(முந்தைய கட்டுரை - சாதிகளுக்கிடையே வர்க்க அணிசேர்க்கை + வர்க்கப் போராட்டம் + பட்டாளிவர்க்க சர்வாதிகாரம் = சாதி ஒழிப்பு)
சாதிகளுக்கிடையே வர்க்க அணிசேர்க்கை + வர்க்கப் போராட்டம் + பட்டாளி வர்க்க சர்வாதிகாரம் = சாதி ஒழிப்பு - 2
ஒடுக்குமுறைகள் அனைத்தும் அதிகாரத்தின் மூலம்தான் நிகழ்த்தப்படுகின்றன. ஒடுக்குமுறையிலிருந்து ஒரு சமூகம் விடுபட வேண்டுமானால் ஒடுக்குகிறவர்களிடம் இருக்கும் அதிகாரம் பறிக்கப்பட வேண்டும்; ஒடுக்கப்பட்டவர்களின் உரிமைக்கான அதிகாரம் நிறுவப்பட வேண்டும் என்பதே அறிவியல்.
வர்க்கப் போராட்டத்தின் முதல் பெரும் நாயகனான ஸ்பார்ட்டகஸ், ரோமாபுரி சாம்ராஜ்யத்திற்கு அரலஸ் போர்த்தஸ் மூலம் விடுத்த எச்சரிக்கை இது, “...நீ சென்று உங்கள் பாராளுமன்ற உறுப்பினர்களிடம் சொல். பேசும் எந்திரமான ஓர் அடிமை இதைச் சொன்னதாகச் சொல். எங்களைத் தாக்குவதற்கு இன்னும் உங்களிடம் இருக்கிற படைகளை எல்லாம் அனுப்பும்படி சொல். அந்தப் படைகளையும் நிர்மூலமாக்கிவிட்டு, உங்களின் ஆயுதங்களைக் கொண்டே ரோமாபுரியை நாங்கள் அழிப்போமென்று சொல். உங்கள் அனைவரையும் கொல்வோமென எச்சரி!
நாங்கள் எங்களைப் போன்ற அடிமைகளுக்கு ஓர் அறைகூவலை விடுத்துள்ளோம். ‘அடிமைகள் எல்லோரும் எழுங்கள்! போராடுங்கள்!! உங்கள் அடிமைச் சங்கிலியை உடைத்து எறியுங்கள்!!!’
இந்த அறைகூவலால் அடிமைகள் அனைவரும் விழித்தெழுவோம். இந்த நாடு முழுவதும் சுற்றித் திரிவோம். நாங்கள் ஒன்றுபட்டு ரோமாபுரியைத் தாக்கி அழிப்போம். உங்களின் வலிமைமிக்க சாம்ராஜ்யத்தை தகர்த்தெறிவோம்... மாண்புமிகு உறுப்பினர்களின் உடைகளை நாங்கள் கழற்றி அவர்களை நிர்வாணமாக்குவோம். அடிமை வீரர்களான எங்களை நீங்கள் நிர்வாணமாக்கி விசாரித்ததுபோல் நாங்களும் பதிலுக்குப் பதிலான நீதியை வழங்கப் போகிறோம். அவர்கள் புரிந்த ஒவ்வொரு அநீதிக்கும் அவர்கள் பதில் சொல்லியே தீர வேண்டும். இதையெல்லாம் அவர்கள் முன்கூட்டியே அறிந்துகொள்வது நல்லதுதானே! அவர்கள் சுயபரிசீலனை செய்துகொள்ளட்டும்.
எல்லாம் முடிந்தபிறகு, எங்களுக்கான நீதியை நாங்கள் அடைந்த பிறகு, நாங்கள் இதைவிட நல்ல நகரங்களையும், அதற்கான அரசுகளையும் அமைப்போம். அங்கே ஏற்றத்தாழ்வுகள் இருக்காது! மனிதர்களுக்கிடையே தடைச்சுவர்கள் இருக்காது!! இவற்றையெல்லாம் ஒரு அடிமையான ஸ்பார்ட்டகஸ் சொன்னதாகச் சொல்!!!”
தங்களுக்கான அரசை தாங்களே நிறுவிக் கொள்ளாமல் விடுதலையில்லை என்பதை உணர்ந்தவன் என்பதால்தான் ஸ்பாட்டகஸை வர்க்கப் போராட்ட நாயகன் என்கிறோம்.
சாதிய அடிமைத்தனம் நீடிக்கும் இந்தியா எப்போதும் ஸ்பாட்டகஸ்களைத்தான் எதிர்பார்க்கிறது. நிலவுகிற அதிகாரத்தை உடைத்தெறியவும், ஒடுக்கப்பட்ட மக்களின் புரட்சிகர அரசை அமைக்கவும், சாதியை ஒழிக்கவும் மக்களுக்கு ஸ்பாட்டகஸ்களே தேவைப்படுகிறார்கள்.
