திவ்யா - இராஜ்குமார் இணையர் நேர்காணல்
நாராயணமூர்த்தி, வடிவேல்
நான் திவ்யா. என்னுடைய இணையர் பெயர் இராஜ்குமார். எங்களுக்கு ஒரு குழந்தை பெயர் இசைப்பிரியா. என்னுடைய ஊர் கோயம்புத்தூர் அருகில் உள்ள உக்கடம். என்னுடைய இணையரின் ஊர் அவினாசி சேவூர் அருகிலுள்ள கிளாகுளம். என்னுடைய திருமணத்திற்குப் பிறகு நாங்கள் கிளாகுளத்தில்தான் வசிக்கிறோம்.
உங்களின் திருமணத்தையும், திருமணத்திற்கு முன்பிருந்த உங்களுடைய வாழ்க்கைமுறை பற்றியும் சொல்லுங்கள்?
எங்களுக்கு 3.3.2014 ல் திருமணம் நடந்தது. நாங்கள் முழுக்க முழுக்க ஒரு இந்துக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். என்னுடைய அப்பா காரமடைக்கு ‘பந்த சேவை’ எடுப்பவர். சனிக்கிழமை என்றாலே நான் காலை டிபன் சாப்பிடுவதற்கே மதியம் ஆகிவிடும். வீடு சுத்தம் செய்வது, வீட்டுவேலைகளை பார்த்துவிட்டு, குளித்துவிட்டு சாப்பிடுவதற்கு அவ்வளவு நேரம் ஆகிவிடும், அவ்வளவு பக்தியாக இருப்பேன்.
என்னுடைய திருமணத்திற்கு முன்பு ஒரு விசேஷத்திற்குப் போக வேண்டுமென்றால் அந்த இடத்தில் என்னை அழகாகக் காட்டிக் கொள்வதற்காக நான் அதிகமாகப் பணம் செலவு செய்வேன். மற்றவர்களின் பார்வையில் என்னை அழகாகக் காட்டிக்கொள்ள வேண்டும், என்னுடைய உடை, அலங்காரம் இவற்றைப் பிறர் புகழ்ந்து பேசவேண்டும் என்று நினைப்பேன். அந்த மாதிரி அலங்காரம் செய்வது எனக்கு ஒரு சந்தோஷம். என்னுடைய வீட்டில் இருப்பவர்களும் யாரும் என்னுடைய அலங்காரத்திற்கு மறுப்பு சொல்ல மாட்டார்கள்.
திருமணத்திற்கு முன்பு இருந்த வாழ்க்கை முறையை திருமணத்திற்கு பின்பும் கடைபிடித்தீர்களா? அதற்கு அவர்கள் யாரும் மறுப்பு தெரிவித்தார்களா?
என்னுடைய திருமணத்திற்குப் பிறகு இராஜ்குமார் வீட்டில் வந்து பார்த்தால் ஒரு சாமி போட்டோ கூட கிடையாது. நான் சாமி கும்பிட வேண்டும், என்னுடைய விரதத்தை விட முடியாது. அதனால் பீரோவில் மட்டும் சிறியதாக ஒரு சாமி படம் வைத்து வணங்கி வந்தேன். நான் கோவிலுக்குப் போவதற்கும் யாரும் மறுப்பு தெரிவிக்கவில்லை. இராஜ்குமார் நான் கோவிலுக்கு வரவில்லை நீ போவதாக இருந்தால் போ என்றுதான் சொல்வார். அவர் வரவில்லை என்றாலும் பரவாயில்லை என்னைக் கோவிலுக்குச் செல்ல அனுமதித்தாரே அதுவே போதும் என்று நினைப்பேன். ஒரு சில நாட்களில் அவரே என்னைக் கோவிலுக்குக் கூட்டிக்கொண்டு போவார். அவர் நான் வெளியில் நிற்கிறேன்... நீ வேணா கோவிலுக்கு போயிட்டுவான்னு சொல்லுவார்.
