மதுரை மாவட்டம், மேலூர் வட்டம், கொட்டாம்பட்டி ஒன்றியத்தைச் சேர்ந்த சேக்கிப்பட்டி, திருச்சுனை, அய்யாபட்டி ஆகிய வருவாய் கிராமங்களிலுள்ள சேக்கிப்பட்டி, ஓட்டக்கோவில்பட்டி, செக்கடிப்பட்டி ஆகிய மூன்று சிற்றூர்களில் வண்ணக்கல் கிரானைட் குவாரி அமைப்பதற்கான பொது ஏலம் மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா அறிவித்தார். மேலே கண்ட மூன்று சிற்றூர்களில் அரசு புறம்போக்கு நிலங்களில் பல வண்ணக் கிரானைட்கல் குவாரிகள் 20 ஆண்டுகள் குத்தகை உரிமம் வழங்க இருப்பதாகவும் இதற்கான பொது ஏலம் 2023 அக்டோபர் 31 ஆம் நாள் நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் அக்டோபர் 11 ஆம் நாள் ஊடகங்கள் மூலம் அறிவித்தார். உடனே இதற்கு எதிராக சுற்று வட்டார பகுதி மக்கள் போராட்டத்தில் இறங்கினர்.

போராட்டத்திற்கு வித்திட்ட சகாயம் குழு அறிக்கை

மதுரை மாவட்டம், மேலூரில் சட்டவிரோதமாக வெட்டி எடுக்கப்பட்ட கிரானைட் முறைகேட்டால் அரசுக்கு ரூ. 1 இலட்சத்து 11 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டது என மதுரை மாவட்ட ஆட்சியராக இருந்த சகாயம் அறிவித்தார். இது 1990 முதல் 2012 வரைக்குமான இழப்பின் ஒரு பகுதியாகும். இந்த முறைகேட்டில் மத்திய, மாநில அதிகாரிகள் முதல் அனைத்து துறைகளிலுள்ள கடைநிலை ஊழியர்கள் வரையிலும், அனைத்து ஆளும் மற்றும் எதிர்க் கட்சியினரும் ஈடுபட்டுள்ளனர். அனுமதிக்கப்பட்ட அளவுக்கு மேல் வெட்டி எடுத்த கிரானைட் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. இதற்கு துறைமுக அதிகாரிகள், ஏனைய வங்கிகள் என மொத்த அரசுத் துறையும் இவர்களுக்கு துணையாக செயல்பட்டுள்ளது. ஒரே முகவரில் பல போலி நிறுவனங்களைப் பதிவு செய்துள்ளனர். வெட்டி எடுக்கப்பட்ட கல்லின் அளவைக் குறைத்துக் காட்ட சில உத்திகளைக் கையாண்டுள்ளனர். ஒரு உரிமத்தை பலமுறை பயன்படுத்துவது, லாரியின் ஒரே பதிவெண்ணை மீண்டும் மீண்டும் பதிவேட்டில் எழுதி கடத்தியுள்ளனர். கல்லின் அளவு, தரம் ஆகியவற்றை மறைத்துள்ளனர்.

