(2023 பிப்ரவரி இதழின் தொடர்ச்சி...)

மொங்கம் போகும் சாலையில்

மஞ்சேரியில் இருந்து பலமைல் தொலைவில்

மாண்டு போன ஹிச்கோக்கின்* நினைவுச் சின்னத்தை நீங்கள் காணலாம். இது

உண்மையான சாத்தானின் கல்லறை!

நம் நெஞ்சின் மீது இதன்

செங்கற்கள் அடுக்கப்பட்டிருக்கின்றன. இந்தப்

பன்றி நம் சோதரர்களைக் கொன்றது.

இந்த நிலமானது தீரமிகு

விடுதலைப் போராளிகளைக் கொண்டது.

ஓ வெள்ளை மனிதனே!

நீ நீண்டகாலம் வாழ விரும்பினால்

விரைவில் இங்கிலாந்துக்குத் தப்பி ஓடிவிடு.

(கம்பலாத் கோவிந்த நாயர் 1944 இல் எழுதிய”படைப்பாடல்)”**

* மலபார் மாவட்டக் காவல்துறை அதிகாரியாக இருந்த ஆங்கிலேயன். இவனுக்கான நினைவுச் சின்னத்தை அகற்ற நடந்த போராட்டத்தில் பாடிச் சென்ற வழிநடைப்பாடல்)

** அணிவகுப்புப் பாடல்

அடிப்படையில் இந்து ஜன்மிகளுக்கு எதிரான இஸ்லாமியக் குடியானவர்களின் போராட்டமாக 1921 மலபார் எழுச்சி உருவானாலும் இப் போராட்டத்தில் இந்துக்களாக இருந்த குடியானவர்களும் இணைந்து கொண்டனர். குடியானவர்களின் ஆற்றலை உணர்ந்திருந்த ஆங்கில அரசு இதுவரை ஜன்மிகள் குடியானவர் முரண்பாட்டை இந்து, இஸ்லாமியர் முரண்பாடாகவே சித்தரித்து வந்தது. இதே நடைமுறையை இந்து ஜன்மிகளும் பின்பற்றி வந்தனர். இவர்களால் நிறுவப்பட்ட ‘மலையாள மனோரமா’ இதழும் இதே பாதையில் பயணித்தது.

இவ்வாறு மதச் சாயம் பூசுவதன் மூலம் குடியானவர்களின் எழுச்சியை ஒடுக்குவதில் இந்துக்களின் துணையை ஆங்கில அரசு பெற்று வந்தது. ஆனால் கிலாபாத் இயக்கமும் காங்கிரஸ் இயக்கமும் தமக்கிடையே ஏற்படுத்திக் கொண்ட நட்புறவானது இவ்விரு சமயங்களைப் பின்பற்றி வந்தோரிடை­யிலான முரண்பாடுகளை மட்டுப் படுத்தியது. அத்துடன் வர்க்க உணர்வுடன் கூடிய போராட்டத்தில் ஒன்றிணைத்தது.

ஜன்மி எதிர்ப்பா? இந்து எதிர்ப்பா?

மொய்ராத் சங்கரன் என்ற காங்கிரஸ்காரர் (பின்னால் கம்யூனிஸ்ட் இயக்கத்தில் இணைந்தவர்) இவ் எழுச்சி குறித்துப் பின்வருமாறு குறிப்பிட்டார்: “மலபார் குடியானவர் எழுச்சியானது அதன் தொடக்கம் முதல் இறுதிவரை ஆங்கிலேயரின் நிர்வாகத்திற்கு எதிரான பேரியக்கமாக இருந்தது. எந்த நேரத்திலும் அது இந்து - இஸ்லாமியர் மோதலாக இருக்கவில்லை. ஆனால் இப்போராட்டத்திற்கு ஆங்கில அரசு மதச்சாயம் கொடுத்து, இந்து முஸ்லிம் மோதல் என்று அடையாளப்படுத்தியதையும் செய்தித்தாள்களில் இவ்வாறு வெளியானதையும், இதைக் காந்தி கண்டுகொள்ளாதிருந்ததும் என்னைப் போன்ற காங்கிரஸ்காரர்களுக்கு அதிர்ச்சி அளித்தது.malabar uprisingமேலும் காலனிய அரசினால் வழிநடத்தப்பட்ட இஸ்லாமியர்கள் சிலர் இந்துக்களின் வீடுகளையும் குடும்பங்களையும் தாக்கி இவ் எழுச்சிக்கு மதச்சாயம் பூசினர். இச் செயலானது கிலாபாத் இயக்கம் மற்றும் குடியானவர் எழுச்சியின் நற்பெயரைச் சிதைத்தது.”

