முந்தைய பகுதிகளில் மாளிகைப்புரத்தம்மன் பற்றி கூறியிருந்தது நினைவிருக்குமல்லவா? அய்யப்பனால் வதம் செய்யப்பட்டு, சாபவிமோசனம் பெற்ற மகிஷி, அய்யப்பனை மணம் செய்ய விரும்பியதும், அதற்கு அய்யப்பன், ‘தன்னைக் காண கன்னி சாமிகள் வராதபோது, திருமணம் செய்து கொள்ளலாம்’ என்று கூறி, அதுவரை தனக்கு இடப்புறம் சற்று தள்ளி அருள் புரியுமாறு கூறியதும்தான் மாளிகைப்புரத்தம்மனின் கதை. அய்யப்பன் கூறியபடி, அவரது கோயிலுக்கு இடப்பக்கத்தில் மாளிகைப்புரத்தம்மனின் கோயில் இருக்கிறது. அய்யப்பன் கோயிலுக்கு வரும் பக்தர்கள் மாளிகைப்புரத்தம்மனையும் வணங்குகிறார்கள்.

sabarimala padi pooja

(படி பூஜையை பார்க்கும் பக்தர்கள்)

அய்யப்பனை மணம் முடிப்பதற்கு கன்னி சாமிகள் தடையாக இருக்கிறார்கள். அதனால் மாளிகைப்புரத்தம்மனுக்கு எழும் கோபத்தைத் தணிப்பதற்காக கன்னி சாமிகள் இங்கு வந்து, அம்மனுக்கு மஞ்சள் பொடி தூவி, சுற்றுப்பிரகாரத்தில் தேங்காய் உருட்டி, பூஜை செய்கிறார்கள். மஞ்சள் பொடி தூவி வழிபடுவதால், இந்த அம்மனை மஞ்சமாதா என்ற பெயராலும் அழைக்கிறார்கள். மஞ்சமாதா சன்னதிக்கு அருகில் நாகர், நவக்கிரக சன்னதிகளும் இருக்கின்றன. பக்தர்கள் அவர்களுக்கும் ஒரு வணக்கம் வைக்கின்றனர்.

சரவணன் மஞ்சமாதா சன்னதியில்தான் இருந்தான். பக்கபலமாக மற்ற கன்னி சாமிகளும், மூத்த பக்தர்களும் இருந்தனர். ஏறக்குறைய முப்பது பேர் ஒரு தேங்காயை உருட்டிக் கொண்டிருந்தார்கள்.

“என்னுடைய உதவி ஏதேனும் தேவையா?” என்று கேட்டேன். மறுத்து விட்டார்கள்.

தேங்காய் உருட்டல் முடிந்ததும், சரவணனிடம் அறை எந்தப் பக்கம் இருக்கிறது என்பதையும், மதியம் சாப்பாடு வாங்கி வைத்திருக்கிறேன் என்பதையும் சொன்னேன். “வேறு சில வழிபாடுகள் இருக்கிறது, முடித்துவிட்டு வருகிறேன்” என்று சொன்னான்.


முந்தைய பகுதிகள்:

ஒரு பகுத்தறிவாளனின் சபரிமலை பயண அனுபவங்கள் - 1

ஒரு பகுத்தறிவாளனின் சபரிமலை பயண அனுபவங்கள் - 2

ஒரு பகுத்தறிவாளனின் சபரிமலை பயண அனுபவங்கள் - 3

ஒரு பகுத்தறிவாளனின் சபரிமலை பயண அனுபவங்கள் - 4

ஒரு பகுத்தறிவாளனின் சபரிமலை பயண அனுபவங்கள் - 5

ஒரு பகுத்தறிவாளனின் சபரிமலை பயண அனுபவங்கள் - 6

ஒரு பகுத்தறிவாளனின் சபரிமலை பயண அனுபவங்கள் - 7

ஒரு பகுத்தறிவாளனின் சபரிமலை பயண அனுபவங்கள் - 8


அவற்றைப் பார்ப்பதற்கு ஆர்வம் இருந்தாலும், வெயிலும், தூக்கமும் என்னை அறைக்கு விரட்டியது. இரண்டு மணி நேரம் நன்கு தூங்கினேன். அதற்கு அரைமணி நேரம் கழித்துதான் சரவணன் வந்தான்.

