தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகளை மூன்று வகையாகப் பிரிக்கலாம். 1. தி.மு.க., அ.தி.மு.க. போன்ற அதிகாரத்தைக் கைப்பற்றும், ஆட்சியதிகாரத்தில் அமரும் பலத்தோடு விளங்கும் மிகப் பெரும் கட்சிகள். 2. நேரடியாக அதிகாரத்தில் அமரும் அளவுக்கு பலம் இல்லாமல் மேற்குறித்த இரு கட்சிகளுள் ஏதாவதொன்றுடன் கூட்டு சேர்ந்து அதிகாரத்தில் பங்கு பெற்று, தம் இருப்பைத் தக்கவைத்தும் வளர்த்தும் வரும் கட்சிகள். 3. இவ்விரு வகைக் கட்சிகளுக்கு அப்பால் தமிழ் உரிமை, தமிழர் உரிமை பேசும் தமிழ்த் தேசியக் கட்சிகள்.
இம்மூன்று பிரிவுகளுள் உட் பிரிவுகள் பல சொல்லலாம். என்றாலும் அடிப்படையான பிரிவு என்கிற வகையில் இம்மூன்றை மட்டும் கொள்ளலாம்.
இதில் தி.மு.க., அ.தி.மு.க. ஆகிய கட்சிகளின் ஊழல், சொத்துக் குவிப்பு, லஞ்சம், அதிகாரம், கெடு செயல், கருத்துரிமைப் பறிப்பு, எதிர்க் கட்சிகளை ஒடுக்குதல், சர்வாதிகாரம், போராடும் ஊழியர்கள் மீது வன் முறை அடக்குமுறை ஆகியவற்றைப் பற்றி விளக்க வேண்டியதில்லை. என்றாலும் இவை இவ்வளவையும் மீறி போதுமான விழிப்புணர்வற்ற பாமர மக்களின் செல்வாக்கில் தங்கள் அதிகாரத்தை நிலைநிறுத்தி இயங்கி வருகின்றன.
அடுத்த நிலையில் இருக்கும் ம.தி.மு.க., பா.ம.க., வி.சி.க., இ.க.க., இ.க.க.(மா), தற்போது புதிதாக துவங்கப் பெற்றுள்ள தே.மு.தி.க. ஆகிய கட்சிகள். தனித்து நின்று அதிகாரத்தைக் கைப்பற்றும் அளவுக்கு போதுமான வலுவற்ற நிலையில், சார்பு நிலையோடு இயங்கினாலும், இவற்றுள்ளும் தி.மு.க., அ.தி.மு.க.வில் நிலவும் அதே போக்குகள், அதே அளவுக்கு இல்லையானாலும் அதனதன் சக்திக்கு ஏற்ப சற்று கூடவோ, குறையவோ இருந்து வருகின்றன. அப்படியெல்லாம் எதுவு மில்லை என்று யாரும் வாதிடுவதா னாலும், இவை குறைந்தபட்சம், நிலையான கொள்கை, கோட்பாடு எதுவுமற்ற சந்தர்ப்பவாத நிலைப்பாட் டிலேயே தங்கள் இருப்பைத் தக்க வைத்து வருகின்றன என்பதே உண்மை.
இந்நிலையில் இக்கட்சிகள் முதல் வகைப் பிரிவில் சொன்ன தி.மு.க., அதிமுகவுக்கு மாற்றாக ஒரு மூன்றாவது அணியை உருவாக்க முன்வராத, முயற்சிக்காத நிலையில், இவை அனைத்துமே திமுக, அதிமுக இவற்றுடன் ஏதாவதொன்றுடன் கூட்டு வைத்து தங்கள் இருப்பைத் தக்க வைத்து வரும் நிலையில், இவை அனைத்துமே தில்லி அதிகாரக் கட்சியான காங்கிரஸ், பா.ஜ.க. ஆகிய இரண்டில் ஏதாவதொன்றுக்கு சேவகம் செய்து, அவற்றுக்குத் துணை போகும் நிலையில், இவற்றுக்கு மாற்றாக, மாற்றுக் கொள்கைகள், கோட்பாடு களுடன், மக்களை விழிப்பூட்டி ஒரு மாற்று அணியை உருவாக்க வேண்டும் என்கிற முனைப்பு கொண்ட அமைப்புகளே ‘புரட்சிகர அமைப்புகள்’ என்பதாகக் கருதப்படுகின்றன. அல்லது அழைக்கப்படுகின்றன.
