இயக்குனர் சேரனின் மாயக்கண்ணாடி திரைப்படம் இளைஞர்களின் தன்னம்பிக்கைக் கனவுகளைக் குலைத்துவிட்டதாக ஊடகங்கள் குற்றம் சாட்டுகின்றன. சேரனும் 'ஏழு நல்ல படங்களைத் தந்த நான் எட்டாவதாக மோசமான படத்தைத் தருவேனா?" என்று படவிளம்பரங்களிலேயே தன்னிலைவிளக்கம் அளிக்கவேண்டிய அவசியம் நேர்ந்திருக்கிறது. முடிதிருத்தும் ஒரு இளைஞன் திரைத் துறையில் நுழைய முயற்சித்து தோல்வியடைந்து மீண்டும் அதே தொழிலில் தஞ்சம் புகுவதே படத்தின் ஒன்லைன் எனப்படும் ஒற்றைவரிக்கதை. சேரன் தன் திரைப்படங்கள் மூலம் கட்டமைக்க விரும்பும் தன்னிலைகள் குறித்து சில சுருக்கமான பார்வைகளை முன்வைத்து உரையாடலை வளர்ப்பதே இக்கட்டுரையின் நோக்கம்.

Cheran and Navyaசேரனின் முதலிரண்டு படங்களும் விளிம்புநிலையினரைப் பற்றிப் பேசின. 'பாரதிகண்ணம்மா' கள்ளர் பள்ளர் சாதிமுரண்பாடுகள் குறித்து ஒரு காதல் கதை வழியாகப் பேசியது. இத்திரைப்படம் தமிழகத்தின் தென்மாவட்டங்களில் முக்குலத்தோரால் அதிகம் எதிர்ப்புக்குள்ளானது. அப்படத்தின் மீது பல விமர்சனங்கள் இருந்தபோதும் தமிழகத்தின் இரு சாதிகள் குறித்த வெளிப்படையான விவரணைகளோடு சாதிமுரண்பாடுகள் பற்றிப் பேசிய ஒரு சில படங்களில் பாரதிகண்ணம்மாவும் ஒன்று. கதையின் இறுதியில் கள்ளர் சாதிப்பெண் இறந்துபோக காதலித்த பள்ளர் சாதி இளைஞன் உடன்கட்டை ஏறுகிறான். தேவர்கள் திருந்துகின்றனர்.

இரண்டாவது படமாகிய பொற்காலம் ஊனமுற்றவர்களின் துயரம் மற்றும் வாழ்க்கை குறித்து கவனஞ்செலுத்தியது. ஊனமுற்றவர்கள் என்பவர்கள் நகைச்சுவைக்கான பயன்படுபொருள்களாகவே பயன்படுத்தப்பட்டுவந்த தமிழ்த்திரையில் அவர்களின் பிரச்சினையை சற்றேனும் கரிசனத்தோடு அணுகியது. அதிலும் குறிப்பாக ஊமைப்பெண்ணின் அண்ணனிடம் வடிவேலு "நான் கருப்பா இருக்கேன்னுதானே என்னிடம் கல்யாணம் செஞ்சுக்கிறியா?ன்னு கேட்கலை?" என்ற கேள்வி மிகநுட்பமாக நமக்குள் உறைந்திருக்கும் ஆதிக்கக்கருத்தியல் மற்றும் வன்முறை குறித்துக் கேள்வியெழுப்பியது. ஆனால் இந்தப் படத்தின் இறுதியிலும் அந்த ஊமைப்பெண் இறந்துபோகிறார் என்பது கவனிக்கத்தக்கது.

இவ்வாறு இவ்விரண்டு படங்களிலும் வெளியிலிருந்துதான் என்றாலும்கூட விளிம்புநிலை மக்களைப் பற்றிப் பேசிய சேரனின் கருத்தியல் அடிப்படைகள் அவரது மூன்றாவது படங்களிலிருந்து தன்னைத் திட்டவட்டமாக வெளிப்படுத்திக்கொண்டது.

