மகாராஷ்டிர மாநிலத்தில், ஜாதி, தீண்டாமை ஒழிப்பு மாநாடு இவ்வளவு சிறப்பாக நடைபெறுவதற்கு காரணமாக இதனை ஏற்பாடு செய்து நடத்திக் கொண்டிருக்கக் கூடிய மும்பை பகுத்தறிவாளர் கழகத்தின் பொறுப்பாளர்களே,

இங்கே சிறப்புரையாற்ற வருகை தந்திருக்கின்ற எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன் அவர்களே, இந்த மும்பை மண்ணில் பகுத்தறிவு வேர்களை நிலை நிறுத்தச் செய்த தமிழர்களான மும்பையில் திராவிட இயக்கம் என்கிற சொற்கள் ஒலிக்கும் பொழுதெல்லாம் அதற்கான அடி வேராக இருந்து மறைந்த அய்யா மந்திரமூர்த்தி அவர்கள், அய்யா சுப்பைய்யா அவர்கள், அய்யா சோமசுந்தரன் அவர்கள், அய்யா பொற்கோ அவர்கள், அய்யா ஆரிய சங்கரன் அவர்கள், அய்யா அன்பழகன் அவர்கள் இப்படி இந்த திராவிட இயக்கத்தின் அடிக்கல்லாக வாழ்ந்த அவர்களுடைய வழியில் இன்றும் இந்த இயக்கத்தினை நடத்திச் சென்று கொண்டிருக்கின்ற கழகப் பொறுப்பாளர்களே,

arulmozhi 645தமிழ் லெமூரியா மூலமாக தமிழர்களின் வரலாற்றுத் தேடலை முன்னெடுத்து நடத்துகின்ற தோழர் குமணராசன் அவர்களே, திராவிடர் கழகத்தின் வெளியுறவுத்துறை செயலாளர் சிறந்த பகுத்தறிவாளரும் பகுத்தறிவாளர் கழகத்தின் வழிகாட்டி தோழர். குமரேசன் அவர்களே,

மதிப்பிற்குரிய சட்டமன்ற உறுப்பினர் கேப்டன் தமிழ்ச்செல்வன் அவர்களே, மேலும் நிறைய பேரின் பெயரைச் சொல்ல வேண்டும். அனைவரின் பெயர்களையும் தோழர் திருமா அவர்கள் குறிப்பிடுவார். அவருடைய உரைக்காக இவ்வளவு நேரம் எழுச்சியோடும் பொறுமையோடும் ஆர்வத்தோடும், எதிர்பார்ப்புகளோடும் கூடி இருக்கின்ற உங்கள் அனைவருக்கும் என்னுடைய வணக்கத்தைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.

தமிழர்களின் தமிழ்நாட்டில் இருந்து வெகு தூரம் வேலைக்காகத் தொழில், வணிகம், அரசியல் என்று எங்கெல்லாம் சென்று வாழ்கிறார்களோ அந்த இடத்தில் சென்று தமிழர்களைச் சந்திப்பது என்பது தனக்கு மிகவும் பிடித்தமான ஒரு வேலை என்பது தான் ஆசிரியர்அவர்களுடைய கருத்து. அப்படிப்பட்டச் சூழலில் அவர் இங்கு வர இயலாத அந்த வாய்ப்பினை எனக்கு அளித்து இந்தச் சமூகம், நீதி, ஜாதி, தீண்டாமை ஒழிப்பு என்கிற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கருத்தரங்கத்தில் பங்கு பெறுகிறச் சூழலை உருவாக்கித் தந்திருக்கிறார்கள்.

இந்த வாய்ப்பளித்ததற்காக அய்யா அவர்களுக்கு என்னுடைய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இன்றைய அரசியல் சூழலில் இந்தியா முழுவதிலும் ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொருவிதமான பிரச்சனைகள் பேசப்பட்டு வருகின்றன. ஆனால் இந்தியா முழுவதும் பேச வேண்டிய பிரச்சனை என்றால் ஜாதி, தீண்டாமை. அதை ஒழிக்கிற சமூகநீதி இவைதான். மாநிலத்திற்கு மாநிலம் மற்ற பிரச்சனைகள் மாறலாம். ஆனால் இந்தியாவின் மாறாத பிரச்சனை ஜாதி, ஜாதி.., ஜாதி..,

இந்த ஜாதியும், தீண்டாமையும் மனிதர்களை எந்த இடத்திற்குக் கொண்டு போய் விட்டிருக்கிறதென்று அண்மையில் நீங்கள் பார்த்துக் கொண்டிருப்பீர்கள். ஜாதி என்பது எப்படிப்பட்டது? மழை, வெள்ளம், புயல், சூறாவளி அடித்து வீடெல்லாம் இழந்து முகாமில் தங்கி இருக்கின்ற மக்கள், நாங்கள் அவர்களோடு தங்க மாட்டோம் என்று சொல்கின்ற இடத்தில் இருக்கிறார்கள். இது தமிழர்களுக்கு மட்டுமல்ல, பொதுவாக இந்து மதத்தினுடைய மிகப் பழமையான ஒரு நோய், இது எல்லோருக்கும் பிடிக்காது. மன வலிமையற்றவர்களைத் தான் தாக்கும். அந்த நோய்க்கான மருந்து பகுத்தறிவு.

