இன்று முதல் சென்னை நகரத்திலுள்ள சினிமாத் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்யப் போவதாக நோட்டீஸ் கொடுத்திருந்தனர். ஆனால் ஸ்ட்ரைக் நோட்டீஸை வாபஸ் வாங்கிக் கொண்டதாக (பொதுஜன நன்மையை முன்னிட்டுத்தான்!) செய்தி வந்து விட்டது.

kuthoosi gurusamy 263இதென்ன? கண்டவர்களெல்லாம் ‘ஸ்ட்ரைக்’ மிரட்டலில் இறங்கி விட்டார்களே! இனிமேல் ரேஷன் அரிசி நிஜ அரிசியாக வருகிறவரையில் நானும் சாப்பிடப் போவதில்லை என்று ‘ஸ்ட்ரைக்’ செய்யலாமா என்று நினைத்துக் கொண்டிருந்தேன். பிறகு திடீரென்று ஒரு யோசனை பிறந்தது! சே! சே! ரேஷன் அரிசியைப் பற்றிக் குறை கூறப்படாது! அதில் மூன்று வித லாபம் இருக்கிறது! எதையும் புத்திசாலித்தனமாக யோசித்துப் பார்த்தால் தானே! அவசரப்பட்டு ஒரு விஷயத்தைக் கண்டித்து விடலாமா?

வீட்டுக்குப் பக்கத்திலே எங்கேயாவது ஒரு ஏக்கர் நிலத்தை வாங்கி வைத்தால் விதைக்கு வேண்டிய நெல்லை விலைக்கு வாங்காமல் ரேஷன் அரிசியிலிருந்தே பொறுக்கிக் கொள்ளலாம். இது முதலாவது லாபம். பெரிய நகரங்களில் குடியிருப்பவர்கள் அடுப்புப் போடவோ, குழந்தைகள் சட்டி பானை செய்து விளையாடவோ, களி மண் தேவையானால் கஷ்டப்பட வேண்டியதில்லை; அதுவும் ரேஷன் அரிசியிலிருந்தே எடுத்துக் கொள்ளலாம். இது இரண்டாவது லாபம். மழை காலத்தில் வீட்டுக்கெதிரில் தண்ணீர் தேங்கி நின்றால் அதில் கல் கொட்ட வேண்டுமே என்று கவலைப்பட வேண்டியதில்லை; அதுவும் ரேஷன் அரிசியிலேயே ஏராளமாகக் கிடக்கிறது. இது மூன்றாவது லாபம்! இந்த மூன்று லாபங்களையும் தவிர, அரிசியுங்கூட அதிலேயே இருக்கிறது என்றால், இத்தனையையும் ஒரே சமயத்தில் கொடுக்கிற சர்க்காரை நாம் வாயார வாழ்த்த வேண்டாமா? - இந்த யோசனை ‘டக்’ என்று என் மூளையில் பட்டதும் உணவு ஸ்ட்ரைக் செய்யும் யோசனையைக் கைவிட்டு விட்டேன்!

தோட்டிகள் ஸ்ட்ரைக் செய்தாலே இந்தக் காலத்தில் யாரும் பயப்படுவதில்லை. பள்ளி ஆசிரியரும் சினிமா ஊழியரும் ஸ்ட்ரைக் செய்தாலா பயப்படப் போகிறார்கள்? பூனைகளும் புரோகிதர்களும் ஸ்ட்ரைக் செய்தால் நீங்களெல்லாம் கீழே புரண்டா அழப் போகிறீர்கள்? “ஸ்ட்ரைக் நிரந்தரமாய் நின்று நீடூழி வாழ்க!” என்றுதானே ஆசீர்வதிப்பீர்கள்?

அதைப் போலவே சினிமா ஊழியர் ஸ்ட்ரைக் நடந்தால் எல்லோரும் சந்தோஷப் படுவார்கள் என்று நினைத்தேன். அடுத்த வீட்டுக்காரர் தன் பையன் தமது மாதச் சம்பளத்தில் பாதிக்குமேல் சினிமாவில் செலவழிக்கிறான் என்று அடிக்கடி கூறுவார், ஆனால் மகனைக் கண்டிக்க பயம்! அவரைப் போன்றவர் எத்தனை பேர் சினிமா கிடையாது என்றால் மகிழ்ச்சி அடைகிறவர்கள்?