நமக்கெல்லாம் இரவு சரியாகத் தூங்கவில்லை என்றால், பகலில் சோர்வாக இருக்குமல்லவா? ஆனால், சரவணன் அப்படியல்ல. இரவு முழுக்கத் தூங்கவில்லை என்றாலும், பகலில் அவன் முகத்தில் துளி சோர்வும் தெரியாது. அப்படியே பிரெஷ்ஷாக இருப்பான். அன்றும் அப்படித்தான் இருந்தான். “கொஞ்சம் தூங்குகிறாயா?” என்று கேட்டேன். “இல்லை, குரு சாமி தேடுவார்” என்று சொன்னான்.

அவன் சாப்பிட்டதும், கிளம்பினோம். அறை சாவியைக் கொடுத்துவிட்டு, பாதுகாப்பு வைப்புக் கட்டணம் அறுநூறு ரூபாயைத் திரும்பப் பெற்றுக் கொண்டோம்.

***

“என்ன… ரொம்ப நேரமாகப் பார்க்க முடியவில்லை?” என்று குரு சாமி கேட்டார். அறையில் தங்கியிருந்ததைச் சொன்னேன்.

குரு சாமியுடன் தேநீர் குடிக்கப் போனோம். போகும் வழியில் மகர ஜோதி ஏற்றப்படும் பொன்னம்பல மேட்டை குரு சாமி காட்டினார்.

சபரிமலைப் பயணத்தில் குரு சாமி என்பவரின் பங்கு மிக முக்கியமானது. 50, 60 ஆண்டுகளுக்கு முன்னர், அய்யப்பன் கோயிலுக்கு மிகக் குறைவான எண்ணிக்கையில்தான் பக்தர்கள் சென்றிருக்கிறார்கள். மகர ஜோதி தெரியும் நாட்களில்கூட 1000 பேருக்கும் குறைவான பக்தர்களே அய்யப்பனை தரிசித்திருக்கிறார்கள். இப்போதிருக்கும் அளவிற்கு போக்குவரத்து வசதிகளும், மின்சார வசதிகளும் கிடையாது. அடர்ந்த காட்டுப்பகுதியில் மிருகங்களிடமிருந்து தற்காத்துக் கொள்ள ஈட்டி, வேல்கம்புடன் சென்றிருக்கிறார்கள். அப்படியும் விலங்குகளிடம் சிக்கி, பலர் இறந்திருக்கிறார்கள். இத்தனை சிக்கல்களையும் தாண்டி, உயிருடன் திரும்பி வருபவர்கள் அடுத்த ஆண்டு புதிதாக வரும் சாமிகளுக்கு வழிகாட்டி இருக்கிறார்கள். அப்படித்தான் குரு சாமி என்னும் வழக்கம் உருவாகி இருக்கிறது.

sabarimala saravana guru samy

(சரவணனுக்கு விபூதி,  பூசி ஆசிர்வதிக்கும் குரு சாமி)

மாலை போடுவது, கன்னி பூஜை நடத்துவது, இரு முடி கட்டுவது, சபரிமலைப் பயணத்தின்போது செய்ய வேண்டிய சடங்குகள், வழிபாடுகளுக்கான காரணங்களை விளக்கி, நெறிப்படுத்துவது எல்லாம் குரு சாமியின் பொறுப்பு.

நான் சென்ற குழுவின் குரு சாமி, இந்த பொறுப்புகளைத் திறம்பட செய்தார். அதோடு, பயணம், உணவு ஏற்பாடுகளைத் தகுந்த நபர்களிடம் ஒப்படைத்து, அவற்றில் சிறுகுறைவும் ஏற்படாதவாறு பார்த்துக் கொண்டார். எந்தவொரு இடத்திலும் கோபப்படாமல் குழுவினரை வழிநடத்தினார். தொண தொணவென்று நான் கேட்ட கேள்விகளுக்கு எல்லாம் மிகப் பொறுமையாக பதில் சொன்னார்.