நீயே எப்போ பெரியாரியலைத் தெரிஞ்சுக் கிட்டு வருவியோ வா, உன்னுடைய சுதந்திரத்தில் நான் தலையிடவில்லை, போகாதே என்று சொன்னால் நாம் இருவருக்கும் சண்டைதான் வரும், அதனால்தான் எதையும் உன்மேல் திணிக்க விரும்பவில்லை என்று சொல்லுவார். அதேபோல் எங்களுக்குக் குழந்தை பிறந்த பிறகும் கூட, ‘பா’ என்ற எழுத்தில் பெயர் வைக்கவேண்டும் என்று ஜோசியரிடம் சென்று நல்ல நேரம் பார்த்து ‘பா’ என்ற எழுத்தில் வைத்தால் குழந்தையின் வாழ்க்கை நன்றாக இருக்கும் என்று சொன்னார்கள். அப்போது ஜோசியர்கள் என்ன சொல்கிறார்களோ அதை அப்படியே நானும் என்னுடைய குடும்பத்தாரும் கடைபிடிப்போம். என்னுடைய பிடிவாதத்தினால் குழந்தைக்கும் அதே மாதிரி பெயர் வைத்தோம்.
எங்களுடைய வீட்டில் வாரத்தில் நான்கு நாட்களுக்கு கறி எடுத்தாலும் சனிக்கிழமை மட்டும் கறி எடுக்க மாட்டோம். ஆனால் இராஜ்குமார் வீட்டில் சனிக்கிழமை யிலேயே கறி எடுத்தனர். சனிக் கிழமையில் கறி சாப்பிடவில்லையென்றால் அந்த வாரம் முழுவதும் சாப்பிடவே முடியாது என்ன செய்வது என்று யோசித்துவிட்டு கறி சாப்பிட்டு விட்டு குளித்து விட்டு சாமி கும்பிடலாம் என்று முடிவு செய்து சனிக்கிழமை விரதத்தை விட்டு விட்டு கறி சாப்பிட ஆரம்பித்து விட்டேன்.
கோவிலுக்குப் போய் தீவிர பக்தையாக இருந்த நீங்கள் பெரியாரியல் பண்பாட்டைக் கடைபிடிக்கக் காரணம் என்ன?
நாங்கள் டெய்லரிங் கடை ஒன்றை ஆரம்பித்தோம். அந்தக் கடைக்கு வரும் வாடிக்கை யாளர்கள் நீங்கள் எந்த ஊர் என்று கேட்கிறார்கள், அந்த ஊர்ப் பெயரைச் சொன்னால், எந்தப் பகுதியில் வசிக்கிறீர்கள் என்று கேட்கின்றனர். இதைத் தெரிந்து கொண்டால், நான் எந்தச் சமூகத்தைச் சேர்ந்தவள் என்பதைத் தெரிந்து கொள்வதற்கே இப்படியெல்லாம் கேள்விகளைக் கேட்டனர்.
இவை எல்லாம் எனக்குப் புதிதாக இருந்தது. நான் நகரத்து வாழ்க்கையில் இருந்ததால் சாதியைப் பற்றிப் பெரியதாக எதுவும் இருக்காது. ஆனால், இங்கு என்னுடைய சாதியைத் தெரிந்துகொள்ள எத்தனை கேள்விகளை என்னிடம் கேட்கின்றனர். அப்போதுதான் சாதியக் கொடுமையாகவும் தீண்டாமையாகவும் நான் உணர்ந்தேன்.
இதை இராஜ்குமாரிடம் நான் சொன்ன போது “இதைப்பற்றித் தெரிந்துகொள்ளத்தான் பெரியாரியல் புத்தகங்களைப் படிக்கச் சொன்னேன்” என்றார். பெரியாரியல் பண்பாட்டைச் சார்ந்த புத்தகங்களைப் படிக்கக் கொடுத்தார். அதை நான் கையில் கூட வாங்கமாட்டேன். அதை வாங்கிப் படித்து நாமும் இவங்க மாதிரி சாமி இல்லைன்னு சொல்லிட்டு இருக்கணும். இப்படி இருந்தால் இந்தச் சமுதாயத்தில் என்னுடைய உறவினர்கள் மத்தியில் பகையாளி ஆகிவிடுவோம் என்று நினைத்தேன். ஏனென்றால் எல்லோரும் ஒரே மாதிரி இருக்கும் போது நான் மட்டும் தனியாக வேறுபட்டு இருக்க முடியாது.
