சரசுவதி பூசை என்பது ஓர் அர்த்தமற்ற பூசை. கல்வியையும் தொழிலையும் ஒரு பெண் தெய்வமாக்கி -  அதற்குச் சரசுவதி என்று பெயர் கொடுத்து, அதைப் பூசை செய்தால் கல்வி வரும், வித்தை வரும் என்றும் சொல்லி, நம்மைப் பார்ப்பனர்கள் ஏமாற்றி, கல்வி கற்கச் சொந்த முயற்சி இல்லாமல் சாமியை நம்பிக் கொண்டு இருக்கும்படிச் செய்துவிட்டு, நாம் அந்தச் சாமி பூசையின் பேரால் கொடுக்கும் பணத்தைக் கொண்டே அவர்கள் படித்துப் பெரிய படிப்பாளி யாகிக் கொண்டு நம்மைப் படிப்பு வர முடியா ‘மக்குகள்’ என்று சொல்லிக் கொண்டு இருக் கிறார்கள்.

முதலாவது, சரசுவதி என்னும் சாமியின் சொந்த யோக்கியதையைக் கவனித்தால், அது பார்ப்பனர்கள் புராணக் கதைகளின்படியே மிக்க ஆபாசமானதாகும். அதாவது, சரசுவதி என்கிற ஒரு பெண் பிரம்மனுடைய சரீரத்தில் இருந்து உண்டாக்கப்பட்ட பிறகு அழகைக் கண்டு அந்த பிரம்மனாலேயே மோகிக்கப்பட்டு அவளைப் புணர அழைக்கையில், அவள் பிரம்மனைத் தகப்பன் என்று கருதி அதற்கு உடன்படாமல் பெண்மான் உருவெடுத்து ஓடவும், பிரம்மன் தானும் ஓர் ஆண்மான் உருவெடுத்து அவளைப் பின் தொடர்ந்து ஓடவும், சிவன் வேடன் உருவெடுத்து ஆண்மானைக் கொல்லவும், பிறகு சரசுவதி அழுது சிவபிரானால் மறுபடியும் உயிர்ப்பிக்கச் செய்து பிரம்மனுக்கு மனைவியாகச் சம்மதித்ததாக சரசுவதி உற்பவக் கதை சொல்கிறது. அதாவது, தன்னைப் பெற்றெடுத்த தன் தகப்பனையே மணந்து கொண்டவள் சரசுவதி என்று ஆகிறது.

மற்றொரு விதத்தில் பிரம்மாவுக்குப் பேத்தி என்று சொல்லப்படுகிறது. அதாவது, பிரம்மா ஒரு காலத்தில் ஊர்வசியின்மீது ஆசைப்பட்டபோது வெளியான இந்திரியத்தை ஒரு குடத்தில் விட்டு வைக்க,  அக்குடத்திலிருந்து அகத்தியன் வெளியாக, அவ்வகத்தியன் சரசுவதியைப் பெற்றான் என்று சொல்லப்படுகின்றது. அதனால் பிரம்மாவுக்கு சரசுவதி மகன் வயிற்றுப் பேத்தி ஆகிறாள். எனவே, சரசுவதியின் பிறப்பும் வளர்ப்பும் நடவடிக்கையும் மேற்படி பார்ப்பனப் புராணப்படி மெத்த ஆபாசமும் ஒழுக்க ஈனமுமானதாகும்.

நிற்க, இந்த யோக்கியதையுடைய அம்மாளை எதற்காக மக்கள் பூசை செய்கிறார்கள் என்பது இதைவிட மிகவும்  வேடிக்கையான விஷயமாகும். அதாவது, சரசுவதி வித்தைக்கு அதிபதியான தெய்வ மாதலால் வித்தையின் பயன் தொழிலென்றும், தொழிலுக்கு ஆதாரமானவை ஆயுதங்கள் என்றும் கருதிக் கொண்டு - சரசுவதி பூசை என்றும் ஆயுத பூசை என்றும் ஒரு நாளைக் குறித்துக் கொண்டு, அந்த நாளை விடுமுறையாக்கி, புத்தகங்களையும் ஆயுங்களையும் வைத்துப் பூசை செய்கிறார்கள். இந்தப் பூசையில் அரசன் தனது ஆயுதங்களையும், வியாபாரி தனது கணக்குப் புத்தகங்களையும் தராசு, படிக்கல், அளவு, மரக்கால், படி, உழக்கு, பெட்டி முதலியவைகளையும், தொழிலாளிகள் தங்கள் தொழில் ஆயுதங்களையும், இயந்திரக்காரர்கள் இயந்திரங்களையும், மாணாக்கர்கள் புத்தகங்களை யும், குழந்தைகள் பொம்மைகளையும், தாசிகள் தங்கள் ரவிக்கை சேலைகளையும், நகைகளையும், வாத்தியக்காரர்கள் தங்கள் வாத்தியக் கருவிகளையும் மற்றும் இதுபோலவே ஒவ்வொருவரும் அவரவர்கள் இலட்சியத்திற்கு ஆதாரமாக வைத்திருக்கும் சாமான்களை வைத்துப் பூசை செய்கிறார்கள்.

