- 1967 சட்டமன்றத் தேர்தல்: சிபிஐ 32 தொகுதிகளில் தனித்துப் போட்டியிட்டு 2 இடங்களில் வென்றது. சிபிஎம் திமுக கூட்டணியில் 22 இடங்களில் போட்டியிட்டு 11 இடங்களில் வெற்றி பெற்றது. இடதுசாரி சட்டமன்ற உறுப்பினர்களின் மொத்த எண்ணிக்கை 13.
- 1971 சட்டமன்றத் தேர்தல்: சிபிஐ, திமுக கூட்டணியில் 10 இடங்களில் போட்டியிட்டு 8 இடங்களில் வென்றது. சிபிஎம் தனித்து 37 இடங்களில் போட்டியிட்டு ஓர் இடத்தில்கூட வெற்றி பெறவில்லை. இடதுசாரி சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 8.
- 1977 சட்டமன்றத் தேர்தல்: சிபிஐ, காங்கிரஸ் கூட்டணியில் 32 இடங்களில் போட்டியிட்டு 5 இடங்களில் வென்றது. அதே நேரத்தில் சிபிஎம், அதிமுக கூட்டணியில் 20 இடங்களில் போட்டியிட்டு 12 இடங்களில் வெற்றி பெற்றது. மொத்தமாக இடதுசாரி சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 17.
- 1980 சட்டமன்றத் தேர்தல்: சிபிஐ, சிபிஎம் இரண்டு கட்சிகளும் அதிமுக கூட்டணியில் இணைந்து போட்டியிட்டன. சிபிஐ 15 இடங்களில் போட்டியிட்டு 9 இடங்களில் வென்றது. சிபிஎம் 16 இடங்களில் போட்டியிட்டு 11 இடங்களை வென்றது. இந்த முறை மொத்தம் 20 சட்டமன்ற உறுப்பினர்கள் இடதுசாரிக் கட்சியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தனர்.
- 1984 சட்டமன்றத் தேர்தல்: சிபிஐ, சிபிஎம் இரண்டும் திமுக கூட்டணியில் இணைந்து போட்டியிட்டன. சிபிஐ 17 இடங்களில் போட்டியிட்டு 2 இடங்களில் வெற்றி பெற்றது. சிபிஎம் 16 இடங்களில் போட்டியிட்டு 5 இடங்களில் வெற்றி பெற்றது. மொத்தம் 7 சட்டமன்ற உறுப்பினர்களோடு இடதுசாரிகள் இருந்தனர்.
- 1989 சட்டமன்றத் தேர்தல்: சிபிஐ, அதிமுக (ஜெயலலிதா அணி) கூட்டணியில் 13 இடங்களில் போட்டியிட்டு 3 இடங்களில் வெற்றி பெற்றது. சிபிஎம், திமுக கூட்டணியில் 21 இடங்களைப் பெற்று 15 இடங்களில் வெற்றி பெற்றது. இடதுசாரி சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை மொத்தம் 18.
- 1991 சட்டமன்றத் தேர்தல்: சிபிஐ, சிபிஎம் இரண்டும் திமுக கூட்டணியில் போட்டியிட்டன. சிபிஐ 10 இடங்களிலும், சிபிஎம் 22 இடங்களிலும் போட்டியிட்டு தலா 1 தொகுதியில் மட்டுமே வெற்றி பெற்றன. மொத்தம் வெறும் 2 உறுப்பினர்கள் மட்டுமே வெற்றி பெற்றனர்.
- 1996 சட்டமன்றத் தேர்தல்: சிபிஐ, திமுக கூட்டணியில் இணைந்து 13 இடங்களில் போட்டியிட்டு 8 இடங்களில் வென்றது. சிபிஎம், மதிமுகவுடன் இணைந்து 40 இடங்களில் போட்டியிட்டு 1 இடத்தில் வென்றது. இடதுசாரி உறுப்பினர்களின் எண்ணிக்கை மொத்தம் 9.
- 2001 சட்டமன்றத் தேர்தல்: சிபிஐ, சிபிஎம் இரண்டு கட்சிகளும் அதிமுக கூட்டணியில் இணைந்து போட்டியிட்டன. சிபிஐ 8 இடங்களில் போட்டியிட்டு 5 இடங்களில் வெற்றி பெற்றது. சிபிஎம் கட்சி 8 இடங்களில் போட்டியிட்டு 6 இடங்களில் வெற்றி பெற்றது. இடதுசாரிக் கட்சிகளின் சட்டமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கை 11.
- 2006 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல்: சிபிஐ, சிபிஎம் இரண்டு கட்சிகளும் திமுக கூட்டணியில் இணைந்து போட்டியிட்டன. சிபிஐ 10 இடங்களில் போட்டியிட்டு 6 இடங்களில் வெற்றி பெற்றது. அதேபோல் சிபிஎம் 13 இடங்களில் போட்டியிட்டு 9 இடங்களில் வெற்றி பெற்றது. மொத்தம் 15 இடதுசாரி சட்டமன்ற உறுப்பினர்கள் தேர்வாகியிருந்தனர்.
