இந்திய ஒன்றியத்தை எந்தக் கட்சி ஆட்சி செய்தாலும், அனைவருக்கும் ஒரே வகையான மொழிக்கொள்கைதான் உள்ளது.

ஒற்றை இந்தியா, இந்து நாடு, தேசிய இன உரிமை மறுப்பு, இந்தித் திணிப்பு ஆகிய கொள்கைகளில் காங்கிரசு மற்றும் பாசக இரு கட்சிகளுக்கும் பெரிய வேறுபாடுகள் கிடையாது.

அதிலும் 2014-ஆம் ஆண்டு பாசக ஆட்சி அமைந்த பிறகு, இந்தத் திட்டங்கள் எல்லாம் படிப்படியாக அசுர வேகமெடுக்கத் தொடங்கி உள்ளன. ஒற்றை இந்தியாவின் அடையாளமாக இந்தியை அனைத்து மாநிலங்களிலும் மூன்றாவது மொழியாகக் கட்டாயமாகக் கற்க வேண்டும் என்கிற திட்டத்தின் அடிப்படையில் புதிய கல்விக் கொள்கையை அறிமுகப்படுத்தியது ஒன்றிய அரசு.

இருமொழிக் கொள்கையை ஏற்றுக்கொண்ட தமிழ்நாடு, புதிய கல்விக் கொள்கையை ஏற்க மறுத்தது. அதனால் 'அனைவருக்கும் கல்வி' என்ற திட்டத்தின் கீழ் ஒன்றிய அரசு வழங்கும் கல்வி நிதியைக் கொடுக்க மறுத்து, தமிழ்நாட்டிற்கு ஒதுக்கிய நிதியை வேறு வட மாநிலங்களுக்குத் திருப்பி விட்டனர்.

இந்தியாவின் மற்ற மாநிலங்கள் ஏற்றுக்கொண்ட போதும், தமிழ்நாடு மட்டும் இந்திக்கு எதிரான போக்கை மாற்றிக் கொள்ளவே இல்லை. அதற்குக் காரணம், இந்திய விடுதலைக்கு முன்பும் பின்னும் தமிழர்கள் நடத்திய மொழிப் போராட்டங்களும், உயிர் ஈகங்களுமே ஆகும்.

அந்த வகையில் 2026-ஆம் ஆண்டு, மார்ச் 11-ஆம் நாள், ஒன்றிய அரசின் இந்தித் திணிப்பை, தமிழர்களின் வேலைவாய்ப்புப் பறிப்பைக் கண்டித்து மே 17 இயக்கத்தினர் சென்னை நுங்கம்பாக்கம் நகர்த் தொடர்வண்டி நிலையத்தில், இந்தி எழுத்துகளைக் கரிபூசித் தொடர்ப்புசி அழிக்கும் போராட்டத்தை முன்னெடுத்தனர்.

