அன்புள்ள வாலிபர்களே!

அவைத் தலைவர் என்னைப் பற்றி பெருமைப்படுத்தி பேசியதெல்லாம் அவர்கள் என்மீது கொண்ட அன்பேயன்றி வேறல்ல. அவர்கள் சொல்லியவற்றிற்கு நான் சிறிதும் பொருத்தமுடையவனன்று. ஆனால் எனது கொள்கைகளையும் தொண்டுகளையும் ஆதரித்து பேசியிருக்கின்றதிலிருந்து என் கொள்கைக்கு சிறிதாவது நாட்டில் மதிப்பிருக்கிறதென்றும் மக்கள் ஆதரிக்கிறார்களென்றும் ஏற்படுவதோடு, இதனால் என் தொண்டுக்குப் பின் பலமிருக்கிறதென்றும் நான் உணர்கிறேன்.

வாலிபர்கள்

periyar 32எனது எண்ணமெல்லாம் எப்பொழுதும் வாலிபர்கள்களாகிய உங்கள் மீதுதான் போய்க் கொண்டிருக்கிறது. ஏனெனில் மோட்ச லோகத்தில் ஒரு காலும் பூலோகத்தில் ஒரு காலும் வைத்துக் கொண்டு வீண் வேதாந்தம் பேசிக் கொண்டிருக்கிற பெரியோர்களைப் பற்றி எனக்கு அதிக கவலை இல்லை. ஆகையால் வாலிபர்களாகிய உங்கள் முன் பேச எனக்கு அளவில்லா ஆசையுண்டாகின்றது. சமீபத்தில் இரண்டு வாலிப மகாநாடுகள் கூடப் போகின்றன. அவைகளில் ஒன்று அகில இந்திய வாலிபர் மகாநாடென்றும், மற்றொன்று பார்ப்பனரல்லாதார் வாலிபர் மாகாண மகாநாடு என்றும் சொல்லப்படும். அகில இந்திய வாலிபர் மகாநாட்டுக்குத்தான் நமது திரு.ஏ.இராமசாமி முதலியார் அவர்கள் சென்றிருக்கிறார்கள். சமீபத்திலே அதாவது இம்மாதம் 22, 23 -ம் தேதிகளில் பார்ப்பனரல்லாதார் வாலிபர் மகாநாடு இங்கு கூடும். அதற்காக தமிழ்நாட்டிலிருந்தும், ஆந்திர நாட்டிலிருந்தும், பார்ப்பனரல்லாத வாலிபர் பலர் வருவாரென எதிர்பார்க்கப்படுகிறது. நாட்டிற்குத் தொண்டு செய்வதற்கும் தலைமைப் பதவி பெறுவதற்கும், வாலிபர்கள் தான் சிறந்தவர்கள் என்பது எனதபிப்பிராயம். அதிலும் தலைவர் பதவிக்குப் பெரியோர்கள் என்பவர்கள் பயனில்லை. அவர்களை உலக வாழ்க்கையும் சுயநலமும் சுற்றிக் கொள்ளுகின்றது. பொதுவாழ்க்கைக்கும் தலைமைப் பதவிக்கும் சுயநலமென்பது கண்டிப்பாய் இல்லாதவர்களாகவே இருக்க வேண்டும்.

அநேக பெரியோர்கள் தாங்கள் முதலில் எந்த எண்ணம் கொண்டு பொது நல சேவையை ஆரம்பித்தார்களோ அதையே மறந்து விடுகிறார்கள். உலக வாழ்க்கையில் சம்மந்தம் ஏற்பட்ட பிறகு சுயநலமில்லாமல் பொது நலவேலை செய்வது என்பது அவர்களுக்கு இலேசான காரியமல்ல. எனவே பரிசுத்தமான வாலிபர்களால்தான் என் தொண்டு முற்றும் பயன்படுமென்று எண்ணியிருக்கின்றேன். ஏனென்றால் அவர்கள் உலக வாழ்க்கையில் ஈடுபடும் முன் மனது பரிசுத்தமாயிருக்கும். பரிசுத்தமான மனதையுடைய இவ்வாலிப காலத்தில் ஒரு காரியத்தை ஆரம்பித்து நடத்தினால் நாம் மேற்கொண்ட காரியம் பலன் பெறும். வாலிபர்கள் காரியங்களை சீரும் சிறப்பும் உண்டாகுமாறு நடத்திக் காட்டுவார்களானால் பெரியோர் நம் தொண்டைப்பற்றி கொண்டாடி அவர்களும் ஒத்துழைக்க நம்மிடம் வருவார்கள். என்னைப் பொருத்த வரையில் நான் எண்ணும் ஒவ்வொரு எண்ணத்திற்கும் வாலிபர்கள் கிடைத்தால்தான் பலன் பெறலாமே அல்லாது பெரியவர்கள் கிடைத்தால் பயன் எதிர்பார்க்க முடியாதென்றே எண்ணி வருகின்றேன். வாலிபர்கள் தங்கள் வாழ்க்கையை மிகுதியும் பொது வாழ்விற்கு உபயோகப்படுமாறு சரிப்படுத்திக் கொள்ள வேண்டும்.

பார்ப்பனரல்லாதார் வாலிபர் மகாநாடு

சிலர் பார்ப்பனரல்லாதார் என்று ஒரு பிரிவு காட்டத்தக்க பெயர் ஏன் என்கிறார்கள். சிலர் இம்மாதிரி பிரித்துக் கொண்டே போனால் உலக நிலை என்னவாகும் என்கிறார்கள். மற்றும் சிலர் பார்ப்பனரல்லாதார் என்கிற பிரிவு உணர்ச்சி வாலிபருக்கு உண்டாகக் கூடாது என்கிறார்கள். இவர்கள் சொல்வதெல்லாம் நமது நாட்டின் உண்மையான நிலைமையைக் கவனியாதவர்களுக்கு வேண்டுமானால் ஒரு சமயம் நியாயமாய்த் தோன்றலாம். நமது நாட்டின் நிலைமையைக் கவனிக்கின்ற காலத்தில் இந்தப் பிரிவு ஏற்படுத்தியது யார்? இது எப்பொழுது ஏற்படுத்தப்பட்டது? என்பதைக் கவனிக்க வேண்டும். யோசித்துப் பார்த்தால் 1000 கணக்கான வருடங்களுக்கு முன்பே ஏற்படுத்தப் பட்டதென்பது விளங்காமல் போகாது. நமது நாட்டை ஆயிரக்கணக்கான பிரிவுகளாக நாம் பிரிக்கவில்லை. 1000 கணக்கான வருடங்களுக்கு முன்பிருந்தே ஒரு வகுப்பார் நம்மைப் பிரித்து வைத்து தங்களை உயர்ந்தவர்கள் என்று சொல்லிக் கொண்டு நம்மை கொடுமையாய் நடத்தி வருகின்றார்கள். ஒரு கூட்டத்தாரை மாத்திரம் அதாவது நம்மை பார்ப்பனர்கள் என்பவர்களை நீக்கி மற்றவர்களை பார்ப்பனரல்லாதார்கள் என்று பிரித்தது இன்றல்ல நேற்றல்ல. ஆதலால் அதற்கு நாம் பொறுப்பாளிகளல்ல.

