இந்திய அரசியல்வாதிகளில் கலைஞர் அளவிற்கு முற்போக்காக செயல்பட்டவர்களை நம்மால் பார்க்க முடியாது. தேர்தல் அரசியல் வரம்பிற்குள் நின்று என்ன செய்ய முடியுமோ, அதை முடிந்தவரை செய்ய முயற்சித்தவர் கலைஞர். அண்ணாவிற்கு அடுத்து பெரும் அறிவுஜீவியாய் அனைத்தைப் பற்றியும் அறிவு கொண்டவராய் இருந்தார் கலைஞர். சாதியைப் பற்றியும், பார்ப்பன மேலாதிக்கத்தைப் பற்றியும், இந்திய மக்களை அழித்துக் கொண்டிருக்கும் மூடப்பழக்க வழக்கங்களைப் பற்றியும் அவருக்கு தெளிவான பார்வை இருந்தது. அனைத்து மக்களும் சாதி பேதமின்றி ஒரே இடத்தில் வாழ, பெரியார் நினைவு சமத்துவபுரத்தை உருவாக்கினார். தமிழகமெங்கும் ஏறக்குறைய 237 சமத்துவபுரங்களை உருவாக்கி அதில் தலித்துகள் 40 சதவீதமும், பிற்படுத்தப்பட்டவர்கள் 25 சதவீதமும், மிகவும் பிற்படுத்தப்பட்டவர்கள் 25 சதவீதமும், மற்ற வகுப்பினருக்கு 10 சதவீதமும் இடம் கொடுக்கப்பட்டது. மேலும் 1970 டிசம்பர் 2 அன்று அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற சட்டத்தைக் கொண்டுவந்து, கருவறை தீண்டாமைக்கு சாவு மணி அடிக்க முயன்றார். இது எல்லாம் தேர்தல் வரம்பிற்குள் நின்று கலைஞர் செய்ய முயன்ற புரட்சிகள்.

karunanidhi

கம்யூனிஸ்ட்கள் ஆளும் மேற்குவங்கத்தில் ஒழிக்க முடியாத கைரிக்ஷாக்களை ஒழித்தார். நில உச்சவரம்பு சட்டம் கொண்டுவந்து ஜமீன்தார்கள் கையில் குவிந்து கிடந்த நிலங்களைப் பறிமுதல் செய்து ஏழை விவசாயிகளுக்கு வழங்கினார். விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கினார், நேரடி நெல்கொள்முதல் நிலையங்களை உருவாக்கினார். இடைத்தரகர்கள் மூலம் விவசாயிகள் சுரண்டப்படுவதைத் தடுக்க விவசாயிகள் தங்கள் பொருட்களை நேரடியாக சந்தையில் விற்க தமிழகம் முழுக்க 103 உழவர் சந்தைகளைக் கொண்டு வந்தார். இரண்டு முறை விவசாயக்கடனை தள்ளுபடி செய்தார். திமுக ஆட்சியில் 200க்கும் மேற்பட்ட தடுப்பணைகளும், நூற்றுக்கணக்கான சிறிய, பெரிய வாய்க்கால்களும் கட்டப்பட்டன. இன்று தமிழ்நாட்டின் விவசாய உற்பத்தி மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் சிறப்பாக இருப்பதற்கும், விவசாயிகள் தற்கொலை குறைந்திருப்பதற்கும் மிக முக்கிய காரணம் கலைஞர் ஆவார்.

