வைதீகப் பார்ப்பனர்: என்ன சாஸ்திரிகளே! நீங்கள் கூட பறைப் பசங்களை கோயிலுக்குள் விடுவது சரியென்று சொல்லுகிறீரே! நீரே இப்படிச் சொல்ல ஆரம்பித்துவிட்டால் பிறகு நம்ம சாஸ்திரங்கள் என்ன ஆவது?

கோயில் பிரேவேச பார்ப்பனர்: ஆமாம்! என்ன பண்றது! இனி சாஸ்திரத்தையும் மதத்தையும் சொல்லி அந்தப் பசங்களின் சுதந்திரத்தைத் தடுக்க முடியாது. அந்தப் பசங்களும் நம்ம சாஸ்திரத்தில் என்ன சொல் லுகிறது என்று தெரிந்து கொண்டார்கள். அவர்கள் ஏதாவது கேட்கும் போது நாம் சாஸ்திரமென்றோ மதமென்றோ சொன்னால், உடனே அவர்கள் நீங்கள் அவைகளின் படி நடக்கிறீர்களா? என்று கேட்டு விடுகிறார்கள்? அதற்கு நம் மால் சரியான பதில் சொல்ல முடியவில்லை. ஆகையால் அவாள் சொல்றதை ஆமோதித்தால் தான் நம்மையும் நாலு மனுஷாள் நல்லவன் என்று சொல்லுவான்கள் போலிருக்கிறது?

வை - பா: இதற்காகவா நாம் பயந்து விடுகிறது? பிறகு நம்ம ஜாதிக்கே ஆபத்து வந்து விடுமே. சாஸ்திரம், பிராமணாளாகிய நம்ம சௌகரியத்திற்கு ஏற்படுத்தியதுதானே! சாஸ்திரத்திற்கே அதிகாரிகள் நாம் தானே! நாம் அதன் படி நடந்தால் என்ன? நடக்காவிட்டால் என்ன? நம்மைக் கேட்க இந்தப் பசங் களுக்கு என்ன அதிகாரமுண்டு?periyar and veeramani 720கோ. பி: பா சரிதான் காணும். நீர் சொல்றதை யார் காது கொடுத்துக் கேட்கிறார்கள். சாஸ்திரத்தின்படி நடந்தால் தானே நீ பார்ப்பான்? நீ, பார்ப்பானுக்குச் சொல்லப்பட்ட எல்லா கர்மாக்களையும் செய்கிறாயா? இங்கி லீஷ் படித்து உத்தியோகம் பண்ணும்படி உங்கள் சாஸ்திரம் சொல்லுகிறதா? காப்பி கிளப் வைத்திருக்கிறவனையும், கள் குடிப்பவனையும், கப்பலேறி செல்பவனையும் மிபேச்சர்களாகிய ஆங்கிலேயர்களுடன் கைக்குலுக்குகிற வனையும் பார்ப்பான் என்று சொல்ல உங்கள் சாஸ்திரம் இடங்கொடுக்கிறதா? இப்படிப் பட்டவர்களை யெல்லாம் பார்ப்பனர்கள் என்று நீங்கள் ஒப்புக் கொண்டு அவர்களுக்கு எல்லா விடங்களிலும் சமத்துவம் வழங்கும் போது நாங்களும் ஏன் சமத்துவம் பெறக் கூடாது? என்று கேட்கிறார்களே இதற்கு என்ன சொல்வது?

வை - பா: இதற்குத்தானா சமாதானம் சொல்ல முடியாது? காயத்திரி ஜெபம் பண்ணும் சுதந்தரம் பார்ப்பானுக்குத் தான் உண்டு. ஆகையால் அவன் எந்தப் பாபத்தைச் செய்தாலும் காயத்திரி ஜெபம் பண்ணி அதை நீக்கிக் கொள்ளுகிறான். அதனால் அவன் சுத்த பார்ப்பனாகி விடுகிறான் என்ற சமாதானத்தைச் சொல்லுமே.