இப்புரட்சிகர அமைப்புகள் பொதுவாக இடதுசாரி சிந்தனைகள் கொண்டதாகவே இருந்து வருகின்றன.
இந்திய, தமிழ்ச் சமூக அமைப்பை வெறும் வர்க்க வேறு பாட்டு அளவுகோலை மட்டுமே வைத்து புரிய முயன்ற இவை சமீப சில பத்தாண்டுகளாக சற்று விழிப்புற்று இச்சமூக அமைப்பை, தேசிய இனச் சிக்கலோடும், சாதியச் சிக்கலோடும் சேர்ந்து புரிந்து கொள்ளும் முயற்சியில் இப்போது தமிழ்த் தேசியத்தை முன்னெடுத்து, பொருளியல் ஏற்றத் தாழ்வற்ற, சாதியப் பாகுபாடற்ற, சமத் துவ, சனநாயக தமிழ்த் தேசக் குடி யரசை நிறுவுவதையே தங்கள் இலக்காகக் கொண்டுள்ளதாக அறிவித்து வருகின்றனர்.
இந்த இலக்கு சார்ந்த கோட்பாடுகளே தமிழக வரலாற்றுச் சூழலுக்குப் பொருத்தமான புரட்சிகரக் கோட்பாடுகளாகவும் இருந்து வருகின்றன.
இந்தப் புரட்சிகரக் கோட்பாடுகள் பற்றி நமக்கு எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. தமிழ்த் தேசிய இடதுசாரிய சிந்தனையாளர்கள், சனநாயக, சமத்துவ சிந்தனைமிக்க தமிழ் உணர்வாளர்களுக்கும் அவ் வாறே. இவையனைத்தும் ஏற்பு டையதே.
ஆனால், இப்படிப்பட்ட தமிழ்த் தேசக் குடியரசை அமைப்பதை தம் இலக்காக முன் வைக்கும் கட்சிகள் அதற்கான புரட்சிகர அமைப்பைக் கட்டுகின்றனவா, புரட்சிகர நடைமுறைகளை உருவாக்கிக் கடைப்பிடிக்கின்றனவா என்றால் அதுதான் பலருக்கும் கேள்வியாக இருக்கிறது. இதனால் இவற்றுள் சில கொள்கையளவில் புரட்சிகரமாய் இருந்தாலும், நடைமுறை அளவில் தன்னலமிக்கதாய், சந்தர்ப்பவாதமாய், பிழைப்புவாதப் போக்கில் இயங்கி வருகின்றன.
1. நாட்டில் புதிது புதிதாக கட்சிகள் தோன்றி, புதிய முழக்கங்களோடு மக்களைக் கவர்ந்து செல்வாக்கு பெற்றபின், தொடக்க காலக் கொள்கைகள் அனைத்தையும் காற்றிலே பறக்க விடுவது போல, இப்புரட்சிகர கட்சிகளும் புரட்சிகரக் கொள்கைகளைப் பேசி மக்களைக் கவர்ந்து ஓரளவு செல்வாக்கும் வளர்ச்சியும் பெற்றபின் இவையும் அனைத்தையும் காற்றிலே பறக்க விடுகின்றன. மற்ற கட்சிகள் போல் இவை கொள்கைகளைப் பறக்க விடாமல் அவற்றைக் காப்பாற்றுவதாகச் சொன்னாலும், நடைமுறையில் அதற்கான செயல்திட்டங்கள் எதுவுமில்லாமல் அவற்றைக் கைவிட்டு, அந்த முழக்கங்களை சும்மா அடையாளப்பூர்வமாக மட்டுமே பாதுகாத்து வருகின்றன.
புரட்சிகரக் கட்சிகள் ஊர் ஊராகப் போய் இளைஞர்களைச் சந்தித்து அவர்களிடம் உரையாடி, சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தி, அமைப்பைக் கட்டி, புரட்சிகர நடவடிக்கை களில் ஈடுபடுத்தியது போல் அல்லாமல் சுகமாக சொகுசு காரில் பவனி வந்து பொதுக்கூட்டம் பேசி கைத்தட்டல் வாங்கி மேடைப் புரட்சி செய்து வருகின்றன.