மாநில சுயாட்சிக்காக அவரது குரல் எப்போதுமே ஓங்கி ஒலித்தது. மாநிலத்தில் சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சி என்ற முழக்கத்தைத் தொடர்ந்து வலியுறுத்தி வந்தார். இதற்காக இந்தியாவிலேயே வேறு எந்த மாநில முதல்வரும் செய்யாத, செய்யத் துணியாத ஒரு காரியத்தையும் செய்தார். அதுதான் மத்திய, மாநில அரசுகளின் உறவைத் தெளிவாக்க 1969 இல் நீதிபதி ராஜமன்னார் தலைமையில் குழுவை உருவாக்கியது. அந்தக் குழு முன்வைத்த கருத்துக்கள் தேசிய அளவில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது. இந்திரா காந்தி 1975 ஜூன் 25 அன்று நெருக்கடி நிலையை அறிவித்தபோது அதற்கு எதிராக ஜெயப்பிரகாஷ் நாராயணனுடன் இணைந்து குரல் கொடுத்தார். மனோன்மணீயம் பெ.சுந்தரனார் எழுதிய ‘நீராரும் கடலுடத்த’ என்ற பாடலை தமிழ்த்தாய் வாழ்த்தாக்கினார்.

இன்று தமிழ் நாட்டில் முஸ்லிம்கள் நிம்மதியாக இந்துமதவெறி காலிகளால் தொந்தரவு ஏதுமின்றி வாழ்கின்றார்கள் என்றால், அதில் கலைஞரின் பங்களிப்பு மிகப் பெரியது. எப்போதுமே திமுக முஸ்லிம்கள் அதிகம் விரும்பும் கட்சியாக இருந்து வந்துள்ளது. முஸ்லிம்களுக்கு 3.5 சதவீதம் தனியாக இட ஒதுக்கீடு வழங்கியது, தமிழ்நாட்டு சிறுபான்மையினர் ஆணையத்துக்கு சட்டப்படி அங்கீகாரம் வழங்கியது, உருது பேசும் முஸ்லிம்களை பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்த்தது, நபிகள் நாயகத்தின் பிறந்த நாளான மீலாது விழாவை அரசு விடுமுறையாக அறிவித்தது போன்றவை சிறுபான்மையினர் நலன் மீது கலைஞர் கொண்டிருந்த அக்கறையைக் காட்டுபவை.

ஈழப் பிரச்சினையை காரணம் காட்டி இரண்டு முறை திமுக ஆட்சி கலைக்கப்பட்டது. திமுக நினைத்திருந்தால் ஈழப்போர் நடக்காமல் தடுத்திருக்க முடியும் என்று இன்று தங்களை ஈழ ஆதரவாளர்கள் போல காட்டி ஈழத்தமிழ் மக்களிடம் பணம் பறிக்கும் சில கும்பல்கள் பொய் பிரச்சாரம் செய்து வருகின்றன. ஒரு மாநில முதல்வர் நினைத்தால் பல உலக நாடுகளின் பங்களிப்புடன் நடத்தப்பட்ட ஓர் இன அழிப்பு நடவடிக்கையை தடுத்த நிறுத்தியிருக்க முடியும் என்பதே, சொல்பவர்களின் அரசியல் அற்ற பார்வையை வெளிப்படுத்தி விடுகின்றது.

இந்தியாவிலேயே முதன் முறையாக 1989 இல் பெண்களுக்கு சொத்துரிமை கொண்டு வந்தது, உள்ளாட்சியில் பெண்களுக்கு 33 சதவீதம் இட ஒதுக்கீடு கொண்டு வந்தது, அருந்ததியினருக்கு 3 சதவீதம் உள் ஒதுக்கீடு கொண்டு வந்தது, ஆதிதிராவிடர்களுக்கு இலவச வீடுகள் கட்டிக் கொடுத்தது, மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு 20 தனி ஒதுக்கீட்டை கொண்டு வந்தது, கலைஞர் காப்பீட்டுத் திட்டம், டைடல் பூங்கா, தமிழகத்தின் பெருமைமிகு அடையாளமான கோட்டூர்புரத்தில் ரூ 170 கோடியில் கட்டப்பட்ட ஆசியாவின் மிகப் பெரிய நூலகமான அண்ணா நூற்றாண்டு நூலகம், கன்னியாகுமரியில் அமைக்கப்பட்ட 133 அடி திருவள்ளுவர் சிலை என சொல்லிக்கொண்டே போகலாம்.