வெளிநாடுகளில் விற்ற பணத்தை முழுதாக கொண்டு வராமல் அந்நியக் செலவாணியாக மாற்றி பதுக்கி வைத்துள்ளனர். திருவாதவூர், கீழத்தூர், கீழவளவு, சமர் குகைகள், கல்படுகைகள், தமிழ் பிராமிக் கல்வெட்டு எழுத்துக்கள் போன்றவை தொல்லியல் துறைக் கண்காணிப்பாளர் பலமுறை வேண்டுகோள் விடுத்தும் ஏலதாரர்கள் கண்டுகொள்ளவில்லை. கிரானைட் கற்களை எடுப்பதற்காக விவசாய நிலங்கள் அழிக்கப்பட்டுள்ளன. குளம், குட்டை, ஏரி, நீர்வரத்து, வாய்க்கால் போன்றவை நாசமாக்கப்பட்டுள்ளன. இவையெல்லாம் வெடி மருந்து வைத்து தகர்க்கப்பட்டுள்ளன. ஏலம் எடுத்த இடத்தில் நிறைய கிரானைட் கல் கிடைக்க வேண்டும் என்பதற்காக அப்பாவிகளை நரபலி கொடுத்துள்ளனர். இவைகளை எல்லாம் சகாயம் அவர்கள் உயிரையும் துச்சமெனக் கருதி பல்வேறு கொலை மிரட்டல்களுக்கு இடையில் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார். அவருடைய அறிக்கை 600 பக்கங்களைக் கொண்டது. இவ்வறிக்கையை 2015 நவம்பரில் அரசுக்கு அளித்தார். அவரது அறிக்கையை அரசு இதுவரை வெளியிடவில்லை அவரது பரிந்துரைகள் மூடி மறைக்கப்பட்டுள்ளன என்பதுடன் அதற்கான 200 வழக்குகள் முடியவில்லை.agitation against granite miningஇந்நிலையில் தற்போது ஏல அறிவிப்பு விடப்பட்டுள்ள மூன்று கிராமங்களிலுள்ள பனிமலைக்குன்று, கோழிமுட்டைப் பாறை, வண்ணாம் பாறை ஆகிய அமைவிடத்திற்கும் கடந்த காலங்களில் வெட்டி சீரழிக்கப்பட்ட மேலூர் பகுதியிலுள்ள கிரானைட் குவாரிக்கும் இடைப்பட்ட தூரம் வெறும் 10 கி.மீ. மட்டுமே என்பதால் கிரானைட் குவாரியால் ஏற்படப் போகும் சீரழிவுகளைக் குறித்து மக்கள் நன்கு அறிந்து உள்ளனர். மேலும் சகயாம் குழு அறிக்கையின் சாரத்தை அறிந்துள்ளனர். இப்பகுதியில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆர்வலர்களும் மக்களிடையே சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளனர். இவையெல்லாம் சேர்ந்து மக்களைப் போராட்ட களத்திற்கு உடனே கொண்டு வந்துள்ளது.

வெற்றிக் கனியைப் பறித்த மக்கள்

மதுரை மாவட்ட ஆட்சியர் பொது ஏல அறிவிப்பை அக்டோபர் 11 ஆம் நாள் அறிவித்தவுடனே அதற்கு எதிராக மக்கள் அணிதிரண்டனர். பறம்பு மலைப் பாதுகாப்பு இயக்கம், தமிழ்நாடு சுற்றுச் சூழல் பாதுகாப்பு இயக்கம், சட்ட விரோத கல்குவாரி எதிர்ப்பு இயக்கம் மற்றும் தமிழ்த் தேசிய, புரட்சிகர, ஜனநாயக அமைப்புகள், இவர்களுடன் உள்ர் அளவிலான ஆளும், எதிர் கட்சியினர் அனைவரும் இவர்களுக்கு துணை நின்றனர். கிரானைட் ஒப்பந்தத்தை ரத்து செய்யக் கோரி சுற்றுப்புற கிராம மக்கள் அக்டோபர் 16 ஆம் நாள் மதுரை மாவட்ட ஆட்சியருக்கு விண்ணப்பம் செய்தனர். உரிய பதில் கிடைக்கவில்லை. எனவே அக்டோபர் 26 ஆம் நாள் தொடர் காத்திருப்பு போராட்டத்தை சேக்கிப்பட்டி மந்தை வெளியில் 20க்கும் மேற்பட்ட கிராமத்தைச் சேர்ந்த மக்கள் தொடங்கினர். 26,27 ஆகிய இரண்டு நாட்களில் நடைபெற்ற போராட்டத்தைக் கண்டு அஞ்சிய மாவட்ட ஆட்சியர் நிர்வாக நலன் கருதி ஏலத்தை நவம்பர் 30 இல் ஒத்தி வைத்தார். இதன் காரணமாக போராட்டமும் ஒத்திவைக்கப்பட்டது.

