காதலர் தின வரலாறு

மன்னர்கள் என்பவர்கள் பல ஆயிரம் மனைவிகளைத் திருமணம் செய்தும், திருமணம் செய்யாமலும் பெண்ணடிமையின் தளகர்த்தாவாக இருந்து கொண்டு அவர்களை அந்தப்புரங்களில் அடிமை போல அடைத்து வைத்துக்கொண்டு ஊருக்கு உபதேசம் செய்யும் பல நாடுகளில் வாழ்ந்த மன்னர்களின் மனநிலைக்கு ரோமானிய நாட்டு மன்னனும் விதிவிலக்கல்ல, ரோமானிய நாட்டில் இரண்டாவது கிளாடிஸ் II என்கிற மன்னனது ஆட்சிக்காலத்தில் நாட்டில் இனி எந்த ஆணும் திருமணம் செய்யக்கூடாது என்கிற கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. திருமணம் செய்தால் ஆணின் வீரம் குன்றிவிடும் இதனால் மன்னனின் படை பலம் இழந்து விடும் என்ற காரணத்தினால் இதுபோன்ற கட்டுப்பாடுகளை விதித்துள்ளதாக கூறிய மன்னன் இந்த விதிகளை மீறுபவர்கள் சிரச்சேதம் செய்தான் இந்த மிரட்டலை பொருட்படுத்தாமல் விதிகளை மீறிய வாலண்டைன் என்பவர் மன்னனுக்குத் தெரியாமல் ரகசியமான முறையில் திருமணங்களை நடத்தி வைத்தார். இதனை அறிந்த மன்னன் வாலண்டைனை சிரச்சேதம் செய்ய கட்டளையிட்டு சிரச்சேதம் செய்யும் வரை சிறையில் அடைத்தார்.

இதற்கிடையே சிறையில் அடைபட்டிருந்த காலத்தில் சிறைக்காவலரின் பார்வை இழந்த மகள் அஸ்டோரியசுக்கு வாலண்டைன் மீது காதல் ஏற்பட்டது. இதனால்தான் என்னவோ காதலுக்கு கண்ணில்லை என்ற இயல்பான சொல் தோன்றியிருக்கக்கூடும். வாலண்டைன் - அஸ்டோரியஸ் காதலுக்கிடையில் வாலண்டைனை சிரச்சேதம் செய்யும் நாள் வந்தது. கிபி 270 ஆம் ஆண்டு பிப்ரவரி 14 நாள் வாலண்டைன் சிரச்சேதம் செய்து கொல்லப்பட்டார். அதன் பின்னர் 200 ஆண்டுகள் கழித்து 49 வது போப்பாக பதவியேற்ற ஜெலாசியுஸ் என்பவர் வாலண்டைனைப் புனிதராக அறிவித்தார். அதன் பின்னரே உலகம் முழுவதும் பிப்ரவரி 14ஆம் நாள் வாலண்டைன் தினம் என்ற காதலர் தினமாக கொண்டாடப்படுவதாக பெரும்பாலான ஆய்வுகள் மூலம் தெரிகிறது. சாதிகளையும் மதங்களையும் உடைத்தெறிந்து சமத்துவமான வாழ்வை கட்டமைக்கும் காதலைக் கொண்டாட உலகம் முழுவதும் ஒரு தினம் கடைப்பிடிக்கப்படும் போது நாமும் அதை தொடர்வதில் பெருமை கொள்கிறோம்.

காதலும் மதமும்

காதல் மதத்தையும் சாதியையும் தகர்த்து உடைத்து விடுவதாலேயே மதவாதிகளுக்கும்,சாதிய பற்றாளர்களுக்கும் ஏனைய விவகாரங்களை விடவும் காதல் விவகாரங்களில் கூடுதலாக அக்கறை செலுத்தி தங்களது எதிர்ப்பை வன்முறை வடிவில்கூட வெளிப்படுத்துகின்றனர்.

ருக்மணி உள்ளிட்ட எட்டு மனைவியர் உட்பட 16008 மனைவியுடன் வாழும் கிருஷ்ணன் இவர்கள் எல்லோரையும் விடுத்து, ராதா என்பவரைக் காதலித்தார். அந்தக் காதல் புனிதமானது என நம்புவதினாலேயே இன்றும் நம்மூரில் பலர் ராதாகிருஷ்ணன் என்று பெயர் கூட சூட்டி மகிழ்ந்து கொள்கிறார்கள். பல ஆயிரம் மனைவி இருக்க மற்றொரு காதல் செய்த கிருஷ்ணன் மீதெல்லாம் வராத எதிர்ப்பு சமகால மனிதர்கள் மீது வருவதற்குக் காரணம் என்ன? தங்களின் அடித்தளமான மதத்தையும், ஜாதியையும் காதல் உடைத்து விடும் என்கின்ற பயம் தானே தவிர வேறு ஒன்றுமில்லை.