அவரது 'தேசியகீதம்' படம் திராவிட இயக்கங்களின் ஆட்சியால்தான் தமிழகமே கெட்டுப்போனது என்னும் நடுத்தரவர்க்க மனம் சார்ந்தத விமர்சனத்தை முன்வைத்தது. அதன்மூலம் காமராஜர் ஆட்சி, காங்கிரஸ் பொற்காலம், கக்கன் போன்ற தூய்மைவாதப் படிமங்களின் மீதான ஏக்கத்தை நிறுவியதன்மூலம் தனது நடுத்தரவர்க்கக் கருத்தியலுக்கு நியாயம் செய்தார் சேரன். திராவிட இயக்கங்கள் கடும்விமர்சனத்துக்குரியவே. ஆனால் அதற்கான மாற்று நிலப்பிரபுத்துவ மதிப்பீடுகளைத் தூக்கி பிடித்த காங்கிரஸ் ஆட்சியல்ல. ஊழலற்ற ஆட்சி, நேர்மை ஆகிய கருத்துருவங்களின் அடிப்படையிலேயே இந்திய நடுத்தர வர்க்க மனம் இயங்குகிறது என்பதைப் புரிந்து கொள்வது அவ்வளவு கடுமையானதல்ல. இவர்களைப் பொறுத்தவரை மன்மோகன்சிங்கும் ப.சிதம்பரமும்தான் முன்னுதாரணங்கள். இத்தைகைய அரசியலையே தேசியகீதம் முன்வைத்தது.

சேரனின் 'வெற்றிக்கொடிகட்டு' திரைப்படம் அரபுநாடுகளில் வேலைக்குச் செல்லும் இளைஞர்களிடம் தாய்நாட்டுக்கு ஆற்ற வேண்டிய சேவை பற்றிப் பேசியது. ஆனால் சேரனின் அறிவுரை அரபுநாட்டிற்கு வேலைக்குச் செல்லும் பிற்படுத்தப்பட்ட, மிகப்பிற்படுத்தப்பட்ட, தலித் மற்றும் முஸ்லீம் இளைஞர்களிடம்தானே தவிர அய்.அய்.டி மற்றும் உயர்தொழில்நுட்பக்கல்வி படித்து காலை நான்குமணிக்கே அமெரிக்கத்தூதரகத்தில் கால்கடுக்கக்காத்துநிற்கும் பார்ப்பன மற்றும் ஆதிக்கச்சாதி இளைஞர்களிடம் அல்ல. மேலும் குறிப்பாக துபாயில் கக்கூஸ் கழுவுவது தொடர்பான பார்த்திபன் - வடிவேலு நகைச்சுவைக்காட்சிகள் மலமள்ளுபவர் பற்றிய அவரது சாதிய உளவியலையே வெளிப்படுத்தின. மீண்டும் ஒருமுறை மலமள்ளுவது இழிவானது, மலமள்ளுபவன் இழிவானவன் என்பதை பொதுப்புத்தி உறுதி செய்தது.

சேரனின் பாண்டவர்பூமி கிராமத்தைக் காதலோடு அணுகியது. இயற்கை சூழ்ந்த வாழ்க்கையை மய்யமாகக் கொண்ட கிராமங்கள் நேசிக்கத்தகுந்தவையே. ஆனால் நிலப்பிரபுத்துவமும் சாதியவன்முறைகளும் அதிகம் நிறைந்துள்ள பிரதேசம் கிராமம் என்பதை மறந்துவிடக்கூடாது. அதனாலேயே அம்பேத்கர் தலித்துகளிடம் 'கிராமங்களைக் காலிசெய்யுங்கள்' என்றார். ஆனால் சேரனின் படங்களோ சாதிமுரண் மற்றும் நிலமானிய உறவுகள் குறித்து எவ்வித விமர்சனமின்றி கிராமங்களை ரொமண்டிசத்தோடேயே அணுகியது. பிழைப்பிற்காய் நகரம் நோக்கி நகர்ந்துவிட்ட நடுத்தர வர்க்கத்தின் மாயைக் கனவுகளுக்கு வலுசேர்த்தது பாண்டவர்பூமி. ஆட்டோகிராப்பும் கிராமத்து வாழ்க்கை, இழந்த காதல்கள் என இதே பணியையே செய்தன.