 இதற்கிடையில் மக்களது போராட்டத்தை ஒருங்கிணைத்து வழி நடத்திய கம்பூர் செல்வராசு மீது மேலூர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இவர் பொது அமைதிக்கும் ஒற்றுமைக்கும் அடிக்கடி பாதிப்பு ஏற்படுத்துகிறார் என இரண்டு காரணங்களைக் கூறுகின்றனர். அவை அப்பகுதியிலிருந்து அரசு மதுக்கடையை மக்களது போராட்டத்தின் மூலம் ஒழித்துக் கட்டியது. பிறப்பு சான்றிதழ் பெற இலஞ்சத்திற்காக பெண்களை அலையவிட்டதற்கு எதிராகப் போராடியது. இப்படி மக்களைத் திரட்டி போராடிய செல்வராசுவை பயமுறுத்த ரவுடி என சித்தரித்து குற்றப் பிரிவு எண் 110 இன் கீழ் வழக்கு தொடுக்கின்றனர். இதற்கு எதிராக சட்டப் போராட்டமும், மக்களிடையிலான உணர்வூட்டல் போராட்டமும் நடத்தி வழக்கிலிருந்து செல்வராசு விடுவிக்கப்படுகிறார்.

நவம்பர் 29-ம் நாள் பரம்புமலை பாதுகாப்பு இயக்க கர்ணன், செல்வராசு உள்ளிட்ட தோழர்களும், இந்திய குடியரசுக் கட்சி மெய்யப்பன் அவர்களது ஒருங்கிணைப்பில் செய்தியாளர் சந்திப்பு மதுரையில் நடந்தது. இதில் சுற்றுச்சூழல் ஆர்வலர் முகிலன் கலந்து கொண்டு மூன்று கிராமங்களில் கல்குவாரிகள் எப்படி அரசு விதிமுறைகளுக்கு எதிராக அமைக்கப்பட இருக்கிறது என விளக்கினார். அடுத்து மாவட்ட ஆட்சியரால் ஒத்தி வைக்கப்பட்ட கிரானைட் குவாரி நவம்பர் 30 இல் பொது ஏலம் விடப்பட இருந்த நிலையில் மூன்று கிராமத்தையும் சுற்றியுள்ள மக்கள் நவம்பர் 27 இல் காத்திருப்பு போராட்டத்தை ஓட்டக்கோவில் பட்டியில் மீண்டும் தொடங்கினர். இப்போராட்டத்தை சிதைக்க உளவுத்துறையும், அதிகார வர்க்கமும் பல்வேறு வழியில் முயற்சித்தனர். இளைஞர்களை தீவிரவாதிகள் படட்டியலில் கொண்டுவருவோம் என மிரட்டினர். இதையும் மீறி மக்கள் ஒற்றுமையுடன் உறுதியாக போராடினர். போராட்டத்தில் கலந்து கொண்ட பெண்களின் உரை மக்களது அதிகாரத்தை படைக்கும் திசை வழியில் தன்னெழுச்சியாக இருந்தது. இதனைக் கண்டு அஞ்சிய அதிகார வர்க்கம் கிரானைட் பொது ஏலத்தை நிர்வாகக் காரணங்களுக்காக ரத்து செய்வதாக அறிவித்தனர். இதனை அறிந்த மக்கள் ஒருவரை ஒருவர் கட்டித் தழுவினர். வெற்றி முழக்கமிட்டு வெடிவெடித்து ஆர்ப்பரித்து இனிப்பு வழங்கினர். அன்றிரவு முழுவதும் ஓட்டக்கோவில் பட்டி விழாக்கோலம் பூண்டது. இதில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பங்கேற்றனர்.

கொள்கைகளற்ற கட்சிகள்

தமிழ்நாடு முழுவதும் 1,860 கிரானைட் குவாரிகள் இருந்தும் 96 மட்டுமே இயங்கிக் கொண்டுள்ளன. இதில் பட்டா நிலங்களில் 45, அரசு புறம்போக்கு நிலங்களில் 56 என கிரானைட் உரிமையாளர் சங்கம் கூறுகிறது. மதுரை மாவட்டத்தில் மட்டும் 180 குவாரிகள் சகாயம் குழு அறிக்கைக்குப் பிறகு இயங்கவில்லை. குவாரிகள் பல வகைப்படும். அவை மணல் குவாரிகள், ஜல்லி குவாரிகள், கிராவல் குவாரிகள், கிரானைட் குவாரிகள் என இப்படி பல வகைக் குவாரிகள் உள்ளன. இதில் கோடிக் கணக்கில் பணம் புரளும் இடமாக கிரானைட் குவாரிகள் உள்ளன. கிரானைட் குவாரிகள் மலையை உடைத்து எடுக்கப்படுகிறது. மதுரை மாவட்ட குவாரிகள் 250 கோடி ஆண்டுகள் பழமையானது. இங்கு பல்லுயிர்கள் வாழ்கின்றன. உலகில் இதன் சந்தை மதிப்பு மிக மிக அதிகம்.