- 2011 சட்டமன்றத் தேர்தல்: சிபிஐ, சிபிஎம் இரண்டு கட்சிகளும் அதிமுக கூட்டணியில் இணைந்து போட்டியிட்டன. சிபிஐ 10 தொகுதிகளில் போட்டியிட்டு 9 தொகுதிகளில் வெற்றி பெற்றது. சிபிஎம் 12 தொகுதிகளில் போட்டியிட்டு 10 தொகுதிகளில் வெற்றி பெற்றது. இடதுசாரிக் கட்சிகளின் மொத்த சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 19.
- 2016 சட்டமன்றத் தேர்தல்: மக்கள் நலக் கூட்டணி அமைக்கப்பட்டு, அந்தக் கூட்டணியில் சிபிஐ 25 இடங்களிலும், சிபிஎம் 25 இடங்களிலும் போட்டியிட்டு ஓர் இடத்தில்கூட வெற்றி பெற முடியவில்லை. சட்டமன்றத்திற்குள் இடதுசாரிகளின் பிரதிநிதித்துவமே இல்லாத தேர்தலாக இது அமைந்தது.
- 2021 சட்டமன்றத் தேர்தல்: சிபிஐ, சிபிஎம் இரண்டு அமைப்புகளும் திமுக கூட்டணியில் போட்டியிட்டன. சிபிஐ 6 இடங்களில் போட்டியிட்டு 2 இடங்களில் வெற்றி பெற்றது. சிபிஎம் 6 இடங்களில் போட்டியிட்டு 2 இடங்களில் வெற்றி பெற்றது. மொத்தம் 4 சட்டமன்ற உறுப்பினர்கள் மட்டுமே இடதுசாரிக் கட்சிகள் சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
இந்த 13 தேர்தல்களிலும் சிபிஐ அதிகமாக வெற்றி பெற்ற தொகுதிகளின் எண்ணிக்கை 9 மட்டுமே; அதிகமாகப் போட்டியிட்ட தொகுதிகள் 32 (1967 மற்றும் 1977-இல்). அதேபோல் சிபிஎம் அதிகமாகப் போட்டியிட்ட தொகுதிகள் 40 (1996-இல்); அதிக எண்ணிக்கையில் வெற்றி பெற்ற தொகுதிகளின் எண்ணிக்கை 15 (1989-இல்).
சிபிஐ, திமுக கூட்டணியில் இடம்பெற்று 1984 சட்டமன்றத் தேர்தலில் 17 இடங்களில் போட்டியிட்டது. திமுக கூட்டணியில் சிபிஐ பெற்ற அதிக எண்ணிக்கையிலான இடங்கள் இதுவே ஆகும். அதிமுக கூட்டணியில் இணைந்து அதிகபட்சமாக 15 இடங்களில் (1980-இல்) போட்டியிட்டிருக்கிறது.
சிபிஎம், திமுக கூட்டணியில் இணைந்து போட்டியிட்ட அதிகபட்ச தொகுதிகள் 22. திமுக கூட்டணியில் அதிகபட்சமாக வெற்றி பெற்ற இடங்கள் 15. அதேபோல் அதிமுக கூட்டணியில் இணைந்து அதிகபட்சமாக 20 இடங்களில் (1977 தேர்தலில்) போட்டியிட்டது. அதிமுக கூட்டணியில் வெற்றி பெற்ற அதிகபட்ச இடங்கள் 12.
1967 தொடங்கி 2021 வரை ஏறத்தாழ அரை நூற்றாண்டு காலத்திற்கும் மேலாக நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல்களில், இடதுசாரிகள் சார்பில் ஒரு தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட அதிகபட்ச உறுப்பினர்களின் எண்ணிக்கை 20 மட்டுமே (1980-இல் அதிமுக கூட்டணியில் இருந்தபோது).
234 தொகுதிகளைக் கொண்ட பேரவையில் அதிகபட்சமாக 20 தொகுதிகளைக் கூட இன்னும் இடதுசாரிகளால் தாண்ட முடியவில்லை. அதுவும் கூட்டணிக் கட்சிகளின் பலத்தோடுதான் சாத்தியமானது. தனியாகப் போட்டியிட்டபோது எத்தனை விழுக்காடு வாக்குகள் பெற்றனர் என்பதை நாம் அறிவோம்.
இடதுசாரிகளின் வீழ்ச்சி என்பது மக்களின் வீழ்ச்சி; தேசத்தின் வீழ்ச்சி. இந்த வீழ்ச்சியிலிருந்து எப்படி மீள்வது? மக்களிடையே வலிமையான அமைப்பைக் கட்டுவதும், போராட்ட அரசியலை முன்னெடுப்பதும்தான் இடதுசாரிகளைப் பலப்படுத்தும்.
- மருது பாண்டியன், சோசலிச நடுவம்