தவமாய்த் தவமிருந்து படத்திலும் குடும்பத்தின் சாதிய உளவியல், அது பெண்களின் மீது செலுத்தக்கூடிய வன்முறை ஆகியவை குறித்து எந்த்கேள்வியும் எழுப்பாமல் குடும்பம்குறித்த புனிதப்பிம்பத்தைக் கட்டியெழுப்பியது. ஆக பொதுவாகவே சேரனின் திரைப்படங்கள் இழந்துபோன நிலப்பிரபுத்துவ மதிப்பீடுகள் குறித்த புனிதக்கனவோடு காத்திருக்கும் தூய்மைவாத நடுத்தரவர்க்கக் கருத்தியலையே மய்யமாய்க் கொண்டவைகள். அத்தைகய தன்னிலைகளையே சேரன் தன் படத்தின் மூலம் உற்பத்தி செய்யவும் உறுதிப்படுத்தவும் செய்கிறார்.

இப்போது மாயக்கண்னாடி படத்திற்கு வருவோம். ஊடகங்கள் குற்றம் சாட்டுவதில் நியாயம் உள்ளதா? சேரனின் முதலிரண்டு படங்களுமே துன்பியல் முடிவை உடையவை. ஆனால் காதலில் வெற்றிபெறாமல் செத்துப்போன தலித் இளைஞனும் திருமண முயற்சி கைகூடாமல் இறந்துபோன பெண்ணும் ஊடங்களின் அக்கறைக்கு அப்பாற்பட்டவை. ஏனெனில் அவையும் நடுத்தரவர்க்க வாசகர்கள் மற்றும் பார்வையாளர்களைக் கொண்ட ஊடகங்கள். அவை நிலவும் கருத்தியலுகு வலுசேர்ப்பவையும்கூட. ஆனால் மாயக்கண்ணாடியில் பிரச்சினையே வேறு.

இன்று தொழிலுக்கும் சாதிக்குமான உறவு என்பது தளர்ந்திருக்கிறது. பூசைத்தொழிலிருந்து பார்ப்பனர்களும் 'அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர்' சட்டத்தின்மூலம் பெருமளவு அகற்றப்படுவதற்கான சாத்தியமேற்பட்டுள்ளது. தலித்துகளிடமும் அருந்ததியர்கள் எனப்படும் தோட்டிகளே மலமள்ளும் சாதியோடு பிணைக்கப்பட்டிருக்கின்றனர். ஆனால் சேவைச் சாதிகள் என அழைக்கப்படும் மருத்துவர், வண்ணார் ஆகியோர் தங்கள் சொந்தச் சாதியோடு இணைந்த தொழிலோடு இன்னமும் பிணைக்கப்பட்டுள்ளனர். அப்படிப்படட் நாவிதப் பின்னணியைக் கொண்ட இளைஞனை மீண்டும் அவனது குலத்தொழிலில் தள்ளுவதே மாயக்கண்னாடியில் நாம் விமர்சிக்க வேண்டியதே தவிர அப்துல்கலாம் முதல் எம்.எஸ்.உதயமூர்த்தி வரை நடுத்தர வர்க்க மகான்கள் உற்பத்தி செய்துள்ள தன்னம்பிக்கைக் கதைகள் தகர்ந்து போவதைப் பற்றியல்ல. 

- சுகுணா திவாகர்

Pin It