திரைப்படத் துறையிலும், இலக்கியத்துறையிலும் அவரின் பங்களிப்பு மிகப் பெரியது. பராசக்தி போன்ற ஒரு திரைப்படத்தை இனி யாராலும் எடுக்க முடியாது என்ற அளவிற்கு அந்தத் திரைப்படத்தின் வசனங்கள் அமைந்தன. கலைஞரின் தொல்காப்பியப் பூங்கா, சங்கத்தமிழ் போன்றவை காலத்தை வென்ற படைப்புகள். பத்திரிகைகளில் வரும் அவரது கேள்வி பதில் வடிவிலான கட்டுரைகளும், அதில் தெறிக்கும் நகைச்சுவை உணர்வும் வேறு எந்த ஒரு எழுத்தாளனுக்கும் கைவரப் பெறாதவை. சேது சமுத்திரத் திட்டத்தை முடக்க காவி பயங்கரவாதிகள் ராமனை பயன்படுத்திக் கொண்ட போது ‘ராமன் எந்த இஞ்ஜினியரிங் காலேஜில் போய் படித்தான்’ என்று அவர்களின் செவிட்டில் அறைந்தவர்.periyar anna karunanidhi and mgr

கலைஞர் எப்போதுமே பார்ப்பனிய சக்திகளால் வெறுக்கப்படுபவராக இருந்தார். அவர் திராவிட அரசியல் இயக்கத்தின் கடைசி எச்சமாக, திராவிட கருத்தியலுக்கு சட்ட அங்கீகாரம் வழங்கும் நபராக இருந்தார். தேர்தல் அரசியலுக்கு உட்பட்டு எந்த அளவிற்கு பெரியாரின் சிந்தனைகளுக்கு செயல்வடிவம் கொடுக்க முடியுமோ அந்த அளவிற்கு அதை செயல்படுத்த முயன்றார். கலைஞரின் புகழை ஒழித்துக் கட்டி அவரை தமிழினத்தின் துரோகியாக கட்டமைக்க இங்கிருக்கும் பார்ப்பன சக்திகள் தொடர்ந்து முயன்று வந்திருக்கின்றன, வருகின்றன. காவி பயங்கரவாதிகளும், வெறும்கையில் முழம்போடும் சில சில்லரைக் கும்பல்களும் எவ்வளவு முயன்றும் தமிழ்நாட்டு மக்களின் மனங்களில் இருந்து கலைஞரை ஒழித்துக் கட்ட முடியவில்லை. கலைஞர் காவிரி மருத்துமனையில் அனுமதிக்கப்பட்ட நாளில் இருந்து சமூக வலைதளங்களில் அவருக்கு எதிராக அதிகமாக அவதூறுகளை பரப்பியவர்கள் யார் என்று பார்த்தால் காவி பயங்கரவாதிகளும், அவர்களுடன் கள்ளக் கூட்டணி வைத்திருக்கும் சில தமிழ்த் தேச அமைப்புகளும் தான்.

