“ஏய், தம்பீ! கருப்புச் சட்டே! என் கட்சியைப் பார்த்தியாடா, இப்போ! உன் கட்சியைப் போல அன்னக் காவடிகள் நிறைந்த கட்சியல்லடா! தெரிஞ்சுதா?”

kuthoosi gurusamy“அது சரிதானப்பா, என் கட்சி ஏழைகள் கட்சிதான்; இல்லாவிட்டால் இந்தத் தேர்தலில் நாங்களும் போட்டி போட்டு குறைந்த பட்சம் 10 இடமாவது பிடித்திருப்போமே! அப்படிப் பிடித்திருந்தால், ராமசாமிப் படையாச்சியையும், ராமசாமி நாடாரையும், தென்னேட்டியையும் சுற்றிக் கொண்டிருக்கின்ற கம்யூனிஸ்ட் தோழர்களில் சிலராவது இந்நேரம் எங்களையும் சுற்றிக் கொண்டிருக்க மாட்டார்களா? நாங்கள் வெறும் தகரப் போணிகள்! அதனால்தான் தேர்தலுக்கு நிற்கவில்லை.”

“அப்போ, நீங்களெப்படி எங்களைத் தோற்கடிக்க முடியும்? பொதுக் கூட்டத்தில் வேண்டுமானால் பிரசங்கம் செய்யலாம். கேட்பவர்களும் கை தட்டலாம்! வேறென்ன உங்களால் சாதிக்க முடியும்?”

“ஏழைகள் கிளர்ச்சி வீண் போகாதப்பா! உலக வரலாற்றில் நடந்திருக்கும் புரட்சிகளெல்லாம் எங்களைப் போன்ற ஏழைகளால்தான் நடத்தப்பட்டது என்பது நினைவிருக்கட்டுமப்பா!”

“அடேயப்பா திடீரென்று உலகப் புரட்சிக்குப் போய் விட்டாயே! போடா போ! இந்த நாட்டில் அந்தச் சங்கதியெல்லாம் பலிக்காதுடா, தம்பீ! இது புரட்சி உலகம் அல்லப்பா! இது சினிமா உலகம்! தெரியுமா? எவனும் இங்கே புரட்சி செய்யத் தயாராயில்லை! அடுத்த வாரம் என்ன சினிமாப் படம் புதுசா வருது என்பது தான் கவலையே தவிர, அடுத்த பெருங் கிளர்ச்சி என்ன என்பதைப் பற்றி எவனுக்கடா, கவலை?”

“இருக்கலாம்! ஆனாலும் எல்லோருமே அப்படியிருப்பார்களா? ரோஷமுள்ள இளைஞர்களும் எத்தனையோ பேர் இருக்கிறார்களே! இவர்கள் சும்மாவா இருப்பார்கள்?”

“என்ன செய்து விடுவார்கள்? வெறும் பூச்சாண்டி காட்டதேடா, தம்பீ! என் கட்சியில் இருக்கின்ற பிரபுக்கள் நினைத்தால் பணத்தை வாரி இறைத்து, உங்களையெல்லாம் நொறுக்கிவிட முடியுமே! எங்கள் தலைவர்கள்! சாமான்யத் தலைவர்களா, என்ன? பலபேர் ராஜாக்களப்பா! ராஜாக்கள்! ஒரு குமாரசாமி ராஜா! ஒரு செட்டிநாட்டு ராஜா! ஒரு ராமனாதபுரம் ராஜா! இவர்களுக்கெல்லாம் மேலாக எங்கள் ‘ராஜா’ஜீ! அதாவது ராஜாக்களுக்கெல்லாம் ராஜாடா! சக்ரவர்த்தீடா! தெரிஞ்சுதா? அவர் தாண்டா சக்ரவர்த்தி ராஜாஜீ! இவர்கள் மட்டுமா? குமாரமங்கலம் ஜமீன்தார் காங்கிரஸ் கட்சித் தலைவர்! வடபாதி மங்கலம் தியாகராஜன் ஒரு தலைவர்! கோடீஸ்வரர் நாடி முத்து ஒரு தலைவர்! லட்சாதிபதி பழனிச்சாமி கவுண்டர் ஒரு தலைவர்! லட்சாதிபதி ஈஸ்வரம் பிள்ளை ஒரு தலைவர்! லட்சாதிபதி குன்னியூர் அய்யர் ஒரு தலைவர்! இன்னுஞ் சொல்லட்டுமா?”

“போதுமப்பா, போதும்! உன் கட்சி லட்சாதிபதி கட்சி என்றே ஒப்புக் கொள்கின்றேனப்பா! பழைய ஜஸ்டிஸ் கட்சியே கதர்ச்சட்டையில் புகுந்து விட்டது என்றுகூட ஒப்புக் கொள்கிறேன். நீ சொன்ன பேர்வழிகளில் முக்கால் டஜன் பேர் மாஜி ஜஸ்டிஸ் கட்சிக்காரரல்லவா? கோடீஸ்வரர் ஏ. வி. தாமஸ் கூட உங்கள் கட்சிதானே? இப்படியிருந்தும் “ஏழை பங்காளர் கட்சி” என்று சிலர் சொல்கிறார்களே! அவர்கள் வாயில் ஒரு கை நிறைய மிளகாய்த் தூளைத்தான் போட வேண்டும்!

“நீ என்ன வேண்டுமானாலும் போடு! எங்கள் ஒப்பற்ற தலைவர் நேருஜீ உள்ளவரையில் எங்கள் கட்சியை உங்களால் அசைக்க முடியாது!”

“அது சரி! வெள்ளைக்காரன் கூட இப்படித்தான் சொல்லிக் கொண்டிருந்தான்! ஹிட்லர்கூட இப்படித்தான் சொன்னான்! முசோலினியும் இப்படித் தான் பேசினான்! சியாங்கே ஷேக் கூட இப்படித்தான் சொன்னான்!”

- குத்தூசி குருசாமி (05-05-1952)

நன்றி: வாலாசா வல்லவன்

Pin It