(1) பெண்ணிலைவாதம் (Feminism) என்பது முதலாளியம், சோசலிசம், தாராளவாதம் போன்ற அரசியல் கருத்தியல் கடந்தது எனவும், அது பால்நிலையை (Gender Based) அ।டிப்படையாகக் கொண்டது எனவும், ஆணாதிக்கத்தை (Patriarchy) ஒழிப்பதை இலக்காகக் கொண்டது எனவும் கருதப்படுகிறது. மார்க்சியம் வர்க்கப் பகுப்பாய்வை (Class Analysis) அடிப்படையாகக் கொண்டு முதலாளியத்தை அழிப்பதை (Anti Capitalist) இலக்காகக் கொண்டது எனவும் கருதப்படுகிறது.

வரலாற்றில் முதலாளியத்திற்கு முன்னும் பின்னும் ஆணாதிக்கம் இருந்தது - இருக்கும் என பெண்ணிலைவாதம் கருதுகிறது. உழைப்பை மதிப்பிடுவதில் (Valuing Labour), சமூக இனப்பெருக்க, மறுஉற்பத்தியில் (Reproduction) ஆண்-பெண் அசமத்துவத்தைக் கடைப்பிடிக்கும் (Inequality) முதலாளியத்தையும் ஆணாதிக்கத்தையும் பிரிக்க முடியாது என வாதிடும் மார்க்சியம், முதலாளித்துவத்தை எதிர்க்கும் போராட்டத்தில் பெண்களின் விடுதலையும் இணைந்தது எனக் கருதுகிறது. பெண்நிலைவாதத்திற்கும் மார்க்சியத்திற்கும் இடையிலான முரண் என்பது பால்நிலை அடிப்படைக்கும் வர்க்க அடிப்படைக்கும் இடையிலான உறவாகப் பரிமாணம் பெறுகிறது.

இதனின்று ஆணாதிக்க எதிர்ப்பு, வர்க்கப் போராட்டம் என இரண்டையும் இணைக்கும் வகையில் மார்க்சியப் பெண்ணிலைவாதம் (Marxist Feminism) தோன்றுகிறது.

Rosa Luxemburg(2) பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் மேற்குலகிலும் அமெரிக்காவிலும் தோன்றிய முதல் அலை (First Wave) பெண்ணிலைவாதம், முதன்மையாக பெண்ணின் வாக்களிக்கும் உரிமையை வென்றதன் மூலம் உருவாகிறது.

இரண்டாவது அலை (Second Wave) பெண்ணிலைவாதம் தோராயமாக 1960களில் இருந்து 1990கள் வரை ஊதிய சமத்துவம், இனப்பெருக்க உரிமைகள், பெண் பாலியல் மற்றும் குடும்ப வன்முறை போன்ற பல சிக்கல்களை உள்ளடக்கியது. பெண்ணிலைவாத முதல் அலையைப் போலவே இந்த இலக்குகளில் பலவும் சட்டம் மற்றும் முக்கியமான நீதிமன்றத் தீர்ப்புகள் மூலம் அடையப்பட்டன.

மூன்றாவது அலை (Third Wave) பெண்ணிலைவாதம் 1990 களின் நடுப்பகுதியில் இருந்து வெளிப்பட்டது. மூன்றாவது அலையினர் பெண்மையை மறுவரையறை செய்ய முயன்றனர். இரண்டாவது அலையிலிருந்து முற்றிலும் வேறுபட்டு இனம், வர்க்கம், பாலினம், பிற தனிப்பட்ட குணாதிசயங்கள் எப்படி ஒன்றுடன் ஒன்று வெட்டுகின்றன என்பதை இது விளக்க முயன்றது.

நான்காவது அலை (Fourth Wave) பெண்ணிலைவாதம் தகவல் தொழில்நுட்பம், விஞ்ஞானம் உடலின் மீது ஏற்படுத்திய மாற்றங்களை உள்கொண்டது. இக்கட்டத்தில் பெண்ணியம் என்பது மேலாதிக்க வெள்ளைப் பெண்ணியம், ஆண் மேலாதிக்கம், பால்மாறுதல் போன்றவை குறித்த விமர்சனமாக உருவாகிறது. மாற்றுத்திறனாளிகள், நிறமுள்ளவர்கள், பாலினம் அல்லாதவர்கள், குறைபாடுகள் உள்ளவர்கள் என அனைத்து ஒதுக்கப்பட்ட குழுக்களையும் உள்ளடக்கி ஆதரிக்கவேண்டும் என இந்தப் பெண்ணிலைவாதம் கோருகிறது.

பாலியல் வல்லுறவு, பாலியல் துஷ்பிரயோகங்கள் , விருப்பமில்லாத கர்ப்பம், பெண்களின் உடல் மீதான கட்டுப்பாட்டின்மை போன்ற உண்மைகளால் பெண்ணிலைவாகதிகள் இப்போது உந்துதல் பெறுகின்றனர்.

பெண்களின் வறுமை, பாதுகாப்பான சிறந்த ஊதியம் பெறும் வேலைகளில் இருந்து விலக்கப்படுதல், திருமணம் அல்லது தாய்மையின் மூலம் ஏற்படும் பாதிப்புகள், அவர்களின் கல்வியறிவின்மை ஆகியவற்றில் கவனம் செலுத்துகின்றனர். பெண்களுக்குச் சட்ட உரிமைகள் இல்லாமை, அவர்களின் குழந்தைகளின் மீதான உரிமையை இழப்பது, கட்டாய உழைப்பு, மருத்துவ வளங்களும் நில உரிமைகளும் இல்லாமை, நாடுகளின் மீதான ஆக்கிரமிப்பு, போர், பஞ்சம் போன்ற சூழ்நிலைகளில் பெண்களுக்கு ஏற்படும் பாதிப்பு போன்றவற்றின் கொடுமைகளை அவர்கள் உணர்கிறார்கள்.

பத்தொன்பதாம் இருபதாம் நூற்றாண்டுகள் தேசியவாதத்தின் ஆதிக்கத்தினால் பெண்களின் நிலை, சுதந்திரம் என்பது தேசிய முன்னேற்றம் பற்றிய விவாதங்களுடன் பிணைக்கப்பட்டன. இக்காரணங்களால் பெண்ணிலைவாதிகள் தாராளவாதம், சுயம், சமூக ஒப்பந்தம், ஜனநாயகக் குடியுரிமை, அரசு-தேசம் அத்துடன் சோசலிச புரட்சிக் கருத்துக்கள் ஆகியவற்றை விமர்சனத்துக்கு உட்படுத்துகின்றனர்.

இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் உயர்கல்வி விரிவடைந்ததால் பெண்ணியம் என்பது உலகின் கல்விப் புலங்களில் ஒரு நிறுவப்பட்ட பார்வையாக மாறியுள்ளது. இருபத்தியோரம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் இது 5-6 (Mee-Too) இயக்கமாகவும் பரிமாணம் பெறறது.

