சென்னை சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் அங்கத்தினர்களைப் பற்றி கக்ஷி பிரித்தெழுதுவதன் மூலம் பார்ப்பனக் கக்ஷிக்கு அதிகமான ஆள்கள் தெரிந்தெடுக்கப்பட்டிருப்பதாய் பொது ஜனங்களையும், சர்க்காரையும் ஏமாற்றுவதற்காக ‘சுதேசமித்திரன்’, ‘இந்து’, ‘சுயராஜ்யா’ முதலிய பார்ப்பனப் பத்திரிகைகள் செய்துவரும் கண் கட்டு ஜால வித்தைகள் கணக்கு வழக்கு இல்லை. இதுகளை நம்பி ஏதோ சில பாமர ஜனங்கள் ஏமாந்து போகக்கூடுமே தவிர யாரை ஏமாற்றுவதற்காக இப்பார்ப்பனப் பத்திரிகைகள் இஜ்ஜால வித்தைகள் செய்கின்றனவோ அவர்கள், அதாவது சர்க்காரும் பார்ப்பனரல்லாத சட்டசபை அங்கத்தினர்களும் ஒருக்காலமும் ஏமாறப் போவதில்லை என்பது உறுதி.
முதலாவதாக ஒரு விஷயத்தை சந்தோஷத்தோடு தெரிவித்துக் கொள்ளுகிறோம். அதாவது, நமது நாட்டுப் பார்ப்பனர் தங்களைத் தவிரவும் தங்களது அடிமைகளைத் தவிரவும் வேறு ஒருவரையும் கிட்டத்தில் அணுகவொட்டாத மாதிரியில் சுயராஜ்யக் கட்சி என்பதாக ஒன்றை ஏற்படுத்திக் கொண்டு அநேக பார்ப்பனரல்லாத அரசியல் பாஷாண்டிகளின் ஆதரவையும் விலை கொடுத்து வாங்கி அதனா லேயே பார்ப்பன ஆதிக்கத்தை நிலை நிறுத்திவிடலாம் என்பதாகக் கருதி பொய் அமக்களம் செய்து வந்த சுயராஜ்யக் கட்சி என்கிற விஷக் காற்று இந்த தேர்த லில் தலைக் காட்டாமல் ஒழிந்து போய்விட்டது என்பதும் அதை நமது பார்ப்பனர்களே வாயினால் சொல்லிக் கொள்ளக்கூட வெட்கப்படும் படியாய் விட்டதென்பதும் உறுதியாகிவிட்டது. எப்படியெனில் மற்ற மாகாணங்களைப் பற்றி தேர்தல் விஷயங்களை எழுதுகிறபோது மாத்திரம் சுயராஜ்யக் கட்சி, சுயேச்சைக் கட்சி என்று எழுதுகிறார்களே தவிர நமது மாகாணத்தைப் பற்றி எழுதும் போது சுயராஜ்யக் கட்சி என்பதை விட்டு விட்டு காங்கிரஸ் கட்சி, சுயேச்சைக் கட்சி, ஜஸ்டிஸ் கட்சி என்று எழுதுகிறார்கள்.