ஆனால் கலைஞர் தமிழ்நாட்டு மக்களுக்கு செய்த நன்மைகள் எல்லாம் நம்முன்னால் பார்த்த இடமெல்லாம் சாட்சிகளாக இருக்கும்போது பொய்யர்களின் புளுகுகள் எல்லாம் அம்பலப்பட்டுப் போகின்றன. தனக்கு எதிரான அனைத்துச் சதிகளையும் சட்டப்படியே முறியத்த கலைஞர் இறுதியாக தன் உடலை மெரினாவில் புதைக்க விடாமல் பார்ப்பன பயங்கரவாதக் கூட்டம் செய்த சதியையும் முறியடித்து இருக்கின்றார். ராஜாஜி ஹாலின் வெளியேயும் மெரினாவிலும் கூடி இருக்கும் இலட்சக் கணக்கான திமுக தொண்டர்கள் எல்லாம் வெறுமனே கலைஞரைப் பார்ப்பதற்காக வந்தவர்கள் இல்லை. அவர்கள் ஒவ்வொருவரும் கலைஞரால் பயனடைந்து இருக்கின்றார்கள். தங்கள் வாழ்க்கையை ஏதோ ஒருவகையில் கலைஞரின் திட்டங்கள் மூலம் முன்னேற்றிக் கொண்டவர்கள் அவர்கள். சட்டசபையில் வெற்று திட்டங்களை அறிவித்துவிட்டு ஊரை ஏமாற்றும் '420' அரசியல்வாதிகளுக்கு மத்தியில் அறிவித்த திட்டங்களை செயல்படுத்திக் காட்டியவர் கலைஞர்.

அவர் மீது விமர்சனமே இல்லையா என்று கேட்பவர்களுக்கு நாம் சொல்லிக் கொள்வது ‘நிச்சயம் உள்ளது, நிறைய உள்ளது’ என்பதுதான். தேர்தல் அரசியலின் வரம்பை முழுவதுமாகப் புரிந்துகொண்டு நாம் கலைஞரை மதிப்பிட வேண்டும். அப்படி மதிப்பிட்டால் இந்தியாவில் எந்த ஒரு தலைவரைக் காட்டிலும் அவர் உயர்ந்தவராக நிற்பார். மானமிகு சுயமரியாதைக்காரனுக்கு விடை கொடுப்போம். சென்று வாருங்கள் தமிழினத்தின் முதுபெரும் தலைவரே!

- செ.கார்கி

Comments

12 comments

12
raja
பொது மக்கள் குடிக்கும் தண்ணீருக்காக போராடிய நேர்மையான, எளிமையான பெண் என்றும் பாராமல் பட்ட பகலில் கம்யூனிஸ்ட் கவுன்சிலர் லீலாவதி கொல்லப்பட்டது யார் ஆட்சியில்? பின், ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட அந்த பாவிகளை அண்ணா பிறந்த நாளில் 'நன்னடத்தைக் கைதிகள்'! என்று விடுதலை செய்தது யார்!

காலையில் நடை பயிற்சிக்கு சென்ற தா. கிருட்டிணன் வெட்டிகொல்லப்பட்டார். அதுவும் திமுக ஆட்சியில் தான். கட்சியில் இத்தனை காலம் உழைத்தவரை, பெரியார் காலத்தில் இருந்து கட்சியில் இருப்பவரை, கருணாநிதியின் நண்பர், மூத்த தலைவர் என்றும் பாராமல் அழகிரி வெட்டி கொன்ற போது கருணாநிதி விரல் அசைக்க வில்லையே. கருணாநிதி இருக்கும் வரை நமக்கு ஒன்னும் ஆகாது என்று நம்பியவரை இப்படியா கழுத்து அறுப்பது!

அதை விட கொடுமை, கோர்ட் உத்தரவின்படி காவல்துறை வழக்குப் பதிவு செய்து மு.க. அழகிரி உள்ளிட்ட 13 பேரைக் கைது செய்தனர். ஆனால் மு.க. அழகிரி, மதுரை துணை மேயர் மன்னன் உள்ளிட்ட 13 பேரும் விடுதலை செய்யப்பட்டனர். ஒருவரை கூட காவல் துறை கைது செய்து தண்டனை வாங்கி கொடுக்க முடிய வில்லை. இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட பல பேர் இன்றைக்கு கோடீஸ்வரர்கள் என்பது கூடுதல் தகவல். எல்லாமே கருணாநிதி ஆட்சியில் தானே நடந்தது!
raja
2009 ஜனவரி 9-ல் திருமங்கலம் இடைத்தேர்தல் மறக்க முடியுமா! இந்தத் தேர்தலை வென்று கொடுத்ததற்காக அழகிரியை தென் மண்டல அமைப்புச் செயலாளர் பதவியில் அமர்த்தினார் கருணாநிதி. இந்திய தேர்தல் ஆணையமே மிரளுமளவுக்கு விஞ்ஞான ரீதியில் வாக்குகள் விலைக்கு வாங்கப்பட்ட தேர்தல். "திருமங்கலம் பார்முலா" என்று இந்திய அளவில் அனைத்து கட்சிகளும் இந்த பார்முலாவை பேசி, பேசி தமிழ் நாட்டின் மானத்தை வாங்கினர். இந்த பார்முலாவை கண்டு பிடித்து கற்று கொள்ள வைத்த பெருமை கருணாநிதிக்கே கிடைக்கும்!

