ஆரியன் - திராவிடன் என்று சொன்னவுடனேயே காதைப் பொத்திக் கொள்ளுகிறார்கள், சிலர்! வீட்டுக்குப்போய் காதுக்குள் தண்ணீர் ஊற்றிக் கழுவிக்கொள்கிறார்கள், சிலர்!

kuthoosi gurusamy 268அய்யோ பாவம்! இவ்வளவு பரந்த நோக்கங்கொண்ட சமரச சன்மார்க்கி களையும் சமதர்ம சிங்கங்களையும் மனம் புண்படுமாறு செய்கிறோமே என்று கூடச் சில சமயங்களில் தோன்றுவதுண்டு! ஒருக்கால் என் மனந்தான் பரிபக்குவ நிலையை அடையவில்லையோ என்று கருதி அதற்கான இங்கிலீஷ் நூல்களையும் தமிழ் நூல்களையும் படித்து மனதை ஒரு நியூஸ் பேப்பர் அளவுக்காவது விரிவாக்கிக் கொள்ளலாமா என்று கருதுவதுண்டு! சமரச சன்மார்க்கத் தந்தையான இராமலிங்க அடிகளின் திரு. அருட்பாக்களைப் படிப்பேன்! முத்தி நிலை கண்ட சித்தர்களின் பாடல்களைப் படிப்பேன், உலகத் தொழிலாளர்கள் ஒன்றுபட வேண்டிய சோஷ்யலிஸ்ட் நூல்களைப் படிப்பேன்! நீதிக்களஞ்சியமான திருக்குறளைப் படிப்பேன்! பிறகு என் மனம் ஏதோ சிறிது பக்குவப்பட்டிருப்பது போலத் தோன்றும்! ஆரியன் - திராவிடன் என்ற சொற்களைக் கண்களால் கண்டவுடனே கண்ணை மூடிக் கொள்ள வேண்டும் என்று கருதுவேன்! இந்த “உன்னதமான” கமரச மனோ நிலையில் எப்போதாவது ஒரு ஹோட்டலுக்குள் புகுவேன், சிற்றுண்டி சாப்பிடுவதற்காக!

இடது கையில் வாளியும், வலது கையில் கோவில் மடப்பள்ளிக் காரனின் இடுப்புத் துணி போன்ற வாசனையுடைய ஒரு துணியையும் எடுத்துக்கொண்டு ஒரு ஹோட்டல் தொழிலாளி என் முன்புள்ள மேஜை யைத் துடைப்பான்! அவனைப் பார்த்து, “தொழிலாளத் தோழனே! ஒரு நல்ல மசால்தோசை கொண்டுவா!” என்பேன்!

“நானல்ல சாமி! இதோ இவரிடம் சொல்லுங்கோ! நான் எச்சில் துடைக்கிறவன்! அவர்தான் “சப்ளை செய்கிறவர்”, என்று பதில் கூறுவான்.

“அப்படியா, தோழனே! அவ்வளவு அதிசயமான வேலையா, “சப்ளை” செய்வது? சிலர் கண்டக்டராகவும் சிலர் ட்ரைவராகவும் இருப்பது போலவா? ஆமாம்! பழகினால்தானே வரும்? நீ பழகவில்லை போலிருக் கிறது?” என்று பதில் கூறுவேன்.

“இல்லிங்க சாமி! என் வேலைதான் கஷ்டமான வேலை! அந்த ஆள் வேலையைச் செய்வது ஒன்றும் பிரமாதமல்ல! ஆனால் நான் சூத்திரன்! சாப்பாட்டைத் தொடக் கூடாது! அந்த ஆள் பிராமணன்! அவன் “சப்ளை” செய்தால்தான் மற்ற பிராமணர்கள் சாப்பிடுவார்கள்! பரம்பரை பரம்பரையாக நாங்கள் இந்த வேலைதான் செய்த வருகிறோம்! அவர்கள் அந்த வேலை தான் செய்து வருகிறார்கள்!” என்பார், மேஜை துடைக்கும் தொழிலாளி!