இங்கு மட்டுமல்ல. ஈழத்தமிழர்களுடைய மிகக் கொடுமை வாய்ந்தச் சூழலை விவரித்து பல கதைகள் வந்திருக்கின்றன. அன்றைக்கு அவர்கள் அனுபவித்த அந்த இன்னல்களையும், சிக்கல்களையும் விவரிக்கும் நாவல்களையும் படிக்கும் பொழுது அதிலும் சொல்கிறார்கள்.

அகதி முகாம்களில் தங்கி இருக்கும் பொழுது பக்கத்தில் இருப்பவரைப் பார்த்து, “இந்த சாதிப் பயலோட எல்லாம் நான் இங்க வந்து இருக்க வேண்டியிருக்கிறது” என்று அந்த அகதி முகாமில் சொல்கிறார்கள்.

இந்த மன நோய் என்பது எத்தனை ஆண்டு காலம், எத்தனை ஆயிரம் ஆண்டுகளாய் இந்த மனிதர்களைப் பிடித்து வைத்திருக்கிறது. அது எப்படி எந்த இடத்திற்குப் போனாலும் எப்படி ஒரு மனிதனுடைய வாழ்நிலையை, சூழ்நிலையை, திறமையை, ஆற்றலை, வேலை வாய்ப்புகளைத் தட்டிப் பறிக்கிறது. அரசியல் ரீதியாக நாங்கள் இதைச் சலுகையாக வழங்குகிறோம் என்று அரசுகள் சொல்ல நினைத்தால் அந்தச் சலுகை எவ்வளவு காலம் என்று நீதிமன்றம் கேள்வி கேட்கிறது.

இந்த மனநோய் ஒரு மனிதனை ஒட்டு மொத்தமாக கை கால்களை கட்டிப் போட்டுவிட்டு, என்னோடு நீ வந்து தேர்வு எழுத வா என்று போட்டி போட வைக்கிறது. அந்தப் போட்டி சமமானப் போட்டி அல்ல. அந்தப் போட்டியிலே நமக்குத் தெரிந்த நம்முடைய ஆற்றலும், திறமையும் தேர்வுக்கு எடுத்துக்கொள்ளப்படுவது இல்லை. இந்தப் போட்டியை நடத்துகின்றவர் யாரோ, அந்தப் போட்டிக்கு விதியை நிர்ணயிக்கிறவர் யாரோ, அந்தத் தேர்வு நடைபெறுகிற இடத்திற்கு நாம் வந்து சேரவே ரொம்ப நாள் ஆகும்.

இப்பொழுது பரவாயில்லை, கொஞ்சம் படித்து விட்டோம், பரீட்சை எழுதத் தயாராகி விட்டோம். இந்தக் களத்திற்கு வந்து விட்டோம். ஆனால் போட்டிக்கு வந்து இறங்கிவிட்டோம் என்றால் கோல் போஸ்டை மாற்றி வைத்து விடுவார்கள். “நீட் வைப்பார்கள்”, உங்கள் தாய் மொழியில் தேர்வு வைக்க மாட்டார்கள். உங்கள் தாய் மொழியில் கேள்வித் தாள் கொடுத்தால் கேள்வியே தப்புத் தப்பாகக் கொடுப்பார்கள். தப்பாகக் கொடுத்த கேள்விக்கு மற்றவர்களுக்கு மதிப்பெண் வழங்குவார்கள், எங்களுக்கு ஏன் மதிப்பெண் போடவில்லை என்று கேட்டால், போட முடியாது என்று சொல்வதற்கு மிக உச்சத்தில் ஒரு கோர்ட் வைத்திருக்கிறார்கள். இப்படி ஒரு பக்கம் நிர்வாகம், மற்றொரு பக்கம் அரசு, இன்னொரு புறம் நீதிமன்றம். இந்த மூன்றிற்கும் நடுவிலே ஓடி ஓடி களைத்துப் போன ஒடுக்கப்பட்ட பிற்படுத்தப்பட்ட சமூகத்தினுடைய அடுத்த தலைமுறை, நம்பிக்கை இழக்கின்றச் சூழல் இன்றைக்கு ஏற்பட்டிருக்கிறது.