தவிர சிலர் பார்ப்பனரல்லாதார் என்கிற பெயர் கூடாது என்கிறார்கள். அதாவது பார்ப்பனரல்லாதார் என்கிற பெயரைத் தவிர்த்து வேறு பெயரிடக் கூடாதா வென்கிறார்கள். கிரமமாக எல்லா மக்களும் ஒப்புக் கொள்ளும்படியாக நமக்கு வேறு ஒரு பெயர் என்ன கொடுக்க முடியும்? கிரமமாக யோசித்தால் ஆதாரப்படி பார்த்தால் சூத்திரன் என்கிற பெயரைத்தான் கொடுத்தாக வேண்டும். அதை நாம் ஏற்றுக் கொள்ள முடியுமா? ஏனெனில் மதக் கொள்கைப்படி இந்தப் பார்ப்பனர்கள் நம் நாட்டு மக்களுக்கு பிராமணர், க்ஷத்திரியர், வைசியர், சூத்திரர், பஞ்சமர், மிலேச்சர் என்ற பிரிவுகளை ஏற்படுத்தியிருக்கிறார்கள். பிராமணர்கள் என்கிற பெயரை பொருத்தவரையில் ஒருவிதமான தகராறில்லை. ஏனென்றால் பார்ப்பனர்கள் தங்களை பிராமணரென்று சொல்லிக் கொள்ளுகிறார்கள்.

க்ஷத்திரியர்கள்

க்ஷத்திரியர்கள் என்பதில் அநேக தகராறு ஏற்படுகிறது. யார் யாரை க்ஷத்திரியனென்று கூப்பிடுவது? க்ஷத்திரியன் என்கிற பெயர் யாருக்கு உரிமை உண்டென்று சொல்ல முடியும்? க்ஷத்திரியனென்றால் நாட்டை ஆளுபவன், போர்வீரன், காப்பாளன், கத்திவாளுடன் அமர்களத்தில் போர் புரிபவன் என்பதாக பொருள் சொல்லப்பட்டிருக்கிறது. அந்த முறைப்படி எல்லோரும் க்ஷத்திரியர்கள்தான். ஏதாவது ஒரு காலத்திலாவது நாட்டை ஆளாதார் யாரிருக்கிறார்கள்? பட்டாளத்தில் போர் வீரனல்லாதார் யார் இருக்கிறார்கள்? ஒருகாலத்தில் வேளாளர், நாயுடு, வன்னியர், ராஜுக்கள், நாடார்கள், செட்டியார்கள், குயவர்கள், மறவர்கள், தொட்டியர்கள், பார்ப்பனர்கள், ஒட்டர்கள், முகம்மதியர்கள் முதலியவர்கள் அரசாண்டிருக்கிறார்கள். இப்பொழுதும் நம் நாட்டை ஆங்கிலேயர்கள்தான் ஆள்கின்றார்கள். அந்த முறைப்படி யாரை க்ஷத்திரியர் என்று கூப்பிடுவது?

ஒரு காலத்தில் அரசாண்டவர்களை க்ஷத்திரியர் என்பதா? அல்லது இப்போது அரசாளுகின்றவர்களை க்ஷத்திரியரென்பதா? ஆளுகிறவனை மாத்திரம் க்ஷத்திரியன் என்பதா, அல்லது அவன் குடும்பத்தை மாத்திரம் க்ஷத்திரியரென்பதா? அல்லது ஆளுகின்ற ஜாதியையே க்ஷத்திரியரென்பதா? இப்படிப் பார்ப்போமானால் ஒன்றா உலகத்தில் உள்ள மக்கள் பூராவையும் க்ஷத்திரியர்கள் என்று சொல்ல வேண்டும். அல்லது ஜார்ஜ் சக்கிரவர்த்தியை மாத்திரம் க்ஷத்திரியன் என்று சொல்ல வேண்டும். ஏனெனில் நாம் காணும் ஒவ்வொரு ஜாதியார் என்போர்களும் ஒரு காலத்தில் அரசாண்டு தானிருக்கிறார்கள். ஒவ்வொரு வகுப்பாரும் யுத்தத்தில் சேவை செய்துதானிருக்கிறார்கள்.

வைசியர் 

அடுத்தாப்போல் வைசியர் என்றாலோ, வியாபாரம் செய்வோர் வைசியர். ஆகையால் வியாபாரம் செய்வோர் அனைவரும் வைசியர். இக் காலத்தில் எல்லா வகுப்பாரும் வியாபாரம் செய்வதால் யாரை வைசியரென்று சொல்லுவது? இன்னும் விவசாயம் செய்பவர் வைசியர், மாடு மேய்ப்பவர் வைசியர் என்று சொல்லப்படுகிறது. இத்தொழில் எல்லாருமே செய்திருக்கின்றார்கள் செய்கிறார்கள். எனவே யாரை வைசியரென்பது?

பார்ப்பனர் ஒப்புவார்களா? 

தவிரவும், க்ஷத்திரியர், வைசியர் என்கிற பிரிவினையைப் பார்ப்பனர்கள் ஒப்புக் கொண்டால் அவர்கள் ஏகபோகமாக அனுபவித்து வருகின்ற உரிமைகளை மூன்று பிரிவாகப் பிரித்து அதில் அவர்கள் ஒன்று எடுத்துக் கொண்டு பாக்கியை க்ஷத்திரியருக்கு ஒன்றும் - வைசியருக்கு ஒன்றுமாக பிரிக்க நேரிட்டு விடும். ஆதலால் இதற்குப் பயந்து கொண்டே வெகு தந்திரமாய் கலியுகத்தில் உலகத்தில் பிராமணர்கள் சூத்திரர்கள் என்கிற இருபிரிவு தவிர வேறில்லை என்று சொல்லி விட்டார்கள்.

எனவே மதக் கொள்கைப்படி யார் சூத்திரன் என்று பார்த்தால், பிராமணன் வைப்பாட்டி மகன், பரம்பரையாக மேல் சாதியாருக்குத் தொண்டு செய்வதைவிட வேறு தொழில் இல்லாதவன் முதலிய யோக்கியதை உடையவன், இந்தப் பெயரை ஏற்றுக் கொள்ள நம் மனம் பொறுக்குமா? தவிர மற்றொரு வகுப்பார்களென்ற பஞ்சமர்களை தீண்டப்படாதவர்கள், சண்டாளர்களென்று பிரித்திருப்பதோடு, வேறு மதத்தினர் என்கின்றவர்களான கிறிஸ்தவர்களையும், முகம்மதியர்களையுமாகச் சேர்த்து மிலேச்சர்களென்று பிரித்திருக்கிறார்கள். இவைகளை எல்லாம் நான் ஏன் சொல்ல நேரிட்டதென்றால் பார்ப்பனரல்லாதார் என்ற பெயர் தவிர வேறு பெயர் வைக்க முடியாமலிருப்பதற்கு நேரிட்ட காரணத்தை விளக்குவதற்காகத்தான் என்றும், இவ்வித இழிவான பெயர்களையும், கொடுமைகளையும் ஒழிக்கத்தான் அப்பெயர் கொடுக்கப்பட்டது என்றும் காட்டத்தான்.

தவிர சிலர் ஏன் இவ்வியக்கத்தில் பார்ப்பனர்களைச் சேர்த்துக் கொள்ளக் கூடாது என்கிறார்கள். பார்ப்பனர்களை எப்போதும் நம்முடன் சேர்க்கக் கூடாதென்ற கொள்கை இதிலில்லை. அவர்கள் இவ்வித வித்தியாசங்களையும் சூழ்ச்சிகளையும் ஒழித்து சமத்துவத்தை ஒப்புக் கொண்டு நல்ல எண்ணத்துடன் செய்கையில் நடந்துவரும் வரையில் அவர்களை விலக்கி வைக்க வேண்டியது அவசியமாயிருக்கின்றது. அன்றியும் பார்ப்பனருக்கு என்று மாத்திரம்தான் எங்குப் பார்த்தாலும் ஒரு தனியிடமேற்படுத்திக் கொண்டு அதில் அவர்கள் ஆதிக்கத்தை உபயோகப்படுத்திக் கொள்கிறார்கள். மற்றவர்களுக்கு அவ்வித வித்தியாசம் வேண்டும் என்கிற ஆசை இல்லை. அதோடு பார்ப்பனர்கள் உயர்ந்தவர்கள், மற்றவர்கள் இழிந்தவர்கள் என்பதை நமது மக்களின் ரத்தத்திலேயே பாய்ச்சி விட்டார்கள். எனவே ஒரு சிறு கூட்டத்தாரின் கொடுமையால் பெரிய சமூகம் சுயமரியாதையிழந்து பல கஷ்ட, நஷ்டங்களுக்காளாகி இருப்பதற்குப் பார்ப்பனரல்லாதாராகிய நாம் காரணஸ்தர்கள் அல்ல.