சாதிய ஒடுக்குமுறைகளும் அதிகாரத்தின் மூலமே நிகழ்த்தப்படுகின்றன. எனவேதான் அதிகார மாற்றம் இல்லாமல் சாதிய ஒடுக்குமுறைகளிலிருந்து விடுதலை பெற முடியாது என்கிறோம். அதிகார மாற்றத்தை குறிக்கோளாகக் கொள்ளாமல் சலுகைகளை மட்டுமே குறிக்கோளாகக்கொண்டு நடத்தப்படுகிற போராட்டங்கள் அனைத்தும் சீர்திருத்தமேயாகும். இந்த வகையான சீர்திருத்தத்திற்கான போராட்டத்தில் ஒருவர் தமது வாழ்வை இழந்தாலும் அல்லது உயிரையேக்கூட இழந்தாலும் அவர் சீர்திருத்தவாதியே ஆவார்.
சீர்திருத்தவாதத்தின் தோற்றம்
சீர்திருத்தவாதிகளுக்கு பிரிட்டிஷ் ஆட்சி தலித் மக்களுக்கு இழைத்த கொடுமைகள் எதுவும் கண்ணுக்குத் தெரியவில்லை.
பிரிட்டிஷார் தங்களின் இலாப நோக்கிலிருந்து இந்த துணைக்கண்டத்திலுள்ள அனைத்து உழைக்கும் மக்களையும் சக்கையாகப் பிழிந்தெடுத்தனர். ஆனால், தாழ்த்தப்பட்ட மக்களைத்தான் அதிகமாக மரணக்குழியில் தள்ளினர். மன்னர்களும், பண்ணையார்களும் தலித் மக்களை கொடுமைகள் செய்து கொன்றதைப்போல, இன்னும் சொல்வதென்றால் அதைவிட கொடுமையாக தலித் மக்களை மரணத்தின் பிடியில் தள்ளி கொடுமைகள் செய்து கொன்றனர் வெள்ளையர்.
இந்தியாவிலும், பிரிட்டிஷ் சாம்ராஜ்யம் விரிந்திருந்த உலக நாடுகள் பலவற்றிலும் பெருந்தோட்டங்களை (எஸ்டேட்டுகளை) வெள்ளையர்கள் உருவாக்கினார்கள். அதில் இலட்சக்கணக்கான மக்களை ஈடுபடுத்தினார்கள். எந்த பாதுகாப்பும் இல்லாமல் காடுகளையும், மலைகளையும் அழித்து, பெருந்தோட்டங்கள் உருவாக்கும் பணியில் ஈடுபடுத்தபட்ட மக்கள் கொத்துக்கொத்தாக செத்து மடிந்தனர். உருவாக்கப்பட்ட பெருந்தோட்டங்களில் பணிபுரிந்தவர்களும் கொத்துக்கொத்தாக செத்துக் கொண்டிருந்தனர்.
இந்த நரகத்திலிருந்து உழைக்கும் மக்கள் வெளியேற நினைத்தால் அது முடியாது. வெள்ளையர்கள் பெருந்தோட்டங்களில் “அடிமை முறையை” மீட்டுருவாக்கம் செய்திருந்தார்கள். அங்கே சிக்கிக் கொண்டவர்கள் உயிர் பிழைத்திருந்தால் அது அதிருஷ்டம்தான்.
அப்படி அதிருஷ்டமில்லாமல் கொத்துக்கொத்தாக செத்துக் கொண்டிருந்தவர்களில் பெரும்பான்மையோர் தலித்துகளாவர். காரணம் பெருந்தோட்டங்களை உருவாக்குவதிலும், உருவாக்கிய பின்னரும் அங்கு பணியில் ஈடுபடுத்தபட்ட மக்களில் பெரும்பான்மையோர் தலித்துகளேயாவர்.
வெள்ளையர்கள் தமது மரண வியாபாரத்தில் தெரிந்தே இதைச் செய்தார்கள். சாதியமைப்பைக் கொண்ட இச்சமூகத்தில் தங்களுக்காக கேள்வி கேட்க நாதியற்ற சனங்களாக இருக்கிற தாழ்த்தப்பட்ட மக்களைத்தான் அதிகமாக பெருந்தோட்டமென்னும் மரணக் குழியில் தள்ளினார்கள்.
இவையாவும் சீர்திருத்தவாதிகளின் கண்களை உறுத்தவேயில்லை. மாறாக வெள்ளை ஏகாதிபத்தியம் தமது சுரண்டல் நலனிலிருந்து செய்த கொடுமைகளுக்கிடையில் மேற்கொண்ட சில்லறை சலுகைகளான சீர்திருத்தம்தான் அவர்களுக்கு கவர்ச்சிகரமாக இருந்தது.