அதன்பிறகுதான் வீட்டில் இருந்த புத்தகங்களை எடுத்துப் படிக்கலாம் என்று முடிவு செய்து எடுத்துப் படித்தேன். புத்தகம் சொல்லுதாம் “என்னைத் தொட்டுப்பார் நான் காகிதம், என்னைப் படித்துப்பார் நான் ஆயுதம்” என்று நான் படித்தேன் . அது எனக்கு ஆயுதமாக மாறிவிட்டது. அதே புத்தகங்களை வீட்டில் வைக்கும்போது ராஜ்குமாரின் அண்ணனிடம் (கிளாகுளம் கு.செந்தில்குமார்) இந்த மாதிரி எல்லா இடங்களிலும் புத்தகங்களை அடுக்கி வைத்து விட்டால் நான் சமைப்பதற்கான பொருட்களை யெல்லாம் எங்கு கொண்டு போய் வைப்பது என்று கூட நான் சண்டை போட்டு இருக்கிறேன். அப்போது எல்லாம் அந்தப் புத்தகத்தின் மதிப்பு தெரியாமல் போய்விட்டது.
பெரியாரியல் புத்தகங்களைப் படித்தவுடன் உங்களிடம் ஏற்பட்ட மாற்றங்கள் என்ன?
பெரியாரியல் புத்தகங்களில் முதலில் பெண்கள் சார்ந்த புத்தகங்களாக எடுத்துப் படித்தேன். அதிலிருந்து பெண்களுக்கு அலங்காரம் தேவையில்லாதது என்று நினைத்தேன். ஆண்கள் மட்டும் இப்படி இருக்கும் போது நான் மட்டும் ஏன் என்னை அழகுபடுத்தி மற்றவர்களின் கவனத்தை என் மேல் ஈர்க்க வேண்டும். இது எவ்வளவு பெரிய முட்டாள் தனம் என்பதை உணர்ந்தேன். இந்தப் பொண்ணு அழகா இருக்குதுன்னு சொல்வதை விட “அறிவா பேசுது”, “நல்ல பகுத்தறிவுச் சிந்தனையோட இருக்குதுன்னு” மற்றவர்களின் முன்னிலையில் இருக்க வேண்டும் என்று நினைத்தேன்.
புத்தகங்களைப் படிக்கும்போது நான் ஒரு தீ விபத்து பற்றிய செய்தியைப் படித்தேன். அப்போது அந்தத் தீ விபத்தில் அதிகமாகப் பெண்கள் இறந்து விட்டதாக இருந்தது. அதற்குக் காரணம் என்னவென்று பார்த்தால் அந்த விபத்தில் இறந்த பெண்கள் எல்லோரும் சேலை கட்டியிருந்ததாகவும் அதனால் அவர்கள் விபத்து நடக்கும் போது ஓட முடியாமல் போனதால் இறந்துவிட்டனர். ஆண்களுக்கு ஓடுவதற்கு ஏதுவாக உடை இருந்ததால் அவர்கள் சீக்கிரமாக ஓடிவிட்டனர் என்று படித்தேன். அப்போதுதான் நான் உணர்ந்தேன் தன்னுடைய உயிரையே காப்பாற்றிக் கொள்ள முடியாத இந்தச் சேலை நமக்குத் தேவையில்லை. ஆண்களுக்கு இணையாக எளிமையான உடை அணிய வேண்டும் என்று முடிவு செய்தேன்.