உண்மையில் இயக்கத்தின் தலைவர்கள் இத்தகைய வன்முறையை விரும்பவில்லை. மாதவன் நாயர் என்ற இந்து, மும்பை குரோனிகல் (Bombay Chronicle: 1921September 19, 27) என்ற ஆங்கில இதழில் எழுதிய இரு கட்டுரைகளில் இவ் எழுச்சியின் அடிப்படைக் காரணம் குடியானவர் எழுச்சிதான் என்றே குறிப்பிட்டுள்ளார். இவ் எழுச்சிக்கு முன்னரே சிறிய அளவில் குடியானவர் எழுச்சி 19 ஆவது நூற்றாண்டின் இறுதியிலும் 20 ஆவது நூற்றாண்டின் தொடக்கத்திலும் நிகழ்ந்துள்ளதாகக் கூறியுள்ளார். மலபாரின் மாவட்ட ஆட்சியராக இருந்த கனோலி (Connolly) என்ற ஆங்கிலேயர் இக்கலகங்களின் வேராக அமைவது விவசாயப் பிரச்சினைதான் என்று குறிப்பிட்டுள்ளதையும் சுட்டிக் காட்டியுள்ளார். அத்துடன் குடியானவர்கள் மீது இழைக்கப்படும் அநீதிக்கு முடிவு கட்ட வேண்டும் என்று அரசுக்கு அவர் பரிந்துரைத்ததையும் அதன் அடிப்படையில் ஓர் ஆணையம் அமைக்கப் பட்டதையும் அறியச் செய்துள்ளார். ஆனால் அந்த ஆணையம் வேறு வகையான கருத்தை வெளிப்படுத்தியது.

அவர்களின் சமயத்தலைவரான “தங்கல்” இஸ்லாமிய சமயத்தினர் மீது மிகுந்த செல்வாக்கு உடையவராக இருப்பதாகவும் அது பொது அமைதிக்குப் பங்கம் விளைவிக்கும் என்றும் குறிப்பிட்டது. இதை ஏற்றுக்கொண்டு ஆங்கில அரசு குடும்பத்துடன் அவரை அரேபியாவிற்கு நாடு கடத்தியது. பன்னிரண்டா­யிரத்துக்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் அழுதவாறே அவரைப் பின் தொடர்ந்தனர். வன்முறைக்கு இடமளிக்கக் கூடாது என்று அறிவுறுத்தி அவர்களைத் திருப்பி அனுப்பிவிட்டு அவர் கப்பல் பயணத்தை மேற்கொண்டார்.

மாப்பிள்ளைகள் திரும்பத் திரும்ப அரசின் முன் வைத்த ஒவ்வொரு முறையீடுகளும் அன்றைய சென்னை மாநில அரசால் புறக்கணிக்கப்பட்டு வந்தன. இதுவே ஒவ்வொரு கலகத்திற்குப் பின்னாலும் இருந்துள்ளது. குடியானவர்கள் மீது பொருளாதாரச் சுரண்டலை மட்டுமின்றி பண்பாட்டு ஒடுக்குமுறையையும் ‘ஜன்மிகள்’ நிகழ்த்தி வந்தனர். பண்பாட்டு ஒடுக்குமுறை சார்ந்து அவர்கள் உருவாக்கி நடைமுறைப்படுத்திய சட்டங்களை இக்கட்டுரையில் மாதவன் நாயர் குறிப்பிட்டுள்ளார். அதன்படி குடியானவர்கள் எத்தகைய ஆடை அணிய வேண்டும், எத்தகைய வீட்டில் வசிக்க வேண்டும், எப்படித் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்பதை ஜன்மிகள் முடிவு செய்திருந்தனர்

