‘‘ஹலோ..! ஹலோ..! மாமா, நா முனுசாமி பேசுறேன்! அப்பா தவறிட்டார், தகவல் சொன்னாங்களா..!’’

 ‘‘மாப்பிள, எப்போ..! எப்படி..?’’

‘‘கொஞ்ச நாளா உடம்பு சரியில்லாம இருந்தார் காலைல இறந்துட்டார்...’’

‘‘சரி மாப்பிள எல்லாருக்கும் வருவது தான்; நாங்க வறோம் ஆக வேண்டியது கவனிங்க...’’

‘‘சந்துரு பொட்டி செய்ய சொல்லிட்டியா..! சொல்லிட்டேன்ண்ணா!’’

‘‘குழி வெட்ட ஆள் அனுப்பிட்டியா..! வெங்கடேஷ் மாமா போய் இருக்காருண்ணா..!’’

‘‘அண்ணா மோளத்துக்கு சொல்லணுமாண்ணா..!’’

‘‘இல்ல வேண்டாம் அவர்களை ஒரு வட்டத்துக்குள் அடைக்க வேண்டாம் ஒரு பகுத்தறிவுவாதியா நாம அத செய்யக் கூடாது..!’’

parai 450‘‘இல்லண்ணா போன வாரம் செல்வம் அப்பா இறந்த அப்போ மேல்சாதிக்காரன் ஊருக்குள பறையன் வரக்கூடாதுன்னு சொல்லி அவங்க வைக்கல அதனால த்தா கேட்டேன்..!’’

‘‘அப்படியா, சரி, நீ ஒன்னு பண்ணு நம்ம வண்டிக்கு சொல்லி நீயும் கூட போ போய் அவங்கள கூட்டிட்டு வா!’’

‘‘இப்போ கொள்கைன்னு சொன்னிங்க ண்ணா..!’’

‘‘எப்போ, இந்த சமூகம் அவனை அவன் செய்யும் தொழிலை வைத்து பிரிக்கிறதோ; அப்போ நாம அந்த தொழிலை வைத்து அவர்களை இணைக்க வேண்டும்! நாம அவரோட தொழிலை  அவமதிக்கல அவர்களோட உரிமைய மீட்டு எடுக்கணும் நீ போய் கூட்டிட்டு வா பாத்துக்கலாம்..!’’

‘‘அண்ணா, மாமலாபுரத்துல ஒரு சாவு உங்கள கூட்டிட்டு வர சொன்னாங்க..!’’

‘‘எங்க சாமி! போன வாரம் எல்லாம் பிரச்சன பண்ணாங்க நாங்க எங்க வரது, நாங்களே கிழிஞ்ச பறைய வச்சி அடிச்சிட்டு இருக்கோம்! ஏதாவது பிரச்சன வந்தா என்ன பண்றது சாமி! ஊருக்குல்லையே விட மாட்டணு இருக்காங்க, அங்க எப்படி வந்து வாசிக்கிறது..!’’

‘‘முனுசாமி அண்ணா த்தா கூட்டிட்டு வர சொன்னாரு..! நா அவருக்கே போன் போட்டு குடுக்குறேன் நீங்களே பேசிக்கோங்க...’’

‘‘அண்ணா, அவரு வர தயங்கறாரு! பிரச்சன வருமோன்னு பயப்படறாரு..! நீங்களே பேசுங்க..!’’

‘‘சரி குடு!’’

‘‘ஹலோ சாமி! நா முருகன் பேசுறேன் சாமி!’’

‘‘முருகா, நீ ஒண்ணும் பயப்படாத நா பாத்துக்குறேன் நீ தம்பிகூட கிளம்பி வா உங்க பசங்கள கூட்டிட்டு! இவ்வளோ பிரச்சனையை பார்த்தும் கூப்பிடுறோம்னா! உங்களுக்கான உரிமைய வாங்குறதுக்கு த்தா..! அத புரிஞ்சி நடந்துக்கோ..!’’

‘‘சரிங்க சாமி! நீங்க சொன்னா சரியா தா இருக்கும்!’’

‘‘ஹலோ..! அண்ணா நாங்க கிளம்பி வந்துட்டோம் ஊர் எல்லைல இருக்கோம்! இங்க நாலு பேரு இருக்காங்க விட மாட்டங்கிறாங்க... ஆமா ணா யாருன்னு பேரு தெரியல ஆனா நம்ம ஊருக்காரங்க த்தா..!’’

‘‘அங்கையே இருங்க நாங்க வராங்க...! இல்ல வேணாம் அவங்க போய்ட்டாங்க...’’

‘‘முருகா நீங்க அடிக்க ஆரம்பிங்க..!’’

கரியா..! வெள்ளையா..! பச்சையப்பா எல்லாம் வாங்க டா..! பறைய காச்சுவோம்..!

‘‘முருகா எப்போவும் வர சத்தத்தோட அதிகமா இருக்கணும்; உங்களோட உரிமைய மீட்டு கொடுக்குற சத்தமா இருக்கணும்..!’’

