நமது நாடு விடுதலை பெற வேண்டும் என்று நமது நாட்டிலுள்ள எல்லாக் கட்சியின் தலைவர்களும் கூறிக் கொண்டு வருகின்றனர். அதற்காக ஏதோ சில காரியங்களையும் செய்து கொண்டும் வருகின்றனர். தற்பொழுது சுயராஜ்யத்தைப் பற்றியும், தேச விடுதலையைப் பற்றியும் பேசாத மனிதர்கள் ஒருவர்கூட இல்லை யென்றே சொல்லலாம். ஆனால் யாரும் நமது நாட்டு ஏழை ஜனங்களின் துன்பத்தைப் போக்கி அவர்களைச் சுகமாக வாழும்படி செய்வதற்குத் தகுந்த வழி என்ன என்பதைப் பற்றிச் சிந்திப்பது கிடையாது. சுயராஜ்யம் வந்து விட்டால் எல்லாம் சரிப்பட்டு விடும் என்று ஒரேயடியாகச் சொல்லி விடுகிறார்கள். இப்படிப் பேசுகின்ற கூட்டத்தார் இது வரையிலும் நமது நாட்டு மக்களின் கஷ்டத்தைப் போக்க ஏதாவது செய்திருக்கிறார்களா? அல்லது அதைப் பற்றி நினைத்ததுதான் உண்டா? என்றால் கொஞ்சங்கூட இல்லை என்று நாம் துணிந்து சொல்லுவோம்.

நமது நாட்டிலேயே பிறந்து வளர்ந்த எண்ணற்ற மக்கள், இன்று கட்டத் துணி இல்லாமலும், உண்ண உணவில்லாமலும், இருக்க இடமில்லாமலும், மற்ற மக்களுடன் சேர்ந்து வாழ முடியாமலும் மிருகத்தை விடக் கேவலமான நிலையில் வாழ்ந்து வருகின்றனர். அனேக மக்கள், மிருகத்திலும் கேவலமாக இந்த நாட்டில் கிடந்து உண்ண உணவில்லாமல் சாவதை விட அந்நிய நாடுகளில் சென்று எந்தக் கஷ்டத்திற்குள்ளானாலும் அவமானத்திற்குள் ளானாலும் வயிற்றையாவது கழுவிக் கொண்டிருக்கலாம் என்னும் எண்ணத் துடன் கப்பலேறிப் போய் வாழ்ந்து வருகின்றனர்.

periyar with dog 437இப்பொழுது தென்னாப்பிரிக்கா, மலேயா, பர்மா, சிலோன், ஜாவா, கெனியா, கிழக்காப்பிரிக்கா முதலிய நாடுகளில் நமது நாட்டு இந்தியர்களே அதிகமாகக் குடியேறிக் கூலிகளாக இருக்கின்றனர். இந்த நாடுகளில் ‘இந்தியர்’ என்ற வார்த்தைக்கு ‘கூலிகள்’ என்ற அர்த்தமே வழங்கி வரு கின்றது. இம்மாதிரி அந்நிய தேசத்தில் சென்று வசிப்பவர்களில், வியாபாரம், உத்தியோகம் முதலிய தொழில்களில் ஈடுபட்டிருக்கும் இந்தியர்கள் மிகச் சிலரேயாவார்கள். மற்ற நூற்றுக்கு தொண்ணூற்றொன்பதே முக்காலே மூன்று வீசம் மக்கள் கடல் கடந்து சென்றும் கஷ்டம் தொலையாமல் கூலிகளாகவே வாழ்ந்து வருகின்றனர்.

இவ்வாறு லட்சக்கணக்கான மக்கள் தங்கள் தாய் நாட்டைத் துறந்து - சிலர் பெண்டு பிள்ளைகளையும் கூடப் பரிதவிக்க விட்டுவிட்டு, உற்றார் உறவினர்களை எல்லாம் றந்து, வேற்று நாடுகளுக்கும், வேற்றுத் தீவுகளுக்கும் குடியேறுவதன் காரணத்தை நன்றாய் யோசித்தால் விளங்காமல் போகாது.

