kuthoosi gurusamy 263அன்பார்ந்த பொது மக்களே! என்னை நீங்கள் அறிவீர்கள். நான் ஜாதி ஒழிப்புக் கோடரி! ஜாதிகள் ஒழியாதவரையில் இந்த நாடு உருப்படவே உருப்படாது. ஆரியர் புகுந்த பின்னர்தான் இந்த நாட்டை ஜாதிப்பேய் பிடித்தது. அதற்குமுன்பு இந்த நாட்டு மக்கள் யாவரும் ஒரே குலத்தவராய்ப் பற்பல தொழில்களைச் செய்து கொண்டிருந்தனர். நமது சமுதாயம் நெல்லிக்காய் மூட்டையை உதறியதுபோல இருப்பதற்குக் காரணம், இந்தச் சனியன் பிடித்த ஜாதிதான். இதை ஒழிக்க வேண்டு மென்றால் கலப்பு மணம் ஒன்றுதான் வழி. கலப்பு மணத்தினால் பிறக்கும் குழந்தைக்கு ஜாதி கிடையாது. ஆதலால் பெரியோர்களாகிய நீங்களெல்லோரும் உங்கள் சொந்த ஜாதியில் திருமணம் நடத்தக்கூடாது. உங்கள் வீட்டுப் பிள்ளைகள் - பெண்களுக்கு வேறு ஜாதி யிலேயே திருமணம் நடத்தவேண்டும். இதை ஒரு விரதமாகக் கைக்கொள்ள வேண்டும். நீங்கள் இன்ன ஜாதி என்பதையே மறந்துவிட வேண்டும்”-

இந்த விதமாகப் பேசி முடித்தார், ஒரு பொதுக்கூட்டத்தில் மகா ஜனங்கள் கை தட்டினார்கள். மாலையும் போட்டார்கள். ஸ்ரீமான் ஜாதி ஒழிப்புக் கோடரி மாலைகளைக் கழற்றாமல் படமும் எடுத்துக் கொண்டார். கூட்டம் முடிந்து வீட்டுக்கு வந்தார், தம் மகனுடன், சட்டையைக் கழற்றினார்! அத்துடன் பூணூலும் கழன்று வந்தது!

“அடடே! அதை இப்படிக் கொடடா!” - என்று கேட்டு வாங்கி மாட்டிக் கொண்டார்!

“அப்பா, இன்றைக்கு உங்கள் பேச்சு மகாஜோர்! கை சிவக்கும் படியாகக் கை தட்டினார்கள்! ஆனால் எனக்கொரு சந்தேகம்! நான் வேறு ஜாதியில் தான் திருமணஞ் செய்து கொள்ளப் போகிறேன் என்று சொல்லும் போதெல்லாம், அது கூடாது; நம் ஜாதியிலேதான் செய்ய வேண்டும்; பழைய முறையைக் கைவிடக் கூடாது- என்று அடிக்கடி கூறுகிறீர்களே! பொது மேடையில் மட்டும் வீராவேசமாகப் பேசுகிறீர்களே!”- என்று கேட்டான், வக்கீல் படிப்புப் படித்துக் கொண்டிருந்த 22 வயது மகன்!

“அது ஊராருக்கு உபதேசமடா! உனக்கல்லடா, தம்பீ!” என்றாராம், ஸ்ரீமான் கோடரி!

“அவரவர் ஜாதித் தொழிலையே அவரவர் செய்து வர வேண்டும். எல்லா மக்களுமே படிப்பதென்றால் இத்தனை பேருக்கும் உத்யோகம் எங்கேயிருக்கிறது? ஆதலால் ஜாதிமுறை யிருப்பது நல்லதுதான்”- என்று சலவைத் தொழிலாளர் மாநாட்டில் திருவாய் மலர்ந்தருளி யிருக்கிறார். உயர்திரு உத்தம புருடர் ஆச்சாரியார் (நமது முதலமைச்சர்) அவர்கள்!

“பிராமணனுக்கு ஓதல், ஓதுவித்தல், யாகஞ் செய்தல், யாகஞ் செய்வித்தல், தானம் கொடுத்தல், தானம் வாங்குதல் ஆகிய அறுதொல்களையும் பிரம்மா ஏற்படுத்தினார்” - என்பது மநுதர்மம், முதல் அத்தியாயம், 88-வது சுலோகத்தின் விதி! வேதங்களும் இதையே முறையிடுகின்றன.

இட்லியும் வெங்காய சாம்பாரும், ஓவல்டினும் காஃபியும் சாப்பிட்டு விட்டு இங்கிலீஷ் படித்துவிட்டு, சட்டை போட்டுக் கொண்டு, மோட்டார் காரில் போய் மந்திரி வேலை பார்க்கச் சொல்லி பிராமணனுக்கு எங்கேயாவது விதிக்கப்பட்டிருக்கிறதா?

செருப்புக் கடை முதல் டாக்டர் வேலை வரையில், லாண்டரி முதல் எஞ்சினியர் வரையில், காஃபிக் கடை முதல் போலீஸ் வேலை வரையில் - எந்த வேலையைச் செய்யவில்லை, பிராமணர்கள்? இவர்கள் மட்டும் ஏன் தங்கள் குலத் தொழிலைச் செய்யாமல் படிப்பு, படிப்பு என்று பள்ளிகளைச் சுற்றிக் கொண்டிருக்கிறார்கள்?

தர்ப்பையை ஏந்தி ஆற்றங்கரையில் உட்கார்ந்திருக்க வேண்டிய திருமேனிகள், தங்கள் குலாச்சாரத்தைக் கை விட்டு விட்டு, பேனாவை ஏந்தி மின்சார விசிறிக்கடியில் உட்காரலாமா?- என்று நான் கனம் மந்திரியாரைக் கேட்டால், அவர் என்ன சொல்வார் தெரியுமா?

“இது என்ன கேள்வி ஓய்! நான் உங்கள் கூட்டத்துக்காக உபதேசம் செய்தேனா? அல்லது எங்களுக்காகச் சொன்னேனா? அவரவர் ஜாதித் தொழிலை அவரவர் செய்ய வேண்டுமென்று பிராமணாளைப் பார்த்துச் சொல்வதற்கு நானென்ன, அவ்வளவு முட்டாளா? மற்றவர்களை முட்டாள்களாக்குவதுதானே என் வேலை? அதற்குத்தானே நான் இந்தப் பதவியை ஏற்றிருக்கிறேன்? நீ எதை வேண்டுமானாலும் எழுதித் தள்ளு! உன் இனத்தின் ஊருக்கு ஒரு டஜன் முட்டாள்கள் எனக்குக் கிடைக்க மாட்டார்களா? அதுவே போதுமா!” - என்று தான் பதில் சொல்வார்!

- குத்தூசி குருசாமி (30-06-1952)

நன்றி: வாலாசா வல்லவன்

Pin It