(3) ஐரோப்பிய மையப் பெண்ணிலைவாதம் (Euro Centic Feminism) என்பது முதன்மையாக ஐரோப்பிய அமெரிக்கப் பெண்களின் அனுபவங்கள், முன்னோக்குகள், கலாச்சாரச் சூழல்களில் வேரூன்றிய பெண்ணிலைவாசதச் சிந்தனை. இவர்தம் சிந்தனை உலகளாவிய தெற்கில் நிகழும் பெண்களின் மாறுபட்ட போராட்டங்களைப் புறக்கணிக்கிறது. இவர்களது சிந்தனை காலனித்துவம், இன-நிறவாதம், ஏகாதிபத்தியம் போன்ற ஒடுக்குமுறைகளை எதிர்க்கத் தவறிவிட்டது எனும் விமர்சனம் இருக்கிறது. மேற்கத்தியக் கட்டமைப்புகளுக்குள் வேலையிட சமத்துவம், இனப்பெருக்க உரிமைகள் போன்ற பிரச்சினைகளை மட்டுமே இவர்களது சிந்தனை வலியுறுத்துகிறது.

இதற்கு மாற்றாகத் தங்களுக்காகப் பேசுவதற்கு அதிகாரம் அளிப்பதை விட, குரலற்ற பெண்களுக்காகப் பேசுவது என்பதுடன், பின் காலனித்துவ யதார்த்தங்களை மையம் கொண்டதாகப் பின் காலனித்துவப் பெண்ணிலைவாதம் (Post Colonial Feminism) இருக்கிறது. காலனித்துவ நாடுகளில் பெண்களின் அனுபவங்களை மையப்படுத்துவதன் மூலமும், பெண்களின் வாழ்க்கையில் காலனித்துவத்தின் தாக்கத்தை விசாரிப்பதன் மூலமும் மேற்கத்தியப் பெண்ணிலைவாதத்தை பின்காலனியப் பெண்ணிலைவாதம் விமர்சிக்கிறது.

இனம், வர்க்கம், காலனித்துவம் போன்ற பிற காரணிகளுடன் பாலின ஒடுக்குமுறைக்கு எதிரான உணர்வை இது வலியுறுத்துகிறது. காலனித்துவச் சக்திகளின் ஆதிக்கம் தேசிய ஆணாதிக்கம் ஆகிய இரண்டிலிருந்தும் விடுதலை அடைவதை இச்சிந்தனை முன்னிலைப்படுத்துகிறது. இதனது கோட்பாட்டு விளைவாகத் தோன்றிய மூன்றாம் உலகப் பெண்ணிலைவாதம் (Third World Feminism) மேற்கத்திய பெண்ணியத்தை விமர்சிக்கிறது. பெரும்பாலும் வெள்ளை நடுத்தர வர்க்கப் பெண்களின் அனுபவங்களை ஐரோப்பியப் பெண்ணிலைவாதம் உலகளாவியதாக்குகிறது என்கிறார்கள் இவர்கள். காலனித்துவம், ஏகாதிபத்தியம், இனவெறியின் தாக்கத்தை ஐரோப்பியப் பெண்ணியர்கள் புறக்கணிக்கிறார்கள் என மூன்றாம் உலகப் பெண்ணிலைவாதம் வாதிடுகிறது.

பெண்களின் ஒடுக்குமுறை பாலினம், இனம், வர்க்கம், தேசியம் போன்ற ஒன்றோடொன்று இணைக்கப்பட்டப் பல காரணிகளால் வடிவமைக்கப்பட்டுள்ளது என்பதை இது வலியுறுத்துகிறது.

விளிம்புநிலைப் பெண்ணிலைவாதம் (Subaltern Feminism) ஒதுக்கப்படும் நிறப் பிரக்ஞை கொண்ட பெண்கள், தொழிலாளி வர்க்கம், காலனித்துவம், சாதியமைப்பு போன்ற விளிம்புநிலைப் பெண்களின் அனுபவங்களை மையப்படுத்துவதன் மூலம் நிலவும் பிரதானப் பெண்ணிலைவாத சிந்தனைக்கு சவால் விடுக்கிறது. காலனித்துவம், இனவாதம், வர்க்கவாதம், சாதிவாதம் போன்ற அதிகார அமைப்புகளில் வேரூன்றிய குறிப்பிட்ட ஒடுக்குமுறைகளை ஆதிக்கம் செலுத்தும் பெண்ணிய விவரிப்புகள் பெரும்பாலும் எவ்வாறு விளிம்புநிலைப் பெண்களை ஒதுக்குகிறது என்பதை இவர்கள் அம்பலப்படுத்துகிறார்கள்.

இவ்வாறு படிநிலைகளில் உலகளாவி வளர்ந்து வந்திருக்கும் பெண்ணிலைவாத உணர்வு இன்று பாலின சமத்துவமின்மை பற்றிய பன்முக விழிப்புணர்வு, ஆழமான தனிப்பட்ட புரிதலுக்காகப் பாரம்பரிய நினைவை விமர்சனத்துடன் அணுகுதல், பாலியல் துன்புறுத்தல் போன்ற பிரச்சினைகளில் குறுக்கிடுதல் போன்றவற்றில் கவனம் செலுத்துகிறது. ஊதிய வித்தியாசம், இனப்பெருக்க உரிமைகள், கருப்பின, சாதி மறுப்புப் பெண்ணிலைவாதம், பாலின-விமர்சன கண்ணோட்டங்கள் போன்ற பல்வேறு பிரச்சினைகளில் ஆணாதிக்க விதிமுறைகளை இந்தப் புதிய பெண் பிரக்ஞை விமர்சனம் செய்கிறது.

இதனின்று முகிழ்க்கும் விமர்சனப் பெண்மொழி என்பது ஓர் இலக்கிய அணுகுமுறை. பெண்ணிலைவாதக் கண்ணோட்டத்தில் இது இலக்கியத்தைப் பகுப்பாய்வு செய்கிறது. பெண்களின் அனுபவங்களில் இது கவனம் செலுத்துகிறது. ஆணாதிக்க மொழியை இது நிராகரிக்கிறது. பெண் அடையாளத்தை இது தீவிரமாக ஆய்வுக்கு உட்படுத்துகிறது. பெரும்பாலும் விளிம்புநிலைக் குரல்களை பிரதிநிதித்துவப்படுத்தி புதிய வடிவங்கள் கருப்பொருள்களை இந்த நோக்கு பரிந்துரைக்கிறது. இலக்கிய வரலாற்றை மீண்டும் எழுதுவதன் மூலம் புராதனப் பெண்களை எழுத்தாளர்களாக இந்த நோக்குக் கொண்டாடுகிறது. தனித்துவமான பெண் படைப்பாற்றல் வரலாற்று ரீதியில் மொழியை ஆராய்வது ஆகிய இரண்டு பண்புகளையும் உள்ளடக்கியதாக இன்று பெண் இலக்கியமொழி உருவாகி யிருக்கிறது.