நமது நாட்டிலேயே பிறந்த எண்ணற்ற மக்களுக்குக் குடியிருப்பதற்குச் சொந்தமாக ஒரு ‘சென்ட்’ நிலங்கூட இல்லை. அவர்கள் பிறர் அதாவது உயர்ந்த சாதிக்காரர்களின் நிலங்களில் குடியிருந்து கொண்டு, அந்நிலக் காரர்களுக்கு அடிமை வேலை செய்து அவர்கள் கொடுக்கும் குறைந்த கூலியைப் பெற்று ஜீவனஞ் செய்ய வேண்டியிருக்கிறது. இவ்வாறு வேலை செய்து கொண்டிருக்கும் எஜமானனிடத்தில் அதிகக் கூலி கேட்டாலோ அல்லது அதிகக் கூலி கிடைக்கும் இடத்திற்கு வேலைக்குப் போனாலோ உடனே அவர்கள் இந்த பரிதாபகரமனான மக்களுக்குக் குடியிருக்கக் கூட இடமில்லாமல் தங்கள் நிலத்தை விட்டு விரட்டுகின்றனர்.

இத்தகைய ஏழை மக்களின் சந்ததிகளாவது முன்னுக்கு வர வழியிருக் கிறதா? என்று ஆலோசனை செய்து பார்த்தால் அதற்கும் வழி இல்லை. இவர்கள் படிப்பதற்கும் வசதி இல்லை. ஏழை மக்கள் சிறு பிள்ளைகளைப் பள்ளிக்கூடத்திற்கு அனுப்ப முடியாத நிலையில் இருக்கின்றனர். முதலில் இவர்களால் பள்ளிக்கூடச் சம்பளம் கொடுக்க முடியாது. இரண்டாவது, இவர்கள் பள்ளிக்கூடம் போய்ப் படிப்பதாயிருந்தால் சாப்பாட்டிற்கு என்ன செய்வது? ஆகையால் இந்த ஏழை மக்களின் சிறு பிள்ளைகளும் ஏதாவது வேலை செய்து சம்பாதிக்க வேண்டிய நிர்ப்பந்தமான நிலைமையில் இருக்கிறார்கள். ஆகையால் இந்த நிலையைப் பரிகரித்து இவர்களை யெல்லாம் கல்வியுடைய வராக்கி மனிதராக்க என்ன முயற்சி செய்யப்படுகிறது?

தொழில் செய்து ஜீவிக்கும் நிலைமையிலுள்ள அனேகருக்கு தொழில் கிடைப்பதில்லை. நமது நாட்டில் பூர்வீக காலந் தொடங்கி நடைபெற்று வருந் தொழில் விவசாயத்தொழில் ஒன்றேயாகும். அதுவும் சென்ற யுகங்களில் எந்த முறையில் நடந்துகொண்டிருந்ததோ அந்த முறையில்தான் இன்றும் நமது நாட்டில் நடைபெற்று வருகின்றது. ஆகையால் இது கஷ்டமான தொழிலாக வும் லாபமற்றத் தொழிலாகவும் இருந்து கொண்டிருக்கிறது. விவசாயத் தொழிலைப் புதிய முறையில் அபிவிருத்தி செய்தாலொழிய அதில் லாபத்தை ஏராளமாக எதிர்பார்க்க முடியாது; விவசாயத் தொழிலாளர்களின் கஷ்டமும் நீங்காது. மற்றபடி வேறு தொழிற்சாலைகள் மிகுதியாக ஏற்படவில்லை. போயும் போயும் திரு. காந்தியவர்களால் புதிதாக அபிவிருத்தி செய்யப்பட்ட தொழில் கதர் ஒன்றேயாகும். இதற்காக ராட்டினத்தில் நூல் நூற்று அரை அணா ஒரு அணா பெற்று எத்தனை மக்கள் சுகமாக வாழ முடியும் என்று கேட் கிறோம்?