இச்செய்திகளை எல்லாம் தம் இரு கட்டுரைகளில் பதிவிட்டுள்ளதுடன், 1921இல் நிகழ்ந்த எழுச்சிக்கும் அதற்கு முன்னர் நிகழ்ந்த எழுச்சிகளுக்கும் இடையிலான வேறுபாடுகளையும் சுட்டிக்காட்டி உள்ளார். முந்தைய எழுச்சிகளைவிட 1921ஆவது ஆண்டு எழுச்சி பரந்துபட்டதாகவும் தீவிரத்தன்மை கொண்டதாகவும் விளங்கியது. ஒத்துழையாமை இயக்கமும், பிரிட்டிஷ் இந்திய இராணுவத்தில் மிகுதியான அளவில் பணியாற்றி இராணுவப் பயிற்சியை அவர்கள் பெற்றிருந்தமையும் இதற்குக் காரணம் என்பது அவரது கருத்தாக உள்ளது.

தோழர் இ.எம்.எஸ். 1921 மலபார் குடியானவர் எழுச்சி குறித்த தமது கட்டுரை ஒன்றில் சில ஆழமான வினாக்களை எழுப்பி விடையும் தந்துள்ளார். மாப்பிள்ளை முஸ்லிம்கள் பெரும்பான்மையினராக வாழும் பகுதிகளுடன் மலபார் எழுச்சி ஏன் நின்று போய்விட்டது? ஜன்மிகள், அதிகாரிகள் ஆகியோரின் ஒடுக்குமுறையும் சுரண்டலும் மலபார் மாப்பிள்ளைகளுக்கும் இந்துக்களுக்கும் ஒரே தரத்தனவாய்த்தான் இருந்துள்ளன. ஆனால் மலபார் எழுச்சியானது இந்துக்களுக்கு எதிரானது, ஜன்மிகளுக்கும் அரசு அதிகாரிகளுக்கும் எதிரானதல்ல என்ற பரப்புரைக்கு ஏன் பலியானார்கள்? இவ்வினாக்களுக்கு அவர் அளித்துள்ள விடை வருமாறு:

மாப்பிள்ளைக் குடியானவர்கள் இந்துக் குடியானவர்களை விட அமைப்பு அடிப்படையில் நன்றாக அணி திரண்டிருந்தார்கள். இதற்குக் காரணம் மாப்பிள்ளைகளின் கூட்டுவழிபாடுகள் (Congregational Prayers),பொது விருந்துகள், தமக்குள் கொண்டுள்ள சமத்துவ உணர்வு என்பன பிற சமூகங்களைக் காட்டிலும் ஒன்றிணைந்து செயல்படத் துணை நின்றது.

இந்துக் குடியானவர்களைப் பொறுத்த அளவில் கிலாபாத் இயக்கமானது ஜன்மிகள், அரசு அதிகாரிகள் ஆகியோரிடம் இருந்து விடுதலை பெறத் துணைநிற்பது. ஆனால் இஸ்லாமியர்களுக்கோ தம் சமயத் தலைமையைப் பாதுகாப்பது. அவர்களது உள்ளூர் மற்றும் வட்டாரத் தலைவர்களாக விளங்கிய “முசாலியார்கள்”, “தங்கல்கள்”, “ஹாஜிகள்” பிற புனிதத் தலைவர்கள் ஆகியோரை உண்மையான ஏகாதிபத்திய எதிர்ப்பாளர்களாகக் கருதினார்கள்.

இத் தலைவர்கள் சமயநோக்கில் சிந்தித்து சமயமொழியில் பேசினார்கள். இது மாப்பிள்ளைகளை ஓரணியில் திரட்டப் பெரிதும் துணை நின்றது. இதனால் வர்க்க அரசியலைக் காட்டிலும் சமய அரசியலுக்குள் ஈர்க்கப்பட்டார்கள்.

தோழர் இ.எம்.எஸ்.சின் இவ்விளக்கம் இனவரைவியல் என்ற அறிவுத்துறை சார்ந்த ஒன்றாக உள்ளது. எந்த ஒரு போராட்டத்திலும் அதில் ஈடுபடுபவர்களின் பண்பாட்டுத் தாக்கம் செல்வாக்கு செலுத்தும் என்பது ஒரு பொதுவான வரலாற்று உண்மை. இவ் உண்மையைத்தான் அவர் சுட்டிக் காட்டியுள்ளார். மற்றபடி சமய அரசியலை அவர் நியாயப்படுத்தவில்லை.