என்னுடைய சேலைகளை எல்லாம் எடுத்து என்னுடைய உறவினர்களுக்குக் கொடுத்து விட்டேன். அழகு சாதனப்பொருட்களைத் தவிர்த்தேன். பின்பு திருமணத்தின் போது அணிந்திருந்த மெட்டி, திருமணமானவுடன் நெற்றியில் வைக்கும் குங்குமம், பூ, வளையல் இவைகளையும் தவிர்த்தேன். தாலியை மட்டும் செண்டிமெண்டாகக் கொஞ்ச நாள் போட்டுக்கொண்டு இருந்தேன். பின்பு தாலியும் வேண்டாதது என்று உணர்ந்தேன். தாலியையும் கழட்டி விட்டேன். அதன்பிறகு என்னுடைய தலைமுடியை வெட்டலாம் என்று நினைத்தேன். அதற்கு இராஜ்குமாரிடம் ஆலோசனை கேட்டேன். இராஜ்குமார் அது உன்னுடைய விருப்பம் என்று சொல்லிவிட்டார். நானும் Boy Hair Cut பண்ணி விட்டேன். இப்போது எனக்கு தலைவலிப் பிரச்சனை இல்லை. எங்கு போனாலும் சீக்கிரமாகக் கிளம்ப முடிகிறது.
என்னுடைய மகளுக்கும் Boy Cuttting தான் பண்ணி விடுகிறோம். என்னுடைய குழந்தைக்கு 1000, 1500 ரூபாய்க்கு கூட கவுன் எடுத்து இருக்கிறேன். மிகவும் ஆடம்பரமாகக் காட்ட வேண்டும் என்பதற்காக. ஆனால் அது எல்லாம் தவறு என்பதை உணர்ந்தேன். புத்தகம் படித்தவுடன் என்னுடைய உடையிலும் மாற்றம், எனக்குள்ளும் மாற்றம். நான் புத்தகம் கையில் எடுத்தது தாமதம் என்று நினைக்கிறேன். இதைப் பற்றி முதலிலேயே தெரிந்து இருந்தால் எனக்குத் திருமணம் செய்யச் செலவு செய்த பணத்தை எனக்குக் கையில் கொடுங்கள் என்று சொல்லி வாங்கி சொந்தமாக ஏதாவது தொழில் செய்திருப்பேன்.
உங்களுடைய மாற்றத்தை உங்கள் வீட்டிலும், உங்கள் உறவினர்களும் எப்படிப் பார்த்தார்கள்? அதைப் பற்றி உங்களிடம் ஏதாவது கருத்து தெரிவித்தார்களா?
எங்களுடைய வீட்டில் “நீ மட்டும் எப்படி வேண்டுமானாலும் மாறிக்கோ ஆனால், தாலி மட்டும் போட்டுக்கோ” என்று என்னுடைய அம்மா சொன்னார்கள். தாலி வேண்டாதது என்று தெரிந்து கொண்டேன். அதனால்தான் எனக்குத் தாலி வேண்டாம் என்கிறேன். “தாலி போட்டால்தான் உன்னுடைய வீட்டுக்காரருக்கு ஆயுட்காலம் நன்றாக இருக்கும்” என்று என்னுடைய அம்மா சொன்னாங்க, அதற்கு நான் “எனக்கு மட்டும் நீண்டநாள் வாழனுன்னு ஆசை இருக்காதா? அதற்கு அவர் ஏதும் தாலி போட்டிருக்கிறாரா? என்று கேட்டேன். இப்படியாகச் சில பிரச்சனைகள் வரும்போது தாலி வேண்டாம் என்று முடிவு செய்துவிட்டோம்.
தாலி 1 பவுன், இனி இதை வீட்டில் வைத்தாலும் பாதுகாப்பு இல்லை என்ன செய்யலாம் என்று நாங்கள் இருவரும் ஆலோசித்தோம். அப்போது இதை உருக்கி வித்திடலாம் என்று முடிவு செய்தோம். அதை உருக்கி வித்தோம். அதில் 28,000 ரூபாய் பணம் வந்தது. அந்தப் பணத்தை வைத்துக் கடைக்கு ஏதாவது பொருள் வாங்கலாம் என்று நினைத்தோம்.
