140 ஆண்டுகள் ஆகின்றன. தந்தை பெரியார் பிறந்து, 17.09.1879. 18-ஆம் நூற்றாண்டில் இளமைப் பருவ அனுபவங்கள், 19-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் வணிகம். பொது நிர்வாகம். ஊர்த்தலைவர். நகரசபையின் தலைவர். வணிகர் சங்கங்களின் தலைமை வழிகாட்டி. காங்கிரசு இயக்கத் தொண்டர். கதர்ப் பிரச்சாரகர். வைக்கம் சத்யாகிரகி. கள்ளுக்கடை ஒழிப்பாளர். காங்கிரசு இயக்கத்திற்குள் சமத்துவதற்காகக் குரல் கொடுத்த கலகக்காரர், 19-ஆம் நூற்றாண்டின் கால் பங்கு முடியும் போது. காங்கிரசு இயக்கத்தை ஒழிப்பேன் என்று சூளுரைத்து தனிச் பிரச்சாரம் தொடங்கியவர், குடியரசு என்ற வரலாற்றுச் சிறப்பு மிக்க இதழை நடத்தியவர், அதன் ஆசிரியர் பொறுப்பில் தங்கப்பெருமாள் பிள்ளை, தமிழறிஞர் சாமி. சிதம்பரனார், ஈ,வெ,கிருஷ்ணசாமி, அ,பொன்னம்பலனார், குத்தூசி குருசாமி வெளியீட்டாளர்களாக. நாகம்மையார், கண்ணம்மையார் போன்ற ஆளுமைகளைக் கொண்டு உள்ளூர் மக்களின் ஊழல். ஒழுங்கின்மை முதல் கொண்டு உலகப் போர்கள் வரை பகுத்தறிவு. சமதர்மம் என்ற இரண்டு கொள்கைகளைக் கொண்டு தண்டவாளத்தினின்று தடம் மாறாத ரயில் போல் பயணம், சூறாவளி போல் பொது வாழ்வு. சுயமரியாதை இயக்கம்.

periyar 341நீதிக் கட்சியில் தலைமை திராவிடர்கழக உருவாக்கம். பேரறிஞர் அண்ணா, கலைஞர் மு,கருணாநிதி, அன்னை மணியம்மையார், ஆசிரியர் கி.வீரமணி என்ற நான்கு பெரும் ஆளுமைகள் அவர் சீடர்களாக இருந்து செயல்பட்ட காலகட்டம், இந்திய விடுதலை அறிவிக்கப்பட்ட 1947 ஆகஸ்டு 15-இல் கலைஞர் அவர்களும் தேர்தல் அரசியல் பாதையைத் தேர்ந்தெடுக்க. 1948-இல் பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்தின் பதிவுடன் முடிந்தது, அரை நூற்றாண்டு 1950 முதல் அரசியல் சாசனத்தை எதிர்த்துப் போராட்டம், மொழிவாரி மாநிலங்கள் அமைப்பில் தமிழ்நாட்டு உரிமைக்கான போராட்டம். சாதி ஒழிப்பிற்காக அரசியல் சட்ட எதிர்ப்பு, இட ஒதுக்கீடு சட்ட திருத்தம். இராமன் பட எரிப்பு. மூட நம்பிக்கை ஒழிப்பு என போராட்டம், போராட்டம், போராட்டம். 1925-க்குப் பின் வந்த 50 ஆண்டுகளில் ஒவ்வொரு கிளையாக வெட்டப்பட்ட பெண்ணடிமை எனும் நச்சுமரம் அதை நீருற்றி வளர்த்த வேதப் பாதுகாவலர்கள் பதறப் பதற அணி அணியாய் பெண்கள் வீட்டுச் சிறையுடைத்து பொது வெளிக்கு வந்தார்கள், அந்தப் பண்பாட்டுப் புரட்சியை உலகின் எந்த நாடும் இவ்வளவு குறைந்த காலத்தில் கண்டதுமில்லை. வென்றதுமில்லை,