இத்துணைக்கண்டத்தை அடிமைப்படுத்தி கொடுமைகள் செய்த பிரிட்டீஷார் இன்னொரு புறத்தில் புதிய வியாபாரத் தளங்களை நிறுவினர். இதன்மூலம் கிராமங்கள், நகரங்கள், தொழிற்சார் பகுதிகள் என சமூக நிலைமைகள் பலவாறாக விரிவடைந்தன. நவீன தொழில்நுட்பங்களின் துணையுடன், புதிய வர்க்கங்கள் உருவாகின. வியாபாரிகள், வங்கிகள், நிலப்பிரபுக்கள், தொழில் அதிபர்கள், எஸ்டேட் முதலாளிகள், தரகர்கள் என ஆளும்வர்க்கப் பிரிவு விரிவடைந்து புதிய முதலாளித்துவம் உருவாகியது.
முதலாளித்துவ உற்பத்திமுறை அதிகப்படியான மனிதர்களின் உழைப்பு சக்தியைக் கோரின. ஒரு குறிப்பிட்ட சாதியினர் மட்டுமில்லாமல் அனைத்து சாதியிலிருந்தும் குறிப்பிட்ட எண்ணிக்கையிலானவர்கள் வேலை வாய்ப்புகளில் பங்கேற்க முடிந்தது. அதுவரையிலும் உழைப்பாளி வர்க்கமாக மிகுந்திருந்த விவசாயிகளுக்கு இணையாக தொழிலாளி வர்க்கமும் வளர்ந்து பெருகத் தொடங்கியது.
1835-இல் ஆங்கிலவழிக் கல்வி அறிமுகப்படுத்தப்பட்டது. எழுத்தர்கள் மற்றும் நிர்வாகிகளை உருவாக்குவதில் இந்த நவீன கல்வி முக்கியப் பங்காற்றியது.
ஆக, சமூகத்தின் பல்வேறு அடுக்குகளில் ஏற்பட்ட இம்மாற்றங்களால் உந்தப்பட்டோராலும், ஈர்க்கப்பட்டோராலும் சமூக சீர்திருத்த இயக்கங்கள் தோற்றம் பெற்றன.
மதத்தை அடிப்படையாகக் கொண்ட முதல் கட்ட சீர்திருத்த இயக்கங்கள்
ஆரம்ப கட்டத்தில் மதத்தை அடிப்படையாகக் கொண்ட சீர்திருத்த இயக்கங்களே தோன்றின. இன்று பிரபலமாக்கப்படும் விவேகானந்தரைப் போலவே கர்நாடகாவில் பசவர், கேரளாவில் ஸ்ரீ நாராயண குரு, தமிழகத்தில் அய்யா வைகுண்டர் என பலரும் சீர்திருத்த இயக்கங்களை முன்னெடுத்தனர். இவர்களின் சாதி எதிர்ப்பு இந்து மதத்தை சீரமைப்பது என்ற அளவிலானதாகும்.
மத நிறுவனங்களிடம் கோரிக்கை வைப்பதை விடுத்து சாதி ஒழிப்பை அரசியல் கோரிக்கையாக முன்னெடுத்தவர்களில் மகாராஷ்ட்ராவின் ஜோதிபா பூலே, தமிழகத்தின் அயோத்திதாச பண்டிதர் ஆகியோர் முக்கியமானவர்கள்.
மதத்தை சீரமைப்பதிலிருந்து அரசியல் கோரிக்கையாக மாறியபோதும் சீர்திருத்த இயக்கங்களின் செயல்பாடுகள் இந்த காலகட்டத்தில் மந்தகதியில்தான் இருந்தன.
இரண்டாம் கட்ட சீர்திருத்த இயக்கங்கள்!
1920-க்குப் பின்னால் உருவான இரண்டாம் கட்ட சீர்திருத்த இயக்கங்களின் சூழலும், பின்னணியும் மிகவும் முக்கியமானதாகும்.
இந்த காலகட்டத்தில் இந்தியா உட்பட உலகின் பெரும்பகுதியை ஆண்டு கொண்டிருந்த பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் திணறிய காலகட்டம். கூடவே உலக முதலாளித்துவமும் கடுமையான நெருக்கடியை சந்தித்துக் கொண்டிருந்த காலகட்டம்.
இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு வெள்ளை முதலாளித்துவத்தோடு மூலதன உறவைக் கொண்டிருந்த சமூகப்பிரிவினர் அதிகாரத்தில் தங்களுக்கான பங்கை கேட்டுக் கொண்டிருந்த காலகட்டம். வெள்ளை அரசும் இந்திய ஆளும் வர்க்கத்தோடு அதிகாரத்தை பகிர்ந்து கொள்ளும் சீர்திருத்தத்தை தொடங்கிய காலகட்டம்.
“நீதி கட்சிகள்” தோன்றியதும், அதிகாரத்தில் பங்கு பெற்றதும் இந்த காலகட்டத்தில்தான்.
இந்த காலகட்டத்தில் தோன்றிய சாதி ஒழிப்பிற்கான சீர்திருத்த இயக்கங்கள் இரண்டு வழியில் சாதியை ஒழிக்க முடியுமென நம்பின.