அன்றியும் ஏழை மக்கள் சுகாதாரமற்ற இடங்களிலும், நெருக்கமான சிறிய குடிசைகளிலும் கும்பலாக வாழ்ந்து நல்ல காற்றும் வெளிச்சமும் இயற்கையாக இருந்தும் அவற்றை அனுபவிக்க முடியாமலிருக்கின்றார்கள். பல வகையான நோய்களுக்கு ஆளாகி ஆரோக்கிய வாழ்வும் இன்றி, அகால மரணமும் அடைந்து கொண்டிருக்கின்றார்கள். இந்த மாதிரியாக இவர்கள் அடையும் கஷ்டங்களைப் போக்க என்ன செய்யப்பட்டது? இந்த மாதிரியான நம்மால் நிவர்த்திக்கக் கூடியதாயிருந்தும் நிவர்த்திக்காத காரணத்தினால் தானே எண்ணற்ற மக்கள் நமது நாட்டை விட்டு வெளியேறு கின்றனர். தென்னாப்பிரிக்கா முதலிய இடங்களில் வெள்ளைக்காரர்கள் இந்தியர்களை அவமதிக்கிறார்கள் என்பதற்காகப் பெரிய கிளர்ச்சி செய்கின்ற அரசியல் தலைவர்களில் யாராவது நமது நாட்டில் உயர்ந்த ஜாதிக்காரர்கள் என்று இருக்கின்ற வைதீகர்கள் ஏழை மக்களைப் படுத்தும் கொடுமையைப் பற்றி ஏதாவது பேசுகின்றார்களா? கிளர்ச்சி செய்கின்றார்களா? என்பதைக் கொஞ்சம் யோசித்துப் பார்க்கும் படி தெரிவித்துக் கொள்ளு கிறோம்.

இவ்வாறு நமது நாட்டில் ஏழை மக்கள் கஷ்டப்படுவதற்கும் அக் கஷ்டம் தாங்க முடியாமல் அவர்கள் கடல் கடந்து முன்பின்னறியா அயல் நாடுகளுக்குச் சென்று துன்ப வாழ்க்கை வாழ்வதற்கும் நமது நாட்டுப் பணக் காரர்களாலும், உயர்ந்த ஜாதிக்காரர்கள் என்பவர்களாலும், அவர்கள் விடுதலை பெறுவதற்கும் இக்கஷ்டங்களை நிவர்த்திக்க முடியாமலிருப்பதற் கும் காரணம் என்ன என்று கேட்டால் தேசாபிமானிகளென்று இருக்கிறவர்கள் உடனே தயங்காமல் ஒரு காரணம் சொல்லிவிடுகின்றனர். அந்தக் காரணம்:- “ஆங்கிலேயராகிய அன்னியர் நமது நாட்டை ஆளுவதால்தான் நமது நாடு இந்த நிலையில் இருக்கிறது” என்று சொல்லி விடுகிறார்கள். ஆனால் இது சரியான காரணமாகுமா? என்றுதான் நாம் கேட்கின்றோம்.

