நாட்டின் மக்களாட்சி ஜனநாயகத்திற்கு நேரெதிராக உள்ளதே பார்ப்பனிய ஜனநாயகம் இதனை பற்றிய பார்வையை செலுத்த வேண்டிய காலத்தின் தேவை உள்ளது. ஏனெனில் நாம் தேவையென கருதுகின்ற மக்களாட்சி ஜனநாயகத்தை சிறிது சிறிதாக நசுக்குகின்ற வேலைகளைத் திட்டமிட்டு செய்து வரும் சித்தாந்தமே பார்ப்பனியத்தின் ஜனநாயகமாக உருக்கொண்டுள்ளது.
பாகுபாட்டின் தர்மமே நீதியாகும்
ஜனநாயகம் நாட்டில் தழைத் தோங்கிறது என்பதை சட்டத்தின் வழியான பாகுபாடற்ற நீதியே உணர்த்தும். ஆனால் இங்கு அட்மின்களுக்கும், சேகருக்கும் காரைக்குடி காவி பயங்கரவாதிக்கும் இருக்கின்ற கருத்துரிமை மற்றவர்களுக்கு இல்லை. மாறாக ஜனநாயகம் அங்கீகரித்திருக்கும் கருத்துரிமை வழியே பேசுவதும், எழுதுவதும், இயங்குவதுமான அனைத்துமே பார்ப்பனிய ஜனநாயகத்திற்கு ஏற்புடையதாக இல்லை என்பதால் மக்களாட்சி ஜனநாயகத்தைச் சுவாசிக்க விரும்புபவர்கள் மீது ஒடுக்குமுறைகளை ஏவி தன்னுடைய அதிகாரத்தை நிலைநிறுத்துகிறது பார்ப்பனிய ஜனநாயகம்.
பார்ப்பனியம் தன்னுடைய பார்ப்பன ஜனநாயகத்திற்கு எதிரானவற்றையும் தன்னுடைய சமூகத்திற்கு சாதகமானவற்றையும் தொகுத்து எவரும் கண்டிராத ரிஷிகள் படைத்ததாகவும் இது ஈராயிரம் ஆண்டுகளுக்கு முந்தையது எனவும் மனுநூலை பரிந்துரைத்து இதுதான் முதன்மை சட்டம் என்கிறது. இப்போதெல்லாம் மனு நூலை படித்து யார் அதன்படி நடக்கிறார்கள்? அதன்படி நடக்காததினால் தான் நாட்டில் பேரழிவுகள் ஏற்படுகின்றன என்று சொல்பவர்களும் உண்டு, நீதி வழங்குமிடத்தில் இருப்பவர்கள் சிலரே கூட தீர்ப்புரைகளின் போது மனு நூலை மேற்கொள் காட்டிய நிகழ்வுகளும் நடந்துள்ளது.
மனுநூலை பரிந்துரைப்பவர்கள் நாட்டில் இருப்பதனால்தான் நீதி வழங்குமிடத்தையே அவதூறு பேசினால் கூட பார்ப்பான் தண்டனைக்கு உள்ளாவதில்லை அதே வேளையில் மனுநூலின்படி பார்ப்பானை ஏசுகின்ற சூத்திரன் வாயில் பழுக்க காய்ச்சிய இரும்பு கம்பியை நுழைத்துக் கொல்ல வேண்டுமே என்ற கடப்பாடு கொண்ட நீதி அதிகார மையம்தான் தடுக்கி விழுந்தால் தண்டனை சட்டத்தையும் அமைதியாகப் பேசினால் கூட அரச பயங்கரவாத சட்டங்களையும் ஏவி தன்னால் இயன்றளவு மனுநூலின் மூலம் பார்ப்பன ஜனநாயகத்தை காக்கின்றனர்.
