மொழிக்கு உரமாகிய மறவர்கள் - 6

தாய்மொழி காக்க இந்தி எதிர்ப்புப் போரில் துப்பாக்கிச் சூட்டிற்குப் பலியான முதல் மாணவன் மு.இராசேந்திரன்.

காரைக்குடிக்கு அருகிலுள்ள கல்லல் என்ற ஊரில் ஜூலை 16, 1947இல் பிறந்தார் ராசேந்திரன். இவரது பெற்றோர் முத்துக்குமார், வள்ளிமயில். இராசேந்திரனோடு உடன் பிறந்தவர்கள் ஆறு பேர் சக்திவேல், மேனகா, தைலம்மாள், சகுந்தலா, சேகர், கீதா.

mu rajendran hindi agitationஇவருக்கிருந்த தமிழ்ப்பற்றின் காரணமாக முதலில் மதுரை செந்தமிழ்க் கல்லூரியில் விண்ணப்பம் செய்தார். அங்கு இடம் கிடைக்காததால் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார். இராசேந்திரன் படிப்பில் மிகவும் திறமையானவர். தான் இறுதியாக எழுதிய கணிதத் தேர்வில் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்றுள்ளார்.

இந்தி மொழி ஆதிக்கத்தை எதிர்த்து தீக்குளித்த இளைஞர்களுக்கு வீரவணக்கம் செலுத்தவும், மதுரையில் மாணவர்கள் மீது தடியடி நடத்திய பக்தவச்சலம் அரசின் காவல் துறையைக் கண்டித்தும் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவர்கள் சனவரி 26 அன்று பேரணி நடத்த முயன்றனர்.

பேரணியைத் தடுத்து நிறுத்திய காவல் துறை அதிகாரி, "அன்பார்ந்த மாணவ நண்பர்களே! நானும் உங்கள் மாதிரி மாணவனாக இருந்துதான் போலீஸ் அதிகாரி ஆகி இருக்கிறேன். ஆகவே உங்களை உணர்ச்சிகளைப் புரிந்து கொள்ள முடியும். தயவு செய்து ஊரடங்குச் சட்டத்தை மீற வேண்டாம். நீங்கள் படிப்பில் கவனத்தைச் செலுத்துங்கள். வீணான கலகம் வேண்டாம். அமைதியாகத் திரும்பிச் செல்லுங்கள்.” என்று கேட்டுக் கொள்கிறார். ஆனால், மாணவர்கள் போராடுவதில் உறுதியாக இருந்தனர்.

எனவே, சனவரி 26 குடியரசு நாள் என்பதால் பேரணி நடத்த வேண்டாம் என்று அனுமதி மறுத்த காவல் துறையினர் மறுநாள் அனுமதி தருவதாக உறுதியளித்தனர். மாணவர்களும் இதனை ஏற்றுக்கொண்டு கலைந்து சென்றனர்.

காவல் துறையினர் அனுமதி தருவதாகக் கூறிய சனவரி 27 அன்று மூவாயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் அண்ணாமலைப் பல்கலைக்கழக வளாகத்திலிருந்து சிதம்பரம் நகரை நோக்கிப் பேரணியாகப் புறப்பட்டார்கள். இந்தி அரக்கி’ கொடும் பாவியும் இழுத்துச் செல்லப்பட்டது.

மாணவர்கள் அணி அண்ணாமலை நகரிலிருந்து சிதம்பரத்திற்குச் செல்லும் வடக்குச் சாலை வழியாக தொடர்வண்டி இருப்புப் பாதையை அடைகிறது. அங்கு வழியை அடைத்துக்கொண்டு நிறைய காவலர்கள் கையில் தடியுடன் நிற்கிறார்கள். சிலர் கையில் துப்பாக்கிகளும் இருக்கின்றன. காவல் துறையினரின் துப்பாக்கிகளுக்கு முன்னால் வெறுங்கையுடன் மாணவர்களின் முழக்கம் விண்ணை முட்டுகின்றன.

அனுமதி தருவதாகக் கூறிய காவல் துறையினர் மாணவர்களின் பேரணியை தடுத்து நிறுத்தினார்கள். அதனால், கோபம் கொண்ட மாணவர்கள் அவர்களது தடுப்புகளைத் தாண்டிக்கொண்டு " தமிழ் வாழ்க, இந்தி ஒழிக, இந்தியைத் திணிக்கும் அரசாங்கம் ஒழிக, காங்கிரஸ் ஒழிக" என முழக்கம் போட்டுக் கொண்டே முன்னேறிப் போக முயன்றார்கள். அந்தப் போராட்டத்தில் ராசேந்திரன் முதல் வரிசையில் நின்று ஆவேசமாக முழக்கமிட்டுக் கொண்டு சென்றார்.

