ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் நடந்த சமீபத்திய சம்பவங்களின் போது, இந்தியப் புராணக்கதைகள் தொடர்பாகவும், அந்தக் கதைகள் குறித்து நிலவுகிற பொதுவான விளக்கங்கள் குறித்தும், ஒரு முக்கியமான விசயம் பரவலாகக் கவனம் பெற்றது. மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத் துறை (முன்னாள்) அமைச்சர் ஸ்மிருதி இராணி, தேச விரோதச் செயல்களின் மையமாக ஜே.என்.யூ செயல்படுகிறது என்று சொல்லி, பல்கலைக்கழக மாணவர்களுக்கு எதிராக அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளை நியாயப்படுத்த முயன்றார்.

ஜே.என்.யூவில் தலித் மற்றும் பிற்படுத்தப்பட்ட சமூகங்களுக்கான மாணவர் குழுக்கள், மகிசாசூரனுக்கு வீரவணக்க நாள் நிகழ்ச்சிகளை நடத்தியிருக்கிறார்கள் என்பதுதான் அவர் தன் கருத்துக்கு வலுசேர்க்கச் சொன்ன காரணமாகும். மேலும், மகிசாசூரனை வதம் செய்த துர்க்கையம்மன் பலரும் வணங்கக்கூடிய கடவுளாக இருப்பதாகவும், அந்த நிகழ்ச்சிக்காக மாணவர்கள் வெளியிட்ட துண்டறிக்கை துர்கையம்மனை இழிவுபடுத்தக்கூடியதாக இருப்பதாகவும் அவர் கூறினார்.

இந்துமதக் கதைகளில் தீயசக்தியாகக் காட்டப்படும் மகிசாசூரனைக் கொலை செய்த சம்பவத்திற்கு வெவ்வேறுவிதமான விளக்கங்கள் கொடுக்கப்படும் பணிகள் கடந்த சில காலங்களாக நடந்து வருகின்றன. அவை குறித்து விரிவாகப் பார்ப்பதற்கு முன்பு, சில ஆண்டுகளுக்கு முன்பு இந்திய நாடாளுமன்றத்தில் துர்க்கையம்மன் குறித்து எழுந்த வேறொரு சர்ச்சை குறித்துப் பார்ப்போம்.

இந்திரா காந்தி திறந்தவெளி பல்கலைக்கழகத்தின் (IGNOU) பாடநூல் ஒன்றில், துர்க்கையம்மன் ‘மது அருந்தினார்’ என்றொரு தகவல் குறிப்பிடப்பட்டிருந்தது. பாஜவினர் அந்தத் தகவல் “இந்த மதக் கடவுளை இழிவுபடுத்துகிற பொய்த் தகவல்” என்றொரு சர்ச்சையைக் கிளப்பினார்கள். அதற்குப் பதிலளித்த அப்போதைய மத்திய அமைச்சராக இருந்த வங்காளத்தைச் சேர்ந்த பிரணாப் முகர்ஜி, ‘சண்டிபாதை’ என்றழைக்கப்படுகிற புராணத்திலிருந்து சுலோகங்களை மேற்கோள் காட்டி, துர்க்கையம்மன் மது அருந்திய சம்பவத்தை விளக்கினார்.

2014ஆம் ஆண்டு அக்டோபர் மாத ஃபார்வேர்டு ப்ரஸ் (Forward Press) இதழ், மகிசாசூரன் குறித்தும் துர்க்கையம்மன் குறித்தும் ஒடுக்கப்பட்டமக்களின் பார்வையிலான விளக்கங்களைக் கொண்டு வெளிவந்திருந்தது. ஆனால் அந்த இதழ் பார்ப்பனர்களுக்கும், பிற்படுத்தப்பட்ட சமூகத்தினருக்கும் இடையில் வெறுப்புணர்வை வளர்க்கிறது என்ற புகாரின் பேரில், காவல்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. அது குறித்த வழக்கு இன்னமும் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

இன்று கொண்டாடப்படுகிற துர்கா பூஜை என்கிற கொண்டாட்டம் மிக நெடுங்காலமாக பழக்கத்தில் உள்ள ஒரு விழா அல்ல. 1757ஆம் ஆண்டு பிளாசிப் போர் நடந்து முடிந்த பிறகு (அதாவது ஆங்கிலேயர்கள் முஸ்லிம் மன்னர்களை வெற்றி கொண்ட பின்பு), அப்போதைய கல்கத்தாவின் நவாபாக இருந்த கிருஷ்ணதேவ் என்பவர், பிளாசிப் போரில் வென்ற இராபர்ட் கிளைவ் பிரபுவிற்கு மரியாதை செலுத்தும் விதமாக, துர்கா பூஜை கொண்டாட்டத்தை முதன்முதலாக நடத்தினார். இதில் இருந்து நாம் எளிதில் புரிந்துக்கொள்ளக்கூடிய செய்தி என்பது, இந்தக் கொண்டாட்டங்கள் புதிது என்பது மட்டுமல்ல; அவை முஸ்லிம்களுக்கு எதிரானதாகவும், ஏகாதிபத்தியத்திற்கு ஆதரவானதாகவும் அமைந்திருந்தன என்பதாகும்.