அவருக்கு உதவியாக இருந்த குழுப் பொறுப்பாளர்களும், தங்களுக்குப் பிரித்துக் கொடுக்கப்பட்ட வேலைகளை மிகுந்த பொறுப்புணர்வோடு செய்தார்கள். ஒவ்வொரு கோயிலிற்கு செல்லும்போதும், குழு சார்பில் அங்கு வழிபாடு செய்வதற்கு ஒரு பெரிய தாம்பாலத் தட்டில் பழங்கள், தேங்காய், மாலை, கற்பூரம் ஆகியவற்றை சரியாக எடுத்து வைத்தார்கள். கோயிலில் இருக்கும் நாக சிலை அல்லது நவக்கிரக சிலைகள் போன்ற உபதெய்வங்களை பக்தர்கள் வணங்குவதற்கு வசதியாக, பக்தர்கள் அனைவருக்கும் கற்பூரம், சிறுகுப்பியில் தேன், இரண்டு அகர்பத்திகள் ஆகியவற்றை எடுத்துக் கொடுத்தார்கள். சமையலுக்குத் தேவையான பொருட்களை எடுத்துக் கொடுத்து, சரியான நேரத்தில் உணவு தயாராவதை உறுதி செய்தார்கள். முதல் பந்தியில் முந்தி உட்காராமல், மற்றவர்களுக்குப் பரிமாறிவிட்டு, கடைசியில் சாப்பிட்டார்கள். பயணம் முழுவதிலும் இந்த ஒழுங்கு, கச்சிதம் நீடித்தது.

நாங்கள் தேநீர் குடிக்கச் சென்றபோது, காலையில் பிரிக்கப்பட்ட பக்தர்களின் இருமுடிக் கட்டுகளை பொறுப்பாளர்கள் மீண்டும் கட்டிக் கொண்டிருந்தனர்.

***

மாலையில் பதினெட்டுப் படி பூஜை நடைபெற்றது. கூட்டம் மிக அதிகமாக இருந்ததால், தெளிவாகப் பார்க்க முடியவில்லை.

எங்கள் குழு மலையிலிருந்து இறங்க வேண்டிய நேரம் வந்துவிட்டது. பக்தர்கள் ஒவ்வொருவரையாக குரு சாமி அழைத்தார். பக்தர்கள் குரு சாமியின் காலில் விழுந்து ஆசி வாங்கிக் கொண்டார்கள். பொறுப்பாளர்கள் தயாராக வைத்திருந்த இருமுடிக் கட்டை மீண்டும் பக்தர்கள் தலையில் ஏற்றினார். குரு சாமி பக்தர்களுக்கு விபூதி பூசி, சபரிமலை பயண அனுபவம் குறித்துக் கேட்டறிந்தார். பின்னர் அவர்களுக்கு ஆசியும், அன்பளிப்பாக பணமும் அளித்தார். எவ்வளவு பணம் என்று எண்ணிக் கொடுக்கவில்லை. ஒரு மஞ்சள் பையில் பத்து ரூபாய்களும், சில்லறைக் காசுகளும் இருந்தன. பக்தர்களுடன் பேசியவாறே, உள்ளே கைவிட்டு எடுத்துக் கொடுத்தார்.

sabarimala keetru nandhan

(சபரிமலையிலிருந்து இறங்குவதற்கு  முன்பு... சரவணன், இரவி மாமா, மகளுடன் அருப்புக் கோட்டை பக்தர் மற்றும் நான்)