"மதம், மதம்" என்ற குருட்டு நம்பிக்கையின் பேரால் நாம் குடும்பங்களில் செய்கின்ற செலவுகளை விட்டு விட்டுப் பொதுவாக நமது நாட்டில் ஒன்றுக்கும் பயன்படாமல் பொதுச் சொத்தாக இருந்து வீணாகும் பொருள்கள் மாத்திரம் எவ்வளவு என்று பாருங்கள்! திருப்பதி, இராமேஸ்வரம், சீரங்கம், மதுரை, மாயவரம், திருவடமருதூர், சிதம்பரம், திருவாரூர், பழனி, ஆவுடையார் கோயில், வேதாரண்யம், திருவையாறு, வைத்தீஸ்வரன் கோயில் போன்ற தேவஸ்தானங்களுக்கு இருக்கும் சொத்துக்கள் எவ்வளவு? அவைகளிலிருந்து நிரந்தரமாக வந்து கொண்டிருக்கும் வருஷ வரும்படி எவ்வளவு? இவையல்லாமல் யாத்ரீகர் மூலம் வரும் லாபம் எவ்வளவு? என்று பார்த்தால் எல்லாம் கிட்டத்தட்ட 60 அல்லது 70 கோடிக்குக் குறையாமல் இருக்கக் கூடுமென்பதில் சந்தேகமில்லை. இவற்றோடு திருவாடுதுறை, தருமபுரம், திருப்பனந்தாள், குன்றக்குடி, மதுரை, கும்பகோணம், சிருங்கேரி முதலிய பல ஊர்களில் உள்ள மடங்களுக்கு இருக்கும் சொத்துக்கள் குறைந்தது 10 அல்லது 15 கோடி ரூபாயாவது இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. சமீபத்தில் திருவாங்கூரில் பத்மநாப சாமி கோயிலில் உள்ள நாணயங்களைக் கணக்கிட்ட போது 20 லெட்சம் ரூபாய் பெறுமானமுள்ள வெள்ளி நாணயங்களும் 30 லட்சம் ரூபாய் பெறுமானமுள்ள தங்க நாணயங்களும் இருக்கின்றனவாம். இன்னும் திறந்து பார்த்து விலை மதிப்பிட முடியாமல் அனேக பெட்டிகள் கிடக்கின்றனவாம். அவைகளையும் கணக்கிட்டால் குறைந்தது 50 லட்ச ரூபாய்க்காவது இருக்கக்கூடும். ஆகவே, திருவாங்கூர் பத்மநாப சாமி கோயி லில் ஒன்றுக்கும் உதவாமல் பாழாகிக் கிடக்கும் பொருள் மாத்திரம் ஒரு கோடி என்றால் மற்ற கோயில்களையெல்லாம் சேர்த்துப்பார்த்தால் 60 அல்லது 70 கோடிக்கு குறையாமலிருக்கலாமென்று நாம் கூறியதில் சிறிதும் தவறு இருக்க முடியாது.

இந்த மாதிரி நமது நாட்டிலுள்ள குழவி கல்லுகளுக்கும், கரடுமுரடான பொம்மைக் கற்களுக்கும், சந்நியாசி வேஷதாரிகட்கும் கோடிக்கணக்கான பொருளை வைத்து விட்டு ‘நமது நாடு தரித்திர நாடு! தரித்திர நாடு!! வெள் ளைக்காரர்களால் நாம் தரித்திரமடைந்து விட்டோம். ஆகையால் அந்நிய ராகிய வெள்ளைக்காரர்கள் நமது நாட்டை விட்டுப் போனால்தான் நமது தரித்திரம் நீங்கும் என்று சொல்லிக் கொண்டிருப்பதில் ஏதாவது அர்த்த முண்டா!’ என்றுதான் நாம் கேட்கின்றோம்.

உயிரற்ற கல்லுகளும் சந்நியாசிகளுமே கோடிக்கணக்கான ரூபாய்களுக்கு முதலாளிகளாய் இருப்பதையும், இவைகளுக்காக ஒவ்வொரு வருஷமும், ஒவ்வொரு மாதமும், ஒவ்வொரு நாளும் அழிக்கப்படும் பண்டங்களையும், ரூபாய்களையும் பார்த்த எந்த அறிவுள்ள மனிதனாவது நமது நாட்டை வறுமை நிறைந்த நாடு என்று சொல்லுவதை ஒப்புக் கொள்ள முடியுமா? என்று யோசித்துப் பாருங்கள்.

இந்த மாதிரி கோடிக்கணக்கான ரூபாய்கள் ஒருவருக்கும் பிரயோசனப் படாமல் துருப்பிடித்துக் கிடப்பதற்குக் காரணம் நமது மக்களின் மூளையில், நமது தலைவர்கள் என்கிறவர்களின் மண்டையில் அழுக்கேறிப் பாசி பிடித்து விளக்கமின்றி இருப்பதுதானே காரணம்? இந்த அழுக்கை - பாசியைக் கழுவி சுத்தப்படுத்தினாலல்லவோ நாம் விடுதலை பெற முடியும்?