தவிர சிலர் நம்மைப் பார்த்து பார்ப்பனரிடம் துவேஷம் வேண்டாம், பார்ப்பனரும் பார்ப்பனரல்லாதாரும் கூடி ஒன்று சேர்ந்து இக்கொடுமையை நிவர்த்திக்க வழி பாருங்கள் என்று நல்ல பிள்ளைகள் போல பேசுகிறார்கள். நாம் அவர்களைத் தொடுவதற்கும், ஒன்றாய் இருப்பதற்கும், உண்பதற்கும், ஒன்று சேர்ந்து கடவுளை வணங்குவதற்கும், தெருவில் நடப்பதற்கும் கூட உரிமை கொடாத அவர்களா அல்லது நடப்பதற்கு வழி விடுங்கள் என்று கெஞ்சிக் கேட்கின்ற நாமா துவேஷத்தை உண்டாக்குகிறவர்கள் என்பது சற்று யோசிப்பவர்களுக்குத் தோன்றாமல் போகாது. அன்றியும் ஒற்றுமையாயிருந்து துவேஷத்தை ஒழித்துக் கொள்ளக்கூடாதா என்று சிலர் சொல்லுகின்றார்கள்? துவேஷம் ஒழிய வேண்டுமானால் துவேஷத்திற்கு காரணமாயிருப்பவர்களிடம் ஒற்றுமையாயிருக்க முடியவே முடியாது.

இன்றைய தினம் நான் மாத்திரமல்ல இக்குற்றங்களை எடுத்துக் கண்டிப்பது, ஏறக்குறைய 5000, 6000 வருடங்களுக்கு முன்புள்ள தேச சரித்திரத்தைப் பார்த்தால் நமது முன்னோர் காலத்திலிருந்தே மனிதத் தன்மைக்கு விரோதமானதும், இயற்கைக்கும் சத்தியத்திற்கும் விரோதமானதுமான கொடுமைகளை ஒழித்து சமத்துவத்தையும் அன்பையும் உலகின்கண் நிலைநிறுத்த நம்மவர்கள் பாடுபட்டிருப்பது விளங்காமலிராது. 5000 வருடமாக பாடுபட்டும், அதுவும் அன்புடனும் ஒற்றுமையுடனும் பாடுபட்டும் இன்னும் அப்பேய் தாண்டவமாடுமானால் இனியும் எப்படி அன்பாயும், ஒற்றுமையாயுமிருந்து இப்பொல்லாப் பிரிவினைகளை நீக்க முடியும் என்பதை யோசியுங்கள். இவைகளை நான் ஏன் சொல்லுகிறேன் என்றால் நம் வாலிபர்களிலும் சிலர் “எதற்கு இந்த வித்தியாசம்? பாபம் பார்ப்பனர்கள் நம்மிடம் வருகிறார்கள். பிச்சை யெடுக்கிறார்கள், பிறகு போய் விடுகிறார்கள். அவர்கள் மீது நமக்கேன் வெறுப்பு” என்று தர்மசாஸ்திரம் பேசி நம் இயக்கத்திற்கே முட்டுக் கட்டையாய் நின்று விடுகிறார்கள்.

அவர்களுக்கு நான் மேலே சொல்லி இருக்கும் சமாதானத்தையே சொல்லிக் கொஞ்சம் யோசனை செய்து பாருங்கள். நம் சொந்த விடங்களில் எங்கேயாவது இது பார்ப்பனருக்கு இது பார்ப்பனரல்லாதார் என்கிற சூத்திரருக்கு என்று நாம் எழுதி வைத்திருக்கிறோமா? எந்த பொது ஸ்தலத்திலும் எந்த உயர்ந்தவிடத்திலும் எந்த புண்ணிய பூமியிலும் இது பார்ப்பனருக்கு இது சூத்திரருக்கு என்று எழுதி வைத்துக் கொண்டிருப்பதோடல்லாமல் அதை அமுலில் வைத்துக் கொண்டிருப்பது பார்ப்பனர்களா அல்லது நாமா? அன்றியும் இப்போதும் அவர்களால் ஏற்படுத்தப்பட்ட ஒவ்வொரு காப்பி ஓட்டல்களிலும், வெட்டி வைத்த குளக்கரையிலும் இது பார்ப்பனர்களுக்கு, இது சூத்திரருக்கு என்று எழுதி வைத்திருக்கிறார்கள். இப்படி எழுதியது தப்பு, இவ்வித வித்தியாசம் இருக்கக் கூடாதென்றால் அது ஒற்றுமைப் பிளவாகுமா? அல்லது ஒற்றுமைக்கான முயற்சி ஆகுமா?

ஒற்றுமையை எப்படி உண்டாக்குவது? “நீங்களெல்லாம் ஒற்றுமையாயிருங்கள், இருக்கிற வித்தியாசங்கள் அப்படியே இருக்கட்டும், அது கடவுளால் உண்டாக்கப்பட்டது” என்றால் எப்படி ஒற்றுமை நிலவும்? இதனால் கடவுளே பிரித்து வைத்திருக்கின்றார் என்றல்லவா ஏற்படும். உண்மையாய் ஒருவருக்கொருவர் ஒற்றுமையாயிருக்க வேண்டுமானால் ஒவ்வொருவர் எண்ணமும் ஒரே மாதிரியாகவும் ஒவ்வொருவரும் மற்றவரால் சமத்துவமாக மதிக்கப்பட்டும், ஒவ்வொருவருக்கும், அன்னியோன்யமும், அன்பும், நம்பிக்கையும் ஏற்பட்டாலன்றி உண்மையான ஒற்றுமையாய் எப்படி வாழ முடியும்? ஒரு புலியினிடத்தில் ஒரு ஆட்டுக் குட்டியை விட்டு நீங்களிருவரும் ஒற்றுமையாயிருங்கள் என்றால் அவைகள் எப்படி ஒற்றுமையாயிருக்க முடியும்? புலி ஆட்டைக் கொன்று தின்னாமலிருக்க முடியுமா? எலிகளிலிருக்குமிடத்து பூனையைக் கொண்டுவந்து விட்டு எலிகளைக் கூப்பிட்டு நீங்கள் எல்லோரும் ஒற்றுமையாயிருங்களென்றால் அவைகள் எப்படி ஒற்றுமையாய் சேர்ந்து வாழ முடியும்? கொஞ்ச காலத்திற்குள் எலிகளே காணப்படா தொழியுமா அல்லவா? இரண்டுக்கும் நம்பிக்கையுண்டாக்கி ஒன்றைக் கொன்று ஒன்று வயிறு வளர்க்க வேண்டியிருக்கிற நிலையை மாற்றாமல், அவைகளை எப்படி ஒற்றுமையாயிருக்கச் செய்ய முடியும்? ஆனால் சிலர் வெகு சுலபமாக நீங்களெல்லாம் ஒற்றுமையாயிருங்கள் அப்புறம் பார்த்துக் கொள்ளலாம் என்று சொல்லிவிடுவார்கள். அவர்கள் பொறுப்பை, உணராதவர்களே என்றே சொல்லுவேன்.

