தொடர்புடைய படைப்புகள்

அமெரிக்காவின் 50% வரி விதிப்பால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள திருப்பூர் பின்னலாடைத் தொழில்கள் குறித்து மேற்கொண்ட கள ஆய்வின் கூட்டறிக்கை பின்வருமாறு.

அமெரிக்காவின் 50% வரி விதிப்பிற்குப் பின் திருப்பூரினுடைய தொழிலுற்பத்தி நிச்சயமற்ற நிலையை நோக்கி நகர்ந்திருப்பதை எங்கள் குழுவால் கண்டடைய முடிந்தது. நாங்கள் சந்தித்த திருப்பூர் ஆடை உற்பத்தியில் ஈடுபட்டுள்ள பல்வேறு தரப்பு நபர்களும் இதை உறுதி செய்தனர்.

tiruppur factoryஅமெரிக்க அரசின் கூடுதல் வரி விதிப்பின் காரணமாக திருப்பூர் ஆடை ஏற்றுமதி நிறுவனங்கள் மாதம் ரூ. 2000 கோடி வரை இழப்பைச் சந்திக்க நேரிடும் என மதிப்பிடப்படுகிறது.

அமெரிக்க ஏற்றுமதி சார்ந்த உற்பத்தி நின்று போனதன் உடனடி, நேரடி பாதிப்பைத் தொழிலாளர்களே எதிர்கொள்கின்றனர். திருப்பூரில் தொழிலாளர்களின் வேலையிழப்பு அதிகரித்துக் கொண்டிருக்கிறது.

அமெரிக்க ஏற்றுமதியானவை 35- 40% உற்பத்தி தற்போது முடங்கியுள்ளதால், அதற்கான உற்பத்தியில் ஈடுபட்டு வந்த 35-40% தொழிலாளர்களும் அதாவது 3.5 - 4 லட்சம் தொழிலாளர்களும் வேலையிழப்பைச் சந்திக்க நேரிடும் என்பது தெரிய வருகிறது.

மேலும் எங்கள் கள ஆய்வில் கண்டடைந்த மிக முக்கியமான விசயமென்பது திருப்பூர் ஆடை உற்பத்தியில் ஈடுபடும் 10 லட்சம் அளவுள்ள தொழிலாளர்களில் ESI நிதி பயனாளிகளாக 3.5-4 லட்சம் தொழிலாளர்கள் மட்டுமே அரசின் பதிவுகளில் உள்ளனர். முறைசாராத் தொழிலாளர்களாக இருக்கிற, குறிப்பாகப் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் குறித்த துல்லியமான தகவல்கள் அரசிடமே இல்லை.

அரசின் பதிவுகளில் இல்லாத, முறைப்படுத்தப்படாத சற்றேக்குறைய 6 லட்சம் தொழிலாளர்கள் வேலையிழந்தால் கூட அரசின் தரவுகளின் அடிப்படையில், திருப்பூரில் வேலையிழப்பே இல்லை என்பது தான் ஆவணப் பதிவாக இருக்கும்.

எனவே அரசு, திருப்பூர் ஆடை உற்பத்தியில் ஈடுபடும் தொழிலாளர்கள் குறித்த முழுமையான தகவல்களை அரசின் ஆவணப் பதிவின் கீழ்க் கொண்டுவர வலியுறுத்துகிறோம். அவர்களுக்கு ESI, நிதி உரிமைகளை உத்தரவாதப்படுத்திக் கொடுக்க வேண்டுகிறோம்.

திருப்பூர் பின்னலாடைத் தொழில்கள் கடந்த 10 ஆண்டுகளாகவே பல்வேறு நெருக்கடிகளைத் தொடர்ந்து சந்தித்து வருகின்றன. பணமதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி மற்றும் கொரோனா பேரிடர் போன்றவை பின்னலாடைத் தொழிலைக் கடுமையாகப் பாதித்துள்ளன.

பின்னலாடை உற்பத்தி நிறுவனங்களுக்கும், தொழிலாளர்களுக்கும் அரசு ஆதரவாக இல்லாதது மட்டுமன்றி அதுவரை இத்தொழில்களுக்குக் கொடுத்து வந்த அரசின் பல்வேறு உதவிகளையும் நிறுத்தியுள்ளது. பருத்தி, நூல் போன்ற இத்தொழில்களுக்கான கச்சாப் பொருட்களுக்கு இறக்குமதியில் இருந்து வந்த சலுகைகளையும் நீக்கியுள்ளது.