இந்த முழு பயண அனுபவத்திலும் ஒன்றைக் கவனிக்க முடிந்தது. பொசுக், பொசுக்கென்று பக்தர்கள் குரு சாமியின் காலில் விழுந்து வணங்கிக் கொண்டிருந்தார்கள். எப்போது குரு சாமி அழைத்தாலும், முதலில் அவரது காலில் விழுந்து எழுந்து விட்டுத்தான், அடுத்து என்ன என்று கேட்டார்கள். அதிலும் சரவணன் காலில் விழும் போட்டி நடப்பதுபோல் விழுந்து கொண்டிருந்தான். அவனைத் தேடுவதாக இருந்தால், முதலில் குரு சாமியின் கால் பக்கமாகப் பார்த்துவிட்டு, அங்கு இல்லை என்றால்தான் மற்ற இடங்களில் தேடினேன். எங்கள் குழுவில் குரு சாமி காலில் விழாத ஒரே ஆளாக நான் மட்டுமே இருந்தேன். அதற்கான தருணங்களை கவனமாகத் தவிர்த்து விட்டேன். எனக்கும் குரு சாமியின் அன்பளிப்பு இருப்பதாக சொன்னார்கள். எல்லோரும் காலில் விழுந்து, வாங்கும்போது, நான் மட்டும் அப்படியே போய் வாங்கினால் எல்லோரும் வித்தியாசமாகப் பார்ப்பார்கள் என்பதால், நான் அந்த இடத்திலிருந்து நழுவி, வாபர் குடில் பக்கம் போய்விட்டேன்.

“குரு சாமி அன்பளிப்பாக கொடுத்த பணம் மிகவும் புனிதமானது, ராசியானது. அதை நமது பர்ஸில் வைத்துக் கொள்ளக் கூடாது; வீட்டு பீரோவில்தான் வைக்க வேண்டும்; வீட்டுச் செலவுகளுக்கு எடுத்து உபயோகிக்கக் கூடாது; சுபகாரியங்களின்போதோ, தொழில் தொடங்கும்போதோ, தொழில் விருத்தியின்போதோ இப்பணத்தில் இருந்து ஐந்து ரூபாயோ, பத்து ரூபாயோ எடுத்து, அதனுடன் மீதித் தொகையை சேர்த்துப் பயன்படுத்த வேண்டும். அப்படி செய்தால் எடுத்த சுபகாரியம் துலங்கும், தொழிலில் பணம் கொட்டும்” என்று பக்தர் ஒருவர் கூறினார். அவர் பத்து ஆண்டுகளாக சபரிமலைக்கு வருகிறார். அப்படியென்றால் குரு சாமி கொடுத்த காசை வைத்து அம்பானிக்கு அடுத்த நிலைக்கு வந்திருப்பார் என்ற நம்பிக்கையில் கேட்டேன். பத்து வருடங்களாக ஊர் ஊராகப் போய் சேவு வியாபாரம்தான் செய்து வருகிறாராம்.

‘இந்த முறை இரு முடியை தலையிலேயே வைத்திருக்க வேண்டியதில்லை’ என்று குரு சாமி சொல்லி விட்டார். அதனால் பக்தர்கள் அவரவர் தோள் பையில் இருமுடியை வைத்துக் கொண்டார்கள். நாங்கள் வந்த வண்டி எங்கே நிற்கிறது என்பதைச் சொல்லி, எல்லோரும் அங்கே சந்திக்கலாம் என்று பொறுப்பாளர்கள் சொன்னார்கள். அதன்பின்பு எங்கள் குழு பக்தர்கள் மலை இறங்கத் தொடங்கினார்கள்.

***

மலை இறங்குவது எப்போதும் எளிதுதானே... ஆனால் சபரிமலையில் இறங்குவது எனக்கு அப்படி இருக்கவில்லை. பகலில் சுள்ளென்ற வெயில் நேரத்தில் சரளைக் கற்கள் மீது நடந்து, நடந்து கால்கள் பொத்துப் போயிருந்தன. எந்தவொரு சின்ன கல் மீது காலை வைக்கும்போது வலித்தது. நானும், இரவி மாமாவும் மெதுவாக இறங்கிக் கொண்டிருந்தோம்.