பெண்ணிலைவாதத்தில் உடல் அரசியல் (Body Poltics) என்பது உடலின் மீதான பெண்களின் கட்டுப்பாடு அதனது அர்த்தம் குறித்த சமூக அரசியல் கலாச்சார நோக்குகள் மீதான அவர்களது போராட்டங்களைக் குறிக்கிறது. இனம், வர்க்கம், பாலினம் ஆகியவற்றின் அடிப்படையில் உடல்களை அதிகாரக் கட்டமைப்புகள் எவ்வாறு ஒழுங்குபடுத்துகின்றன என்பதையும், தனிநபர்கள்-குழுக்கள் போன்றவர்கள் தங்கள் சொந்த உடல் அனுபவங்களின் மீது கட்டுப்பாட்டைக் கோர எவ்வாறு பின்வாங்குகின்றனர் என்பதையும் இது பகுப்பாய்வு செய்கிறது.

இனப்பெருக்க உரிமைகள், அழகை வரையறுத்தல், உடல் வெளிப்பாட்டை ஒழுங்குபடுத்துதல் போன்ற பிரச்சினைகளும் இதில் அடங்குகிறது.

பெண்ணிலைவாதமும் மதமும் குறித்த பிரச்சினை ஒரு சிக்கலான பெரும்பாலும் பதட்டமான உறவைக் கொண்டுள்ளன. பெண்ணிலைவாதிகள் ஒழுங்கமைக்கப்பட்ட மதத்தை ஆணாதிக்கமாகப் பார்க்கிறார்கள். கோட்பாடுகள் கட்டமைப்புகள் சடங்குகள் மூலம் ஆண் ஆதிக்கம் பெண்களின் கீழ்ப்படிதலை வலுப்படுத்துகிறது என்பதை இவர்கள் சொல்கிறார்கள்.

ஆணாதிக்கச் சமூகங்கள் அசலான மானுட நம்பிக்கைகளைச் சிதைத்துள்ளன. இது மத ஆதிக்கப் பெண்ணிலைவாதத்திற்கு (Religious Feminism) வழிவகுக்கிறது. இது நூல்களை மறுவிளக்கம் செய்து பெண் ஆன்மீகத்தைத் தழுவக் கோருகிறது. இந்த நெருக்கடிகள் பெண்களிடம் பாரம்பரிய நிறுவனங்களுக்குள் வெளியே சமத்துவத்திற்கான புதிய வெளிகளைக் கண்டடையச் செய்கிறது.

மேற்கண்ட பல்வேறு பெண்நிலைவாத நோக்குகளில் இருந்து இன்று பல்துறை - பன்முக நிலைபாட்டு ஊடறுப்புப் பெண்நிலைவாதம் (Intersectional Feminism), அடையாள அரசியல் அணுகுமுறையாக எழுந்திருக்கிறது. இது பாரம்பரியமான கல்வி சார்ந்த எல்லைகளை உடைக்கிறது. சமூகவியல் வரலாறு அறிவியல் கலை போன்ற பல்வேறு துறைகளிலிருந்து பாலினம் சமத்துவமின்மை சமூக நீதியை இந்த அணுகுமுறை முழுமையாகப் புரிந்துகொள்கிறது பாலினத்தின் பிரச்சினைகள் வாழ்க்கையின் அனைத்து பகுதிகளையும் பாதிக்கின்றன என இப்பார்வை கருதுகிறது. கூட்டு பன்முகத் தீர்வுகள், ஆய்வின் தேவை என்பதை இது அங்கீகரிக்கிறது.

பல்வேறு ஆய்வு முறைகள் அறிவு அமைப்புகளை ஒருங்கிணைப்பதன் மூலமும் இணைந்த செயல்பாட்டை வளர்ப்பதன் மூலமும் சமூக மாற்றத்திற்கான மிகவும் வலுவான கோட்பாடுகள் நடைமுறைகளை உருவாக்குவதன் மூலமும் குறுகிய ஒழுக்க முன்னோக்குகளை இப்பார்வை தகர்க்கிறது.

(4) மார்க்சிய மரபில் பெண்ணாுரிமைக்கான முதல் கோட்பாட்டு அடிப்படையை வழங்கும் நூல் பிரெடரிக் எங்கெல்சின் குடும்பம், தனிச்சொத்து, அரசு ஆகியவற்றின் தோற்றம். தனிச் சொத்துடைமையை வரலாற்றில் பெண்ணுரிமையின் வீழ்ச்சிக்கான காரணமாக அந்நூல் முன்வைத்தது. இதன் தொடர் தர்க்கமாகத் தனியுடைமைச் சமூகமான முதலாளித்துவம் வீழ்ந்து சோசலிசச் சமூக அமைப்பில் பெண் உரிமை பெற்றவளாக ஆவாள் எனக் கருதப்பட்டது. இதனை மார்க்சிய இயக்கங்களில் செயல்பட்ட பெண் புரட்சியாளர்கள் தமது செயல்பாடுகளாலும், மார்க்சிய இயக்கங்களில் ஆணாதிக்கத்தை நிராகரித்தலின் வழியாலும் மார்க்சியப் பெண்ணிலைவாதித்திற்கான கோட்பாட்டு அடிப்படைகளைத் தந்தனர்.

பாசிசத்தின் தொடக்க காலங்களில் ஒடுக்குமுறையை எதிர்கொண்ட பாட்டாளி வர்க்கத்தின் தெருச்சமர்களில் இருந்து உருவானவர்கள் கிளாரா ஜெட்கினும் ரோஸா லுக்சம்பர்க்கும். அக்டோபர் புரட்சியின் நடைமுறைகளில் இருந்து தோன்றியவர் அலக்சான்ட்ரா கொலாண்டாய். அமெரிக்க வெள்ளைநிற இனவெறிக்கு எதிரான பிளாக் பாந்தர் அமைப்பிலிருந்து கம்யூனிஸ்ட் ஆனவர் ஆஞ்சலா டேவிஸ். ஒடுக்குமுறைக்கு உள்ளான ஆண் புரட்சியாளர்களுடன் சமாந்திரமாக நின்று போரிட்டவர்கள் இவர்கள்.