காதலர் தினம் கொண்டாட எதிர்ப்புத் தெரிவிப்பவர்கள் சொல்லும் மற்றொரு காரணம் அது மேற்கத்திய கலாச்சாரம். பிறந்தநாளுக்கு கேக் வெட்டுவது, ஆங்கில புத்தாண்டுகளை மது விடுதிகளிலும், கேளிக்கை விடுதிகளிலும் கொண்டாடுவது போன்ற செயல்களிலெல்லாம் மேற்கத்திய கலாச்சாரம் கண்களுக்கு புலப்படுவதில்லை! பிறந்தநாளுக்கும், ஆங்கிலப் புத்தாண்டுக்கும் இல்லாத எதிர்ப்பு காதலர் தினத்திற்கு எழுவதற்குக் காரணம் மதமடமை தானே தவிர வேறு ஒன்றும் இல்லை.

காதல் ஒவ்வாமை

முன்பெல்லாம் மழை பெய்ய வேண்டுமென்றாலோ அல்லது இடைவிடாது பெய்யும் மழையை நிறுத்தவோ நாய்க்கு, கழுதைக்கு, ஓணானுக்குத் திருமணம் செய்து வைப்பது என்றிருந்த மதவாதிகளின் மூடத்தனம் இப்போது இன்னும் சற்று முற்றிப்போய் காதலர் தின எதிர்ப்புக்கு காதலர் தினத்தன்று நாய்க்கும் கழுதைக்கும், ஓணானுக்கும் தவளைக்கும் திருமணம் செய்து வைப்பது என தங்களது மூடத்தனமான மனநிலையைப் பொதுவெளிக்கு வெளிப்படுத்துகின்றனர். இதன் மூலமாக மனிதர்கள் தங்களது சாதியையோ, மதத்தையோ விடுத்து காதல் திருமணம் செய்வதை எந்தளவிற்கு இவர்கள் கொச்சைப் படுத்துகின்றனர் என்பதையறிந்தால் இவர்களின் மனித நேயம் பொதுவெளியில் இருப்பவர்களுக்குப் புரியும்.

புராணக் கதைகளிலும் மத நூல்களிலும் ஆணுக்கும் ஆணுக்கும் திருமணம் நடந்ததாகவும், அதிலே குழந்தை பிறந்ததாகவும், திருமணமே ஆகாமல் அறிவியலுக்கு முரண்பட்ட விதத்தில் குழந்தை உண்டானதாகவும், குழந்தை பிறந்ததாகவும் இருக்கின்ற கதைகளை வைத்திருப்பவர்கள் தான் 1955 ஆம் ஆண்டு இயற்றப்பட்ட இந்து திருமணச் சட்டம் சட்டப்பிரிவு 12 அங்கீகரித்துள்ள திருமணமாகாமல் ஆணும் பெண்ணும் சேர்ந்து வாழும் உரிமையைக் கொடுத்திருக்கும் சட்டங்களை விமர்சனம் செய்கிறார்கள்.

அதிலேயும் கூட பெரும்பாலானவர்கள் living together என்று சொல்லப்படும் திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழும் நிலையில் வாழ்வதில்லை என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது. திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழலாம் இங்கே ஒருவர் மீது மற்றொருவர் காதலே முக்கியம் என சட்டமே அங்கீகரித்தாலும் கூட அடிப்படைவாதிகளுக்கு காதல் என்றாலே கொஞ்சம் கசக்கத்தான் செய்கிறது.

காதலர் தினத்தில் பொது இடங்களில் சந்திக்கும் காதலர்களை அன்றைய தினமே திருமணம் செய்துகொள்ள வற்புறுத்தி வன்முறையில் ஈடுபடுபவர்கள் தங்களைக் கலாச்சாரக் காவலர்கள் என்கிறார்கள். காதலித்தவர்கள் உடனேயே திருமணம் செய்து கொண்டு வாழ வேண்டும் என விரும்பும் கலாச்சாரக் காவலர்கள், ஒரு தலித் சமூகத்தைச் சேர்ந்தவரையும் ஆதிக்கச் சமூகத்தைச் சேர்ந்த மற்றொருவரையும் சேர்த்து திருமணம் செய்து வைத்து அவர்களின் பாதுகாப்பான வாழ்க்கைக்கு துணை நிற்பார்களா? எங்காவது நின்றதுண்டா?

