“இப்போது பிராமணர்கள் நடவடிக்கை கெட்டுப் போய் விட்டது. காஃபி ஹோட்டலுக்குப் போதல், கிளாஸ்கோ வேட்டி, பாரசூட் சில்க் ஜிப்பா, உள்ளே கட்டிங் பனியன், காலில் பூட்ஸ் - இந்தக் கோலங்களுடன் அலங்கார சாஸ்திர நிபுணர்கள் மாதிரி வெளியே போகின்றனர். பஞ்சாங்கத்தைத் தீண்டவே மாட்டார்கள். அப்படித் தீண்டினாலும் அதற்குள் எச்சில் துண்டு சிகரெட் இருக்கும். “என்ன ஸ்வாமி, பஞ்சாங்கத்துக்குள் சிகரெட் துண்டை வைத்திருக்கிறீரே?” என்று கேட்டால், “பக்கம் மாறாமலிருப்பதற்காக அடையாளம் வைத்திருக்கிறேன்” என்று சொல்கிறார்கள். ஆனால் ஹரிஜனங்கள் மட்டும் என்றைக்காவது நல்ல துணி கட்டிவிட்டால் இந்தப் பிராமணர்களுக்கு உடனே வயிற்றுக் கடுப்பு வந்து விடுகிறது!"

kuthoosi gurusamy“இவர்கள் சினிமாவுக்குப் போகும்போது வாயில் சிகரெட்டுடன் கண்ணடித்துக் கொண்டு மன்மதன் மாதிரி, தளுக்கு செய்து கொண்டு போகிறார்கள்."

"இன்றைய பிராமணர்கள் யாவரும் அதர்மம், அநியாயம், அசத்தியம் முதலிய சகல அவலட்சணங்களும் பொருந்தியவர்களாக எல்லா நீசத் தொழில்களும் செய்து கொண்டிருக்கின்றனர். பிராமணர் வீட்டில் மிக மிகக் கீழ்த்தரமான நாவல்களைக் காணலாம்."

“இனி, பிராமணப் பெண்களோ! உள்ளே “கட்” பாடீஸ்! வெளியே ‘சில்க்’ ஜாக்கெட்! தலையில் ‘சில்க்’ ரிப்பன்! ரம்பைகள் மாதிரி தளுக்குச் செய்து கொண்டு திரிகிறார்கள். இவர்கள் சினிமாவுக்குப் போகும் காட்சியைப் பார்த்தால் அசல் அப்சர ஸ்திரீகளைப் போலவே இருக்கிறார்கள்! ஆனால் ஹரிஜனப் பெண்கள் மல் ரவிக்கை அணிந்தால் கூட பொறாமைப் படுகிறார்கள்!"

“பிராமணர்கள் எந்தத் தப்புச் செய்தாலும் பரவாயில்லையாம்! இறைச்சி தின்றாலும் சாராயம் குடித்தாலும் கூட இவர்கள் பிராமணர்கள் தானாம்!”-

“ஏ! குத்தூசி! உனக்கு வரவரத் திமிர் அதிகமாகிறது! பூதேவர்களை இப்படி எழுதுகோலில் ‘இங்க்’ இல்லாமல் (‘நாக்கில் நரம்பில்லாமல்’ என்பது போல!) எழுதலாமா? உன்னை, உன் பேனாவை, என்ன செய்கிறோம், பார்!” என்று காங்கிரஸ் ஆட்சி என்மீது இரு கால்களையும் தூக்கிக் கொண்டு பாய்வதற்கான அறிகுறியைக் காண்கிறேன்! இதோ! ஜன்னல் வழியாகத் தெரிகிறதே!”

இது மட்டுமா?

“என் அருமைக் ‘குத்தூசி’த் தோழனே! நீ இவ்வளவு “வல்கராக” எழுதக் கூடாது! இதை விடப் படுமோசமாகத்தான் நடக்கிறது! ஆனாலும் உன் பேனாவில் இந்த மாதிரி வரக் கூடாது! ஏதோ ரொம்ப ஆத்திரத்தினால் எழுதி விட்டாய் போலிருக்கு! போகட்டும்! இனி அப்படிச் செய்யாதே!”-

என்று என் நண்பர்களிற் சிலராவது நினைக்கக் கூடும்!