இத்துடன் தங்கள் கொள்கை மங்கித் தேய்ந்து போகாமல் இருக்க மூன்று, நாலு மாதத்திற்கொரு முறை தமிழ்த் தேசியக் கோரிக்கைகள் எதையாவது முன் வைத்து ஒரு போராட்டம், மறியல் அறிவித்து முற்பகல் 11.00 மணிக்கு கைதாகி ரெண்டு மணிக்கு காவல் சாப்பாடு சாப்பிட்டு, எப்போது விடுவார்கள் என்று காத்திருந்து மாலை விடுதலையாகி வெளிவந்து புரட்சியாளர் பெயர் தாங்கி, தியாகிப் பட்டம் கோருகின்றனர்.
இப்படிக் குறிப்பிடுவதால் பொது வாகப் போராட்டங்களையே சிறுமைப்படுத்துவதாக கொச்சைப்படுத்துவதாக யாரும் கருதிவிடக் கூடாது. காரணம் இந்த அடையாளப் போராட்டங்களைத்தான் பெரும்பாலான எல்லா கட்சிகளும் செய்து வருகின்றன. புரட்சிகர கட்சிகள் எனப்படுபவையும் இதையேதான் செய்து வருகின்றன என்றால் இரண்டுக்கும் என்ன வித்தியாசம் என்பதைக் குறிப்பிடுவதற்காகவே இது.
கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்... போராட்டம் நடத்துவதன் நோக்கம் என்ன? முன் வைக்கும் கோரிக்கைகளில் துளியாவது முன்னேற்றம் காண்பதற்குத்தானே.. ஆனால் தமிழகத்தைப் பாதிக்கும், தமிழீழத்தைப் பாதுகாக்கும் பிரச்சினைகளில் இதுவரை நாம் நடத்திய போராட்டங்கள் ஒரு சிறிதளவாவது முன்னேற்றத்தை ஏற்படுத்தியிருக்குமா? தமிழ் வழிக் கல்வி, தமிழ் வழியில் படித்தவர்க்கு வேலை வாய்ப்பு, காவிரி, முல்லைப் பெரியாறு, பாலாறு ஆற்று நீர்ப் பிரச்சினைகள் முதலான எந்தப் பிரச்சினையை வேண்டுமானாலும் எடுத்துக்கொண்டு யோசிப்போம். 30, 40 ஆண்டுகளாக என்ன கோரிக்கை வைத்தோமோ, அதையேதானே இன்னமும் வைத்துக் கொண்டிருக்கிறோம். இதில் ஏதாவது முன்னேற்றம் ஏற்பட்டு இருக்கிறதா. அப்படியே இருக்கிறது என்றாலும் அது ஏதோ சும்மா கண் துடைப்புக்கு அறிவிக்கப்பட்ட மாற்றமாகவேதான் இருந்திருக்கிறதேயழிய அடிப்படைப் பிரச்சினையைத் தீர்ப்பதாக இல்லை.
தொழிலாளர்கள், ஊழியர்கள் தங்கள் உரிமைகளுக்காக அடக்குமுறையை எதிர்த்துப் போராடுகிறார்கள். ஆனால் மக்கள் அரசியல் உரிமைக்குத் திரளவில்லை, திரட்டப்படவில்லையே, ஏன்? பக்கத்தில் தெலுங்கானா மக்கள் போராடுகிறார்கள். வடக்கே குஜ்ஜார் மக்கள், காஷ்மீர் மக்கள் போராடுகிறார்கள். வட கிழக்கு எல்லைப்புற மாநில மக்கள் போராடுகிறார்கள். ஆனால் தமிழக மக்கள் போராடவில்லை. போராட திரட்டப்படவில்லையே. ஏன்?
ஏன், தமிழக மக்களும் போராடி யிருக்கிறார்களே, அவர்களும் எத்தனையோ போராட்டங்கள் நடத்தி யிருக்கிறார்களே என்று சிலர் சொல்லலாம்.