இதன் காரணமாக 2014- 15 ஆண்டு சமயத்தில் ரூ. 40,000 கோடி உற்பத்தியை எட்டிவிட்ட திருப்பூர் பின்னலாடை உற்பத்தி, பத்தாண்டுகள் கடந்து இன்றும் அந்த ரூ.40,000 கோடி உற்பத்தி மதிப்பைத்தான் எட்டிப் பிடித்திருக்கின்றன.

சிறு, குறு தொழில்களுக்கு எதிரான பொதுவான போக்குகள் மட்டுமன்றி, திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதியாளர்களுக்கு நேரடியான பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் பத்தாண்டுகளுக்கு முன்பு நடைமுறையில் இருந்த வரிப் பலன்கள், வரி விலக்குகள் உள்ளிட்டவைகளை ஒன்றிய அரசு நீக்கியுள்ளது.

மிகக் குறிப்பாக திருப்பூரிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் ஆடைகளுக்கு இறக்குமதி நாடுகள் விதிக்கும் வரிச்சுமையை ஏற்கும் விதமாக 15 வருடங்களுக்கு முன்பு வரை அரசால் 22.5% வரை ஊக்கத்தொகை (Drawback) கொடுக்கப்பட்டு வந்தது. அது படிப்படியாகக் குறைக்கப்பட்டு 2- 3% சதவீத அளவில் மட்டுமே கொடுக்கப்படுகிறது.

உள்நாட்டு- திருப்பூர் ஆடை உற்பத்திக்கு வழங்கி வந்த அரசின் ஆதரவு விலக்கப்பட்டது ஒருபுறமென்றால், மறுபுறம் அதுநாள் வரையிலும் வெளிநாட்டு ஆடைகள் இறக்குமதிக்கு இருந்து வந்த கட்டுப்பாடுகளை நீக்கியது மோடி அரசு.

இந்திய சந்தையைப் பொறுத்தவரை வங்கதேச ஆடைகள் இந்தியச் சந்தையை ஆக்கிரமித்துள்ளன.

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சிக் காலத்தில் இத்தகைய ஆடை இறக்குமதிக்கு 12% எதிர் மானியவரி (Counter Vailing Duty) போடப்பட்டதால், இங்கு ஆடை இறக்குமதி செய்வது கட்டுப்படுத்தப்பட்டது. இப்போது அது முற்றிலுமாக நீக்கப்பட்டு, தங்கு தடையற்ற இறக்குமதி நடைபெறுகிறது. இதன் காரணமாக உள்ளூர் சந்தையில் திருப்பூர் உற்பத்தி ஆடைகளுக்கு இடமில்லாமல் போகிறது.

இந்த நிலையில் குற்றுயிரும், கொலையுயிருமாகப் போராடிக் கொண்டிருந்த திருப்பூர் பின்னலாடை உற்பத்தியின் நிலை தற்போது அமெரிக்காவின் கூடுதல் வரி விதிப்பால் முற்றிலுமாக கவலைக்கிடமாகியிருக்கிறது.

அமெரிக்கா அல்லாத பிற நாடுகளுக்கான ஏற்றுமதி விற்பனை மற்றும் உள்ளூர் சந்தை விற்பனை என்பவை, திருப்பூர் உற்பத்தியாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளுக்கு மாற்றுத் தீர்வாகக் கூறப்படுகிறது.

இது பற்றி எங்கள் குழு உரையாடுகையில் உற்பத்தியாளர்கள் தரப்பானது, ‘திருப்பூரின் தற்போதைய உற்பத்தி செலவினங்களைக் கணக்கில் கொண்டால், ஏற்கனவே பிற நாட்டு ஆடை உற்பத்தியாளர்களால் கைப்பற்றப்பட்டுள்ள அமெரிக்கா அல்லாத சந்தையில், அவர்களோடு போட்டி போடுவது கடினம்’ என்றனர்.

மேலும் 'உள்நாட்டு சந்தையைப் பொறுத்தவரை முன்னரே குறிப்பிட்டது போல வங்கதேச ஆடைகள் ஆக்கிரமித்துள்ளது மட்டுமல்லாது, இந்தியாவில் தற்போது நிலவும் பொருளாதார நிலையின் காரணமாக மக்களிடம் போதுமான வாங்கும் சக்தி இல்லை’ என்பதையும் பதிவு செய்தனர்.

அமெரிக்கா அல்லாத சந்தைக்கான உற்பத்தி மற்றும் உள்நாட்டு சந்தைக்கான உற்பத்தி என்பவை நீண்டகால நோக்கில் திட்டமிடப்பட வேண்டியவை.