- வெள்ளை அரசாங்கம் அளித்த கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளை பயன்படுத்தி தாழ்த்தப்பட்ட மக்களை முன்னேறச் செய்வதன் மூலம் முதலில் அவர்களை சமூக அந்தஸ்து பெறச் செய்து, தீண்டாமையை ஒழிப்பது.
- காங்கிரசு மற்றும் நீதிக் கட்சி ஆகியவைகள் அதிகாரத்தில் பங்குபெற்றது போல் தாங்களும் அதிகாரத்தில் பங்குபெற்று அதிகாரத்தின் மூலம் சாதியை மெல்ல மெல்ல ஒழிப்பது.
இவையிரண்டும் தலித்துகளுக்கு சாத்தியமில்லை என்பதை சீர்திருத்தவாதிகளால் உணர முடியவில்லை.
1.கல்வி மற்றும் வேலைவாய்ப்பு முதலான சீர்திருத்தத்தின் பிரச்சினை!
வெள்ளையர்களின் மேற்குறிப்பிட்ட சீர்திருத்தமானது தாழ்த்தப்பட்டவர்களுக்கு மட்டுமல்லாது, உயர்சாதியினரால் புறக்கணிக்கப்பட்டிருந்த பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் ஆகியோர்களுக்கும் அவசியமானதாக இருந்தது. ஏனென்றால், பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட உழைக்கும் மக்களும்கூட சாதியமைப்பின் காரணமாக அதுவரையிலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் புறக்கணிக்கப்பட்டவர்களாகவே இருந்தனர்.
எனவே வெள்ளையர்களால் ஏற்பட்ட சீர்திருத்தத்தம் தாழ்த்தப்பட்டவர்களுக்கு மட்டுமல்ல. அது பிற்படுத்தப்பட்டவர்களுக்கும், மிகவும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கும் சேர்த்துதான். எனவே சீர்திருத்தத்தை அடைவதில் தாழ்த்தப்பட்டவர்களும், பிற்படுத்தப்பட்டவர்களும், மிகவும் பிற்படுத்தப்பட்டவர்களும் போட்டியிட வேண்டிய அவசியமிருந்தது.
போட்டியில் தலித்துகளுக்கு இருந்த முக்கியமான பிரச்சினை!
சீர்திருத்தத்தின் மூலம் முன்னேறுவதற்கான போட்டியில் தலித்துகளைவிட பிற்படுத்தப்பட்டவர்களுக்கும், மிகவும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கும் கூடுதல் வாய்ப்பிருந்தது. இந்த இடைநிலை சாதியில் அதிகாரத்தில் பங்கு பெற்றும், பெறத்தக்க நிலையிலும் செல்வந்தர்கள் இருந்தார்கள்.
இந்த செல்வந்தர்கள் தங்களுக்கான அதிகாரத்தைப் பெறவும்; பெற்ற அதிகாரத்தை தக்கவைத்துக் கொள்ளவும் போராடினர். ஏனெனில் வெள்ளையர்களோடு அதிகாரத்தைப் பங்குபோடுவதில் காங்கிரசு முன்னணியில் இருந்தது. காங்கிரசுக்கு பனியாக்கள், மார்வாரிகள் போன்ற வடநாட்டு முதலாளிகளும்; பார்ப்பனர்களும் பின்புலமாக இருந்தார்கள்.
ஆகவே, இடைநிலை சாதி மூலதன உடமையாளர்களுக்கு தங்களின் செல்வாக்கை நிலைநிறுத்துவதற்கான சமூகப் பின்புலம் அவசியமாக இருந்தது. உடைமையாளர்களில் ஒவ்வொரு பிரிவினரும் தங்களது சொந்த சாதி மக்களுக்கு சீர்திருத்தத்தில் பங்கு வாங்கித் தருவதன் மூலம் சமூகப் பின்புலத்தை உறுதி செய்ய முனைந்தார்கள்.
அவர்கள் தொடக்கத்தில் முன்வைத்த “இட ஒதுக்கீடு”, “பார்ப்பனர் எதிர்ப்பு”, “வடவர் எதிர்ப்பு” ஆகிய முழக்கங்களில் தங்களது முதன்மையான போட்டியாளர்களான பனியாக்களோடும், மார்வாரிகளோடும், பார்ப்பனர்களோடும்; அவர்களின் பிரதிநிதியான காங்கிரசோடும் பேரம் பேசுவதற்கான கூறுகள் இருந்ததேயொழிய, சாதியை ஒழித்து தாழ்த்தப்பட்ட மக்களோடு ஒன்று கலப்பதற்கான எந்த கூறும் இருக்கவேயில்லை.
