்தும் பசியறா தயர்ந்த

வெற்றரைக் கண்டுளம் பதைத்தேன்"

- எனும் வள்ளலாரின் வரிகள் மிகவும் புகழ் பெற்றவை. மேலும் "ஜீவகாருண்ய ஒழுக்கம்" எனும் பகுதியில் பசியின் கொடுமை குறித்து மிக விரிவாகப் பேசுகிறார்.

வள்ளலாரது மற்றுமோர் சிறப்பு அவரது எளிமை. காவி உடை தவிர்த்து, வெண்ணிற ஆடையையே அவர் உடுத்துவார். வெள்ளாடையிலும் அவர் உடுத்துவது, லாங் கிளாத் (Long Cloth) எனும் வகையைச் சார்ந்ததே. தமிழ்நாட்டு ஞானிகள் பலரும் வெள்ளாடைத் துறவியராகவே திகழ்ந்தனர். காவி உடை பின்னாளில் வந்தது என்பது வரலாறு. காவி, தமிழர்க்கு அந்நியமானது எனும் வள்ளலாரின் அறிவுரையை இன்றைய சூழலில் நினைவு கொள்வது முக்கியம்.

பெண்களின் மேம்பாடு குறித்துக் கரிசனம் மிக்கவராக விளங்கினார் வள்ளலார். அவரது சமாதிக் கட்டளையில் ஏழு கட்டளைகளை அவர் குறிப்பிடுகிறார்.

"கணவன் இறந்தால், மனைவி தாலி களையக் கூடாது " என்பது அக்கட்டளைகளில் ஒன்றாகும். அதே போல், உபதேசக் குறிப்புகள் பகுதியில்,

"பெண்களுக்கு யோகம் முதலிய சாதனங்கள் அவசியம் கற்பிக்க வேண்டியது. மேலும் வேதமற்று அபேதமாய்ப் படிப்பு முதலியவையும் சொல்லிக் கொடுக்க வேண்டியது. தத்துவம் முதலியவற்றின் சொரூப ரூபாதிகளைத் தெரிவித்துச் சரளமாக்கினால், பின் தடையின்றி நம்முடைய துரிய ஆசிரம காலத்தில் ஒத்திருப்பார்கள்." என 200 ஆண்டுகளுக்கு முன்பே மகளிரது உரிமையை வலியுறுத்துபவராக வள்ளலார் விளங்கினார் என்பது குறிப்பிடத் தக்கது.

நிலவுடைமை கோலோச்சிய காலகட்டத்தில் வாழ்ந்த வள்ளலார், அதன் தாக்கத்திலிருந்து விடுபட்டு இன்று பேசப்படுகின்ற புரட்சிகரமான கருத்துக்களைத் தன் மனம், மொழி, வாழ்வு ஆகியவற்றின் மூலம் வெளிப்படுத்தியது பெரிதும் வியக்கத்தக்கது. மதப்பற்று, சாதிய ஏற்றத்தாழ்வு, மூடநம்பிக்கை போன்றவை மண்டிக் கிடந்த அவரது காலகட்டத்தில், அவரது கருத்துக்கள் மிகப்பெரும் அதிர்வுகளை உண்டாக்கும் என்பதறிந்துதான், அவரது முற்போக்குக் கருத்துக்கள் அடங்கிய திருஅருட்பா ஆறாம் திருமுறை அவர் "மறைந்த’ பிறகு, 11 ஆண்டுகள் கழிந்தபின் 1885-ஆம் ஆண்டுதான் முதன்முதலாக அச்சிடப்பட்டது.

ஆறாம் திருமுறை அச்சிட்டதன் பின்னணியில் உள்ள மிகப் பெரும் அரசியலை வள்ளலார் ஆய்வாளர்கள் சரவணன், தேவேந்திரன் ஆகியோர் விரிவாகப் பதிவு செய்துள்ளனர்.

வள்ளலாரின் கருத்துக்கள் ஏதோ 200 ஆண்டுகளுக்கு முன்னால் தெரிவிக்கப் பட்டவை என நாம் எளிதில் கடந்து சென்றுவிட முடியாது. அவரது கருத்துக்கள் இன்றளவும் பொருத்தப்பாடு மிக்கவையாக விளங்குகின்றன. ஆர் எஸ் எஸ் உயர்த்திப் பிடிக்கிற, செயல்படுத்தத் துடிக்கிற சனாதனக் கோட்பாடு, உருவ வழிபாடு, ஆரிய மேலாண்மை, சாதி - மதப்பாகுபாடு, மகளிர் சமத்துவஉரிமை மறுப்பு, மேலுலகக் கனவு, சமஸ்கிருதச் சிறப்பு, சித்த மருத்துவப் புறக்கணிப்பு, வர்ணாசிரம தர்மம், வழிபாட்டுச் சடங்குகள் , நீசமொழி எனத் தமிழை இழிவுபடுத்தும் ஆணவம், அடித்தள மக்களை ஒதுக்கி வைத்தல் / வேதங்கள் / ஆகமங்களின் புனிதம் ஆகியவற்றின் மீது மரண அடியைக் கொடுத்தவர் வள்ளலார். எனவே அவரது கருத்துக்களைக் கொண்டாட வேண்டியது தமிழர்களின் முகாமையான கடமையாகும்.

அதற்காக அவரைத் தெய்வமாக வழிபடுவதைத் தவிர்த்து, அவரது இலட்சியக் கனவுகளை நனவாக்கப் பாடாற்றுவதே அவருக்குத் தமிழ்ச் சமூகம் செய்யும் உண்மையான அஞ்சலியாக இருக்கும்.

"கருணை இலா ஆட்சி கடுகி ஒழிக!

அருள் நயந்த நன்மார்க்கர் ஆள்க!’

துணை நூல் பட்டியல்

திருவருட்பா (1 முதல் 6 திருமுறைகளும் உரைநடையும்)
ச.மு.கந்தசாமி பிள்ளை பதிப்பு மறு அச்சு - 2014
அருட்பா பதிப்பகம், சென்னை.

வள்ளலார் இராமலிங்க அடிகள் வரலாறு
முனைவர் அருள்திரு ஊரன் அடிகளார்
வர்த்தமானன் பதிப்பகம், சென்னை.

சிதம்பரம் இராமலிங்கம் எனும் வள்ளலார் : பன்முக வாசிப்பு.
வி.தேவேந்திரன், நெய்தல் பதிப்பகம், சென்னை.

திருஅருட்பா ( உரைநடைப் பகுதி ) பத்தாம் பதிப்பு
திருஅருட்பிரகாச வள்ளலார் தெய்வ நிலையம், வடலூர்.

கண்மூடி வழக்கம் எலாம்
மண்மூடிப் போக ....!
இரண்டாம் பதிப்பு, ராஜ் கௌதமன் என் சி பி எச், சென்னை.

வள்ளலார் கைநூல், வி.தேவேந்திரன்
நெய்தல் பதிப்பகம், சென்னை.

திருவருட்பாத்தேன், தொகுதி- 3
வ.த.இராமசுப்பிரமணியன், திருமகள் நிலையம், சென்னை.

- கண.குறிஞ்சி