ஆங்கிலப் புத்தாண்டை நகரத்து நண்பர்களோடும் தமிழர் திருநாளாம் தைப்பொங்கல், மாட்டுப்பொங்கல் மற்றும் உழவர் திருநாள் ஆகியவற்றைக் கிராமத்து சொந்தங்களோடும் கொண்டாடிவிட்டு இப்பொழுது அவரவர்கள் வேலையில் மூழ்கி இருப்பீர்கள் என நினைக்கிறேன். உழவர்களின் அறுவடைத் திருநாளை, அவர்களின் வயலில் விளைந்த நெற்பயிரை அறுவடை செய்ததிலிருந்து கிடைத்த பச்சஅரிசியில் பொங்கல் வைத்து, கரும்பு , மஞ்சள் மற்றும் பூக்களை வைத்து குழந்தைகள், பெரியவர்கள், வாலிபர்கள், சொந்த பந்தங்கள் என அனைவருடனும் சேர்ந்து கொண்டாடி மகிழ்ந்ததை நினைக்கும்போது அந்த மகிழ்ச்சியை தக்கவைத்துக்கொள்ள வேண்டும் என்ற எண்ணம் நம் அனைவருக்கும் இயல்பாகவே எழும். ஆனால் இந்த மகிழ்ச்சியை எப்படி இழந்தோம்? கிராமத்தில் மனிதன் தரையோடு விளையாடி மகிழ்ந்ததை விட்டுவிட்டு இன்று கணினி, தொடுதிரைக் கணினி, தொடுதிரை செல்பேசி என திரையோடு விளையாடுவதால் மகிழ்ச்சியோடு ஆரோக்கியத்தையும் பறிகொடுத்துவிட்டான்.

கிராமத்தின் காடு மேடு வாய்கால் வரப்புகளில் பூத்துக்குலுங்கும் மலர்களைக் காணும்போது கிடைக்கும் மகிழ்ச்சியை வேறு எங்கு விலைகொடுத்து வாங்கி விட முடியும்? அவ்வாறு பூத்துக்குலுங்கும் பூக்களில், பல பூக்களின் பெயர்கள் இன்று நம் குழந்தைகளுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால் கபிலர் பாடிய குறுஞ்சிப் பாட்டு என்னும் சங்க இலக்கியத்தில் மட்டும் 99 பூக்களின் பெயர்களைக் குறிப்பிட்டுள்ளார் என்றும் இளங்கோவடிகள் பாடிய சிலப்பதிகாரத்தில் மட்டும் சுமார் 23 பூக்களைப் பற்றி பாடியுள்ளார் என்றும் இலக்கிய ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.

இன்று தாவரவியலையே முக்கியப் பாடமாக எடுத்து படிக்கும் மாணவர்கள் கூட ஒரு சில பூக்களின் படங்களை வரைந்து அதில் அல்லிவட்டம், புல்லிவட்டம், சூல், மகரந்தக் குழாய் என பாகங்களைக் குறித்து அதன் தாவரவியல் பெயரை எழுதுவதோடு சரி. அதையும் தாண்டி நிறைய பூக்கள் இருக்கிறது என்பதை தமிழர்களின் சங்க இலக்கியம் வாயிலாக அறியலாம். அந்தப் பூக்களின் பெயர்களை எல்லாம் தெரிந்துகொள்ள வேண்டுமானால் அந்த இலக்கியத்தை படித்திருக்க வேண்டும் ஆனால், அதனை குழந்தைகளுக்கு மிக எளிதாகவும் விளையாட்டாகவும் சொல்லிக்கொடுக்க தமிழர்கள் பயன்படுத்திய ஒரு விளையாட்டுதான் பூப் பறிக்க வருகிறோம் என்னும் விளையாட்டு.

இன்று நம்மில் பெரும்பாலோர் நமது குழந்தைகள் நன்றாகக் கல்வி கற்க வேண்டும் நல்ல மதிப்பெண்கள் பெறவேண்டும் என்று முக்கியமான கேள்விகளுக்கு பதில் சொல்லவும் பதில் எழுதவும் பயிற்சி கொடுக்கிறோம். பதில் எழுதத் தெரிந்தவனை புத்திசாலி எனக்கொண்டாடுகிறோம். உண்மையிலேயே பதில் சொல்வதை விட சரியான கேள்வி கேட்பதற்குத்தான் அறிவாளியாகவும் சிந்திப்பவனாகவும் இருக்க வேண்டும் என்பதை மறந்துவிடுகிறோம். குழந்தைகளைச் சரியான கேள்வி கேட்கவும் சரியான பதில் சொல்லவும் பல பூக்களின் பெயர்கள் மற்றும் அது எந்த மாதங்களில் பூக்கும் என்பதைப்பற்றி தெரிந்துகொள்ளவும் உதவும் விளையாட்டு தான் பூப் பறிக்க வருகிறோம் என்னும் விளையாட்டு. இனி அந்த விளையாட்டை எப்படி விளையாடுவது என்று பார்ப்போம்.