அதற்காகவே காத்துக் கொண்டிருந்த காவல்துறையினர் மாணவர்கள் மீது தடியடி நடத்தினர். கூட்டத்தைக் கலைப்பதற்காக மாணவர்கள் மீது கண்ணீர் புகை குண்டுவீசினர். இதனால் ஆத்திரம் கொண்ட மாணவர்கள் சாலையோரம் கொட்டப்பட்டிருந்த கற்களை எடுத்து காவல் துறையினர் மீது வீசத் தொடங்கிவிட்டார்கள்.

கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் கலைய மறுத்த மாணவர்கள் மீது வெறி கொண்ட காவல்படையோ மாணவர்களை விரட்டி விரட்டி கொலைவெறித்தாக்குதல் நடத்தியது. மாணவர்கள் வேறுவழி இல்லாமல் ஓடத் தொடங்கினார்கள். அதற்குப் பின்பும் ஆத்திரம் அடங்காத காவல் துறை மாணவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியது. அதில், இராசேந்திரன், நெடுமாறன் உள்பட மேலும் இரண்டு மாணவர்கள் பலத்த காயமடைந்தனர். பல மாணவர்கள் காயத்தோடு தப்பி ஓடினர்.

தோளில் குண்டடிபட்ட நெடுமாறன் இரத்தம் சொட்ட சொட்ட ஓடினார். இராசேந்திரன் நெற்றியில் துப்பாக்கி குண்டு துளைத்ததால் அதே இடத்திலேயே விழுந்தார். தற்போது இராசேந்திரன் சிலை வைக்கப்பட்டிருக்கும் இடத்திலிருந்து தோராயமாக 100 அடி தூரத்தில் ஆசிரியர்கள் குடியிருப்புப் பகுதியில் ஒரு மரம் இருந்தது. அந்த மரத்தின் கீழேதான் குண்டடிபட்டு ராசேந்திரன் விழுந்து கிடந்தார்.

அப்போது அவர் உடலில் உயிர் ஊசலாடிக் கொண்டிருந்தது. அதைக் கண்டு சில மாணவர்கள் காப்பாற்றுவதற்காக ஒரு கம்பில் வெள்ளைத் துணியைச் சுற்றி உயர்த்தியபடி முன்னே ஓடி வந்தனர். அப்போது காவலர்கள் மாணவர்களை நோக்கி, அருகே வந்தால் சுட்டு விடுவோம் என்று மிரட்டவே, வந்தவர்களும் ஒதுங்கி நிற்க வேண்டியதாயிற்று. உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த இராசேந்திரனை மருத்துவமனைக்குத் தூக்கி சென்று உயிரை காப்பாற்றிவிடக்கூடாது என காவல் துறை கல்நெஞ்சத்தோடு தடுத்தது. இதன் விளைவாக மாணவன் இராசேந்திரன் துடிதுடித்துச் செத்தார். மொழிப்போர் களத்தில் குண்டடிபட்டு இராசேந்திரனின் உடல் சிதம்பரத்தை அடுத்த பரங்கிப்பேட்டையில் அடக்கம் செய்யப்பட்டது.mu rajendran hindi agitation 1இராசேந்திரன் தந்தையாரும் ஒரு காவலர் தான். நிகழ்ச்சி நடந்த அன்று சிவகாசி அருகில் உள்ள ஒரு கிராமத்தில் உள்ளாட்சி தேர்தல் பாதுகாப்புப் பணிக்குச் சென்றிருக்கிறார். 1969 இல் இராசேந்திரனின் ஈகத்தை பறைசாற்றும் விதமாக அவரது திருவுருவச் சிலை சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழக வாயிலில் அன்றைய முதல்வர் கலைஞர். மு.கருணாநிதியால் நிறுவப்பட்டது.

கலைஞர் அறிக்கை

விண்ணோடும் மண்ணோடும் உடுக்கள் தன்னோடும் பிறந்த தமிழுக்கு ஒரு ஊறு என்றால் பொங்கும் தமிழகத்தின் உணர்ச்சி உருவமாய் - உத்வேக மிகுந்த மாணவர் சமுதாயத்தின் எழுச்சி உருவமாய் விளங்கி சாவில் புகுந்து சாகாத சரித்திர ஏட்டின் பொன்வரியாய் விளங்கிய 'மாணவச் செல்வம் ராசேந்திரன்,

மலையென உயர்ந்த தமிழின் உறுதிக்கு அவன் சிலை ஒரு சின்னமாய் விளங்கும். ஆதிக்க வலை கிழிக்கும் வாளாய் அவன் சிலை விளங்கும். அவன் நினைவோ- தமிழின் புகழ் ஒளிவிடுமட்டும் நிலைக்கும்.

அன்புள்ள
மு.கருணாநிதி
முதலமைச்சர்.

- க.இரா.தமிழரசன்

Pin It