செவ்வியல் மார்க்சியப் பெண்பேராளிகளான ரோஸா (1871-1919) லுக்சம்பர்க், கிளாரா ஜெட்கின் (1867-1933), அலக்சான்ட்ரா கொலாண்டாய் (1872-1952) போன்றவர்கள் பால்நிலை அடிப்படையிலான பெண்நிலைவாதம் என்பதை ஏற்றுக்கொள்ளவில்லை. அன்று நிலவிய பெண்நிலைவாதக் கருத்துக்கள் முதலாளியத்தை எதிர்த்த போராட்டத்தில் பங்கு பெறவில்லை என்பது அதற்கான அவர்களது காரணம்.

போலந்தில் பிறந்து ஜெர்மனியில் தொடக்க காலப் பாசிஸ்டுகளால் கொல்லப்பட்டவர் ரோஸா லுக்சம்பர்க். ரோஸா லுக்சம்பர்க், சே குவேரா, லுமும்பா என மூவருக்கும் உள்ள ஒற்றுமை அவர்கள் கொல்லப்பட்டமுறை. மூவரும் உயிருடன் கைது செய்யப்படுகிறார்கள். தனியிடத்திற்குக் கொண்டுசெல்லப்பட்டு சுட்டுக் கொல்லப்படுகிறார்கள். சேவும் லுமும்பாவும் நேரடியாக நெஞ்சில். ரோஸாவுக்கு தலையில் துப்பாக்கியால் அடி. பிற்பாடு தலையில் துப்பாக்கிச் சூடு. சே குவேரா, லுமும்பா உடல்களுக்கு என்ன ஆனது என்று தெரியாமல் இருந்து பல தசாப்தங்களின் பின் அவர்தம் உடல்கள் குறித்த உண்மைகள் வெளியாகின.

சே குவேரா கைகள் வெட்டப்பட்டு, உடல் ரொட்டி சுடும் அடுப்பில் சுடப்பட்டு, மிஞ்சிய உடல் கைவிடப்பட்ட விமான ஓடு பாதையில் அவரது தோழர்களுடன் புதைக்கப்பட்டது. லுமும்பாவின் உடல் துண்டு துண்டாக வெட்டப்பட்டு அமிலத்தில் கரைக்கப்பட்டது. சே குவேராவின் கைகள் வெட்டப்பட்ட இடம் அவரை அடையாளம் காண உதவியது. லும்பாவின் ஒரேயொரு பல் மட்டுமே அவரது மகளிடம் ஒப்படைக்கப்பட்டது. ரோஸாவின் உடலுக்கு என்ன ஆனது என்பது இன்றுவரையிலும் உறுதிப்படுத்தப்படவில்லை.

ரோஸாவின் பெற்றோர் மத்தியதர வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள். மறுமலர்ச்சி யுக மதிப்பீடுகளுடனும் கெதேவின் இலக்கித்துடனும் சேர்ந்து வளர்ந்தவர் ரோஸா. 1873 இல் அவரது குடும்பம் வார்ஸாவுக்குக் குடி பெயர்நதது. அங்குதான் அவரை வாழ்நாள் முழுதும் அலைக்கழித்த இடுப்புவலி அவரைப் பீடித்தது. பள்ளிக்கூட நாட்களிலேயே ரோஸா அரசியலில் பிரவேசித்துவிட்டார். இரசியத் தீவிரவாதிகளினால் பாதிப்புக்குட்பட்ட நரோத்னிக் தழுவிய போலந்து புரொலிடரியட்டில் செயல்பட்டார் ரோஸா. அக்கட்சி போலீசின் வேட்டைக்கு உட்பட்டபோது, 1887 இல் பள்ளி இறுதி முடித்திருந்த ரோஸா சூரிச்சுக்குப் பறந்தார். அவ்வாண்டில்தான் அவர் மார்க்ஸ் எங்கெல்ஸைப் படிக்கத் தொடங்கினார். அவர் இனம் மொழி போன்ற அடையாளங்களை ஒப்பாதது போலவே, பெண் எனும் தனி அடையாளத்தையும் ஒப்புக் கொண்டவரல்ல. இந்த அடையாள மையங்கள் அனைத்தும் முதலாளித்துவத் தன்மை கொண்டதென அவர் நினைத்தார். தனித்த பெண்களின் இயக்கம் என்பதில் அவர் அவ்வளவு ஈடுபாடு காட்டியவராக இல்லை. வர்க்க அடையாளம் கொண்ட ஆண் பெண் உறவு என்பதாக அவரது வாழ்க்கைப் பார்வை அமைந்தது.

ரோஸா லுக்சம்பர்க், பெண்கள் உரிமைப் பிரச்சினை சார்ந்து கோட்பாட்டுக் கட்டுரைகள் எதனையும் எழுதியவரில்லை. சக போராளியான அகஸ்டோ பேபல் பெண்களுக்கென தனி இயக்கம் தொடங்கி அதில் கவனம் செலுத்துமாறு கோரியபோது அதனை மறுத்தவர் ரோஸா லுக்சம்பர்க். இயக்கத்தில் ஆண்களின் ஆதிக்கத்திற்கானதாக பேபலின் கருத்தை ரோஸா கருதினார். ரோஸாவின் சக தோழரான கிளாரா ஜெட்கின் பெண்கள் அமைப்பைக் கட்டினார். பெண்கள் பிரச்சினை குறித்துத்தான் ஆசிரியராக இருந்து நடத்திய இதமுக்குக் கட்டுரை தருமாறு ரோஸா கிளராவிடம் கோரினார்.

ஆணாதிக்கத்தைத் தனது சொந்த வாழ்வில் அவர் அனுபவம் கொண்டார். தான் காதல் கொண்டிருந்த சக தோழர் ஜோகித்சேவை மணந்துகொண்டு குழந்தை பெற்றுக்கொள்ள அவர் விரும்பினார். ஜோகித்சே, புரட்சியே உனது குழந்தை எனச் சொல்லி அதனை மறுதலித்தார். அதே ஜோகிச்சே பிறிதொரு இரசியப் பெண்ணிடம் காதலுறவு கொண்டிருப்பதைக் கண்டு அவர் துயருற்றார். தனது சகதோழியான கிளாரா ஜெட்கினின் இளம் வயதினரான புதல்வருடன் காதலுறவு கொண்டிருந்தார். ஜெட்கின் நட்புக்காக அதனை நிறுத்திய ரோஸா, பின்னாளில் பிறிதொரு தோழரான பால் லெவியுடன் காதல் கொண்டிருந்தார். அன்று நிலவிய மரபார்ந்த காதலுறவை மீறியவராக அவர் வாழ்ந்தார்.