இனிமேல் இந்தியாவில் கல்வி என்பதும், வேலை வாய்ப்பு என்பதும் நமக்கு கிடைக்குமா? சாதாரணமாக அரசுப் பள்ளியிலே, அரசு உதவி பெறும் பள்ளியிலே படித்தவர்களுக்கு உயர்கல்விக்குப் போவதற்கான வாய்ப்பு இருக்கிறதா? இன்றைக்கு உயர் பதவியில் இருக்கின்ற ஐ.ஏ.எஸ். அதிகாரிகள், உயர்நிலைப் பதவியிலே இருக்கின்றவர்களைக் கேட்டால் அவர்கள் எல்லாம் அரசுப் பள்ளியிலே படித்தவர்களாக இட ஒதுக்கீடு பெற்றவர்களாக இருக்கிறார்கள். இட ஒதுக்கீட்டிலே படித்து வந்திருப்பார்கள். ஆனால் இனி இட ஒதுக்கீடு என்பதே கேள்விக் குறியாக மாறக் கூடியச் சூழ்நிலை வந்து விட்டது.

அரசு வேலை இருந்தால் தானே இட ஒதுக்கீடு. இனி அனைத்து அரசுத் துறைகளும் தனியார் மயமாக்கப்படும். இரயில்வே ரெக்ரூமெண்ட் போர்ட் தேர்வு எழுதினால் அதில் யார் தேர்வாகிறார்கள். யார் அதிக மதிப்பெண் பெறுகிறார்கள் என்று பாருங்கள். இனி அரசு வங்கி என்பது இருக்காது.

இப்படி திக்குத் திசை இல்லாமல் எங்கோ முட்டிக் கொண்டு நிற்பதைப் போல நிற்கின்ற இந்தச் சூழலில் நமக்கு இந்த இருட்டில் வழிகாட்டக் கூடியவர்கள் யார் என்றால் இந்த இருட்டை விரட்ட இரண்டே இரண்டு ஒளிக் கதிர்கள் தான் இருக்கின்றன. ஒருவர் தந்தை பெரியார். மற்றொருவர் அண்ணல் அம்பேத்கர்.

இன்றைக்கு, இவ்வளவு விழிப்புற்ற நமக்கு இவ்வளவு தூரம் கூட்டம் போட்டு கூடுகின்ற வாய்ப்பு உள்ள நமக்கு இப்படிப்பட்டத் தடையும் என்ன செய்யப் போகிறோம் என்கின்ற திகைப்பும் வருமானால் பாதையே இல்லாமல் புதர்களாய்க்கிடந்த இந்தச் சமுதாயத்திற்குப் பாதை போட்ட அந்தத் தலைவர்களுடைய போராட்டத்தை இன்றைக்கு நாம் நினைத்துப் பார்க்க வேண்டும். அவர்கள் எப்படிப்பட்ட எதிரிகளை எதிர் கொண்டிருக்கிறார்கள். எப்படிப்பட்ட எதிரிகளைச் சந்தித்திருக்கிறார்கள் என்று தெரிந்து கொள்ள வேண்டும்.

இங்கே பேசிய சகோதரி சீதாபாய்பூலே அவர்கள், அவர்களுடைய முன்னோர்களின் வரலாற்றிலே இருந்து பெருமிதத்தோடு பேசினார். புரிகிறதோ இல்லையோ, அவர்கள் என்ன பேசினார்கள் என்பதை உங்கள் கை தட்டலில் இருந்து புரிந்து கொள்ள முடியும். அந்த வரலாற்றை யார் நிறுவி இருக்கிறார்கள். இவர்களுக்கு ஒரு நூற்றாண்டிற்கு முன்னால் ஆங்கிலேயர்கள் காலத்தில் சனாதனிகளோடு போராடுவது என்பது சாதாரண காரியம் இல்லை. இந்த உலகத்தில் பெண்கள் படிப்பது என்பது ஒவ்வொரு நாட்டிலும் பிரச்சனையாகத் தான் இருக்கிறது.

பெண்கள் என்ன படிக்கலாம் என்பதை ஆண்கள் தான் தீர்மானம் செய்கிறார்கள். பெண்கள் மருத்துவராகப் படிக்க வந்தால் அவர்கள் பிரசவ மருத்துவராகத் தான் போக வேண்டும். அறுவை சிகிச்சை செய்யும் மருத்துவராக வர வேண்டும் என்றால் அதற்கான படிப்பும், படிப்பிற்கான வாய்ப்பும் பெண்களுக்குக் கிடையாது (என்பது தான் நம் சமூகத்தின் சிந்தனை). பெண் மருத்துவர்கள் பிரசவம் பார்க்கின்றவராக இருக்கலாமே தவிர அறுவை சிகிச்சை செய்கின்றவர்களாக இருக்க முடியாது.

