கரூர் மாவட்டம் நெரூர் என்ற இடத்தில் சதாசிவ பிரம்மேந்திராள் கோவில் அமைந்துள்ளது. ஒரு பிராமணர் அங்கே ஜீவசமாதி ஆனதாகத் தெரிவிக்கப்பட்டுப் பல ஆயிரம் பிராமணர்கள் ஆண்டுதோறும் அங்கே திருவிழாவுக்கு வருவதை வழக்கமாக வைத்திருந்தார்கள்.

அந்தத் திருவிழா பற்றி விசாரித்த பொழுது ஒவ்வொரு ஆண்டும் திருவிழாவின் இறுதி நாளில் பார்ப்பனர்கள் சாப்பிட்டுப் போட்ட எச்சில் இலையில் பக்தர்கள் அனைவரும் படுத்து உருள வேண்டும் அப்போதுதான் சதாசிவ பிரம்மேந்திரனுடைய அருள் கிடைக்கும் என நம்ப வைக்கப்பட்டுத் தமிழர்கள் எல்லாம் பன்றிகளைப் போல, நாய்களைப் போல எச்சில் இலையில் உருண்டு கொண்டிருந்தார்கள்

Madurai High Courtஅதைக் கண்டு மனம் பொறுக்காத நான் எனது நண்பரான தலித் பாண்டியன் என்பவரை மனுதாரராக வைத்து எனது நண்பர் மதுரை வழக்கறிஞர் நாராயணன் மூலமாக மதுரை உயர்நீதிமன்ற இரண்டு நீதிபதிகள் அமர்வில் ஒரு நீதிப்பேரரணை மனு தாக்கல் செய்தேன் அந்த வழக்கு எண் 7068 / 2015 ஆகும்.

இந்த வழக்கை விசாரித்த நீதி அரசர்கள் எஸ் மணிக்குமார் மற்றும் எஸ் வேலுமணி ஆகியோர் எங்கள் கோரிக்கையை ஏற்றுச் சதாசிவ பிரம்மேந்திரன் கோவிலில் நடைபெற்று வந்த எச்சில் இலையில் உருளும் சடங்கைத் தடை செய்து உத்தரவு பிறப்பித்தனர்.

எச்சில் இலையில் உருளும் பிரச்சனையில் முதன் முதலில் இரு நீதிபதிகள் தடை உத்தரவு பிறப்பித்த பொழுது, எச்சில் இலையில் மனிதர்களை உருள வைப்பது அரசியல் அமைப்பு அறநெறிக்கு முரணானது மற்றும் பொது சுகாதாரத்துக்குக் கேடு விளைவிப்பது என்று கூறி அந்த நிகழ்வைத் தடை செய்தனர். பின்பு ஜி ஆர் சுவாமிநாதன் எனும் நீதிபதி, தனது உத்தரவில் ஓர் இந்து, தான் விருப்பப்படி தனது நம்பிக்கையின்படி என்ன சடங்கு வேண்டுமானாலும் செய்யலாம். அதை யாரும் தடுக்க முடியாது என்று உத்தரவிட்டார். அதற்கு எதிராக மறுபடியும் இருநீதிபதிகள் அமர்வில் விசாரணை நடந்த பொழுது, அரசியல் சட்டம் ஒரு நபருக்குச் சில மத சுதந்திரங்களை வழங்கி உள்ளது. ஆனால் அந்த மத சுதந்திர நடவடிக்கைகளானது அரசியல் அறநெறிக்கு உட்பட்டதாகவும், பொது சுகாதாரத்துக்கு கேடு இல்லாததாகவும் இருக்க வேண்டும். ஆனால், இந்த நிகழ்வானது அரசியல் சட்ட அறநெறிக்கு மாறானதாகவும், பொது சுகாதாரத்துக்குக் கேடானாதாகவும் உள்ளது என்பதால், இந்த நிகழ்வு தடை செய்யப்படுகிறது. மேலும் இரண்டு நீதிபதிகள் தடை செய்த ஒரு பிரச்சனையைத் தனிநீதிபதி ஒருவர் மாற்றித் தீர்ப்பு எழுதுவது நீதித்துறையில் ஒழுங்கின்மையை காட்டுகிறது எனவே இதனை அனுமதிக்க முடியாது என்று கூறித்தான் தற்பொழுது மீண்டும் எச்சில் இலையில் உருள்வதை நிரந்தரமாகத் தடை செய்து உத்தரவு பிறப்பித்துள்ளனர் இது தொடர்பான கர்நாடக உயர்நீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்பு உச்ச நீதிமன்றத்தில் இதே போன்ற ஒரு பிரச்சனையில் நிலுவையில் உள்ளது. எனவே இதே போன்ற பிரச்சனையில் நிலுவையில் இருக்கும் வழக்கில் உச்ச நீதிமன்றம் வேறு வித்தியாசமான தீர்ப்பு பிறப்பிக்கும் வரை இந்தத் தீர்ப்பு அமலில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன் காரணமாக மேற்படி சடங்கு சில ஆண்டுகள் நிறுத்தப்பட்டு இருந்தது. ஆனால், 2024 ஆம் ஆண்டு மேற்படி கோவில் நிர்வாகமும், நவீன் குமார் என்பவரும் சேர்ந்து மதுரை உயர்நீதிமன்றத்தில் தனி நீதிபதி ஜி.ஆர் சுவாமிநாதன் முன்பாக ஒரு வழக்கைத் தாக்கல் செய்தனர். எச்சில் இலையில் உருளுவது இந்து பக்தர்களின் விருப்பம் என்றும், அது மதசுதந்திரம் என்றும், அதனை யாரும் தடை செய்யக்கூடாது என்றும் கோரி மனு செய்தனர் இந்த வழக்கை விசாரித்த நீதிஅரசர் தீர்ப்பு பிறப்பிப்பதை 30 நாள்கள் ஒத்திவைத்துச் சம்பந்தப்பட்ட எச்சில் இலையில் உருளும் சடங்கு நடக்கும் ஒரு நாளுக்கு முன்பாக இரவில் எச்சில் இலையில் பக்தர்கள் உருள அனுமதி அளித்து உத்தரவு பிறப்பித்தார. அதற்கான உத்தரவு எண் 10496/2024 ஆகும்.