பொது மகளிர் என பொட்டுக் கட்டப்பட்ட பெண்கள் அதனை மறுத்து. அறுத்தெறிந்து நான் ஒருவனின் மனைவி மட்டுமே என்று தாலி அணிந்து நிமிர்ந்து நின்றார்கள், இல்லாள் என்ற பட்டத்துடன் ஒரு உரிமையும் இல்லாமல் ஒருவனது அடிமையாக. உரிமைப் பொருளாக தாலி என்ற முத்திரை குத்தப்பட்டு அடி வாங்க முதுகையும். உயிர் வாழப் பிள்ளைகளையும் சுமந்து திரிந்த பெண்கள். நான் இனி அடிமையல்ல என்று கல்விக் கூடம் சென்றார்கள். ஆசிரியர்களானார்கள், அரசியல் மேடைகளில் அதிகாரம் கேட்டு முழங்கினார்கள், விதவைக் கோலம் ஒழிந்தது, மறுமண உரிமை எழுந்தது, பிள்ளைகளின் பெயருக்கு தாயின் பெயரை முதல் எழுத்தாகப் போடும் பண்பாடாக தயக்கமின்றி முன்னெடுத்தது. அரசுப் பணியாளர்களாக. அதிகாரிகளாக. நீதிபதிகளாக பெண்களை எழுச்சி கொள்ளச் செய்தது, மானுடத்தின் மகத்தான சாதனை. பெண்ணும் ஆணும் நிகரெனச் சொல்வதே, அதை வென்று காட்டிய வரலாற்றை இந்த அரை நூற்றாண்டில் செய்து காட்டினார் ஈ.வே.ரா.என்று பாராட்டி அவரை இனி பெயார் என்றே அழைப்போம் என்று அழிக்க முடியாத வரலாற்றுச் சாசனத்தை அறிவித்தார்கள், அறிவுலகை முன்னெடுத்துச் சென்ற பேராளுமைகளான நீலாம்பிகை, மீனாம்பாள் சிவராஜ பண்டிதர் நாராயணி. மூவலூர் ராமாமிர்தம், டாக்டர் தருமாம்பாள் ஆகியோர். இன்று தமிழ்நாட்டுப் பெண்களின் வெற்றிக்கு மகுடம் வைத்த காட்சியாக எண்ணற்ற மருத்துவர்கள், பேராசிரியர்கள், காவல்துறை அதிகாரிகள், மாவட்ட ஆட்சியர்கள், பொறியாளர்கள், தொழில் முனைவோர், தொண்டு நிறுவனப் பணியாளர்கள், ஊடகத் துறை வல்லுநர்கள், நடத்துநர்கள் அனைத்திற்கும் உச்சமாக தமிழ்நாட்டின் உயர்நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையில் ஐந்தில் ஒரு பங்காக 12 பேர் பெண் நீதியரசர்கள் என்றால் கேட்கவே வியப்பாக இருக்குமே.

தமிழ், தமிழர், தமிழ் இலக்கியம், பண்பாடு, திருக்குறள், பொங்கல் திருவிழா, தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு, குடும்பத்தில் தமிழ்ப் பெயர்கள், கோயிலில் தமிழ் அர்ச்சனை, தமிழர் அர்ச்சகர் என்ற மொழி. இனப் பண்பாட்டு எழுச்சியை தந்தை பெரியாரின் பேச்சும், எழுத்தும் தான் உருவாக்கின. தமிழ் உணர்வுடன் தமிழர்கள் முன்னேற ஆங்கிலம் அவசியம் என்று தயங்காமல் பேசிய பெரியாரின் கருத்தை எதிர்த்தவர்கள், அவரது நோக்கம் அடைந்த வெற்றியினைக் கண்டு வியந்தார்கள். ஜப்பானைப் போல், சீனாவைப் போல் தாய் மொழியிலேயே படிக்க வாய்ப்புகளை உருவாக்குவதே சிறந்தது, ஆனால் அந்த நாடுகளில் வேற்று மொழியை தெய்வ மொழியாக, வேதமொழியாகக் கற்பித்து தாய்மொழி வளர்ச்சியைத் தடுப்பவர்கள் யாரும் இருந்ததில்லை. நம் நாட்டில் அப்படி ஒரு இனமே வாழ்கிறது என்பதோடு அவர்கள் ஆதிக்கத்தில் தான் நம் நாடு இருந்தது, இருக்கிறது.

