kuthoosi gurusamy 263ஏதாவது புது சினிமாப் படத்தின் பெயரோ, என்று நினைத்து விடுவார்கள், சினிமாக் கலையின் ரசிகர்கள்; அப்படியல்ல!

தங்கம்மாள் என்ற இளம் பெண் கதறியதைக் கேட்டேன்! அதன் சாரத்தை இங்கே தருகிறேன்:-

“நான் ஒரு திராவிடர் பெண். என் பெயரைப் பார்த்தாலே தெரியவில்லையா?

ஆனாலும் இதுவரையில் என்னைத் தென் இந்திய மக்கள் அலட் சியப்படுத்தி விட்டனர். வெள்ளைக்காரன் தான் என்னை வெளியேற்றி உயிர் கொடுத்தான்! உலகத்திலேயே எனக்கு உயர்தரமான மதிப்புண்டு.

என் இனத்தைச் சேர்ந்தவர்கள் - அதாவது தென் இந்தியப் பெண்கள் - சிறப்பாக தமிழ் நாட்டில் - என்னை எவ்வளவு விரும்புகிறார்கள் தெரியுமா? நான் நூறு பவுண்ட் கனமிருந்தாலும் என்னைச் சுமக்க மறுக்க மாட்டார்கள்!

கோலாரில் பிறந்த நான், சென்னை ராஜ்யப் பகுதியிலும் பரவியிருக்கிறேன். சிற்றூர் ஜில்லாவிலும், சேலம் ஜில்லாவிலும் கோலாரிலிருந்து 15 1/2 மைல் தொலைவுக்குப் பரவியிருக்கிறேன்.

ஆனால் இந்த இடங்களிலெல்லாம் “அண்டர் கிரவுண்டில்” (முன்பு சில கம்யூனிஸ்ட் தோழர்கள் இருந்தது போல்) இருக்கிறேன். இந்த அண்டர் கிரவுண்ட் வாழ்க்கை எனக்குச் சிறிது கூடப் பிடிக்கவேயில்லை.

கோலாரில் மட்டும் வெளியே வந்து உலவுவது; மற்ற இடங்களில் பூமிக்கடியில் புதைப்பட்டுக் கிடப்பது - என்றால், இது என்ன வாழ்வு?

நான் மட்டுமல்ல, என் தம்பி இரும்புச் செல்வன்; என் தங்கை கரிச் செல்வி போன்றவர்கள் தென் ஆர்க்காடு வட்டாரத்தில் அண்டர் கிரவுண்டில் கிடந்து அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். இவர்களை வெளியேற்றி விடுதலை செய்து சுகம் அனுபவிக்கின்ற புத்தி என் திராவிட மக்களுக்கு வரவில்லையே! என்ன செய்வது?

இவர்கள் வடக்கே நோக்கி நோக்கிக் கன்னத்தில் போட்டுக் கொண்டிருக்கிறார்களே! இவர்களுக்கு என்று தான் இந்த அடிமைப் புத்தி ஒழிந்து சுதந்தர உணர்ச்சி தோன்றுமோ, தெரிய வில்லையே!

நாங்களும், ‘தோரியம்’ தேவி, ‘மைகா’ மைந்தன், போன்ற எங்கள் உடன் பிறந்தார்களும் இன்னும் எத்தனை காலத்துக்குத் தான் “அண்டர் கிரவுண்ட்” வாழ்க்கை நடத்திக் கொண்டிருப்பது? அண்டர் கிரவுண்டிலிருக்கும் அரசியல்வாதிகளும் வெளியேற வேண்டும். நாங்களும் வெளியேற வேண்டும். மக்களால் நாங்கள் சுகப்பட வேண்டும். எங்களால் மக்கள் சுகப் பட வேண்டும்.

டில்லி - டில்லி - டில்லி என்று சதா டில்லி பஜனையே செய்து கொண்டு இருக்கின்ற என் நாட்டு அடிமைகளைப் பார்ப்பதற்கே எனக்கு வெட்கமாயிருக்கிறது! டில்லியை நம்பினால் இவர்கள் உருப்படவே மாட்டார்கள்.

டில்லிக்குச் சேலத்தைப் பற்றியும், தென் ஆர்க்காட்டைப் பற்றியும், சிற்றூரைப் பற்றியும், மலபாரைப் பற்றியும் கவலையோ ஆசையோ இருக்குமா?

இங்குள்ள அரசியல் - பொருளாதார மரமண்டைகளுக்கு இந்த அற்பச் சங்கதிகூட ஏன் தான் விளங்க வில்லையோ?”-
இந்த மாதிரிச் சொல்லி வருந்தினாள், சிறுமி தங்கம்மாள்!

திராவிடர்களே! என்ன செய்யப் போகிறீர்கள்? “யார் அழுதால் எனக்கென்ன? என் வயிறு நிறைந்தால் போதும்,” -என்று உண்டு உறங்கிக் கிடக்கப் போகிறீர்களா? அல்லது அண்டர் கிரவுண்டில் கிடந்து அவதிப் படுகின்ற நம் செல்வர்களை மீட்டு சுகவாழ்வு வாழப் போகிறீர்களா?

(தங்கம், நிலக்கரி, இரும்பு, தோரியம், மைக்கா - போன்ற பல்வகையான சுரங்கப் பொருள்கள் தென்னாட்டில் கிடைக்கின்றனவாம். ஆனால் இவைகள் பூமிக்கடியில் புதைபட்டுக் கிடக்கின்றன. இவைகளை வெளியேற்றும் எண்ணம் டில்லி சர்க்காருக்குக் கிடையாது - வராது. மாகாண சர்க்காருக்கோ அதிகாரமில்லை!)

- குத்தூசி குருசாமி (4-5-51)

நன்றி: வாலாசா வல்லவன்

Pin It