தேர்தல் ஆரம்ப காலத்தில் அபேட்சகர்களைப் பொருக்கி எடுத்த காலத்தில் காங்கிரஸ் கட்சியாக நிறுத்தப்பட்ட அபேட்சகர்கள் எத்தனைப் பேர்? அவர்களில் காங்கிரஸ் கொள்கைப்படி நிபந்தனைகளில் கையெ ழுத்து போட்டு, காங்கிரஸ் நிபந்தனைப்படி ஆயிரம் ஆயிரம் ரூபாய் வீதம் டிபாசிட் கட்டி நின்றவர்கள் எத்தனைப் பேர்? இவர்களில் ஜெயித்தவர்கள் எத்தனைப் பேர்? தோற்றவர்கள் எத்தனைப் பேர் என்று கணக்குப் பார்த்தால் தெரியவரும். இவர்களில் பார்ப்பன காங்கிரசு தீர்மானப்படி உத்தியோகம் கிடைத்தால் ஒப்புக்கொள்ள சம்மதமில்லாதவர்கள் எத்தனைப் பேர்? சட்டசபையில் ஒத்துழையாமை செய்யப் போயிருப்பவர்கள் எத்தனைப் பேர்? மகாத்மா சொல்வது போல் காங்கிரஸ்காரர்கள் எத்தனைப் பேர்? 4 அணா சந்தா பணம் கொடுத்து காங்கிரஸ் மெம்பர்கள் ஆனவர்கள் எத்தனைப் பேர்? என்று கணக்குப் பார்த்தால் இக்கட்சி ஜாலத்தின் ரகசியம் தெரியும். தாங்கள் இதுவரை தெரிந்தெடுக்கப்பட்டதாய் எழுதிக்கொள்ளும் பெயர்களையே ‘இந்து’ ஒரு விதமாகவும் ‘சுதேசமித்திரன்’ ஒருவித மாக வும், ‘சுயராஜ்யா’ ஒரு விதமாகவும் கட்சிப் பெயர்கள் எழுதி வருகின்றன. ‘சுதேசமித்திரனே’ ஒருவருக்கே ஒரு நாளைக்கு ஒரு கட்சிப் பெயரும், மற்றொரு நாளைக்கு மற்றொரு கட்சிப் பெயரும் கொடுக்கிறது. ஸ்ரீமான் பானோஜி ராவ் என்பவரைப் பற்றியும் இன்னும் சிலரைப் பற்றியும் மாறிமாறி எழுதி வருகிறது. இது இப்படி இருந்தாலும் காங்கிரஸ் கட்சி என்கிற தலைப்பில் மித்திரனும், இந்துவும், சுயராஜ்யாவும் பிரசுரித்திருக்கும் நபர்கள் சர்க்காரிடம் அபேட்சக நியமனச் சீட்டுகள் கொடுக்கும்போது அவர்கள் கலெக்டரிடம் சொன்ன கட்சி எது என்று பார்த்தால் இவற்றுள் 4 -ல் ஒரு பங்காவது சுயராஜ்யக் கட்சியா யிருக்குமா அல்லது காங்கிரஸ் நிபந்தனைப் படி கையெழுத்திட்டு பணம் கட்டியவர்களாயிருக்குமா? என்பது தெரியும்.
அல்லாமலும் காங்கிரஸ் கட்சிக்கு 34 பேர்கள் என்று போட்டுக் கொண்டதில் இவ்வளவு புரட்டு இருந்தாலும் காங்கிரஸ் கட்சிக்கு கொள்கை என்ன? அவர்கள் சட்டசபையில் செய்ய உத்தேசித்திருக்கும் வேலை என்ன? என்பது யாருக்காவது தெரியுமா? அல்லது “காங்கிரஸ்”கட்சி மெம் பர்களுக்காவது தெரியுமா?
குரங்காட்டி குரங்குகளை ஆட்டுவது போல் ஸ்ரீமான் சீனிவாசய் யங்காரான குரங்காட்டி உத்தியோகம் சம்பாதித்துக் கொடுப்பேன் என்கிற தடியை கையில் வைத்துக் கொண்டு ‘காங்கிரஸ் கட்சி’ சட்டசபை மெம்பர் களான குரங்குகளை தன்னிஷ்டப்படி உட்கார், எழுந்திரு, சட்டசபையை விட்டு வெளியில் வா, உள்ளே போ என்பதான கரணங்களைப் போடச் சொல்வதல்லாமல் வேறு என்ன காரியம் காங்கிரஸ் திட்டமாக நடத்தப் பட்டது? இது தவிர சுயேச்சைவாதிகள் என்பதற்காவது பொருள் என்ன? பார்ப்பனர் கட்சி மூலம் உத்தியோகம் கிடைப்பதானால் அவர்களோடு சேர்ந்து கை தூக்கவும் பார்ப்பனரல்லாதார் கட்சி மூலம் உத்தியோகம் கிடைப்பதானால் அவர்களோடு சேர்ந்து கை தூக்கவும் அல்லாது அவர் களுக்கு ஏதாவது கொள்கை உண்டா? இது தவிர ஜஸ்டிஸ் கட்சிக்கு குறைந்த எண்ணிக்கை போட்டிருப்பதால் அக்கட்சிக்கு என்ன நஷ்டம்? ஜஸ்டிஸ் கட்சி அல்லாதாரெல்லாம் அக்கட்சி கொள்கைக்கு விரோதம் என்று அருத்தமா?