கோ - பி - பா: சரி, நீர் சொல்லற சமதானத்தையே சொல்லுவதாக வைத்துக் கொள்ளுவோம். அப்பொழுது, அந்தக் காயத்திரி ஜெபத்தை எங்களுக்கும் கற்றுக் கொடுங்களேன்; நாங்கள் அதை ஜெபித்துக் கொண்டு பார்ப்பானாகி விடுகிறோம் என்று சொன்னால் என்ன சொல்லுகிறது?

வை - பா: காயத்திரி ஜெபத்தைச் சூத்திராளுக்கும், பஞ்சமாளுக்கும் கற்றுக் கொடுக்கச் சாஸ்திரமில்லை என்று சொல்லி விட்டால் போகிறது.

கோ. பி. பா: ஆரிய சமாஜத்தைச் சேர்ந்தவர்கள் எல்லோருக்கும் காயத்திரி மந்திரத்தைக் கற்றுத் கொடுத்துப் பார்ப்பானாக்கி விடுகிறார்களே; அந்த மாதிரி நீங்களும் செய்யுங்களேன்; என்று சொன்னால் என்ன சொல்லுகிறது?

வை - பா: ஆரிய சமாஜத்தார் செய்வது தப்பு. அவர்கள் இந்து மதத்தைச் சேர்ந்தவாள் அல்ல; அவாள் முக்கால் நாஸ்திகாள் என்று சொல்லி விடுவது தான் நல்லது.

கோ. பி. பா: சரி, நீர் சொல்ற சமாதானத்தைச் சொன்னால் எல்லாரும் கேட்பார்களா? சுயமரியாதைக்காரர்கள் கேட்கும் கேள்விகளுக்குச் சமாதா னம் சொல்ல முடியாமலிருக்கிறதே. அவர்கள் ஒரேடியாக, “சாஸ்திரங்க ளெல்லாம் பொய் அவைகள் பார்ப்பனர்களின் வயிற்றுப் பிழைப்புக்காக ஏற்பட்டவை. மனிதர்களுக்குள் சிறிதும் வித்தியாசமே இல்லை. எல்லா மனிதர்களுக்கும் எல்லாச் சுதந்தரங்களும் உண்டு. உலகத்தில் உள்ள வித்தியாசங்கள் எல்லாம் மனிதனால் ஏற்பட்டவை தான், அதுவும் சுயநலத் தால் ஏற்பட்டவைகள்” என்று கூறி சமதர்ம வாதம் புரிகிறார்களே அவர்களை எப்படிச் சமாதானப் படுத்த முடியும்?

வை - பா: அடே அப்பா! சுயமரியாதைக்காரர்களா? அவர்கள் பெய ரைக் கேட்டவுடனேயே எனது வயிறு கலங்குகிறது. எல்லாம் அவர்களால் வந்த வினைதான், அவர்கள் சொல்லும் வாதங்களுக்கு ஒன்றும் சமாதானம் கூற முடியாதுதான். அவர்கள் கொடுத்த சாட்டையால்தான், நம்ம ராஜகோபாலச்சாரி கூட இப்பொழுது கோயில் பிரவேசத்தைப் பற்றி அதி தீவிரமாகப் பிரசாரம் பண்ணுகிறார். அவர்களுக்குக் கூற வேண்டிய சமாதானம் ஒன்றுதான். நீங்கள் நாஸ்திகர்கள், உங்களுக்கு ஒன்றும் சொல்ல முடியாது என்று சொல்லி விட வேண்டியது தான். மற்றவர்களிடமும், அவர்களைப் பற்றி “நாஸ்திகர்கள், மதத் துரோகிகள், தேசத்துரோகிகள்” என்று கூறிவிட்டால் சரியாகப் போய்விடும். ஆகையால் அதைப் பற்றிக் கவலை வேண்டாம்.

