இந்தி அலுவல் மொழி ஆகாமல் தடுத்திட, இந்தியா முழுவதிலும் கோரிக்கை வைப்போம்!

இந்தியாவிலிருந்து பர்மா 1936இல் பிரிந்தது.

1937இல் இந்தியா 11 மாகாணங்களைக் கொண்டிருந்தது. அவற்றுள் ஒன்று சென்னை மாகாணம்.

சென்னை மாகாணத்தில் முதலாவது தேர்தல் 1920 நவம்பரில் நடந்தது.

17.12.1920 முதல் 1926 வரையிலும், பின்னர் 1930 முதல் 1937 வரையிலும் “தென்னிந்தியர் நல உரிமைச் சங்கம்” என்கிற நீதிக்கட்சி - திராவிடர் கட்சி ஆட்சி புரிந்தது.

1937 தேர்தலில் காங்கிரஸ் கட்சி 159 இடங்களில் வென்றது; நீதிக்கட்சி 21 இடங்களில் வென்றது; மற்ற கட்சிகள் 35 இடங்களை வென்றன.

மொத்தம் 215 சட்டமன்ற உறுப்பினர்கள்.

சட்டமன்ற மேலவையில் 46 உறுப்பினர்கள்.

10 பேர்கள் கொண்ட காங்கிரசு அமைச்சரவை அமைக்கப்பட்டது.

சென்னைப் பல்கலைக் கழகப் பட்டதாரிகள் தொகுதியில் தேர்ந்தெடுக்கப்பட்டு உறுப்பினராக வந்த சி. இராச கோபாலாச்சாரியார் மாகாணப் பிரதமர் ( Premier) ஆனார்.

1938-1939ஆம் கல்வி ஆண்டில் 9ஆம் வகுப்பில் ((IV Form) தாய் மொழி வழியில் கல்வி தரப்பட அவர் ஆணையிட்டார். அடுத்தடுத்த ஆண்டுகளில் X-ஆம் வகுப்பிலும், XI-ஆம் வகுப்பிலும் தாய்மொழிவழியில் கல்வி தரப்படும் என்று அதே ஆணையில் குறிப்பிட்டார்.

அத்துடன் Form I  என்கிற 6ஆம் வகுப்பு முதல் Form III என்கிற 8ஆம் வகுப்பு வரையில் ‘இந்துஸ்தானி’ ஒரு மொழிப்பாடமாக-தேர்வுக்குரிய கட்டாயப் பாடமாகக் கற்பிக்கப்படும் என்றும் 21-4-1938இல் ஆணையிட்டார்.

இந்தியாவில் 1937இல் நிலவிய 11 மாகாணங்களில், சென்னை மாகாணப் பள்ளிகளில் மட்டுமே - 125 பள்ளிகளில் மட்டும் - இந்தி கட்டாயப் பாடமாக அறிவிக்கப்பட்டது.

அந்த கட்டாயப் பாடமாகத் திணிக்கப்பட்ட இந்துஸ்தானியை சென்னை மாகாணத் திராவிட மக்கள் எதிர்த்தனர். தமிழகம் தவிர்த்த மற்ற மொழி மாநிலங்களில் போராட்டம் எதுவும் நடைபெறவில்லை. அதற்கான எந்த ஏற்பாட்டையும் நீதிக்கட்சி செய்யவில்லை.

3.9.1939இல் இரண்டாம் உலகப் போர் மூண்டது.

“தங்கள் கட்சியைக் கலக்காமல் இந்தியாவை இரண்டாம் உலகப் போரில் ஈடுபடுத்தியதாகக் கூறி” எல்லா மாகாணக் காங்கிரசு அரசுகளும் பதவியிலிருந்து விலகின.

சென்னையில் இந்தி எதிர்ப்புப் போரில் சிறைப்படுத் தப்பட்ட 1300க்கும் மேற்பட்ட ஆண், பெண், குழந்தை களை விடுதலை செய்யாமலே, சென்னை மாகாண அரசு பதவி விலகியது.

இந்துஸ்தானி கற்பிக்கப்படும் ஆணையையும் காங்கிரசு அரசு இரத்துச் செய்யவில்லை.

தமிழ் அறிஞர்களும் புலவர்களும் தொடங்கிய இந்தி எதிர்ப்புப் போருக்கு ஈ.வெ.ரா. தலைவரானார்.

