மனிதர்கள் தேனீர்க்கடை, டிபன் சென்டர், உணவகம் ஆகியனவற்றைப் பயன்படுத்துவது போன்று தவறாது போகும் கடை, சலூன் கடை. இது முடிதிருத்தகம், சிகை சிங்கார நிலையம், பார்பர் ஷாப் என்று பல்வேறு பெயர்களில் அழைக்கப்படுகிறது. அந்தக் காலங்களில் திராவிட இயக்கங்களின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்தவை இந்த முடி திருத்தகங்களே! அங்கு திராவிட இயக்க இதழ்களை வாங்கிப் போடுவார்கள். முன்னே வந்தவருக்கு முடிவெட்டும் வேலை நடக்கிற பொழுது, பின்னே வந்தவர் காத்திருப்பார். அந்தத் தருணங்களில் அவர்கள் அங்குக் கிடக்கின்ற இயக்க இதழ்களை வாசித்து அரசியல் நிகழ்வுகளை அறிந்து கொள்வார்கள்.

அன்று பொது இடங்களில் “அரசியல் பேசாதீர்” என்கிற அறிவிப்புப் பலகை இருக்காது. ஒருவருக்கொருவர் அரசியல் நிகழ்வுகளை அலசுவார்கள். எதிர்க் கருத்துக்கள் தெரிவிப்பவரை எதிரியாகக் கருதாமல் உரையாடல் ஆரோக்கியமாகத் திகழும்.saloon shopதிராவிட இயக்கங்கள் தோன்றி வளர்ந்த கால கட்டங்களில் ஊர்தோறும் போய் இயக்கப் பிரச்சாரம் செய்யும் பேச்சாளர்கள், ஒரு மணி நேரம், ஒன்றரை மணி நேரம் உரையாற்றுவார்கள். பேசி முடித்த பிறகு அவர்கள் இரவு தங்குகிற இடம் சலூன்கள் தான். ஆம்! அப்போது இன்றுபோல் தங்குவதற்கு எல்லா ஊர்களிலும் லாட்ஜ் கிடையாது. உள்ளூர் கட்சிக்காரர்களுக்கு இன்னொருவரை வீட்டில் தங்க வைக்கும் வகையில் வசதியுள்ள வீடு இருக்காது. அவர் இருப்பதே சாதாரண ஓலைக் குடிசையாகத்தான் இருக்கும். அதனால் இரவில் சலூன் பெஞ்சில் படுத்து தூங்கிவிட்டு காலையில் பேருந்து பிடித்துப் பயணப்படுவார்கள்.

நாடகக் கலைஞர் விஸ்வநாத தாஸ் திருவுருவப் படம் இல்லாத சலூன்களை எங்கும் பார்க்க முடியாது. திருவாளர் விஸ்வநாத தாஸ் நாவிதர் இனத்தைச் சார்ந்தவர். சுதந்திரப் போராட்டம் நடைபெறும் நாட்களில் வெள்ளையனை எதிர்த்து ஊர்கள்தோறும் நாடகம் நடத்தியவர். இவர் பிறந்த சமூகத்தைக் காரணம் காட்டி இவருடன் பெண் கலைஞர்கள் நடிக்க மறுத்தார்கள். அதே வேளையில் ஜாதி பற்றிக் கவலைப்படாமல் அவருடன் இணைந்து நடித்தவர் கம்யூனிஸ்ட் தலைவர் கே.பி.ஜானகி அம்மாள் என்பது வரலாறு.