மகிசாசூரனைக் கொண்டாடும் சமூகங்களும் இருக்கின்றன. ஒருபுறம், 2011 ஆம் ஆண்டில் இருந்து ஜே.என்.யூ மாணவர்களில் ஒரு குழுவினர், மகிசாசூரனுக்கு வீரவணக்க நாள் கொண்டாட்டத்தை நடத்தி வருகின்றனர். தற்போது பா.ஜ.கவில் இருக்கும் உதித் ராஜ் அவர்கள்கூட அத்தகைய ஒரு நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு உரை நிகழ்த்தியிருக்கிறார். மறுபுறம், வங்காளத்தின் பல பகுதிகளில் ஆதிவாசி சமூகங்களால், மகிசாசூரனைப் போற்றும் விதமாக விழாக்கள் பலகாலமாக நடந்துவருகின்றன. கடந்த ஆண்டு மட்டும், சுமார் 300 இடங்களில் அத்தகைய விழாக்கள் நடந்திருக்கின்றன.

ஒடுக்கப்பட்ட சமூகத்தை சேர்ந்த அறிஞர்கள் பலரும், ஃபார்வேர்டு இதழில் எழுதுகின்றவர்கள் உட்பட, மகிசாசூரன் கொலைசெய்யப்பட்ட சம்பவம் எப்படி மக்களிடையே ஒரு கொண்டாட்டமாக முன்னெடுக்கப்படுகிறது என்பது குறித்த அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர். முதலில் அது ஒரு மரணத்தைக் கொண்டாடுகிற செயலாக இருக்கிறது. இரண்டாவதாக, பழங்குடியின அரசனான மகிசாசூரனை தீயசக்தியாகக் கட்டமைக்கும் பார்ப்பனியச் சார்பு கற்பிதமாக இந்தத் துர்கா பூஜை கொண்டாட்டங்கள் இருக்கிறது.

புராணக்கதைகளுக்குக் கொடுக்கப்படும் வெவ்வேறான பொருள்விளக்கங்கள், ஆழமான உள் முரண்பாடுகளை கொண்டிருக்கின்றன. வரலாற்றுக்கு முந்தைய காலத்தில் (Pre-historical Period) நடந்த சம்பவங்களைத் துல்லியமாகப் புரிந்துகொண்டு, மக்களிடையே அவற்றை முன்வைப்பது அவ்வளவாக சாத்தியமில்லாத செயல்தான். மக்களிடையே பரவலாக நம்பப்படுகிற கதை என்பது, தீயசக்தி ஒன்றை பெண் கடவுள் ஒருவர் கொன்றொழித்ததால், அந்த நாளை “தீமை ஒழிந்து நன்மை வென்ற” நாளாகக் கொண்டாடுகிறோம் என்பதாகும்.

அந்தக் கதையின்படி, யாராலும் வீழ்த்த முடியாத அந்தத் ‘தீயசக்தியை’ வீழ்த்துவதற்கு, பிரம்மா, விஷ்ணு, மகேஷ்வரன் ஆகிய மூவரும் தங்களுடைய வலிமையையெல்லாம் ஒன்று திரட்டி துர்க்கையம்மனுக்கு வழங்கி, மகிசாசூரன் என்கிற அந்தத் தீயசக்தியைக் கொன்றொழித்தனர். அந்தக் கதை மேலும், அந்தத் தீயசக்தியான மகிசாசூரன் என்கிற மன்னன், உருவத்தில் பாதி மனிதனாகவும் பாதி எருமையாகவும் இருந்தான் என்கிறது.

ஜே.என்.யு மாணவர்கள் வெளியிட்ட துண்டறிக்கையில் இருந்து ஸ்மிருதி இரானி வாசித்த கதையின்படி, துர்க்கை என்பவர் மகிசாசூரனைக் கொல்வதற்காக அனுப்பப்பட்ட ஒரு பாலியல் தொழிலாளி. மகிசாசூரனுடன் ஒன்பது இரவுகள் நெருக்கமாக இருந்து, ஒன்பதாவது இரவில் உறக்கத்தில் இருந்த அவனை அவள் கொன்றாள் என்கிறது அந்த கதை. மகிசாசூரனின் நினைவாகதான் மைசூர் என்கிற பெயரே ஒரு நகரத்திற்கு வைக்கப்பட்டிருக்கிறது என்கிறது வேறொரு தகவல். தயீப் மேத்தா என்கிற பிரபல ஓவியர் வரைந்த காளியின் (துர்கை) பல ஓவியங்களில் ஒன்றில், அம்மன் மகிசாசூரனை இருக்கமாக அணைத்தபடி இருந்தார். அந்த ஓவியம் மிக அதிகவிலைக்கு விற்கபட்டது என்கிற தகவலை நண்பர் ஒருவர் என்னிடம் சொன்னார்.