பூச்சி, புழுக்கள், பன்றி, நாய்களைவிட கேவலமாய் நடத்தப்படுவது நாமா? அவர்களா? இப்படி செல்லுகிறவர்கள் நிமிர்ந்து போட்டதென்ன? குனிந்து எடுத்ததென்ன? வெறும் வாய்வேதாந்தம் பேசுகிறவர்கள் தானே? சுயமரியாதை உணர்ச்சி இல்லாதவர்களுக்கு இதன் கஷ்டம் தோன்றாது.(சிரிப்பு) நித்திய வாழ்வில் நாம் படும் துயர் யாரே அறிவர்? தவிர வேறு சிலர் “வேளாளருக்குள்ளும் மற்றும், பல வகுப்பார்க்குள்ளும் இம்மாதிரி ஒருவரை ஒருவர் தொடக்கூடாதென்றும், உண்ணக்கூடாதென்றும், கலியாணம் செய்யக்கூடாதென்றும் சொல்லுகிறார்கள். அதை முதலில் ஒழியுங்கள். கீழிருந்து ஒழித்துக் கொண்டு வந்த பிறகு மேலுள்ளவைகளை ஒழிக்க முயலுங்கள்” என்று சொல்லக்கூடும். கீழே காணப்படும் பிரிவினைகள் உண்மையானதல்ல, இது பார்ப்பானைப் பார்த்து அவன் போல் நடக்க வேண்டுமென்று ஆசைப்பட்டு அறியாமையால் நடித்து வருகிற வினையின்றி சூழ்ச்சிக்காக வேண்டுமென்றே ஏற்படுத்திக் கொண்டதல்ல. (கை தட்டல்)

பார்ப்பனருக்கு முன் நம் நாட்டில் இந்தக் கொடுமைகளும் கூடா ஒழுக்கங்களுமிருந்ததாக சொல்ல முடியாது. நான் சிறந்த ஆராய்சிக்காரனுமில்லை. குறைந்த ஆராய்ச்சிக்காரனுமல்ல, அடியோடு ஆராய்ச்சி இல்லாதவன். ஆனாலும் பல ஆராய்ச்சிக்காரர்களை அடுத்து கேட்டதின் பயன் அறிந்தவனேயன்றி வேறல்ல. முதலாவது இந்த சாதி என்னும் சொல்லே தமிழ்ச் சொல்லல்ல. சாதிக்கு ஆதாரம் இந்து மதம் என்று சொல்லுவது அந்த இந்துமதம் என்ற சொல்லும் தமிழ்ச் சொல்லல்ல. அதற்கு ஆதாரமாக உள்ள வேதமும் மனுதர்மமும் நமக்கு சம்மந்தப்பட்டவையுமல்ல. அவைகள் நம் பாஷையில் உள்ளவையுமல்ல. நம் மக்களால் எழுதியவையுமல்ல. இந்து என்ற சொல் எந்த மொழியிலுமில்லை, எப்படியோ அது நம் தலைக்கு வினையாக வந்து சேர்ந்திருக்கின்றது. ஆராய்ச்சிக்காரர்கள் அதை ஒரு நதியின் பெயர் என்கிறார்கள். சிலர் ஒரு இடத்தில் வாழும் குறிப்பிட்ட மனிதர்களைக் குறிப்பது என்கிறார்கள். சிலர் பர்சிய பாஷையில் திருடர்களைக் குறிப்பது என்கிறார்கள். மருவி வந்ததென்பார்கள் சிலர். மற்றபடி வருணாசிரம தர்மமென்னும் சொல்கூட தமிழ்ச்சொல் அல்ல. நம்நாட்டில் அந்நியமம் இருந்திருந்தால் நம் மொழியில் அதற்கு வார்த்தை இருந்திருக்கும்.

சோளம் நம் நாட்டில் விளைகிறது. அதை சோளம் என்று சொல்லுகிறோம். ஆங்கிலேயரும் அதை சோளமென்றே சொல்லுவார்கள். ஏன்? அவர்கள் நாட்டில் அது இருந்ததில்லை. அது போலவே காப்பியை நம் தமிழ் மக்கள் ஆங்கிலேயர் வருவதற்கு முன்பு ஒரு பானமாக உபயோகிக்கவில்லை. அதனால் நம் தமிழ் மொழியில் அதற்கு ஒரு பெயரிடுவதற்கு இல்லாமல் போயிற்று. ஆதலால் நாமும் அதை அன்னிய நாட்டுப் பெயரால் காப்பி என்றே அழைக்கின்றோம். வர்ணாசிரமதர்ம சாதி பாகுபாடு நம் தமிழ்நாட்டில் ஆரியர்கள் வருவதற்கு முன்பேயிருந்திருந்தால் நம் மொழியில் அவைகளுக்குத் தனிப் பெயரிருந்து தானிருக்கும். அன்றியும் இப்பெயர்களையும் இவ்வித்தியாசங்களையும் நாம் ஆதியில் இருந்தே கண்டித்து வந்திருக்கின்றோம் என்பதற்கு அறிகுறிதான் ஆரியர்களை நாம் மிலேச்சர்கள் என்று சொல்லுவது. எனவே இவைகள் ஒழிய வேண்டுமானால் இவ்வாரியத்தன்மை ஒழிய வேண்டும்; ஆரியமதம் ஒழிய வேண்டும்; ஆரியக் கொள்கை ஒழிய வேண்டும்.

அப்படிக்கின்றி அவைகளை ஒழிக்காமல் அவைகளுக்கு மகாத்மாவைப் போல் சவுகரியத்திற்கும் சமயத்திற்கும் தகுந்தபடி வியாக்கியானங்கள் செய்து கொண்டிருப்பதினால் ஒரு அணுவளவு பயனும் உண்டாகாது. அடிக்கடி சறுக்கி விட்டு ஆரிய மாய்கையில் விழவேண்டியதாய்தான் விடும். அதனால்தான் இவ்வளவு ஆயிர வருஷம் பாடுபட்டும் இன்னமும் அதே அடிமை நிலையில் நமது நாடு இருந்து வருகின்றது. தவிர சிலர் சொல்லுவது போல் கீழே இருந்து இவ்வித்தியாசங்களைப் போக்கிக் கொண்டு போக வேண்டுமென்பது ஒரு காலத்திலும் முடியும்படியான காரியமல்ல. அதற்கு ஆதாரமானதாகிய வேரிலிருந்து பறித்து வெட்டியிருந்தால்தான் மறுபடி முளைக்காமலிருக்கும். அப்படிக்கில்லாமல் அதிலிருந்து முளைத்த கிளைகளை, மாத்திரம் வெட்டினால் மறுபடியும் அது நன்றாய் துளிர்த்து தழைத்து கொண்டுதானிருக்கும். எனவே உற்பத்தி ஸ்தானமான பார்ப்பனர்களிடமிருந்து அதை ஒழிக்க வேண்டும். அவர்களால்தான் இவ்வித்தியாசங்கள் பரவுகின்றன.

உதாரணமாக, எங்கள் வீட்டிற்குமுன் ஒரு குழாய் இருக்கிறது. அதில் தண்ணீர் பிடிக்க ஒரு பார்ப்பன சகோதரி வரும் போது ஒரு சுண்டக்காய் பிரமாணம் புளியும் பஞ்ச பாத்திரத்தில் தண்ணீரும் கொண்டு வந்து குழாயை புளியால் விளக்கி கழுவி பின்பு தண்ணீர் பிடித்துக் கொண்டு போக ஆரம்பிக்கிறாள். இதைப் பார்த்த நம் சகோதரிகள் நெல்லிக்காய் அளவு புளியும் ஒரு தோண்டி தண்ணீரும் கொண்டு வந்து புளியால் விளக்கி கழுவித் தண்ணீர் எடுத்துக் கொண்டு போக பழகுகிறார்கள். இதைக் கண்ணுற்ற நம் முகம்மதிய சகோதரிகளும் கொளுமிச்சங்காய் அளவு புளியும் முக்கால் குடம் தண்ணீரும் கொண்டு வந்து புளியால் குழாயை விளக்கி கழுவி தண்ணீர்ப் பிடித்து எடுத்துக் கொண்டு போகப் பழகுகிறார்கள். அந்த முகம்மதிய சகோதரியை அடுத்து “உங்கள் மதத்திற்கு வித்தியாசம் இல்லையே, நீங்கள் கூட ஏன் இப்படி கழுவி தண்ணீர் பிடிக்கிறீர்கள்” என்றால் “எனக்கு என்ன தெரியும் இப்படித்தான் தண்ணீர் பிடிப்பது வழக்கமோ என்னமோ என்று கருதி நான் செய்து வருகிறேன்” என்கிறாள். இவ்வளவுக்கும் காரணமாயிருந்தவர்கள் யார் என்று பாருங்கள். பார்ப்பனர்கள் இப்படிச் செய்யாதிருந்தால் இவ்வித வழக்கங்கள் பரவ வழியில்லை. அவர்கள் போட்ட முடிச்சு அவர்களால்தான் அவிழ்க்க வேண்டும் என்று விவேகானந்த சுவாமி சொல்லியிருக்கின்றார்.