ஈரோட்டிலிருந்து தொண்டர்களை வரச்செய்து போராட்டத்தை நீட்டித்தார். இதை, பெரியார் எனக்குச் சொன்னார்.

அப்போதும் கட்டாய இந்தி நீக்கப்படவில்லை.

1940இல்தான், அப்போதைய ஆங்கிலேய ஆளுநர் கட்டாய இந்தியை நீக்கினார்.

“திராவிட நாடு திராவிடருக்கே!” என 1939இல் பிரி வினை முழக்கம் எழுப்பிய நீதிக்கட்சி, 1940இல் திருவாரூரில் திராவிட நாடு பிரிவினை மாநாடு நடத்திய நீதிக்கட்சி-அதன் பிறகும்கூட, ஆந்திரம், கருநாடகம், மலையாளம், ஒரிசா பகுதிகளில் பிரிவினை பற்றிய பரப்புரையும் செய்யவில்லை; கட்சிக் கிளைகளையும் அமைக்கவில்லை; போராட்டங்களையும் நடத்தவில்லை. நிற்க.

இந்தியாவுக்கு விடுதலை தரப்போவதாக 1946 சூலையில் ஆங்கிலேயர் அறிவித்தனர்.

ஆங்கிலேயர் காலத்தில் 1946இல் தேர்தல் நடந்தது. 33 கோடி மக்கள் இருந்த இந்தியாவில், மத்திய சட்ட சபைக்கு வாக்களிக்க 4 விழுக்காட்டுப் பேருக்கே வாக்குரிமை இருந்தது; மாகாணச் சட்டசபைகளுக்கு வாக்களிக்க 12 விழுக்காட்டுப் பேருக்கு மட்டுமே வாக்குரிமை இருந்தது.

இதை வைத்து மத்திய சட்டசபைக்கும், மாகாணச் சட்டசபைகளுக்கும் 1946இல் தேர்தல் நடத்தினான், வெள்ளையன்.

காங்கிரசு, 1935இல் வாக்குக்கொடுத்தபடி, சுதந்தரம் வந்த பிறகு, வயது வந்த எல்லோ ருக்கும் வாக்குரிமை கொடுத்து அதன் பிறகு சுதந்தர இந்தியாவில் தேர்தலை நடத்தி இருக்க வேண்டும்.

எப்போது அதிகாரம் வரும் வரும் என்று ஆவலோடு காத்திருந்த காங்கிரசுத் தலைவர்கள், 15.8.1947இல் சுதந்தரம் வருவதற்கு முன்னரே, 9.12.1946இலேயே, சுதந்தர இந்தியாவுக்கான அரசியல் சட்டத்தை எழுதத் தொடங்கிவிட்டனர்.

இதை அப்போதே கண்டித்தவர் ஈ.வெ.ரா.; மட்டுமே கண்டனம் செய்தது திராவிடர் கழகம் மட்டுமே.

இந்த எதிர்ப்பை இவர்கள் இந்திய அளவில் செய் திருக்க வேண்டும். ஏன்?

1935ஆம் ஆண்டைய இந்திய அரசுச் சட்டம், மாகா ணங்களுக்குத் தன்னுரிமை (Autonomy) வழங்கி யிருந்தது.

கல்வி, வேளாண்மை, சாலை, சுகாதாரம், பொதுப்பணி இப்படிப்பட்ட எல்லாத்துறைகளிலும் மாகாணங்களுக்குத் தன்னுரிமை அதிகாரம் இருந்தது.

அப்படித் தன்னுரிமை இருந்த காலத்திலேயே சென்னை மாகாணத்திலே மட்டும், இந்தியைத் திணிக்கவும், மீண்டும் 1948இல் சென்னைப் பள்ளிகளில் இந்தியைக் கட்டாயப் பாடமாகத் திணித்ததற்கும் என்ன கார ணங்கள் என்று இவர்கள் சிந்தித்திருக்க வேண்டும்.

ஏன்? என்ன காரணங்கள்?