கிபி 250 - கிபி 500 காலக்கட்டத்தில் எழுதப்பட்ட மார்க்கண்டேய புராணம் என்பதில்தான் துர்க்கை பற்றி முதல் குறிப்பு காணக்கிடைக்கிறது. துர்க்கையம்மன் குறித்து வெகுமக்களிடம் பரவலாக இருக்கிற கண்ணோட்டமும், துர்கா பூஜா கொண்டாட்டங்களும், மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி உறுதியாகக் கொண்டிருக்கும் நம்பிக்கைகள் அனைத்தும் பார்ப்பன மற்றும் மேலாத்திக்கச் சமூகச் சார்புக் கருத்துகளாகும்.

மகிசாசூரன் நினைவு தினத்தை, வலிமையில்லாத சமூகங்கள் பலவும் கொண்டாடிவருவதைப் பலரும் இங்கு அறிந்திருக்கவில்லை. ஜே.என்.யு மாணவர்களும், ஃபார்வேர்டு இதழும் மகிசாசூரனை நினைவுகூறத் தொடங்கியப்பிறகுதான், இவையெல்லாம் வெளிச்சத்துக்கு வரத் தொடங்கியிருக்கின்றன. மக்களிடம் பொதுக்கருத்தாக நிலவுகின்றவை எப்போதுமே ஆதிக்க ஜாதிகளின் - வர்க்கங்களின் கருத்துகள்தாம் என்பதை நாம் அறிவோம்.

நன்மைக்கும் தீமைக்கும் இடையிலான போட்டிகள் குறித்தும், கடவுளர்களுக்கும் அசுரர்களுக்கும் இடையிலான சண்டைகள் குறித்தும் எண்ணற்ற கதையாடல்கள், ஆரியர் வருகை காலம்தொட்டு இங்கு நிலவிவருகிறது. ஆரியப் பார்ப்பனர்கள் படையெடுத்து வந்து இந்த மண்ணின் பூர்வகுடி மக்களைத் தங்களுடைய படைவலிமையாலும், வஞ்சகத்தாலும் வீழ்த்திய செய்திகளைத்தான் இத்தகைய பார்ப்பனக் கதையாடல்கள் நமக்கு உணர்த்துகின்றன என்பார் ஜோதிராவ் ஃபூலே.

ஒடுக்கப்பட்ட மக்கள் ஜாதிய அடிமைத்தனத்தில் இருந்து விடுபட்டு வெளியேற வேண்டும் என்கிற போரட்டக்குரல்கள் வலுப்பெறும்போது, பார்ப்பனக் கதையாடல்களை அம்பலப்படுத்தும் விளக்கங்களும் அதிகம் விவாதிக்கப்படுகிறது. இராமன் - இராவணன் குறித்த பார்ப்பனக் கதையாடல்களும் மறுஆய்வுக்கு உட்படுத்தத்தக்கதே. இராவணனை, அறிவுக்கூர்மை நிறைந்த சிறந்த மனிதாகக் கருதி, வணங்குகின்ற சமூகங்கள் பலவும் இருக்கின்றன என்பதுவே பலருக்கும் ஆச்சரியமான தகவலாக இருக்கலாம்.

எந்த இராமனை வைத்து இந்துத்துவ அரசியல் பிரச்சாரம் கட்டமைக்கப்படுகிறதோ அந்த இராமனை மிகக் கடுமையான விமர்சனத்திற்கு உள்ளாக்கினார்கள் அம்பேத்கரும் பெரியாரும். வாலி என்கிற மக்கள் ஆதரவு பெற்ற மன்னனை, அறநெறிகளுக்கு எதிரான வகையில் மறைந்திருந்து அம்பெய்திக் கொன்றவன் இராமன் என்று சாடினார் அம்பேத்கர். வாலியின் ஆட்சிக்காலம் பார்ப்பனரல்லாத மக்கள் மகிழ்ச்சியாக வாழ்ந்தகாலம் என்று அவர் வணங்கவும் பாராட்டவும்பட்டார்.