நம் மக்களில் சிலர் “அல்லாதார்” என்ற பெயர் ஏன் என்பார்கள். அதற்கும் சமாதானம் சொல்ல வேண்டி இருக்கிறது. ஆன்டி காலரா மருந்தென்றால் அம்மருந்து எப்படி காலரா வந்த உடன் நினைவுக்கு வருமோ, “ஆன்டி பிளேக்” மருந்தென்றால் பிளேக்கு வந்தவுடன் நினைவுக்கு வருமோ, மூட்டை பூச்சிக்கு “எமன்” என்றால் எப்படி மூட்டப் பூச்சி கடித்தவுடன் அம்மருந்து நினைவிருக்குமோ அதுபோல் சமத்துவமில்லாமல் கொடுமையில் பட்டு இழிவை அனுபவித்து வரும் மக்களுக்கு அது ஒழிய வேண்டுமானால் அதற்கு ஆதாரமானவர்கள் பெயரும் அவர்களைக் கண்ட அளவில் நினைவிருக்க வேண்டும். கொடுமை செய்த விதமும் ஞாபகத்திற்கு உடனே வர வேண்டுமெனக் கருதியே பார்ப்பனரல்லாதார் இயக்கம் எனப் பெயர் கொடுக்கப்பட்டதேயன்றி வேறல்ல. இவ்வித இழிவும் கொடுமையும் ஒழிந்து எல்லா மக்களும் சமத்துவம் அடைந்து நாம் ஒற்றுமையானால் இவ் “அல்லாதார்” என்ற பெயர் தானாக இல்லாமலே போகும்.

அரசியலிலும் கூட அல்லாதாரென்கிற பெயரை நீக்கி நாம் வாழ முடியவில்லை. அது அவமானமில்லை என்றுதான் கருதி இருக்கிறோம். அரசியல் சிர்திருத்த மென்பதில் தேர்தல்களுக்குக் கிறிஸ்தவர்கள், கிறிஸ்தவர்கள் தொகுதியில் நிற்கிறார்கள். ஆனால் நாம் மாத்திரம் முகமதியர் அல்லாதாரென்ற தொகுதிக்கு மாத்திரம், முகமதியர் அல்லாதார் என்ற தொகுதிக்கு நின்றுதான் இப்பொழுதும் சட்டசபை அங்கத்தினராகவும் நாம் முகமதியர் அல்லாதார் தொகுதியில் ஓட்டர்களாகவும் இருந்து வருகிறோம். அரசாங்கத்தாருக்கும் இதைத் தவிர வேறு பெயர் கிடைக்கவில்லை. நமக்கும் சொல்லத் தெரியவில்லை.

இந்து மத பரிபாலன சட்டம் கொண்டு வந்த காலத்தில் இந்த பார்ப்பனர்கள் இந்து மதம் போயிற்றென்று சொன்னார்களே ஒழிய தங்களுக்கும் மகமதியரல்லாதார் என்கிற பெயர் வேண்டாம் என்று சொல்லவே இல்லை. ஏன் என்றால் வேறு பெயர் சொல்வதற்கு இல்லை. இருந்திருந்தால் வாதாடிப் பார்த்திருப்பார்கள். இவைகளெல்லாம் எதற்காக சொல்லுகிறேனென்றால் நமது எதிரிகள் நம் இயக்கத்தைக் கெடுக்க சில்லரை விஷயத்தைச் சொல்லி மக்களை எவ்வளவு தூரம் ஏமாற்றுகிறார்களென்பதை தெளிவுப்படுத்தவே யன்றி வேறல்ல.

எந்தப் புராணத்திலும் எந்தச் சரித்திரத்திலும் இந்து மதம் என்பதைப் பற்றி எங்கும் ஒரு வரி கூட சொல்லவில்லை. ஆங்கில அரசாங்கமுள்ள இந்த நாளில்தான் இந்து என்ற பெயர் ரயில்வே பிளாட்பாரத்திலுள்ள ஓட்டல்களில் இந்து பிரயாணிகளென்றும், வெளிக்குப் போக உள்ள இடங்களில் இந்து புருஷர்கள், இந்து பெண்கள் என்றும் எழுதியதைக் காணலாமேயன்றி வேறு எங்கும் காணமுடியாது. ஆகையால் இச்சங்கத்திற்குப் பார்ப்பனரல்லாத வாலிப சங்கமென்று பெயர் வைத்துக் கொண்டதில் சிறிதும் பிழை இல்லை. அநேகர் குற்றம் கூறினாலும், சமாதானம் சொல்லுவதற்கு வேண்டிய சாதனங்களிருப்பதால் நாம் ஒரு சிறிதும் அதற்காக பயப்படாது நம் காரியத்தைச் செவ்வனே செய்து வரல் வேண்டும்.

பார்ப்பனரல்லாத வாலிபர்கள் செய்ய வேண்டுவன

நீங்கள் என்ன செய்ய வேண்டுமென்பதைப் பற்றி சிறிது சொல்லுகிறேன். நாம் சத்தியத்தின் பெயரால் படும் இடையூறுகளை வேருடன் களைந்தெறியும் வரை பார்ப்பனரல்லாத வாலிபர்கள் கண்டிப்பாய் அரசியலில் ஒருபோதும் தலையிடுதல் கூடாது. அரசியலில் தலையிட ஒரு பக்குவமுண்டு. அந்த பக்குவம் உங்களுக்கும் இந்த நாட்டுக்கும் வந்த பின்பு அரசியலில் தலையிட்டால் பயன்படும். நமக்கும் அரசியலுக்கும் தற்பொழுது பொருத்தமும் கவனமும் வைக்கக் கூடாது. நாம் அனைவரும் பொதுவாழ்வில் சம சுதந்திரமும் பிறவியில் நமது வாழ்வும் துக்கமும் அனைவருடைய வாழ்வும் துக்கமுமாகும் என்றும் பிறவியில் உயர்ந்தவருமில்லை இழிந்தவருமில்லை என்றும் உணர்ச்சி உண்டாகும் வரையில் அரசியலில் தலையிடுதல் கூடாது. அப்படி தலையிட்டால் அது தற்கொலையாகவே முடியும்.