இதனால் அந்தத் தினத்தில் தொழில் நின்று அதனால் வரும்படிகளும் போய், பூசை, ஓய்வு முதலிய ஆடம்பரங்களுக்காகத் தங்கள் கையில் இருக்கும் பணத்திலும் ஒரு பாகத்தைச் செலவு செய்தும், போதாவிட்டால் கடன் வாங்கியும் செலவு செய்வதை விட யாதொரு நன்மையும் ஏற்படுவதாகச் சொல்லுவதற்கே இல்லாமல் இருக்கின்றது. ஆயுதத்தை வைத்துப் பூசை செய்துவந்த - வருகின்ற அரசர்கள் எல்லாம் இன்றைய தினம் நம் நாட்டில் ஆயுதத்தை வைத்துப் பூசை செய்யாத வெள்ளைக்கார அரசனுடைய துப்பாக்கிமுனையில் மண்டி போட்டு சலாம் செய்து கொண்டே ‘இஸ்பேட்  ராசாக்களாக’ இருந்து வந்தார்களே ஒழிய, ஒரு அரசனாவது சரசுவதி பூசை, ஆயுத பூசை ஆகிய பூசையின் பலத்தால் தன் காலில் தான் தைரியமாக நின்றவனாகக் காணோம்.

சரசுவதி பூசை செய்யும் ஒரு வியாபாரியாவது சரசுவதிக்குப் பயந்து பொய்க் கணக்கு எழுதாமலோ, தப்பு நிறை நிறுக்காமலோ, குறை அளவு அளக்காமலோ இருக்கிறார்களா என்று சொல்ல முடியாது. அதுபோலவே, கைத் தொழிலாளிகளும் தங்கள் ஆயுதங்களிடத்தில் வெகு பக்தியாய் அவைகளைக் கழுவி, சந்தனம், குங்குமம், பொட்டு முதலியவைகள் போட்டு விழுந்து கும்பிடுவார்களே தவிர - ஒருவராவது நாணயமாய் நடந்து கொள் கின்றார்கள் என்றாவது அல்லது அவர்களுக்குத் தாராளமாய்த் தொழில் கிடைக்கின்றது என்றாவது சொல்லு வதற்கு இல்லாமலே இருக்கின்றார்கள். அதைப்போலவே, புத்தகங்களை யும், பென்சிலையும், கிழிந்த காகிதக் குப்பைகளையும் சந்தனப் பொட்டு போட்டுப் பூசை செய்கின்றார்களே அல்லாமல் - காலோ கையோ பட்டுவிட்டால் தொட்டுக் கண்ணில் ஒத்திக் கும்பிடுகிறார்களே அல்லாமல் - நமது நாட்டில் படித்த மக்கள் 100க்கு 5 பேருக்குள்ளாகவே இருந்து வருகின்றார்கள்.

இவ்வளவு ஆயுத பூசை செய்தும், சரசுவதி பூசை செய்தும், இவ்வளவு விரதங்கள் இருந்தும் நமது அரசர்கள்அடிமைகளாக இருக்கின்றார்கள்; நமது வியாபாரிகள் நஷ்டமடைந்து கொண்டு வரு கின்றார்கள். நமது தொழிலாளர்கள் தொழிலில்லாமல் பிழைப்பைக் கருதி வேறு நாட்டிற்குக் குடி போகின்றார்கள்; நமது மக்கள் 100க்கு 5 பேரே படித்திருக்கின்றார்கள். சரசுவதியின் சாதியைச் சேர்ந்த பெண்கள் ஆயிரத்துக்கு 9 பேரே படித்திருக் கிறார்கள். இதன் காரணம் என்ன?

நாம் செய்யும் பூசைகளை சரசுவதி அங்கீகரிக்க வில்லையா? அல்லது, சரசுவதி தெய்வத்திற்கும் இந்த விஷயங்களுக்கும் ஒன்றும் சம்பந்தமில்லையா? அல்லது, சரசுவதி என்கின்ற ஒரு தெய்வமே பொய்க் கற்பனையா? என்பவையாகிய இம் மூன்றில் ஒரு காரணமாகத்தான் இருக்க வேண்டும்.