“அடேயப்பா! இது ஒரு ஆபாசமா? அந்தக் கூட்டம் நம்மைப் பற்றி எழுதி வைத்திருப்பதும், இப்போது நம்மை நடத்துவதும், அக்கிரகாரங்களில் (ஆரியச்சேரி!) நம்மைப் பற்றிப் பேசுவதையும் பார்த்தால் இது எம்மாத்திரம்?” என்று உங்களிலேயே சிலர் சமாதானம் சொல்லவும் நினைப்பீர்கள்!

இந்த அற்ப விஷயத்திற்காக உங்களுக்குள் ஏன் சிறு வேற்றுமை? உண்மையைச் சொல்லி விடுகிறேன்.

நான் மேலே கூறியிருப்பதில் ஒரு எழுத்துக்கூட என்னுடையதல்ல! இப்போது என்ன செய்வீர்கள்?

காங்கிரஸ் எம்.எல்.ஏ. தோழர் பி. எஸ். மூர்த்தி இருக்கிறாரே, அவர் தான், முன்னாள் பார்லிமெண்டரி காரியதரிசி! அவர் “நவஜீவன்” என்று ஒரு தெலுங்கு வாரப் பத்திரிகை நடத்துகிறார். அதில் காணப்படுவதைத் தான் நான் மேலே தந்திருக்கிறேன்!

10-12 வாரங்களுக்கு முந்திக் கிடைத்த இந்தப் பத்திரிகைத் துண்டை இத்தனை நாளாகப் பத்திரப்படுத்தி வைத்திருந்து, இரண்ட தெலுங்கு நிபுணர்களைப் பிடித்து சொல்லுக்குச் சொல் சரியான மொழி பெயர்ப்பு செய்யச் சொல்லிய பாடு எனக்கல்லவா தெரியும்?

“எத் தொழிலைச் செய்தாலும் ஏதவத்தைப் பட்டாலும் முத்தர் மனமிருக்கும் மோனத்தே”-

என்ற பழம் பாடல் நம் காங்கிரஸ் தோழர் மூர்த்திக்குத் தெரியாது! அவருக்கு இக்கட்டுரையைப் படித்துக் காட்டுபவர்கள் தயவு செய்து இதையும் மொழி பெயர்த்துச் சொல்லுங்கள்! நமது பிராமணர்கள் இருக்கிறார்களே, அவர்கள் முத்தர்கள்! அவர்கள் எந்தத் தொழிலைச் செய்தாலும் பூதேவர்கள்தான்! கொலைகார கோட்ஸே முதல், சினிமா ‘ஸ்டார்கள்’ வரையில் எல்லா பிராமணர்களும் உத்தம பிராமணர்கள்தான்! ஆனால் நானும், மூர்த்தியும், நீங்களும்தான் எவ்வளவு யோக்கியர்களானாலும், சூத்திரர் நாலாம் ஜாதிக்காரர், சண்டாளர், மிலேச்சர்!” இதுதானய்யா, ஹிந்து, மதம்! புனிதமான ஹிந்து மதம்!

தெலுங்கிலேயும் பல பேர் நம்மைப் போலப் பேசுகிறார்கள்; எழுதுகிறார்கள். நம்மில் யாராவது ஒருவர் தெலுங்கு வாரப் பத்திரிகை ஒன்றை ஆரம்பித்தால் ரொம்ப ரொம்ப அருமையாயிருக்கும். என் பேச்சை யார் கேட்கப் போகிறார்கள்?

தெலுங்கு நாட்டில் பல லட்சம் பி.எஸ். மூர்த்திகள் இருக்கிறார்களாம்! நானும் நீங்களும் அதைப் படிக்காமலிருப்பதற்குத்தானே ஹிந்தியை நுழைத்திருக்கிறார்கள்? தெலுங்கரும் தமிழைப் படித்திருந்தால் அங்கே ஹிந்தியோ மந்தியோ வாலாட்ட முடியுமா?

- குத்தூசி குருசாமி (04-10-1948)

நன்றி: வாலாசா வல்லவன்

Pin It