இந்தியத் துணைக்கண்டத்திலேயே சென்னை மாகாணத்தில்தான் பார்ப்பனரின் சமூக - கல்வி - உத்தியோக-நிலப்பிரபுத்துவ ஏகபோக ஆதிக்கத்தை எதிர்க்கும் இயக்கம் 1912இல் நிறுவப்பட்டது. கெட்டியான அடித்தளத்தோடு அமைக்கப்பட்டது. 26-12-1926இல், பார்ப்பனர் அல்லாதார் சுய மரியாதை இயக்கம் ஈ.வெ.ரா.வின் முயற்சியால் வீறுகொண்டு எழுந்தது!

அது பார்ப்பனப் புரோகிதத்தை எதிர்த்தது; பார்ப்பனிய மதச் சடங்குகளை எதிர்த்தது; சமற்கிருதம் தேவபாஷை என்பதை எதிர்த்தது. மனித சமத்துவ உரிமையை மறுக்கும் எல்லா வற்றையும் எதிர்த்தது.

இவ்வளவையும் ஆந்திரம், கருநாடகம், கேரளம், மகாராட்டிரம், உத்தரப்பிரதேசம், பீகார், பஞ்சாப் முதலான எல்லா மாகாணங்களுக்கும் 1940 முதல் 1967க்குள் நாம் கொண்டு சென்றிருக்க வேண்டும்.

மீண்டும் கட்டாய இந்தியை ஒழிக்க வேண்டி இந்திய தேசியக் கொடியை எரிக்கும் போராட்டத்தைத் தந்தை பெரியார் அறிவித்தார். அது, காமராசர் ஆட்சிக்காலம்; 1955 சூலை 1 அன்று எரிக்கத் திட்டம்.

1955 சூன் 29 மாலை காமராசர் பெரியாரைக் கண்டு பேசினார். “இந்தி கட்டாயப் பாடம் என்பது விருப்பப் பாடம் ஆக்கப்பட்டது”. அதன் விளைவாக சூன் 30 மாலை தேசியக் கொடி எரிக்கும் போராட்டத் தைத் தள்ளி வைத்தார், பெரியார்.

ஆந்திர மாநிலம் 1953இல் சென்னையிலிருந்து பிரிந்தது. அப்போது ஏற்படுத்தப்பட்ட மொழிவழி மாநிலக் குழுவின் பரிந்துரைப்படி, 1.11.1956இல் தமிழகம், கேரளம், கர்நாடகம் தனித்தனியாகப் பிரிக்கப்பட்டன.

அப்போது உயர்நிலைப் பள்ளிகளில் 1) தாய்மொழிப் பாடம், 2) ஆங்கிலமொழிப் பாடம், 3) இந்திமொழிப் பாடம் ஆகிய மூன்று மொழிகளைக் கற்கும் கட்டாயத் திட்டம் அறிவிக்கப்பட்டது.

தென்மாநிலங்களில் மூன்றும், மற்ற இந்தி பேசாத மாநிலங்களும் மும்மொழித் திட்டத்தை 1956இலேயே ஏற்றுக்கொண்டன. தமிழகப் பள்ளி களில் தேர்வுக்குரிய விருப்பப் பாடமாக இந்தி கற்பிக்கப்பட்டது. ஆனால் பள்ளியிறுதித் தேர்வுக்கு, இந்தி மொழியில் மதிப்பெண் சேர்க்கப்படாது என்று விலக்கு இருந்தது.

2.10.1963இல் கு. காமராசர் பதவி விலகினார். எம். பக்தவத்சலம் தமிழக முதல்வரானார்.

அவர் 6ஆம் வகுப்பு முதல், ஒரு பிரிவு ஆங்கில வழியில் நடத்தப்படும் திட்டத்தை அறிவித்தார்.

அதுமுதல் அரசு உயர்நிலைப் பள்ளிகளில் 6, 7, 8, 9, 10, 11 வரை ஆங்கிலத்தில் ஒரு பிரிவு தொடங்கப் பட்டது. இந்தி விருப்பப் பாடமாகவே நீடித்தது. இவை உயர்நிலைப் பள்ளிக் கல்வியில் தமிழகத்தில் இந்தி பெற்றிருந்த நிலை.

“இந்தி மட்டுமே இந்தியாவின் அலுவல் மொழி என்பதை 26.1.1965இல் வரும்” என்கிற கட்டளை விதி 343 என்பது, அரசமைப்புச் சட்டத்தில் அப்படியே 26-1-1950 முதல் நீடிக்கிறது.