1800-களில் இந்த நாட்டில், இந்த மும்பை மாநகரத்தில் பெண்களுக்கான பள்ளிக் கூடத்தை திறந்த சாவித்திரி பாய்பூலே அவர்கள் தான் பெண்களுடைய முதல் ஆசிரியர். இனி ஆசிரியர் தினம் என்றால் அருடைய பெயரைத் தான் சொல்ல வேண்டும். ஆசிரியர் தினம் என்பது சாவித்திரி பாய்பூலே என்பவருடைய நாளாகச் சொல்லப்பட வேண்டும். உலகத்தில் பெண் உரிமை என்று சொல்ல வேண்டுமானால், பெண்கள் அடிமைகளாக இருக்கிறார்கள் என்ற கருத்தில் இருந்து தான் தொடங்க வேண்டும். ஆனால், இந்தியாவில் பெண்ணுரிமையைப் பற்றிப் பேச வேண்டுமென்றால், வேத காலத்தில் பெண்கள் மிகவும் மரியாதையுடன் நடத்தப்பட்டனர் என்று ஆரம்பிப்பார்கள். வேத காலத்தில் பெண்களுக்கு எல்லா உரிமைகளும் வழங்கப்பட்டது எனத் தொடங்குவார்கள். கல்வி உரிமை என்றால் நமது ஊரில் சொல்வார்கள் வெள்ளைக்காரர்கள் வந்து தான் நமது கல்வி கெட்டு விட்டது. அதற்கு முன்னால் மிகவும் சிறப்பாக இருந்தது என்பார்கள். என்ன சிறப்பாக இருந்தது? குருகுலக் கல்வியாக இருந்தது. குருகுலக்கல்வியில் யார் படித்தார்கள்? கற்றுக் கொடுத்தவர், கற்றுக் கொண்டவர் என இருவருடையப் படத்தை போடுகிறார்கள். The Ancinent Education இதில் இரண்டு பேரும் குடுமி வைத்துக் கொண்டு பூணூல் போட்டுக் கொண்டிருக்கிறார்கள். இதற்கு பெயர் குருகுலக் கல்வி. இந்த குருகுலக் கல்வியில் நமக்கு எங்கே இடம் இருந்தது?

முதன் முதலாகத் திண்ணைப் பள்ளி தொடங்கினார்கள். பிறகு தான் அந்தத் திண்ணைப் பள்ளியைத் தெருவிற்குக் கொண்டு வருகிறார்கள். அவ்வாறான திண்ணைப் பள்ளி ஆசிரியர் வீட்டில் தான் இருக்கும். ஆசிரியர் ஏன் பள்ளியை திண்ணையில் நடத்தினார். வீட்டினுள் நடத்தியிருக்கலாமே? ஏனென்றால் அவர் மற்றவர்கள் வீட்டிற்குள் விட மாட்டார்கள் (பணக்காரர்களாக இருந்தாலும் கூட) திண்ணையில் வைத்துத் தான் சொல்லிக் கொடுப்பார். அந்த திண்ணைப் பள்ளியை தெருவிற்கு கொண்டு வந்து, பொது வீதிக்கு கொண்டு வந்து அனைவருக்குமான பள்ளிக்கூடம் தொடங்கியது என்பது ஆங்கிலேயர்களின் காலத்தில் தான் நடந்தது.

அன்றைக்குத் தொடங்கப்பட்ட அந்தக் கல்விப் போராட்டம் கொஞ்சம் கொஞ்சமாக நம்முடைய தெருக்கதவை, ஊர்க் கதவைத் தட்டுவதற்கு இவ்வளவு ஆண்டுகள் ஆகியிருக்கிறது. இப்படிப்பட்டச் சூழலில் நம்முடைய டாக்டர். அம்பேத்கர் அவர்களுடைய கல்விப் பட்டியலைப் பார்க்கும் போது எத்தனைப் பட்டங்கள். பட்டங்களைப் பட்டியல் போடுவது என்பது இன்றைக்கு அவ்வளவு எளிதல்ல. அவர் கற்ற கல்வியினுடைய பட்டியலைப் படித்துப் பார்ப்பதற்குக் கூட பல பேருக்குத் தகுதி இல்லை. ஆனால் இந்தியாவின் சிறந்த கல்வியாளர்களில் ஒருவராகக் கூட நாம் அவரைச் சொல்வது இல்லை. சிறந்த தத்துவம் படித்தவர். மானுடவியல் படித்தவர். மானுடவியலை ஆராய்ச்சி செய்தவர் என்று சொல்வதில்லை.

அவருடைய அறிவும், திறமையும், அவருடைய முன்னேற்றத்திற்கு மிகவும் பயன்பட்டிருக்குமானால் அவரின் இறுதிக் காலம் வசதியாக இருந்திருக்கும். நல்ல நல்ல அமைச்சர் பதவிகளில் நிம்மதியாக இருந்திருக்க முடியும். அவருக்குப் பதவியும் நிம்மதியாக இல்லை. அவர் தொண்டு செய்த அந்த வாழ்க்கையிலும் வெற்றி பெற்றதற்கான மகிழ்ச்சியும் வரவில்லை. ஆனால் அவர் சாதித்தது என்ன? என்று பார்த்தால், இன்றைக்கு வரைக்கும் இந்த இந்தியா இந்தியாவாக இருப்பதற்கான காரணம் அவர் உருவாக்கிய சட்டம் தான். யாருக்காக? இந்த பிரிவினருக்காக, அந்த பிரிவினருக்காக என்று இல்லாமல் இந்திய மக்களுக்காக, மக்களுக்கு இரண்டு சட்டப் பிரச்சனைகள் வரும். ஜாதி என்பது என்ன? தீண்டாமை என்பது என்ன? இவை இரண்டையும் ஒழிப்பதற்கு சமூக நீதி என்பது என்ன? என்பவைகளுக்கு சட்ட ரீதியான பாதுகாப்பு வேண்டும். அந்த அரசியல் சாசனம் எழுதப்படும் பொழுது வேறு யாராவது அங்கு இருந்திருந்தால் அவர்களுக்கு இது தோன்றுமா?