(5) அலெக்ஸாண்ட்ரா கொலாண்டாய் ஒரு தாராளவாத பிரபுத்துவ குடும்பத்தில் பிறந்தார். 20 வயதில் அவர் இராணுவ அதிகாரியான விளாடிமிர் மிகைலோவிச் கொல்லோன்டாய் என்பவரை மணந்தார். அவருக்கு ஒரு மகன் பிறந்தார். 1898 ஆம் ஆண்டில் அவர் தனது பிரபுத்துவ வர்க்கச் சலுகைப் பின்னணியை நிராகரித்து தனது கணவரையும் மகனையும் கைவிட்டுப் பெண் தொழிலாளர்களிடையே பிரச்சாரத்தைப் பரப்புவதற்காக இரசிய சமூக-ஜனநாயகத் தொழிலாளர் கட்சியில் சேர்ந்தார்.

மாஸ்லோவ் என்ற திருமணமான இரசிய பொருளாதார நிபுணருடன் அவருக்கு ஒரு கொந்தளிப்பான உறவு இருந்தது. அவர் பாரிஸ் நகரில் பிறதொரு பெண்போராளியான இனெசா அர்மாண்ட்டையும் லெனினையும் சந்தித்தார். மென்சுவிக் அமைப்பில் இருந்த கொலான்டாய் முதல் உலகப் போரை எதிர்த்த ஒரே சோசலிசக் குழுவாக போல்ஷிவிக்குகள் இருந்தபோது அவர்களுடன் இணைந்தார்.

1917 ஆம் ஆண்டு பிப்ரவரியில் போல்ஷிவிக் கட்சியின் மத்தியக் குழுவில் சேர்ந்தார். அக்டோபர் புரட்சிக்குப் பிறகு அரசாங்கத்தில் ஒரே பெண் பொதுநல ஆணையராகப் பதவியேற்றார். பொதுநல ஆணையராக கொலான்டாய் புரட்சிக்குப் பிறகு சமூகத்தில் பெண்களின் பங்கை மறுவடிவமைப்பதில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தினார்.

அவரது திட்டங்களால் திருமணமான பெண்கள் அதிக சுதந்திரம் பெற்றனர். விவாகரத்து எளிதாக்கப்பட்டது. மணவாழ்வில பிரிந்த, மணவாழ்வில் ஈடுபடாத ஒற்றைப் பெண்களுக்கு (Single Mothers) பிறந்த குழந்தைகள் திருமணத்தில் பிறந்த குழந்தைகளைப் போலவே அதே உரிமைகளைப் பெற்றனர். கருக்கலைப்பு, சட்டப்பூர்வமாக்கப்பட்டது.

பாலியல் உறவுகள் ஒரு அரசியல் பிரச்சினை (Sexual relationship is Political) என்று கருதிய அவர், ஒரு சோசலிச சமூகத்தில் தனிநபர்கள் தாங்கள் விரும்பும் எவருடனும் பாலியல் உறவு கொள்ள சுதந்திரமாக இருக்க வேண்டும் என்று நம்பினார். இது குடும்பத்தைப் பலவீனப்படுத்தும் எனக் கருதிய லெனின் அதை ஏற்கவில்லை. கொலான்டாய் பாலுறவுச் சுதந்திரம் தொடர்பாகத் தான் கருதியவற்றைத் தனது சொந்த வாழ்வில் நடைமுறைப்படுத்தினார். விவசாய வம்சாவளியைச் சேர்ந்த இளம் மாலுமியான பாவெல் டைபென்கோவை அவர் மணந்தார். சுதந்திரக் காதல் தொடர்பான தனது நாவல்களை எழுதினார்.

கம்யூனிசம் கருத்தியலாகப் பெண்கள் பணியிடத்தில் பங்கேற்பதன் மூலம் அவர்களது சமூக விடுதலையை ஆதரிக்கிறது. போல்ஷிவிக்குகளின் ஆரம்பகாலச் சட்டம் சம வேலைக்குச் சம ஊதியம் என்ற கொள்கையை நிறுவியது. அவர்கள் வீட்டு வேலைச் சுமைகளிலிருந்தும் தாய்மையிலிருந்தும் பெண்களை விடுவிக்கத் தொடங்கினர். தாய்மார்கள் பணி இடத்திற்குத் திரும்புவதற்கு லெனின் குழந்தை பராமரிப்பு, பொது சமையலறைகளை ஊக்குவித்தார். இந்த நிலைபாடுகளைத் தனது பொறுப்பின் கீழ் உருவாக்கி ஊக்குவித்தார். விவாகரத்துக்கு ஆதரவாக அவர் பிரச்சாரம் செய்தார். பெண்களை வீட்டு வேலைகளிலிருந்து விடுவிக்கப் பொதுச் சமையலறைகள், உணவுக்கூடங்கள், சலவை நிலையங்களை உருவாக்க விரும்பினார். வீடு சுத்தம் செய்வது ஆண்களும் பெண்களும் பகிர்ந்து கொள்ளும் கூட்டுப் பொறுப்பாக மாற வேண்டும் என்றார். மழலையர் பள்ளி, குழந்தைகள் காலனி, குழந்தைகள் காப்பகம், அனுபவம் வாய்ந்த செவிலியர்களின் பராமரிப்பில் உள்ள பள்ளி ஆகியவற்றில் குழந்தைகள் வளரும் என அவர் கனவு கண்டார. தாய் எப்போது வேண்டுமானாலும் தனது குழந்தைகளுடன் நேரத்தை செலவிட வேலையை விட்டு வெளியேறச் சுதந்திரமாக இருக்க வேண்டும் என அவர் கருதினார். பெண்களின் பிரச்சினைகளைக் கையாளப் பெண்களால் நடத்தப்படும் ஒரு சிறப்புப் பணியகத்தைக் கட்சி அமைக்க வேண்டும் என்றும் கொல்லோண்டாய் விரும்பினார். 1917 கட்சி மாநாட்டில் மற்ற எல்லாப் பெண்களும் இந்தத் திட்டத்தை நிராகரித்தனர். 1918 இல் கொல்லோண்டாயும் இனெஸா அர்மண்ட்டும் மாஸ்கோவில் ஒரு மகளிர் மாநாட்டை நடத்தினர். போரினால் பாதிக்கப்பட்ட இரசியா முழுவதும் பயணம் செய்ய பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் துணிந்து இதில் கலந்து கொண்டனர். பெண்களது பங்களிப்பினால் கம்யூனிச மாற்றங்கள் அவர்களைத் தங்கள் குழந்தைகளிடமிருந்து பிரிக்காது என்று அவர்கள் உறுதியளித்தார்.

பெண்களுக்கான கட்சியின் தனித்துறை இறுதியாக செப்டம்பர் 1919 இல் அமைக்கப்பட்டது. உழைக்கும் பெண்களிடையே கம்யூனிசத்தை ஊக்குவிப்பதற்காகக் கட்சியுடன் அது இணைக்கப்பட்டது. கொலான்டாய் கிராமப்புறங்களில் ஒரு அமைப்பாளராக வேலை செய்தார். 1920 இல் அவரது சக தோழரான அர்மண்ட் காலராவால் இறந்தபோது கொல்லோந்தாய் மகளிர் துறையின் தலைமைப் பொறுப்பை ஏற்றுக்கொண்டார்.