ஏறும்போது சிரமப்பட்ட சரவணன் இறங்கும்போது எந்த சிரமமும் படவில்லை. அவனது பருமனான உடல், அவனை வேகமாக உருட்டி, கீழே கொண்டு போய் சேர்த்து விட்டது. அவன் இறங்கி 20 நிமிடங்கள் கழித்துதான் நாங்கள் போய்ச் சேர்ந்தோம்.

sabarimala saravanan ramesh

(மலை அடிவாரத்தில் சரவணனுடன் நான்)

மலை அடிவாரத்தில் லேசாக தூறிக் கொண்டிருந்தது. பக்தர்களை இறக்கிவிட்டு விட்டு, Parking பகுதிக்கு செல்லவிருந்த ஒரு வண்டியில், நான், சரவணன், இரவி மாமா, இன்னும் சில பக்தர்கள் ஏறிக் கொண்டோம். பம்பையிலிருந்து 15 நிமிட தூரத்தில் வண்டிகள் நிறுத்துமிடம் இருந்தது.

ஒவ்வொருவராக வந்து சேர்ந்து, நாங்கள் கிளம்புவதற்கு இரவு 1 மணியாகி விட்டது. அங்கிருந்து குளத்துப்புழா நோக்கி எங்களது வண்டிகள் கிளம்பின.

***

பயணத்தின் நான்காவது மற்றும் இறுதி நாள் இது. ஜனவரி 18, 2015. நன்கு தூங்கி விட்டதால், குளத்துப்புழாவில் எந்நேரம் வந்து இறங்கினோம் என்று எனக்குத் தெரியவில்லை. ஐந்து மணி வாக்கில் பொறுப்பாளர்கள் வந்து எழுப்பி விட்டார்கள். குளத்துப்புழாவில் அய்யப்ப பக்தர்கள் கூட்டம் அதிகமாக இல்லை. எங்களது வண்டிகளைத் தவிர்த்து மேலும் இரு வண்டிகள் மட்டுமே இருந்தன.

காலைக் கடன்களை முடித்துவிட்டு, அருகிலிருந்த கல்லடை ஆற்றில் குளித்தோம். நதியில் மீன்கள் அதிகமாக இருந்தன. இங்கு மீன்கள் அதிகமாக இருப்பதற்கு ஒரு கதை சொல்கிறார்கள். குளத்துப்புழா அய்யப்பனின் அழகில் மயங்கி, மச்சக்கன்னி ஒருத்தி அவரை மணக்க விரும்புகிறாள். அதற்கு அய்யப்பன் மறுக்கவே, அவரைப் பார்த்துக்கொண்டே இருக்கும் வரத்தையாவது தருமாறு வேண்டுகிறாள். அய்யப்பனும் இந்தக் கல்லடை ஆற்றில் மீனாக இருந்து தன்னைப் பார்க்கும்படி அருளுகிறார். அய்யப்பனைக் கும்பிட வரும் பக்தர்கள், மச்சக்கன்னிக்கு பொரி, வேர்க்கடலை போடுகிறார்கள்.

kuzhathupuzha temple

(குளத்துப்புழா கோயில்)

நான் ஒரு வேர்க்கடலை பிரியன். வறுத்த வேர்க்கடலை என்றால் அவ்வளவு பிடிக்கும். குளித்துவிட்டு நாங்கள் மேலே வந்தபோது, எங்கள் குழுவில் உள்ள பக்தர்கள் அனைவருக்கும் பொரி பாக்கெட் ஒன்றும், வேர்க்கடலை பாக்கெட் ஒன்றும் கொடுத்து, மீன்களுக்குப் போடுமாறு பொறுப்பாளர்கள் கூறினர்.

செங்கோட்டை – திருவனந்தபுரம் சாலையில், செங்கோட்டையிலிருந்து 50 கி.மீ தொலைவில் குளத்துப்புழா கோயில் இருக்கிறது. சாலையை ஒட்டி, இடப்புறத்தில் கல்லடை ஆறும், ஆற்றின் மறுகரையில் கோயிலும் இருக்கிறது. கோயிலை ஒட்டியிருக்கும் கரையில்தான் மீன்கள் அதிகமாக இருக்கின்றன. கோயிலுக்குச் செல்ல போடப்பட்டிருக்கும் பாலத்தில் நின்றபடி பக்தர்கள் மீன்களுக்கு உணவு போடுகின்றனர்.