இந்த ஊரில் ஒரு மனிதனை ஒரு தெருவிற்குள் நடக்க விடமாட்டார்கள். தண்ணீர் எடுக்க விடமாட்டார்கள். கோவிலிற்குள் விடமாட்டார்கள். பள்ளிக்கூடத்தில் விடமாட்டார்கள். அதனால் அதை அரசியல் சட்டத்தில் கொண்டு வரவேண்டும் என்று சொல்வதற்கு அந்த குழுவில் இருந்த வேறு யாருக்காவது தோன்றியிருக்குமா? அவர் அந்த இடத்தில் இருந்ததினால் நமக்கு ஆர்டிகிள் 14 (அரசியல் சாசனத்தின் உறுப்பு 14) கிடைத்தது. இன்று எந்த கோர்ட்டில் நின்று பேசினாலும், எதையுமே பேசத் தெரியவில்லை என்றாலும், “அய்யா இது அரசியல் சாசனப் பிரிவு 14-க்கு எதிரானது என்று சொல்லி அந்த வழக்கை ஒரு வழக்கறிஞரால் வெற்றி பெற வைக்க முடியும் என்று சொன்னால் அது எப்படி நடந்தது, எந்த இரண்டு பேரையும் நீங்கள் சட்டத்தின் முன்னால் சமமாக நடத்த வேண்டும், அவ்வளவு தான் இருக்க வேண்டும் சட்டத்தில். ஆனால் அந்த சட்டப் பிரிவில் என்ன சொல்கிறது என்றால் ஒருவருடைய பிறப்பால், ஜாதியால், மொழியால், மதத்தால், நிறத்தால், ஆண் பெண் என்கின்ற பேதத்தால் அவர்களை பொது வீதிக்கோ, பள்ளிக்கோ, நீர்நிலைக்கோ இன்னும் எந்தப் பொதுவான பயன்பாட்டிற்கும் வராமல் தடுக்கக் கூடாது என்று சட்டம் சொல்கிறது. மற்ற நாடுகளில் எல்லாரும் சமம் என்று சொல்லி சட்டம், அதோடு நின்று விடுகிறது. ஆனால் நம் நாட்டு அரசியல் சட்டம் தான் நீங்கள் சமம் என்பதற்கு என்ன அர்த்தம் என்றால் இவ்வாறெல்லாம் செய்யக் கூடாது என்று அர்த்தம் என்று சொல்கிறது.

ஆனால், இதைக் கொண்டு தான் இந்தியாவில் இட ஒதுக்கீட்டிற்கு எதிராக முதன் முதலில் செண்பகம் துரைராஜன் என்பவருக்காக வழக்கு தொடுத்த, அந்த அரசியல் சாசனத்தை எழுதியவர்களில் ஒருவரான அல்லாடி கிருஷ்ணசாமி அவர்கள் இதே அரசியல் சாசனத்தின் 14-ஆம் பிரிவைச் சொல்லி, ஒருவர் தாழ்த்தப்பட்டவராகப் பிறந்தால் அவருக்குக் குைறந்த மார்க் வாங்கினால் கூட மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்து விடுகிறது. நான் உயர்ந்த சாதியில் பிறந்தேன். அதிக மதிப்பெண் வாங்கியும் எனக்கு இடம் கிடைக்கவில்லை. இந்த சட்டம் சரியா? தவறா? என கம்யூனல் ஜி.ஓ.வை எதிர்த்து வழக்கு போட்டு உச்ச நீதிமன்றம் வரை வாதாடினார், அவரால் வெற்றியும் பெற முடிந்தது.

நமக்காக உருவான கம்யூனல் ஜி.ஓ. நமக்காக டாக்டர்.அம்பேத்கர் அவர்கள் உருவாக்கிய சட்டத்தைக் காண்பித்துத் தகர்க்கப்பட்டது. சட்டத்தை உருவாக்கியவர் அவர். அதற்கு முன்னர் தென்னிந்தியாவில் மெட்ராஸ் ராஜதானியில் இருந்த கம்யூனல் ஜி.ஓ. என்கிற சட்டம் இந்த அரசியல் சட்டத்தைக் காண்பித்துத் தகர்க்கப்பட்டது. இனி கம்யூனல் ஜி.ஓ. மூலம் இட ஒதுக்கீடு கிடையாது, என்று அந்த இடத்தில் அருகில் சட்டம் நமக்கு எதிராக நிறுத்தப்பட்ட போது அந்த இடத்தை எப்படி அடைவது என்பதற்கான போராட்டத்தை மக்கள் மன்றத்தில் நடத்தியவர் தந்தை பெரியார்.மக்களுக்காகத் தான் சட்டம் இந்த மக்களுக்கான திட்டத்திற்கு சட்டம் தடையாக இருக்குமானால் நாங்கள் அந்தச் சட்டத்தைக் கொளுத்துவோம் என்று தந்தை பெரியார் தெருவில் இறங்கி மக்கள் மன்றத்திலே போராடிய போது அதே சட்டத்தில், இன்னொரு உட்பிரிவு சேர்க்கப்பட்டது. அது தான் இந்தியாவினுடைய முதல் சட்ட திருத்தம் என்ற பெயரைப் பெற்றது.