அன்னியர்

மக்களுக்கு அன்னியர் ஆளுவது என்பது கஷ்டமாகத் தானிருக்கும். அந்த ஆட்சியை வாங்கி நாம் ஆளவேண்டுமென்ற எண்ணங்கள் சாதாரணமாக உண்டாவது இயல்புதான். அன்னியர் என்பவர் யார்? நாம் என்று சொல்லிக் கொள்பவர் யார்? என்று ஆராயப் புகின் அன்னியர் வெள்ளைக்காரரென்றும், நாமென்பது பிராமணர், சூத்திரர், பஞ்சமர், கிறிஸ்தவர், முகமதியர் மற்றும் பல சாதியாரும் என்று எண்ணியிருக்கின்றோம். பிராமணனை நம்மவர்கள் என்பதில் சேர்க்கும் போது வெள்ளைக்காரர்களை மாத்திரம் எப்படி அன்னியர் என்று சொல்லக்கூடும்? பார்ப்பனனை விட வெள்ளைக்காரன் நமக்கென்ன கொடுமை செய்கிறான்? வெள்ளைக்காரன் நமக்கு செய்துவரும் கொடுமைகள் என்பதெல்லாம் பார்ப்பனன் யோசனை கேட்டுப் பார்ப்பனன் சொல்லுகிறபடி பார்ப்பனன் உதவியால் அவன் சம்மதத்தின் பேரில் செய்கிறானா, தானாகவே செய்கிறானா? தவிர வெள்ளைக்காரன் நீங்கிய மற்றவர்கள் எல்லாம் ஒன்று என்றும், ஒன்றாய்ச் சேர்ந்து சுயராஜ்யம் கேட்கின்றார்கள் என்றும் எப்படி சொல்ல முடியும்?

லார்டு ஈர்வின் துரை இங்கு வந்து “நாங்கள் ஊருக்குப் போகிறோம். இந்த கஜானா சாவி இந்த முத்திரை இந்த பட்டம் ஆகிய மூன்றை எடுத்துக் கொள்ளுங்கள்” என்று சொல்வதாகவே வைத்துக் கொள்ளுவோம். அதை யார் வாங்கிக் கொள்வது? முதலில் அய்யர் வருவார் “நான் தான் படித்திருக்கின்றேன் எனக்கு அரசாளும் திறமை வெள்ளைக்காரர்களை அடுத்து கற்றுக் கொண்டிருக்கிறேன்” என்று நம்மிடத்தில் சொல்லி வெள்ளையரிடம் சென்று “நீங்கள் இவ்வளவு நாள் இங்கிருப்பதற்கு நாங்களல்லவா உதவியாயிருந்தோம். உங்களை எங்கள் நாட்டாருக்கு காண்பித்துக் கொடுக்காமல், எங்கள் நாட்டாரை உங்களுக்கு காண்பித்துக் கொடுத்தோமே, நீங்கள் நன்றியுடையவர் என்கிறீர்களே, அப்படியானால் எங்களிடம் கொடு” என்பார்கள்.

நாம் சம்மதிக்காததாயிருக்கின்றோமா? “வெள்ளைக்கார அரசாங்கமிருக்கும் போதே, எங்களை சூத்திரர்கள் என்று கொடுமைப்படுத்தும் நீங்கள் வெள்ளைக்காரர்கள் போய் விட்டால் என்ன செய்ய மாட்டீர்கள்” என்று கேட்டு தடுப்போமா இல்லையா? இதைக் கேட்ட லார்ட் ஈர்வின் “நீங்கள் தான் பெருவாரியாயிருக்கிறீர்களே, நீங்களாவது வைத்துக் கொள்ளுங்கள்” என்று நம்மிடம் கொடுத்தால் பார்ப்பனர்கள் சம்மதிப்பார்களா? “வெள்ளைக்காரர் இருக்கும் போதே பார்ப்பன துவேஷம் நிறைந்திருக்கின்றது. நீங்கள் போய் விட்டால், நம் கதி என்ன” என்று சொல்லுவார்களா இல்லையா? இப்பொழுதே எத்தனையோ உத்தியோகங்கள் தங்களுக்கு இல்லை என்றால் வெள்ளைக்காரர்களுக்குப் போகப் பார்க்கின்றார்களேயன்றி நமக்குக் கிடைக்க சம்மதிக்கின்றார்களா? அதன் ரகசியம்தானே இரட்டை ஆட்சி ஒழிய வேண்டுமென்பது. அன்றியும் நாம் இருவரும் சம்மதித்து ராஜியாவதாயிருந்தாலும், மகமதியர்கள் சும்மாயிருப்பார்களா? “நாங்கள் இப்போது 7 1/2 கோடி இருக்கின்றோம். இன்னும் நான்கைந்து வருடத்திற்கும் நாங்களே பெரும்வாரியாக 12 கோடிக்கு வந்து விடுவோம். அப்பொழுது உங்களையே துரத்திவிட எங்களுக்குத் தெரியும். அதுவரை நீங்கள் போகாதீர்” என்பார்களா இல்லையா?

அவர்களும் சம்மதித்தார்களென்றே வைத்துக் கொள்ளுவோம். கிறிஸ்தவர்கள் சும்மாயிருப்பார்களா? நாங்கள் சில பேர் உங்களை நம்பி இப்பொழுதுதான் கிறிஸ்தவர்களானோம். அப்படியிருக்க நீங்கள் போவதனால் எங்களுக்காகவும் ஒரு கப்பல் அதிகமாக ஏற்பாடு செய்யுங்கள், நாங்களும் உங்கள் கூடவே வந்துவிடுகின்றோம் என்பார்கள். அவர்களும் ஒப்புக் கொண்டதாகவே வைத்துக் கொள்வோம். எம்.சி. இராஜா சும்மாயிருப்பாரா? “ஐயா எங்களுக்காகத்தானே கடவுள் உங்களை இங்கு அனுப்பினார். உங்களால் தானே நாங்கள் மனிதர்களாக இருக்கிறோம். அப்படி இருந்தும் நீங்கள் இருக்கும் பொழுதே எங்களை வீதியில் நடக்கக் கூடாதென்கிற இவர்கள் நீங்கள் போய்விட்டால் என்ன செய்வார்கள். வண்டியில் கட்டி ஓட்ட மாட்டார்களா என்பதை யோசித்துப் பாருங்கள்” என்று சொல்லி காலைப் பிடித்தாவது குறுக்காட்டிக் கொள்வார்களா இல்லையா?

இந்த நிலையில் நாம் என்பது யார் என்பதை யோசித்துப் பாருங்கள். ஒன்றும் இல்லை. ஒரு மந்திரி என்கின்ற, ஒரு பொறுப்புமில்லாத, உத்தியோகம் நமக்குக் கொடுத்திருக்கும் போதே நமது யோக்கியதை இப்படி இருக்கின்றது? வெளியில் சொல்ல வெட்கக்கேடு. அன்றியும் அதற்கு பார்ப்பன சூழ்ச்சியும் அதற்கு மற்ற சூழ்ச்சியும் எப்படி இருந்து கொண்டு நாடு சிரித்து நம்மை மானக் கேடாக்குகின்றது. இனி அரசாக்ஷியே வந்தால் என்ன கதியாகும் என்பதை நீங்களே யோசியுங்கள். நான் வேண்டுமென்றாவது, வெள்ளைக்காரரென்கிற கொள்ளைக்காரருக்கு அனுகூலமாகவாவது, பார்ப்பனருக்கு இடையூறாகவாவது சொல்லவில்லை. நாட்டின் உயிர்நாடியைப் பார்த்து உணர்ந்து சொல்லுகின்றேன். எனவே நம்மில் ஒரு கூட்டத்தாரே ஏகபோகமாய் வகிக்கும் ஆதிக்கம் ஒழிந்தால், ஒருவரிடம் ஒருவருக்கு அன்பும் நம்பிக்கையும் ஏற்பட்டால், வெளிச்சத்தைக் கண்ட இருள் ஓடுவது போல் அன்னிய ஆக்ஷி நம்மை விட்டு ஓடி விடும். இதனால்தான் நான் அதுவரையில் குறிப்பாக நம் வாலிபர்களுக்கு அரசியல் உணர்ச்சி ஏற்படவே கூடாது என்கிறேன். அதனால் என்ன கெடுதி நேரிட்டாலும் நம் வாலிபர்கள் அரசியலினின்று முற்றும் விலகியிருத்தல் வேண்டும். உத்தியோகத்தால் தான் நமது பார்ப்பனரல்லாதார் இயக்கத்திற்கு பிளவேற்பட்டது.