பூப் பறிக்க வருகிறோம் என்னும் விளையாட்டை பெரும்பாலும் பத்துவயதிற்கு உட்பட்ட பெண்குழந்தைகள் விளையாடுவார்கள் சில நேரங்களில் ஆட்கள் குறையும்போது ஆண்பிள்ளைகளும் கலந்துகொண்டு விளையாடுவது உண்டு. ”பூப் பறிக்க வருகிறோம்” என்ற விளையாட்டு கேள்வி பதில் வடிவில், ஒரு பாடலைப் பாடிக்கொண்டே மகிழ்ச்சியாக விளையாடும் விளையாட்டாகும். இந்த விளையாட்டை ஐந்து பேர், பத்து பேர் விளையாடலாம் என ஒரு எல்லைக்குள் இல்லாமல் எவ்வளவு பேர்கள் விளையாட விரும்பினாலும், அவர்களை சம எண்ணிக்கையில் இரண்டு குழுக்களாகப் பிரித்து, திறந்த வெளியில் ஒரு கோடு போட்டு, கோட்டின் இரண்டு பக்கத்திலும் எதிர்-எதிர் திசையில் ஒவ்வொரு குழுவினரை நிற்க வைத்து விளையாடலாம். விளையாடுவதற்கு முன்னால் ஒரு குழுவில் உள்ள ஒவ்வொருவருக்கும் ஏதாவதொரு பூவின் பெயரை வைத்துக் கொள்ள வேண்டும். அதேபோல் மற்றொரு குழுவில் உள்ள ஒவ்வொருவருக்கும் ஒரு மாதத்தின் பெயரை வைத்துக்கொள்ள வேண்டும். ஒவ்வொரு குழுவில் இருக்கும் அனைத்து குழந்தைகளும் தங்கள் கைகளைச் சங்கிலி போல் கோர்த்துக்கொண்டு கீழே வரும் பாடலை பாடிக்கொண்டே விளையாட வேண்டும்.

குழு 1: வருகிறோம்...வருகிறோம்....பூப் பறிக்க வருகிறோம்...

குழு 2: பூப் பறிக்க வருகிறீர் வருகிறீர் எந்த மாதத்தில் வருகிறீர்?

குழு 1: வருகிறோம் ......வருகிறோம்....... பூப் பறிக்க வருகிறோம்.வருகிறோம்..... வருகிறோம் ...............(எந்த மாதம் தேவையோ அதைச் சொல்ல வேண்டும்)மாதத்தில் வருகிறோம்.

குழு 2: பறிக்காதீர்..... பறிக்காதீர்..... அந்தப் பூவைப் பறிக்காதீர். பறிக்காதீர் பறிக்காதீர் இந்த மாதத்தில் அந்தப் பூவைப் பறிக்காதீர்.

குழு 1: வருகிறோம்... வருகிறோம்.... பூப் பறிக்க வருகிறோம்.....

குழு 2: வருகிறீர் வருகிறீர் பூப் பறிக்க வருகிறீர் ....எந்த மாதத்தில் வருகிறீர்?

குழு 1: பூப் பறிக்க வருகிறோம் வருகிறோம் ...............(எந்த மாதம் தேவையோ அதைச் சொல்லவேண்டும்) மாதத்தில்

குழு 2: என்னப் பூவைப் பறிக்க வருகிறீர் வருகிறீர் இந்த மாதத்தில்.

குழு 1:................(எந்த பூ தேவையோ அந்த பூவின் பெயரை சொல்ல வேண்டும்) பூவை பறிக்க வருகிறோம் வருகிறோம் இந்த மாதத்தில்.

குழு 2: அந்தப் பூவைப் பறித்துக் கொள்ளுங்கள் பறித்துக் கொள்ளுங்கள் இந்த மாதத்தில்.

என்று பாடி முடிக்கும் போது எந்த மாதம் மற்றும் பூவின் பெயர்வந்ததோ அந்த பூ மற்றும் மாதத்தின் பெயர்களைக் கொண்ட நபர்கள் முன்னால் வந்து தங்கள் கையை நீட்ட எதிர் அணியில் இருப்பவர்கள் தங்கள் பக்கம் இழுப்பார்கள். ஆனால் அவரவர்கள் அணியில் இருக்கும் மற்றவர்கள் அவருக்கு உதவியாக பின்னால் நின்று இழுக்க ஆரம்பிப்பார்கள். அப்படி இழுக்கும்போது, ஏதாவது ஒரு குழுவில் இருக்கும் முதல் நபர் கோட்டைத் தாண்டி மற்றொரு பக்கம் இழுக்கப்படுவார். அதன் பிறகு மீண்டும் முதலிலிருந்து விளையாட வேண்டும். அப்படி இழுக்கும்போது இழுக்கும் குழுவினர் கீழே விழுந்துவிட்டால், அவர்கள் எதிர் குழுவிற்கு ஒருவரை தர வேண்டும். இதேபோல் பல சுற்றுகள் விளையாடி இறுதியில் எந்தக் குழுவிலுள்ளவர்கள் எதிர் குழுவில் உள்ள அனைவரையும் தன் பக்கம் இழுக்கிறார்களோ அந்த குழுவே வெற்றி பெற்ற குழுவாகும். ஒரு மாதத்தின் பெயரைச் சொல்லும்போது அந்த மாதத்துடன் தொடர்புடைய பூவை மட்டுமே இழுக்க வேண்டும் என்பதையும் கவனத்தில்கொண்டு விளையாட வேண்டும்.