இந்தச் சட்டப் போராட்டத்தைத் தொடர்ந்து இன்றைக்கு வரை நடத்திக் கொண்டே இருக்கின்றோம். இப்படியெல்லாம் சட்டம் போட்டு போராடி படித்து வரும் பொழுது, நீங்கள் மாநிலக் கல்லூரிகள் வரை வர முடியும். இதைத் தவிர இந்தியாவில் நிறைய முக்கியமான படிப்பு மிகப் பெரிய கல்வி நிறுவனங்கள் வைத்திருக்கும் ஐ.ஐ.டி, ஏ.ஐ.எம்.எம்.எஸ், (IIT, AIMMS) போன்ற கல்வி நிறுவனங்களுக்கு பத்து கல்லூரி்க்குத் தேவையானப் பணத்தை அந்த கல்லூரிக்கு அரசு செலுத்த வேண்டும். அங்கு நாம் சென்று படிக்க முடியாது. ஏன்? முடியாத படி வடிகட்டும் ஏற்பாடுகள் இருப்பதால் முடியாது. அதையும் மீறி அங்கு படிக்கச் சென்றால் நம் மாணவர்கள் ஆண்டுக்கு ஒருவர் தற்கொலைக்குத் தள்ளப்படுவார்கள். தற்கொலை இல்லையென்றால் வேறு மாதிரியான கொலை நடக்கும். அவர் போராட்டம் நடத்தி சாகத் தூண்டப்படுகிறாரா? காரணமில்லாமல் தற்கொலைக்குத் தள்ளப்பட்டாரா? என்பது நமக்குத் தெரியாது. ஆனால் ஆண்டுக்கு ஒருவர் மத்திய பல்கலைக் கழகத்தில் மர்மமான முறையில் செத்துக் கொண்டே இருக்கிறார்கள்.

அடுத்ததாக, மனிதனுக்கு நோக்கம் சாதாரணமான வாழ்க்கை, காதல், திருமணம், இன்றைய சினிமாவிலும் காதல் கதையைப் படமாக எடுத்தால் அதுவும் 18 அல்லது 16 வயதில் காதலித்தால் படம் பிச்சிக்கிட்டு ஓடும். 18 வயதிலும் 16 வயதிலும் காதலிக்கக் கூடாது என்பது தான் உண்மை. பெண்ணோ அல்லது ஆணோ காதலிக்க வேண்டுமென்றால் அவர்களுக்கு ஒரு குறைந்த அளவாவது படிப்பு இருக்க வேண்டும், வேலை இருக்க வேண்டும், பொருளாதாரப் பாதுகாப்பு இருக்க வேண்டும், திருமணம் செய்து கொண்டு தைரியமாக வாழ வேண்டும், வாழ்வதற்கான சூழ்நிலை இருக்க வேண்டும், இதெல்லாம் இல்லையென்றால் என்ன செய்யலாம்? அறிவுள்ளவர்கள், அந்த இரண்டு பேரையும் தகுதி உள்ளவர்களாக ஆக்குவதற்கு யோசிக்க வேண்டும். ஆனால் இன்றைக்கு வளர்ந்து கொண்டிருக்கின்ற போக்கு காதல் திருமணம் செய்து கொண்டு இரண்டு பேர் நிம்மதியாக வாழ முடியாது என்பது அல்ல. வாழவே முடியாது, வாழ விடக் கூடாது என்பதாக இருக்கிறது.