தூத்துக்குடியில் வக்கீல் ஒருவருக்கு நாவிதர் சவரம் செய்து கொண்டிருந்தார். சுய சவரம் பழக்கத்திற்கு வராத காலம். வக்கீல்கள், வசதிபடைத்தோர், அரசாங்க அதிகாரிகள், ஊர் முக்கியப் பிரமுகர்கள் ஆகியோருக்கு வீடுகளுக்குப் போய்; நாவிதர்கள் சவரம் செய்வார்கள். வ.உ.சி. போராட்டங்களில் ஈடுபட்டு மக்களின் ஆதரவைப் பெற்றிருந்த காலம். அன்று வ.உ.சி. மீதான வழக்கொன்று விசாரணைக்கு வருவதாக இருந்தது. வ.உ.சி.க்கு எதிராக வெள்ளையனுக்கு ஆதரவாக அந்த வக்கீல் வாதாடப் போவதாக பேச்சுவாக்கில் வேலை செய்யும்போது தெரிந்து கொண்டார் நாவிதர். ‘எங்க அய்யாவுக்கு எதிரா வாதாடப் போகிற ஒங்களுக்கு சவரம் செய்ய மாட்டேன்’ என்று பாதியோடு சவரம் செய்வதை நிறுத்தி விட்டார். நிறுத்தியதோடு மட்டுமல்லாமல் உள்ளூரில் உள்ள சக நாவிதர்களுக்கும் தகவலைப் பரப்பி விட்டார். ஒருவரும் இவருக்கு சவரம் செய்ய முன்வரவில்லை. பிறகு, அவசர அவசரமாக திருநெல்வேலி போய் மீதி சவரத்தை முடித்து வந்தார் அந்த வக்கீல். நல்ல வேளை அப்போது அலைபேசி வசதிகளெல்லாம் கிடையாது. இருந்திருந்தால் நெல்லை நாவிதர்களுக்கும் தகவல் கொடுத்து அங்கும் சவரம் செய்யவிடாமல் சங்கடத்தை ஏற்படுத்தி இருப்பார்கள்.

அதே தூத்துக்குடியில் இன்று பொன் மாரியப்பன் என்பவர் தனது சலூனில் ஒரு பகுதியில் நூலகம் அமைத்திருக்கிறார். சாதாரண நூலகம் அல்லஞ் ஏராளமான நூல்களுடன் இந்த நூலகம் காட்சி தருகிறது. 11.09.2022ஆம் தேதி இலக்கிய வாசகர் திருவிழா நடத்தி இருக்கிறார். எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன், பட்டிமன்றப் பேச்சாளர்; இராஜா ஆகியோர் கலந்து கொண்டிருக்கிறார்கள். “வாசிப்பின் வெளிச்சம்” என்கிற தலைப்பில் உரை நிகழ்த்திய எஸ்.ராமகிருஷ்ணனின் உரை எல்லோரின் கவனத்தையும் ஈர்த்திருக்கிறது. புத்தகங்களை பார்வைக்காக மட்டும் வைக்காமல் தானும் வாசித்து சலூனுக்கு வருவோரையும் வாசிக்க வைக்கிறார். இது போன்று சலூனில் நூலகம் வைப்பது தூத்துக்குடி பொன் மாரியப்பனைத் தவிர தமிழகத்தில் வேறெங்கும் யாரும் வைத்ததில்லை.

மானாமதுரையில் விஜயதர்சனி சலூன் என்கிற பெயரில் கோபிநாத் என்பவர் முடிதிருத்தகம் நடத்தி வருகிறார். தினகரன், தினத்தந்தி, தினமலர் ஆகிய நாளிதழ்களும் இனிய உதயம், ராணி, குங்குமம், தோழி, விகடன், ஆன்மிகம், நக்கீரன், குமுதம், ரிப்போர்ட்டர் போன்ற வார, மாத இதழ்களும் வாங்கி சலூனுக்கு வருவோரை வாசிக்கத் தூண்டுகிறார். ஆனால் புத்தகங்கள் வாங்கி நூலகம் அமைத்திருப்பது தூத்துக்குடியில் மட்டுமே..

தூத்துக்குடி சலூன் நூலகம் குறித்து கேள்விப்பட்டு நடிகர் கமலஹாசன் நூலகத்திற்கு வந்து பொன் மாரியப்பனைப் பாராட்டிவிட்டு சென்றதோடு, தமது நூலகத்தில் வைத்திருந்த புத்தகங்கள் பலவற்றை அன்பளிப்பாக அனுப்பி வைத்திருக்கிறார். ரஷ்ய எழுத்தாளர் டால்ஸ்டாய் பிறந்த தினத்தில் சுவரொட்டி அடித்து மாநகர் முழுவதும் பொன் மாரியப்பன் ஒட்டியது குறிக்கத்தக்க செய்தியாகும்.