‘‘விஜி சத்தம் எல்லாருக்கும் கேக்குற மாரி மைக் கொண்டு வைடா பக்கமா;’’

‘‘சரி மாமா..!’’

‘‘இந்தா பாரு முனுசாமி நீங்க பண்றது கொஞ்சம்கூட சரியல்ல பாத்துக்கோங்க அவங்க தாழ்ந்த சாதி; நம்மள விட கீழ பொறந்தவங்கனு த்தா ஒதுக்கி வச்சி இருக்காங்க; ஊருல யாருமே வைக்காதபோது நீங்க மட்டும் வைக்கறது சரியல்ல முனுசாமி.’’

‘‘மாமா நாங்க ஊர மதிக்கிறோம்! உங்கள மதிக்கிறோம்! மனிதத்த மதிக்கிறோம்! அதுல எங்களுக்கு எந்த மாற்றுக்கருத்தும் இல்ல சரியா; ஒண்ண நல்லா புரிஞ்சிக்கோங்க; நமக்குக் கீழ இருக்கறவ தாழ்ந்த சாதி சாதின்னு இன்னும் எத்தனை காலத்துக்கு சொல்லிட்டு இருக்கப் போறீங்க..! இப்படிச் சொல்ல உங்களுக்கு மேல ஒருத்தன் இருக்கான் என்பதனை எப்போ உணரப் போறீங்க..! அவங்களோட பார்வையில நாமலா சூத்திரர்கள் தேவிடியா மகன் என்பதனை எப்போ உணரப் போறீங்க..!’’

‘‘இந்தா பாரு முனுசாமி ஊரு சனத்தோடு ஒட்டி வாழனும் அப்போ த்தா செத்தா அங்காளி பங்காளி ன்னு நாலு பேரு வந்து தூக்குவாங்க, இப்போ அவங்கள அனுப்ப முடியுமா முடியாதா..!’’

‘‘முடியாது மாமா..!’’

‘‘இன்னொரு முறை நொட்டுன்னு கேட்டுச்சின்னா நாங்க இந்த சாவுல இருக்க மாட்டோம்!’’

‘‘சரி மாமா, நீங்க கிளம்புங்க இப்படி ஒரு சொந்தம் எங்களுக்கு அவசியம் இல்ல; எங்க அப்பன எப்படி எங்களுக்கு அடக்கம் பண்ணனும்னு எங்களுக்குத் தெரியும்.’’

‘‘கடவுள் நம்பிக்கை இல்லாத பசங்களுக்கே இவ்வளோ ரோசம் இருக்குன்னா நமக்கு எவ்வளோ ரோசம் இருக்கு; இவனுங்க ஒட்டும் வேனாம் ஒரவும் வேனாம் சின்னப்பாட்டி பசங்க பெரிய  பாட்டி பசங்க எவனும் கலந்துக்காதிங்க கிளம்புங்கடா... வேணும்னா நாம தனியா காரியம் செஞ்சிக்கலாம்...’’

‘‘என்ன தோழர் உறவுகளை பகைச்சிட்டிங்க..! கொஞ்சம் பொறுமையா இருந்திருக்கலாம்..!’’

‘‘இல்ல மணி நாம மனித உரிமைக்காகப் போராடுறவங்க; எப்போதும் கொள்கையில சமரசம் இருக்கக் கூடாது..! நாமளே முன்னோடியா இல்லனா நம்ம இவ்வளோ நாள் இயக்கத்துல பயணிச்சி என்ன பிரயோசனம் இருக்கப் போது..! எப்போ ‘பறையனுக்காக சொந்தத்த பகச்சிக்கிறியோ அப்போவே எங்க பார்வையில நீ செத்துட்ட - உனக்கும் சேர்த்தே காரியம் செஞ்சிக்கிறோம்’னு உறவுகள் சொல்லுச்சோ அப்போவே நாம நம்ம கொள்கையில உறுதியா இருக்கோம்னு அர்த்தம்; அதை தொடரணுமில்ல..!’’

‘‘ஆமா தோழர், கருப்புசட்டை போட்டுட்டு சுத்துதுங்க; பறையர் ஊட்டுல கைய நனைக்குதுங்க இதுங்கலா எங்க உருப்படப் போகுதுங்கனு சொன்ன சனங்க தான நம்ம மக்கள் இதுல ஆச்சரிய பட என்ன இருக்கு தோழர் நாம தா அவங்கள புரிய வைக்கனும் முயற்சிப்போம்..! ’’

‘‘சரி தோழர் அண்ணனுக்காக த்தா அவங்க முறைப்படி அடக்கம் செய்ய அனுமதித்தோம் இப்போ அதபத்தி கவல படவேண்டாம் இயக்க முறைப்படி அடக்கம் செஞ்சிடலாம். தோழர்களை முன்னெடுக்க சொல்லுங்க..’’

‘‘சரி தோழர் அப்படியே ஆகட்டும்..!’’

‘‘முருகா நீங்க பறைய அடிங்க இருக்கவங்க இருக்கட்டும்; விரும்பாதவங்க கிளம்பட்டும்..!’’

‘‘அய்யா சாமி எங்களுக்காக நீங்க ஏன் சாமி உங்க சொந்த பந்தங்கள இழக்கிறீங்க..!’’