சமத்துவமின்மையே சனாதனதர்மம்
ஆலயமானாலும் அடுப்பங்கரையானாலும் அவரவருக்கான இடங்களை வகுத்து வைத்திருக்கும் சமத்துவமின்மையின் உறைவிடமே சனாதன தர்மம். ஜனநாயகம் பெரியதா? அல்லது சனாதன தர்மம் பெரியதா? எனக் கேட்டால் சனாதன தர்மத்தையே உயர்வு என போற்றுபவர்களே ஜனநாயகத்தின் மீதான நம்பிக்கையாளர்களை ஜனநாயக விரோதிகள் என்கின்றனர். இவ்விடத்தில் தான் ஜனநாயகமென்பது எதுவென சனாதனவாதிகள் நம்புகிறார்கள் என்பதை அளவிட முடியும். சனாதனத்தை நம்புகிறவர்களே நாங்களெல்லாம் சமத்துவம் கேட்க கூடாது என தங்களின் அடிமை விலங்கை இறுகப்பற்றிக் கொள்கிறார்கள் “தான் அடிமைதான் என நம்புகின்ற அடிமையே சிறந்த அடிமை” என அம்பேத்கர் சொன்னவற்றை இங்கே பொருத்திப் பார்க்க வேண்டும் ஜனநாயகம் அடிமை விலங்கை உடைக்க முற்படும்போது சனாதனத்தை இறுக பற்றுவர்களே ஆகச் சிறந்த அடிமை எனலாம்.
பெண்களுக்கான ஜனநாயக நீதியை ஏனைய பெரும்பான்மை பெண்களே ஏற்க மறுக்கிறார்கள். பேரழிவுகளை சனாதன தர்மத்தினை மீறியதன் விளைவாக சித்தரித்து அச்சமூட்டுகிறார்கள். அச்சத்தை மறுத்து அடிமை விலங்கை உடைத்து ஜனநாயகத்தை நிலை நிறுத்த முயன்ற மதிப்பிற்குரிய பெண்களை பெரும்பாலான பெண்களே ஏற்கவியலாததற்கு காரணம் சனாதனமும் ஆணாதிக்கமும் ஏற்படுத்திய அச்சமே தவிர பெண்களின் சுதந்திரத்தை அவர்களே விரும்பாதவர்களில்லை என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். சனாதனத்தை தீவிரமாக பின்பற்றி பைத்தியகாரராக உளறும் பூரி சங்கராச்சாரி நிஸ்சாலனந்த் தலித் மக்களை கோவிலுக்குள் நுழைய தடை விதிக்க வேண்டும் என்கிறார். இதுபோன்ற ஆட்களையெல்லாம் அங்கீகரிக்கவும் இவர்கள்மீது சட்ட நடவடிக்கை எடுக்காததற்கும் காரணம், பெண்களையும் சூத்திரர்களையும் ஒடுக்குகின்ற பார்ப்பன ஜனநாயகத்தை மக்களாட்சி ஜனநாயகமாக அதிகார மையங்களே நம்புவதினால் தான்.
ஊடக வழி இருட்டடிப்புகள்
பாலின சமத்துவ நீதிக்கு எதிரானதாக உள்ள இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 497ஐ நீக்கினால் அடுத்தநாள் காலை வெளிவந்த பார்ப்பனப் பத்திரிகைகள் கள்ளத் தொடர்பை அங்கீகரித்தது உச்சநீதிமன்றம் என செய்தி வெளியிடுகிறார்கள் பத்திரிகைகளை படித்துதான் செய்திகள் வெகுமக்களிடம் பரவும் என்பதை தெரிந்தும் இதுபோன்ற செயலை செய்த பார்ப்பன ஊடகங்கள் உச்சநீதி மன்றத்தின் முதல் தீர்ப்பினை கள்ளத்தொடர்புக்கு ஆதரவான தீர்ப்பு எனவும், இரண்டாவது தீர்ப்பு இந்து மதம் மீதான தலையீடு என்றும் செய்திகளை வெளியிட்டு இரண்டு வரலாற்று மிக்க சிறப்பு தீர்ப்பையும் ஊடகத்தின் வழியாக இருட்டடிப்பு செய்து, இதன் மூலமாக நீதிமன்றத்தின் ஒட்டுமொத்த தீர்ப்புகளையும் தவறான தீர்ப்பு வழங்கும் மன்றமாக மக்களிடம் சித்தரித்துள்ளனர்.