ஒரு கட்டுக்கோப்பான சமூகம் என்ற அடிப்படையில்... மாப்பிள்ளைகள் மலபார் குடியானவர் எழுச்சியில் முன்னணியில் நின்ற போதிலும் இந்துக்களுக்கு எதிரான நிலைப்பாட்டை அவர்கள் எடுக்கவில்லை. இப்போராட்டத்தின் போது சில இந்துக்களின் வீடுகள் தாக்குதலுக்காளாயின. இவ் வீடுகள் ஜன்மிகளாகவோ, அவர்களின் கையாட்களாகச் செயல்பட்டோரின் வீடுகளாகவோ இருந்தன. ஆங்கில ஆதரவு நிலைப்பாட்டை மேற்கொண்ட இஸ்லாமியர் வீடுகளும் தாக்குதலுக்கு ஆளாகியுள்ளன.

ஆங்கில அரசின் ஒடுக்குமுறை

தன் ஆளுகையின் கீழ் இருந்த மக்களின் எழுச்சியை ஒரு பகை நாட்டின் மீதான தாக்குதல் போன்றே ஆங்கில அரசு நடத்தியது. காவல்துறை மட்டுமின்றி இராணுவமும் பயன்படுத்தப்பட்டது. எந்திரத் துப்பாக்கி போன்ற போர்க்கள ஆயுதங்கள் குடியானவர்களுக்கு எதிராகப் பயன்படுத்தப்பட்டன. மாவட்ட ஆட்சித் தலைவராக இருந்த தாமஸ் என்பவர் திரூர்அங்காடி என்ற நகருக்கு மலபார் காவல் படையையும், இராணுவத்தையும் வரவழைத்தார். அவர்கள் ஆயுத வலிமையினால் மக்களைக் கைது செய்ததுடன் மாம்பரம் பள்ளிவாசலைச் சூழ்ந்து கொண்டு அங்கிருந்த மக்கள் திரள் மீது சுட்டார்கள். இதற்குக் காரணமான தாமஸ் மலையாள இதழ்களால் “மலபாரின் டையர்*” என்றழைக்கப்பட்டார். மலபார் எழுச்சியை ஒடுக்க ஆங்கிலக் காலனியம் மேற்கொண்ட கொடூரச் செயல்களின் உச்சகட்டமாக அமைந்தது சரக்கு ரயில் பெட்டி கொடூரம். இக் கொடூரச் செயலை மறைக்கும் வழிமுறையாக அரசு ஆவணங்களில் சரக்கு வாகன சோகம் (Wagon Tragedy) என்று குறிப்பிட்டார்கள். இதை சரக்கு வண்டிக் கொடூரம் என்றே குறிப்பிட வேண்டும்.

சரக்குவண்டிக் கொடூரம்

சரக்கு இரயில்களில் இணைக்கப்படும் இரயில் பெட்டிகள் மூன்று வகைப்படும். முதலாவது கடினமான இரும்புத்தளத்துடன் மேற்கூரையும், பக்கவாட்டில் கதவுகளும் இல்லாத பெட்டி. நீளமும் எடையும் கூடிய மரத்தடிகள், இரும்பு கர்டர்கள் போன்றவற்றை ஏற்றிச் செல்ல இது பயன்படும்.

இரண்டாவது பக்கவாட்டில் கதவுகளுடன் மேற்கூரையில்லாத பெட்டி. இதில் பெரும்பாலும் நிலக்கரி, ஓடு, கற்கள், நான்கு சக்கர வாகனங்கள் என்பன ஏற்றிச் செல்லப்படும். சில நேரங்களில் தானியங்கள், சிமெண்ட் என்பன ஏற்றிச் செல்லப்படுவதும் உண்டு. அப்போது மழையில் இருந்து அவற்றைப் பாதுகாக்கும் வழிமுறையாக, தார்ப்பாயினால் நன்றாக மூடிக் கயிறுகளால் இறுக்கிக் கட்டிவிடுவார்கள்.

