பாராட்டிதழ்!

சட்டசபையில் கவர்னரைப் பேச விடாமல் தடுத்தமைக்காக பிரகாசத்தின் மீது கண்டனத் தீர்மானம் கொண்டு வந்து, பிறகு அதைத் திரும்பப் பெற்று, தங்களை நாமினேஷன் செய்த கவர்னருக்குச் சப்பைக் கட்டுக் கட்டி, அவருக்குச் ‘சோப்’ போட்ட அரும்பெருந் தலைவர் ஆச்சாரியார் அவர்களே! உங்களைப் பாராட்டுகிறேன்! நீவிர் வாழ்க!

nehru rajaji 300அக்கிரகார உலகத்தைக் காப்பாற்றும் பொருட்டு, விபீஷணர்களைச் சிருஷ்டி செய்து, வீரத்துடன் திராவிடர் மீது போர் புரியப் புறப்பட்டிருக்கும் நவீன அவதார மூர்த்தியாகிய உங்களைப் பாராட்டுகின்றேன்!

தாங்கள் இந்திய சர்க்காரின் கவர்னர்-ஜெனரல் பென்ஷனாகிய 1,000 ரூபாய் பெற்று வருவது தெரியாமல், சிலர், 1,500 ரூபாய் பணத்துக்காக கொல்லைப் புறமாக நுழைந்து மந்திரி பதவி ஏற்றிருப்பதாகக் கூறுகிறார்களே! இதை வன்மையாகக் கண்டிக்கிறேன்!

கம்யூனிஸ்ட்களும் மற்ற முற்போக்கு இளைஞர்களும் தங்கள் லட்சியத்துக்காகத் தங்கள் உயிரையே விடுகிறார்களே! இது என்ன பிரமாதம்! போயும் போயும் வெறும் உயிரைத்தானே விடுகிறார்கள்? தங்கள் தியாகத்துக்கு இதெல்லாம் உரை போடக்காணுமா?

தாங்கள் பாரதமாதாவின் கடைசி (கணவனாக) கவர்னர்-ஜெனரலாக இருந்தபோது தாங்கள் செய்த ஒப்பற்ற தியாகம் யாருக்குத் தெரியும்?

மாதச் சம்பளம் (வருமான வரியில்லாமல்) ரூ. 20,900

போஷணா அலவன்ஸ் ரூ. 3,750

‘காண்டாக்ட்’ அலவன்ஸ் ரூ. 29, 166

மோட்டார்கார் அலவன்ஸ் ரூ. 5, 250

சிப்பந்தி அலவன்ஸ் ரூ. 50, 500

ஆக மொத்தம் ரூ. 1,09,566

அதாவது கிட்டத்தட்ட நாள் ஒன்றுக்கு 3,652 ரூபாய் வாங்கினீர்கள்!

“சர்க்கார் சம்பந்தமாக குறிப்பிடத்தக்க எந்த வேலையும் எனக்குக் கிடையாது. எனக்கென்று ஒரு இலாகாவுமே தரப்படவில்லை. மந்திரிகள் என்னை நம்பி எதையுமே கொடுக்கவில்லை, சர்க்காரில் இவர்கள் எனக்கு எவ்விதமான பங்கும் தரவில்லை”, - என்று நவம்பர் 1948-ல் க்வாலியரில் பேசியபோது குறிப்பிட்டிருக்கிறீர்கள்!

இவ்வளவு பெரிய சம்பளம் அமெரிக்க பிரசிடெண்டுக்குக்கூட (அவருக்கு மாதம் 20,312 ரூபாய்தான்!)த் தரப்படவில்லையே! ஏழை நாட்டுக்கு இது அடுக்குமா?- என்று பார்லிமெண்டில் இரண்டொரு அதிகப்பிரசங்கிகள் கேட்டபோது,

“பதவியின் கவுரவத்தைக் காப்பாற்றுவதற்கு இந்தச் சம்பளம் அவசியம்தான்” - என்று நேருமகான் திருவாய் மலர்ந்தருளினாரல்லவா?

பிறகு வேலையில்லாத மந்திரியாகக் கூடச் சில மாதங்கள் ‘அருஞ்சேவை’ செய்து மாதம் 3,000 ரூபாய் பெற்றிருக்கிறீர்கள்

இவ்வளவு பெருமைக்குரிய தாங்கள் இச்சமயம் 1,500 ரூபாய்க் காசுக்காகவே (நிரந்தர பென்ஷன் 1,000 ரூபாய் சில்லறைச் செலவுக்காக!) மந்திரி பதவி ஏற்றிருக்கிறீர்கள் என்று எந்த அற்பப் புத்திக்காரனாவது கூறினால் அவனைச் சட்டை செய்யாதீர்கள்? அவன் கிடக்கிறான், எதிரி நம்பர்-1 !

தங்களுடைய தியாகத்தின் உயர்வு எவனுக்குத் தெரியும்? எனக் கல்லவோ தெரியும்?

சாக்ரட்டீசோ, காந்தியோ, தங்கள் தியாகத்தின் கால் தூசுக்குக் கூடத் காண மாட்டார்களே!

தஞ்சை இரணியனோ, தாலமுத்துவோ என்ன தியாகஞ் செய்து விட்டார்கள்?

வேலாயுதமோ, மலேயா கணபதியோ என்ன தியாகஞ் செய்து விட்டார்கள்?

வ.உ.சி.யோ, திருப்பூர் குமரனோ என்ன தியாகஞ் செய்து விட்டார்கள்?

இவர்களுக்கெல்லாம் ஒரு நாமினேஷன் கிடைத்திருக்குமா? ஸ்ரீபிரகாசா போன்ற ஒரு மேதாவி இல்லாவிட்டால் தங்களின் ஒப்பற்ற தியாக வாழ்க்கையானது குப்பைத் தொட்டியில் கிடக்கின்ற வாழைப் பழத்தோல் மாதிரிப் போயிருக்குமே!

தக்க சமயத்தில் குப்பையைக் கிளறி வெளிப்படுத்தினார், காங்கிரஸ் கவர்னர்!

தியாகத்தின் சிகரமே! வாழ்க! நீவிர் அக்கிரகாரப் பெருச்சாளிபோல் நீடூழி வாழ்க! திருச்சி உச்சிப்பிள்ளையார் மலைபோல நடுநாயகமாக வாழ்க!

மாணிக்கவேலர் -முத்தய்யா செட்டியார் சமேதராக திராவிடர் தோள் மீது ஏறிவரும் நீவிர், சென்னை கூவம் ஆறுபோல் நீடுழி வாழ்க!

- குத்தூசி குருசாமி (15-05-1952)

நன்றி: வாலாசா வல்லவன்

Pin It