இதை உணர்ந்து கொள்ள ஒருவர், நீதிக் கட்சி திராவிட முன்னேற்றக் கழகமாகி, அது முதலியார் முதல் கவுண்டர், முக்குலத்தோர் முதலானவர்களின் பிரதிநிதியாகும் வரைக்கும் உயிவாழ வேண்டிய அவசியமில்லை. தி.மு.க-வையும், அ.இ.அ.தி.மு.க-வையும் தங்களது பிரதிநிதியாகக் கொண்டிருந்த இடைநிலை சாதிகளின் ஆளும்வர்க்கம் இப்போது சொந்த சாதி அடையாள அரசியலை உயர்த்திப் பிடிக்கும் வரைக்கும் சாகா வரம்பெற்று காத்திருக்க வேண்டியதில்லை.
சீர்திருத்தவாதிகளின் கண்முன்னேயே காங்கிரசோடு பேரம் படியாமல் தனிநாடு கண்ட முஸ்லீம் லீக் இருந்தது. முஸ்லீம் ஆளும்வர்க்கம் காங்கிரசோடு சரிசமமாக போட்டியிடும் நிலையிலிருந்தது. காரணம் அவர்கள் தங்களின் சொந்த சமூகப்பிரிவினரை அணிதிரட்டி வைத்திருந்தது.
இதேகாலத்தில்தான் தீண்டத்தகாத நிலையிலிருந்தாலும் சொத்துடைய பிரிவினரைக் கொண்டிருந்ததால் நாடார் சமூகம் மரியாதைக்குரிய இடத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருந்தது.
- ஆக, கல்வி மற்றும் வேலைவாய்ப்பு ஆகிய சீர்திருத்தங்கள் தலித்துகளுக்கு மட்டுமானதல்ல, அந்த சீர்திருத்தம் இடைநிலை சாதி உழைக்கும் மக்களுக்கும் அவசியமாக இருந்தது என்பதை சீர்திருத்தவாதிகள் பார்க்க மறுத்தனர்.
- அதனால் அவர்களால் இடைநிலை சாதி உழைக்கும் மக்களையும் சேர்த்தே சாதிய ஒடுக்குமுறையையும், சாதி ஒழிப்பையும் எதிர்கொள்ள வேண்டுமென்ற அறிவியலை உணர முடியாமல் இருந்தனர்.
- இதனால் இடைநிலை சாதியின் உழைக்கும் மக்களை அவர்களின் சொத்துடைய வர்க்கங்கள் சாதிய பின்புலத்தோடு அணிதிரட்டிக் கொள்ள அனுமதித்தார்கள்.
- இடைநிலை சாதிகள் என்பது பல பிரிவுகளைக் கொண்டது என்பதால் அதிலுள்ள ஒவ்வொரு பிரிவும் சலுகையை அடைய கடுமையாக போட்டியிடும் என்பதும்; சொந்த சாதியில் ஆளும்வர்க்கத்தைக் கொண்டிருப்பதால் சலுகைகளை அவர்கள் எளிதாக பெற முடியும் என்பது; அது தலித் மக்களுக்கு கிடைக்க வேண்டிய சலுகைகளை காவுகொள்ளும் என்பதும்; இது பின்னால் தலித்துகளுக்கும், இடைநிலை சாதி உழைக்கும் மக்களுக்கும் இடையில் மோதலை உருவாக்கும் என்பதும் சீர்திருத்தவாதிகளின் பலவீனத்தால் உணரவே முடியவில்லை.
2. அதிகாரத்தை அடைவதில் தலித்துகளுக்கு இருந்த பிரச்சினை!
முதலில் வெள்ளை அரசாங்கம் சுரண்டலை அடிப்படையாகக் கொண்ட அரசாங்கம். அவர்களுக்கு இத்துணைக் கண்டத்தில் அதிகாரம் செலுத்தவும், வளங்களை கொள்ளையடிக்கவும் உரிய கூட்டாளிகள் தேவைப்பட்டனர்.
இங்குள்ள சமூகச்சூழலைப் புரிந்துகொள்வதற்கு வெள்ளையர்களுக்கு உற்ற துணையாக பார்ப்பனர்கள் இருந்தனர். அதேபோல வணிகம் தொடங்கி தொழில்களை முன்னெடுப்பது வரைக்கும் வெள்ளையர்களுக்கு பனியா மற்றும் மார்வாரிகள் முக்கியமான மூலதன கூட்டாளிகளாக இருந்தனர்.
வெள்ளையர்களின் முக்கிய கூட்டாளிகளான இவ்விரண்டு பகுதியினரின் ஒற்றைப் பிரதிநிதியாகத்தான் காங்கிரசு இருந்தது.
அடிப்படையில் இவர்களுக்கு இருந்த சுரண்டல் நலன் இவர்களை ஒருங்கிணைத்திருந்தது. வெள்ளையர் இரட்டை ஆட்சியை ஒத்துக்கொள்வதற்கு முன்பும்கூட பார்ப்பனர்கள், பனியாக்கள் மற்றும் மார்வாரிகளின் ஆளும் வர்க்கப் பிரிவினரின் நலன்கள் பாதுகாக்கப்பட்டே வந்தது. ஆட்சியதிகாரத்தில் இவர்களுக்கு மறைமுகப் பங்கு எப்போதும் இருந்தது.