தமிழ்நாட்டில் குவாரிக்கு எதிரானப் போராட்டம் பெரும்பாலும் சுவற்றுச்சூழல் ஆர்வலர்களால் சட்ட வடிவில் மட்டுமே கடந்த காலங்களில் நடைபெற்றது. மக்களிடம் சுற்றுச்சூழல் பற்றிய விழிப்பின்மையால் சுற்றுச்சூழல் ஆர்வலர்களை அரசு ஒருபக்கம் ஒடுக்கியது. மறுபுறம் குவாரி உரிமையாளர்களின் அடியாள் படை அவர்களைக் கொன்றொழித்தது. இதற்கு சில நேர்மையான அதிகாரிகளும் பலியானர்கள், தற்போது நடைபெற்ற போராட்டம் என்பது குவாரிகள் சட்டப்படியாக அமைக்க வாய்ப்பிருந்தும் அது எங்களுக்குத் தேவையில்லை, எங்களது வாழ்வாதாரத்தை, சுற்றுச்சூழலை அது கெடுக்கிறது என மக்கள் ஒரு புதிய பரிமாணத்தில் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். இது வரவேற்க்கத்தது. ஏனெனில் இது போன்ற குவாரிகள் அமைப்பதால் எதிர்காலத்தில் எற்படப்போகும் பேரழிவுகள் குறித்து யாருக்கும் ஏதும் தெரியாது. தற்போது வட தமிழ்நாட்டில் சென்னை, தென் தமிழ்நாட்டில் நெல்லை, குமரி, தென்காசி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்கள் நீரில் மிதந்தன.

இதுபோன்ற குவாரிகள் அமைத்த இடங்களில் பூமியின் நீர் மட்டம் 1000 அடிகளுக்கு கீழே சென்றுவிட்டதாக கோவை, திருப்பூர் பகுதி சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர். தமிழ்நாட்டின் கனிம, கரிம வளங்களையும், காடு, கடல் ஆகிய வளங்களையும், நீரையும் கொள்ளையிடுவதற்கு பன்னாட்டு, உள்நாட்டு கார்பரேட் முதலாளிகள் திட்டம் போட்டு செயல்படுகின்றனர். இவர்களுக்கு அடியாள் படையாக தேர்தல் கட்சிகளும், அதிகார வர்க்கமும் செயல்படுகின்றன. தமிழ் நாட்டை ஆண்ட, ஆண்டு கொண்டிருக்கும் கட்சிகளுக்கு அவர்களுடன் கூட்டணி வைத்துள்ள துண்டு துக்காணி கட்சிகளுக்கு சுற்றுச்சூழலைப் பாதுகாக்க எந்தக் கொள்கையும் இல்லை. எனவே மக்கள் தான் இவர்களுக்கு தங்களது போராட்டம் மூலம் பாடம் புகட்ட வேண்டும்.

மக்கள் அதிகாரங்களைப் படைப்போம்    

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் அவரது ஆட்சி காலத்தில் “விவசாயிகள் விவசாயத்திலிருந்து வெளியேற வேண்டும்” என்று கூறினார். ஆம். 1991-க்குப் பிறகு தாராளமயம், தனியார்மயம், உலகமயம் என்ற புதிய காலனியக் கொள்கையை இந்திய அரசும், அதிலுள்ள தமிழ்நாட்டு அரசும் பின்பற்றுகின்றன.