கோ - பி - பா: ஆமாம் ! இவ்வளவு சிரமந்தான் நமக்கு எதற்கு? நம்மால்தான் சாஸ்திரத்தின் படி நடக்க முடியவில்லை. எதோ சும்மாவாவது சாஸ்திரம்! சாஸ்திரம்! என்று சொல்லிக் கொண்டு வருகிறோம். ராஜகோபாலாச்சாரியார் முதலியவர்கள் சொல்லுகிறபடி கோயில்களில் ஆதி திராவிடர்கள் முதலான தாழ்த்தப்பட்டவர்களை யெல்லாம் விட்டு விட்டால் தான் என்ன? சாஸ்திரம் போனால் போகிறது? இனி மேல் தானா சாஸ்திரம் போக வேண்டும், அது தான் முன்னமே போய்விட்டதே!

வை - பா: அட பைத்தியமே! உமக்குச் சிறிதும் விஷயம் புரிய வில்லையே. ஏதோ, சாஸ்திரம், மதம் என்று சொல்லிக் கொண்டிருப்பதனால் தான் கொஞ்சமாவது நமக்கு மதிப்பிருக்கிறது. நம்மை ஒன்றுந் தெரியாத பாமரமக்களாவது உயர்ந்த ஜாதியென்று நினைத்துக் கொண்டிருக்கின்றார்கள் இல்லா விட்டால் அதுவும் போய்விடுமே! என்ன செய்கிறது?

கோ. பி. பா: இப்பொழுதான் நமக்கு என்ன மதிப்பிருக்கிறது? நம்மை எவன் மதிக்கிறான்; இனி மேல் தானா நம்முடைய மதிப்புக் கெடவேண்டும்? யார் நமது வார்த்தையைக் கேட்கப் போகிறார்கள்?

வை - பா: அப்படியா? எத்தனையோ சோணகிரிகள் இல்லையா? கும்பகோணத்தில் ராவ்பகதூர் முத்துக் குமரசாமி செட்டியார் அவர்கள் போன்றவர்கள் இல்லையா? அவர்களெல்லாம் நமக்குக் கௌரவும் கொடுப்பதால் தானே நம்ம சாஸ்திரத்தையும் நம்புகிறார்கள்? அவர்கள் கோயில் பிரவேசத்திற்கு எதிராக இல்லையா? அவர்களைப்போல இன்னும் பத்து பணக்காரச் சூத்திராள் நம்மை ஆதரித்தால் போதாதா?

கோ. பி. பா: ஓகோ! கோ! இப்பொழுதான் விஷயம் புரிந்தது! நாம் சாஸ்திரத்தின் படி நடக்காவிட்டாலும், நமக்கு அதில் நம்பிக்கையில்லா விட்டாலும், நாம் சாஸ்திரங்களைத் தெய்வீகமானவைகள் என்றும் கடவுளால் ஏற்பட்டவைகள் என்றும், அவைகளை மீறி நடந்தால், பாவம், மதம் போய் விடும், தோஷம் சம்பவிக்கும் என்ற பிரச்சாரம் பண்ணுவதனால், நமக்கு லாபமுண்டு என்று தெரிந்துக் கொண்டேன். இம்மாதிரி பிரசாரம் பண்ணி னால்தான், ஒன்றுந்தெரியாத பார்ப்பனரல்லாதார் நம்மை மதிப்பார்கள், நாமும் அவர்களை மிரட்டி மதத்தின் போராலும், சாஸ்திரங்களின் பேராலும் காசு பறிக்கலாம் என்று சொல்லுகிறீர். சரி. இனி நானும் கோயில் பிரவேசப் பேச்சை விட்டு விடுகிறேன். எதிர்ப்பிரசாரம் ஆரம்பித்து விடுகிறேன்.

வை - பா: சந்தோஷம், அதுதான் சரி, இப்படிச் செய்தால் தான், சுய மரியாதைக்காரர்கள் தேசாதிகாரிகளாக வரும் வரையிலாவது நம்முடைய சூழ்ச்சிகள் நிலைத்திருக்கும். இன்றேல் பிராமணீயமே அழிந்து போகும்.

('தேசியத் துரோகி' என்ற பெயரில் பெரியார் எழுதியது. குடி அரசு - உரையாடல் - 13.11.1932)

Pin It