‘‘அப்படி லா ஒண்ணுமில்ல நீங்க அடிங்க..!

( பறை இசை ஒலிக்க அங்க அங்க பிரிஞ்சி கடந்த மக்கள் ஒரே இடத்துல சேரத் துவங்க... பறை இசை கருவிகளை நெருப்பில் பதமாக மெருகேற்ற மெருகேற்ற முருகன் சாவுக்கு வந்தவர்களிடம் கையை நீட்ட )

‘‘டேய் பற பசங்களா..! நீங்க வேணாம்னுத்தா டா உங்கள ஊருக்குல்ல நல்லது கெட்டதுக்கு கூப்பிடாம இருந்தும்; இந்த கருப்பு சட்டக்காரங்க கூப்பிட்டானுங்கனு வந்துட்டு எங்ககிட்டையே காசு கேக்குறீங்களா..!’’

‘‘எங்கள பொறப்ப வச்சி பிரிச்சது மட்டும் இல்லாம..! சேரிக்காரங்கனு ஒரு முத்திரையும் குத்திட்டு வச்சது மட்டுமில்லாமல் வருச கணக்கா இதே தொழில செய்ய வச்சிட்டு இப்போ அனுமதிக்க மாட்டனு சொன்னா என்ன சாமி அர்த்தம்...!

‘‘ஆமா, டா காதல் மயிறுனு எங்க வீட்டு பொண்ணுங்கள கூட்டிட்டு ஓடிப்போயிருவாங்க உங்க வீட்டு பசங்க..! நாங்க பாத்துட்டு சும்மா இருக்கனுமா..! எங்க சாதி பெருமைய கெடுக்குற உங்கள எதுக்குடா ஊருக்குல்ல உடணும்..!’’

‘‘அய்யோ! சாமி “

‘‘முருகா என்னடா சத்தம்..!’’

‘‘ஒண்ணும் இல்ல சாமி..!’’

‘‘முருகா அவங்களா பணம் கொடுத்தா மட்டும் வாங்கணும்; நீங்களா கேக்க கூடாது..! இங்கஉங்கள கூப்பிட்டது எதுக்காகனு புரியும்னு நினைக்கிறேன்.’’

‘‘சரி சாமி நீங்க சொன்னா சரியாத்தா இருக்கும்..!’’

‘‘முருகா முதல்ல சாமி மயிறு மண்ணாங்கட்டினு கூப்பிடறத நிறுத்து; தோழர்னு கூப்பிடு இல்லன்னா அண்ணானு கூப்பிடு மரியாதை தரேன்னு உங்கள நீங்க தாழ்த்திக்கொள்வத நிறுத்துங்க முதல்ல..!’’

‘‘முனுசாமி அண்ணா தோழர்கள்லா வந்துட்டாங்க அப்பாவ அடக்கம் செஞ்சிடலாமா..!’’

‘‘சரி ஏற்பாடு பண்ணுங்க தோழர்லா வரச் சொல்லுங்க...’’

“வீர வணக்கம்..! வீர வணக்கம்..!

உழைப்பாளி நஞ்சப்பனுக்கு வீரவணக்கம்..!

வீர வணக்கம்..! வீர வணக்கம்..!

உழைப்பாளி நஞ்சப்பனுக்கு வீரவணக்கம்..!

கொள்கை கண்மணிகளை தந்திட்ட

உழைப்பாளி நஞ்சப்பனுக்கு வீரவணக்கம்..!

வீர வணக்கம்..! வீர வணக்கம்..!

வீர வணக்கம் செலுத்துகின்றோம்..!’’

என்ற முழக்கமும் பறை இசை முழக்கமும் விண்ணை எட்ட மக்கள் கூட்டத்திற்கு புதிய முறையாக இருந்தது..! சாங்கிய சம்பிரதாயம் இல்லாமல் அடக்கமா..! என்ற வியப்பில் மக்கள் பார்க்க தோழர்களே நஞ்சப்பன் அவர்களை அடக்கம் செய்தனர்...

முனுசாமி பொதுமக்கள் மத்தியில் நாங்கள் பறையை இசைக் கருவியாக மட்டுமே பார்க்கிறோம்..! அதனை வாசிப்பவர்களை இசைக் கலைஞர்களாக மட்டுமே பார்க்கிறோம்..! பொதுவாக கொள்கை ரீதியாக இறப்பு நிகழ்ச்சியில் இவர்கள் பறை வாசிப்பதை ஏற்பதில்லை; மாறாக அவர்களை நீங்கள் அவர்கள் செய்யும் தொழிலை வைத்துப் பிரிக்க ஒதுக்க நினைப்பதாலே எதிர்வினையாக ஊரை எதிர்த்தோம்..! உறவை எதிர்த்தோம்..! ஊரை விட உறவை விட மனித உணர்வே முக்கியம்..! - என்று தன்னுடைய தந்தையின் இரங்கல் உரையை முடித்தார் முனுசாமி.

(விரைவில் வெளிவர இருக்கும் “தினக்கூலி” புத்தகத்தில் இருந்து)

Pin It