முடி திருத்தகத்தை கருப்பொருளாகக் கொண்டு சொற்ப படைப்புக்களே வந்திருக்கின்றன. ‘அம்பட்டன் கலயம்,’ ‘மீசை என்பது வெறும் மயிர்,’ ‘ஒரு சகலகலா சவரக்காரன் பராக்ஞ் பராக்ஞ்’ என்பன அவை. சில திரைப்படங்களிலும் நாவிதர் குறித்த காட்சிகள் இடம் பெற்றிருக்கின்றன. கிழக்கே போகும் ரயிலில் கதாநாயகனாக சுதாகர், அவரது தந்தையாக சீனிவாசன் நாவிதராக நடித்திருப்பார்கள். சுதாகரை பாட்டுக் கட்டும் பாவலராக சித்திரித்திருப்பார் பாரதி ராஜா. ‘கல்லுக்குள் ஈரம்’ படத்தில் கவுண்டமணி நாவிதர் பாத்திரம் ஏற்று நடித்திருப்பார். பாக்கியராஜ் கதை எழுதி இயக்கி நடித்த ‘இது நம்ம ஆளு’ படத்தில் குமரி முத்துவும் அவரது மனைவியாக ஆச்சி மனோரமாவும் நாவிதர் குடும்பத்தின்

அப்பா-அம்மாவாக நடித்து தமது திறமைகளை வெளிப்படுத்தி இருப்பார்கள்.

“திருப்பதி அம்பட்டன் சிரைத்த மாதிரி...”

“செரைக்கிற வேலைக்குப் போறவன் கத்திய மறந்திட்டுப் போன கதையா.”

என்கிற தினுசில் நாவிதர்களைத் தொடர்புபடுத்தி ஒன்றிரண்டு பழமொழிகள் ஜனங்களின் பேச்சு வழக்கில் வலம் வருகின்றன.

முன்பெல்லாம் முடிவெட்டப் போகிறேன். சேவிங் பண்ணப் போகிறேன் என்றவர்கள், இன்று ‘ஹேர் டிரஸ்சிங்;’ செய்யப் போகிறேன் என்று தாம் சொல்வது நாகரிக மொழி எனக் கருதிக்கொண்டு சொல்லிப் போகிறார்கள்.

நகரங்களில் நடத்தப்படும் முடி திருத்தகங்கள், அழகு நிலையங்களாக அனைவரின் பார்வைக்கும் தென்படுகின்றன. ஆனால், கிராமங்களின் நிலமைகளே வேறு. ஜனத்தொகையைப் பொறுத்து கிராமங்களில் ஊருக்கு இரண்டு அல்லது மூன்று குடும்பங்கள் வாழ்ந்தன. காலப்போக்கில் அவர்கள் நகரங்களை நோக்கி நகர்ந்துவிட்டார்கள். விவசாயமின்மை, மழை பெய்யாமை, குடிநீருக்கு அல்லல்படுதல் முதலியன அவர்கள் கிராமங்களை விட்டு இடம் பெயர்ந்ததற்கு இன்றியமையாத காரணங்கள் ஆகும்.

கிராமங்களில் வாழும்போது இவர்களை நாவிதர், மருத்துவர், குடிமகன் என்று விளிப்பார்கள். சில ஆதிக்க சமூகத்தினர் ‘அம்பட்டன்’என்று மட்டமாக அழைப்பதும் இருந்தன. கர்ப்பிணி பெண்களுக்கு பேறுகாலம் பார்ப்பவர்களாக நாவிதர் வீட்டுப் பெண்மணிகள் இருந்தார்கள். அவர்களை குடிமகள் என்று கூப்பிடுவது வழக்கம். பெரும்பாலான பிரசவங்களை வெற்றிகரமாகப் பார்த்து முடிப்பார்கள். ஒரு சில பிரசவங்கள் தோல்விகளிலும் முடிவதுண்டு. அதற்காக குடிமகளை யாரும் குறை சொல்வதில்லை. ‘அவளும் ஆன மட்டும் பாத்தாஞ் நம்ம தலையில இப்பிடி எழுதி இருந்தா அவ என்ன செய்வாஞ்’ என்று பெருந்தன்மையாக சோகத்துடன் தோல்விகளை ஏற்றுக்கொள்வார்கள். இன்றும் இவர்களின் சங்கத்திற்கு ‘மருத்துவர் சங்கம்’ என்றுதான் பெயர் சூட்டி இருக்கிறார்கள்.