 “ஊரான் ஊரான் தோட்டத்திலே

 ஒருத்தன் போட்டான் வெள்ளரிக்காய்

 காசுக்கு ரெண்டு விற்கச் சொல்லி

 கடுதாசி போட்டான் வெள்ளக் காரன்”

இப்பாடல் 1947-க்கு முன்பு வெள்ளைக் காலனி ஆதிக்கத்திற்கு எதிராகக் தமிழ்நாட்டில் பாடிய பாடல். அன்று வெள்ளைக்காரன் மட்டும் நமது வாழ்வை கட்டுப்படுத்தினான். இன்று பன்னாட்டு, உள்நாட்டு கார்பரேட் முதலாளிகள் நமது அரசின் மூலமாக நம்மைக் கட்டுப் படுத்துகின்றனர்.

தமிழ் நாட்டின் சுற்றுச் சூழலைப் பாதுகாக்க தொடர் போராட்டங்கள் பல்வேறு வடிவில் நடைபெற்று வருகின்றன. அவை ஸ்டர்லைட் எதிர்ப்புப் போராட்டம் கல்பாக்கம், கூடங்குளம் அணுஉலை எதிர்ப்புப் போராட்டம், மீத்தேன், ஹைட்ரோகார்பன் திட்டங்களுக்கு எதிரான போராட்டம், சிப்காட்டிற்கு எதிரான போராட்டம், நியூட்ரினோவிற்கு எதிரானப் போராட்டம் என்றவாறு பட்டியல் நீள்கிறது. இத்துடன் கடலிலிருந்து விரட்டி அடிக்கப்படும் மீனவர்கள், காடுகளிலிருந்து விரட்டியடிக்கப்படும் மலைவாழ் மக்கள், கழனியிலிருந்து விரட்டியடிக்கப்படும் விவசாயிகள் சில்லரை வணிகத்திலிருந்து விரட்டியடிக்கப்படும் வியபாரிகள், தொழிற்சாலைகளிலிருந்து விரட்டியடிக்கப்படும்; தொழிலாளிகள் முதலாளிகள் என இதுவும் பட்டியல் நீள்கிறது. ஆக, தமிழ்நாடு போராட்டக் களமாக மாறியிருக்கிறது. இப்போராட்டங்கள் இந்திய அரசுக்கு எதிராகவோ அல்லது தமிழ்நாடு அரசுக்கு எதிராகவோ அமைந்துள்ளன. ஆட்சியாளர்களைப் பொறுத்த அளவில் மத்தியில் உள்ளவர்கள் மாநிலத்தைக் காட்டியும் மாநிலத்தில் உள்ளவர்கள் மத்திய அரசைக் காட்டியும் தப்பித்துக் கொள்கின்றனர். இதே வித்தையை ஆளும், எதிர்க் கட்சிகளும் அவர்களது கூட்டணிக் கட்சிகளும் செய்கின்றன இந்த குழப்ப நிலையிலிருந்து விடுபட வேண்டும். நமக்கான அதிகார மையங்களை அடையாளம் காண வேண்டும்.

தமிழ்நாட்டின் அரசியல் அரங்கில் ஒவ்வொரு அரசியல் அமைப்புகளும் பல்வேறு குறிக்கோளுடன் இயங்குவதைக் காணலாம். அவற்றினை புரிந்துகொள்ள எளியமுறையில் கீழ்காணும் முறையில் வகைப்படுத்துவோம். ஒன்று இந்திய தேசிய அரசியல் போக்கு. இரண்டு தமிழ்த் தேசிய அரசியல் போக்கு. இந்திய தேசிய அரசியல் போக்கில் ஒற்றை இந்திய தேசிய போக்கு, கூட்டாட்சிப் போக்குகள் உள்ளன. தமிழ்த் தேசிய அரசியல் போக்கில் ஆரிய-திராவிட எதிர்ப்பு, தமிழர் இறையாண்மை அல்லது அதிகாரம், சாதியம் போன்ற போக்குகள் செயல்படுகின்றன. இவைகள் குறிப்பிட்ட வர்க்க அல்லது குழுக்களின் நலனைக் கொண்டிருக்கின்றன.