இதே பூப் பறிக்கவருகிறோம் என்னும் விளையாட்டை சற்று வேறு மாதிரியும் சில ஊர்களில் பிள்ளைகள் விளையாடுவதுண்டு. அதாவது, சின்ன பிள்ளைகள் இரண்டு பேர் எதிரும் புதிருமாகக் கை கோர்த்து வீட்டுக்கூரை போல மேலே தங்கள் கைகளை உயர்த்தி பிடித்தபடி பாடிக்கொண்டே நிற்பார்கள். இன்னொரு குழு அவர்கள் இருவருக்கும் மத்தியில் பாடிக்கொண்டே கைக்குள் நுழைந்து வெளியே வரவேண்டும். நுழையும் பெண்கள் எதிர்பாராத சமயம் பார்த்து கைகளை உயர்த்தி நிற்கும் பெண்கள், நுழையும் பெண்களில் ஒருவரை அவர்கள் கைகளுக்குள்ளாகப் பிடித்துக் கொள்வார்கள். அவ்வாறு பிடிக்கப்பட்ட பெண் ஆட்டத்திலிருந்து அவுட், வெளியேற வேண்டும். அவ்வாறு பிடிக்க முடியலைனா கை கோர்த்தவர்கள் இருவரும் அவுட்.

உள்ளே நுழையும் பெண்கள் இவ்வாறு பாடிக்கொண்டே நுழைவார்கள்

“பூப்பறிக்க வருகிறோம்

பூப்பறிக்க வருகிறோம்”

அதற்கு கை கோர்த்திருக்கும் இரண்டு பெண்களும் கீழ்க்கண்டவாறு படுவார்கள்.

“என்ன பூவைப் பறிக்கிறீர்?

என்ன பூவைப் பறிக்கிறீர்?

இனி ஒவ்வொரு பூவாக வரும்

சாமந்திப் பூ

மல்லிப் பூ

ரோஜாப் பூ

தாமரைப் பூ

அல்லிப் பூ

அரளிப் பூ

செம்பருத்திப் பூ

முல்லைப் பூ

பிச்சிப் பூ

என ஒவ்வொரு பூவாகச் சொல்லிக் கொண்டு வருவார்கள். அப்படி வருபவர்களை, எதிர்பாராத நேரம் பார்த்து அவர்களைப் பிடித்துக் கொள்வார்கள். இவ்வாறு விளையாடி மகிழ்ச்சியடைவார்கள்.

இப்போதெல்லாம் தொலைக்காட்சிகளும், இண்டர்நெட்டுகளும் குழந்தைகளை உட்கார்ந்த இடத்திலேயே சிறைபிடித்து விடுகின்றன. இது அவர்களுக்கு உடல் மற்றும் மன ரீதியான பாதிப்புக்களை ஏற்படுத்துகின்றன. அந்த நிலைமையை மாற்ற பெற்றோர்களும் பெரியோர்களும் நமது பாரம்பரிய விளையாட்டுக்களை நடத்தி மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். குறைந்த பட்சம் குழந்தைகள் தினம், பொங்கல் திருநாள் போன்ற தமிழர் பண்டிகைகளிலாவது நம் குழந்தைகளுக்கு நமது பாரம்பரிய விளையாட்டுக்களை விளையாடச் சொல்லிக்கொடுப்போம்.

பூப் பறிக்க வருகிறோம் என்னும் விளையாட்டின் பயன்கள்தான் என்ன?

இந்த விளையாட்டு உலகில் உள்ள பல பூக்களின் பெயர்களைத் தெரிந்து கொள்ளவும் அதிலும் குறிப்பாக ஒவ்வொரு மாதத்திலும் எந்தெந்த பூக்கள் சிறப்பு பெற்றவை என்பது பற்றிய தகவல்களையும் இந்த விளையாட்டின் மூலம் குழந்தைகள் தெரிந்து கொள்ள முடியும். குரு இல்லாமல் பாடும் குயில் போல, குழந்தைகளும் தங்களுக்குள் இருக்கும் பாடும் திறனையும் கேள்வி கேட்கும் திறனையும் பதில் சொல்லும் திறனையும் தாங்களாகவே வளர்த்துக்கொள்வதற்கு இந்த விளையாட்டு உதவுகிறது.

பெற்றோர்களே, நமது குடும்பம் என்னும் தோட்டத்தில் மலர்ந்த பூக்களான குழந்தைகளின் பொன்னான நேரத்தை தொலைக்காட்சியும், இன்டர்நெட்டும், வீடியோ கேம்களும் திருடிக்கொள்ள அனுமதிக்காதீர்கள். பூக்களும், பூக்களைப் பற்றி விளையாடித் தெரிந்து கொள்ளட்டுமே!

இன்னும் விளையாடலாம்