ஆனால் இவையனைத்தும் மக்களுக்குப் பராக்கு காட்டும் போராட்டங்களாகத்தான் அமைந்தனவே தவிர, எந்தப் போராட்டமும் கோரிக்கைகளை நோக்கி முன் நகர்த்திச் செல்வதாக அமையவில்லை. என்றாலும் இப்படிப்பட்ட போராட்டங்களை இவை ஏன் நடத்துகின்றன என்கிற கேள்விகள் சிலருக்கு எழலாம். இதற்குப் பல காரணங்கள், இதனால் கட்சிக்கு பல ஆதாயங்கள் இருக்கின்றன. தலைவர்களுக்கு கௌரவம மிக்க, வசதி வாய்ப்போடு கூடிய தரமான வாழ்க்கை இருக்கிறது. இதனால்தான் இவை இப்படிப்பட்ட வெறும் அடையாளப் போராட்டங்களையே அவ்வப்போது பராக்காக நடத்தி வருகின்றன.
ஒன்றும் வேண்டாம், இப்படி சிந்தித்துப் பாருங்கள். ஊரில், நகரத்தில், அல்லது தமிழகம் தழுவி நிலவும் பிரச்சினைகளில் ஏதாவது சிலவற்றை முன்னிறுத்தி அவற்றைக் கோரிக்கையாக வையுங்கள். இது சார்ந்த மக்கள் கொஞ்சம் பேரைத் திரட்டி சில போராட்டங்கள் நடத்துங்கள். இது தான் நீங்கள் தொடங்கி நடத்தும் கட்சிக்கு மூலதனம்.
இப்படி சில போராட்டங்கள் நடத்தினால் சமூகத்தில் கட்சிக்கு ஒரு மதிப்பு ஏற்படுகிறது. புதிதாக பலபேர் வணக்கம் வைக்கிறார்கள், காவல் துறையில், வருவாய் மற்றும் நிர்வாகத் துறைகளில் தலைவர் மரியாதையோடு உங்களுக்கு சில அங்கீகாரம் கிடைக்கிறது. உங்கள் பரிந்துரைக்கு இவர்கள் செவி சாய்க்க வேண்டிய சாத்தியம் நிகழ்கிறது. இப்படி அதிகார அமைப்புகளோடு கிடைக்கும் நெருக்கம், மதிப்பு, சமூகத்தில் உங்களுக்கு ஒரு செல்வாக்கை ஏற்படுத்தித் தருகிறது. முக்கியஸ்தர்கள் உங்களுக்கு நெருக்கமாகிறார்கள். நீங்கள் நன்கொடை என்று போனால் ‘உரிமைக்குப் போராடும் உத்தமர்’ என்கிற சான்றோடு உங்களுக்குத் தேவைப்படும் தொகையும் கிடைக்கிறது. ஆக இந்த அங்கீகாரம், அதிகாரம், மரியாதை, நிதி வசூல் எல்லாம் உங்களுக்கு ஒரு போதையைத் தருகிறது. இந்தப் போதைக்கு நீங்கள் இரையான பிறகு, புரட்சி, போராட்டம் எல்லாம் ஒரு சடங்காகி விடும். இது நல்ல வருவாய்க்கும் வழி வகுக்கும். வாய்க்காலாகத் தென்படத் தொடங்கும்.
இதன்பிறகு நீங்கள் அதிகம் இடர்ப்பட வேண்டியிருக்காது. ரெண்டு, மூன்று மாதத்திற்கு ஒரு முறை ஏதாவது ஒரு போராட்டம். அதை யட்டி ஒரு நிதி வசூல். அதை வைத்து கொஞ்சகாலம் வண்டியோட்டினால் வறட்சி வரும்போது அடுத்த போராட்டம் அறிவிக்கலாம். உங்களுக்குத் தேவையெல்லாம் முதலில் துண்டறிக்கை செலவு மட்டுமே. போட்டுவிட்டால் அதை வைத்து நம்பிக்கையோடு களம் இறங்கலாம். வருகிற வசூலைப் போராட்ட செலவு, போக்குவரத்து, ஒலிபெருக்கி, பதாகை, பத்திரிகை செய்திச் செலவு எல்லாம் போக கணிசமாக ஒரு தொகை மீதமாகும். அதைக் கட்சி நிதியாக வைத் துக் கொண்டு, தலைவர் தகுதியோடு தெம்பாகவும் மரியாதைகளோடும் வலம் வரலாம்.