ன்னமோ கருணாநிதி ஆட்சியில் பாலாறும், தேனாறும் ஓடியது போல் இன்று சிலர் நினைப்பது வியப்பு அளிக்கிறது.
Selvarajan
தாேழரே ...! " சமத்துவ புரம் " என்பதை பார்க்கும் பாேதெல்லாம் உங்கள் மனதில் தாே ன்றுகிற எண்ணம் என்ன ..? அனைத்து சாதியினரும் குடியிருக்கும் இடம் என்றுதானே ... இதனால் சாதியம் மறைந்ததா ..சாதிகளை ஞாபகப்படுத்துகிறதா ..? அடுத்து வழக்குகளை எப்பாடு பட்டாவது வாபஸ்தான் வாங்கியிருக்கிறாரே தவிர வாதாடியது ..? பல கமிஷன்கள் இவருக்காவே பாேடப்பட்டது என்பது வரலாறு ...! லஞ்சத்தை நியாயப்படுத்த " தேனை எடுப்பவன் புறங்கையை நக்குவான்என்று புது அர்த்தம் கூறியவர் ....எது எப்படியாே தேனையும் எடுத்தார் ..புறங்கையை யும் நக்கினார் ... இதுதான் அவரது எதார்த்தம் ...
முற்பகல் செய்யின் பிற பகல் விளையும் என்பதை பாேல மெரினாவில் இவருக்கு இடம் ஒதுக்குவதில் சிக்கல் ஏற்பட காரணமே அவரது முந்தைய அறிவிப்புதான் என்பதை எப்படி மறக்க முடியும் ... !!! நல்லதும் ..கெட்டதும் இரண்டும் கலந்த ஒரு தலைவர் ஆன்மா சாந்தியடையட்டும் ..!!
Muthukrishnan
கலைஞர் விடை பெற்றுக் கொள்கிறார்.
“கொடியவர்கள் கோயில்களைத் தம் கூடாரமாக்கிக் கொள்ள முனையும் காலத்தில்” கலைஞர் விடைபெற்றுக் கொள்கிறார்.
“மாநிலங்கள் உள்நாட்டுக் காலனிகளாக மாற்றப்படும் காலத்தில்” கலைஞர் விடைபெற்றுக் கொள்கிறார்.
“இந்தியும் சமஸ்கிருதமும் மத மவுடீகங்களும் மீண்டும் கோலோச்சத் துடிக்கும் காலத்தில்” கலைஞர் விடை பெற்றுக் கொள்கிறார்.
இந்துத்துவப் பாசிசம் அச்சுறுத்தும் காலத்தில் அவர் விடைபெற்றுக் கொள்கிறார்.
காலத்தின் தேவைகள் அவற்றை அடைவதற்குப் பொருத்தமான பாதையைப் பின்பற்றுமாறு நம்மைக் கோருகின்றன.
கடந்து வந்த பாதையைக் காய்தல் உவத்தல் இன்றி மீளாய்வு செய்வதும், அதனடிப்படையில் இனி செல்ல வேண்டிய பாதையைத் தீர்மானிப்பதும், கண் கலங்கி நிற்கும் அனைவரின் கடமை.
chandra
கார்கி, உங்கள் யோக்கியதை இவ்வளவுதானா?