ஏராளமான கொழுத்த மீன்கள் இருந்தன. மச்சக்கன்னி அய்யப்பனையே நினைத்து உருகவில்லை போலும்.... நல்ல மாப்பிள்ளை கிடைத்ததும், அய்யப்பனை மறந்துவிட்டு, வதவதவென்று பிள்ளைகளைப் பெற்றுப் போட்டிருக்கிறாள். பிள்ளைகள், பேரப்பிள்ளைகள் என பெரிய கூட்டமே ஆற்றில் இருந்தது. இது புரியாத பக்தர்கள் பொரி, வேர்க்கடலை போட்டுக் கொண்டிருந்தார்கள். நாமதான் விவரமாச்சே... பொரியை மட்டும் போட்டுவிட்டு, வேர்க்கடலையை சாப்பிடத் தொடங்கினேன். சரவணன் போடவிருந்த வேர்க்கடலையையும் பிடுங்கி, பாக்கெட்டில் வைத்துக் கொண்டேன்.

இந்தக் கோயிலில் அய்யப்பன் குழந்தையாக காட்சி அளிப்பதால், பால சாஸ்தா என்ற பெயரில் அழைக்கப்படுகிறார். இவரோடு நாகராஜர், யட்சியம்மன், விநாயகர், மாம்பழத்துறையம்மன், பூதத்தார் சன்னிதிகளும் உள்ளன. குழந்தை இல்லாதவர்கள் யட்சியம்மனுக்குத் தொட்டில் கட்டி வணங்கினால், குழந்தைப் பேறு கிடைக்கும் என்று நம்புகிறார்கள். அய்யப்பன் குழந்தை வடிவில் இருப்பதால், குழந்தைகளைப் பள்ளிக்குச் சேர்க்கும்முன்பு மலையாளிகள் இங்கே வந்து கும்பிட்டுச் செல்கிறார்கள். அதனால் குழந்தைகளின் கல்வி சிறக்குமாம்.

நாகராஜாவுக்கு எங்கள் குழுவினர் தேன் படையல் செய்து வழிபட்டனர். ஒரு சின்ன குப்பியில் தேன் ஊற்றிக் கொடுத்து, அதை நாகராஜா சிலையின் முன் வைத்து, வழிபடச் சொன்னார்கள். வரிசையாக சென்று கொண்டிருந்தோம்.

“சரவணா! தேனை குடிச்சிறலாமா?” என்று கேட்டேன்.

“ஓரமாப் போய் யாருக்கும் தெரியாம குடிச்சிட்டு வந்துரு..” என்றான்.

நானும் மெதுவாக நழுவி, தேனைக் குடித்தேன். குப்பியில் தேன் ஊற்றிக் கொண்டிருந்த பொறுப்பாளர் ஒருவரிடம், நான் தேன் குடிப்பதை சரவணன் போட்டுக் கொடுத்துவிட்டான். அவரும் பார்த்துவிட்டார். சபரிமலைக்குச் சென்று, அவர் சேர்த்து வைத்திருந்த புண்ணியம் எல்லாவற்றையும் நான் தரையில் கொட்டியதைப் போல் முறைத்தார். என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் நான் முழிக்க, சரவணன் சிரித்துக் கொண்டிருந்தான்.

***

காலை 9 மணி. குளத்துப்புழா கோயிலில் வழிபாடுகளை எல்லாம் முடித்துவிட்டு, பக்தர்கள் அக்கடாவென்று உட்கார்ந்திருந்தார்கள். அய்யப்பனின் சரவீடுகளில் ஒன்று என்றாலும், இக்கோயில் பெரியதாக இல்லை. இங்கு வயது, வித்தியாசமின்றி பெண்கள் அனைவரும் அனுமதிக்கப்பட்டுக் கொண்டிருந்தனர். அப்படியிருந்தும் உள்ளூர்க் கூட்டம் அதிகமாக இல்லை. ஒரு பத்து, இருபது பேர் மட்டுமே இருந்தார்கள். அங்கு உட்கார்ந்திருந்தபோது, பொறுப்பாளர்களில் ஒருவர், முந்தைய நாள் இரவு, குரு சாமி எனக்கு கொடுக்கவிருந்த அன்பளிப்பு பணத்தைக் கொண்டு வந்து கொடுத்தார்.