ஒருபுறம் ஜனநாயக உரிமைக்காக மக்கள் போராடுகின்ற வேளையில் அதனை மழுங்கடிப்பதும் மற்றொருபுறம் தங்களின் டி.ஆர்.பி. உயர்வுக்காக பாடுபடுவதையும், அரசு விளம்பரங்கள் மூலமாக தங்கள் ஊடகத்திற்கு கிடைக்கும் வருவாயைக் கையைவிட்டு போகாதபடி செய்திகளையும் நிகழ்ச்சிகளையும் ஒளிபரப்பு செய்கின்றனர். இரவு நேர விவாத அரங்கில் பார்ப்பன ஊடகங்கள் நினைப்பதை மட்டுமே பேசுகின்ற நபர்களுக்கு தொடர் ஆதரவளிப்பதும் மற்றவர்கள் புறக்கணிக்கபடுவதுமான செயலும், அவ்விதமாக ஆதரிக்கப்படும் நபர்கள் தினந்தோறும் தலைப்புகளுக்கு ஏற்றபடி சமூக சேவகர்கள், அரசியல் விமர்சகர்கள் என மாறுபட்ட பல அடையாளங்களை பூசிக் கொள்வதுமான நிகழ்வுகள் நடைபெறும். எந்த அடையாளம் பூசிக் கொண்டாலும் அவர்கள் முன்நிறுத்தி பேசுவதெல்லாம் சனாதன தர்மம் மட்டுமே. இவை அனைத்தையும் திட்டமிட்டே பார்ப்பனிய ஊடகங்கள் அரங்கேற்றுகின்றன.
ஜனநாயகம் தழைக்க
பார்ப்பனிய ஜனநாயகம் மக்களாட்சி ஜனநாயகமாகவும், பார்ப்பனிய நலன் சார்ந்தவை பொது நலனாகவும் தேச நலனாகவும் பார்க்கப்படுகிறது. இவை தங்களை நிலைநிறுத்திக் கொள்ள சட்டம், நீதி அமைப்பு, மதநூல்கள், ஊடகம் அனைத்தையும் கருவியாகப் பயன்படுத்துகின்றன. இதனைப் புரிந்து கொள்ளாத மக்கள் இருக்கும் வரை கருவிதான் மக்களை இயக்குமே ஒழிய, மக்களின் அறிவு எதற்கும் பயன்படாது.
இக்கருத்தை தந்தை பெரியார் அவர்கள் இவ்வாறு வெளிப்படுத்துகிறார்.
“இந்து மதம் என்பதற்கான எந்த ஆதாரமும் இல்லை அதற்கு எந்த முறையும் செயல்திட்டமும் கிடையாது பார்ப்பன சக்திக்கும் பார்ப்பனரல்லாதவர்களின் முட்டாள் தன்மைக்கும், மானமற்ற தன்மைக்கும் ஏற்ப அவ்வப்போது உண்டாகும், உண்டாகிக்கொள்ளும் திட்டங்களும் கருத்துக்களுமேயாகும் அதுவும் நேரத்திற்கு ஒரு விதம், நாட்டுக்கு ஒருவிதம், ஊருக்கு ஒருவிதம் சமயத்திற்கு ஒருவிதம், சந்தர்ப்பத்திற்கு ஒருவிதம் ஆளுக்கொருவிதம் என மாறும். இராஜாஜி பஞ்சமர் வீட்டில் சாப்பிடுவார் சங்கராச்சாரி பஞ்சமர்களை கண்டதற்கு குளிப்பார்”
ஈரோட்டு கைத்தடி கொண்டுதான் பார்ப்பனிய ஜனநாயகத்தை ஒழித்து மக்களாட்சி ஜனநாயகத்தை மீட்க முடியும்.