நம் பார்ப்பனரல்லாதார் இயக்கம் உண்மையாக உத்தியோகப் பற்றின்றி ஆரம்பித்திருக்கலாம் அதை ஏற்படுத்திய தலைவர்களும் அதே எண்ணத்துடனிருந்து இறந்திருக்கலாம். இப்பொழுதும் பலர் உத்தியோக வெறிபிடியாதவர்களுமிருக்கிறார்களென்பதையும் நான் ஒப்புக் கொள்ளுகிறேன். ஆனால் கொஞ்சமிருந்தாலும் பிளவு உண்டாக்குகின்றது. நம் வாலிபர் கருத்தெல்லாம் நாம் எப்படி சுயமரியாதையடைவது? நாம் எப்படி விடுதலையடைவது என்பதையே கொண்டிருத்தல் வேண்டும். அதை விடுத்து உத்தியோகம் எப்படி பெறுவதென்ற எண்ணம் வாலிபர்களுக்குத் தோன்றாமலிருக்குமாறு செய்து கொள்ள வேண்டும். உத்தியோகங்களெல்லாம் வெள்ளைக்காரன் கையில் தானிருக்க வேண்டும். ஏனெனில் நாம் கஷ்டப்பட்டுக் கொண்டும் ஒருவரை ஒருவர் வைது கொண்டும் உத்தியோக வேலை பார்ப்பதில் நமது காலத்தை செலவு செய்து கொண்டுமிருப்பதால் அவன் மேலிருந்து நோகாமல் பணத்தைக் கொள்ளை கொண்டு போகிறான். உத்தியோக மூலம் அரசாங்க குற்றமும் பழியும் நம்மீது வீழ்ந்து, நாம் ஒருவரை ஒருவர் பகைத்துக் கொண்டதுதான் மிச்சம்.

வெள்ளைக்காரன் அரசியலின் பேரால் நாம் கேட்பதெல்லாம் கொடுத்துக் கொண்டுதான் வருகிறான். நாம் ஒரு காலத்திலும் கனவிலும் நினையாத உத்தியோகங்களெல்லாம் நமக்குக் கொடுத்திருக்கிறான். அவைகளினால் நாமடைந்த பலனென்ன? ஒன்றுமில்லை. சீர்திருத்தங்களின் பயன்தானென்ன? ஒன்றுமில்லை. முன்பு மூன்று வெள்ளைக்காரர்கள் பார்த்த வேலையை இப்பொழுது எட்டுப்பேர் பார்க்கிறார்கள். இதற்குச் சம்பளம் ஏழைகள் தலையில் கை வைக்கிறார்கள். இரண்டு சீர்த்திருத்தம் கொடுத்தாயிற்று. மூன்றாவது சீர்திருத்தம் தலைகாட்டுகிறது. அந்த சீர்திருத்தத்தில் கவர்னர் உத்தியோகம் கொடுத்தாலும் கொடுக்கலாம். அதைவிட வேறு உத்தியோகமென்னயிருக்கிறது? ஒன்றுமில்லை. ஆனால் அதன் மூலம் வெள்ளைக்காரனுக்குப் பூட்சு துடைக்க நாம் போட்டி போடப் போகின்றோம். நேற்றோ அல்லது முந்தைய நாளோ நண்பர் திரு.ஏ.இராமசாமி முதலியார் ஒரு கூட்டத்தில் பேசும் போது ஒன்று சொன்னார்கள். அதாவது பார்லிமெண்ட் முதலிய சபைகள் ஏற்படுவதற்கு முன்பு நமக்கு எவ்வளவோ சவுகரியமாய் இருந்தது. இப்போது சவுகரிய குறைவாக இருக்கிறது.

 என்னவென்றால் ஈஸ்ட் இந்தியா கம்பெனியார் நம் நாட்டை ஆளும் போது யாராவது 4 பேர் சேர்ந்து நம் குறையைத் தெரிவித்தால் அப்பொழுதே கடிதமெடுத்து எழுதி ஒரு உத்திரவு பிறப்பிப்பார்கள். அதில் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவமிருந்ததாகவும் சொல்லுகிறார்கள். எல்லோருக்கும் சமஉரிமை சமசந்தர்ப்பம் இருந்ததாகவும் சொல்லுகிறார்கள். இந்த சீர்திருத்தத்தின் பெயரால் நம்மை யார் உதைக்கிறார்களென்று கூட நம்மால் கண்டு அறிய முடியவில்லை. உண்மையான விடுதலை ஒரு காலத்தில் நம் நாடு அடையுமானால் நம் மக்கள் உத்தியோகத்திலில்லாத காலத்தில் தான் முடியும் என்று நினைக்கிறேன். நான் வரப்போகும் பார்ப்பனரல்லாத வாலிபர் மகாநாட்டிற்கு வந்தால் வாலிபர்கள் அரசியலில் தலையிடக் கூடாது என்று ஒரு தீர்மானம் கொண்டு வருவேன்.

என் கொள்கை உங்களுக்குத் தெரியும். என்னைப் பொறுத்தவரையில் காங்கிரசு ஒழிய வேண்டும். இந்து மதம் தொலைய வேண்டும். பார்ப்பன ஆதிக்கம் அழிய வேண்டும். இம்மூன்றுமழிந்தாலொழிய இந்தியாவுக்கு விடுதலை இல்லை, இல்லை, இல்லவே இல்லை. இதை மகாத்மா இடமும் சொன்னேன். என்னை நன்றாய் விசாரித்தார். நான் சொன்னதில் உள்ள தத்துவத்தையும் ஒப்புக் கொண்டார். நீ சொல்வதெல்லாம் சரி, அப்படியாவதினால் உலகம் கெட்டு விடுமென்றார். அப்படியானால் நீங்களே இவற்றைக் கட்டிக் கொண்டு அழுங்கள் என்று சொல்லி விட்டு வெளிவந்தேன். 40 வருடமாக காங்கிரஸ் தோன்றியது முதல் அது நிறைவேற்றிய தீர்மானங்களெல்லாம் அனேகமாய் நிறைவேறியது. அதற்கு மேலும் சில வந்திருக்கின்றன. வெள்ளைக்காரர்களும் காங்கிரசு சொன்னபடி எல்லாம் நடந்து வந்திருக்கிறார்கள். பார்ப்பனர்களுக்கு உத்தியோகம் கிடைத்ததல்லாமல் பாமர ஜனங்களுக்கு லாபம் என்ன? கோர்ட்டுகள், கச்சேரிகள், வக்கீல்கள், நீதிபதிகள் அதிகமானார்கள். இதற்கு வரி அதிகமாயிற்று. நாட்டு மக்களுக்கு சர்க்கார் உத்தியோகமின்றி வேறு வழியில் பிழைக்க மார்க்கமில்லாமல் போய் விட்டது. நம் நாட்டை விட்டு வாரம் ஒன்றுக்கு லட்சக்கணக்கான மக்கள் பிழைப்பதற்கு வேறு நாட்டிற்கு ஓடுகின்றார்கள். சீர்திருத்தத்திற்கு முன் 40 கோடி ரூபாயாக இருந்த வரி இப்பொழுது 165 கோடி ரூபாயாக பெருகியிருக்கின்றது. இது தான் சீர்திருத்ததின் பலன். யோக்கியமான சீர்திருத்தமானால் நமக்கு நீதியில், வாழ்க்கையில், உரிமையில், வரியில் பலனிருக்க வேண்டும். வீதி விளக்கில் படித்தவர்களும், அன்னச்சத்திரத்தில் சாப்பிட்டவர்களும், பிச்சையெடுத்து பள்ளிக்கூடச் சம்பளம் கொடுத்தவர்களும், இன்று நாட்டையே காட்டிக் கொடுத்து பதவி பெற்று அதிகாரம் செய்கிறார்கள். அவன் நான்தான் அந்த உத்தியோகங்கள் பெற பொறுப்புள்ளவன் என்கிறான்.