இந்திய தேசிய அரசியல் போக்கில் கூட்டாட்சியை மறுக்கக் கூடிய காங்கிரசு, பிஜேபி, இடது-வலது கம்யூனிஸ்டுகள் உள்ளன. இவைகள் சாரத்தில் இந்திய பெருமுதலாளிய, பார்ப்பனிய அதிகார வர்க்க நலனைக் கொண்டிருக்கின்றன. “மாநில சுய ஆட்சி, மத்தியில் கூட்டாட்சி” என்ற கோரிக்கையை எழுப்பும் திமுக இக்கோரிக்கைக்காக உறுதியாகப் போராடுவதற்குப் பதில் இந்திய ஆளும் வர்க்கத்துடன் பதவி பேரம் பேசுவதற்காகவும் மொழி உணர்வாளர்களை ஏமாற்றவும் இதனை பயன்படுத்துகின்றன. ஆரிய-திராவிட எதிர்ப்பு தமிழ்த் தேசியம் பேசும் நாம் தமிழர் கட்சி தமிழர்களது அதிகாரத்தை நிறுவுவதற்கான திட்டம் இல்லாது உள்ளன. மேலும் அரசாங்கம் (Government), அரசு (State) குறித்து எந்தப் பார்வையும் இல்லாமல் தமிழர்கள் ஆட்சிக்கு வந்தால் (தான் ஆட்சிக்கு வந்தால்) எல்லா சிக்கலும் தீர்ந்துவிடும் என மக்களை ஏமாற்றுகின்றனர். இதே நிலையில் தான் சில தமிழ்த் தேசிய குழுக்கள் செயல்படுகின்றனர். சாதிய அமைப்புகளைப் பொறுத்த அளவில் இந்தியத்தை ஏற்றுக் கொள்ளக் கூடிய அமைப்புகளாகவோ அல்லது தமிழ்த் தேசியத்தை ஏற்றுக் கொள்ளக் கூடிய அமைப்புகளாகவோ உள்ளன. இவைகள் அந்தந்த சாதிகளின் உடமை வர்க்கத்தின் நலனையும், அவர்களுக்கு அடியாள் படையாக செயல்படுவதற்கு மேல் ஒன்றும் செய்ய இயலாது. ஆக அரசியல் அதிகாரம் இரண்டு வழியில் மட்டுமே படைக்க இயலும். ஒன்று. இந்திய தேசிய அரசியல் வழியில். இது ஏற்கனவே நிறுவப்பட்டுள்ளது. மற்றொன்று. தமிழ்த் தேசிய அரசியல் வழியில். அதற்கானப் போராட்டம் நடந்து கொண்டிருக்கிறது. இதில் மக்கள் தங்களது அதிகாரத்தை எவ்வாறு நிறுவுவது?

ஒவ்வொரு நாட்டின் அரசியல் அமைப்பும் வெவ்வேறு முறையில் கட்டி அமைக்கப்பட்டுள்ளது. மேற்கு ஐரோப்பா நாடுகளில் கட்டப்பட்ட அரசியல் அமைப்பு என்பது பெரும் நிலவுடமையை ஒழித்து முதலாளிய வளர்ச்சிக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டது. இது தனியார் சொத்துடைமையை பாதுகாக்கும் நோக்கம் கொண்டதாகும். ரஷ்யா, சீனா, வியட்நாம் நாடுகளில் மிகப் பெருவாரியான விவசாயிகள், தொழிலாளர்கள் இதர உழைக்கும் மக்களுக்கு அதிகாரம் அளிக்கும் வகையில் அமைக்கப்பட்டது. பல்வேறு தேசிய இனங்களைக் கொண்ட அமெரிக்கா, கூட்டரசு என்ற வகையில் ஜனநாயகத் தன்மை கொண்டது. இது 50 மாநிலங்களையும், ஒரு கூட்டமைப்பு மாவட்டத்தையும், ஐந்து முதன்மையான ஒன்றிணைக்கப்படாத நிலப்பரப்புகளையும், ஒன்பது சிறிய வெளிப்புறத் தீவுகளையும் உள்ளடக்கியுள்ளது. ஒவ்வொரு மாநிலங்களும் தனித்தனி அரசமைப்புகளுடன் செயல்படுகின்றன.