பள்ளி ஆசிரியர் ஸ்ட்ரைக் செய்தால் மகிழ்ச்சிப் பெருக்கால் கூத்தாடுபவர் மாணவர்கள். சினிமா ஊழியர் ஸ்ட்ரைக் செய்தால் மகிழ்ச்சி அடைபவர் பல பேருண்டு. அதில் நானும் ஒருவன். காரணம், காலி மணிபர்ஸ்தான்! ஆனால் நேற்று நான் சந்தித்தவர்கள் கூறியதைச் சொல்லட்டுமா?

 “என்ன ஸார்! நாளை முதல் சினிமா இருக்காதாமே? உற்சவத்தின்போது கோயிலில் கண்ட பிறகு தனித்துப் பேச முடியாதபடியால் சினிமாவில் சந்திக்கலாம் என்று நம்பியிருந்தேன். இனிமேல் அவளை எங்குதான் பார்ப்பேனோ என்னைக் கேட்டால் ஒரு மாதச் சம்பளத்தை இந்த ஊழியர்களுக்கு வீசி யெறிந்திருப்பேனே! இதற்காகவா ‘ஸ்ட்ரைக்’?” இது ஒரு ஷோக் மைனரின் மனக்கவலை.

“என்னங்கய்யா, ரொம்ப சங்கடமாயிருக்கு! குழாய்த் தண்ணீரைப் பாட்டிலில் ஊத்தி காற்றையடைத்து இரண்டணாவுக்கு விற்பேன்! குப்பையில் கொட்ட வேண்டிய முந்திரிப் பருப்பை வறுத்து காகிதப் பையில் போட்ட ஒட்டி நாலணாவுக்கு விற்பேன்! இந்தச் சினிமா ஊழியர்களால் எவ்வளவு நஷ்டம் பார்த்தீர்களா, ஸார்?”

இது சினிமா கொட்டகைக்கு அடுத்த கடைக்காரரான விஷ்ணு பக்தர் வீராசாமி நாயுடு துயரத்துடன் கூறியது.

ஒரு நாளைக்குச் சினிமா இல்லையென்றால் எனக்கு எவ்வளவு நஷ்டம் தெரியுமா? குறைந்த பட்சம் 20 கிராக்கியாவது போச்சு என்றுதான் கூற வேண்டும். இந்தத் தினசரிப் பத்திரிகைகளும் இல்லாமல், சினிமாக்களும் இல்லாவிட்டால் நான் வாயிலே மண்ணை வாரிப் போட்டுக் கொள்ள வேண்டியதுதான். 6 ரூபாய்க்கு வரவழைத்து 40 ரூபாய்க்கு விற்கிறேனே! இனி முடியுமா? சினிமா ஊழியர்கள் ‘ஸ்ட்ரைக்’ செய்து விட்டால் என் குடும்பம் என்ன ஆவது?”

இது எனக்குத் தெரிந்த மூக்குக் கண்ணாடி வியாபாரியான மைக்கேல் வைத்த முகாரி!

“ஏனய்யா, எல்லாத் தினசரிகளையும் சேர்த்துத்தான் கூறுகிறீரா?” என்று கேட்டேன்.

“ஆமாம்! அதிலென்ன சந்தேகம்? உம்மையே கேட்டுக் கொள்ளுமே, இந்தக் கேள்வியை. நீரும்தான் ஒரு கண்ணாடிப் பேர்வழி ஆச்சே!” என்றார்.

 ‘ஸ்ட்ரைக்’ நின்றுவிட்டது, சினிமா எப்போதும்போல் உண்டு என்ற நற்செய்தியைக் கேட்டதும் மேற்படி மூன்று பேரும் கட்டாயம் பிரியாணி சாப்பிட்டிருப்பார்கள்! சினிமாக்கலை நீடுழி வாழ்க! கண் பார்வை அடியோடு ஒழிக! கண்ணாடி! வியாபாரம் உலகெங்கும் ஓங்குக!

- குத்தூசி குருசாமி (09-04-1948)

நன்றி: வாலாசா வல்லவன்

Pin It