ஒரு காலத்தில் நிறைந்த செல்வந்தர்களாயும் நாட்டிற்கு பொறுப்புள்ளவர்களாயும், யோக்கியர்களாயும், நீதி துரந்தரர்களாயுமிருந்தவர்கள் இப்போது கையில் அடப்பம் போல் காகிதக் கட்டு ஒன்றெடுத்துக் கொண்டு பார்ப்பனர்கள் வீடுகளில் ஏறி இறங்க வேண்டியிருக்கின்றது. ஒரு கவர்னரும், இரு நிர்வாக அங்கத்தினரும் மேற்சொன்ன மூவருக்கும் மூன்று காரியதரிசிகளுமேயிருந்தார்கள். இப்பொழுது அவர்களுடன் ஐவர். அவர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு காரியதரிசியும் அதிகமாக ஏற்படுத்தப்பட்டது. வெள்ளைக்காரர்கள் முன்பு வாங்கியதில் ஒரு காசும் குறையாது வாங்குகிறார்கள். மற்ற ஐவருக்கும் 5000 ரூபாய் வீதம் எப்படி கொடுக்க முடியும்? இவ்வருஷம் நடக்கப் போகும் காங்கிரசுதான் ஆகட்டும். அதனால் நாட்டுக்கு என்ன பலனுண்டாகக் கூடும்? அதிகமான சீர்திருத்தம் என்று கவர்னர் பதவி கேட்பார்கள். வெள்ளைக்காரரும் கொடுப்பார்கள். அதற்காக நம் மகாணத்தை மூன்று பிரிவாகப் பிரித்து ஒன்று சீனிவாச சாஸ்திரிக்கும், ஒன்று கோஷன் பிரபுவுக்கும், மற்றொன்று இன்னொரு வெள்ளைக்காரனுக்குமாக பங்கிட்டுக் கொள்ளுவார்கள். அப்பொழுது ஒவ்வொருவருக்கும் 10,000 ரூபாய்தான் சம்பளம் கொடுக்க வேண்டும் என்று காங்கிரசு தீர்மானிக்கும். ஏனென்றால் உத்தியோகத்திற்குத் தகுந்த சம்பளம் வேண்டாமா என்பார்கள். அப்போதும் வெள்ளைக்காரன் தான் வாங்கும் சம்பளம் வாங்கித்தான் தீருவான். மேற்கொண்டும் ஒரு கவர்னராவான். சம்பளத்திற்காக அதிகமான இரு கவர்னர் கார்டின் விலை உயர்த்தியோ, குடி வரியை உயர்த்தியோ, சாமான் வரி உயர்த்தியோ, நிலவரி உயர்த்தியோ, வருமானவரியை உயர்த்தியோதான் தீர வேண்டி வரும். இவ்வரிச் சுமைகளை சுமப்பவன் கதி என்ன?

இதைப்பற்றி மகாத்மாவைக் கேட்டதில் தந்திரக் காரர்கள் நாட்டை ஆட்சி புரிவது சுபாவம்தானென சொன்னார். அப்படியே இருக்கட்டும். அதில் நமக்கும் உங்களுக்கும் ஏன் பங்கு இருக்க வேண்டும் என்றேன். தக்க மகான்கள் அந்த இடத்திற்கு வந்தால் எல்லாம் சரியாகும். அதுவரை அந்த ஸ்தாபனங்களை அழிக்காமல் வைத்திருக்க வேண்டுமென்றார். உங்களை விட வேறொரு மகான் எப்பொழுது வருவார்? அவர் யார்? ஒரு கோடி ரூபாய் கேட்டீர்கள். 15 நாளில் கொண்டு வந்து கொடுத்தார்கள். 1000 பேர் சிறைக்குச் செல்லுங்களென்றால் முப்பதினாயிரக்கணக்காக சிறைக்குச் சென்றார்கள். சிறைச்சாலைகளிலே இடமில்லாதவாறு செய்தார்களே. இதை விட மகான் யார் என்றேன். ஒருவர் மீது கொண்டுள்ள வெறுப்பால் அப்படிப் பேசுகிறாய் என்றார். எனக்கு யார் மீதும் கோபமில்லை. காங்கிரசு ஒழிய வேண்டும். அதை ஆரம்பித்தவர்கள் உத்தியோகத்திற்கு ஆசைப்பட்டு ஆரம்பித்தார்கள் என்று சொன்னேன். அதற்கு அவர், அப்படியானால் தாதாபாய் நவரோஜி, கோகலே முதலிய இவர்களும் அப்படிப்பட்டவர்களா என்றார். தாதாபாய் நவுரோஜி, கோகலே, மகாத்மா காந்தி என்ற 3 பேர் யோக்கியர்கள் அதிலிருந்தால் பாக்கி 97 பேர் யோக்கியதையைப் பார்க்க வேண்டாமா என்று சொன்னேன். அன்றியும் பார்ப்பனர்கள் நாட்டிற்கு ஏதாவது நன்மை செய்திருக்கிறார்களா என்று யோசித்து ஒன்று சொல்லுங்கள் என்றேன். சொல்ல முடியாது. ஆனாலும் தள்ள முடியாதென்றார். கடைசியாக உத்திரவு பெற்றுக் கொண்டு திரும்பி விட்டேன்.

குருட்டு நம்பிக்கைகள் நன்றாய் நம் இரத்தத்துடன் கலந்து வேரூன்றி விட்டது. இதனால் என்ன ஆனாலும் வாலிபர்கள் முனைந்து நின்று வேலை செய்ய முற்படல் வேண்டும். வாலிபர்களென்றால் 18 வயதிலிருந்து 26 வயதிற்குட்பட்டவர்கள்தான் என்பது என் எண்ணமல்ல. என் எண்ணப்படி சாகும் தருவாயிலிருக்கும் முதியோனும் அவன் மனதில் மக்களுக்காக பாடுபட வேண்டும். அதற்காக உயிரையும் விடத் தயார் என்று எண்ணினால் அம் முதியோனும் வாலிபனே. ஆனால் வயதில் வாலிப பருவத்திலிருந்தும் நமக்கென்ன இதைப்பற்றி என்று சுயமரியாதையைக் கவனிக்காமலிருப்பவன் ஒரு காலமும் வாலிபனாகான். ஆகவே, நீங்கள் தைரியமாக உணர்ச்சியோடு உழைத்துப் பெரியோர்களையும் சுயநலக்காரர்களையும் உங்கள் வசம் திருப்ப முயற்சி செய்தல் வேண்டும். இப்பொழுது நாம் சமத்துவத்திற்காக பாடுபட்டு வெற்றி பெற்றுவிட்டால் பிறகு அரசாங்கக் கொடுமைகளை மெள்ள ஒழித்து விடலாம். மற்றும் சுயமரியாதை சத்தியாக்கிரகத்தையும் கவனியுங்கள்.

எனக்குத் தெரிந்தவைகளையும் என் மனதிற்கு தோன்றியவைகளையும் பழிபாபங்களுக்காக சிறிதும் அஞ்சாது உங்கள் முன்னிலையில் பகர்ந்தேன். அதில் எது சரியென்று உங்களுக்குத் தோன்றுகிறதோ அதைக் கடைப்பிடித்து ஒழுகுமாறு வேண்டி முடித்துக் கொள்ளுகிறேன்.

(குறிப்பு: 19.10.27-ல் சென்னை புரசைவாக்கம் அன்னதான சமாஜத்தில் நடைபெற்ற பார்ப்பனரல்லாத வாலிபர் சங்கக் கூட்டத்தில் திரு. சொக்கலிங்க முதலியார் பி.ஏ., பி.எல். அவர்கள் தலைமையில் ஆற்றிய சொற்பொழிவு. குடி அரசு - சொற்பொழிவு - 30.10.1927)

Pin It