Guru
It's a photoshopped picture. not a real one.
vergin
அருமையான கட்டுரை
Krishnan
In 1966, Hindu organizations agitated to demand a ban on the slaughter of cows in India, as enshrined in the Directive Principles of State Policy in the Constitution of India. The agitation culminated in a massive demonstration outside Sansad Bhavan in New Delhi on 7 November 1966.The Prime Minister, Indira Gandhi did not accept the demand for a ban on cow slaughtering. A mob of 10,000 advocates against cow slaughter, led by Hindu rss men tried to storm the parliament, but were prevented. The mob then did a silent protest through the capital city. But a 48-hour curfew was ordered, all the meetings were banned. Mob of rss thugs attacked the then congress president Kamaraj's Delhi residence and set it on fire. Fortunately Kamaraj escaped through backdoor with the help of his personal assistant otherwise we would lost Kamarajar in 1966 itself.
annadurai
கார்க்கி அனுதாப அலையில் சிக்கி உளறுகிறார்.ஈழப்பிரச்சனை பன்னாட்டு பிரச்சனை என்னால் ஒன்றும் செய்ய இயலாது என்று வெளிப்படையாக அறிவித்திருக்கலாமே?எதற்கு உண்ணா விரத நாடகம்?கருணாநிதியைப் புகழ வேண்டும் என்பதற்காக பெரியாருடன் ஒப்பிடலாமா?அவரால் நிகழ்த்தப்பட்ட கொடுஞ்செயல்கள் ?மீத்தேன் திட்டத்தில் கையெழுத்துப்போட்டு அதைக்கொண்டு வந்த்தது யார்?ூடங்குளம்,நியுட்ரினோ என்றைக்காவது எதிர்த்துப்பேசியிருப்பாரா?எவ்வளவு நிலங்களை ஏழைகளுக்குக் கொடுத்தார்?அவர் குடும்ப சொத்துக்கள்?இன்றைக்கு தமிழகம் அழிவின் விளிம்பில் நிற்கிறது.
அகரன்
ஒரு தவறு இழைத்தால், அதை பெருந்தன்மையோடு ஒத்துக் கொண்டு, அதை பிற்காலத்தில் செய்யாமல் இருப்பதே சிறந்த பண்பு. தவறு செய்யாமல் யாரும் இல்லை.