ஆதிக்க இந்தி ஒழிக! அன்னை தமிழ் வாழ்க! என முழங்கிக்கொண்டே உற்சாகமாக இந்தி எழுத்துகளை அழித்தனர். தொடர்வண்டிக் காவல்துறையினரின் தடுப்பையும் மீறி, தோழர் திருமுருகன் காந்தி போராட்டத்தின் நோக்கம் குறித்து நடைமேடையில் நின்றுகொண்டிருந்த மக்களிடம் விழிப்புணர்வுப் பரப்புரை செய்துகொண்டிருந்தார். அந்த வேளையில் யாரும் எதிர்பாராத வகையில், தமிழ் வாழ்க! தமிழ் வாழ்க! என முழங்கிக்கொண்டே இயக்கத்தின் தோழர் சிவா திலீபன் அவர்கள் வந்துகொண்டிருந்த புறநகர் தொடர்வண்டி முன் பாய்ந்தார். கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த இந்த நிகழ்வால் கூடியிருந்த தோழர்கள் அதிர்ச்சிடைந்தனர்; செயலற்றுத் திகைத்தனர். பின்னர் அருகில் உள்ள ராஜீவ் காந்தி பொது மருத்துவமனைக்குத் தோழரைத் தூக்கிச் சென்றனர். அனைவருக்கும் பெருங்கவலை தொற்றிக்கொள்ள, செய்தி கேட்டுத் தீயாகத் தமிழ்நாடு எங்கும் பரவியது. இது எல்லா இயக்கத் தோழர்களின் மனத்திலும் ஒரு கொந்தளிப்பை உருவாக்கியது. தோழருக்குத் தலையில் பெரும் காயம் ஏற்பட்டிருந்ததால் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார். தோழரைத் தமிழ்நாட்டின் முதல்வர் உட்பட அனைத்துக் கட்சித் தலைவர்களும் பல்வேறு முற்போக்கு இயக்கத் தோழர்களும் தோழரின் இணையர் கீதா அவர்களையும் மே 17 தோழர்களையும் சந்தித்து ஆறுதல் கூறினர். கவலையுடன் வரும் அனைவரிடமும் மிகுந்த நம்பிக்கையுடன் எந்தவிதப் பதற்றமுமின்றி தோழரைப் பற்றியும் அவரின் போராட்டக் குணங்கள் பற்றியும் தெளிவான அரசியல் புரிதலோடு பேசிய தோழர் கீதாவை எவரும் மறக்க இயலாது. தாயைப் போலவே மகள் கோகிலாவும் தமிழ் காக்கும் போராட்டத்தில் தனது தந்தையின் செயலைப் பெருமையாகவே கருதுகிறேன் என்றும், அவர் பற்றவைத்த நெருப்பு தமிழ்நாடு எங்கும் தமிழர்களின் மனத்தில் எழுச்சிகளை மூட்ட வேண்டும் என்பதே எனது விருப்பம் என்றும் கூறினார்.

அனைவரின் நம்பிக்கையும் பொய்க்கும் வண்ணம் 18-03-2026, புதன்கிழமை இரவு 9 மணி அளவில் தோழரின் இயங்குதிறன் முழுமையாக நின்றுபோனது. அடக்க முடியாத மனக்குமுறல்கள், யாரையும் யாரும் ஆற்றுப்படுத்த முடியாத துயரம்; தோழர்கள் மருத்துவமனையில் குவியத் தொடங்கினர். தோழர் சிவா திலீபன் மறைந்த செய்தி தமிழ்நாடு எங்கும் பரவியது. தோழர்கள் அனைவரின் நெஞ்சத்திலும் இந்தி எதிர்ப்புப் பார்வையை ஏற்றிவைக்க நினைத்த தோழர் சிவா திலீபனின் எண்ணம் ஈடேறிவிட்டது.

தோழர் சிவகுமார் என்கிற சிவா திலீபன், சென்னை வில்லிவாக்கத்தைச் சேர்ந்த 56 வயது நிரம்பிய நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்தவர். அவரின் இணையர் தோழர் கீதா என்கிற இளமொழி. இரண்டு பெண் பிள்ளைகள் கோமதி மற்றும் கோகிலா ஆவர். ஆரவாரமில்லாத அமைதியான குடும்பம். திராவிடப் பற்றாளராக விளங்கிய சிவா திலீபன், ஈழத்தில் நடந்த இன அழிப்பிற்குப் பிறகு திராவிடம் உள்ளடக்கிய தமிழ்த்தேசிய அரசியல் மீது நாட்டம் கொண்டபோது மே 17 இயக்கம் நடத்திய அனைத்துப் போராட்டங்களிலும் கலந்துகொண்டவர்.

அவரின் உயிர் ஈகம் கூட ஒரு நொடி உணர்ச்சிப் பெருக்கில் நடந்தது அல்ல. தான் பிறந்த தமிழ்நாட்டிற்கும், தனது தாய்மொழித் தமிழுக்கும் ஏதாவது செய்ய வேண்டும் எனப் பல நாட்களாகப் பேசி வந்தவர். இந்த இந்தி எழுத்து அழிப்புப் போராட்டத்தைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டுமென முந்தைய நாள் இரவே முடிவுசெய்துவிட்டார்.