அவர்கள் தான் ஆங்கிலேயர்களுக்கு வழிகாட்டிய துபாஷிகள் (துவிபாஷி இரண்டு மொழி பேசுபவர்கள்) அவர்களே. ஆங்கிலம் கற்று ஆங்கிலேயர்கள் வகித்த பதவிகளில் பங்கு வாங்கி நாங்களே அறிவாளிகள், ஆங்கிலமே உலக அறிவு என்று பரப்பி வைத்திருந்த வலைப் பின்னலை அறுத்து, தமிழர்கள் அனைத்துப் பதவிகளுக்கும் தகுதியானவர்கள் என்ற நிலையினைப் பெற அவர் நடத்திய போராட்டங்கள் எத்தனை, பட்ட அவமானங்களின் தழும்புகள் எத்தனை கணக்கில்லை, காமராசர், அண்ணா, கலைஞர் என்று தமிழ்நாட்டின் ஆட்சியாளர்கள் தந்தை பெரியாரை நினைவு கூர்ந்து தான் எந்த சமூக மேம்பாட்டுத் திட்டத்தையும் அறிவித்தார்கள் என்பதும், அவர் காலத்திலேயே அது நடந்தது என்பதும் கூட உலகில் பல சிந்தனையாளர்களுக்கும். தலைவர்களுக்கும் கிடைக்காத வாய்ப்பு,

தந்தை பெரியாரின் பொருளியல் கோட்பாடுகளை நாம் முறையாக ஆய்வுக்கு உட்படுத்தவில்லை, ஆனால் அவரது ஆய்வு எப்போதும் தொழிலாளர் நலம் சார்ந்ததாகவே இருந்தது, கதர் என்பது சுதேசிப் போராட்டம், சுயராஜ்யத்துக்கான அடித்தளம் என்று காந்தியின் வழியில் எல்லோரும் பேசினார்கள். ஆனால் கதருக்கும், சுயராஜ்யத்திற்கும் என்ன தொடர்பு, இதோ தந்தை பொpயார் 1925-இல் காரைக்குடி அரசியல் மாநாட்டில் ஆற்றிய உரையில் சொல்கிறார்,

நம் தேசத்து ஏழைகள், தொழிலாளர்களை எந்த எந்த தேசத்துச் சாமான்கள் பட்டினி போட்டு அவர்களது சுயமரியாதையையும் ஆண்மையையும் கெடுக்கின்றது என்று யோசித்து அந்தச் சாமான்களை விலக்கி நம் சாமான்களே நம்மை ஆளும்படி செய்வது தான் சுயராஜ்யம். இந்த சுயராஜய்ம் சம்பாதிப்பதற்கு முதலாவது நம்மையும் நமது மானத்தையும் ஆண்டு கொண்டிருக்கிறதும் நம் தேசத்திலிருந்து வருடம் ஒன்றுக்கு 60-70 கோடி ரூபாய்க்கு மேலாகக் கொள்ளை கொண்டு நம் நாட்டு ஸ்தீரிகளுக்கும், தொழிலாளிகளுக்கும் வேலையில்லாமல் செய்வதான அந்நிய நாட்டுத் துணிகளுக்குப் பதிலாக நம் நாட்டு நெசவாளர்களைக் கொண்டு கைத்தறியால் நெய்வித்த துணியை நாம் எல்லோரும் உபயோகிப்பது தான் மகாத்மா அவர்கள் கதர் கதர் என்று சொல்லுவது.