kuzhathupuzha temple 1

(குளத்துப்புழா கோயிலின் சுற்றுப்பகுதி)

வெளியில் வந்ததும், காலைச் சாப்பாடு தயாராக இருந்தது. அனைவரும் சாப்பிட்டோம். அடுத்து நாங்கள் பார்க்கவிருந்தது ஆரியங்காவு அய்யப்பன் கோயில். 12 மணிக்கு நடை சாத்திவிடுவார்கள் என்பதால், சீக்கிரம் சமையல் பாத்திரங்களை எடுத்து வைத்து, கிளம்பும்படி குரு சாமி கூறினார். மிச்சம், மீதியை அங்கிருந்த பிச்சைக்காரர்களுக்குப் போட்டுவிட்டு, பாத்திரங்களை அவசர அவசரமாகக் கழுவி, கிளம்பினோம்.

***

ஆரியங்காவு கோயிலை நாங்கள் அடைந்தபோது, 11.55 ஆகிவிட்டது. வண்டியை நிறுத்தியதும், எல்லோரும் கோயிலினுள்ளே ஓடினோம். எங்களுக்கு முன்னதாகச் சென்றுவிட்ட பொறுப்பாளர்கள், எல்லோரும் உள்ளே போகும்வரை நடை சாத்தாமல் பார்த்துக் கொண்டனர். எங்கள் குழு முழுவதும் கோயில் பிரகாரத்திற்குள் நுழைவதற்கு 12.03 ஆகிவிட்டது. அதன்பின்புதான் நடை சாத்தினார்கள். நடை சாத்திவிட்டால், அதன்பின்பு 4 மணிக்குத் தான் திறப்பார்கள். அதுவரை பக்தர்கள் யாரும் உள்ளே நுழைய முடியாது.

பிரதான சன்னதியில் ஏறக்குறைய 100 பேர் இருந்தோம். நடை சாத்தியபின்பு, அய்யப்பனுக்கு செய்யும் வழிபாடுகளை கோயில் பூசாரிகள் செய்து கொண்டிருந்தார்கள். அரைமணி நேரம் அந்த வழிபாடு நடந்தது. முடிவில், தின்பதற்கு ஏதாவது பிரசாதம் தருவார்கள் என்று எதிர்பார்த்தேன். ஒன்றும் தராமல் வெளியே அனுப்பிவிட்டார்கள்.

இக்கோயிலும் செங்கோட்டை – திருவனந்தபுரம் சாலையில் வலப்புறத்தில் உள்ளது. பயணங்களில் ஆர்வமுள்ளவர்கள் ஒரு முறை செங்கோட்டை – திருவனந்தபுரம் சாலையில் சென்று வர வேண்டும். அடர்ந்த மலைக் காடுகளினூடாக செல்லும் பாதை. அப்பாதையில் கார் ஓட்டுவதே மிகவும் சுகமான அனுபவமாக இருக்கும். பகல் நேரத்தில் சென்றால், அந்த அழகை முழுமையாக ரசிக்க முடியும். கடந்த ஜூன் மாதம் அப்படி ஒரு பயணத்தை நானும், எனது மனைவி ஹேமாவும் மேற்கொண்டோம். ரம்மியமான பயணமாக அது இருந்தது.

ஆரியங்காவு கோயிலின் தல புராணத்தை குரு சாமி விளக்கினார். அய்யப்பன் இரண்டாவதாக மணந்த புஷ்கலா தேவி, மதுரை சவுராஷ்டிரா குடும்பத்தைச் சேர்ந்த பெண் என்பதும், அவரை அய்யப்பன் எப்படி மணந்தார் என்பதையும் குரு சாமி சுவாரசியமாக விளக்கினார். இங்கு இருக்கும் அய்யப்பனுக்கு ‘மதகஜ வாகன ரூபன்’ என்ற பெயரும் இருக்கிறது. அதற்கு என்ன காரணம் என்பதையும், சவுராஷ்டிரா பெண்ணை அவர் மணந்த கதையையும் அடுத்த பகுதியில் பார்ப்போம்.

(அடுத்த பகுதியில் நிறைவடையும்)

-    கீற்று நந்தன் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)