ஆகவே இவர்களின் நோக்கம் சாதி மதக் கலப்பு மணம் கூடாது என்பதுதானே தவிர மற்றபடி கலாச்சாரப் பாதுகாப்பு என்பதெல்லாம் இல்லை. இன்றும்கூட இடைநிலை சமூகத்திற்குள் நடைபெறும் காதல் திருமணங்களைக் கலப்பு மணம் எனக்கூறி நாங்களும் சாதி மறுப்பு திருமணம் என்பதை ஏற்பவர்கள் தான் என்று பேசுகிறார்கள் இடைநிலையில் உள்ளே கலக்கும் போது எழும் எதிர்ப்புக்கும்,இணையர்களில் ஒருவர் இடைநிலை அல்லாத வேறு பிரிவினராக இருக்கும்போது எழுகின்ற எதிர்ப்புக்கும் அடிப்படையில் மிகப்பெரிய வேறுபாடுகள் இருக்கின்றது.

காதலின் மேன்மை

தங்களுடைய வாழ்விணையரைத் தேர்ந்தெடுக்க சட்டப்படி வயதுவந்த ஆணுக்கும் பெண்ணுக்கும் உரிமை உண்டு. அவ்விதமான உரிமையைப் பயன்படுத்தி இருவரும் இணைவது கலப்பதாகும் ஆனால் காதலற்ற மனங்கள் இரண்டும் கலப்பதில்லை, அது சுற்றியுள்ளவர்களால் சேர்த்து வைக்கப்பட்டு சேர்க்கப்படுவது. இரண்டும் கலக்கும்போது இருக்கின்ற காதல் சேர்க்கின்ற போது தோன்றுவதில்லை, காரணம், சேர்ப்பது செயற்கையானது.

கலப்பது இயற்கையானது. தமிழ் இலக்கியங்களில் தலைவன் தலைவியின் காதலை அக இலக்கியங்கள் வெளிப்படுத்துகிறது. காதல் திருமணம் செய்து கொள்பவரை உடன்போக்கு செல்லுதல் என தமிழிலக்கியம் குறிப்பிடுகிறது. காதலைப் போற்றுகின்ற இலக்கியத்தையும், காதல் திருமணம் பற்றிய செய்திகளையும் கொண்ட இலக்கியத்தையும் கொண்ட மொழிக்கு உரிமையுள்ளவர்கள் காதலை வெறுப்பது என்கிற செயல் ஒரு விதமான மனநோயாகும். திருமணத்திற்கு பின்பு காதல் வரவேண்டும் என்கின்ற புதிய பிற்போக்கு கருத்தாக்கம் பேசுகிறார்கள். திருமணத்துக்கு பிந்தையது காதல் என்றால் இல்லை என்பதே உண்மை. திருமணம் முடிந்த பின்னர் வருவது சுற்றத்தார் சேர்த்துவைத்த உறவின் மீது ஏற்படும் பற்றுதல் மட்டுமே!

வீட்டிலிருந்து புறப்பட்டுப் பல மணி நேரம் வெளியில் தங்கள் வாழ்விணையருடன் பயணமாகிக் கொண்டிருக்கும் வேளையில் நினைத்த இடத்தில் ,அது பொது இடமானாலும் சரி ஒரு ஓரமாக நின்று சிறுநீர் கழிக்கும் வசதிகொண்ட ஆண்கள் பெரும்பாலும் ஒரு பெண் அதிலும் தன்னுடைய வாழ்விணையர் சிறுநீர் கழித்து விட்டாரா? என்று கேட்பதும் இல்லை! சிந்திப்பதும் இல்லை! தன்னைப் பாதுகாப்பான இடத்திற்கு சிறுநீர் கழிக்க அழைத்துச் செல்ல வேண்டி ஒரு பெண் தன்னுடைய உபாதையை பொறுத்துக்கொள்ள முடியாமல் வெளிப்படுத்தினாலொழிய சிறுநீர் கழிக்க வசதி செய்து கொடுக்கும் அக்கறை கூட இல்லாத வாழ்விணையர்கள் தான் திருமணத்திற்கு பின் காதல் மலர வேண்டும் எனப் பேசுகிறார்கள்.

காதலுக்குத் துணை செய்வோம்

சாதியையும் மதத்தையும் அழித்து மலரும் காதலால் ஆண் பெண் சமத்துவம் மேம்படுகிறது. அப்படிப்பட்டக் காதலர்கள் இணையர்களாக வாழ்வில் இணைவதன் மூலம் ஆணாதிக்கமற்றப் பெண்ணியம் மலர்ந்து அன்போடு நடைபோடும். மேன்மையான வாழ்க்கை ஏற்பட்டு,சமூகத்தில் சாதி மத வேற்றுமைகளால் மண்டிக்கிடக்கும் முன்னேற்றமற்றச் சமூகத்தை முன்னேற்றம் அடையச் செய்கிறது.

இப்படிப்பட்ட மானிட மேன்மைக்குரிய சமூகம் விரிவடைய காதலும் காதலைக் கொண்டாடும் காதலர் தினமும் இன்றியமையாதது. ஆகவே காதலுக்கும் காதலர் தினத்துக்கும் துணை நிற்போம்.

Pin It