இப்படித்தான் இயங்கிக் கொண்டிருக்கின்றன நாட்டில் சில கட்சிகள். இப்படிச் சொல்வதால் பொதுவாகவே கட்சிகளின் நடவடிக்கைகளையே சிறுமைப்படுத்துவதாகவோ, கொச்சைப்படுத்துவதாகவோ யாரும் தவறாக எடுத்துக் கொள்ளக்கூடாது. உண்மையிலேயே அர்ப்பணிப்புணர்வோடும் தியாக மனப்பான்மையோடும் தலைவர் யார் என்றே தெரியாமலோ அல்லது அப்படி எவர் ஒருவரும் தன்னை முன்னிறுத்திக் கொள்ளாமலோ இயங்கிவரும் அமைப்புகளும் இருக்கத்தான் செய்கின்றன. அப்படிப்பட்ட அமைப்புகள் எதையும் நாம் குறை சொல்லவில்லை. ஆனால் புரட்சிகர அமைப்பு என்று சொல்லிக் கொண்டு நேரு குடும்பம், கருணாநிதி குடும்பம் போல், கால காலத்துக்கும் தாங்களே தலைவர்களாக இருக்க வேண்டும் என்று, குடும்ப ஆதிக்கத்தோடு கட்சி அமைப்பை தனியார் நிறுவனம் போல் நடத்தி வருகின்றனவே சில கட்சிகள், அதுபற்றி நீங்கள் யோசித்துப் பார்க்கவேண்டும் என்பதற்காக சொல்கிறோம்.
ஏன் இப்படிப்பட்ட தலைவர்களோ, தலைவர்களது குடும்பத்தைச் சார்ந்தவர்களோ பொது நலனுக்கு உழைக்க வருவதிலோ அதன் மூலம் அவர்கள் முன்னேற்றமடைவதிலோ என்ன தவறு என்று சிலர் வினவலாம்.
நியாயம். கட்சி வளர்ச்சி, மக்கள் திரள் அமைப்புகள் வளர்ந்து அதில் ஒரு அங்கமாக தலைவர்களும், தலைவர்களின் குடும்பத்தைச் சார்ந்தவர்களும் வளர்ந்தால் அதில் எந்த தவறும் இல்லைதான். ஆனால் கட்சி வளராமல் இவர்கள் மட்டும் வளர்கிறார்களே, அது எப்படி? அது மட்டும் சாத்தியமாவது ஏன்? என்பதுதான் கேள்வி.
ஒன்றும் வேண்டாம், ஒரு இருபது, முப்பது ஆண்டுகளுக்கு முன் நிலவிய சில அமைப்புகள், அதன் தலைவர்கள் அவர்களது நிலைமைகளை யோசித்துப் பாருங்கள். இவர்கள் அப்போதிருந்த நிலைமை என்ன? இப்போது இருக்கிற நிலைமை என்ன? என்பதை யோசித்துப் பாருங்கள். வளர்ச்சி தெரியும். இந்த வளர்ச்சியை நாம் வேண்டாம் என்று சொல்லவில்லை. ஆனால் கட்சி வளராமல் தலைவர்கள் மட்டும் வளர்கிறார்களே, அவர்கள் வசதி மட்டும் பெருகுகிறதே அது எப்படி? அதன் மர்மம் என்ன என்பதுதான் கேள்வி.
கட்சியைப் பார்த்தால் இருபது வருடத்துக்கு முன்பு எப்படி இருந்ததோ அப்படியேதான் இருக்கிறது. சொல்லப்போனால் உடைந்தோ, அல்லது பலர் வெளியேறியோ தேய்ந்துதான் போயிருக்கிறது. ஆனால் தலைவர்கள் மட்டும் வளர்கிறார்களே எப்படி, இதுதான் புரட்சியா?
ஏன் தோழர், கட்சி கொஞ்சம் வளர்ந்துதானே உள்ளது. புதிதாக சில இளைஞர்கள் வந்துதானே உள்ளனர் என்று சிலர் சொல்லலாம். இருக்கலாம். ஆனால் ஏற்கெனவே இருந்த பல இளைஞர்கள் காணாமல் போயுள்ளனரே, எப்படி? ஏன்? அதற்கு என்ன காரணம்?