1921-22 இல் கொலாண்டாய் கம்யூனிச அகிலத்தின் சர்வதேச மகளிர் செயலகத்தின் செயலாளராகவும் இருந்தார். அர்மண்டின் மரணத்திற்குப் பிறகு பெண்களின் நிலையை மேம்படுத்தும் கொள்கைகளுக்கு அழுத்தம் கொடுக்க ஒரு பெண்கள் இயக்கத்தை உருவாக்கிய, போதுமான முக்கியத்துவம் வாய்ந்த ஒரே பெண் கொலாண்டாய் ஆவார். தொழிலாளித் தேனீக்களின் காதல், சுதந்திரக் காதல் போன்ற புனைவுகளை எழுதினார். 1926 இல் எழுதப்பட்ட அவரது சுயசரிதை இரசியாவில் வெளியிடப்படவில்லை.

கொலான்டாய் பாலின மையப் பெண்நிலைவாத (Gender Based feminism) இயக்கத்தின் மீது கடுமையான நிலைப்பாட்டைக் கொண்டிருந்தார். ஒரு முதலாளித்துவ ஆட்சியின் கீழ் சமத்துவமின்மை இருப்பதற்குக் காரணமாகப் பாலினத்தை மட்டுமே குறிப்பிடும் பெண்நிலைவாதிகளை அவர் அப்பாவிகள் என்று கருதினார். கொலான்டாய் போன்ற விமர்சகர்கள் தொழிலாள வர்க்கத்திற்கான நிலைமைகளை மேம்படுத்துவதற்கான மார்க்சியத்தின் முயற்சிகளை தாராளவாதப் பெண்நிலைவாதம் (Liberal Feminism) கீழாக மதிப்பிடுகிறது என அவர் கருதினார்.

angela davis(6) கறுப்பினக் கம்யூனிஸ்டுப் போராளியான ஆஞ்சலா டேவிஸ் (1944-) பெண்களின் உரிமைகளுக்காகப் போராட பிற சிறுபான்மையினரின் உரிமைகளுக்காகவும் ஒருவர் போராட வேண்டும் என்றார். அறுபதுகள் எழுபதுகளில் அவர் அமெரிக்கச் சிவில் உரிமை இயக்கங்களில் ஈடுபட்டார். பிளாக் பாந்தர்ஸ் இயக்கம், கம்யூனிஸ்ட் கட்சியின் கருப்பினக் கிளையாக இருந்த சேகுவேரா - லுமும்பா கழகம் போன்ற இயக்கங்களில் அவர் செயல்பட்டார். அமெரிக்கச் சிறைச்சாலை அமைப்பில் இனவெறிக்கு எதிரான உரிமைப் போராட்டத்தில் அவர் பங்கேற்றார். இதன்பொருட்டு ஓராண்டுக்கும் மேலாக சிறையில் அரசியல் கைதியாக அவர் இருக்க வேண்டியிருந்தது.

ஏஞ்சலா டேவிஸின் பெண்கள் இனம், வர்க்கம் என்ற நூல், வீட்டு வேலை என்ற கருத்து, வீட்டிற்குள் பாலின உழைப்பின் முதலாளித்துவ கட்டமைப்பைச் சிதைக்கவும், வீட்டு அடிமைத்தனத்தின் மூலம் பெண்கள் எவ்வாறு சுரண்டப்படுகிறார்கள் என்பதைக் காட்டவும் பயன்படுத்தப்படுகிறது. இதைச் சமாளிக்க உணவு தயாரித்தல், குழந்தைப் பராமரிப்பு உள்ளிட்ட வீட்டு வேலைகளை சமூகமயமாக்குவது பொருளாதாரத்தில் இலாப நோக்கத்தின் ஆதிக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைப்பதாக டேவிஸ் முடிக்கிறார்.

இங்கிலாந்தின் மார்க்சியப் பெண்நிலைவாதியான ஷீலா ரோபோத்தம (1943-) பெண்விடுதலை விவாதங்களில் பாலினப் பிரச்சினையைப் புறக்கணிப்பதற்காகப் பாரம்பரிய பிரிட்டிஷ் கம்யூனிஸ்டுக் கட்சியை விமர்சித்தார். அதே நேரத்தில் அவர் பெண்நிலைவாதப் பிரச்சினையை வர்க்கப் போராட்டத்துடன் ஒருங்கிணைக்கும் புதிய இடதுசாரி அரசியலுக்காக வாதிட்டார். முதலாளித்துவத்துடன் ஆணாதிக்கமும் அகற்றப்பட வேண்டும் என்று வாதிட்டு, கலாச்சார, தனிப்பட்ட, இனப்பெருக்க அனுபவங்களை வலியுறுத்துவதன் மூலம் அவர் வைதீக மார்க்சிய இயக்கத்தினை விமர்சித்தார்...

அறுபது எழுபதுகளில் இலண்டனில் உள்ள ஆண் ஆதிக்கம் செலுத்தும் குறுங்குழுவாத கம்யூனிஸ்ட், ட்ராட்ஸ்கியக் குழுக்களின் வரம்புகளை ரோபோத்தம் அடையாளம் கண்டார். அவை பெரும்பாலும் பெண்களின் பிரச்சினைகளை ஓரங்கட்டின. பெண்கள் விடுதலை இயக்கத்தின் ஜனநாயக பங்கேற்பு, அதன் படிநிலை அல்லாத இயக்க முறைகளை இணைக்க வேண்டும் என்று அவர் வாதிட்டார்.

முதலாளித்துவம் எவ்வாறு தனிப்பட்ட வாழ்க்கை, பெண்களின் உழைப்பு, இனப்பெருக்கம் ஆகியவற்றை வடிவமைக்கிறது என்பதில் கவனம் செலுத்தி, மார்க்சியத்தைப் பெண்ணியத்துடன் இணைக்க முயன்றார். பெண்களின் விடுதலையைப் பொருளாதார மறுசீரமைப்பு மூலம் மட்டுமே அடைய முடியாது: ஒரு தீவிரமான கலாச்சார மாற்றம் தேவை என்று அவர் வாதிட்டார்.

எழுபது எண்பதுகளில் சோசலிசச் செயல்பாட்டில் பெண்நிலைவாத உணர்வைக் கொண்டுவருவதில் ரோபோத்தம் ஒரு முக்கியப் பங்கை ஆற்றினார், எண்பதுகளில் சுரங்கத் தொழிலாளர்களின் வேலைநிறுத்தத்தின் போது சுரங்க மூடல்களுக்கு எதிரான பெண்களின் போராட்டப் பிரச்சாரத்தை அவர் முன்னெடுத்தார். உண்மையான சமத்துவம் என்பதில் முதலாளித்துவச் சுரண்டல், இடதுசாரிகளுக்குள்ளேயே ஆணாதிக்கக் கட்டமைப்புகள் இரண்டையும் ஒழிப்பது அவசியம் என்பதை ரோபோத்தம் வலியுறுத்தினார்.