இந்தியாவில் மாநிலங்களவை (ராஜ்யசபா) இருப்பது போல அமெரிக்காவில் செனட் உள்ளது. இந்தியாவிலுள்ள மாநிலங்களவை என்பது பெரும் தேசிய இனவெறிக்கு ஏற்ப கட்டமைக்கப்பட்டது. ஆனால் அமெரிக்கா செனட் என்பது எண்ணிக்கையில் சிறிய, பெரிய தேசிய இனங்கள் எவ்வளவு இருந்தாலும் ஒவ்வொரு மாநிலங்களுக்கும் இருவர் மட்டுமே இடம் பெறுவர். அவ்விருவர் மட்டுமே அம்மாநில சிக்கலை தீர்க்கும் அதிகாரம் பெற்று இருப்பர். அந்த வகையில் 50 மாநிலங்களுக்கும் இருவர் வீதம் 100 செனட் உறுப்பினர்கள் அமெரிக்காவில் உள்ளனர். ஆனால் இந்திய மாநிலங்களவை என்பது தேசிய இனங்களின் விருப்பங்களை நிறைவு செய்வது இல்லை. இது போலியானது. இலங்கை போன்ற நாடுகளில் கட்சிகள் பெற்ற மொத்த வாக்குகளின் அடிப்படையில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இடம் பெறுவர். ஆக இப்படித்தான் ஒவ்வொரு நாட்டின் ஆட்சிமுறையும் உள்ளன.

“பாராளுமன்ற ஜனநாயகம் போலியானது, சோவியத் ஜனநாயகம் மக்களுக்கானது” என்று மார்க்சிய-லெனினிய அமைப்புகள் 1992க்கு முன்னாள் பரப்புரை செய்தன. ரஷ்யப் புரட்சிக்குத் தலைமை தாங்கிய லெனின் பெரும்பான்மை மக்களுக்கு அதிகாரமுள்ள அரசியல் அமைப்பாக இதனை பன்னாட்டு தொழிலாளர் வர்க்கம் பரப்புரை செய்யவேண்டும் என பரிந்துரை செய்தார். தமிழ் நாட்டிலுள்ள இடது, வலது கம்யூனிஸ்டுகள் தொழிலாளர் விவசாயிகளிடம் இதனை கொண்டு செல்லாமல் மூடி மறைத்தனர், இன்று வரை மூடி மறைக்கின்றனர். சோவியத் ஜனநாயகம் என்பது வர்க்க அடிப்படையிலான பிரதிநிதிகளைக் கொண்டது. வர்க்கப் பிரதிநிதிகள் அந்தந்த வர்க்கங்களின் எண்ணிக்கைக்கு (அளவுக்கு) ஏற்ப இடம் பெறுவர். அவர்களை மக்கள் தேர்ந்தெடுக்கவும் எப்போது வேண்டுமானலும் திருப்பி அழைக்கவும் அதிகாரம் பெற்று இருப்பார். அரசாங்கம் (நாடாளுமன்றம், சட்ட மன்றம் போன்ற) மட்டுமல்ல, அரசும் (நீதிமன்றம், மாவட்ட அலுவலகம் போன்ற அதிகார வர்க்க அமைப்புகள்) மக்களது தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளைக் கொண்டிருக்கும். இவ்வாறு சட்டமன்றம், நாடாளுமன்றம் போன்ற சட்டம் போடும் அமைப்பும், அதனை நடைமுறைப் படுத்தும் அதிகார வர்க்க அமைப்பும் மக்களால் ஜனநாயகப் படுத்தப்பட்டிருக்கும். சட்டம் போடும் அமைப்பு மட்டுமல்ல. அதிகார வர்க்க அமைப்பும் மக்களுக்குப் பதில் சொல்ல கடமைப்பட்டதாகும். இந்த அமைப்பு முறையானது ஊராட்சியிலிருந்து உயர் மட்டம் வரை இவ்வாறுதான் அமைக்கப்பட்டிருக்கும். இந்த அரசியல் அமைப்பு முறை மூலம் தொழிலாளர்கள், விவசாயிகள் மற்றும் இதர உழைக்கும் பிரிவியினர் தங்களது அதிகாரத்தை சுரண்டும் முதலாளி வர்க்கத்தின் மீது செலுத்துவர்.