கொஞ்சம் யோசித்துப் பார்த்தால், இந்தப் புரட்சிகரக் கட்சிகள் இருக்கையை நிரப்பும் பயணிகளைக் கொண்ட ஓடும் பேருந்தாக இருப்பதை உணரலாம். இப்பேருந்தின் வழித் தடத்தில் ஆங்காங்கே சில பயணிகள் இறங்குவார்கள். புதிதாக சில பயணிகள் ஏறுவார்கள். ஆனால் புறப்பட்ட இடத்தில் இருந்தவர்கள் யாரும் அடுத்தடுத்த சில நிறுத்தங்களில் இருக்க மாட்டார்கள். பயணிகள் வருகை அதிகமாகிவிட்டது என்று அடுத்த பேருந்தும் தயாராகாது. இருக்கிற பேருந்து இருக்கிற நிலை யிலேயே இருக்கும். அவ்வப்போது சிலர் ஏறிக் கொண்டும் இறங்கிக் கொண்டும் இருப்பார்கள். ஆனால் வசூல்வேட்டை மட்டும் மும்முரமாக நடக்கும். கட்சியின் புதிய புதிய முழக் கங்களைக் கேட்டு நம்பிக்கை வைத்து, மரியாதை வைத்து மக்கள் அவரவர்க்கு இயன்றதை மனமுவந்து வாரி வழங்கு வார்கள். தலைவர் பெருமையோடும் வசதியோடும் எல்லாவற்றையும் சுகித்து மகிழலாம்.
இப்படித்தான் இயங்கிக் கொண்டிருக்கின்றன நாட்டில் சில அமைப் புகள். இதுபற்றி இவற்றின் நடைமுறைகள் பற்றி எழுத எவ்வளவோ இருக்கிறது. இனியரு சந்தர்ப்பத்தில் இதுபற்றி இன்னும் விரிவாகப் பார்ப்போம். இப்போதைக்கு இதுபோன்ற அமைப்புகளை உணர்வாளர்கள் அடையாளம் காணவேண்டும். இப்படிப்பட்ட அமைப்புகளில் உணர்வாளர்கள் தங்கள் வாழ்நாளை வீணடிப்பதை விட்டு, அவற்றிலிருந்து வெளியேறவேண்டும். இவ்வமைப்புகளின் போலி முகத்திரைகளைக் கிழித்து மக்கள் மத்தியில் இவற்றை அம்பலப்படுத்த வேண்டும்.
கட்சி வளர்ச்சி
யாரையும் எந்த அமைப்பையும் குற்றம் சாட்டும் நோக்கில் இவற்றைக் கூறவில்லை. நம் உழைப்பும் அர்ப்பணிப்பும் வெட்டியாய் விரயமாய் விழலுக்கிரைத்த நீராய் யாரோ ஒரு சிலர் சுகம் அனுபவிக்க, அவர்கள் சமூகத்தில் செல்வாக்கோடு பவனி வர உதவி விடக் கூடாதே என்கிற நன்னோக்கிலேயே இவ்வளவும்.
ஆகவே எதிலும் உணர்ச்சி வயப்படாமல் நன்நல நோக்கில் அறிவார்த்தமான சிந்தனைக்காக சில.
1. ஒரு இருபது முப்பதாண்டுகளுக்கு முன் நிலவிய தமிழ்த் தேசிய அமைப்புகளின் தற்போதைய நிலை என்ன? அப்போது அவ்வமைப்புகளில் இருந்தவர்கள் யார், யார்? இப்போதிருப்பவர்கள் யார் யார்? கட்சி வளர்ந்துள்ளதா? உடைந்துள்ளதா? வளர்ச்சியானாலும் தேய்வானாலும் இவை ஏன்? இவற்றுக்கு என்ன காரணம்?
2. இவ்வமைப்புத் தலைவர்களின் இருபதாண்டுகளுக்கு முந்தைய வாழ்நிலை என்ன? தற்போதைய வாழ் நிலை என்ன? கட்சி வளராமல், அமைப்பு வளராமல், தலைவர்கள் மட்டும் வளர்கிறார்கள் என்றால் அது எப்படி சாத்தியம்? அதன் மர்மம் என்ன என்று யோசியுங்கள்.