கம்யூனிஸ்டுக் கட்சிகளில் உள்ளோர் பெரும்பாலும் பெண்கள் பிரச்சினையை வர்க்கப் போராட்டத்திற்கு இரண்டாம் நிலையாகக் கருதுகின்றனர் என்ற அவர், முதலாளித்துவத்தின் கீழ் பெண்கள் இரட்டைச் சுமையை எதிர்கொள்கிறார்கள் என்பதை அவர் அடையாளம் கண்டார். பாட்டாளி வர்க்கமயமாக்கலால் பெண்கள் உயிர்வாழ்வதற்குத் தங்கள் உழைப்பை விற்க வேண்டும். அதே நேரத்தில் அவர்கள் வீட்டைக் கட்டியமைக்க ஊதியம் பெறாத உழைப்பையும் வழங்க வேண்டும். முதலாளித்துவ அமைப்புக்கு ஒரு கட்டுப்பாட்டு கருவியாக அவர்கள் செயல்படுகிறார்கள். உற்பத்தி அலகாகக்குடும்பத்தை மட்டுமே மையமாகக் கொண்ட பெண்களைக் குறித்த சில மார்க்சியக் கருத்துக்களுக்கு மாறாக, ஒரே நேரத்தில் ஒடுக்கும் முதலாளித்துவப் பொருளாதாரத்தில் அனுபவிக்கும் அந்நியப்படுதலில் இருந்து ஆண்கள் தஞ்சம் அடையும் இடமாக ரோபோத்தம், குடும்பத்தை எடுத்துக்காட்டினார்.

பாலினவாதம், ஆணாதிக்கத்தின் வேர்கள் முதலாளித்துவ அமைப்புக்கு முந்தையவை என்று அவர் வாதிட்டார். முதலாளித்துவத்தை கவிழ்ப்பது மட்டும் பெண்களின் விடுதலைக்கு போதுமானதாக இல்லை என்ற அவர் ஆணாதிக்க அமைப்பு முறைகளை அவர் விமர்சித்தார். பெண்களின் குறிப்பிட்ட தேவைகள், அனுபவங்களை நிவர்த்தி செய்யத் தவறியதற்காகப் பாரம்பரிய மார்க்சிய அமைப்புகளின் தன்மையை அவர் விமர்சிததார்.

இவ்வாறாக முதலாளித்துவம் மூலம் பெண்கள் சுரண்டப்படும் வழிகளையும், தனியார் சொத்தின் தனிப்பட்ட உரிமையையும் மார்க்சியப் பெண்நிலைவாதம் பகுப்பாய்வு செய்கிறது. ஊதியம் பெறாத வீட்டு வேலை (Domestic Labour), பாலியல் உறவுகளுக்கும் இதனைப் பிரயோகிப்பதின் மூலம் மார்க்சியப் பெண்நிலைவாதிகள் பாரம்பரிய மார்க்சியப் பகுப்பாய்வை விரிவுபடுத்துகிறார்கள்.

(7) இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் ஆரம்பகால மார்க்சிய, சோசலிசப் பெண்ணியவாதிகள் பரந்த தொழிலாளர் இயக்கங்களுக்குள் உழைக்கும் பெண்கள் அமைப்புகளை உருவாக்கத் தொடங்கினர். இந்த அமைப்பாளர்கள் உழைக்கும் பெண்களின் தேவைகள் முதலாளித்துவத்தால் உருவாக்கப்பட்ட பெண்ணிய இயக்கங்களின் தேவைகளிலிருந்து வேறுபட்டதாகக் கருதினர். விடுதலைக்கான வழிமுறையாக வர்க்கத்திலிருந்து பாலினத்தைப் பிரிப்பது இந்தப் பெண்களுக்கு நினைத்துப் பார்க்க முடியாதது. அவர்கள் தங்கள் கருத்துக்களுக்கும் சொந்த வாழ்வில் போராடுவதன் வழியாகவும் கம்யூனிஸ்ட்- கட்சிகளுக்குள் பல்வேறு நிலைகளில் வெற்றியைக் கண்டனர். சோசலிசப் புரட்சி மூலம் பெண்களை விடுவிக்கும் மிகவும் தீவிரமான அரசியல் திட்டத்தை மார்க்சிஸ்டுகள் ஆதரித்தனர். புரட்சிக்குப் பிறகு பெண்கள் மத்தியில் வேலை செய்வதிலும் அவர்களின் நிலைமைகளை பொருள் ரீதியாக மாற்றுவதிலும் சிறப்பு முக்கியத்துவம் அளித்தனர்.

சமூக இனப்பெருக்கம் என்பது ஒரு குறிப்பிட்ட பொருளாதார அமைப்பில் நாம் எவ்வாறு பணியாளர்களை உருவாக்கிப் பராமரிக்கிறோம் என்பதற்கான செயல்முறையாகும். முதலாளித்துவத்தில் இது வேலையின் உடல், சமூக அம்சங்கள், முதலாளிகள், தொழிலாளர்களுக்கு இடையிலான உறவுகள், இவற்றோடு இந்த உறவுகளை ஆதரிக்கும் நம்பிக்கைகளை உள்ளடக்கியது. இந்தச் செயல்முறை பெரும்பாலும் வீடுகளுக்குள் நடைபெறுகிறது. இது பெருமளவு பெண்களால் செய்யப்படும் பாரம்பரியப் பணிகளைப் பெரிதும் நம்பியுள்ளது.

மார்க்ஸ் தொடக்கத்தில் கவனிக்காத வீட்டு வேலைகளில் பெண்களின் பங்கை அங்கீகரிப்பதன் மூலம், நவீன சமூக மறுஉற்பத்தி மார்க்ஸின் அசல் கோட்பாட்டில் உள்ள இடைவெளிகளை மார்க்சியப் பெண்நிலைவாதம் நிரப்புகிறது. ஒரு முதலாளித்துவ சமூகத்தில் சமூக மறுஉற்பத்தி முக்கியமாக வீட்டுற்கு மட்டும் அல்லாமல், ஊதியம் பெறாத, குறைந்த ஊதியம் பெறும் வேலை மூலமும் நிகழ்கிறது. மறுஉற்பத்தி என்பது முதலாளித்துவத்திற்கும் கூலித் தொழிலாளிக்கும் இடையிலான உறவை உருவாக்குவதையும் பராமரிப்பதையும் உள்ளடக்கியது என்று மார்க்ஸ் சுட்டிக்காட்டினார். பெண் ஒடுக்குமுறையின் மிக முக்கியமான ஆதாரமாக உற்பத்தி உழைப்பிலிருந்து விலக்கப்படுவதை மையமாகக் கொண்டு சில மார்க்சியப் பெண்நிலைவாதிகள் கூலி முதலாளித்துவப் பொருளாதாரத்திற்குள் வீட்டு வேலைகளைச் சேர்ப்பதை ஆதரித்தனர்.