கிராமங்களில் வாழ்ந்த நாவிதர்களுக்கு கூலியாக பணம் தருவதில்லை. அறுவடைக் காலங்களில் களத்து மேடுகளிலேயே கணிசமான அளவு நெல்மணிகளைக் கொடுத்துவிடுவார்கள். தினசரி அந்திப் பொழுதில் வீடுதோறும் சென்று பெண்கள் சோறு வாங்குவார்கள்.

இறப்புக்கள் ஏற்பட்டால் நாவிதர் இல்லாமல் நல்லடக்கமோ எரியூட்டலோ நடைபெறாது. இப்பொழுதும் நாவிதர் இல்லாத கிராமங்களில் பக்கத்து ஊர்களில் இருந்தோ, நகரங்களில் இருந்தோ எப்பாடு பட்டாகிலும் நாவிதரை அழைத்து வந்து விடுவார்கள். கொல்லி வைத்தவருக்கு ‘மொட்டை’ போட வேண்டும் அல்லவா..?

இந்தியா சுதந்திரம் அடைந்து எழுபத்தி ஐந்து வருடங்கள் ஆகிவிட்டன. இடஒதுக்கீட்டில் நாவிதர் இனத்தை மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்த்திருக்கிறார்கள். இந்த எழுபத்தி ஐந்து ஆண்டுகளில் ஒருவர்கூட சட்டமன்ற உறுப்பினராக, நாடாளுமன்ற உறுப்பினராக வர முடியவில்லை. 1970ஆம் ஆண்டில் மானாமதுரையில் ஒன்றியப் பெருந்தலைவராக பொது உடமைக் கட்சியைச் சேர்ந்த எஸ்.எஸ். ராமன் என்கிற நாவிதர் இனத் தோழர் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். இவரைத் தவிர தமிழகத்தில் நகர் மன்றத் தலைவராகவோ மேயராகவோ யாரும் பொறுப்பிற்கு வந்தது கிடையாது என்பது கசப்பான நிஜம்.

அந்தக் காலங்களில் சலூன் பக்கம் பெண்கள் போக மாட்டார்கள். இன்று முடிவெட்டும்போது அடம்பிடிக்கும் பிள்ளைகளுக்காக அங்கு போய் உடன் இருந்து வெட்டி முடித்ததும் பிள்ளைகளைக் கூப்பிட்டு வருகிறார்கள். ஜாதிக் கட்டமைப்பில் அடித் தட்டில் இருக்கிற இவர்களைப் பெரிய சாதியினராகக் கருதிக்கொள்கிற பெண்கள், ‘அண்ணன்’ என்று விளிக்கிற பழக்கம் இப்போது ஏற்பட்டு இருக்கிறது. இது சந்தோசத்திற்குரிய சங்கதி ஆகும். அது போல் முடிவெட்டிவிட்டு வருகிற ஆண்களை குளித்த பிறகே வீட்டு சமையலறை, பூஜை அறை ஆகியனவற்றுக்குள் வர அனுமதிப்பார்கள். நாவிதர் கைபட்டதால் இவர்கள் தீட்டாகிப் போனவர்களாம். இன்று அந்த முறையெல்லாம் காலாவதி ஆகிவிட்டன. நாவிதர் வீட்டு திருமணங்களில் சாப்பிட யோசித்த பிற இனத்தவர்கள், இப்போது தாராளமாகச் சாப்பிடுகிறார்கள்.

மொத்தத்தில் வண்ணார், குயவர், நாவிதர் முதலியவர்களை ‘சேவை இனத்தார்’ என்று கூறுவார்கள். வாசிங் மிஷின் இல்லாத வீடுகள் இன்று கிடையாது. அதனால் சலவைத் தொழிலாளியின் தேவை குறைந்து வருகின்றன. குயவர்கள் உருவாக்குகிற மண்பாண்டப் பொருட்களை ஜனங்கள் அதிகமாக உபயோகப்படுத்துவதில்லை. அதே வேளையில் நாவிதர் இனத்தாரின் பயன்பாடுகள் நாளுக்கு நாள் கூடியவாறு இருக்கின்றன என்பதில் ஐயமில்லை.

- செல்வகதிரவன்

Pin It