3. கட்சி வளர்ச்சி என்பது அது நடத்தும் போராட்டங்களின் எண்ணிக்கையோ, அதற்கான வெறும் மக்கள் திரள் அறிமுகமோ மட்டும் அல்ல. சிறிய அமைப்பை வைத்தும் இதைச் சாதிக்கலாம். அது அல்ல கேள்வி. கட்சி வளர்ச்சி என்பது கிளைகள் வளர்ச்சி. உறுப்பினர் எண்ணிக்கை வளர்ச்சி. அதனடிப் படையிலான அமைப்பு வளர்ச்சி, இந்த வளர்ச்சி இவ்வமைப்புகளில் எந்த அளவு ஏற்பட்டுள்ளது? இல்லை என்றால் ஏன்?
4. கட்சி வளர்ச்சியில்லை என்பதற்கு வீணாக மக்கள் மேல் பழிபோட முடியுமா, மக்களை இப்படி சமூக அக்கறையற்றவர்களாக மாற்றியது யார்? அக் கறையுள்ள மக்களையும் அவ நம்பிக்கைக்கும் விரக்திக்கும் ஆளாக்கியது யார்? அதற்கான புறச் சூழல்கள் எவை? அதற்கும் இத் தலைவர்களுக்கும் பங்கில்லையா என்பதை யோசியுங்கள்.
5. போராட்டம் நடத்துபவர்கள், எந்தச் சிக்கல் குறித்தும் அதற்கு முறையான ஒரு தீர்வை எட்ட முற்படாமல் அதை நோக்கித் தங்கள் போராட்டத்தைக் கூர்மைப் படுத்தாமல் சும்மா பேருக்கு என்று அவ்வப்போது ஒரு போராட்டம் நடத்தி வெறும் அடையாள மட்டத்தோடு அதை நிறுத்திக் கொள்கிறார்களோ. இதனால் எந்தப் பிரச்சினையும் தீர்ந்தபாடில்லை என்று நன்கு அறிந்தே இப்படிச் செய்து கொண்டிருக்கிறார்களே ஏன்? இதனால் பலன் தமிழகத்துக்கா அல்லது அவர்களுக்கா என்று யோசியுங்கள்.
தலைவர்களின் முன்னோடிப் பாத்திரம்
சுதந்திர போராட்ட காலத்தில் வாழ்ந்த தலைவர்களது கொள்கைகள், கோட்பாடுகள் பற்றி நமக்கு மாறுபட்ட கருத்துகள் இருந்தாலும், அப்போதைய போராட்டத் தலைவர்களிடம் ஓரளவு தன்னலமற்ற தியாகம், அர்ப்பணிப்பு இருந்தது. அது இளைஞர்களை ஈர்த்தது. அதற்கடுத்து திராவிட இயக்க காலம். அது நடத்திய போராட்டங்கள், அப்போதைய தலைவர்களது தியாகம், அர்ப்பணிப்பு அடுத்த தலைமுறை இளைஞர்களை ஈர்த்தது. அதனை அடியற்றி பல இளைஞர்கள் உருவானார்கள்.
அதன்பின் எழுபதுகளில் திராவிட இயக்க மாயையிலிருந்து விடுபட்ட இளைஞர்கள் இடதுசாரி இயக்கத் தலைவர்களின் தியாகம் அர்ப்பணிப்பைப் பார்த்து அந்தக் கொள்கைகளில் ஈர்க்கப்பட்டு அந்த அமைப்பு நோக்கி ஈர்க்கப்பட்டார்கள். இப்படி அந்தந்தக் காலத்தும் நிலவிய கருத்தோட்டங்கள், தலைவர்களின் தியாகங்கள் சார்ந்தே இளைஞர்கள் ஈர்க்கப்பட்டு வந்திருக்கிறார்கள். தியாகமும் அர்ப்பணிப்பும் கொண்ட தலைமுறையும் உருவாகி இருக்கிறது.
ஆனால் தற்போது கொள்கை கோட்பாடுகள் உன்னத மாயிருந்தும், அதற்காக உழைக்கத் தியாகம் செய்ய அர்ப் பணிக்கத் தலைவர்கள் யாரும் தயாராயில்லை. அதனால் இளைஞர்களும் தயாராயில்லை. அவர்கள் அறிந்த தெல்லாம் தன்னலவாத சொகுசுத் தலைவர்கள்தான். ஆகவே அதே போலவே தாங்களும் இருக்க விழைகின்றனர். இதில் அவர் களைப் போய் குறை சொல்வதில் பயன் இல்லை. குறை நம்மிடம் நம் தலைவர்களிடம் தான் இருக்கிறது.
