காங்கிரஸ்காரர் பதவியேற்றல் அது தியாகம்! மற்றவர் மந்திரியா யிருந்தால் அது பதவி வேட்டை!

kuthoosi gurusamy 263வெள்ளைக்காரன் சுரண்டினால் சுரண்டல்! வடநாட்டான் சுரண்டினால் அது வியாபார அபிவிருத்தி!

கதர்ச் சட்டைக்காரர் மறியல் செய்தால் சத்தியாக்கிரகம்! மற்றவர் மறியல் செய்தால் கலவரம் - காலித்தனம்!

பெரியவர்கள் பொம்மை தூக்கி விளையாடினால் அது திருவிழா! சிறு பயல்கள் பொம்மை வைத்து விளையாடினால் அது முட்டாள் தனம்! அய்யர் குட்டைத் தண்ணீரைக் கெண்டியில் மொண்டு ஊற்றினால் அது புண்ய தீர்த்தம்! அதையே மற்றவர் ஊற்றினால் குட்டைத் தண்ணீர்!

காந்தியார் காங்கிரசைக் கலைத்துவிடச் சொன்னார்! நமக்குச் சுயராஜ்யம் வந்துவிட்டது. இனிமேல் காங்கிரஸ் கட்சி தேவையில்லை. எல்லோரும் கிராம சேவை செய்தால் போதும்; இந்தியர்களில் யாராவது ஆட்சி செய்துவிட்டுப் போகட்டும்; வெள்ளையனை விரட்டுவதுதானே நம் நோக்கம்? அவன் ஆட்சிதான் ஒழிந்துவிட்டதே!” - என்றார், காந்தியார், ஆனால் அவரது சீடர்கள் கேட்கவில்லை! அவரைப் போல அற்பசொற்பமான தியாகிகளா இவர்கள்?

அதெல்லாம் முடியாது! நாங்கள் உம்மைப்போல அரைகுறைத் தியாகஞ் செய்ய மாட்டோம். இந்த நாட்டுக்காக எங்கள் உடல், ஆவி ஆகிய இரண்டையும் தியாகம் செய்து, மூன்றில் மற்றொன்றைப் பெற்றே தீருவோம்! உம்மைப் போல அன்னக்காவடியாக, மூன்று ரூபாய் பெறக்கூடிய சாமான்கூட இல்லாமல், அற்பனால் சுடப்பட்டுச் சாகமாட்டோம்! எங்கள் உயிர் உடலை விட்டு இயற்கையாகப் பிரிகின்ற வரையில் பாரதமாதாவுக்கு மந்திரியாகவோ, கவர்னராகவோ, கவர்னர் - ஜெனரலாகவோ, குடியாட்சித் தலைவராகவோ, வெளிநாட்டுத் தூதுவராகவோ, பார்லிமெண்ட் மெம்பராகவோ, சட்டசபை நாமினேஷன் மெம்பராகவோ, நிலமான்யம் பெற்ற தியாகியாகவோ, பர்மிட் பெற்ற தொண்டராகவோ - இருந்து சேவை செய்து தான் தீருவோம்.” என்று சீடர்கள் விடாப்பிடியாக இருந்தனர்! இன்றும் இருந்து வருகின்றனர்!

நல்ல வேளையாக காந்தியார் இன்று உயிருடனில்லை! இருந்திருந்தால், தமது சம்பந்தியார் துறவு பூண்டுவிட்டு, அதன் பிறகு “காங்கிரஸ் மேனகையின் கட்டாயத்துக்காகவே” மீண்டும் பதவியம்மாளைக் கட்டித் தழுவுவதற்காகக் கொல்லைப் புறத்தால் சுவர் ஏறிக் குதித்திருப்பதைக் கண்டு காந்தியார் தற்கொலை செய்து கொள்ளலாமா என்று கூடக் கருதிவிடுவார்!

மேலும், தமது பிரதம சீடரான தியாகசீலர் பர்மனெண்ட் முதலமைச்சராகவும், காங்கிரஸ் தலைவராகவும், இந்தியாவுக்கே ஹிட்லராகவும் அவதரித்திருப்பதைக் கண்டு முகத்தை மூடிக்கொள்ள நேர்ந்திருக்கும், காந்தியாருக்கு! சென்னைத் தியாகமூர்த்தி 15 மந்திரிகளை ஏற்படுத்திக் கொண்டாரல்லவா?

நேரு மகாத்மா 15 அசல் மந்திரிகளையும், 4 குட்டி மந்திரிகளையும், 2 குஞ்சு மந்திரிகளையும் ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார்.

இவர்களெல்லோரும் கேவலம், மந்திரி பதவிக்காக இப்பொறுப்பை ஏற்றுக் கொள்ளவில்லை என்பது நினைவிருக்கட்டும்! கேவலம், பணத்துக்காகவுமல்ல! பாரதமாதாவுக்குச் சேவை செய்வதற்காகவேதான்!

சம்பளம் சாதாரண விஷயம்! அற்பக் காசு!

பிரசிடெண்ட் ராஜேந்திர பிரசாதுக்கு மாதம் 10,000 ரூபாய் காசுதான்! (4-வருஷமாக நாம் இதையே சொல்லிச் சொல்லி, பாவம்! இனி 5,500 ரூபாயாக குறைத்துக் கொள்ளப் போகிறாராம்!)

மாகாண கவர்னருக்கு மாதம் 5, 500 ரூபாய்க்காக தான்!

பார்லிமெண்ட் தலைவருக்கும் ஸ்டேட்ஸ் கவுன்சில் தலைவருக்கும் மாதம் 3,000 ரூபாய்க் காசுதான்! டில்லி மந்திரிகளுக்கும் இந்த 3,000 ரூபாய்க் காசுதான்! இவ்வளவு பெரிய நேரு மகானுக்குக்கூட மாதம் 3,500 ரூபாய்க் காசுதானே! பாவம்! தூதுவர்களுக்குக்கூட மாதம் 5,000 ரூபாய்க் காசுதான்!

மாகாண மந்திரிகளுக்குக்கூட 1,500 ரூபாய்க் காசுதான்! யாரோ சிலருக்கு இலவச மாளிகை! இலவச மோட்டார்கார்!

இன்று வியாபாரத் துறையில் நடக்கின்ற பகற்கொள்கையில் இதெல்லாம் ஒரு வரும்படியா?

ஆனால் காங்கிரசின் கராச்சித் தீர்மானத்தில் மாதம் 500 ரூபாய்க்கு மேல் இந்த நாட்டில் யாருக்குமே சம்பளம் இருக்கக்கூடாது என்றிருக்கிறதே - என்று சில காங்கிரஸ் எதிரிகள் கேட்கலாம்!

இப்படிக் கேட்பவர்களின் மண்டையைப் போலீஸ் தடியினால் உடைப்பதற்காகத்தானே, காங்கிரஸ் கட்சியைக் கலைக்காமலிருக்க வேண்டி யிருக்கிறது?

தியாக மூர்த்திகளுக்குச் சே! சே!!

- குத்தூசி குருசாமி (14-05-1952)

நன்றி: வாலாசா வல்லவன்

Pin It