என்னைப் பொறுத்த வரையில் இவைகள் சுத்த முட்டாள்தனமான கொள்கைகள் என்பதே எனது அபிப்பிராயம். வெள்ளைக்காரத் தேசத்தில் சரசுவதி என்கின்ற பேச்சோ கல்வித்  தெய்வம் என்கின்ற எண்ணமோ சுத்தமாய்க் கிடையாது.

அன்றியும், நாம் காகிதத்தையும் எழுத்தையும் சரசுவதியாய்க் கருதித் தொட்டுக் கண்ணில் ஒத்திக் கொண்டும், நமக்குக் கல்வி இல்லை. ஆனால், வெள்ளைக்காரன் மல உபாதைக்குப் போனால், ‘சரசுவதியை’க் கொண்டே மலம் துடைத்தும் - அவர்களின் 100க்கு 100 ஆண்களும் 100க்கு 60 பெண்களும் படித்திருக்கிறார்கள். உண்மையிலேயே சரசுவதி என்ற தெய்வம் இருக்குமானால் பூசை செய்பவர்களைத் தற்குறிகளாகவும், தன்னைக் கொண்டு மலம் துடைப்பவர்களை அபார சக்தி வாய்ந்த அறிவாளிகளாகவும் கல்வி மான்களாகவும் செய்யுமா என்பதைத் தயவுசெய்து யோசித்துப் பாருங்கள்.

உண்மையிலே யுத்த ஆயுதம், கைத்தொழில் ஆயுதம், வியாபார ஆயுதம் ஆகியவைகள் சரசுவதி என்னும் தெய்வ அம்சமாய் இருக்குமானால் - அதைப் பூசை செய்யும் இந்த நாடு அடிமைப்பட்டும், தொழிலற்றும், வியாபாரமற்றும் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கவும் - சரசுவதியைக் கனவிலும் கருதாது, சரசுவதி பூசை செய்கின்றவர்களைப் பார்த்து முட்டாள்கள், அறிவிலிகள், காட்டுமிராண்டிகள் என்று சொல்லிக் கொண்டிருக்கும் நாடு சுதந்திரத்துடனும், வியாபாரிகள் அரசாட்சியுடனும் - தொழிலாளர் ஆதிக்கத்துடனும் இருக்க முடியுமா என்பதையும் யோசித்துப் பாருங்கள்! இந்தப் பூசையின் மூலம் நமது முட்டாள்தனம் எவ்வளவு வெளியாகின்றது, பாருங்கள்!

இராசாக்கள் கொலுவிருப்பது, பொம்மைகள் கொலுவிருப்பது, சாமிகள் கொலுவிருப்பது, இதற்கான ஜனங்கள் பணம் செலவு செய்வது, அறிவு செலவு செய்வது, பத்து இலட்சக்கணக்கான ரூபாவுக்களுக்குப் பொம்மைகள், சந்தனம், குங்குமம், கற்பூரம், சாம்பிராணி, கடலை, பொரி, சுண்டல், வடை, மேளவாத்தியம், வாழைக் கம்பம், பார்ப்பனர்களுக்குத் தட்சணை, சமாராதனை, ஊர்விட்டு ஊர் போக இரயில் சார்ஜ் - ஆகிய இவைகள் செலவாகின்றன என்பதை எண்ணிப் பாருங்கள்.

இவைகள் எல்லாம் யார் வீட்டுப் பணம்? தேசத்தின் செல்வமல்லவா என்றுதான் கேட்கின்றேன். ஒரு வருடத்தில் இந்தப் பூசையில் இந்த நாட்டில் செலவாகும் பணமும் நேரமும் கோடி ரூபா பெறுமானது என்று கணக்குப் பார்த்தால், மற்ற பண்டிகை, உற்சவம், புண்ணிய தினம், அர்த்தமற்ற சடங்கு என்பவைகளின் மூலம் செலவாகும் தொகை சுலபத்தில் விளங்கிவிடும். இதை எந்தப் பொருளாதார இந்தியத் தேசிய நிபுணர்களும் கணக்குப் பார்ப்பதே இல்லை.

(ஈரோடு உண்மை நாடுவோர் சங்கத்தில் பெரியார் சொற்பொழிவு, ‘குடிஅரசு’ 20.10.1929)

Comments

2 comments

2
Rajan
Periyar in 1929,asked the people to calculate the unnecessary expenses incurred by them on this kind of festivals .The ASSOCHEM calculated the expenses that will be incurred by the people for Ayutha Pooja alone at Rs25000 crores.Instead of advising the people not to celebrate this festival,it has advised them to buy the materials online.Thereby,the merchant establishments selling pooja materials can incur additional loss of business besides declaring holiday on this day.
THULASIRAMAN
கீற்று பதிவுகள் அனைத்தும் அருமை

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.