ஆக இரட்டை ஆட்சியை முறைக்கு முன்நிபந்தனையாக இருந்தது பார்ப்பனர்கள், பனியாக்கள் மற்றும் மார்வாரிகளின் ஆளும் வர்க்கப் பிரிவினரின் அழுத்தம் அல்ல. மாறாக, வெள்ளை முதலாளித்துவத்தின் தேவையிலிருந்து புதிய பங்காளிகளாக சேர்ந்திருந்த இடைநிலை சாதிகளின் சொத்துடைய வர்க்கங்கள்தான் அதற்குக் காரணம்.
வெள்ளையர்களின் சுரண்டல் உற்பத்திமுறை நீடிப்பதற்கு பனியாக்கள் மற்றும் மார்வாரிகளான வடநாட்டு சொத்துடைய வர்க்கங்கள் மட்டும் போதுமானதாக இல்லை. ஆதலால், மூலதனத்தை கொண்டிருந்த அனைத்துப் பிரிவினரையும் தொழில் வாய்ப்புகளில் தமது பங்காளியாக ஆக்கியிருந்தது வெள்ளை முதலாளித்துவம். இந்தப் போக்கில்தான் முதலியார், கவுண்டர், தேவர் என இடைநிலை சாதிகள் ஆளும் வர்க்கமாக வளர்ச்சியடைந்தன.
மூலதனத்தில் பங்களிப்பு செய்தவர்கள் அதிகாரத்தில் பங்கில்லாமல் தமது நலனை வளர்த்துக் கொள்ள முடியாது. ஆகவே அவர்கள் அதிகாரத்திற்கான கோரிக்கையை முன்னெடுத்தனர். “பார்ப்பனர் அல்லாதார் இயக்கங்கள்” தோன்றின. ஆங்கிலத்தை எதிர்க்காத சொத்துடைய வர்க்கங்கள் “இந்தி எதிர்ப்புப் போராட்டத்தை” தீவிரமாக ஆதரித்தன. இதன் நீட்சியே “வடக்கு வாழ்கிறது! தெற்கு தேய்கிறது” போன்ற முழக்கங்களாகும்.
மூலதனத்தில் பங்களிப்பு செய்தவர்கள் அதிகாரத்தில் பங்கில்லாமல் தமது நலனை வளர்த்துக் கொள்ள முடியாது என்பதுபோலவே மூலதன கூட்டாளிகளுக்கு அதிகாரத்தில் பங்கு கொடுக்காமல் எந்த அதிகார வர்க்கமும் ஆட்சியில் நீடிக்க முடியாது.
இதை நான்கு உணர்ந்த வெள்ளை ஏகாதிபத்தியம் இரட்டை ஆட்சி முறையை அங்கீகரித்தது. இடைநிலை சாதிகளின் சொத்துடைய வர்க்கங்களை முதன்மையாகப் பிரதிநிதித்துவப் படுத்திய “நீதிக் கட்சி” போன்றவைகள் ஆட்சியில் பங்கேற்றன.
- ஆக சுரண்டலை அடிப்படையாகக் கொண்ட சொத்துடைய வர்க்கங்களின் வெள்ளையர் ஆட்சியில் சொத்துடைய வர்க்கங்களே பங்கேற்க முடிந்ததுதான் இயல்பு.
- எந்த மூலதன பின்புலமும் இல்லாத தலித் சீர்திருத்த இயக்கங்கள் அதிகாரத்தில் பங்கு கிடைக்கும் என நம்பியதுதான் இயல்புக்கு மாறானது.
- தங்களை கறிவேப்பிலையாக ஆட்சியாளர்கள் பயன்படுத்தியதை அறியாமல் இருந்தது தலித் தலைவர்களின் மூடத்தனம்.
மூன்றாம் கட்ட சீர்திருத்த இயக்கங்கள்!
இது அதிகாரம் வெள்ளையரிடமிருந்து இங்குள்ள கொள்ளையரிடம் கைமாற்றப்படுவதையொட்டி தொடங்கி தொடர்கிறது. இதில் சோகம் என்னவென்றால், வெள்ளையரின் ஆட்சிக்காலத்திலேயே அதிகாரத்தில் பங்கேற்க போராடித் தோற்றவர்களே இப்போதும் அதிகாரத்தில் பங்கேற்று மாற்றத்தை நிகழ்த்தலாம் என்று நம்பியதாகும். நிலவுவது சொத்துடைய வர்க்கங்களின் ஆட்சி அதிகாரம் என்பதை உணர முடியாத அவர்களின் அறியாமையை என்ன சொல்ல?
அதிகார மாற்றத்திலிருந்த இன்னொரு போட்டியையும் இவர்களால் உணர முடியவில்லை.
- 1947-க்குப் பிறகு அதிகாரத்தைப் பங்கிட்டுக் கொள்வதில் பார்ப்பன – பனியா – மார்வாரிகளோடு இடைநிலை சாதிகளின் அதிகார வர்க்கம் கடுமையாகப் போட்டியிட்டது.