காலஞ் சென்ற பனகால் மன்னரால் தேவஸ்தானங்களும், மடங்களும் தாங்கள் செய்யும் செலவுகளுக்குக் கணக்கு ஒப்பிக்க வேண்டும் என்பதற்காகவும் அவைகளின் சொத்துக்கள் அழியாமல் காப்பாற்றப்பட வேண்டும் என்பதற்காகவும் நிறைவேற்றப்பட்ட ‘இந்து மத தரும பரிபாலனச் சட்ட’த்தையே நமது நாட்டு வைதீகக் கூட்டத்தார் எதிர்த்து ‘மதமே போச்சு, மதத்திற்கு ஆபத்து’ என்று பெருங் கிளர்ச்சி செய்தார்களென்பதை யாரும் மறந்திருக்க மாட்டார்கள். இத்தகைய மனப்பான்மையுடைய வைதீகர்கள் இவைகளின் சொத்துக்கள் நாட்டிற்குப் பிரயோசனப்பட வேண்டும் என்று சொன்னால் சாமானியமாக ஒப்புக்கொள்ளவா போகின்றார்கள்? இவ்வாறு சொல்லுகின்ற வர்களை நாஸ்திகர்களென்றும் மதத் துரோகிகள் என்றும், கடவுள் துரோகிகள் என்றும், தேசத் துரோகிகள் என்றும் சொல்லிப் பலமாக எதிர்ப் பிரசாரம் புரியாமல் விடமாட்டார்கள் அல்லவா?

ஸ்பெயின், ரஷியா முதலிய நாடுகளில் கோயில்கள் மடங்கள் இவைகளின் சொத்துக்கள் அரசாங்கத்தாரால் பறிமுதல் செய்யப்பட்டு தேசத்தின் நன்மைக்குப் பயன்படுத்தப்பட்டதைப் போல நமது நாட்டிலும் இவைகளின் சொத்துக்களைப் பறிமுதல் செய்யாவிட்டாலும் அவைகளின் வரும்படியைக் கொண்டு, தொழிற்சாலைகளும், ஆராய்ச்சி ஸ்தாபனங்களும் கல்விச் சாலைகளும் ஸ்தாபிக்கவாவது சம்மதிப்பார்களா என்றுதான் நாம் கேட்கின்றோம். மதத்தின் பெயரால், கல்விக்கும், தொழில்களுக்கும், வைத்தியத்திற்கும் செலவு செய்யும் கிறிஸ்தவ மதத்தையுடைய வெள்ளைக்கார அரசாங்கம் நாமும் நமது மதச் சொத்துக்களை இவ்வழியில் செலவு செய்வ தற்குத் தடை செய்யாது என்பது நிச்சயம். இதற்கான சட்டங்களை நாமே செய்து கொள்ளலாம். ஆனால் யார் இதற்குச் சம்மதிக்கிறார்கள்? என்று கேட் கிறோம். காங்கிரஸ்காரர்கள் கேட்கும் சுயராஜ்யத்திலும் இந்த மதச் சொத்துக்கள் இப்பொழுது இருக்கும் பாழான நிலையிலேயே இருந்து பாதுகாக்கப்பட வேண்டும் என்ற நிபந்தனையிலிருக்க வேண்டும் என்றுதானே சொல்லுகிறார்கள்? ஆகவே எந்த சுயராஜியம் வந்துதான் என்ன பயன்? ஏழை மக்களின் கதி என்றும் ஒரே கதிதானே? ‘இராமன் ஆண்டால் என்ன? இராவணன் ஆண்டால் என்ன?’ என்று ஏழைமக்கள் கூறும் பழமொழியில் என்ன குற்றமிருக்கிறது?

நமது மதத்தின் பேரால் புதைபட்டுக் கிடக்கும் கோடிக்கணக்கான பொருளைக் கொண்டு கல்விச் சாலைகளும், கைத்தொழிற் சாலைகளும், ஆராய்ச்சி சாலைகளும் ஏற்படுத்தி நமது மக்களை இத்துறையில் ஈடுபடுத்துவோமானால் நமது நாட்டில் ஒருவராவது எழுதப்படிக்கத் தெரியாமல் இருக்க முடியுமா? ஒருவராவது தொழிலற்ற சோம்பேரியாக இருக்க முடியுமா? ஒருவராவது பகுத்தறிவில்லாத மூட நம்பிக்கையுள்ளவராக இருக்க முடியுமா? என்றுதான் கேட்கின்றோம்.

