வடிவமைப்புத் திறனாய்வு
'சாதியும் புரட்சியும்' என்னும் இந்நூல் என். இரவி அவர்களால் எழுதப்பட்டுத் தோழர்கள் பிரேம், விவேக் ஆகியோரால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. மேலும் இந்நூல் தெலுங்கு, இந்தி, பஞ்சாபி ஆகிய மொழிகளிலும் வெளிவந்துள்ளது.
இந்நூல் மஞ்சள் நிற அட்டையைக் கொண்டுள்ளது. முன் அட்டையில் உள்ள படம், மக்கள் புரட்சி வெடிக்கும் போது சாதியம் தலைதெறிக்க ஓடும் என்பதைக் காட்டுகிறது. உயர்த்திய கையைக் கொண்ட ஓர் ஆளின் உருவத்திற்குள் மக்கள் திரள் இருப்பதைப் போன்ற படம், ஒவ்வொரு நபருக்குள்ளும் ஒரு மக்கள் திரள் சிந்தனை இருக்க வேண்டும் என்பதைச் சுட்டுகிறது. மேலும் அந்த ஓவியம் ஆண், பெண் பாலினப் பிரிவு காட்டாதவாறு தோற்றமளிக்கிறது. இது மேற்காசிய நாடுகள் கம்யூனிசத்தைப் "பூதம்" என்று வர்ணித்ததை நினைவூட்டுகிறது.
பின் அட்டையில் உள்ள நவீன ஓவியம், சுரண்டப்பட்ட வர்க்கமும் ஒடுக்கப்பட்ட சாதிகளும் ஒருவரையொருவர் அரவணைத்து நெருங்கி ஒற்றுமையுடன் போராட்டக் களத்தில் நிற்க வேண்டும் என்பதைக் குறிக்கிறது. அதில் காட்டப்பட்டிருக்கும் இராணுவ உடை ஆயுதப் புரட்சியைக் குறிக்கிறது.
சிந்தன் புக்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள 'சாதியும் புரட்சியும்' என்னும் நூல் 136 பக்கங்களைக் கொண்டது. இந்நூல் தமிழில் முதல் பதிப்பாகும். சிந்தன் புக்ஸ் நிறுவனத்தின் பதிப்புரையுடனும் தோழர் நார்ள என். இரவி அவர்களின் ஆசிரியர் குறிப்புடனும் இந்நூல் அமைந்துள்ளது. இந்நூலில் ஐந்து கட்டுரைகள் உள்ளன. நூல் கெட்டித் தாளில் அச்சிடப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது. எழுத்துரு இன்னும் கொஞ்சம் பெரிதாக இருந்தால் வாசிப்பவர்களுக்குச் சிரமத்தை ஏற்படுத்தாது. நூலின் மொழிநடை ஓரளவு மார்க்சியம் தெரிந்தவர்களுக்குப் புரியும் அளவில் உள்ளது. நூலின் விலை சற்று அதிகமாக உள்ளது. இதனை மக்கள் பதிப்பாக வெளியிட்டால் சென்றடையும் பரப்பு அதிகரிக்கும்; பல்வேறு இடதுசாரி இயக்கங்களுக்கும் பேருதவியாக இருக்கும்.
உள்ளடக்கத் திறனாய்வு
'சாதியும் புரட்சியும்' என்னும் இந்நூலில் பதிப்புரை, ஆசிரியர் குறிப்பு நீங்கலாக ஐந்து கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன.
முதல் கட்டுரை, 'சாதிப் பிரச்சனை குறித்த வர்க்கப் புரிதலை நோக்கிய ஒரு குறிப்பு' என்னும் தலைப்பிலானது. இந்தக் கட்டுரை சாதிக்கும் வர்க்கத்திற்குமான உறவு, ஆங்கிலேய ஆட்சியில் சாதிக்கும் வர்க்கத்திற்கும் இடையில் ஏற்பட்ட மாற்றங்கள், மக்கள் போராட்டங்களின் தாக்கம், முதலாளித்துவ உற்பத்தி உறவுகளின் முதன்மையான தாக்கம் ஆகியன பற்றிக் பேசுகிறது. சாதியா? வர்க்கமா? சாதி அடித்தளமா, மேல் கட்டுமானமா? குறிப்பிடப்பட்ட மாற்றங்கள் ஏற்பட்டபோதும் சாதி நீடித்து இருக்கக் காரணம் என்ன? கம்யூனிஸ்ட் இயக்கத்திற்கும் தலித் இயக்கத்திற்கும் இடைவெளி ஏற்பட்டது ஏன்? சாதி எதிர்ப்புப் போராட்டங்களின் முதல் அலை மற்றும் இரண்டாம் அலை, அம்பேத்கரும் அம்பேத்கரியமும் என்பன குறித்தும் இக்கட்டுரை பேசுகிறது.