மூன்றாவது வகைப் பெட்டி மூன்று பக்கமும் கனமான இரும்புத் தகடுகள் அடிக்கப்பட்டு இருபக்கங்களிலும் இரட்டை இரும்புக் கதவுகளுடன் இருக்கும். இதை, ஊர்தியாக மாற்றப்பட்ட பெரியளவிலான இரும்புப் பெட்டி எனலாம். இதில் தானிய மூடைகளும், சிமெண்ட் மூடைகளும், கால்நடைகளும், எந்திரங்களும், துணிகள் போன்றவையும் ஏற்றப்படும். பொருட்கள் ஏற்றப்பட்டவுடன் இருபக்கக் கதவுகளும் வெளிப்புறமாகப் பூட்டப்பட்டு விடும். கால்நடைகள் ஏற்றப்பட்டால் மட்டுமே காற்றோட்டத்திற்காகக் கதவுகள் திறந்திருக்கும். இச்செய்திகளின் பின்புலத்தில் சரக்குவண்டிக் கொடூரம் குறித்துக் காண்போம்.

1921 மலபார் எழுச்சியை அடக்கும் வழிமுறையாக ஏராளமான குடியானவர்களைக் கைது செய்தது, இதனால் சிறைகளில் இடப் பற்றாக்குறை ஏற்பட்டது. இதை எதிர்கொள்ளும் வழிமுறையாக வேறு பகுதிகளில் உள்ள சிறைச்சாலைகளுக்கு இவர்களை அழைத்துச் செல்லலாயினர்.

இவ்வகையில் இக்கலவரம் தொடர்பாகக் கைதான நூறு பேரை ஆந்திரப் பகுதியில் உள்ள பெல்லாரிச் சிறையில் அடைக்க முடிவெடுத்தனர். 1921 நவம்பரில் மேலே குறிப்பிட்ட மூன்றாவது வகை சரக்குப் பெட்டகத்தில் நூறு கைதிகளையும் ஏற்றினர்.

அவர்கள் அனைவரும் அமர்ந்து பயணிக்க இடம் போதாமையால் நிற்க வேண்டியிருந்தது. கால்நடைகளை ஏற்றிச் செல்லும் போது கூட காற்றோட்டத்திற்காகப் பக்கவாட்டுக் கதவுகளைத் திறந்து வைக்கும் வழக்கத்திற்கு மாறாக, இரு பக்கக் கதவுகளையும் அடைத்து வெளிப்புறம் தாளிட்டனர். இரயில் போத்தனூர் சந்திப்பை அடைந்தபோது சரக்குப் பெட்டகத்தின் கதவை அதிகாரிகள் திறந்தனர். திறந்ததும் மலம், சிறுநீர் என்ற இரண்டின் துர்நாற்றம் வீசியது.

நூறு கைதிகளில் 64 கைதிகள் மூச்சுத் திணறி இறந்து போயிருந்தனர். எஞ்சிய 36 கைதிகளை மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றபோது அதில் அறுவர் இறந்து போயினர். ஆக மொத்தத்தில் 70 பேர் இறந்து போயினர்.

இறந்தவர்களில் குன்னப்பல்லி அச்சுதன் நாயர், மேலடத் ஆட்டசங்கரன் நாயர், கிழக்குப்பாலத்தில் தட்டான் உன்னிக் குரியன், சொக்கரம்பாயில் செட்டிச் சிக்கு என்ற நால்வரும் இந்துக்கள் என்பதை பினராய் விஜயன் குறிப்பிட்டுள்ளார். (அறை ஒன்றுக்குள் இந்தியர்களால் அடைக்கப்பட்ட ஆங்கிலேயர்கள் மூச்சுத் திணறி இறந்த நிகழ்வை “கல்கத்தா இருட்டறை நிகழ்வு” என்று கற்றுக் கொடுக்கும் நம் வரலாற்று நூல்கள் இக்கொடுமையைக் கண்டு கொள்வதில்லை) இந்திய விடுதலைப் போராட்ட வீரர்கள் குறித்த இந்திய வரலாற்று ஆய்வுக் கழகத்தின் ஆவணங்களில் இருந்து இப்போராட்டம் இன்று நீக்கப்பட்டு, மதச்சாயம் பூசப்பட்டு விட்டது. மலபாரில் இவர்களை ஏற்றிச் சென்ற இரயில் நிலையத்தில் இதன் நினைவாக வரையப்பட்ட ஓவியங்களை நீக்கும் முயற்சியும் நடக்கிறது.