சூத்திரர்களுக்குத் தவம் செய்யும் உரிமை கிடையாது என்கிற காரணத்தால் தவமிருந்த சம்பூகனை இராமன் கொலை செய்தான் என்பதுகூட தங்கள் மேலாதிக்கத்தைத் தக்கவைத்துக்கொள்வதற்காகப் பார்ப்பனர்கள் செய்த சூழ்ச்சிதானேயன்றி வேறல்ல. கர்ப்பினியாக இருந்த தன்னுடைய மனைவி சீதையை காட்டுக்கு விரட்டிவிட்ட இராமனின் செயல் எந்த வகையிலும் மன்னிக்கமுடியாத ஒரு செயல். ஆகவே, இந்த வகையில், இராமன் - இராவணன் குறித்த கதையாடல்களை, ஜாதி, இனம், பெண்ணுரிமை போன்றவற்றின் அடிப்படையில் பகுப்பாய்வு செய்யவேண்டும்.

ஒன்றை இங்கே தெளிவுபடுத்தியாகவேண்டும். ஆரியர் வருகை அல்லது படையெடுப்புக் காலத்தில் இருந்தது போன்ற, ‘இனம்’என்பதற்கான வரையறை இப்போது இல்லை. இந்த இடைப்பட்ட காலத்தில் பல்வேறு சமூகங்களுக்கு இடையே இனக்கலப்பு பெருமளவு நடந்துவிட்டது. துர்க்கை அம்மன் குறித்த புராணக்கதைகளைப் பெண்ணிய நோக்கிலிருந்து புரிந்துக்கொள்வதும் மிக அவசியமானது. மிரினாள் பாண்டே என்கிற பிரபல பத்திரிக்கையாளர், ஸ்க்ரோல் (Scroll) இணைய தளத்தில் எழுதிய கட்டுரையில், ஆணாதிக்கத்திற்கு எதிராக நின்று போராடி வென்ற உறுதிமிக்க பெண்ணாக அவர் துர்கையம்மனை முன்வைக்கிறார்.

எனவே, துர்க்கையம்மன் குறித்த புராணக் கதைகளுக்கு, இனம் சார்ந்த பார்வையில், ஜாதியப் பார்வையில், பெண்ணியப் பார்வையில் என்று வெவ்வேறு தரப்பில் இருந்தும் விளக்கங்கள் தரப்படுகிறது. சமத்துவ சமூகத்தை நோக்கி மிக மிக மெதுவாக நகர்ந்துக்கொண்டிருக்கிற, பல்வேறு வேற்றுமைகளையும் ஏற்றத்தாழ்வுகளையும் கொண்ட ஒரு சமூகத்தில், இப்படி வெவ்வேறுவிதமான கதையாடல்களும் பொருள்விளக்கங்களும் நிலவுவதும், அவற்றிற்கு இடையே ஆரோக்கியமான விவாதங்கள் நிகழ்வதும் இயல்பானதும் அவசியமானதும் ஆகும்.

இந்து மதப் புராணங்கள் குறித்த, ஒடுக்கப்பட்ட மக்கள் தரப்பில் முன்வைக்கப்படும் கதையாடல்களையும் விளக்கங்களையும், ஸ்மிருதி இராணி - பாஜக - ஆர்.எஸ்.எஸ் தரப்பினர் எதிர்கின்றனர். சமூகத்தின் மீதான, உயர்ஜாதி - உயர்வர்க்க ஆதிக்கத்தைத் தக்கவைத்துக்கொள்ளும் தங்களுடைய வேலைத்திட்டத்திற்கு எதிரான அச்சுறுத்தலாக அவற்றைக் கருதுகின்றனர். அவர்களால், சமூக ஆய்வில் நிலவும் பன்மைத்தன்மையையும், ஒடுக்கப்பட்ட தரப்பினரின் பார்வையிலான விளக்கங்களையும் சகித்துக்கொள்ள முடியவில்லை. அதன் காரணமாகவே, ஜே.என்.யு மாணவர்கள் சிலர் கொண்டிருக்கும் மாற்றுப் பார்வையை, “எவ்வகையிலும் ஏற்றுக்கொள்ளமுடியாதது” என்றும், “தேசவிரோதமானது” என்றும் மிகக்கடுமையான தாக்குதலை மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் நாடாளுமன்றத்திலேயே நடத்தினார்.

( டாக்டர் ராம் புனியானி அவர்கள், ‘தி மில்லி கெஜட்01-15.04.2016’ ஆங்கில இதழில் எழுதிய கட்டுரையின் தமிழாக்கம். மருத்துவரான ராம் புனியானி, உயிரிமருத்துவப் பொறியியல் துறையில் பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். தற்போது பல்வேறு மனித உரிமைகள் தொடர்பான செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகிறார். இந்தியாவில் மதஅடிப்படைவாதத்துக்கு எதிராகவும், மூடநம்பிக்கைகளுக்கு எதிராகவும் விரிவாக எழுதியும் பேசியும் வருகிறார்.)

தமிழில்: பிரபாகரன் அழகர்சாமி

Pin It