ஒன்றும் வேண்டாம், தமிழீழச் சிக்கல் தீவிரம் பெற்று போராளிகளும் மக்களும் கடும் பின்னடைவைச் சந்தித்த வேளை, தமிழகத்தின் எல்லா பிரிவு மக்களும் அவரவர் சக்திக்கு சாத்தியத்துக்கு உட்பட்ட அளவில் ஈழ மக்களுக்கு குரல் கொடுத்தார்கள். போராடினார்கள். அவர்களுக்கு ஆதரவாக நின்றார்கள்.
ஆனால் இந்த ஆதரவை ஒருமுகப்படுத்தி, வலுமிக்க இயக்கமாக்கி வழி நடத்த அதற்காக உழைக்க அர்ப்பணிக்க, தியாகம் செய்ய தமிழ்நாட்டில் அதற்கான ஓர் அமைப்பு உண்டா? தலைவர்கள் உண்டா?
இன்றும் தமிழ்த்தேச எழுச்சிக்கான போராட்டக்களம் - அதற்கான உரிய அமைப்பு இல்லாமல் தலைவர்கள் இல்லாமல் காலியாகத்தானே இருக்கிறது. அதுபற்றி, அந்த வெற்றிடத்தை நிரப்புவது பற்றி, அதற்கு உரிய போராட்டக் களத்தை அமைப்பது பற்றி அதற்கான தமிழ்த் தேசியச் சக்திகளை ஒருங்கிணைப்பது குறித்து யாருக்கும் அக்கறை உண்டா. அதுபற்றிய சிந்தனைகளோ முயற்சிகளோ உண்டா?
அவரவர்க்கும் கட்சி என்பது ஒரு ‘பிரைவேட் லிமிடெட் கம்பெனி’. அது அவ்வப்போது ஒரு போராட்டம் அறிவிக்கும். அதையட்டி ஒரு வசூல் வேட்டை நடத்தும். சில காலம் அதை செலவு செய்யும். இருப்பு தீர அடுத்த போராட்ட அறிவிப்பு வரும்.
இப்படித்தானே அந்தந்த அமைப்பிற்கும் ஓடிக் கொண் டிருக்கின்றன நாள்கள். இப்படி யிருந்தால் தமிழகம் எப்படி உருப்பெறும்? தமிழித் தேச எழுச்சி எங்கிருந்து உருவாகும்? உணர்ச்சி வயப்படாமல் சிந்தியுங்கள்.
தமிழீழச் சிக்கல் இங்குள்ள சில தமிழ்த் தேசியச் சக்திகளுக்கு நல்ல மூலதனமாக, பராக்கான பொழுது போக்காக அமைந்திருக்கிறது. தமிழீழத்திற்காக இவர்கள் இங்கே மெய் சிலிர்க்க மேடையில் முழங்குவதை வைத்து, உலகம் முழுக்க புலம் பெயர்ந்து வாழும் ஈழத் தமிழர்கள், தங்களுக்கு ஒரு பராக்கு, தங்கள் மன அழுத்தத்துக்கு ஒரு ஆறுதல் வேண்டி இங்குள்ள தலைவர்களை அழைத்து தங்கள் நாட்டில் பேசவைத்து மகிழ்வதுடன், போக்குவரத்துப் பயணச் செலவுகளுக்கு அப்பால், இவர்களது தமிழ் உணர்வை மதித்து யூரோ மற்றும் அமெரிக்க டாலர்களில் நன்கொடையும் தந்து அனுப்ப நமது புரட்சி இயக்கத் தலைவர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி,
அடுத்தவர் செலவில் ஐரோப்பிய அமெரிக்க நாடுகளில் இலவச சுற்றுப் பயணம், கூடவே நல்ல நிதி வசூலும் என்று இவர்களில் பலர் அயல் நாட்டுப் பயணங்களுக்கு அலைபாய, பின்னாளில் இவர்கள் இலட்சனத்தைப் புலம் பெயர்ந்த தமிழர்கள் பலரும் இவர்களை இப்போது தங்கள் நாடுகளுக்கு அழைப்பதில்லை என்றும் கேள்வி. இந்த வாய்ப்பை இழந்த இத்தலைவர்கள் இதை வேறு வகையில் ஈடு செய்ய புதிய புதிய முயற்சிகளில் ஈடுபடுவதாகவும் செய்தி.