இந்தியாவில் சாதி நிலப்பிரபுத்துவம் 150 ஆண்டுகளில் பல மாற்றங்களைக் கண்டுள்ளது. இந்த மாற்றத்திற்கு, நிலவுடைமையாளர்களின் சாதிக் கொடுங்கோன்மையையும் உழைப்புச் சுரண்டலையும் எதிர்த்த மக்கள் போராட்டங்களும், ஆங்கிலேயக் குடியேற்ற அரசு கொண்டுவந்த முதலாளித்துவ உற்பத்தி முறையும் ஆகிய இரண்டுமே காரணம் என இக்கட்டுரை கூறுகிறது.
இந்தியாவில் ஆதிக்கச் சாதியினரே சுரண்டும் வர்க்கமாகவும் ஒடுக்கப்படும் சாதியினரே உழைக்கும் வர்க்கமாகவும் இருந்த நிலையைக் காட்டி, பின்னர் ஆங்கிலேயர் கொண்டுவந்த முதலாளித்துவ உற்பத்தி மற்றும் நவீனக் கல்வி ஆகியவற்றின் காரணமாகப் பல்வேறு சாதிகளிலிருந்தும் ஒடுக்கும் வர்க்கங்களும் ஒடுக்கப்படும் வர்க்கங்களும் உருவான நிலையை இக்கட்டுரை பேசுகிறது. பெரியார், அம்பேத்கர் போன்ற சீர்திருத்தவாதிகளுடைய கடும் உழைப்பு, கிராமப்புறங்களில் நிலவிய பார்ப்பன ஆதிக்கத்தையும் நிலத்துடனான பார்ப்பனர்களின் உரிமையையும் கேள்விக்குள்ளாக்கியதோடு, சூத்திர சாதிகளிலிருந்து புதிய நிலவுடைமையாளர்களைத் தோற்றுவித்தது. மேலும், ஆங்கிலேயர் கொண்டுவந்த நவீனக் கல்வியைப் படித்து, அதனால் அரசு வேலைவாய்ப்பைப் பெற்ற ஒரு நடுத்தர வர்க்கம் உருவானது என்றும் இந்தக் கட்டுரை கூறுகிறது. இது இந்தியாவில் சாதிகளைப் பற்றிப் புரிந்துகொள்ள உதவியாக இருக்கிறது. இடஒதுக்கீடும் இந்த நடுத்தர வர்க்கம் உருவாகத் துணைபுரிந்ததைக் கட்டுரை விளக்குகிறது.
இந்த மாற்றத்தில் தெலுங்கானாவில் நடைபெற்ற விவசாயிகளின் ஆயுதப் போராட்டங்களின் பங்களிப்பைப் பற்றியும், "உழுபவனுக்கே நிலம் சொந்தம்" என்னும் முழக்கத்தின் கீழ் தலித்துகள் அணிதிரட்டப்பட்டதையும் இக்கட்டுரை கூறுகிறது. சூத்திர சாதியினருக்கு எதிரான சாதி ஒடுக்குமுறை பெரும்பாலும் ஒழிந்துவிட்டது; அது இன்னும் இருக்கும் இடங்களில் அதை ஒழிப்பதை நோக்கியே பொதுப்போக்கு உள்ளது. சாதி ஒடுக்குமுறையின் வீச்சு குறுகி, அது தற்போது முதன்மையாகத் தலித்துகளை அடக்கி ஒடுக்குவதாக இருக்கிறது. தலித்துகளைப் பொறுத்தவரை, வர்க்கத்திற்கும் சாதிக்கும் இடையிலான தொடர்பு பெரும்பாலும் தொடர்கிறது. இக்கட்டுரை கூறும் மேற்கண்ட கருத்து ஏற்புடையதாக உள்ளது.