இதைக் கேட்டவுடனே என் சமரச சன்மார்க்கம், முதிர்ந்த ஞானம், பரந்த படிப்பு எல்லாம் திடிரென்று காஷ்வல் லீவ் எடுத்துக் கொண்டு போய்விடும்!

உடனே ஆரிய - திராவிடப் பிரச்னை என் கண் முன்பு அடையாறு பிரம்மஞான சபை ஆலமரம் போல நிற்கும்!

பிறகு வீட்டுக்கு வந்து அன்றையப் பத்திரிகையை விரிப்பேன்! “சு. மி” இதழில் கீழ்க்கண்ட செய்தி படத்துடன் என் கண்ணில் படும்:-

எழும்பூர் ஸ்ரீ வேத சபை

உபநிஷத்தின் ஒரு பகுதியிலுள்ள தத்துவங்களை எழும்பூர் வேத சபையின் ஆதரவில் நடந்த கூட்டத்தில் திவான்பகதூர் ராமசாமி சாஸ்திரி விவரித்தார். இவ்வைபவத்துக்குச் சுப்ரீம் கோர்ட் நீதிபதி ஸ்ரீ என். சந்திரசேகர அய்யர் தலைமை தாங்கினார். சபைக் காரியதரிசி எம்.ஆர்.வி சாஸ்திரி நல்வரவு கூறினார். தைத்திரீய உபநிஷத்தின் பாகமான “பிட்சாஸ்மாத் வரத பவதே” என்னும் வேத மந்திரத்தின் மகிமையை ஸ்ரீ. வி. வி. ஸ்ரீனிவாச அய்யங்கார் தெளிவுபடுத்தினார்.” -இந்தச் செய்தியைப் படித்ததும், திரு. வி.க.; ரா.பி.சே.; டி.பி.மீ; டி.கே.சி; மா.பொ.சி; பி.டி.ரா. சி.பா. ஆ.:- போன்ற முக்கியஸ்தர்கள் பெயரை மேற்படிச் செய்தியில் காணோமே ஏன்? என்ற சந்தேகம் எழும்பும்!

‘ஓஹோ! ஆரியர் வேறு! திராவிடர் வேறு! அவர்கள் கலை வேறு! இவர்கள் கலை வேறு!’ என்ற பழைய புத்தி மீண்டும் எனக்கு வரும்!

வெறும் புத்தகப் பூச்சியாக மட்டுமிருந்தால் போதாதப்பா! உலக அநுபவம் வேண்டும்! நம் சூழ்நிலையைப் பார்க்கின்ற கண்கள் இருக்க வேண்டும்! உண்மையை ஒப்புக் கொள்ளக்கூடிய உறுதி வேண்டும்- என்று என் மனம் என்னைக் கூப்பிட்டுச் சொல்லும்.

உங்கள் மனம் என்ன சொல்கிறதோ?

ஓ! சந்தேகிகளே! அக்கிரமங்களைக் கண்டு கண்ணை மூடிக் கொள்ளாதீர்கள்! உண்மைகளைக் கண்டு ஓட்டம் பிடிக்காதீர்கள்! மேடுகளை வெட்டித் தள்ளுங்கள்! எந்த மேடாயிருந்தாலென்ன?

மேடு மேடு தானே! சமமான ஒரு வயல் நடுவில் ஆரிய மேடு மட்டு மிருந்தால் அதில் பயிர் முளைக்குமா? இது ரத்தப் பரீட்சையல்ல, சுவாமிகளே! இது மனப்போக்குப் பரீட்சை! புத்தகத்திலே இருக்காது! மனதை உடைத்துப் பாருங்கள்! அதற்குள்ளே பதுங்கிக் கிடக்கும்; புற்றின் அடியிலே விஷப்பாம்பு பதுங்கியிருப்பது போல!

குத்தூசி குருசாமி (12-08-1952)

நன்றி: வாலாசா வல்லவன்

Pin It