ஆனால் திருப்பூர் உடனடியாக மீண்டு வர, அமெரிக்க அரசுடனான அயலுறவுப் பேச்சுவார்த்தையே தீர்வாக அமையும் என்பதை எங்களிடத்திலே பதிவு செய்தனர்.

'இந்தியாவின் ரஷ்ய கச்சா எண்ணெய் இறக்குமதியே' அமெரிக்க அரசின் கூடுதல் வரி விதிப்பிற்கான முக்கிய காரணமாகக் குறிப்பிடப்படுகிறது.

அம்பானி போன்ற ஓரிரு சூதாட்ட பனியா பெருமுதலாளிகளின் கொள்ளை லாபத்திற்காகத் தீர்மானிக்கப்பட்ட இந்திய அரசின் அயலுறவுக் கொள்கையினால், தமிழ்நாட்டினுடைய திருப்பூரின் ஆயிரக்கணக்கான ஆடை உற்பத்தியாளர்கள் நட்டமடைந்திருக்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது.

பிரேசில், சீனா போன்ற நாடுகள் மீது அமெரிக்காவின் கூடுதல் வரி விதிப்பையொட்டி தொழில் உற்பத்தியாளர்களுக்கு ஏற்படும் பாதிப்பை அந்நாட்டு அரசுகள் தாங்கள் ஏற்றுக் கொள்வதாகக் கூறித் தொழிலுற்பத்தியாளர்களை இழப்பிலிருந்து பாதுகாக்கின்றன.

அதுபோன்று இந்திய அரசும், தனது அம்பானி சார்பால் பாதிப்படைந்துள்ள திருப்பூர் தொழிலுற்பத்தியாளர்களுக்குரிய இழப்பீட்டை வழங்கி அவர்களைப் பாதுகாக்க வேண்டும்.

பின்னலாடை உற்பத்திக்குத் தேவையான பருத்தி உள்ளிட்ட மூலப் பொருட்களுக்கு வரி விலக்கு அளிக்க வேண்டும். குறிப்பாக பருத்தி இறக்குமதிக்கு நிரந்தர வரி விலக்கு வழங்கப்படுதல் வேண்டும்.

திருப்பூர் பின்னலாடை உற்பத்தியாளர்களின் வங்கிக் கடனுக்குக் குறிப்பிட்ட காலம் தளர்வளிப்பதுடன், வட்டியில்லா புதிய கடன்களை வழங்கிட ஒன்றிய அரசு ஆவன செய்ய வேண்டும்.

அமெரிக்காவிற்கான ஏற்றுமதி பிரச்சனை சீராகும் வரையிலும், திருப்பூர் பின்னலாடை உற்பத்திக்குத் தமிழ்நாடு அரசு மின்சாரக் கட்டணத்திலிருந்து விலக்கு அளிக்க வேண்டும்.

திருப்பூர் பின்னலாடை உற்பத்தியில் ஈடுபட்டு வந்த தொழிலாளர்களுக்கு உரிய தொழிலாளர் உரிமைகளை உறுதி செய்யுங்கள். இந்நெருக்கடி காலத்தைக் கடப்பதற்கு அவர்களுக்கு இழப்பீடு வழங்கப்பட வேண்டும்.

ஒன்றிய அரசினுடைய தோல்வியடைந்த அயலுறவுக் கொள்கையே, திருப்பூர் எதிர் கொண்டிருக்கும் இன்றைய நெருக்கடிக்கான முழுமுதற் காரணமாகப் பார்க்கிறோம்.

இந்திய அயலுறவுக் கொள்கையும், தொழிற் கொள்கையும் பரந்துபட்ட பல்தேசிய இனங்களது நலனைப் பிரதிநிதித்துவப்படுத்தாது, சூதாட்ட பனியா முதலாளிகளது முதலீட்டு நலனுக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுப்பதாலேயே, அதனது அயலுறவு மற்றும் தொழிற் கொள்கையில் தமிழ்நாட்டின் 40,000 கோடி வர்த்தகம் பொருட்படுத்தப்படாமல் இருப்பதாகப் பார்க்கிறோம்.

இந்தியா, ஐந்து டிரில்லியன் டாலர் பொருளாதார உற்பத்தி இலக்கை நோக்கிப் பயணிக்க, தமிழ்நாடு ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதார உற்பத்தி இலக்கை நோக்கி பயணிக்கிறது. ஒட்டுமொத்த இந்திய உற்பத்தி இலக்கில் ஐந்தில், ஒரு பங்கு; அதாவது ஒட்டுமொத்த இந்தியப் பொருளாதார உற்பத்தியில் 20 சதவீதம் பங்களிக்கக்கூடிய இடத்தை நோக்கி தமிழ்நாடு முன்னேறி வருகிறது.