ஆகவே, நமது மக்களைக் கெட்டியாகப் பிடித்து அழுத்திக் கொண்டிருக்கும் மதம் என்னும் பாரம் இறங்க வேண்டும். அப்பொழுதுதான் அவர்கள் தலைதூக்கி கண்விழித்து மற்றவர்களைப் பார்க்க முடியும். பிறகுதான் பாழாகக் கிடக்கும் திரவியங்களை நாட்டின் நன்மைக்கு உபயோகப்படுத்தச் சம்மதிப்பார்கள். இல்லாத வரையில் நாம்என்றும் அடிமைகளாகவே, பகுத்தறிவில்லாதவர்களாகவே இருக்க வேண்டியதுதான்.

இதுவரையிலும் ஆயிரக்கணக்கான வருஷங்களாக மதங்களையும், சாமிகளையும் கட்டிக் கொண்டு அழுததனால் என்ன கிடைத்தது? நமது நாடு அடிமையாகவும் நமது நாட்டு மக்கள் ஏழைகளாகவும், நமது நாட்டில் சாப்பாட்டுக்கில்லாமல் அந்நிய நாட்டுக்குச் செல்லக் கூடியவர்களாகவும், இந்தியர் என்றால் கூலிகள் என்று அந்நியர்களால் இகழக் கூடியவர்களாகவும் ஆனதுதான் கண்ட பலன். இவைகளைத்தான் நமது மதங்களும், நமது சாமிகளும் நமக்கு கொடுத்தன. ஆகையால் இன்னும் இவைகளைக் கட்டிக் கொண்டு அழ வேண்டுமா? இவைகளுக்காக நமது செல்வங்களை வீணாக்க வேண்டுமா? இவைகளை இன்னும் அழியாமல் கட்டிக் காப்பாற்றக் கூடிய சுயராஜ்யம் வேண்டுமா? என்றுதான் நாம் கேட்கின்றோம். நன்றாய் யோசனைச் செய்து பார்த்தபின் பதில் சொல்லுங்கள். கடைசியாக நமது நாட்டு மக்கள் சமத்துவமடைந்து சுகத்தோடு வாழ வேண்டுமானால் நமது மதங்கள் ஒழிய வேண்டும். மத ஸ்தாபனங்களின் சொத்துக்கள் தேசத்தின் நன்மைக் காகப் பயன்படும்படி அவைகளை பறிமுதல் செய்து உபயோகப்படுத்த வேண்டும். அப்பொழுதுதான் நாமும் நாகரீகம் பெற்ற தேசத்தார்களைப் போலச் சிறந்து மனிதர்களாக விளங்க முடியும் என்று கோபுரத்தின் மேல் நின்று கொண்டு கூறுகின்றோம்.

கையில் வெண்ணெயை வைத்துக் கொண்டு நெய்க்கு அழும் மூடர்களைப் போல, ஏராளமான பொருள்களை முட்டாள்தனம் காரணமாகப் பாழ்படுத்தி வைத்துக் கொண்டு, “நாம் அன்னிய ஆட்சியினால் ஏழைகளாக இருக்கிறோம்; கல்வியறிவில்லாமல் இருக்கிறோம்; ஒற்றுமை இல்லாமலிருக்கிறோம்; தொழிலில் இல்லாமலிருக்கிறோம்” என்று தொண்டைத் தண்ணீர் வற்றும்படி கத்துவதில் ஏதாவது அர்த்தம் உண்டா? என்பதை மறுபடியும் மறுபடியும் நன்றாய் யோசித்துப் பாருங்கள் என்று தெரிவித்துக் கொள்ளுகிறோம்.

(குடி அரசு - தலையங்கம் - 31.01.1932)

Pin It