தோழர் சிவா திலீபனின் இறுதி ஊர்வலம் மறுநாள் மாலை வீட்டிலிருந்து தொடங்கி மூலக்கொத்தளம் வந்தடைந்தது. வரும் வழிகள் முழுக்க சாலையெங்கும் மக்கள் கூடி நின்று, இரங்கல் தெரிவித்து, முழக்கமிட்டு வீரவணக்கம் செலுத்தினர். ஆயிரக்கணக்கான தோழர்கள் பல்வேறு கட்சி இயக்கங்களில் இருந்து கலந்துகொண்டனர். அனைவரும் விண் அதிரத் தமிழ் வாழ்க! இந்தி வீழ்க! என்று முழக்கமிட்டுச் சென்றனர். இறுதி நிகழ்வு மொழிப்போர் ஈகியர் நினைவிடத்தில் நடந்தது. மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி ஒருங்கிணைப்பில் பல்வேறு இயக்கத் தலைவர்களும் இரங்கலுரை ஆற்றினர். தோழர் சிவா திலீபன் இணையர் கீதாவும் மகள் கோகிலாவும் ஆற்றிய வீரவணக்க உரை அனைவரின் மனதையும் ஈட்டியாய்த் துளைத்தது. தமிழ்ச்சமூகத்தைப் போராட்டக் களத்திற்கு அழைப்பு விடுத்து, தங்களின் கண்ணீர் வணக்கத்தைத் தெரிவித்தனர்.

இந்தியை எதிர்த்துத் தாய்மொழி காக்கும் போராட்டத்தில் உயிர்நீத்த மொழிப்போர் ஈகியர்கள் நடராசன், தாளமுத்து, கீழப்பழவூர் சின்னசாமி, விராலிமலை சண்முகம், கீழவளவு முத்து, சிவகங்கை இராசேந்திரன், சத்தியமங்கலம் முத்து, அய்யம்பாளையம் வீரப்பன், பீளமேடு தண்டபாணி, மயிலாடுதுறை சாரங்கபாணி மற்றும் எண்ணற்ற ஈகியர் வரிசையில் வில்லிவாக்கம் சிவா திலீபனும் இணைந்துவிட்டார்.

ஒன்றிய அரசின் ஆதிக்க அதிகாரத் திமிரான இந்தித் திணிப்பிற்கு எதிரான போரைத் தோழர் விட்டுச் சென்ற இடத்திலிருந்து தொடர்வதே, அவரின் ஈகத்திற்குச் செய்யும் மரியாதையாகும்.

இந்தி ஆதிக்கத்தை வெட்டிப் புதைப்போம்!
அன்னைத் தமிழை அதிகாரத்தில் ஏற்றுவோம்!

- தமிழ்முகம்

தோழர் சிவா திலீபன் காயமுற்று சிகிச்சையில் இருந்தபோதும், முடிவெய்தியபோதும் தோழர் கீதா சூழலை மிகவும் மன உறுதியுடனே எதிர்கொண்டார்.

அவரின் கவிதை வரிகள்! இதோ...

அன்று பூத்த மலரல்லவோ
உன் முகம்
செந்தளிர் மேனி இன்னும் ஆண்டுகள் வாழுமே!
எப்போதும் தமிழைப் போற்றும்
உன் உளம் நானறிவேனே!
இன்முகத்துடன் போராடி உருக்குலைந்த உயிரே!
அன்றே நின்றதடா என் இதயம்
இன்று என்னுள் துடிப்பது
உன் இதயமே!
அவசரப்பட்டாயா என்றனரே
நீயோ இன்றில்லை என்றால் என்று என்பாயே!
நாம் அதிகம் பேசியது இயக்கத்தைப் பற்றித் தானே!
அன்றாட அரசியலை விரல் நுனியில் வைத்த ஆசானே!
என் வாழ்வில் வந்த வசந்தமே
உன் நினைவைச் சுமந்து வாழ்வேனே!
பாயும் புலியாய் பாய்ந்தாயோ
பயத்தை எதிரிக்குப் பரப்பிடவே!
தமிழ் தமிழ் என்று முழங்கினாயே...
இனி தமிழுக்காக உலகம் திரளும் காண்
இளைப்பாறு என் இனியவனே
இயக்கம் இயங்கும் உயிர்ப்புடனே!

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.