- இந்த காலத்தில்தான் தமிழ்நாட்டில் “வடக்கு வாழ்கிறது! தெற்கு தேய்கிறது!” என்ற முழக்கம் கூர்மையடைந்தது.
- தமிழக ஆளும்வர்க்கம் இந்த முழக்கத்தின் மூலம் தங்களின் இலாபத்தையும் சேர்த்து சுரண்ட நினைக்கிறது என்று உணர்ந்துகொண்ட ஆந்திர, கர்நாடக, கேரள சொத்துடைய வர்க்கங்கள் தங்களுக்கான மாநில கோரிக்கைகளை தீவிரப்படுத்தின.
- இந்த கட்டத்தில் பிராந்திய (மாநில) இடைநிலை சாதிய ஆளும்வர்க்கங்களின் பொருளாதார பங்களிப்புகள் இன்றியமையாததாக இருந்தது.
- ஆகவே அதிகாரத்தில் அவர்களுக்கான இடங்கள் உத்தரவாதப்படுத்துவது தவிர்க்க முடியாததாக மாறியது. மாநிலங்கள் உருவாக்கப்பட்டு இடைநிலை சாதிய ஆளும் வர்க்கங்களுக்கான பிராந்திய (மாநில) அதிகாரங்கள் வரையறுக்கப்பட்டன.
- இடைநிலை சாதிகளின் அதிகாரத்திற்கான மாநிலக் கட்சிகள் வளர்ச்சியடைந்தன.
இந்திய அதிகார கட்டமைப்பில் தவிர்க்க முடியாத சக்திகளாக இடைநிலை சாதிகளின் ஆளும்வர்க்கம் உறுதிபெற்ற பிறகு அவர்களின் அரசியல் இயக்கங்கள் தலித்துகளை மெல்ல மெல்ல கைகழுவத் தொடங்கின. கூடவே, தங்களின் நலன் சார்ந்த இயக்கங்கள் அதிகாரத்தில் இருந்ததால் இடைநிலை சாதி ஆளும் வர்க்கங்கள் தலித்துகளின் மீதான சுரண்டலையும், தாக்குதலையும் தீவிரப்படுத்தின. நாடெங்கும் “கீழ்வெண்மணி” போன்ற கொடுமைகள் அரங்கேறின.
ஆக நிலவுகிற அரசு என்பது சொத்துடைய வர்க்கங்களின் அரசேயாகும் என்று சீர்திருத்தவாதிகளால் அப்போதும் உணர முடியவில்லை. மாறாக அவர்கள் கல்வி, வேலைவாய்ப்பு போன்ற சீர்திருத்தங்களிலே மூழ்கிக் கிடந்தனர்.
ஆனாலும் தீவிர சீர்திருத்தம் பேசியவர்களின் பின்னால் திரள்வதற்கு இப்போது தலித் மக்களில் ஒரு பிரிவினர் தயாராகி இருந்தனர். அவர்கள் வெள்ளையர் காலத்தில் தொடங்கி நீடித்த சீர்திருத்தத்தினால் பலனடைந்த சிறு பிரிவினராவர்.
இவர்களிடமிருந்து இரண்டு சீர்திருத்த இயக்கங்கள் உருவாகின.
- குறைந்த அளவிலாவது எம்.பி, எம்.எல்.ஏ-க்களைப் பெற்று அதன் மூலம் கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் சமூக அந்தஸ்தை தலித்துகள் அடைவதற்கான அரசியல் இயக்கங்களை முன்னெடுப்பது.
- எந்தவித இழப்புமின்றி பலனை அடைய என்.ஜி.ஓ-க்களின் பின்னால் அணிதிரள்வது.
ஆக, இறுதியில் சீர்திருத்தவாதிகளின் நிகழ்ச்சியில் பிழைப்புவாதம் மேலோங்கி சாதி ஒழிப்பு என்பது இல்லாமல் போனது.
சீர்திருத்தத்தம் என்ன செய்யும்?
சீர்திருத்தம் என்பது அனைத்து மக்களுக்குமான சமூகத் தேவையை நிறைவு செய்வதல்ல. மாறாக சுரண்டும் வர்க்கம் தமது நலனுக்கு பங்கம் வராத வகையில் மக்களுக்கு சில வாய்ப்புகளை வழங்குவதாகும். இந்த வாய்ப்புகள் எப்போதும் நிரந்தரமானதோ, பெருகிக் கொண்டே இருப்பதோ அல்ல.
உதாரணத்திற்கு, உற்பத்தியில் எந்திரங்களின் பங்களிப்பு அதிகரிக்கப்படும் போது மனிதர்கள் வேலையை இழப்பதுதான் இயல்பு. அதுபோல கல்வி தனியார்மயம் ஆகும்போது அது ஏழைகளுக்கு கிடைக்காமல் போவதுதான் இயல்பு.