அந்த-இந்தி அலுவல் மொழி என்பதை எதிர்த்துத் தான் மாணவர்கள், தன்னிச்சையாக, 25.1.1965இல் முதலமைச்சரை நேரில் பார்த்துக் கோரிக்கை விண்ணப்பம் தர, கோட்டையை நோக்கி ஊர்வலமாகச் சென்றனர்.

மக்கள் நாயக நாட்டில் மக்களின் கோரிக்கை விண் ணப்பங்களை அமைச்சர்கள் வரவேற்று ஏற்பதும், பேச்சுவார்த்தை நடத்துவதும் மக்களின் உரிமை; அரசின் கடமை.

ஆனால் தமிழக முதல்வர் மாணவர் குழுவைச் சந்திக்க மறுத்ததுடன், மாணவர்கள் காவல் துறையால் தாக்கப்பட்டனர்.

அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவர் இராசேந்திரன் காவல்துறையின் துப்பாக்கிச் சூட்டுக்கு இரையானார்.

அண்ணாமலை நகர் போர்க்களம் ஆனது. திருச்சி, சேலம், கரூர், கோவை போன்ற நகரங்களிலும் “இந்தி அலுவல் மொழி எதிர்ப்புக் கிளர்ச்சி” பரவியது.

அதை அகில இந்திய மாணவர் கிளர்ச்சியாக மாணவர்கள் அன்று வடிவமைக்கவில்லை.

இடையில் தமிழக மாணவர் கிளர்ச்சியில் நுழைந்த திராவிட முன்னேற்றக் கழகம், காங்கிரசு ஆட்சியை ஒழிக்க ஏற்ற வடிவில் அக்கிளர்ச்சியை அமைத்தது; வன்முறை வெடித்தது.

மாணவர்கள், பொதுமக்கள், சில காவலர்கள் உயிரி ழந்தனர்.

இந்தி பற்றி தி.மு.க. சார்பில், ஈ.வெ.கி. சம்பத் எடுத்த முயற்சியால், “இந்தி பேசாத மக்கள் விரும்புகிற வரையில் ஆங்கிலம் இணை அலுவல் மொழியாக (Associate Official Language) நீடிக்கும்” என்கிற ஆட்சிமொழிச் சட்டம் ஒன்றைச் செய்தார்கள். இதனை ஒரு தீர்வாகத் தமிழகமும், மற்ற இந்தி பேசாத மாநிலங் களும் தமிழகக் கட்சிகளும் ஏற்றுக்கொண்டது மாபெரும் தவறு.

ஏன் எனில், அது, முதலில் அரசமைப்புச் சட்ட விதி 343க்குத் துணைவிதி அல்ல.

இப்போது உள்ள “இந்தி மட்டுமே அலுவல் மொழி” என்பதை-அந்தச் சட்டத்தை அரசமைப்பி லிருந்து நீக்கிவிடவில்லை.

6.3.1967இல் ஆட்சிக்கு வந்த திராவிட முன்னேற்றக் கழகம், விதிகள் 343 முதல் 351 வரை நீக்கப்பட வேண்டுமென ஒருதடவைகூட முயற்சிக்கவில்லை.

தமிழக உயர்நிலைப் பள்ளிகளிலிருந்த - “இந்தி ஒரு விருப்பப் பாடம் என்பதை மட்டும்” 1967இல் நீக்கினார்கள். அதிலேயே மக்கள் மனம் குளிர்ந்தார்கள்.

திராவிட இயக்கம் தவிர்த்த எவருக்கும் இவ்வளவும் விளங்காது. மகாத்மா புலேவும், வடலூர் வள்ளலாரும், ஒரே காலத்தவர்கள்.

இருவரும் பார்ப்பன மத எதிர்ப்பாளர்கள்.

இங்கே தமிழகத்தில், 1926 முதல் 1973ஆம் ஆண்டு வரை 47 ஆண்டுக்காலம் முழுமூச்சாக இப்பணியைச் செய்தார், தந்தை பெரியார்.

