kuthoosi guruசைவ மெய்யன்பர்களல்ல! பண்டார சந்நிதிகளல்ல! அருள் நெறிக் கூட்டத்தாரல்ல! குன்றக்குடி சுவாமிகளல்ல! சிதம்பரம் தீட்சதர்களல்ல! திருச்செந்தூர் பட்டர்களல்ல!

“பரமசிவனாவது! பரங்கிக்காயாவது!” என்று கேட்கின்ற ஸ்விட்ஸர் லாந்து நாட்டைச் சேர்ந்த சிலர்.

400-500 அடி உயரமுள்ள சின்னஞ்சிறு குன்றுகளின்மீது ஏறுவ தானால்கூட நம் பக்தர்கள் என்ன செய்கிறார்கள்?

“அய்யப்பனுக்கு ஜே!” - என்று கூவிக் கொண்டு ஏறுகிறார்கள்!

“பழனியாண்டவனுக்கு அரோஹரா!” என்று கதறிக் கொண்டு ஏறுகிறார்கள்!

“ஏழுமலையானுக்கு கோவிந்தா!” என்று கத்திக் கொண்டு ஏறுகிறார்கள்!

சாதாராணக் கருங்கல் பொம்மைகளைப் பார்ப்பதற்கே இவ்வளவு பெரிய கூக்குரல்! காவடி! ஆவேசம்! தடபுடல்!

ஆனால் வடக்கே பாருங்கள், இமயத்தை! சாட்சாத் அசல் பரமசிவனே குடும்ப சகிதமாக வீற்றிருக்கின்ற(?) கைலயங்கிரியை நோக்கிச் செல்கிறார்கள், ஸ்விட்ஸர்லாந்து மலை ஏறிகள்!

காவடி தூக்காமல், ஆவேசம் வராமல், தங்கள் உணவுக்கு வேண்டிய அன்னக் காவடியுடன், உச்சியை அடைந்து கொடி நாட்ட வேண்டுமென்ற ஒரே ஆவேசத்துடன், மள மளவென்று ஏறிக் கொண்டிருக்கிறார்கள்! நெற்றியிலே திருநீறு இல்லை! கையிலே தேவாரமில்லை! வாயிலே திருவாசகமில்லை! கழுத்திலே உருத்திராக்கமில்லை! இதோ போய்விட்டார்கள், பரமசிவனை நெருங்கி!

எவரெஸ்ட் சிகரத்தின் உயரம் 29,002 அடி. இதை அடைவதற்காக எத்தனையோ மலையேறி நிபுணர்கள் பல ஆண்டுகளாக அரும்பாடு பட்டு வருகின்றனர்! உலகிலேயே மிக உயர்ந்த இடத்தை அடைந்தோம் என்ற ஒரு பெருமையைத் தவிர வேறொன்றுமில்லை. ஆனாலும் இதற்காக எவ்வளவு உயிர்கள் இதுவரையில் பலியாகி யிருக்கின்றன, தெரியுமா?

1849 இல் தான் முதன்முதல் இந்த மலை உச்சியின் உயரம் இவ்வளவு என்று கண்டுபிடிக்கப்பட்டது. இந்தியாவில் இத்துறையில் தனிக் கவலையெடுத்து ஆராய்ச்சி செய்த சர். ஜார்ஜ் எவரெஸ்ட் என்பவரின் பெயரால் இந்த உச்சிக்குப் பெயரிடப்பட்டது.

இந்த உச்சியை எட்டிப் பிடிப்பதற்காக பிரிட்டிஷார் ஒரு மலையேறும் கூட்டத்தை அனுப்பப் போகிறார்களாம். ஜப்பானியரும் தனியாக ஏற்பாடு செய்து கொண்டிருக்கிறார்களாம்.

இதற்கிடையில் ஸ்விட்ஸர்லாந்துக் கோஷ்டியார் நேற்றுவரை 22,638 அடி உயரத்துக்கு ஏறி விட்டார்களாம்! இன்னும் 6,364 அடிதான் பாக்கி! ஆனால் இதற்குள்ளாகவே கைலயங்கிரியில் வீற்றிருக்கின்ற முக்கண்ணன் பரமசிவனின் புனித ஒளி இவர்கள் மீது பட்டிருக்கும்!

“எத்தனை தூரமோ அறியேன் பண்டரீபுரம்!” - என்று பாடுகிறார்கள் பாரத பூமியின் பக்தர்கள்!

“எத்தனை உயரமோ, அறிவோம், எவரெஸ்ட் சிகரம்! என்று பாடுகிறார்கள், ஏறுகிறார்கள், வெளிநாட்டார்!

உலகத்தின் மிகப் பெரிய மலை, இந்த நாட்டில்! உலகத்தில் மிக உயர்வான மலை உச்சி இந்த நாட்டில்! ஆனால் உலகத்திலேயே மிக அழுகிப் போன மூளையும் இந்த நாட்டில்தான்! இதிலும் நமக்குத்தான் முதற்பரிசு!

எல்லாம் கும்பிடு! படம்! வாழ்த்து! மாலை! கைதட்டல்! இத்தியாதி! இத்தியாதி!!

மற்ற நாட்டாரோ, எல்லாம் செயல்! ஆக்க வேலை! கண்டுபிடிப்பு! ஆராய்ச்சி! உற்பத்தி! புது முயற்சி! இப்படியாக!

இங்கேயிருப்பது பக்தி! அங்கேயிருப்பது புத்தி! இங்கேயிருப்பது மனித உருவம்! அங்கேயிருப்பது அசல் மனிதன்! இங்கேயிருப்பது பழமைச் சாக்கடை! அங்கேயிருப்பது புதுமைப் பூங்கா!

இங்குள்ளவர் முயற்சி பழனியும், திருப்பதியும்! அங்குள்ளவர் முயற்சி எவரெஸ்டும், வட துருவமும்!

ஆதலால், ஜேய் ஹிந்த்!!

குத்தூசி குருசாமி (20-11-1952)

நன்றி: வாலாசா வல்லவன்

Pin It