"முதன்மையானது சாதியா? வர்க்கமா?" என்னும் கேள்வியை எழுப்பி, அனைத்துச் சாதிகளிலும் ஒடுக்கும் வர்க்கமும் ஒடுக்கப்படும் வர்க்கமும் உருவாகியிருப்பதைச் சுட்டிக்காட்டி, வர்க்க அடையாளமே முதன்மையானது என்றும், சாதி அடையாளத் திரட்சி எதிரி வர்க்கத்திற்கே சாதகமாக அமையும் என்றும் இந்தக் கட்டுரை தெளிவாக்குகிறது.
இந்தியக் கம்யூனிஸ்டுகள், சாதியை இந்தியாவிற்குரிய சிறப்பு வர்க்கத்தின் ஒரு வடிவம் என்பதை உணராமல் அதைக் கேவலம் ஒரு மேல் கட்டுமானமாகக் கருதியதும், அடித்தளம் மாற்றப்பட்டால் மேல் கட்டுமானம் தானாகவே சிதையும் என்று தவறான புரிதலுக்கு ஆளானார்கள். அதனால் தொழிற்சங்கங்களில் ஏற்பட்ட சாதிப் பிரச்சனைகளிலும் பொதுவான சாதிப் பிரச்சனைகளிலும் தலையிட்டுத் தீர்ப்பதற்கு அவர்கள் முன்னுரிமை கொடுக்கவில்லை. இதனால்தான் தலித்துகள் கம்யூனிஸ்டுகளிடம் நம்பிக்கையை இழந்து, தனியாகத் தலித் இயக்கங்கள் உருவானதாக இக்கட்டுரை கூறுகிறது.
ஆனால், இந்தியக் கம்யூனிஸ்டுகளின் தவறான புரிதல் மட்டுமே இதற்குப் காரணம் என்று நாங்கள் கருதவில்லை. 1990களில் உலகமயமாக்கலை இந்தியா ஏற்றுக்கொண்டபோது, பின்நவீனத்துவத்தின் பின்னணியில் தலித் இயக்கங்கள் உருவாக்கப்பட்டன. எதிர்ப்பண்பாட்டுக் கூறுகள் தூக்கிப்பிடிக்கப்பட்டு, பிம்பம் உடைத்தல் என்னும் பெயரிலும் அதிகார எதிர்ப்பு என்னும் பெயரிலும் சீரழிவு நுகர்வுப் பண்பாடு தலித் பண்பாடாகவும், அமைப்பாய்த் திரள்வதே ஒரு வன்முறை என்றும் கற்பிக்கப்பட்டு, படித்த ஒரு தலைமுறை தலித்துகள் பாழடிக்கப்பட்டனர்.
மேலைநாடுகள் இந்தியாவில் இருக்கும் தலித்துகள் புரட்சிகர கம்யூனிஸ்ட் கட்சிகளிடம் அணிதிரள்வதை விரும்பவில்லை. இந்திய ஒன்றிய அரசும் இதை விரும்பவில்லை. எனவே, தலித்துகளைக் கம்யூனிஸ்ட் இயக்கங்களின் கீழ் அணிதிரளாமல் தடுத்து ஆட்கொள்ளவே தலித் இயக்கங்கள் உருவாக்கப்பட்டன. பின்நவீனத்துவம் என்னும் கலைப்பை முறியடித்து, நமது புரட்சிகர கம்யூனிச இயக்கங்கள் சாதி அடிக்கட்டுமானத்தின் மீதும் மேல் கட்டுமானத்தின் மீதும் ஒரே நேரத்தில் தாக்குதல் நடத்த வேண்டும்; அதற்கு உண்மையான அரசியல் அறிவைப் போதிக்கும் கட்சிப் கல்விக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்.
மேலும், இந்தியா முழுமையிலும் உள்ள தலித்துகளின் வாழ்வியல் நிலைகளும் அடக்குமுறை அளவீடுகளும் காரணிகளும் ஒரே தன்மையுடையவை அல்ல. கிழக்கு மாநிலங்கள் தலித்துகளின் வாழ்நிலை தென் மாநிலங்களின் தன்மையிலிருந்து வேறுபட்டது. காஷ்மீரில் நிலைமை வேறு. இதனால் அகில இந்திய அளவில் தலித்துகள் ஒரே காரணத்திற்காக ஓரணியில் திரள வாய்ப்பில்லை.
