pcos syndrome 350PCOS (Poly Cystic Ovary Syndrome) என்ற பல கட்டிகளுள்ள சூலகங்கள் நோய். கடந்த பத்து வருடங்களில் PCOS என்பது மிகவும் சாதாரணமாகப் பேச்சுவாக்கில் விழும் சொல்லாகிவிட்டதை நீங்கள் உணர்ந்திருக்கலாம், குறிப்பாக வளர் இளம் பெண் பிள்ளைகளைப் பெற்ற அம்மாக்கள் மத்தியில். PCOS என்றால் என்ன என்று கேட்டால், இது உடலில் உருவாகும் ஒருவித நிலை. இந்நிலை உருவாகுமாயின், பெண்களுக்கு ஒழுங்கற்ற மாதவிடாய் ஏற்படும், தோலின் எண்ணைப்பிசுபிசுப்பு அதிகமாகி பருக்கள் பெருக வாய்ப்பு ஏற்படும், முக்கியமாக தலைமுடி கொட்டும் பிரச்சனையும் முகத்தில் மயிர் வளரும் பிரச்சனையும் ஏற்படும்.

மேற்கூறியவற்றோடு, இந்நிலைமை உருவானால், கருத்தரிப்பது சிக்கலாகும். பெண்களின் மத்தியில் சுமார் 5 முதல் 8 சதவிகிதம் பேருக்கு இந்நிலை இருப்பதாய் சொல்லப்படுகின்றது. பொதுவாய் PCOS நிலை உள்ள பெண்கள், உடல் எடைப் அதிகப்படுதலாலோ அல்லது உடல் பருமனாலோ பாதிக்கப்பட்டிருப்பார்கள்.

PCOS நிலையால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு Ovary என்ற சூலகம் ஒழுங்காய் இயங்காமல், டெஸ்டோஸ்டெரோன் என்ற ஹார்மோனை அதிகம் சுரக்கும். டெஸ்டோஸ்டெரோன் என்ற ஹார்மோன் பொதுவாக நாம் ஆண்களுடன் சம்பந்தப்படுத்திக் கேள்விப்பட்டிருந்தாலும் இந்த ஹார்மோன் பெண்கள் உடலிலும் சிறிதளவு சுரக்கும் என்பதை இங்கு நினைவில் கொள்ளவேண்டும். PCOS பொழுது, இந்த வழக்கத்தினை விட இன்னும் அதிகமாகச் சுரக்கும்.

சூலகங்கள், முட்டைகளைக் கொண்டிருக்கும் மிகவும் சிறிய திரவம் நிரப்பப்பட்ட பைகளை உற்பத்தி செய்கிறது. இந்தப் பைகள் தான் நுண்ணறைகள் அல்லது திரவப்பை (follicle) . ஒவ்வொரு மாதமும் பெண்களின் சுழற்சி சமயத்தில், ஒரு முட்டையைக் கொண்டிருக்கும் முதிர்ச்சியடைந்த ஒரு திரவப்பை உடைந்து முட்டை வெளியேறும். இந்த நிகழ்விற்கு முட்டை வெளிப்படுதல் (Ovulation) என்று பெயர்.

PCOS  உள்ள பெண்களில், மூளை, முட்டைகளை முதிர்ச்சியடையச் செய்து, விடுவிக்கும்படி ஒரு சுரப்பு நீர்ச் செய்தியை சூலகங்கள் அனுப்பாது. இதனால், முட்டை வெளிப்படுதலானது (ovulation) சில வேளைகளில் மாத்திரம் நடைபெறும் அல்லது நடைபெறாது. வெடிப்பதற்குப் பதிலாக முட்டைகள் சூலகங்களுக்குள்ளே சிறு சிறு திரவப் பைகளாக வளரும். ஹார்மோன் அளவுகளும் சமநிலை மாறிவிடும்.

PCOS உள்ள பெண்கள்,

 வருடத்திற்கு 8-ற்கும் குறைவான மாதவிடாய் சுழற்சியினைக் எதிர்நோக்குவார்கள்.

 ஆண்களுக்கு மாத்திரம் அடர்த்தியான மயிர் வளரும் இடங்களான மேல்உதட்டிற்கு மேல், தாடை, நெஞ்சுப் பகுதி, வயிற்றுப் பகுதியில் மயிர் வளர்ச்சியினைக் காண்பார்கள்.

 உடல் எடை வெகுவாக உயர்ந்து உடற்பருமனால் பாதிக்கப்படுவார்கள்.

 ஆண்கள் எதிர்நோக்கும் தலை வழுக்கை பிரச்சனையை எதிர்நோக்குவார்கள்.

 பருக்கள் பல்கிப்பெருகும்.