நான் பெடல்மிஷினில் தைத்து கொண்டு இருந்தேன். அதற்கு ஒரு மோட்டார் ஃபிட் பண்ணலாம் என்று முடிவு செய்தோம். பழைய ஜெராக்ஸ் மிஷின் ஒன்று விலைக்கு வந்தது. அதை 20,000 ரூபாய்க்கு வாங்கினோம். இப்போது தைப்பதற்கு நிறைய ஆர்டர்கள் இருக்கிறது. மோட்டார் ஃபிட் பண்வில்லையென்றால் என்னால் இவ்வளவு துணிகளைத் தைக்க முடியாது. இப்போது இந்தத் தொழில் இலாபகரமாக இருக்கிறது.
முதலில் என்னுடைய படிப்பு குறைவாக இருக்கிறது என்று எண்ணி எந்த ஒரு இடத்திலும் நான் முன்னாடி போக மாட்டேன். அதிகமாக யாரிடமும் பேசமாட்டேன். என்னால் ஒரு பைசா கூட குடும்பத்திற்குத் தர முடியாது. ஆனால், இப்போது சொந்தமாகத் தொழில் செய்வதால் வாரம் 4000 முதல் 5000 வரை சம்பாதிக்கிறேன். என்னுடைய குடும்பத்திற்கு நல்ல சப்போட்டாக இருக்கிறேன். தாலி உருக்கி வித்தது தெரிந்தவுடன் என்னுடைய அம்மா “எல்லாமே உன்னுடைய இஷ்டத்துக்கு செஞ்சிட்டு இருக்க” ன்னு சொல்லித் திட்டினாங்க. நான் புரிஞ்சிக்கிட்ட விஷயங்களை அம்மாவுக்கும் சொல்லிப் புரிய வைத்தேன்.
ஒருசிலர் நான் Boy Cutting வெட்டியிருப்பதைப் பார்த்து விட்டு, “கோவிலுக்கு ஏதாவது வேண்டுதலா? முடி வெட்டியிருக்கயா?”ன்னு கேட்கிறார்கள். அதற்கு நான் “கோவிலே வேண்டாம் என்று முடி வெட்டி விட்டேன்” என்று சொன்னேன். நான் பெரியாரிஸ்டாக இருக்கிறேன். அதனால் முடி வெட்டிவிட்டேன் என்றேன். “பொம்பளக்கி முடி தான் அழகு அந்த முடிய வெட்டிட்டயே” என்றனர்.
பொம்பளக்கி முடி அழகு, முடி அழகுன்னு சொல்லிச் சொல்லித்தான் மூலையிலேயே உட்கார வைக்கப் பாக்குறாங்க. பெண்களுக்கு முடி அழகு என்பது மூளையை(அறிவை) மழுங்கடிக்கும் வேலை. முடியினால் பெண்களுக்கு ஒரு பயனும் இல்லை. முடியினால் அவர்களுக்கு நேரம், பணம்தான் வீணாகும். எனவே பெண்கள் தங்கள் முடியை வளர்ப்பதை விட்டுவிட்டுத் தங்கள் அறிவை வளருங்கள். நான் இப்படி மாறியிருப்பதால் என்னிடம் பேசுபவர்கள் பெரும்பாலும் மேடம் என்று சொல்லித்தான் மரியாதையாகப் பேசுகிறார்கள். அப்படி என்னைக் கூப்பிடும்போது எனக்கு மிகவும் சந்தோஷமாக இருக்கும்.
நீங்கள் படித்த புத்தகங்களைப் பற்றி சொல்லுங்கள்?
‘பெண் ஏன் அடிமையானாள்?’, ‘குடிஅரசு’, ‘காட்டாறு’, செங்கல்பட்டு மாநாடு, படித்து இருக்கிறேன். நான் படித்ததோடு இல்லாமல் என்னுடைய உறவுக்காரப் பெண் பருவமடைந்த போது காட்டாறு புத்தகத்தில் வந்த செய்திகளையும், பெண்களுக்குப் பூப்புனித நீராட்டு விழா தேவையா? என்பதையும் எடுத்துச் சொல்லி புத்தகங்களையும் படிக்கச் சொன்னேன். அவர்களும் நான் சொல்வதை ஏற்றுக் கொண்டு, சீர் வைப்பது தேவையில்லாதது என்பதையும், நம்முடைய குழந்தையை நாமே அவமானப்படுத்துகிற மாதிரி இருக்கும், இந்தச் செயலை நாங்கள் செய்ய மாட்டோம் என்று சொல்லி 6 மாதமாகச் சீர் செய்யாமல் இருந்தனர். உறவினர் களின் வற்புறுத்தலின் பேரில் அவர்களுக்கு விருப்பம் இல்லாமல் சடங்கு செய்தனர்.