இந்நூலின் 30 ஆம் பக்கத்தில் கூறப்பட்டுள்ள கருத்துப்படி, இந்தியாவில் முழுமையடையாத அரை முதலாளித்துவமும் தேர்தல் ஜனநாயக முறையும் சாதியைத் தக்கவைக்கின்றன என்பது உண்மையே. ஆனால், "இடஒதுக்கீடு சாதியைத் தக்கவைக்கிறது" என்ற கருத்து ஏற்புடையது அல்ல.
இடஒதுக்கீடு சாதியை ஒழித்துவிடும் என்ற நம்பிக்கையிலிருந்து பார்ப்பதால், இடஒதுக்கீடு சாதியைத் தக்கவைப்பதாக நூல் ஆசிரியருக்குத் தெரிகிறது. உண்மையில் இடஒதுக்கீடு சாதியை ஒழிக்காது என்பதை நாம் அழுத்தந்திருத்தமாக ஏற்றுக்கொள்ள வேண்டும். இடஒதுக்கீடு என்பது இருக்கும் சாதிகளுக்கு இடையேயான வகுப்பாரிக் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு உரிமையைத் தவிர, சாதி ஒழிப்புக்கும் அதற்கும் தொடர்பு இல்லை. பள்ளத்தில் இருப்பவனை மேலேற்றும் முயற்சியே இடஒதுக்கீடு ஆகும். சாதிச் சான்றிதழ் இருப்பதால் சாதி வளர்கிறது என்னும் வாதம் தவறானது. இடஒதுக்கீட்டைச் சாதி ஒழிப்புக்கான ஒரு சிறு கருவியாக மாற்ற வேண்டும். சாதி மறுப்புத் திருமணங்கள் செய்துகொண்டோருக்குக் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் தனி இடஒதுக்கீடு வழங்க வேண்டும். மேலும், அந்த இணையருக்குப் பிறக்கும் குழந்தைகளைச் 'சாதியற்றோர்' என அறிவித்து, அவர்களுக்கான புதிய இடஒதுக்கீட்டைச் செயல்படுத்த வேண்டும்.
முதலாளித்துவ உற்பத்தி முறை முழுமை பெறும்போது, நிலவுடைமை உற்பத்தி முறையை அடிக்கட்டுமானமாகக் கொண்ட சாதிமுறை தகர்க்கப்பட வேண்டும். ஆனால் இந்தியாவில் முதலாளித்துவம் முழுமை பெறவில்லை. மேலும் இந்திய கிராமப்புறங்களில் உள்ள நிலவுடைமையாளர்களே நகர்ப்புறங்களில் முதலாளிகளாகப் பரிணாம வளர்ச்சி அடைந்துள்ளனர். எனவே இந்திய முதலாளித்துவத்தில் நிலவுடைமை உற்பத்தி முறையின் கூறுகள் ஊடுருவியுள்ளன.
மேலும் சாதியைப் பாதுகாக்கிற மேல் கட்டுமானங்களான வேதம், புராணம், சாஸ்திரம், சடங்கு, கடவுள், புனிதத்தன்மை போன்ற கற்பிதங்கள் வலுவாக உள்ளன. இந்த நிலையில் ஏகாதிபத்தியத்தின் நுழைவும் நிகழ்ந்துள்ளது. இந்தியாவை ஆளும் வலதுசாரி பிற்போக்கு மதவாத அரசு, உள்நாட்டில் சாதியைப் பாதுகாக்கும் நிலையையும், வெளிநாட்டுக் கொள்கையில் ஏகாதிபத்தியத்திற்குச் சேவை செய்யும் நிலையையும் ஒரே நேரத்தில் எடுக்கிறது. இந்த இரட்டை நிலையும் சாதியைப் பாதுகாக்க உதவியாக இருக்கிறது.