மேற்படி உத்தரவு குறித்து அறிந்தவுடன் மேற்படி வழக்குக்கு எதிராக மேல்முறையீடு செய்ய வேண்டும் என்று நான் பலருக்கும் வேண்டுகோள் விடுத்தேன்

அதன் தொடர்ச்சியாக கரூர் மாவட்ட ஆட்சித் தலைவர் உள்ளிட்ட அதிகாரிகள், மேற்கண்ட ஜி.ஆர். சுவாமிநாதன் உத்தரவுக்கு எதிராக இரு நீதிபதிகள் கொண்ட அமர்வில் மதுரை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு தாக்கல் செய்தனர்.

அந்த வழக்கில் தமிழ்நாட்டில் தமிழ்நாடு அரசு மூலமாக அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர் சங்கத்தைச் சேர்ந்த அரங்கநாதன் மற்றும் நான் இடையிட்டு மனுக்களை தாக்கல் செய்து அரசுக்கு ஆதரவாக ஆஜரானோம்.

மேற்கண்ட மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த நீதி அரசர்கள் சுரேஷ்குமார் மற்றும் அருள்முருகன் ஆகியோர் தங்களது தீர்ப்பில் ஏற்கனவே ஒரு பிரச்சனையில் இரண்டு நீதிபதிகளைக் கொண்ட அமர்வு ஒரு தீர்ப்பு பிறப்பித்திருக்கும்போது, அதே பிரச்சனை குறித்து தனி நீதிபதி மாறாகத் தீர்ப்பு எழுதுவது நீதித்துறையில் ஒழுங்கின்மையைக் குறிக்கும் என்று குறிப்பிட்டு மேல்முறையீட்டு மனுவை அனுமதித்து ஜி ஆர் சாமிநாதன் அவர்களின் உத்தரவை இரத்து செய்து தீர்ப்பளித்தனர்.

மேற்கண்ட தீர்ப்பில் ஏற்கனவே கர்நாடக மாநிலம் குக்கே சுப்பிரமணியம் கோவில் என்ற கோவிலில் நடைபெற்ற இதே போன்ற எச்சில் இலையில் உருளும் நடவடிக்கையைத் தடை செய்து கர்நாடக உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து இருப்பதையும் அந்த உத்தரவை இந்திய உச்ச நீதிமன்றம் ஏற்றுக்கொண்டு உள்ளதையும் குறிப்பிட்டு, இந்தப் பிரச்சனையில்

உச்ச நீதிமன்றம் மாறாக ஏதும் உத்தரவு பிறப்பிக்கும் வரை இந்தத் தீர்ப்பு செல்லும் என்றும், நெரூர் சதாசிவ பிரம்மேந்திரன் கோவிலில் எச்சில் இலையில் உருளும் சடங்கு அதுவரை தடை செய்யப்பட வேண்டும் என்றும் தெளிவான உத்தரவைப் பிறப்பித்தனர். இதற்கிடையில் உச்ச நீதிமன்ற தடை இருக்கும்போது, மதுரை உயர்நீதிமன்றத்தில் இரண்டு நீதிபதிகளின் தடை இருக்கும்போது, அவற்றை எல்லாம் மீறித் தனி நீதிபதியாக ஜி.ஆர். சுவாமிநாதன் பிராமணர்கள் சாப்பிட்டு போட்ட எச்சில் இலையில் தமிழர்கள் உருளலாம் என்று தீர்ப்பளித்தது குறித்துக் கடுமையான கண்டனங்களைத் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, தந்தை பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கோவை இராமகிருஷ்ணன் திராவிட இயக்கத் தமிழர் பேரவைத் தலைவர் சுப வீரபாண்டியன் உள்ளிட்ட பலரும் கடுமையாகக் கண்டித்து இந்தியத் தலைமை நீதிபதிக்குக் கோரிக்கை மனுக்களை அனுப்பினர். இவ்வாறாக கரூரில் வாழும் வாய்ப்பு , எனக்கு இருந்ததால், தமிழர்களின் தன்மானம் சுய கெளரவம் பாதிக்கப்படாத வகையிலும் தமிழர்கள் பிராமணர்களால் ஏமாற்றப்படாத வகையிலும் நீதிமன்றத்தைப் பயன்படுத்தி ஒரு நன்மை கிடைக்க நான் பாடுபட்டேன்.

- தமிழ் இராசேந்திரன்

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.