இந்த மாதிரியான செய்திகளை மக்களிடம் எடுத்துச் சொல்ல வேண்டும் என்று நினைக்கிறேன். முன்பு என்னுடைய செல்லில் மேக்கப் டிப்ஸ்களைத் தேடித் தேடிப் பார்ப்பேன். ஆனால் இப்போது டி.வி கூட சரியாக பார்ப்பது இல்லை.
நான் செல்போனில் கூட தோழர் ஷாலினி பேசுவது, தோழர் அருள்மொழி, தோழர் வே.மதிமாறன் பேசுவது, இந்த மாதிரியான பெரியாரியல் சம்மந்தமான பேச்சுக் களையும், வீடியோக்களையும் தேடித் தேடிப் பார்த்துக் கொண்டு இருக்கிறேன். இன்னும் அதிகமான புத்தகங்களைப் படித்து விட்டு மற்றவர்கள் கேட்கும் கேள்விகளுக்குச் சரியாக பதில் கொடுக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.
தோழர் இராஜ்குமார்
என்னுடைய பெயர் இராஜ்குமார். என்னுடைய ஊர் திருப்பூர் மாவட்டம் அவினாசி சேவூர் அருகில் உள்ள கிளாகுளம். நான் ஐ.டி. படித்து இருக்கிறேன். என்னைப் படிக்க வைத்தது அண்ணன் செந்தில்குமார். நான் சிறுவயதில் இருந்தே பெரியாரிஸ்டாகத்தான் வளர்ந்தேன். அண்ணனும் பெரியாரிஸ்ட்தான். நாங்கள் பல பிரச்சனைகளைத் தாண்டி இடைநிலைச் சாதிகளின் பல நெருக்கடி களைத் தாண்டி, பல வழக்குகளைச்சந்தித்து பெரியாரிஸ்டாக எங்களுடைய மொத்த குடும்பத்தையும் வழி நடத்துகிறோம்.
நீங்கள் சடங்கு சம்பிரதாயங்களுடன்தான் திருமணம் செய்தீர்களாமே?
திவ்யா எங்களுடைய உறவுக்காரப் பெண். நான் கோவையில் படிப்பதால் உக்கடத்தில் என்னுடைய அத்தை வீட்டிற்கு போவேன். அப்போது பார்த்து, பேசிப் பழகினோம். அப்படித் தான் திவ்யாவின் அறிமுகம். எங்களுடைய திருமணம் இந்து முறைப் படி சடங்கு, சம்பிரதாயங்களுடன் நடந்தது. இந்தத் திருமணம் வேண்டாம் என்று 8 மாதமாக வீட்டில் அண்ணன் போராடினார். நாம் பெரியாரிய கொள்கையில் வாழ்ந்து கொண்டு, சாதிமறுப்பு பேசிக் கொண்டு, நாமே எப்படி அகமண முறையில் திருமணம் செய்யலாம்? அது மட்டுமில்லாமல் அறிவியல் ரீதியாக உங்களுக்குப் பிறக்கின்ற குழந்தைக்குப் பிரச்சனை ஏற்பட வாய்ப்பு அதிகமாக இருக்கிறது. நீங்கள் இருவரும் காதலித்தே இருந்தாலும் இந்தத் திருமணம் வேண்டாம் என்று போராடினார். இந்து மதத்தைச் சார்ந்து போக வேண்டிய நிலை ஏற்படலாம் என்றார்.