மாதத்திற்கு ஒன்றாக வெளிவந்து கொண்டிருந்த ஒரு செய்திகள் இன்றைக்கு ஒரே மாதத்தில் இரண்டு ஆணவக் கொலைகள் நடந்துள்ளன. மற்ற பகுதிகளிலும் நடப்பது உண்டு என்று நமக்குச் செய்தி மூலம் தெரிகிறது. ஆனால் தமிழ்நாட்டில் நடக்கிறது என்பது தான் நாம் கவலைப்பட வேண்டிய ஒரு செய்தி. மனிதர்கள் எப்படி மாறிக்கொண்டிருக்கிறார்கள்? மதம் என்ன, ஜாதி என்பது மனிதனுக்கு ஏதோ ஒரு சமூக அந்தஸ்து, உறவு என்பது மட்டுமல்ல. இன்றைக்கு மாறுகின்ற சூழ்நிலை எப்படி இருக்கிறது என்றால் 1990-91களில் இரண்டு வழக்குகளை நான் நடத்தியிருந்தேன். இரண்டு வழக்கிலும் அந்தப் பெண்கள் வெவ்வேறு ஜாதியைச் சேர்ந்தவர்கள். இரண்டு பட்டியல் இனத்தைச் சேர்ந்த இளைஞர்களை விரும்பித் திருமணம் செய்து கொண்டார்கள். இரண்டு பேருக்குமே அவர்கள் பெற்றோர் வழக்கு போட்டார்கள். அந்த பெண்கள் நீதிமன்றத்திற்கு வந்த போது கோர்ட்டில் கூப்பிட்டுக்கேட்டார்கள். “என்னம்மா சொல்றீங்க” என்று கேட்டதற்கு “அவரைத் திருமணம் செய்து கொண்டேன். அவரோடு தான் வாழ்வேன்” என்றனர். நீதிபதி அனுப்பி வைத்தார்கள். “அந்தப் பெண் அப்படிச் சொல்லும் பொழுது நாங்கள் என்ன செய்ய முடியும். அந்தப் பெண்ணிற்கும் எங்களுக்கும் எந்த வித சம்பந்தமும் இல்லை. முடிந்தால் அந்தப் பெண் காதில் கழுத்தில் போட்டிருக்கும் நகையை வாங்கிக் கொடுங்கள். எங்களிடம் சொத்து கேட்டு வரமாட்டோம் என எழுதிக்கொடுக்கச் சொல்லுங்கள்” என்று பெற்றோர் கூறினர். அதன் பின்னர் சில நாட்களுக்குப்பின் சேர்ந்து கொண்டவர்களும் இருக்கிறார்கள். சேர்த்துக் கொண்ட பெற்றோர்களும் இருக்கிறார்கள். இது 90-களின் தொடக்கம்.

ஆனால் கடந்த 10, 15 ஆண்டுகளில் இந்த நிலைமை எப்படி மாற்றப்பட்டது. அப்படியே ஒரு அப்பாவோ, அம்மாவோ என் மகள் போய்விட்டாள், பரவாயில்லை என்று சொன்னால் கூட மற்றவர்கள் என்ன செய்கிறார்கள் என்றால் நீங்கள் இப்படி விடலாமா? இப்படி விட்டா நம்ம ஜாதிக்குச் சரியாகுமா? என்ற அந்தப் பெண்ணை பெற்றவர்களுக்கு மன உளைச்சலைக் கொடுத்து ஒன்று அவர்களாக அந்தப் பெண்ணையும், இளைஞனையும் கொலை செய்ய வேண்டும் அல்லது நாங்கள் செய்வோம் என்று யார் சொல்வார்கள் என்றால், அந்தப் பெண்ணிற்கு சம்மந்தமே இல்லாத ஒருவன், அந்த ஜாதியில் பிறந்தவன் என்ற உரிமைக்குரியவன் என்று தைரியமாகச் சொல்கிறான்.

திருநெல்வேலியில் தன் சகோதரி வேறு ஜாதியைச் சேர்ந்த ஒருவரை விரும்பினார் என்று அறிந்து 6 பேர் சேர்ந்து ஒரு இளைஞனைக் கொலை செய்துள்ளனர். அந்த 6 பேரும் 18 வயதுக்கு உட்பட்டவர்கள். அவர்களுக்கு வாழ்க்கையைப் பற்றி என்ன தெரியும். ஆனால் அவனுடைய சகோதரி வேறு ஜாதியைச் சேர்ந்த ஒருவரைத் திருமணம் செய்யக் கூடாது என்பது மட்டும் தெரிந்திருக்கின்றது. அதற்காகக் கொலை செய்யலாம் என்கிற தைரியம் அவர்களுக்கு இருக்கிறது. அவர்கள் வாழ்க்கை இனி என்னவாகும் என்பதைப் பற்றி அவர்களுக்குக் கவலை இல்லை. இப்படிப்பட்ட ஒரு கொடிய நோய் எப்படிப் பரவுகிறது என்பதையும் சிந்திக்க வேண்டியது நமது கடமை.

இட ஒதுக்கீடு அதற்கு சட்ட ரீதியான போராட்டம் அரசு நிறுவனங்கள் தனியார் மயமாகின்றன. ஆகவே, தனியார் நிறுவனங்களில் இட ஒதுக்கீடு வேண்டும் என்கிற போராட்டம் அதே நேரத்தில் சமூகத்தில் மக்களுடைய மனநிலை பிறழ்ந்து கொண்டு போகிறது. “இருட்டறையில் உள்ளதடா உலகம் ஜாதி இருக்கின்றதென்பானும் இருக்கின்றானே” (புரட்சிக்கவிஞர் பாரதிதாசன்) என்று பேசிய தலைமுறையிலிருந்து மாறி ஜாதி என்பது எங்கள் பெருமை என்று உயர் கல்வி நிறுவனங்களில் படித்தவர்கள் அவர்கள் பெயருக்குப் பின்னால் ஜாதியை அடையாளமாகப் போட்டுக் கொள்வதற்கான பிரச்சாரம் செய்யப்படுகிறது. இது தான் புயல் முகாம் வரைக்கும் கொண்டு போய் அவனைப் பிரித்து உட்காரச் சொல்கிறது. இப்படிப்பட்டச்சூழலில் நாம் வெளிப்படையாக அடைகின்ற வெற்றிகள் மட்டும் போதாது. சமூகத்தில் தொடர்ந்து பிரச்சாரம். பிரச்சாரம்.., பிரச்சாரம்…, எல்லோரும் கேட்பார்கள். தந்தை பெரியார் என்ன செய்தார் என்று பெரியார் இதைத்தான் பேசினார் பேசிக்கொண்டே இருந்தார். பெரியார் சாகும் வரை பேசிக் கொண்டிருந்தார். நாமும் மக்களிடத்தில் பேச வேண்டும். பேசிக்கொண்டே தான் இருக்க வேண்டும்.

