தலைவர்களில் பல ரகங்களுண்டு! அவைகளில் இதுவுமொன்று என அறிக!
ஒரு வேலையுமே செய்யாமல் சுகவாசியாகக் காலந்தள்ளிக் கொண்டு, அதே நேரத்தில் நாட்டின் பெருந் தலைவர்கள் பட்டியலில் சேர்ந்திருக்கிறவர்களை எப்படித் தெரிந்து கொள்வது?
அவர்களுடைய லெட்டர் பேப்பரைப் பார்த்துத்தான்! யாரோ ஒரு அய்யர், ஏதோ ஓர் ஊரில்,-
பஞ்சாயத்து போர்டுத் தலைவர்
கோவில் டிரஸ்டி
உணவுக் கமிட்டித் தலைவர்
காங்கிரஸ் கமிட்டித் தலைவர்
கூட்டுறவு சங்கத் தலைவர்
ஜில்லா போர்டு மெம்பர்
பாங்க் உப தலைவர்
- ஆகிய இத்தனை மகத்தான பொறுப்புக்களையும் ஏற்றுக் கொண்டிருக்கிறார் என்றும், இவ்வளவும் பார்த்துக் கொண்டு வக்கீல் தொழிலும் செய்கிறார் என்றும், பட்டுக்கோட்டையிலிருந்து ஒரு நண்பர் எழுதியிருக்கிறார்!
வக்கீல் தொழிலில் நம்மவர்கள் முன்னேறவில்லை யென்றால் எப்படி முன்னேற முடியும்? சகல பொறுப்புக்களையும் தங்கள் தலையிலேயே தூக்கிப் போட்டுக் கொண்டால் அல்லவோ முடியும்?
இதென்ன ஆச்சரியம்? எனக்கு அறிமுகமான லட்சாதிபதி ஒருவர் இருந்தார்; ஏழைபங்காளர். அதாவது சென்னையிலிருக்கும் ஏழைகளின் வீடுகளையெல்லாம் தம் வீடுகளாகவே கருதி, கடன் மேல் கடன் கொடுத்து! தம் சொந்த வீடுகளாக்கிக் கொண்டவர்! (ஏழைபங்காளர் ஏழைகளின் சொத்துக்களைப் பங்கு போட்டுக் கொள்பவர்!) அவருடைய லெட்டர் பேப்பரில் சரிபாதி அவரது பதவிகளைக் குறிப்பதாகவே இருக்கும். அவ்வளவு அமைப்புக்களில் அவர் தலைவர்; அல்லது உபதலைவர்! அல்லது அரையணாவும் கொடுத்தறியாத புரவலர்! (போஷகர்)
இன்னொருவர் இந்த மாதிரி லெட்டர் பேப்பரைக் கண்ணாடி போட்டே வைத்திருக்கிறார்!
இன்னொருவர் எங்கெங்கேயோ இருக்கிறவைகளுக்கெல்லாம் தலைவராகவும், பொருளாளராகவும், செயலாளராகவும் இருந்து வருகிறார்!
ஒரே மனிதர் இத்தனை மகத்தான பொறுப்புக்களை எப்படி ஏற்று நடத்தி வருகிறார்? அதிசயந்தான்! இப்பேர்ப்பட்ட லெட்டர் பேப்பர்! தலைவர்களைச் சாமான்ய மனிதர்களாகவே கருதிவிடக் கூடாது! அற்புதப் பிறவிகள்! ஒரே நேரத்தில் எத்தனை வேலைகளை வேண்டுமானாலும் பார்க்கக் கூடியவர்கள்! அஷ்டாவதானிகள்! சதாவதானிகள்!
இவர்களையழைத்து “எஞ்சின் டிரைவர் வேலையும் அதே நேரத்தில் “கார்டு” வேலையும் பார்த்துக் கொள்ளச் சொல்லுங்கள்! ‘முடியாது’ என்று கூறவே மாட்டார்கள்! உடனே லெட்டர் பேப்பரில் சேர்த்து விடுவார்கள்! நடிகர் வேலையையும் படுதா இழுக்கும் வேலையையும் ஒரே நேரத்தில் பார்த்துக் கொள்வார்கள்! கவர்னர் வேலையையும் கான்ஸ்டபிள் வேலையையும் ஒரே சமயத்தில் பார்த்துக் கொள்வார்கள்! ஆனால் ஒரே ஒரு நிபந்தனை! ‘லெட்டர் பேப்பரில்’ இவைகளையெல்லாம் அச்சிட வேண்டும்!
“வேறு அவசர அலுவல் இருப்பதனால் வர முடியாமலிருப்பதற்கு மிக வருந்துகிறேன்,” - என்பதையும் அச்சுப்போட்டு வைத்துக் கொண்டால் நல்லது!
காந்தியாருக்குச் சொந்த “லெட்டர் பேப்பர்” இருந்ததா? அப்படியானால் என்னென்ன பதவிகளை அவர் அதில் அச்சிட்டிருந்தார்? - என்பதை அறியவேண்டும் என்பது என் ஆசை!
எனக்குத் தெரிந்த தலைவர் ஒருவர் “மூட்டைப்பூச்சி ஒழிப்பு சங்கம்” தவிர மற்றெல்லா சங்கங்களிலும் முக்கிய தொடர்பு வைத்துக் கொண்டிருக்கிறார்!
என்னைப் பொறுத்தமட்டில் நான் “மூச்சு விடுவோர் சங்கத்தின்” தனிப் பெருந்தலைவராகி விட்டேன்! இதன் ஆண்டு விழாவுக்குத் தலைமை வகிக்க வேண்டுமென்று உறுப்பினர் அனைவரும் என்னை மன்றாடிக் கேட்டுக் கொண்ட போதிலும் “அலுவல் மிகுதியால்” ஒப்புக் கொள்ள முடியவில்லை என்பதை இப்போதே தெரிவித்து விட்டேன்!
- குத்தூசி குருசாமி (21-4-50)