தமிழ்நாட்டு முதல்வர் பல்வேறு நாடுகளுக்கும் சென்று அந்நிய முதலீட்டைத் தமிழ்நாட்டிற்குள் கொண்டுவரும் ஒப்பந்தங்கள் மேற்கொள்வதைப் பார்க்கிறோம். இவை ஒன்றிய அரசின் அயலுறவுத் துறை அமைச்சகத்திற்குட்பட்ட நேரடி வகையிலான பங்கேற்பாக இல்லையென்றாலும், அடிப்படையில் இந்திய அயலுறவுத் துறை அமைச்சகம் உலக நாடுகளுடன் வர்த்தக ரீதியாக மேற்கொள்கிற பேச்சுவார்த்தையை ஒத்ததாகவே தமிழ்நாட்டு அரசினுடைய ஒப்பந்த பேச்சுவார்த்தைகள் அமைகின்றன.

உலக நாடுகளுடனான வர்த்தக உறவின் பொருட்டு இந்திய அரசின் அயலுறவுக் கொள்கையில் பங்கேற்க வேண்டிய வரலாற்றுக் கட்டத்தை நோக்கி தமிழ்நாடு நகர்ந்திருப்பதையே இது காட்டுகிறது. தமிழ்நாடானது உலக நாடுகளுடனான வர்த்தகத்தில் தனது வகிபாகத்தை உறுதிப்படுத்த வேண்டிய கட்டத்தை நோக்கி வந்தடைந்துள்ளது.

தமிழ்நாடு அரசானது இந்திய அயலுறவுக் கொள்கையில் பங்கேற்கவில்லை என்றால் தற்போது திருப்பூர் பின்னலாடைத் தொழில்களுக்கு ஏற்பட்டுள்ள நிச்சயமற்ற தன்மை, எதிர்காலத்தில் பிற தொழில்களுக்கும் ஏற்படக்கூடிய சூழலைத் தவிர்க்க முடியாமல் போகும்.

மேலும் இந்தோ-பசிபிக் கடற்பாந்தியத்தின் மிக முக்கியமான புவிசார் அமைவிடத்திலுள்ள தமிழ்நாட்டின் துறைமுகங்கள் புவிசார் அரசியல் நோக்கிலும், இந்தியாவின் மிகப் பெரும் கிழக்குக் கடற்கரையோர எல்லை மாநிலம் என்றளவிலும் இந்திய அயலுறவுக் கொள்கையில் தமிழ்நாட்டின் பங்கேற்பு மிகவும் அவசியமாகும்.

கூட்டாட்சி அரசியல் உரிமை பேசுவோர் கூட ஒன்றிய அரசு கொண்டிருக்க வேண்டிய சில முக்கியத் துறைகளில் அயலுறவுத் துறையையும் குறிப்பிட்டே பேசுவர். ஆனால் இன்று தமிழ்நாடு அடைந்திருக்கும் தொழில் வளர்ச்சியானது, அயலுறவுக் கொள்கையிலும் தமிழ்நாடு அரசின் பங்கேற்பைக் கோருகிற இடத்திற்கு நம்மை அழைத்து வந்திருக்கிறது.

எனவே திருப்பூர் எதிர் கொண்டிருக்கும் இன்றைய தொழில் நெருக்கடி மட்டுமன்றி, தமிழ்நாடு எதிர்கொள்ள இருக்கும் பல்வேறு எதிர்கால நெருக்கடிகளையும் கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசானது இந்திய வெளியுறவுக் கொள்கையில் பங்கேற்க வேண்டுமென்பதை எங்களது கூட்டறிக்கையின் வாயிலாக முன் வைக்கிறோம்.

அயலுறவுத் துறை அமைச்சகமானது மாநில அரசுகளை உறுப்பினர்களாகக் கொண்ட குழுவாக அமைக்கப்பட வேண்டுமென்பதைத் தமிழ்நாட்டின் அரசியல் கட்சிகள், சமூக இயக்கங்கள், அமைப்புகள் வலியுறுத்த வேண்டுமென்பதை இச்சமயத்திலே கேட்டுக் கொள்கிறோம்!

- அரசியல் கட்சிகள் மற்றும் சனநாயக இயக்கங்களின் கூட்டறிக்கை

கூட்டறிக்கை ஒருங்கிணைப்பு:

பெரியாரிய அம்பேத்கரிய மக்கள் இயக்கம்,

கூட்டாட்சியியல் நடுவம்- தமிழ்நாடு

புரட்சிகர இளைஞர் முன்னணி, மதுரை

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.