இந்தக் கதர் மாத்திரம் மகாத்மாவின் இஷ்டப்படி நம்மெல்லாராலும் அங்கீகரிக்கப்படுமேயானால் நம் நாட்டின் தாங்க முடியாத வரியென்று சொல்லப்படுகின்ற 150 கோடி ரூபாயில் அரைவாசியாகிய 75 கோடி ரூபாய் நம் நாட்டுக்கு மிகுதியாகிவிடும், அந்நிய சாமான்களால் நம் நாட்டிலிருந்து போகிற பணம் ரசவாதத்தைவிட, அதிக தந்தரமாய்ப் போய்க் கொண்டிருக்கிறது. 20 கெஜமுள்ள அந்நிய நாட்டு மல் துணியாகிய பீஸை எடைபோட்டுப் பார்த்தோமேயானால் 2½ ராத்தல் கனம் தான் இருக்கும், அதை வண்ணானுக்குப் போட்டுத் துவைத்து அதன் போலிருக்கும் கொழுப்பையும் வெள்ளைக் களிமண்ணையும் நீக்கி எடை போட்டுப் பார்த்தால் இரண்டு ராத்தல் தானிருக்கும், இந்த இரண்டு ராத்தல் எடையுள்ள இருபது கெஜம் துணியை நமக்கு விற்பது 15 ரூபாய்க்கு. இதற்காக அந்நிய நாட்டார் நம்மிடமிருந்து வாங்கிக் கொண்டு போகும் பஞ்சிற்கு நமக்குக் கொடுப்பது இரண்டு ராதல் எடைக்கு 1¼ ரூபாய். இந்த 1¼ ரூபாய்க்கு நம்மிடமிருந்து பஞ்சு வாங்கிக் கொண்டு போய்ச் செய்த துணியை நம்மிடமே 15 ரூபாய்க்கு விற்று 13¼ ரூபாய் லாபம் சம்பாதிக்கிறார்களானால் நம் தேசத்தின் இப்பொழுது உபயோகப் படுத்துகிற இவ்வளவு அந்நிய நாட்டு துணிக்கும் இன்னும் மற்ற மருந்துச் சாமான்களுக்கும் எவ்வளவு பணத்தைக் கொடுத்து நம் தேசம் ஏழையாயப் போய் விடுகிறது? அது மாத்திரமல்லாமல் நம் ஏழைத் தொழிலாளிகள் வேலையில்லாமல் எவ்வளவு கஷ்டப்படுகிறார்கள்? ஆகையால் உண்மையாய் நமக்குச் சுயராஜ்யம் வேண்டுமானால் நம் தேசத்திலிருக்கும் ஏழைகளிடமும் தொழிலாளிகளிடமும் நமக்கு அன்பிருக்குமேயானால் நாம் ஒவ்வொருவரும் கதர் உடுத்த வேண்டியதும் கதர் உற்பத்திக்கு வேண்டிய அனுகூலம் செய்யவும் வேண்டியதும் தான்.

மேற்கூறிய அதே உரையில் தான் சாதி ஒழிப்பின் அடிப்படை குறித்தும், இந்து மத இழிவை சுமக்கும் சூத்திரர்கள் பஞ்சமர்களை ஒதுக்குவது பற்றியும் தந்தை பொியார் பேசினார். இந்த உரையின் ஆழத்தைப் புரிந்து கொள்ளாமல், சாதி என்பது இந்து மதத்தின் நச்சு அது ஒவ்வொருவர் உள்ளத்தையும் நஞ்சாக்குகிறது என்று சொன்ன அண்ணல் அம்பேத்கர் அவர்களின் ஆய்வை நாம் எளிதாகப் புரிந்து கொள்ள முடியும். இந்த உரையில் தான் இந்த ஏற்றத் தாழ்வுகளைக் கண்டும் கடவுள் என்று ஒருவர் இருப்பாரானால், என்கிற கேள்வியையும் தந்தை பெரியார் எழுப்பினார். அப்பேச்சின் சில பகுதிகளை மட்டும் இங்கு பார்க்கலாம்,

இப்படி நமது நாட்டில் தீண்டாமை, பார்க்காமை, பேசாமை, கிட்ட வராமை ஆகிய இவை ஒருவரையாவது விட்டவை அல்ல. ஒருவர் தனக்குக் கீழ் இருப்பவரை தீண்டாதவர், பார்க்காதவர் என்று சொல்லுவதும் அதே நபர் தனக்கு மேல் உள்ளவருக்கு தான் தீண்டாதவராகவும், பார்க்கக் கூடாதவராகவும் இருப்பது வழக்கமாயிருப்பது மாத்திரம் அல்லாமல் இவர்கள் இத்தனை பேரும் சேர்ந்து நம்மை ஆளுகிற ஜாதியாய் இருக்கிற ஐரோப்பியருக்கு தீண்டாதவராகவும் கிட்ட வரக்கூடாதவராகவும் இன்னும் தாழ்மையாகவும் இருந்து வருவதையும் நாம் காண்கிறோம்.

இந்தக் கொடுமையை நம்மிடம் வைத்துக் கொண்டு வெள்ளையர் கொடுமை என்றும், கென்னியா, தென்னப்பிரிக்காவில் வெள்ளையார் ஜாதி இறுமாப்பு என்றும், நாம் பேசுவது எவ்வளவு முட்டாள்தனமும். பார்ப்பவருக்கு கேலியுமாகும் என்பதைக் கவனிக்க வேண்டும். நம் நாட்டில் பிறந்த நம் சகோதரரை நாம் பார்த்தால் பாவம். கிட்ட வந்தால் பாவம். தொட்டால் பாவம் என்று சொல்லிக் கொண்டு அதற்கு ஆதாரம் காட்டவும், எழுதி வைத்துக் கொண்டிருக்கும் அக்கிரமத்தை விடவா 1818-வது வருக்ஷத்து ரௌலட் ஆகட்டும் ஆள் தூக்கி சட்டமும் 144. 107. 108 பிரிவு பிரயோகமும் அக்கிரமமானது என்பதை சற்று யோசியுங்கள், நம்மவரை நாமே செய்யும் கொடுமையை விடவா அந்நியக் கொடுமை பெரிது?