பெண்கள் தங்கள் இனப்பெருக்கப் பொறுப்புகள் மூலம் தொழிலாளர் சக்தியில் ஒரு முக்கியப் பங்கை வகிக்கிறார்கள். அவர்கள் இறுதியில் பணியிடத்தில் நுழையும் குழந்தைகளைப் பெற்றெடுப்பது மட்டுமல்லாமல் இந்தக் குழந்தைகளின் சமூகமயமாக்கலுக்கும் பங்களிக்கிறார்கள். தொழிலாளர்கள், பெற்றோர்களாக அவர்களின் எதிர்காலப் பாத்திரங்களுக்கு அவர்களைத் தயார்படுத்துகிறார்கள். கூடுதலாக ஊதியம் பெறாத வீட்டு வேலை மூலம் பெண்கள் தற்போதைய தொழிலாளர்களுக்கு, பெரும்பாலும் அவர்களின் கணவர்களுக்கு ஆதரவை வழங்குகிறார்கள்.

ஒரு முதலாளித்துவ சமூகத்தில் பெண்களால் நிறைவேற்றப்படும் இனப்பெருக்கப் பாத்திரங்களை விட ஆண்களால் பொருட்களை உற்பத்தி செய்வதற்கு அதிக மதிப்பு வைக்கப்படுகிறது. வீட்டு வேலைகள, வீட்டு மேலாண்மை, குழந்தைப் பராமரிப்பு போன்ற பாரம்பரியமாக பெண்களால் மேற்கொள்ளப்படும் வீட்டு வேலைகள் பெரும்பாலும் ஒரு முதலாளித்துவக் கட்டமைப்பில் மதிக்கப்படுவதில்லை. ஏனெனில், அதற்குப் பரிமாற்ற மதிப்பு இல்லை. எனவே இந்த வேலை குறைவாக மதிப்பிடப்படுகிறது. அதற்கு ஊதியம் வழங்கப்படவில்லை. இருப்பினும் பெண்கள் இன்னும் அந்தப் பணிகளை முடிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மார்க்சியப் பெண்ணியவாதிகள் குடும்பத்தை முதலாளித்துவத்தின் ஒரு கருவியாகப் பார்க்கிறார்கள். ஆண்களை விடப் பெண்கள் ஓடுக்கப்படுவதற்கு முதலாளித்துவமே முக்கிய பங்களிப்பாளராகக் கருதுகிறார்கள். பெண்நிலைவாதத்தின் இந்தப் பிரிவு தனிப்பட்ட மட்டத்தை விடப் பெண்கள் மீதான நிறுவன ஒடுக்குமுறையை விளக்க சமூக மற்றும் அரசியல் கட்டமைப்புகளைப் பகுப்பாய்வு செய்கிறது.

இருபத்தியோராம் நூற்றாண்டில் பெண்ணியத்தின் பரவலாக பிரபலமான கோட்பாடாக அடையாள அரசியலை வலியுறுத்தும் ஊடறுப்புப் பெண்நிலைவாதத்தின் தோற்றம் மார்க்சியப் பெண்நிலைவாதிகளிடமிருந்து பல்வேறு பதில்களைக் கண்டது. பாரம்பரிய மார்க்சியப் பெண்நிலைவாதிகள் முதலாளித்துவ அடையாள அரசியலை நம்பியிருப்பதை விமர்சித்து வருகின்றனர் பாட்டாளி வர்க்க அனுபவத்தை அல்லாமல், தனிநபர் அடையாளத்தை அதிகமாக வலியுறுத்துவதன் மூலம் ஊடறுப்புப் பெண்நிலைவாதம் வர்க்கம், பிற அதிகாரங்கள் குறித்த கருத்தாக்கங்களை மட்டுப்படுத்துகிறது என்று மாரக்சியப் பெண்ணிலைவாதிகள் வாதிடுகின்றனர். இந்தக் கண்ணோட்டத்தில் முதலாளித்துவ கட்டமைப்புகளை ஒழிப்பதற்காக மாறுபட்ட அடையாளங்களைக் கூட்டுச் செயல்பாடு மூலம் கடக்க வேண்டும் என அவர்கள் சொல்கிறார்கள்.

கட்டமைக்கப்பட்ட முறையான ஓடுக்குமுறையின் விளைவான அடையாளத்தின் பல்வேறு அம்சங்களின் தொடர்புகளைப் பார்ப்பதற்கான ஓர் அடியாக மார்க்சியப் பெண்நிலைவாதிகள் ஊடறுப் பெண்நிலை வாதத்தைக் கருதுகிறார்கள். முதலாளித்துவப் படிநிலையை மீண்டும் உருவாக்கும் முதலாளித்துவத்தின் முழுமையற்ற விமர்சனமாக வர்க்கத்தையும் சமூக அடையாளத்தையும் பிரிப்பதை மார்க்சியப் பெண்நிலைவாதம் மறுதலிக்கிறது.

மார்க்சியப் பெண்நிலைவாதிகளின் இயல்பு, சமூக மாற்றத்தை ஊக்குவிக்க அணிதிரட்டும் அவர்களின் திறன் ஆகியன, முக்கியமான சமூகச் செயல்பாடுகளில் ஈடுபட அவர்களுக்கு உதவியுள்ளன. செயல்பாட்டாளர்களாக மார்க்சியப் பெண்நிலைவாதிகள் பெண் ஒடுக்குமுறை, மானுட விடுதலை, வர்க்க அரசியல், ஏகாதிபத்திய எதிர்ப்பு, இனவெறி எதிர்ப்பு, பாலின அடையாளம் - பாலியல் பிரச்சினைகள் ஆகியவற்றை நிகழ்ச்சி நிரலின் மையத்தில் வைக்கும் அரசியலை வளர்க்க வலியுறுத்துகின்றனர். வரலாறு முழுவதும் இந்தப் பெண்கள் மேலாதிக்க முதலாளித்துவத்தை எதிர்த்துப் போராடுவதில் பல்வேறு அணுகுமுறைகளைப் பயன்படுத்தியுள்ளனர். இதன்வழி பெண்கள் முதலாளியத்திலிருந்தும் ஆணாதிக்கத்திலிருந்தும் விடுதலையை அடைவதற்கான உகந்த முறை குறித்த தம்முடைய மாறுபட்ட கருத்துக்களை அவர்கள் முன்வைக்கிறார்கள்.

யமுனா ராஜேந்திரன்

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.