இந்நூலின் 32 ஆம் பக்கத்தில் ஆசிரியர் கூறுவது போல—சீர்திருத்தங்கள் எப்போதுமே ஒருவர் ஒழிக்க விரும்பும் அமைப்புக்கு மேலும் உயிர் கொடுப்பதில்தான் முடிவடையும் என்பதை முழுமையாக ஏற்க முடியாது. பழைய இறுக்கமான பிற்போக்குவாதக் கட்டமைப்பில் முதலாளித்துவ சீர்திருத்தங்கள் தளர்வை ஏற்படுத்தும் என்பதே உண்மை. எடுத்துக்காட்டாக, பொதுப் போக்குவரத்து வளர்ச்சி அடைந்துள்ளது. பேருந்து, தொடர்வண்டி, கப்பல், வானூர்தி போன்றவற்றில் சாதி பார்த்துப் பயணம் செய்வது இயலாத காரியமாகும். சாதி அமைப்பின் ஒரு முக்கியமான கூறான தீண்டாமையை அடியோடே உடைத்தெறிந்ததே இந்தப் போக்குவரத்துச் சீர்திருத்தம்தான். மேலும் ஆங்கிலேயர்கள் உடன்கட்டை ஏறுதல் உள்ளிட்ட பல்வேறு நிலப்பிரபுத்துவ மூடப்பழக்கவழக்கங்களைத் தங்கள் சீர்திருத்தங்களால் ஒழித்துக் கட்டினர் என்பது வரலாறு.
சாதி எதிர்ப்புப் போராட்டங்களை முதல் அலை, இரண்டாம் அலை என இரு பிரிவுகளாகப் பிரித்து இந்நூல் ஆசிரியர் என். இரவி ஆராய்கிறார்.
முதல் அலையில் இடைநிலைச் சாதிகளின் பெரும்பான்மையினரையும் தலித் சாதிகளின் சிறுபான்மையினரையும் கொண்டு இயங்கிய சுயமரியாதை இயக்கம், நீதிக்கட்சி, திராவிடர் கழகம் போன்ற இயக்கங்களின் போராட்டங்களால் கிராமங்களில் உள்ள நிலங்களின் மீதான பார்ப்பனர்களின் ஆதிக்கமும் நிலங்களும் பறிக்கப்பட்டு, அவர்கள் கிராமங்களை விட்டு வெளியேற்றப்பட்டனர். இடைநிலைச் சாதிகள் அந்த அதிகாரத்தைக் கைப்பற்றிக்கொண்டன. தலித்துகளுக்கு மிகச் சிறிய உரிமைகளே கிடைத்தன என அவர் கூறுவது சரியான பகுப்பாய்வாக உள்ளது.
கம்யூனிஸ்டுகள் மீதும் இடைநிலைச் சாதி இயக்கங்கள் மீதும் நம்பிக்கை இழந்த தலித்துகள், தங்கள் விடுதலையைத் தாங்களே சாதித்துக்கொள்ள தலித் இயக்கங்களைத் தோற்றுவித்தனர். ஏகாதிபத்திய எதிர்ப்பே தலித் விடுதலைக்கு வழி என்பதைப் புரிந்து கொள்ளாததால் அவர்கள் சரியான திசைவழியில் செல்லாமல் தேங்கி நின்றனர் என்று சரியாகவே மதிப்பிடுகிறார் நூலாசிரியர். தலித் இயக்கங்களுக்கு அரசு ஆதரவு இருந்ததைச் சுட்டிக்காட்டி, அவர்கள் புரட்சிகர வழிகளில் செல்வதைத் தடுப்பதே அதன் நோக்கம் என்பதைச் சரியாகவே சொல்கிறார்; நாமும் அதனை ஏற்கிறோம்.
'அம்பேத்கரும் அம்பேத்கரியமும்' என்னும் கட்டுரையில் அம்பேத்கரை ஒரு ஃபேபியன் சோசலிஸ்ட் (Fabian Socialist) என வரையறை செய்கிறார். அது சரியான பார்வையாகும். ஆனால் அம்பேத்கரை ஒரு கம்யூனிஸ்டாகக் கற்பனை செய்துகொண்டு, கம்யூனிஸ்டுகள் செய்ய வேண்டியதை அவர் செய்யவில்லை என்று எதிர்பார்ப்பது அவர் பிழையன்று; அது நமது பிழையாகும்.
அம்பேத்கரியத்தைப் பின்பற்றும் இயக்கங்கள் அடுத்த கட்ட நகர்வுக்குச் செல்லாமல் தேங்கிக் கிடப்பதற்குக் காரணம், அவர்கள் புரட்சிகர கம்யூனிஸ்டுகள் அல்ல என்பதே ஆகும். ஆகவே அவர்களின் சாதி எதிர்ப்புப் போராட்டங்கள் ஒரு எதிர்வினையாக மட்டுமே அமைய முடியுமே தவிர, ஒரு புரட்சிகர மாற்றத்தை நோக்கி இட்டுச்செல்ல இயலாது.
- தங்க.குமரவேல்