ஆக முதலாளித்துவம் எப்போதும் பற்றாக்குறையை உருவாக்குவதும், அப்படி பற்றாக்குறையுடன் இருக்கிற வாய்ப்புகளை மக்களுக்கு வழங்கி சமாளிப்பதும்தான் சீர்திருத்தம். தனது இலாபவெறியால் தான் உருவாக்கும் பற்றாக்குறைய மறைக்க “தகுதியுடையவருக்கே வாய்ப்பு” என்று மக்களை ஏமாற்றி மோதவிடுவது முதலாளித்துவத்தின் சிறப்பு.
சீர்திருத்தம் என்பது சலுகைகளை அடைவதற்கான போட்டியையும், வன்முறையையும் மட்டுமே உருவாக்கும். போட்டியில் அதிகார பின்புலம் உடையவர்கள் வெல்வதையை உறுதிபடுத்தும். இவ்வகையில்தான் இடஒதுக்கீடு எனும் சீர்திருத்தம் அமலில் இருந்தாலும்கூட மருத்துவம் போன்ற உயர்கல்வி வாய்ப்புகள் ஆதிக்க சாதிகளின் கட்டுபாட்டிலேயே இருக்கிறது.
எனவே சீர்திருத்தம் என்பது மக்களிடையே சமத்துவத்தை உண்டாக்கும் கருவியல்ல. அது கிடைக்கிற வாய்ப்புகளுக்காக ஒருவரையொருவர் அடித்துக் கொள்ள வைக்கும் வழிமுறையே ஆகும்.
அதை உணராததால் தலித் அமைப்புகள் சாதியப் பிரச்சினையை தீர்க்கவோ, துளி அளவேனும் முன்னேறவோ முடியவில்லை.
வர்க்கப்போராட்ட பாதை
சீர்திருத்தத்தின் இந்த சீர்கேடுகளை கம்யூனிஸ்டுகள் நன்கு உணர்ந்தவர்கள். ஆதலால்தான் “சீர்திருத்த வழிமுறை என்பது சமூகத்தை சீழ்பிடிக்க வைத்து துன்பப்படுத்துவதாகும்” என அறிவித்தார்கள். நிலவுகிற அதிகாரத்தைத் தகர்க்காமல், புரட்சிகர அதிகாரத்தை நிறுவாமல் சாதிய ஒடுக்குமுறையை மட்டுமல்ல, எந்த ஒடுக்குமுறையையும் ஒழிக்க முடியாது என அறைகூவல் விடுத்தார்கள். புரட்சிகர அதிகாரத்தை நிறுவுவதற்கு வர்க்கப் போராட்டம் ஒன்றே வழி என்ற அறிவியலை முன்வைத்தார்கள். வர்க்கப் போராட்டத்திற்கு சாதிகளுக்கிடையே வர்க்க ஒற்றுமை வேண்டும் என்பதை வலியுறுத்தினார்கள்.
கம்யூனிஸ்டுகள் “உழுபவனுக்கே நிலம் சொந்தம்! உழைப்பவருக்கே அதிகாரம்!” என்ற புரட்சிகர முழக்கத்தின் மூலம் தலித்துகளையும், பிற சாதி உழைக்கும் மக்களையும் ஒற்றுமைப்படுத்தினார்கள். “கைய்யூர் விவசாய எழுச்சி”, “புன்னப்புரா - வயலார் எழுச்சி”, “வீரத்தெலுங்கானா”, “தஞ்சை விவசாய இயக்கம்” என புரட்சிகர இயக்கம் முன்னேறியது. “அடித்தால் திருப்பி அடி” என்ற நடைமுறையின் மூலம் இரண்டாயிரம் ஆண்டுகாலமாக கோலோச்சிக் கொண்டிருந்த சாதியாதிக்கத்தை ஆட்டங்காணச் செய்தது.
சமவெளியில் சாதியாதிக்கத்தை எதிர்கொண்ட கம்யூனிஸ்டுகள்தான் பெருந்தோட்டங்களிலும் புரட்சிகரப் பணியை முன்னெடுத்தனர். இந்தியாவிலும் சரி, மலேசியாவிலும் சரி நாதியற்ற மக்களின் நாயகர்களாக தொழிற்சங்கங்களும், கம்யூனிஸ்ட் கட்சிகளுமே இருந்தன.
சாதியை ஒழிக்க வேண்டுமென்ற ஆசையுடைய சீர்திருத்தவாதிகள் இந்த நேரத்தில் கம்யூனிஸ்டுகளோடு கரம்கோர்ப்பதற்கு மாறாக சுரண்டலையும், சாதியாதிக்கத்தையும் அடிப்படையாகக் கொண்ட ஆளும் வர்க்கங்களின் பின்னால் போய்நின்றனர்.
ஆளும் வர்க்கம் புரட்சியாளர்களை கொத்துக்கொத்தாக கொன்று குவித்தது. சாதி ஒழிப்பும், சமூக விடுதலையும் பின்னுக்குப் போனது!
(தொடரும்)
- பாவெல் சக்தி & திருப்பூர் குணா