அவருடைய பிறங்கடைகளான தி.மு.க.வினர், 26.1.1965இல் எடுத்த இந்தி ஆதிக்க எதிர்ப்பைக் காட்டித் தூக்கிப் பிடித்தவர்கள் - “எப்போதும் ஆங்கிலமே - ஒருபோதும் இந்தி வேண்டாம்” (

English ever; Hindi
never

) என்பதை அடியோடு கைவிட்டுவிட்டு, “எல்லா இந்திய மொழிகளும் இந்திய அரசு அலுவல் மொழிகள்-கல்வி மொழிகள்-தேர்வு மொழிகள் - வழிபாட்டு மொழிகள் - வழக்குரை மொழிகள் என ஆக்கியே தீருவோம்” என முழங்கியிருக்க வேண்டும்.

தந்தை பெரியார் தமிழில் அறிவியல்பாட வளர்ச்சி இல்லையே - நேரிடையாக அறிவியலை நன்கு வளர்ந்த ஆங்கில மொழி வழியில் கற்றால் போதும் என்று அறிவித்தது முற்றிலும் தவறு; நானும் அவரு டைய நிலைபாட்டை 1965இல் ஆதரித்து, திருச்சி மாவட்ட ஊர்தோறும் பயிற்சி வகுப்பு நடத்தியது மிகத் தவறானது. நிற்க.

1978 முதல் பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீடுக்காக 40 ஆண்டுகளாக இந்தியக் களத்தில் நிற்கும் நானும் எங்கள் தோழர்களும்-சட்டம், இந்துச் சட்டம் அரசியல் சட்டம், தீர்ப்புகள், மொழிகள் என்கிற எது பற்றியும் நாம் நன்றாகத் தெரிந்துகொண்டு, பிறமொழியாளர் களிடம் எடுத்துச் சொன்னால், அப்போதுதான் அவர்கள் புரிந்துகொள்ளுகிறார்கள் என்பதைக் கண்டோம்.

இன்று நாம் 70 அகவை உள்ள பெரியாரை 52 ஆண்டுகள் பார்த்தோம்; கேட்டோம்; பலவற்றைப் புரிந்துகொண்டோம்; போராடினோம்.

புலே மறைந்த பிறகு - சாகு மகாராஜா மறைந்த பிறகு - அம்பேத்கர் மறைந்த பிறகு, பல ஆண்டுகள் பெரியார் நம்மிடையே இருந்தார்.

17.10.1991

18.10.1991

19.10.1991

ஆகிய மூன்று நாள்களிலும், புதுதில்லியில், மவ்லங்கர் மன்றத்தில் - “Angrezi Hatao!” “Hindi Down! Down” “ஆங்கிலம் ஒழிக”, இந்தி ஒழிக!”என்று 500 தமிழர்கள் முழங்கினோம்.

பெரியாருடைய-அம்பேத்கருடைய கொள்கையை, அப்படியே - முழுமையாக 2020 வரை இந்திய நாடெங்கும் நாம் பரப்பினாலொழிய :

1. இந்தி மட்டுமே இந்திய அரசின் அலுவல் மொழி என்பதையும்;

2. இந்தியா முழுவதிலும் சமற்கிருதம், இந்துஸ்தானி, சோதிடம், வாஸ்து, கல்யாணமந்திரம், கருமாதி மந்திரம், பேயோட்டும் மந்திரம் இவற்றைப் பள்ளி கள் முதல் பல்கலைக்கழகம் வரையும் 2019க்குள் மோடி அரசினால் திணிக்கப்படுவதிலிருந்தும் நாம் மீள முடியாது; முடியாது. அதை நாளது வரையில் எவரும் எதிர்க்கவோ, மீட்கவோ இல்லை.

ஏன்? ஏன்?

I.  1935ஆம் ஆண்டைய இந்திய அரசுச் சட்டம் (The Government of India Act, 1935) மாகாணங்களுக்கு வழங்கியிருந்த தன்னுரிமை அதிகாரங்களை (autonomous powers) 3.1.1977 முதல் அடியோடு மத்திய அரசு பறித்துக் கொண்டது.

II.  1975-1977 அவசர கால ஆட்சிக்குப் பிறகு மானிட உரிமைகள் பறிப்பும், மாகாண உரிமைகள் பறிப்பும் கேட்பாரின்றி நடக்கின்றன.

III. இவற்றைவிடவும் கொடுமையானது, இந்திய அரசமைப்பின் Part XVII - 17ஆம் பகுதி ஆகும்.

அது என்ன கூறுகிறது?