இது சண்டைப் போட்டு தீரும் பிரச்சனை அல்ல. மக்களிடத்திலே தொடர்ந்து பிரச்சாரம் செய்ய வேண்டி இருக்கிறது. அரசுகளோடு பேச்சு வார்த்தை நடத்த வேண்டியது. நீதிமன்றங்களோடு போராட வேண்டியது. நீதி மன்றங்களில் நமக்கான பிரதிநிதிகள் இருப்பதற்கு போராட வேண்டியிருக்கிறது.

கடைசியாக ஒரு கருத்தை மட்டும் சொல்லி முடிக்கிறேன். சகோதரி புதிய மாதவி அவர்கள் நிறைய என்னைப் பற்றிப் பாராட்டிச் சொன்னார்கள். ஆனால் இந்தியா முழுக்க இருக்கின்ற பெண்கள். எழுத்தாளர்கள், கவிஞர்கள் வியந்து பாராட்டுகின்ற சிறந்த ஆளுமையான கவிஞர் புதிய மாதவி அவர்கள் என்னைப் பாராட்டியதற்கு நன்றி.

இன்றைக்கு இருக்கக் கூடிய நேர நெருக்கடியில் ஒரே ஒரு கருத்தினை மட்டும் தான் இங்கே பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன் நண்பர்களே, உச்சநீதிமன்றம் தினம் தினம் ஒரு தீர்ப்பை சொல்கிறது. ஆனால் அந்தத் தீர்ப்பில் எதுவுமே நமக்குச் சாதகமானது கிடையாது. அவர்கள் யாரைப் பற்றிக் கவலைப்படுவார்கள். உயர் ஜாதி மாணவர்களுக்கு இரண்டு சீட்டு போய் விட்டால் கவலைப்படுவார்கள். ஆனால் இத்தனையாயிரம் மாணவர்கள் இந்த தேர்வுகளால் பாதிக்கப்படுகிறார்கள் என்றால் அதற்கு நாங்கள் என்ன செய்ய முடியும்? ஒரே வார்த்தையில் சொல்கிறார்கள். ஏன் அந்த உச்சநீதிமன்றத்திலே இருக்கும் இத்தனை நீதிபதிகளில் ஒருவர் பிற்படுத்தப்பட்டவர். பிற்படுத்தப்பட்டவர்கள் எண்ணிக்கைக்கு இருப்பது ஒரே ஒருவர். தாழ்த்தப்பட்டவர்களுக்கு அதுவும் இல்லை. இப்படி ஒரு நீதிமன்றம் இருக்கிறது. அந்த நீதிமன்றத்தின் தலைமையில் தான் மாநிலங்களுக்கு நீதிபதிகள் நியமிக்கப்படுகிறார்கள். அவர்கள் தான் மக்களுக்கு கடவுள்களாக இருந்து நமது சட்ட உரிமைகளை எல்லாம் காப்பாற்றுகிறார்கள்.

அப்படியென்றால் எத்தனை இடத்தில் நம்முடைய போராட்டங்கள் நடக்க வேண்டுமாய் இருக்கிறது என்பதை பொறுப்போடு உணர்ந்து தோழர்கள் செயல்பட வேண்டும்.

நம்முடைய தலைவர்கள் ஒருவரை ஒருவர் எப்படி மதித்தார்கள். நமது தலைவர்கள் எப்படி மற்றவர்களுடைய உழைப்பை நம்முடைய சமுதாயத்திற்குப் பயன்படுத்தினார்கள். அவர்களிடம் இருந்து நாம் பாடம் கற்று தந்தை பெரியாரை, அண்ணல் அம்பேத்கர் அவர்களை மக்களிடத்தில் எதிர் எதிராக நிறுத்துகிற சுயநலவாதிகளை அடையாளம் கண்டு ஒரே அணியில் நிற்கின்ற போர் வீரர்களாக மாறினால் தான் நம்மால் சமூகநீதியை வெல்ல முடியும். ஜாதியை, தீண்டாமையை ஒழிக்க முடியும்.

நன்றி வணக்கம்.

Pin It