அந்த நேரத்தில் அவர் எது சொன்னாலும் ஏற்றுக் கொள்கிற மனநிலை எனக்கு இல்லை. அதன்பிறகு உன்னுடைய விருப்பம்போல் செய் என்று சொல்லிவிட்டார். சரி, திருமணமே செய்தாலும் தாலிமறுத்து, சடங்குமறுத்து செய் என்றார். ஆனால், திவ்யாவின் வீட்டில் சடங்குகூட மறுக்கலாம், தாலி கட்டவேண்டும் என்று சொல்லி விட்டனர். அதற்கும் அண்ணன் தாலி கட்டினாலும் ஐயர் வரக்கூடாது என்று போராடினார். திவ்யாவின் வீட்டில் எதிர்ப்பு வந்தது. அண்ணன் போராடி ஒரு வழியாக ஐயர் இல்லாமல் எங்களுடைய திருமணம் நடந்தது.
தோழர் திவ்யாவின் இந்தப் பண்பாட்டு மாற்றத்திற்கு முன்பு இருந்ததையும், மாற்றத்திற்குப் பிறகு இருந்ததையும் பற்றி கூறங்கள்?
வீட்டில் சாமி போட்டோ வைக்க நான் அனுமதிக்கவில்லை. சிறிய சாமி போட்டோவை பீரோவில் வைத்து சனிக்கிழமை நாட்களில் கும்பிடுவார். எனக்கு விருப்பம் இல்லையென்றாலும் ஒரு சில விசயங்களில் கட்டாயமாக இந்து மதத்திற்குள் நுழைய வேண்டிய நிலை ஏற்பட்டது. அப்போதுதான் அண்ணன் (கு.செந்தில்குமார்) சொன்ன விசயங்கள் எல்லாம் சரிதான் என்று உணர்ந்தேன். குழந்தை பிறந்தபிறகு ‘பா’ என்ற எழுத்தில் பெயர் வைக்க வேண்டும் என்றனர். அப்போது குழந்தைக்கு ‘இசைப்பிரியா’ என்று பெயர் வைத்தோம். குழந்தைக்கு மொட்டை அடிப்பது குலதெய்வக் கோயிலில்தான் அடிக்க வேண்டும் என்று பிரச்சனை. இப்படி ஒவ்வொன்றையும் திவ்யாவிற்காக விட்டுக் கொடுத்தேன். மொட்டை அடிப்பதும் இந்த ஒரு முறைதான் கோயிலில் அடிக்க வேண்டும் என்று சொன்னேன்.
திருமணத்திற்குப் பிறகு கோயில், விசேஷங்கள், உறவினர்களின் வீடு களுக்குப் போக வேண்டும் என்று என்னைக் கூப்பிடும் போது நான் ஏதாவது சாக்கு, போக்கு சொல்லி நழுவப் பார்ப்பேன். எனக்கு லீவு இல்லை, வேலை அதிகம் என்று ஏதாவது சொல்வேன். இப்படி ஒவ்வொரு விசேஷம் வரும்போதும் செலவுதான் அதிகமாக இருக்கும். இதனால் எங்கள் இருவருக்கும் சண்டை ஏற்படும். வாரக் கணக்கில் பேசாமல்கூட இருந்திருக்கிறேன். தன்னை அழகு படுத்திக் கொள்ள வளையல், பூ இந்த மாதிரி வாங்கித் தரவில்லை என்று சண்டை போடுவார். இது எல்லாம் வேண்டாம், தேவை யில்லாதது என்று சொன்னாலும் அதைப் புரியும் மனநிலை இருக்காது. பிடிவாதம் அதிகமாக இருக்கும்.
திவ்யாவின் இந்தப் பண்பாட்டு மாற்றத்துக்குப் பிறகு குடும்பத்தில் எந்த ஒரு நிகழ்வாக இருந்தாலும் நாங்கள் இருவரும் ஆலோசித்து முடிவு எடுக்கிறோம். தோழர் திவ்யாவும் நானும் பெரியாரியல் வாழ்வியலைப் பின்பற்றி வாழ்ந்து கொண்டு இருக்கிறோம். எங்களுடைய அடுத்த தலைமுறையை சாதியற்ற தலைமுறையாக வளர இணைந்து பாடுபடுவோம்.