அலுவல் மொழி (Official Language) : Chapter I - Language of Union

பகுதி I - ஒன்றியத்துக்கான மொழி Articles

343 - Official Language of Union (ஒன்றியத் தின் அலுவல் மொழி)

344 - Commission and Committee of Parliament on Official Language  (அலுவல் மொழி பற்றி நாடாளுமன்ற ஆணையமும், குழுவும்)

விதி 343 - Official Language of the Union (ஒன்றியத்துக்கு உரிய அலுவல் மொழி) : “இந்திய ஒன்றியத்துக்கான அலுவல் மொழி யாக தேவநகரி வரி வடிவிலான இந்தி இருக்கும்” என்றே உள்ளது.

இப்படி, 343 முதல் 351 வரை உள்ள விதிகள் இந்தப் பகுதியின்கீழ் உள்ளன.

இந்த ஒன்பது விதிகளிலும் சொல்லப்படுவது, “அலுவல் மொழி என்கிற அன்றாட அலுவலகப் பணிகளைச் செய்யப் பயன்படுத்துவதற்கு உரிய மொழி” என்பது மட்டுமே ஆகும்.

அதாவது இந்திய அரசின் நேரடி நிருவாகத்திலுள்ள அஞ்சல், தொடர் வண்டி, ஆயுள் காப்பீடு, வருமான வரி, சுங்கம், தொலைப்பேசி மற்றும் உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றங்களை மட்டுமே குறிப்பதாகும்.

தொடக்கப் பள்ளியிலோ, நடுநிலைப் பள்ளியிலோ, உயர்நிலைப் பள்ளியிலோ, கல்லூரியிலோ, ஒரு பாட மொழியாகவோ, சிறப்பு மொழிப் பாடமாகவோ இந்தி அல்லது சமஸ்கிருதமோ அல்லது இரண்டு மொழிகளுமோ கற்பிக்கப்படலாம், அல்லது கற்பிக்கப்பட வேண்டும் என்று எந்த விதியிலும் காணப்படவில்லை.

இதுபற்றி இந்தியாவிலுள்ள ஒவ்வொரு குடி மகனும் மிகவும் கவலைப்பட வேண்டும். ஏன்?

இந்தியாவில், 12ஆம் வகுப்புக்கு மேற்பட்ட உயர்படிப்பு முழுவதையும் அவனவன் தாய்மொழி யில்தான் கற்கவேண்டும். ஆனால் ஆங்கில மொழி வழியில் கற்கிறான். ஆங்கில வழியில் படிப்பது மூடத்தனம்; மடத்தனம்; சுயமரியாதை அற்றத்தனம்.

இவற்றுக்கு மாறாக, தமிழ்நாட்டு எல்லைக்குள் இருக்கிற அஞ்சல் துறை, தொடர் வண்டித்துறை, வருமான வரி, சுங்கம், உயர்நீதிமன்றம் எல்லா இடங்களிலும் ஆங்கிலமோ, இந்தியோ, சமற்கிருத மொழியோ அன்றாட அலுவல் செய்யும் மொழி யாக இருக்கக் கூடாது. இங்கெல்லாம் தமிழ் நாட்டில் தமிழ், ஆந்திரத்தில் தெலுங்கு, கருநாட கத்தில் கன்னடம், பீகாரில் இந்தி, ஒடிசாவில் ஒரியா என-அந்தந்த மாநிலப் பேச்சு மொழியே இங்கெல்லாம் அலுவல் மொழியாக இருக்க வேண்டும்.

இந்தியாவிலுள்ள பல கட்சிகளின் தலைவர் கள், மொழி அறிஞர்கள், ஆசிரியர் கழகங்கள், பேராசிரியர்கள், மாணவர் சங்கங்கள், ஊடக வியலாளர்கள் எல்லோரையும் உள்ளிட்ட 8 பேர் (அ) 10 பேர் கொண்ட 4 அல்லது 5 தமிழர் குழுக்கள் இந்தியா முழுவதிலும் பயணிக்க வேண்டும். இது, மொழிக் கொள்கை பற்றிய கருத்து மாற்றத்துக்கு வழிவகுக்கும்.

இவற்றைத் தமிழ்நாட்டில் மட்டும் முழங்குவ தும், பேரணி நடத்துவதும், அறைகூவல் விட்டுப் பேசுவதும் பயன்படுமா என்று சிந்தியுங்கள்!

Pin It