தோழர் ஏகே.கோபாலனின் மதிப்பீடு:

1921 மலபார் குடியானவர் எழுச்சியின் வெள்ளிவிழா கொண்டாடப் பட்டபோது 25 ஆகஸ்ட் 1946 இல் அவர் ஆற்றிய உரைக்காகக் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். 1847 இல் இந்திய விடுதலையை ஒட்டி அரசியல் கைதிகள் அனைவரும் விடுதலை செய்யப்பட்டபோது அவர் விடுதலை செய்யப்படவில்லை. இவ்வுரையில்,

“நீங்கள் இந்துவாகவோ, இஸ்லாமியராகவோ. இருக்கலாம். நீங்கள் ஏகாதிபத்திய எதிர்ப்பாளராகவும், ஆங்கில ஆட்சி முடிவுக்கு வர வேண்டும் என்று எண்ணுபவராகவும் இருந்தால் 1921 இல் நாட்டுப்பற்று மிக்க இளைஞர்கள் மேற்கொண்ட வீரமிகு போராட்டத்தைக் கற்றறிந்து கொள்ள வேண்டும். அதைச் செய்யாமல் நீங்கள் ஆங்கில ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவர முடியாது.” என்று அவர் குறிப்பிட்டதே இதற்குக் காரணமாக அமைந்தது. அவர்மீது போடப்பட்ட வழக்கைத் திரும்பப் பெறாது தொடர்ந்து நடத்த வேண்டும் என்று விடுதலை பெற்ற இந்தியாவின் சென்னை மாநில அரசு முடிவு செய்தது.

இம் முடிவை எதிர்த்து அவர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார். அவ் வழக்கில் அவர் தாக்கல் செய்த எதிர் மனுவில் 1921 கிலாபாத் இயக்கத்தில் மாப்பிள்ளை முஸ்லிம்கள் வெளிப்படுத்திய வீரமும், தியாகமும் போற்றுதலுக்குரிய ஒன்று. ஒரு போராட்டத்தின் நல்ல கூறுகளை ஏற்றுக்கொள்ளும்படியும் தீய கூறுகளை எதிர்க்கும்படியும் கூறுவது குற்றம் என்றால், நான் குற்றவாளிதான் என்று தன் மனுவில் அவர் குறிப்பிட்டிருந்தார். அவர் குற்றமற்றவர் என்று நீதிமன்றம் அவரை விடுவித்தது,

இவ்வழக்கில் அவரது இப் பொதுக் கூட்ட உரையை எடுத்தெழுதி ஒரு சான்றாக நீதிமன்றத்தில் உள்துறை வழங்கியது. கோழிக்கோடு ஆவணக் காப்பகத்தில் இருந்து அவ்வுரையின் நகல் இந்நூலில் ஒரு கட்டுரையாக இடம் பெற்றுள்ளது. அதில் இடம் பெற்றுள்ள பின்வரும் தொடர்களை இப் போராட்டம் குறித்த மதிப்பீடாகக் கொள்ளலாம்.

“இந்த நாட்டின் மாப்பிள்ளை முஸ்லிம் நண்பர்கள் பி.ஏ. பட்டம் பெற்றவர்கள் அல்லர். பெரிய அளவிலான பள்ளிப் படிப்பைக் கூடப் பயின்றவர்கள் அல்லர். கான்பஹதூர் (தன் அடிவருடிகளுக்கு ஆங்கில அரசு வழங்கிய மதிப்புறு பட்டம்) பட்டத்தைப் பெற்றவர்களும் அல்லர், ஆனால் அவர்கள் தீரமுடைய மனிதர்கள். இந்த நாட்டின் விடுதலைக்காகச் சொற்பொழிவுகள் ஆற்றியவர்களும் அல்லர். ஆனால் துப்பாக்கிகளையும் பீரங்கிகளையும் அதிகாரிகளையும் எதிர்த்து நின்றவர்கள். துணிச்சல் மிகுந்த மக்கள் முன்னால் துப்பாக்கிகளும் ஆயுதங்களும் வைக்கோல் புரியைப் போன்றவை என்பதை மெய்ப்பித்துக் காட்டியவர்கள். அவர்களால் மூன்று மாத காலம் ஆட்சி நடத்த முடிந்தது. இதை மறக்க இயலுமா? இது கொண்டாடப்பட வேண்டிய ஒன்றுதானே!”.

1921 Uprising in Malabar, A Collection Of Communist Writings. Nidheesh Narayanan and Vijay Prashad. (Editors) (2022). LeftWord Books, New Delhi 110008.

ஆ.சிவசுப்பிரமணியன்

Pin It