இந்தியாவில் அரசியல் அமைப்பை உருவாக்கியதில் முக்கிய பங்காற்றிய வர்க்கங்கள் பார்ப்பன-பனியா முதலாளிகள், பெரும் நில உடைமையாளர்கள், (மன்னர்கள்) அதிகார வர்க்க அறிவாளிகளே. தாழ்த்தப்பட்ட சமூகத்திலிருந்து வந்த அம்பேத்கர் இந்தியாவில் அரசியல் அமைப்புச் சட்டத்தை உருவாக்கியதில் முதன்மையான பாத்திரம் வகித்த போது அவர் ஒரு முதலாளிய ஜனநாயகவாதியாகவே திகழ்ந்தார். கம்யூனிஸ்டு ஆட்சிமுறையை சர்வாதிகார ஆட்சிமுறையாக புரிந்து கொண்டிருந்தார். இந்தியாவின் அரசியல் நிர்ணய அவையின் தலைவராக அம்பேத்கர் தேர்ந்தெடுப்பதற்கு முன்பே இந்திய ஆளும் வர்க்கங்கள் இந்திய அரசியல் அமைப்பின் வரைவு அறிக்கையை முன் வைத்திருந்தனர். அம்பேத்கர் அதனை ஆளும் வர்க்கம் அனுமதித்த அளவுக்கு ஏற்ப ஜனநாயகப் படுத்தினார். அம்பேத்கரைப் பொறுத்த அளவில் இந்தியாவின் அதிகார வர்க்கத்தின் பண்புகளை சரியாக புரிந்து கொண்டவராக இல்லை. அதனால்தான் தனது வாழ்வின் இறுதியில் “இந்தியாவின் அரசியல் சட்டம் யாருக்கும் பயனிளிக்கப் போவதில்லை, அதனை கொளுத்த வேண்டுமானால் முதல் நபராக நானிருப்பேன்” என்றார். எனவே, இந்தியாவின் அரசியல் அமைப்புச் சட்டம் பெரும் முதலாளிகளின் நலனுக்கானதே தவிர உழைக்கும் மக்களுக்கானது அல்ல.

தமிழ்நாடு உள்ளிட்ட அனைத்து தேசிய இனங்களிலும் உள்ள சட்டமன்றம் என்பது ஒரு சட்டத்தை இயற்றவும், அதனை நடைமுறைப்படுத்தவும் அதிகாரமில்லா கங்காணி மன்றமே என்பதை ஆளுநர் ஆர்.என்.இரவியின் மூலம் தமிழக மக்கள் நன்கு உணர்ந்து உள்ளனர். இதில் யார் ஆட்சி வந்தாலும் டெல்லிக்கு கங்காணி வேலை செய்ததாக வேண்டும். முடியாது என்றால் அந்த ஆட்சி 356 சட்டப் பிரிவைக் காட்டி கலைக்கப்படும். எனவே யார் ஆட்சி வேண்டும் என்பது முக்கியம் அல்ல. தமிழ்நாடு முற்றதிகாரம் பெற வேண்டும் என்பதே முக்கியம். அதிகாரம் பெற்ற தமிழ்நாட்டில் எப்படி அரசியல் அமைப்பு இருக்க வேண்டும் என்பது அடுத்ததாகும்.

தமிழ்த் தேச இறையாண்மை - அமைப்பைப் பொறுத்த அளவில் விவசாயிகள், தொழிலாளர்கள், பெண்கள், மாணவர்கள், நடுத்தர வர்க்கங்கள் ஆகியோருக்கு அதிகாரமுள்ள சோவியத் வடிவிலான ஆட்சிமுறையை முன் வைக்கிறது. அது மட்டுமே பெரும்பான்மை உழைக்கும் மக்களுக்கு அதிகாரமுள்ள ஆட்சிமுறையாகும். அது மட்டுமே அரசியல் வாதிகளின் முறைகேடுகளுக்கு மட்டுமல்ல, அதிகார வர்க்கங்களின் முறைகேடுகளுக்கும் முடிவு கட்டும். அத்திசை வழியில் மதுரை கிரானைட் கல்குவாரிக்கு எதிரானப் போராட்டம் செல்லட்டும்.

- பாரி

Pin It