காஞ்சிபுரம் ஜெயேந்திரர் - கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு விட்டாலும், ஜெயேந்திரர் பண்பாட்டுக் களத்தில் நிலைநிறுத்த முயன்ற, ‘பார்ப்பன மேலாண்மை’க்கான முயற்சிகள் அப்படியே தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன சித்தர்கள் உருவாக்கிய பழனி முருகன் கோயில் சிலை - பார்ப்பன வழிபாட்டு முறைக்கு எதிரான ‘அவைதிக’ மரபைக் கொண்டிருந்ததால், அதை, அய்ம்பொன் சிலையாக மாற்றி அமைக்கும் முயற்சிகளில் தமிழக அரசின் முழு ஆதரவோடு, ஜெயேந்திரர் இறங்கினார். இரவோடு இரவாக, எந்த முன்னறிவிப்பும் இன்றி, சிலையை மாற்றி அமைக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
கோயிலுக்கு பாரம்பரிய உரிமை கொண்ட சித்தர் மரபினரும், பார்ப்பனரல்லாதாரும் கடும் எதிர்ப்பு தெரிவிக்க, அத் திட்டம் அப்போது கைவிடப்பட்டது. தற்போது ஜெயேந்திரர் நேரடியாகப் பங்கேற்க இயலாத நிலையில், அவர் துவக்கி வைத்த பார்ப்பனிய மேலாண்மையை மீண்டும் செயல்படுத்திடும் முயற்சிகளில் தமிழக அரசு இறங்கியிருக்கிறது. சென்னையைச் சேர்ந்த வடபழனி சித்தர், இந்து அறநிலையத் துறையின் இந்தப் போக்கைத் தடுக்கக் கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
அதே போல், தேர்தலுக்கு முன்பு ‘கும்பாபி ஷேகத்தை’ நடத்தி முடிப்பதற்காக, அறநிலையத் துறை தேர்வு செய்துள்ள மற்றொரு ஊர் கரூர். கரூர் பசுபதீசுவரர் கோயில் கும்பாபிஷேகத்தை ஏப்.3 ஆம் தேதி நடத்திட அவசர அவசரமான நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டன. பார்ப்பன சமஸ்கிருத மேலாதிக்கத்துக்கு எதிராக தொடர்ந்து போராடும், தன்மான சீலர்களான கரூரைச் சார்ந்த சிவனடியார்கள் போர்க்கொடி உயர்த்தி போராடத் துவங்கி விட்டனர்.
இதே கரூரில் தான் 2002 ஆம் ஆண்டிலும் சிவனடியார்கள் தன்மானத்துடன் போர்க்கொடி உயர்த்திய வரலாற்றையும் குறிப்பிட விரும்புகிறோம். திருமுக்கூடலூரில் உள்ள மணிமுத்தீஸ்வரர் கோயிலில், காஞ்சிபுரம் ஜெயேந்திரர் தமிழக அரசின் முழு ஆதரவோடு, ‘கும்பாபிஷேகம்’ நடத்த முயன்ற போது, சிவனடியார்கள், தமிழில் குடமுழுக்கு நடத்தப் போர்க்கொடி உயர்த்தி, ‘உயிர் துறக்கும்’ போராட்டத்தை அறிவித்தனர்.
‘அலைபேசி கோபுர’த்தின் மீதேறி, சிவனடியார்கள் சிலர், கீழே விழுந்து உயிர் துறக்க முனைந்த நிலையில், சங்கராச்சாரிகள், பின்வாங்கி, அறநிலையத் துறையும் இறங்கி வந்து, தமிழில் குடமுழுக்கை நடத்தினர். ஆனால், குடமுழுக்கை நடத்திவிட்டு உடனேயே, தமிழால், “சிவன் தீட்டாகி விட்டான்” என்று கூறி, பார்ப்பன ஜெயேந்திரனின் ஆலோசனைப்படி, அறநிலையத் துறை “தீட்டுக் கழிக்கும்” சடங்குகளை நடத்தி, தமிழையும், தமிழனையும் இரட்டை அவமானத்துக் குள்ளாக்கியது. இப்போது ஜெயேந்திரரை குற்றக் கூண்டில் நிறுத்தினாலும், அவரது பார்ப்பனக் ‘கும்பாபிஷேக’க் கொள்கைகளை அமுல்படுத்துவதில் இந்த அரசு உறுதியாக இருப்பது, கரூர் நிகழ்வுகளிலும் வெளிப்படுகிறது.
கரூர் திருப்பணிக் குழுவினர், தமிழில் குடமுழுக்கு நடத்துவதற்கு தங்களது இசைவை தெரிவித்து விட்டனர். இனி, இந்து அறநிலையத் துறையிடமிருந்துதான் பச்சைக் கொடி கிடைக்க வேண்டும். அறநிலையத் துறை காஞ்சி ஜெயேந்திரன் வழியில், ஏற்கனவே திட்டமிட்டிருந்தவாறு ‘கும்பாபி ஷேக’த்தை தொடரப் போகிறதா? அல்லது தமிழர்களின் உணர்வுகளை மதித்து, குடமுழுக்கு நடத்த அனுமதிக்கப் போகிறதா?
ஜெயேந்திரன்களைக் கைது செய்து விட்டு, ஜெயேந்திரன்கள் திணிக்க முயன்ற பார்ப்பனியத்தைத் தொடர்ந்து அமுல்படுத்தும் முயற்சிகளில் தமிழக அரசு துடிப்புக் காட்டக் கூடாது என்று வலியுறுத்துகிறோம். கரூர் சிவனடியார்களின் தன்மானப் போராட் டத்தையும், அதற்கு துணை நிற்கும், தமிழ் அமைப்புகளையும் பாராட்டி மகிழ்கிறோம்.
தொடரட்டும், சிவனடியார்களின் உரிமைப் போராட்டம்!