இந்த கருத்துக்களை தந்தை பெரியார் தான் நடத்திய மாநாடுகளில் பேசியது மட்டுமன்றி இந்த பேதத்தை நீக்குவதற்காக தன் கல்வி, பட்டம், பதவிகள் அனைத்தையும் பயன்படுத்தி போராடிய அண்ணல் அம்பேத்கர் அவர்களின் சாதியை ஒழிக்க வழி் என்ற ஆராய்ச்சிக் கட்டுரையை மொழி பெயர்க்கச் செய்து தமிழில் வெளியிட வைத்தார். அந்தக் கால கட்டத்தில் மராத்தி மொழியில் கூட அக்கட்டுரையை வெளியிட முடியவில்லை என்பது வரலாற்றுச் செய்தியல்லவா?

பெண்கள் தமிழ் நாட்டில் பெற்றிருக்கும் முன்னேற்றத்தைப் போலவே பட்டியலின மக்கள் நில உரிமை பெறவும், பள்ளிக் கல்வி முதல் பட்டமேற்படிப்பு வரை இலவசமாக கற்கவும், கல்வி உதவித் தொகைகளைப் பெற்று நல்ல பதவிகளை அடையவும், வாய்ப்புகள் உருவானதற்கு தந்தை பெரியாரின் இந்த சிந்தனையும். உழைப்பும் அடிப்படைக் காரணங்கள். அதற்கு அழிக்க முடியாத சாட்சியமாக நிற்பது சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு நீதிபதியாக தாழ்த்தப்பட்டவர் ஒருவர் கூட நியமிக்கப்பட வில்லையே என்று பொது மேடையில் தந்தை பெரியார் வைத்த வேண்டுகோளும் அதை ஏற்று அன்று முதல்வராக இருந்த கலைஞர் அவர்கள் மாவட்ட நீதிபதியாக இருந்த திரு.வரதராஜன் அவர்களை உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமித்ததும் அவரே இந்திய உச்ச நீதிமன்றத்தில் இடம் பிடித்த முதல் பட்டியல் சாதி நீதிபதி என்ற வரலாறும் தந்தை பெரியாரின் சமத்துவக் கொள்கைக்கு சான்றாக நிற்கிறது.

இப்படி ஒரு தலைவரால் சிந்திக்கவும், போராடவும், சாதிக்கவும் முடியுமா என்று நினைத்துப் பார்த்தால் மேலும் மேலும் வியப்புக்குறிகளே தோன்றுகின்றன. இத்தனையும் செய்து காட்டுவதற்கு ஒருவருக்கு என்ன நோக்கம், இலக்கு இருக்க முடியும்? தன் இனம், தன் சாதி, தன் குடும்பம் என்று தேய்ந்து கொண்டு போகும் மனிதர்கள் ஒரு புறம். என் மொழி, என் இனம், என் மதம் மட்டுமே வாழ வேண்டும், ஆள வேண்டும் என்று வெறியூட்டும் மனிதர்கள் மறுபுறமுமாய் அலைக்கழிக்கப்படும் இந்தச் சமூகத்தில் எனக்கு தேசாபிமானம், பாக்ஷாபிமானம், மதாபிமானம் எதுவும் கிடையாது, மனிதாபிமானம் மட்டும் தான் உண்டு என்று அறிவித்த அந்த பகுத்தறிவுச் சிந்தனையாளரைத்தான், பற்று அற்றான் என்று கூறுகிறார் போலும் திருவள்ளுவர். பற்றுக பற்றாறின் பற்றினை என்ற அந்தத் திருக்குறள் தந்தை பெரியாரைக் குறிப்பதாகவே விளங்குகிறது. ஆம் அவரைப் போல் பற்றற்றான் வேறு யார்? அவரது பற்றினைப் பற்றுவதே மனிதப் பற்றை வளர்ப்பதற்கான ஒரே பற்றாகும்.

- வழக்கறிஞர் அ.அருள்மொழி

Pin It