 மருத்துவ உதவி இல்லாமல் கருத்தரிப்பதில் பிரச்சனையினை எதிர்நோக்குவார்கள்.

அதோடு, PCOS உள்ள பெண்கள் பிற வகையான உடல் உபாதைகளால் பாதிக்கப்படுவதற்கு சாத்தியக்கூறுகள் இருக்கின்றன.

அவை,

 இரத்தத்தில் அதிக அளவு சர்க்கரை (நீரிழிவு நோய்)

 இரத்தத்தில் அதிக அளவு கொழுப்பு

 Sleep Apnea என்னும் தூக்கத்தின் பொழுது மூச்சுத்திணறல்

PCOS நிலை உள்ள பெண்களுக்கு இதய நோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. எனவே மருத்துவர்களின் தொடர் கண்காணிப்பின் வழி அவை தீவிரமாவதற்கு முன் கண்டறிந்து அதற்கான சிகிச்சைகளை மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் உள்ளன.

ஆக, PCOS இனை கண்டறிவதற்கு ஏதாவது குறிப்பிட்ட பரிசோதனை இருக்கிறதா என்று கேட்டால், இல்லை என்பதே பதில். மருத்துவர் உங்களது மாதவிடாய் சுழற்சி பற்றியும் தோல் மற்றும் முடி வளர்தல் பற்றியும் விசாரித்து, பின் உடல் எடை பற்றி கேட்டு அறிந்து அதன் பின் உங்கள் மருத்துவ வரலாற்றினை நோக்கி, அதனை ஆதாரமாய்க் கொண்டு உங்களுக்கு PCOS நிலை இருக்கிறதா இல்லையா என்று முடிவு செய்வார்.

தேவைப்பட்டால், இரத்த மாதிரி எடுத்து, ஹார்மோன் அளவுகளையும், சர்க்கரை அளவுகளையும் கணக்கிடுவர். அதோடு, திரவப்பைகளைக் கண்டறிவதற்காக சூலகங்களை (Ovaries) ஐ அல்ட்ராசவுண்ட் ஸ்கானும் செய்யக்கூடும்.

சரி. PCOS நிலையில் இருந்து மீள்வதற்கு சிகிச்சை ஏதாவது இருக்கின்றதா என்றால், இல்லை. சமாளிப்பதற்குத் தான் சிகிச்சைகள் இருக்கின்றன.

கருத்தரிக்காமல் இருப்பதற்கு PCOS ஒரு முக்கிய காரணம் என்று முன்னமே கூறியிருந்தேன். ஆகவே, அதிக உடல் எடையாலும் உடற் பருமனாலும் நீங்கள் பாதிக்கப்பட்டிருந்தால், சத்தான ஆகாரம் வழியேவும், fast food மற்றும் sweetened beverages உட்கொள்வதை கட்டுப்படுத்தியோ அல்லது முற்றாய் தவிர்த்தோ தேவையற்ற உடல் எடையினைக் குறைக்கலாம். அப்படிச் செய்தாலே மாதவிடாய் சுழற்சிகள் சரியாகி, கருத்தரிப்பதற்கான வாய்ப்புகள் அதிகப்படும். நீங்கள், உடல் எடையினைக் குறைத்தும் சுழற்சிகளில் பிரச்சனை இருந்தால், நீங்கள் மருத்துவரை அணுகுதல் வேண்டும். மருத்துவ உதவியின் வழியேவும் அவரின் ஆலோசனையும் தான் கருத்தரிப்பதற்கான வாய்ப்புகளை அதிகப்படுத்தும். PCOS நிலை உள்ள பெண்கள் கருத்தரிக்க விரும்பினால் அவர்களுக்கு சொல்லப்படும் முதல் ஆலோசனை உடல் எடையைக் குறைத்தல் குறித்து தான். மருத்துவ ஆலோசனை படி, முறையாக எடையினைக் குறைப்பது தான் என்றும் நல்லது என்பதை இங்கு குறிப்பிட விரும்புகிறேன்.

PCOS என்ற இந்த நிலையினை நாம் முற்றாய் மாற்ற முடியாது என்ற போதிலும் முறையான மருத்துவ உதவியினாலும் lifestyle changes என்ற அன்றாட வாழ்க்கையில் நம் ஆரோக்கியத்திற்காக சிற்சில மாற்றங்களை செய்வதன் வழியேவும் நாம் ஆரோக்கியமான வாழ்க்கையினை வாழ முடியும், PCOS உடன் தொடர்புடைய நீரிழிவு மற்றும் இதய நோய்களில் இருந்து நம்மை நாமே காத்துக்கொள்ள முடியும் என்பதையும் இந்த நேரத்தில் உங்களுக்கு நான் தெரிவித்துக்கொள்கிறேன்.     

Pin It