திமுக ஆதரவாளர்களும் சரி, பெரியாரிஸ்ட்களும் சரி, ஈழப் பிரச்சனை யில் திமுக வின் துரோகத்திற்கு முட்டுக்கொடுக்கும் விதமாக வே எழுதுகிறார்கள். அந்த வகையில் தோழர் கார்க்கியின் கட்டுரையும் இடம் பெறுகிறது.

ஒரு மாநில கட்சியால் என்ன நடவடிக்கை எடுத்துவிடமுடியும் என்று கேட்கிறார்கள்.

இதுதான் ஈழப் பிரச்சனை யில் திமுக வை நியாயப்படுத்துவதற்கு பலரும் முன் வைக்கும் விவாதம்.

நாம் கேட்பது என்னவென்றால், மகிந்த ராஜபக்சே வெளிப்படையாக அறிவிக்கிறான். இப்போரில் மிக அதிகமாக உதவியது இந்தியா என்று. இந்தியா என்றால் அப்போதைய காங்கிரசு தலைமையிலான அரசு. அக்காங்கிரசுக்கு பக்க பலமாக கூட்டணியை ஏற்படுத்தியது திமுக.

திமுக வுக்கு உண்மையிலே நல்ல எண்ணமிருந்தால், இலங்கைக்கான ஆயுத உதவிகளை தடுத்திருக்க வேண்டும். அதையும் மீறி காங்கிரசு , நான் செய்தே தீருவேன் என்று முடிவெடுக்கும் பட்சத்தில், திமுக காங்கிரசுக்கான ஆதரவை விலக்கிக் யிருக்கலாம். இவ்வாறு நாம் கோருவது, காங்கிரசு ஆட்சி கலைய வேண்டும் என்ற எண்ணத்தில் இல்லை. தமிழக மக்களின் எதிர்ப்பை தெரிவிக்கவே நாம் அவ்வாறு கோருகிறோம்.

இதற்கு நாம் ஒரு உதாரணத்தை சொல்கிறோம்.
கருணாநிதியைக் கைது செய்தார் செயலலிதா.
அப்போது மத்தியஇல் பாசக ஆண்டுக்கொண்டிருந்தது. பாசக வுடன் திமுக கூட்டணி.

பின்னர் விடுதலையான கருணாநிதி,
செயலலிதாவின் ஆட்சியைக் கலைக்க கோரி பாசக வுக்கு அழுத்தம் கொடுத்தார்.
ஆனால் பாசக வோ, அது முடியாது. ஆனால் கருணாவை கைது செய்வதில் ஈடுபட்ட கஆவல் துறை அதிகாரிகளை இடமாற்றம் செய்கிறோம் என்றது பாசக. அதை ஏற்றுக்கொள்ளாத திமுக பாசக வுடன் கூட்டணி யை முறித்தது.

ஆதரவை விலக்கிக் கொண்டாலும் பாசக அரசு கவிழவில்லை.

ஆக கருணாவின் தனிப்பட்ட கைது நடவடிக்கையில் காட்டிய அக்கறையை ஏன் ஈழப் பிரச்சனை யில் காண்பிக்க வில்லை என்பதுதான் அடிப்படை கேள்வி.

மேலும் தமிழகத்தில் நடந்த போராட்டங்களை கடுமையாக திமுக ஒடுக்கியது. இது துரோகமில்லாமல் வேறென்ன?

அதையும் விட்டுவிடுவோம். இலங்கை அரசு தலைவர் பிரபாகரனின் அன்னை பார்வதி அம்மாளை , மேல் சிகிச்சைக்காக மலேசியா அனுப்பியதும் பின் மலேசியாவிலிருந்து தமிழகம் வரும்போது , கருணாநிதி பார்வதி அன்னையை திருப்பி அனுப்பியதும் மறக்க கூடிய செயலா அல்லது மன்னிக்க கூடிய செயலா?

குறை ந்தபட்சம் மனித நேயம் இல்லாமல் நடந்து கொல்லவில்லையா கருணாநிதி?

இவ்வளவு நடந்த பின்னும், திமுக பக்தர்கள் இதற்கெல்லாம் முட்டுக் கொடுக்கும் பொழது, தமிழர்கள் அதையெல்லாம் எளிதாக கடந்து விட முடியுமா?
அகரன்
பார்வதி அன்னையை திருப்பி அனுப்பி உலகமெங்கும் வாழும் தமிழர்களை நோகடித்தும் பார்ப்பனர்களை குளிர்வித்திருக்கிறார் கருணாநிதி. ஆம். பார்வதி அன்னையை திருப்பி அனுப்பி யவுடன், சுப்பிரமணிய சாமி , சொல்கிறான். திருப்பி அனுப்பி யது சரிதான். கண்டவர்களும் வைத்தியம் பார்ப்பதற்கு தமிழ்நாடு ஒன்றும் தர்மசாலா அல்ல.
selvaraj saravanan
சிறப்பான கட்டுரை..!. கருணாநிதியை எப்பாடு பட்டாவது எதையாவது உளரி கொட்டியவது சிறுமைப் படுத்தி விட வேண்டும் என்பதே அவரை எதிர்த்து விமர்சிப்பவர்களின் எண்ணம். இதற்கு காரணம் அவர்களின் ஆழ் மனதில் ‘சாதி’ வேறூன்றி இருப்பதே .. வேறு ஒன்றும் இல்லை.

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.