ஜஸ்டிஸ் கட்சி கொள்கையும் திட்டமும் என்ன? முறையே பார்ப்பனரல் லாதார் முன்னேற்றமும் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவமும் தானே. இதற்கு விரோதமாக ‘காங்கிரஸ் கட்சியைச்’ சேர்ந்த பார்ப்பனரல்லா தாரிலும் சுயேச்சைக் கட்சியைச் சேர்ந்த பார்ப்பனரல்லாதாரிலும் எத்தனைப் பேர் இருக்கி றார்கள் என்று சொல்ல முடியுமா? ஏறக்குறைய இரண்டு அல்லது மூன்று பார்ப்பனரல்லாதார் தவிர மற்றபடி அதுகளிலுள்ள எல்லா பார்ப்பன ரல்லாதாரும் இக் கொள்கைகளை ஒப்புக் கொண்டவர்களே தவிர வேறில்லை. ஆகையால் பார்ப்பனர்களின் கட்சி ஜாலத்தைப் பற்றி யாரும் ஏமாந்து போய் கவலைப்பட வேண்டியதில்லை. தமிழ்நாட்டில் உள்ள தெல்லாம் இரண்டே கட்சி. ஒன்று பார்ப்பன ஆதிக்கத்திற்கு பாடுபடும் கட்சி, மற்றொன்று பார்ப்பனரல்லாதார் சுயமரியாதைக்கு பாடுபடும் கட்சி. இரண்டி லும் வாய் வைக்கும் அலிக் கட்சி என்கிற தனி நபர்கள் சிலர் இருக்கலாம். அவர் களைப் பற்றி கவலை இல்லை. ஆதலால் இந்த இரண்டு கட்சிகளின் தோல்வியும் வெற்றியும் பார்ப்பனர்களின் கட்சி ஜாலத்தில் முடிந்து விடும் என்று யாரும் நினைக்க மாட்டார்கள்.
வரப்போகும் கமிஷனில் வகுப்பு வாரிப் பிரதிநிதித்து வத்தை ஒழிக்கவும் கூடப்போகும் புது சட்டசபையில் தேவஸ்தான மசோ தாவை ஒழிக்கவும் ஏற்பட்டால் மாத்திரம் “பார்ப்பன ஆதிக்கக் கட்சிக்கோ”, “காங்கிரஸ் கட்சிக்கோ” வெற்றியும் பார்ப்பனரல் லாதார் சுயமரியாதைக் கட்சிக்கு தோல்வியும் என்று சொல்லலாமே தவிர மற்றபடி வெற்றி தோல்வி ஒன்றுமில்லை. இதைத் தவிர மலையாளக் குடிவார மசோதாவை சர்க்காரைக் கொண்டு அழித்தவகையில் பார்ப்பனக் கட்சிக்கு ஒரு வெற்றி தான். காங் கிரஸ் கட்சி சுயராஜ்யம் சம்பாதிக்கும், தேசத்தை விடுதலை செய்யும் என்று சொல்லுவதும், பார்ப்பனர் அல்லாதார் கட்சியை ஜஸ்டிஸ் கட்சி, உத்தியோகக் கட்சி, தேசத் துரோகக் கட்சி என்று சொல்லுவதும் பார்ப்பனரினது அயோக்கியத்தனமும் பார்ப்பனரல்லா தாரினது அறியாமையும் மற்றும் சிலரினது வயிற்றுக் கொடுமையுமே அல்லாது வேறில்லை என்று உறுதி கூறுவோம்.
(குடி அரசு - துணைத் தலையங்கம் - 14.11.1926)